இராஜநாயகம் மாஸ்டரின் இலட்சியம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2023
பார்வையிட்டோர்: 1,610 
 
 

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு சந்தர்ப்பத்தில் நண்பர் கிருஷ்ண மீராவுடன் நுவரேலியா நகர சபை மண்டபத்தில் ஒரு பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

அன்று தலைநகருக்குத் திரும்பும் போது மாலை முற்றாக மயங்கி இருள் பரவிய நேரம். வாகனப் போக்குவரத்தும் குறைவு.

நீண்ட தூரம் பிரயாணம் செய்த பிறகு திடீரென்று ஓரிடத்தில் பஸ் வண்டி பழுதடைந்தது. பெரும்பாலும் அரசாங்கப் பேருந்துகளுக்கு இருக்கிற தொற்று நோய்தான் இது!

கும்மிருட்டில் எங்கே நிற்கிறோம் என்றறிய முடியாத அந்த நேரத்தில் வேறொரு பஸ்வண்டி வந்தால்தான் பிராயணத்தைத் தொடரலாம். அது எங்களுடைய அதிர்ஷ்டத்தைப் பொறுத்துள்ளது. பளீரென்று லயிற் வெளிச்சம் அதிர்ஷ்டத்தைத் தருகிறது.

“தாஜ்ஜண்ணே ! பள்ளத்தில் ஒரு தமிழ் ஸ்கூல் போல் தெரிகிறது… பளீரென்று லைட் வெளிச்சம். பேசாம அங்கே தங்கியிருந்து விட்டு விடிஞ்சப்புறம் போவமா…?”

பாடசாலையோடு ஒட்டிய அதிபருடைய விடுதிக்குப் படிகள் இறங்கினோம். எங்களைத் தொடர்ந்து வேறு மூன்று பிரயாணிகளும் நடந்தார்கள்.

சற்று நேரத்தில் நாங்கள் எந்த இடத்தில் தரித்து நிற்கிறோம் என்று அறிய முடிந்த போது, எங்கள் மகிழ்ச்சி எல்லை கடந்தது.

ரோட்டில் அரைக் கிலோ மீற்றர் நடந்தால் மேட்டில் ஒரு நீள்சதுர பழைய ஒற்றைக் கட்டிடம் இருக்க வேண்டும். அன்றைய தோட்டப் பாடசாலை அமைப்பு அதுவே. நாங்கள் ஆரம்பக் கல்வியைக் கற்ற இடம்!

அக்காலத்தில் ஐந்து வகுப்புக்களுக்கும் ஒரே ஒருவர்தான் ஆசிரியர் ஹெட் மாஸ்டர். இவர்தான் இராஜநாயகம் மாஸ்டர்.

அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, சகல வசதிகளையும் உள்ளடக்கிய இந்தப் புதிய பாடசாலை கிடைத்திருக்கிறது!

அதிபர் முன் அறையில் பத்திரிகையில் மூழ்கியிருந்தார். எங்கள் அரவம் கேட்டு வெளியே வந்து சந்தேகப் பார்வையுடன், உங்களுக்கு என்ன வேண்டும்?” என்ற தோரணையில் நின்று கொண்டிருந்தார்.

“…சேர் மேலே ரோட்டில் நாங்கள் வந்த பஸ் பிரேக் டவுன். பாடசாலையில் தங்கியிருந்து விடிந்ததும் போகலாமா…? என்று நினைத்து வந்தோம்… நாங்கள் இந்தப் பாடசாலையின் பழைய மாணவர்கள்!”

அதிபர் ஒரு கணம் யோசித்தார்.

“ஐடென்டி….கார்ட் இருக்கா?”

அது இல்லாவிட்டால்தான் வாழ்க்கையே இல்லையே!

இருவரும் அடையாள அட்டைகளைக் காட்டினோம்.

எங்களுடன் வந்தவர்களும் ஐடென்டி நிரூபித்து அனுமதி பெற்றுக் கொண்டனர்.

“ஆசிரிய விடுதியில் இடமில்ல… நீங்க மண்டபத்திலேதான், பெஞ்சுகளை இழுத்துப் போட்டுத் தூங்க வேண்டியிருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க… பஸ் திருத்தப்பட்டுப் புறப்படும் போது, நீங்களும் போக வேண்டும்… சரிதானே!”

“அது இப்போதைக்கு நடக்காது சேர்… விடிஞ்சாப் பிறகுதான்… எல்லாம்…”

மண்டபத்திற்குள் புகுந்து நீட்டு பெஞ்சுகளைப் பொருத்திப் படுக்கையை ஒழுங்கு செய்தோம்.

உடைகளை மாற்றி கைகால் அலம்பக் குளியலறைப் பக்கம் போனால், அழுக்கும் துர்நாற்றமும் மூக்கைத் துளைத்தது. அவசர அவசரமாக வந்து படுக்கையில் சற்று நேரம் இருந்துவிட்டு, பிரயாணப் பையிலிருந்து இடியப்பப் பொட்டலங்களையும், தண்ணீர்ப் போத்தலையும் வெளியே எடுத்துச் சாப்பிடத் தொடங்கினோம். முடியவில்லை.

குப்பையில் போடுவதற்காக மெல்ல எழுந்து சென்றோம். காலில் ஏதோ தட்டுப்பட்டு உருண்டது. அது ஒரு சோடாப் போத்தல், தட்டுப்பட்டதில் அதில் இருந்த அரைவாசிச் சோடாவும் நிலத்தில் சிந்தியது.

இந்த மண்டபத்தைக் குப்பைக் கூடமாகப் பாவிக்கிறார்களோ என்ற ஐயம் எமக்கு எழுந்தது.

சிகரட் துண்டுகளும், பேப்பர் துண்டுகளும், சீட்டுக் கட்டிலிருந்து நழுவிக் கீழே விழுந்து மிதிப்பட்டுக் கிடந்த கார்ட்டுகளும்….

வெளியே பாடசாலைச் சுற்றுப் புறமும் கவனிப்பாரற்றுக் “காடுமண்டி” இருளோடிப் போய்க் கிடந்தது.

திடீரென்று ஒரு வாகனம் வந்து நின்ற மாதிரிச் சத்தம் கேட்டது.

அதிபர் வந்து மண்டபத்தை எட்டிப் பார்த்துவிட்டுப் படியேறி மேலே போய், நிறுத்தப்பட்டிருக்கும் பழுதடைந்த பஸ் வண்டியைப் பார்வையிட்டு வந்து, தொலைபேசி மூலம் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார்.

மேலே வந்து நின்ற வாகனத்தில் சிலர் பிரயாணத்தைத் தொடர்ந்தனர். மிகுதியாக இருந்தவர்கள் பஸ் வண்டியிலேயே தூங்கி விழுந்தனர்.

கிருஷ்ண மீராவும் நானும் பிரயாணப்பைகளைத்தலைக்கு வைத்து உறங்க முயன்றோம். களைத்துப் போன எங்களுக்கு ஓய்வு தேவையாக இருந்தது.

அசௌகரியம், மகிழ்ச்சியின்மை காரணமாகத் தூக்கம் வர மறுத்தது. வெளியில் பனிமூட்டம் சூழலை மறைக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால், எங்களுடன் வந்த மூவரும் மண்டபத்தில் ஒரு மூலையில் சுருண்டு படுத்துக் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆசிரிய விடுதியில் இன்னும் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

“கிருஷ்ண மீரா என்ன பாடசாலையும் சுற்றுப்புறமும் இப்படிக் குப்பைக் கோலமாய்க் கெடக்கு…?”

மீரா நீண்ட நேரமாக மௌனம் சாதித்துக் கொண்டிருந்துவிட்டு –

“தாஜ்ஜண்ணே ! நாம் ஒண்ணும் பேசக் கூடாது… ஆமா நீங்க எந்த ஒலகத்திலே இருக்கிறீங்க… இது வந்து அந்தப் பழைய இராஜநாயகம் மாஸ்டர் யுகம் இல்ல… அப்புறம் நீங்க ஒண்ணும் கண்டுக்காதீங்க… உங்க துப்பறியும் நிபுணத்துவத்தைக் காட்டாதீங்க. காலப் போக்கில் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்து தரம் உயர ஆவன முயற்சிகளை மேற்கொள்வோம்……”

மீரா இலேசாகச் சிரித்தார்.

இராஜநாயம் மாஸ்டர் யுகம் என்று மீரா குறிப்பிட்டதும் எனது சர்வாங்கமும் ஒரு கணம் புல்லரித்து விட்டது.

“சே அந்த மனிதனைப் பார்த்தே படிக்க வேண்டிய விடயங்கள் எவ்வளவோ இருந்தன.”

காலங் கடந்து அந்தப் பழைய பாடசாலையை அரசு பொறுப்பேற்றதும், வயதைக் காரணம் காட்டி இராஜநாயகம் மாஸ்டரைக் காய் நகர்த்திய விதம் அந்தச் சோகக் காட்சி எனக்கு இன்றைக்கும் உள் மனதைக் குத்திக் கிளறிக் கொண்டிருக்கிறது.

“இன்று நாற்பது வருட ஆசிரிய சேவையைப் பூர்த்தி செய்து விட்டு ஓய்வு பெறுகிறேன். பாடசாலை சம்பந்தப்பட்ட அனைத்து விபரங்களும் பூரணப் படுத்தப்பட்டு அலுவலகத்தில் ஒழுங்காக வைக்கப்பட்டுள்ளன…”

என்று மட்டும் பாடசாலைச் சம்பவத்திரட்டுப் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தாலே போதும். ஆனால், இராஜநாயகம் மாஸ்டருக்கு அது திருப்தியில்லை . இவ்வளவு காலம் ஓர் இலட்சியத்தை முன்னோக்கி அரும்பணியாற்றியுள்ளார். அந்தப்பணி தொடர வேண்டும் என்று மானசீகமாக விரும்பியுள்ளார். அந்த விருப்பத்தை நிரந்தரமாகப் பதிவு செய்ய வேண்டும். இனிவரும் அதிபர்கள் ஆசிரியர்கள் செவ்வனே இயங்க வேண்டும்.

தீர யோசித்துவிட்டுத் தூரநோக்கோடு சம்வத்திரட்டுப் புத்தகத்தில் பதிவு செய்து விட்டார். எவரும் இதனை ஒரு தேவையற்ற குறிப்பு என்று நிராகரிக்க முடியாது.

அலுவலகத்தையும் பாடசாலையையும் கவனமாகப் பூட்டினார். இறுதியாக ஒருமுறை தன் பார்வையைப் பாடசாலையிலும், சுற்றாடலிலும் செலுத்திவிட்டு, சாவிக் கொத்தைத் தோட்டத்துப் பெரிய கிளாக்கர் ஐயாவிடம் ஒப்படைக்கும்படி, பொறுப்பேற்க வந்திருக்கும் சீனியர் அஸிஸ்டன்ட் எட்வின் பர்னான்டுவிடம் கையளித்தார், இராஜநாயகம் மாஸ்டர்.

பாடசாலையும் சுற்றுப்புறமும் பளிச்சென்று சுத்தமாகக் காட்சியளித்தன.

மாஸ்டர் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி, கண்களையும், மூக்குக் கண்ணாடியையும் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார்.

அன்று முப்பத்தோரந் திகதி மாஸ்டருக்குச் சேர வேண்டிய அந்த மாதச் சம்பளமும், போனசும் கொடுத்தாயிற்று. சீனியர் அவரது கையயழுத்தைப் பெற்றுக் கொண் டார். “எவ்ரிதிங் இஸ் ஓகே?” எட்வின் பர்னான்டு கை குலுக்கி விடை பெற்றார். இனி நாளை முதலாந் திகதி தொடக்கம் அது அரசாங்கப் பாடசாலை. பாராளுமன்ற உறுப்பினரின் சிபார்சைப் பெற்ற மூன்று மலையக இளைஞர்கள் அரசாங்க நியமனம் பெற்று ஆசிரியர்களாகப் பொறுப் பேற்கிறார்கள்.

“பழையன கழிதலும் புதியன புகுதலும்” தவிர்க்க முடியாததுதான்.

இராஜநாயகம் மாஸ்டர் இரண்டு நாட்களுக்கு முன்பே சாமான் தட்டு முட்டுகளுடன் குடும்பத்தைத் தனது சொந்த ஊர் மாத்தளைக்கு அனுப்பி விட்டிருந்தார்.

பாடசாலையை விட்டு வெளியேறியவர், படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருந்தார். அதுவும் எண்ணினாற் போல நாற்பது படிகள்!

பதினைந்து படிகளைத் தாண்டியதும் குறுக்கே கிரவல் ரோட். இவர் இறங்கு வதைக் கண்டு கொழுந்துப் பெண்கள் கும்பலாக நின்று கொண்டிருந்தனர். பழைய மாணவிகள், பிரஜாவுரிமை காரணமாக ஐந்தாம் வகுப்போடு கல்வியை இடை நிறுத்தம் செய்தவர்கள்.

“சேர் மனசுக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு. நீங்க படிச்சுக் குடுத்த மாதிரியார் சேர் இனிச் செய்யப் போறாங்க…..?”

கூடைகளில் இருந்து கொழுந்தை கொட்டுவது போல, ஆதங்கத்தைக் கொட்டினர்.

“அப்படிச் சொல்லாதீங்க பிள்ளைகளா! நாளைக்கு மூன்று மாஸ்டர்மார் வாராங்க… பாடசாலைக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. எங்கட முயற்சிகள் வீண் போகல்ல. இனிவாரவங்க என்னென்ன செய்யணும்னு எழுதி வைச்சிருக்கேன்… ஒவ்வொரு வருடமும் வகுப்புக்கள் ஏறி ஓ. எல் வரைக்கும் வந்துவிடும்….”

ஆசிரியர் அடுக்கிக் கொண்டே போனார்.

“அதெல்லாம் வந்தாலும் சேர் ஒங்கக்கிட்டே படிக்கிறதுக்கு எங்க புள்ளை களுக்குக் கொடுத்து வக்கலியே சேர்.”

“அதுக்கு என்ன செய்யிறது புள்ள தலையெழுத்த மாத்த முடியுமா…? புள்ளங்களை நல்லாப் படிக்க வைங்க… சரி சரி எனக்கும் நேரமாகுது… ஓங்களெல்லாம் சந்திச்சதிலே மனசுக்கு சந்தோசமாயிருக்கு… எங்கே யாரையும் பாக்காம போறேனோன்னு கவலையாயிருந்திச்சி. இப்ப மனசுக்கு ஆறுதலா யிருக்கு… உங்க எல்லாருக்கும் வாழ்த்துக்கள்!…”

நான்கு தசாப்த காலமென்பது இலேசா? எத்தனை எத்தனை மாணவர்களை உருவாக்கியிருப்பார்!

ஆதங்கங்களைக் கொட்டிய பிறகு, தலைக்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்த கூடைகள் “கிளிக் கிளிக்”கென்று கிறீச்சிட்டன! அவர்கள் வேகமாக நடந்து மறைந்தனர்!

இராஜநாயகம் மாஸ்டர் கிரவல் ரோட்டைக் குறுக்காகக் கடந்து மீண்டும் படிகள் இறங்கினார். இறங்குவது இலகு. ஏறப்போனால் தான் பொல்லாத களைப்பு, மூட்டுவலி என்று எல்லாமே வரிசையாக வந்து தொல்லை கொடுக்கும்.

தோட்டப் பாடசாலை குன்றின் மேல் மட்டத்தில் தோற்றமளித்துக் கொண்டிருந்தது. மெயின் ரோட்டிலிருந்து, இந்த வெண் மணல் பாதை பாடசாலைக்குச் சுற்று வழி இரண்டு மூன்று சுற்று சுற்றினால்தான் பாடசாலை முகப்பில் கொண்டு போய் விடும். வயதானவர்களுக்குச் சிரமம்தான்.

உண்மையில் அந்த மணற்பாதை பெரிய கிளாக்கர் ஐயா பங்களாவுக்கு அவரது கார் போகும் ரோட்.

மரங்களும் கொடிகளும் தேயிலைச் செடிகளும் தனித்தனியே அசைந்து அசைந்து மாஸ்டருக்குப் பிரியாவிடை கூறுகின்றன.

பாடசாலைச் சுவர்களுக்கும், கூரைக்கும், யன்னல்களுக்கும் கூட, வாயிருந்தால் ஓவென்று அழுது குழறியிருக்கும்!

இராஜநாயகம் மாஸ்டருக்கு எதிர்ப்புக் குரல்களும் இருந்தன!

“பெரிய அளவில் பிரியாவிடைக் கூட்டம் ஒழுங்கு செய்வதற்கு, அவர் என்ன பெரிய தொரையா…? சாதாரண தோட்டத் தொழிலாளர் புள்ளங்களுக்கு அ…ஆ… சொல்லிக் குடுக்கிற ஒரு சின்னச் சம்பளக்காரன் தானே! அவருக்குப் போய்”

“காலங்காலமா… பள்ளிக்கூடத் தோட்டத்தைச் சொரண்டிக்கிட்டு, இப்ப வயசு போனதும் பென்சன்ல போறாரு…”

“அவர் போனா நமக்கென்னையா… அதான் அரசாங்கம் கட்டிடம் கட்டிக்கிட்டு இருக்கே…. மேல் வகுப்புகள், எத்தனையோ மாஸ்டர்மார் வரப்போறாங்க…”

இப்படிப் பல… பாமரத்தனமான… ஏறிய பிறகு ஏணியை உதைக்கும் பேச்சுகளுக்கும், அர்த்தராத்திரியில் குடை பிடிப்பவர்களின் விமர்சனங்களுக்கும் அவர் செவிசாய்ப்பதில்லை .

உண்மையில் அரசு பொறுப்பேற்றுப் புதிய கட்டிடம் எழும்ப அவர்தான் ஆதார சுருதியாக இருந்துள்ளார் என்பது அவர்களுக்குத் தெரியுமா!

இப்படியும் சில கருத்துக்கள் காற்றில் மிதந்தன:

“தங்கமான மாஸ்டர் போறார்டா! போன பிறகுதான்டா அருமை தெரியும்!”

“போன பிறகு இனி என்ன நடக்கப் போகுதுன்னு பார்க்கத்தானே போறோம்….!”

“ஒரு உள்நாட்டு தேசியப் பத்திரிகை ஒன்றில் மாஸ்டரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தோட ஒரு செய்தியைப் போடக்கூட வக்கில்லாத… நன்றி கெட்ட ஜென்மங்க…” இப்படியும் ஒரு கொதிப்பு.

பத்து நிமிடங்களில் படிகள் இறங்கி அரசாங்கப் பிரதான பாதையில் பஸ் நிறுத்தத்தை அடைந்ததும் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். பஸ் வரும் நேரம்தான்.

பஸ் தரிப்பில் பக்கீர் அலி நின்று கொண்டிருந்தார்.

“ஆ! மாஸ்டர் இண்டக்கி பயணமா? சொல்லவே இல்லியே!… என்குடும்பம் சார்பில் ஏதும் தவறுகள் நடந்திருந்தா நீங்க மன்னிக்கணும்…”

இருவருக்குமே ஒரு பழைய, இனிய சம்பவம் ஞாபகத்திற்கு வந்து நெருடியது.

டீ மேக்கர் பக்கீர் அலியின் மூத்தமகன் அப்பொழுது பாடசாலையில் கீழ்ப்பிரிவில் சேர்ந்து மாதங்கள் ஓடி விட்டன!

பக்கீர் அலி “பாலபோதினி” தொடக்கம் தேவையான கொப்பி புத்தகங்கள் பென்சில்கள் அனைத்தும் வாங்கிக் கொடுத்திருந்தார்.

ஆனால், இராஜநாயகம் மாஸ்டர் கீழ்ப்பிரிவுக்குக் கல்வி கற்பிக்கும் முறை வேறு.

பாடசாலை மண்டபம் எப்பொழுதும் மிகத் தூய்மையாகக்தான் இருக்கும். மாணவர்கள் செருப்பு, சப்பாத்துக்களைக் கூட வெளியே கழற்றி வைத்துத்தான் உள்ளே வகுப்புகளுக்கு வரவேண்டும்.

கீழ்ப் பிரிவு மாணவர்களுக்கு, சுத்தமான கல்லாறு வெள்ளை மணல் பரப்பப்பட்டிருக்கும். மாஸ்டர் ஒவ்வொரு பிள்ளையினதும் ஆட்காட்டி விரலைப் பிடித்து வெள்ளை மணலில் அ, ஆ, இ, ஈ என்று சொல்லிச் சொல்லி எழுத்து எழுதப் பழக்குவார்.

பக்கீர் அலியின் மகனும் சீக்கிரத்திலேயே எழுத்துக்களை எழுதப் பழகிவிட்டான். ஆனால், இன்னும் கொப்பிகளில் எழுதத் தொடங்கவில்லை .

“விரலை மணலில் அழுத்தி எழுதிப் பழகுவதில் ஓர் அபார சக்தி இருக்கிறது” என்று மாஸ்டர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்.

ஒருமுறை பக்கீர் அலியின் மனைவி பாடசாலையில் மாஸ்டரைச் சந்தித்து மகன் கொப்பிகளில் ஒன்றும் எழுதிப் பழகவில்லை என்று கௌரவக் குறைவாகக் கத்திப் பேசிவிட்டாள்.

மாஸ்டர் மிகவும் பொறுமையாகவும், மரியாதையாகவும் “உங்கள் மகன் கெட்டிக்காரன். உரிய காலத்தில் கொப்பிகள் நிறைய எழுதிக்காட்டுவான். நீங்கள் உங்கள் மகனின் கல்வியில் காட்டும் அக்கறைக்கு நன்றி போய் வாருங்கள்…”

மாஸ்டர்தான் மௌனத்தைக் கலைத்தார்.

“மிஸ்டர் பக்கீர் அலி அதெல்லாம் பழைய கதை. இப்ப உங்கள் மகன் எப்படி?”

“கெட்டிக்காரனாக்கி விட்டீங்க…. நன்றி.” பஸ்வண்டி வந்து கொண்டிருக்கிறது.

புனித நகருக்கு ஒரு டிக்கட். போனதும் பாமசியில் “பிரசர்” குளிசைகள் வாங்கிக் கொண்டு நகரில் ஒரு சுற்று. நண்பர்கள் சந்திப்பு. அப்புறம் பாரிஸ் ஹோட்டலில் பகலுணவு.

இனி “மனப் புகையைக் கக்கிக் கொண்டே போக, சனம் இல்லாத புகை வண்டிதான் பொருத்தம். அப்பாடாவென்று கைகால்களை நீட்டிக் கொண்டு வசதியாகப் போகலாம். சொந்த ஊருக்கு எத்தனை மணிக்குப் போய்ச் சேர்ந்தால் தான் என்ன!”

பளீரென்று விடிந்தது.

சரியாக நித்திரை இல்லை.

இருவருமே இராஜநாயகம் மாஸ்டரைப் பற்றியே சிந்தித்திருக்கின்றோம்.

“முடிந்த வரைக்கும் சிரமதானம் மூலம் பாடசாலைக் குப்பைகளை அகற்றுவோமா?” என்று கிருஷ்ணமீரா கேட்டார். தொட்டிற் பழக்கம்.

நான் மறுப்புக் கூறவில்லை .

இராஜநாயகம் மாஸ்டர் மதுரையில் பி.யூ.சிகற்றுக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக சோவியட் ரஷ்யாவுக்கு விஜயம் செய்யும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

தமது ரஷ்ய விஜயத்தின் போது, அவருக்கு மூன்று விடயங்கள் கவர்ந்துள்ளது.

ரஷ்ய மாணவர்கள் வாகனப் பிரயாணம் செய்து இறங்கும் போது, இருந்த இருக்கையை கைக்குட்டையால் தூசு தட்டித்தான் இறங்குவார்கள். மற்றவர்கள் உட்காரும் போது, அழுக்காக இருக்கக் கூடாது என்பதற்காக!

மாணவர்கள் வழியில் நடக்கும் போது, அழுக்குப் பேப்பர்த்துண்டுகளைக் கண்டால் பொறுக்கி உரிய குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுத்தான் செல்வார்கள்.

மாஸ்டரின் மற்றுமொரு அவதானம், ரஷ்ய மாணவர்கள் நிறைய வாசிப்பார்கள் ரோட்டில் நடக்கும் போதும், பிரயாணம் செய்யும் போதும் கிடைக்கும் பொன்னான ஓய்வு நேரத்தை வீணாகக் கழிக்கமாட்டார்கள்.

இராஜநாயகம் மாஸ்டர் முடிந்தவரைக்கும் இந்தக் கலாசாரத்தைக் கடைப்பிடித்து வந்துள்ளார்.

அவரது பழைய மாணவர்களான எங்களுக்கு இந்தப் புதிய பாடசாலை மண்டபத்தைப் பார்த்ததும் அருவருப்பாக இருந்தது.

இராஜநாயகம் மாஸ்டர் பாடசாலைச் சம்பவத் திரட்டுப் புத்தகத்தில் அச்சொட்டாக எழுதிய வாசகங்கள் எங்கள் கண்முன்னே பளிச்சிட்டன.

“புதிய கட்டிடத்தில் எதிர்வரும் ஜனவரி தொடக்கம் “ஆறாம் ஆண்டு” தொடங்கி, ஆண்டு தோறும் வகுப்புக்களை ஏற்றி ஓ.எல். வரைக்கும் கட்டிட வசதி அமைந்திருக்கிறது.

மாணவர்களை ஊக்குவித்து வருடாந்த தமிழ்த்தினப் போட்டிகளில் ஈடுபடச் செய்வதோடு, சான்றோரின் ஞாபகார்த்த விழாக்கள், கலை இலக்கியத்துறை சார்ந்த பயிற்சிப் பட்டறைகள் ஏற்பாடு செய்வது ஆசிரியர்களின் கடமை.”

பெரும்பாலும் அரசாங்க பாடசாலைகளில், ஆசிரியர்கள் தமது லீவு, பதவியுயர்வு, சம்பள உயர்வு, விடுதி வசதிகள், தமது சுயமேற்படிப்பு, டியூசன் வருமானம்… என்று இவற்றை மட்டுமே கவனத்திற்கொண்டு இயங்கி வருவதை நான் கவலையுடன் அவதானித்து வந்துள்ளேன்.

இவை அனைத்தும் தேவைதான்… ஆனால், மலையக மாணவரின் கல்வி மேம்பாடு மிக முக்கியம். இதனை கற்பிப்பவர்கள் கண்ணும் கருத்துமாகக் கவனத்திற் கொள்ள வேண்டியது அவசியம்.

ஆசிரிய சேவை என்பது ஒரு புனிதமான சமூக சேவை. அதை வெறும் வருமானம் தரும் தொழிலாக மாற்றிவிடக் கூடாது.

புதிய கட்டிட வசதிகள் மூலம் சாதனை படைக்கும் வாய்ப்புகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன. கட்டிடத்தைச் சுற்றி நல்லதொரு சூழல். தோட்ட வேலையை ஒரு பாடமாக, பாடவிதானத்தில் காட்டி உற்பத்திகளை ஊக்குவிக்கலாம். உற்பத்திகளை, மாணவர்களுக்கே இலவசமாகப் பகிர்ந்தளிக்கலாம். இப்படியாக அந்தப் பதிவு நீள்கிறது.

நாங்கள் ஒரு திட்டத்துடன் அதிபரை அணுகினோம்.

“சேர்! நீங்கள் அனுமதி தந்தால், நாங்கள் ஒரு “சிரமதானம்” மூலம் மண்டபத்தையும், சுற்றாடலையும் சுத்தம் செய்து அழகுபடுத்தித் தருவோம்.”

அதிபர் மறுத்துவிட்டார்.

“சிற்றூழியர்கள் லீவு. நாளை மறுநாள் வந்ததும் எல்லாம் துப்பரவாகி விடும். நீங்கள் கேட்டதற்கு நன்றி! போய் வாருங்கள்.”

வழியில் ஓரிரு மாணவர்களைச் சந்தித்து உரையாடியதில் “சில பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை, சில வகுப்புகளுக்குத் தளபாடங்கள் இல்லை …” என்று தகவல்கள் கிடைத்தன.

“இராஜநாயகம் மாஸ்டரைப் பற்றி இவர்களுத் தெரியுமா…?” இது கிருஷ்ண மீராவின் கேள்வி.

“தெரியாது… விரைவில் அவரைப் பற்றியும் அவரது இலட்சியத்தைப் பற்றியும் பதிவு செய்யத்தான் யோசித்திருக்கிறேன்.”

பழைய மாணவர்களைத் திரட்டி, படுபள்ளத்தில் தள்ளப்பட்டிருக்கும், இராஜநாயகம் மாஸ்டரின் இலட்சியத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டே நானும் கிருஷ்ணமீராவும் நடந்து கொண்டிருந்தோம்.

“பிரேக்டவுனி”லிருந்து பஸ்வண்டியும் இன்னும் மீளவில்லை.

– மல்லிகை 43வது ஆண்டுமலர் 2008 ஜனவரி

– கொங்கணி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: 2014, எஸ்.கொடகே சகோதரர்கள் பிரைவேட் லிமிடெட், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *