இப்படியும் ஒரு வாழ்வு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 27, 2023
பார்வையிட்டோர்: 1,240 
 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பல உலகங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். மற்ற உலகங்களைப் பற்றி முழுமையான விபரம் தெரியாது. ஆனால் நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு அழகானது? எங்கு பார்த்தாலும் பசுமை. அந்தப் பசுமையிலே பல வண்ண மலர்கள். மலர்களிலிருந்து எண்ணற்ற காய் கள். காய்களிலிருந்து பல சுவை நிறைந்த பழங்கள். காய்களையும் கனிகளையும் உண்டு மகிழ்கின்ற உயிரினங்கள். உயிரினங்களில் தான் எத்தனை வகை? அந்தக் கோடிக்கணக்கான உயிரினங்களில் மக்களின மும் ஒன்றாகும்.

மக்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கிறார்களா? அதுதானில்லை. மக்களிலே எத்தனையோ இனங்கள் உள்ளன. அம்மக்கள் இனத்தினிலே எத்தனையோ வேறுபாடுகள். நெட்டை, குட்டை, தடி, ஒல்லி, கறுப்பு, சிவப்பு என்று பல. இவை மட்டுந்தானா? மொழி, இனம், மதம், சாதி என்று தொடர்கதையாக வேறுபாடுகள் விரிந்துகொண்டே சென்கின்றன.

விரிந்து செல்லும் அந்த வேறுபாடுகளில் வினோதம் ஒன்று மில்லை. அதிலுள்ள வினோதம் கயவர் மக்கள் போலவே இருக்கிறார் என்பதாகும். அத்தகைய ஒப்புவமையை வேறு எந்த இருவகைப் பொரு ளிடத்தும் கண்டதேயில்லை என்பதை.

‘மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங் கண்டது இல்’

என்று வள்ளுவர் கூறி வியப்படைகிறார்.

அதனால்தான் அழகான உலகத்தில் அற்புதமான காற்று, நீர், நெருப்பைப் பெற்று வளமாக வாழ வேண்டிய மனிதன்; மகிழ்ச்சியாக வாழ்கின்றானா? இன்பம் என்ற களியாட்டத்தில் அறிவை இழந்து அல் லல் பட்டு அவதியுறுகின்றது ஒரு பகுதி. மறு பகுதியோ கெட்டித்தனம் என்ற போர்வையில் சிக்கி நாளும் பொழுதும் கவலையில் மூழ்கி வாழ்வை நரகமாக்கிக் கொண்டிருக்கிறது.

பகுத்தறிவு என்ற ஆறாவது அறிவைப் பெறாத மற்ற உயிரினங்கள் பிறந்தது முதல் இறப்பதற்குச் சற்று முன் வரை சற்றும் கவலை இல்லாது இருப்பதை உண்டுவிட்டு இன்பமாக வாழ்ந்து மடிகின்றன.

ஆம். அன்று நண்பரைப் பார்த்துவிட்டு வீடு நோக்கி வந்து கொண் டிருந்தேன். வழியில் ஒரு சீனக் கோவில் இருந்தது. அதன் அருகில் வந்தபோது கோழி கொக்கரிக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.

ஒரு பெரிய கூண்டு இருந்தது. அதற்குள் மூன்று மலைப் பாம்புகள் கிடந்தன. மூன்று கோழிகளைக் கூண்டிற்குள் விட்டிருந்தனர். ஒரு மலைப்பாம்புக்கு பசி வந்ததும் அங்கு நின்ற கோழிகளில் ஒன்றைக் கௌவியது. உடனே அது கொக்கரித்ததும் மற்ற கோழிகளும் கொக்கரித் துக் கொண்டு அடுத்துக் கிடந்த மலைப்பாம்புகளின் மேல் ஓடின. அகப் பட்ட கோழி பாம்பின் வயிற்றினுள் சென்றதும் சத்தம் ஓய்ந்தது. மற்ற இரு கோழிகளும் கொக்கரிப்பதைப் படிப்படியாக நிறுத்திவிட்டு அமைதி பெற்றன. அவற்றின் அச்சமும் அகன்றது.

அதுவரை அங்கு நின்று கவனித்த எனது மனம் பிராணிகள் எப் போது சாகப் போகிறோம் என்ற கவலையோ, இனி நமக்கு இறப்பு என்பதே இல்லை என்ற களிப்போ இன்றி எப்போதும் போல சர்வ சாதாரணமாக நின்ற அந்தக் கோழியைப் பார்த்த போதும் இதர பிராணிக ளைப் பற்றி நினைத்த போதும் எனக்குச் சற்று பொறாமையாகவே இருந்தது.

எஞ்சியிருந்த அந்த இரு கோழிகளும் நடுங்கவில்லை. அஞ்சி ஒடுங்கவில்லை. பயத்தால் சாகவில்லை. காப்பாற்று என்று கூப்பாடு போடவில்லை. ‘உனக்கு அதைத் தருகிறேன் எனக்கு இதைதா’ என்று பேரம் பேசவில்லை. அவை அஃறிணைப் பிராணிகள். அந்த இடத்தில் இரண்டு உயர்திணைப் பிராணிகளை வைத்து சிறிதுநேரம் கற்பனை செய்தேன். எனக்குச் சிரிப்பு வந்தது. சிரித்துக் கொண்டே நடந்தேன். அங்கு நின்ற ஒருவர் பக்கத்தில் நின்றவரிடம், ‘இந்த மனிதருக்குக் கொஞ்சம் கூட இரக்கமே இல்லை. இந்தக் கோழியைப் பாம்பு கடித்து விழுங்குவதைப் பார்த்துவிட்டுச் சிரித்துக் கொண்டே போகிறார். இவருக்கு இதயமே இல்லையா?’ என்று என்னைக் காட்டி மெதுவாகக் கூறியதைக் கேட்டுக் கொண்டே நடந்தேன்.

சற்று நேரத்தில் ஒருவர் பெரிய கத்தியைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் எழுந்தார். என் உடல் எல்லாம் நடுங்கியது. கால்கள் நகர மறுத்தன. இதயம் படக் படக் என்று அடித்தது. வாய் பிதற்றத் தொடங்கியது. முகம் பயத்தால் வெளுத்தது. இத்தனை யும் ஒருசில வினாடிக்குள் நடந்தன. கத்தியோடு எழுந்தவன் முகத்தில் சிரிப்புத் தெரிந்தது. அப்போதுதான் போன உயிர் திரும்பி வந்தது.

ஆளைச் சற்று உற்றுப் பார்த்தேன். அவர் என்னுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர் என்பதை அறிந்து நிம்மதியுற்ற போது கொக்கரித்து ஓய்ந்த கோழியின் நினைவு வந்தது. ஆள் மிக அமைதியானவர். யாரிட மும் எந்த வம்புக்கும் செல்லாதவர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். எல்லோரிடமும் மிக அன்பாகப் பழகக் கூடியவர். என்றாலும் எல்லாரிடமும் பழகிவிடமாட்டார். ஆளைப் பார்த்து, எடை போட்டு, அளந்து பழகுபவர். அவ்வளவு கணக்கானவர்.

அருகில் சென்றதும், என்ன செல்வம் நலமா? நாம் சந்தித்து எவ்வ ளவு காலமாகிவிட்டது. ஆண்டுகள் கடந்தாலும் ஆள் அப்படியே இருக் கிறாயே. உன்னைப் பார்த்ததில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா? என்றதும் செல்வமும் பதிலுக்கு நலம் விசாரித்துவிட்டு என் னைப் புகழத் தொடங்கினார். ‘அதெல்லாம் சரிதான் என்ன இவ்வளவு பெரிய கத்தியோடு இருக்கிறாய்? மரத்தை வெட்டப் போகிறாயா?

என்று கேட்டதுதான் தாமதம். இல்லை! இல்லை! ஒரு மனித மரத்தை வெட்டப் போகிறேன் என்று சொன்னதும் என் உடலே ஓர் ஆட்டம் ஆடி நின்றது.

‘யார் அந்த மனித மரம்?’ என்று கேட்க விரும்பினேன். ஆனால் பேச்சு வர மறுத்தது. அப்போது செல்வத்தின் முகத்தைப் பார்த்தேன். துர்க்கா காளியின் முகம் போல் காட்சி அளித்தது. எனக்கு வியர்க்கத் தொடங்கியது. ஏன் இந்தப் பக்கமாக வந்தோம் என்று நினைத்துக் கொண்ட நான், எதைப் பற்றியும் கவலைப்படாதவனைப் போல நிதான மாக ஏன் செல்வம் இவ்வளவு கோபமாக இருக்கிறாய்? கொஞ்சம் அமைதியாக இரு. பிறகு பேசிக் கொள்ளலாம்; என்று பேச்சை மாற்ற முயற்சித்தேன். ஆனால் அவரோ கொஞ்சமும் தடுமாற்றமின்றி ‘இதய மில்லாத அந்த மிருகத்தை, நன்றிகெட்ட அந்த நடைப்பிணத்தை, கூட இருந்தே குழிதோண்டிய அந்தக் குலங்கெட்டவனை, நல்லவனைப் போல் நடித்த அந்த நயவஞ்சகனை, என்னிடம் சிரித்துச் சிரித்துப் பேசி சின்னபின்னமாக்கிய அந்தச் சிறியவனைச் சிறுசிறு துண்டுகளாக வெட் டினால் தான் என் மனம் நிம்மதியடையும்’ என்று சீறினான்.

அவன் சீற்றம் திகைப்பை மூட்டியது. மிகவும் தைரியத்தை வரவ ழைத்துக் கொண்டு ‘யார் அந்தக் கொடியவன்?’ என்று நானும் கோபத்துடன் கேட்டேன். ‘அவன் பெயரைச் சொல்லவே நா கூசுகிறது’ என்று சொல்லிக்கொண்டே அவன் பெயரை சொன்னார். அதுவரை ஏனோ தானோ என்று இருந்த நானே சிலையாகிவிட்டேன்.

‘என்ன செல்வம், பெயரைத் தவறாகச் சொல்லிவிட்டாயா?’ என்று மீண்டும் கேட்டேன். ‘ஆம். அவன் பெயரைச் சொன்னதே தவறுதான். என்று சொல்லி நிறுத்தினான்’. ‘அவன் அப்படி என்ன செய்துவிட்டான்? என்று மீண்டும் கேட்டேன்.

அவன் இனி என்ன செய்ய வேண்டும்? இதுவரை செய்தது போதாதா? என்னை அவன் கைகளால் குத்திக்கொன்று இருந்தால் எவ் வளவோ நிம்மதியாக இறந்திருப்பேன். என்னை உயிரோடு வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகச் சித்தரவதை செய்துவிட்டானே. நானும் அவ னும் உயிரும் உடலுமாகப் பழகிய அந்தப் பழக்கத்திற்குச் செய்த பண்பா இது? எங்களின் நட்பைப் பார்த்துப் பொறாமை பட்டார்களே, அப்படிப் பட்ட அந்த நட்பிற்குச் செய்த நன்மையா இது? பக்கத்தில் இருந்தே பள்ளத்தில் தள்ளிவிட்டானே பாவி. தின்கிற சோற்றிலே மண்ணைப் போட்டுவிட்டானே மடையன்’ என்று தன் வயிற்று எரிச்சலை வாயால் கொட்டிக் கொண்டிருந்தான். முகத்தில் தன் வெஞ்சினத்தைக் காட்டிக் கொண்டிருந்தான். திடீரென்று என் எண்ணம் அந்தக் கோழியைச் சற்று எண்ணியது. பேச முடியாத அந்த உயிரினம், தன் நிலையை முகத்தில் காட்ட முடியாத அந்த சீவன் சர்வ சாதாரணமாக நின்ற காட்சியோடு நண்பனை ஒப்பிட்டுப் பார்த்தேன்.

என் உள்ளத்து உணர்ச்சிகளைக் கொட்டிக் கொண்டு இருக்கிறேன். நீ என்னடான்னா மரம் போல் நிற்கிறாயே’ என்ற சொல் கேட்டு சுய உணர்வு பெற்றேன். ம்ம்.. கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். நமது பண்பாடே எட்டப்பனைப் போல் காட்டிக் கொடுப்பதுதானா? ஒரு வரை ஒருவர் கெடுக்க முற்படுவதுதானா? என்று இழுத்ததும் குளிர்ச்சி யான இரண்டு சுவை நீர் கொண்டு வருமாறு கூறிவிட்டு அருகில் இருந்த நாற்காலியில் அமருமாறு கூறினான்.

சற்று நேரத்தில் கொண்டு வரப்பட்ட சுவைநீரை அருந்தினேன். ‘நீ என்ன ஆழ்ந்த யோசனையோடு இருக்கிறாய்?’ என்று செல்வம் கேட்ட தும்; ஆமாம் செல்வம் இரண்டு வாரங்களுக்கு முன் நம் நண்பன் மூர்த்தி யைக் கண்டேன். அவன் தன் குடும்பக் கதையைக் கூறிவிட்டு தற் கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்றான். உன் கதையைக் கேட்டதும் மூர்த்தியின் நினைவு வந்துவிட்டது; என்றேன்.

‘அப்படியா? அவன் ஏன் அப்படிக் கூறினான். அவன் தான் தன் மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக இருந்தானே! என்றான். ஆமாம் உண்மைதான். அது பல மாதங்களுக்கு முன்பு. இப்போது மூர்த்தி தன் னந்தனியாக, ஒண்டிக் கட்டையாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்ற விபரம் தெரியாதா?

ஐயோ! பாவம். அவன் மனைவி மக்கள் என்ன ஆனார்கள்? கார் விபத்தில் அல்லது தீ விபத்தில் அகப்பட்டு இறந்து போனார்களோ? என்று செல்வம் துடிப்போடு கேட்டான். அப்படி எல்லாம் ஒன்றும் நடந்துவிடவில்லை. அப்படி நடந்திருந்தால் படிப்படியாக ஆறுதல் பெற்றிருப்பான். ஆனால் அவன் மனைவி, பிள்ளைகளைக் கூட்டிக் கிட்டு அடுத்தவனோடு எங்கோ ஓடிவிட்டாளாம். அந்தக் கொடிய நிகழ்ச்சியை எண்ணி எண்ணி மனம் குழம்பிய மூர்த்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துவிட்டான்.

‘அட பாவமே! என்ன அநியாயம்? இவ்வளவு பெரிய பிள்ளைகளை அழைத்துக் கொண்டா ஓடினாள்? என்ன திமிர்த்தனம்? இந்த மாதிரி பெண்களை எல்லாம் நடுரோட்டில் உள்ள விளக்கு மரத்தில் கட்டி வைத்து அடி, அடி என்று அடிக்க வேண்டும்’ என்று ஆத்திரத்தோடு கூறினான். உண்மைதான் செல்வம். ஆனால் சட்டம் எங்கே இடம் தருகிறது? சட்டம் என்ற இருட்டறை ஓடிப்போன அந்த நடத்தை கெட்ட வளுக்கும் துணை நிற்கிறதே என்ற போது…

அந்த நாத்தச் செருக்கி கிடக்கிறாள். நம்ம மூர்த்தி என்ன ஆனான்? என்று கேட்டான்.

மூர்த்தியிடம் நானும் அதைத் தான் கூறினேன். நடத்தை கெட்ட அந்த நய வஞ்சகிக்காக நீ ஏனப்பா சாக வேண்டும்? உனக்கு மட்டுமல்ல நமது பண்பிற்கே துரோகம் செய்த அந்தத் துடுக்குக்காரிக்காக நீ சாவதில் என்ன நியாயம் இருக்கிறது? கழுதை கெட்டால் குட்டிச் சுவர்தான்; என்பதைப் போல் இன்னும் கொஞ்ச நாளில் அழைத்துச் சென்றவனுக் குப் புளித்துப் போனதும் அனுப்பிவிடுவான். அப்புறம் அந்தத் துப்புக் கெட்டவன் தெருத்தெருவாகத் திரிவாள். அப்போது நீ நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டாமா? ஆகவே இறக்க எண்ணியதை விட்டுவிட்டு சிறந்து வாழ சிந்தித்துப்பார்; என்று கூறியபோது.

பிள்ளைகளின் படிப்பும் கெட்டு அவர்களின் வாழ்வும் பாழாவதை எப்படியப்பா பொறுத்துக் கொள்வது? என்ற போது மூர்த்தியின் கண்களில் நீர் கொட்டியது.

உண்மைதான் மூர்த்தி, சில பெற்றோர்கள் செய்கின்ற தவறுகளி னால் பிள்ளைகளின் எதிர்காலமே இருண்ட காலமாகிவிடுகிறது. சொன் னாலும் கேட்பதில்லை. சொந்தமாகவும் தெரிவதில்லை. நீ உன் பிள்ளை களுக்குக் கெடுதி செய்யவில்லை. தாயின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தடுமாறித் திரிகிறார்கள். ஒரு நாளைக்கு அவர்களிடத்தில் பேசுவோம்; கேட்டால் பிள்ளைகளைக் காப்பாற்று; மறுத்தால் என்ன செய்வது? எல்லாவற்றிற்கும் நீ நலமாகவும் வளமாகவும் வாழந்தால்தான் உன் பேச்சுக்கு மதிப்பு மரியாதை இருக்கும் என்று கூறியதை ஏற்றுக் கொண்டு படிப்படியாக மனந்திருந்தி வருகிறான்.

நல்ல காரியம் செய்தாய். உன் நல்ல மனதிற்கு நீ. நன்றாக வாழ் வாய். நீ நீண்ட காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்; என்று செல்வம் தொடர்ந்த போது, செல்வம்! நீ வாழ்த்துவது உண்மை என்றால் நான் சொல்வதைக் கேட்பாயா? என்று குறுக்கிட்டேன். என்ன செய்ய வேண்டும்? அந்தக் கொடியவனை வெட்ட வேண்டுமா? அல்லது…

நிறுத்தப்பா வெட்ட வேண்டுமா? கொத்த வேண்டுமா என்று கேட் கிறாயே! வெட்டிய பின் உன் நிலை என்னஎன்று யோசித்தாயா? என்று கேட்டபோது அதைப் பற்றி எல்லாம் எனக்குக் கவலை இல்லை. தப்பு செய்தவர்களை எல்லாம் தண்டித்து ஆகவேண்டும். பழிக்குபழி. அது தான் சரி என்று செல்வம் வாதிடத் தொடங்கினான்.

உன்னையே நம்பிக் கொண்டு; தமிழ்ப் பண்பாட்டின் சின்னமாக வாழ்கின்ற உனது இல்லாளைப் பார். உனது அன்புச் செல்வங்களைப் பார்; என்ற போது ‘இனி என்னப்பா யோசிக்க இருக்கிறது? துரோகம் செய்தவனைத் தண்டிப்பதைவிட வேறு எனன யோசிக்க இருக்கிறது? என்று முன் போல ஆத்திரத்தைக் கொட்டத் தொடங்கினார்.

இடைமறித்த நான் நீ சொல்வதெல்லாம் உண்மைதான் செல்வம். அதே வேளையில் இவ்வளவு பெரிய உலகத்தில் உனக்கு ஒரு வழி இல்லாது போய் விட்டதா? அப்படி என்றால் இந்த ஒன்றை மட்டுமா நம்பிக் கொண்டு பிறந்தோம். மனம் உண்டானால் இடம் உண்டப்பா. முயற்சி இருந்தால் முன்னேற முடியுமப்பா. கெடுக்க நினைத்தவனுக்கு இடம் கொடுக்காமல் அவனைவிடச் சிறப்பாக வாழ்ந்துகாட்ட வேண் டும். அவன்தான் மனிதன்.

அப்படி என்றால் கெட்டவர்களை விட்டுவிட வேண்டுமா? அவர் கள் செய்கின்ற பழி பாவங்களுக்கு அடங்கி நடக்க வேண்டுமா? செல் வம் முடிக்கவில்லை.

அடங்கியோ ஓடுங்கியோ போக வேண்டும் என்று சொல்ல வில்லை. இன்னும் சில காலத்தில் தப்பு செய்தவனே அடங்கி, ஒடுங்கி அழிந்துபோவான். கெடுவான் கேடு நினைப்பான் என்பதைக் கேள்வி பட்டதில்லையா? தன்னெஞ்சே தன்னைச் சுடும் என்பதைப் போல தீமை செய்தவன் விரைவில் தீமைக்குள்ளாவான். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதற்கு ஏற்ப பொறுமையாக இரு. உனக்கு ஒரு கெடுதியும் வராது என்ற என் பேச்சு நண்பனின் மனதை ஓரளவிற்குத் தொட்டுவிட்டதை உணர்ந்தேன்.

அவ்வாய்ப்பைப் பயன்படுத்தி நண்பனை வள்ளுவர் முன் நிறுத்தினேன்.ஆம்.

‘மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்’

என்ற தெய்வப் புலவரின் திருவாக்கைக் கூறி அதற்கு விளக்கமும் கொடுத்தேன். நண்பர் மேலும் தெளிவு பெற்றுவந்தார்.

அமைதியாக இருந்த நண்பனை நோக்கி ‘செல்வம் எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும் என்று கெஞ்சுவதைப் போல் கேட்டேன்’ என்ன? அவன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்க றியா? என்று கோபத்தோடு கேட்டார்.

திருவள்ளுவர் அப்படிக் கூறாமல்

‘இன்னா செய்தாரை ஒறுத்தல்அவர் நாண
நன்னயம் செய்துவிடல்’

என்ற குறளின் வழி தீமை செய்தார் வெட்கும்படி அவருக்கு நல்லுதவி செய்யும்படி கூறியுள்ளார். ஆகவே தீமை செய்த அவர் எப்படி நடந்து கொண்டாலும் சரி. அவரின் செயலில் தலையிடாதே; அப்படி ஒதுங்கி வாழ்வாயே என்றால் உனக்கு ஒரு துன்பமும் வராது என்றபோது அந் தப் பெரிய வெட்டுக் கத்தியை வீசிவிட்டு, இனிமேல் கனவிலும் முரட் டுக் குணமின்றி வாழ்வேன் என்று உறுதிகூறிய போது என் மனம் குளிர்ந்தது.

கத்தியைத் தீட்டிய முரடனையும் புத்தியைத் தீட்ட வைத்துப் பொறையுடைமையாக்கிய அந்தத் திருவள்ளுவரை என் உள்ளம் வாழ்த்தி நன்றி கூறியது.

– தனிமரம் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஏப்ரல் 1990, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பட்டுக் குழு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *