யாரோ ஒரு சீனத்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2024
பார்வையிட்டோர்: 1,347 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாமி கிட்டேயிருந்து தானே சூரா வந்திருக்கு?

கணவனின் கையிலிருந்த கடிதத்தை அகலவிரித்த கண்களால் கவனித்துக் கொண்டே கேட்டாள் கண்மணி. அவள் கண்களில் ஆவல் மின்னியது.

“ஆமா, நமக்கு வேறே யாருகிட்டேயிருந்து கடுதாசி வரும்?” என்றான் வேலு சலிப்புடன்.

“அவங்க சுகமாயிருக்காங்களான்’னு பாருங்க”

கண்மணியின் மனத்துடிப்பு சொற்களில் ஊடுருவிப் பாய்கிறது. மாமியாரின் தேகம் சிறிது சுகவீனமடைந்திருப்பதாக மூன்று மாதங்களுக்கு முன் வந்த கடிதம் தெரிவித்த சேதி இன்னும் அவள் நினைவில் இருந்தது.

“ஊம் அவங்களுக்கு என்ன சுகமாத்தான் இருப்பாங்க” என்று அக்கறையில்லாமல் சொல்லிக் கொண்டே கடிதத்தை அலமாரியின் மேல் வானொலிப் பெட்டிக்குப் பக்கத்தில் வைத்தான் வேலு. அதை விசிறியடித்துத் தரையில் வீசி தரையில் வீசி எறிந்தது. அப்போது “குபுகுபு” வென்று உள்ளே புகுந்த காற்று.

கண்மணியின் காலடியில் விழுந்தது அக்கடிதம். சுவாமி பிரசாததத்தைத் தொடுவது போல் பயபக்தியோடு அதை இரு கைகளாலும் எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டாள் அவள்.

வேறு சமயமாயிருந்தால் அவளுடைய இச்செய்கை வேலுவுக்கு வேடிக்கையாக இருந்திருக்கும். சூழ்நிலைகள் அவனைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்த நேரம். எனவே அது அவன் மனத்தைத் தொடவில்லை அவளைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்தான்.

“என்ன பேசாமெ இருக்கிறீங்க? மாமி எழுதியிருக்கிறதைக் கொஞ்சம் படித்துக் காட்டுங்க…” கெஞ்சும் குரலில் கேட்டுக் கொண்டே கண்மணி கடிதத்தை அவனிடம் நீட்டினாள். ‘வெடுக்’ கென்று அதைப் பிடுங்கிய வேலு, மறுபடியும் அலமாரி யின் மேலேயே போட்டான். காற்றில் பறந்து விழாமல் இருக்க அதன் மீது அங்கிருந்த மருந்துச் சீசா ஒன்றை எடுத்து வைத்தான்.

அந்தச் சீசாவில் இன்னும் கொஞ்சம் மருந்து மிச்சம் இருந்தது அதையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தான் வேலு. அந்தப் பார்வையில் “இதுதான் நீ மருந்து குடிக்கிற லட்சணமா?“ என்ற கேள்வி தொக்கி நின்றது.

அவள் பேசாமல் இருந்தாள்.

போன வாரம் ஃப்ளூ என்னும் பொல்லாத சளிக்காய்ச்சல் அவளை வாட்டி வதைத்தது. ஆட்டி அலைக்கழித்துச் சென்றது. உட்ம்பை உருக்கி அடையாளம் தெரியாதபடி அரை மனுஷி யாக்கி விட்டது. சரியாக எழுந்து நடக்க இன்னமும் தெம்பு வரவில்லை. வாடிய கீரைத்தண்டு மாதிரி துவண்டு கிடந்தவளைக் கைத்தாங்கலாகக் கூட்டிப்போய் அரசாங்க ஆஸ்பத்திரியில் காட்டி, காத்து நின்று மருந்து வாங்கி வருவதற்கு அவன் பட்டபாடு கொஞ்சமா, நஞ்சமா?

“அது இருக்கட்டும், அப்புறமாக குடிக்கிறேன்” என்றவள் வேலுவை நிமிர்ந்து பார்த்து, ”முதல்லே மாமி சுகமா” இருக்காங்களான்னு தெரிஞ்சு சொல்லுங்க. என்றாள் மீண்டும்.

அவனுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.

வாய்க்கசப்பு மாறலே. ரெண்டு கண்ணும்

“காய்ச்சலில் கிடந்து இன்னும் உதடெல்லாம் வெந்து புண்ணாயிருக்கு. உள்ளே போயிடுச்சு. தன்னோட உடம்பு குணமாகிறதுக்கு ஒழுங்கா மருந்தைக் குடிச்சு முடிக்கணும்’ணு கொஞ்சம் கூட அக்கறையில்லே. ஆனா. மற்றவங்க சுகமாயிருக்கணும் என்கிற கவலை மட்டும் நிறைய இருக்கு”

கணவன் கடிந்து பேசிய அந்தப் பேச்சில் அவள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பும் பிரியமும் நன்கு புலப் பட்டது. கண்மணிக்கு! அவள் முகம் மலர்ந்து பிரகாசித்தது ஒரு கணம். ஆனால் மறுகணம்? வாடிக் கறுத்தது.

தன் மாமியாரை ‘மற்றவங்க’ என்று அவன் குறிப்பிட்டது, கூரிய சொல்லம்பாக அவள் நெஞ்சில் ‘ சுருக் ’ கென்று பாய்ந்தது.

‘இவரைப் பெற்று வளர்த்து எனக்கு அருமையான கணவராகத் தந்தவங்க என் மாமி! அவங்க எப்படி எனக்கு ‘மற்றவங்க’ ஆவாங்க?

எனக்கு அவங்க மற்றவங்களானா… நான் அவங்களுக்கு அன்னியம்’னுதானே அர்த்தம்?

“அப்படியானா, இவர் இன்னும் என்னை அன்னியம் னு தான் கருதிக்கிட்டு இருக்கிறாரா?”

“இவருக்கு நான் மனைவி என்கிற அளவோடு மட்டும் அடங்குவது தானா எங்க உறவு? அதுக்கு அப்பாலேயும் சொந்தம் கொண்டாட எனக்கு அருகதை கிடையாதா?”

அவள் இதயத்துக்குள்ளே கேள்வி அலைகள் கொதித்துக் குமிழியிட்டன. வேலுவிடம் ஏதேதோ கேட்க நாவும் இதழ்களும் துடித்தன. பொங்கி வழியவிருந்த ஏக்க உணர்வைத் தேக்கிக் கட்டுப்படுத்திக் கொண்டு எதிர்ப்பக்கச் சுவரை ஏறிட்டு நோக்கினாள்.

அங்கே, பூடி தொங்கட்டான், கொப்பு, அலமுருகு போன்ற பழங்காலத்துப் பொன்னாபரணங்கள் பூண்டு. வாரி முடித்த கூந்தலில் மலர்க்கத்தை நிறைந்திருக்க, மங்கலப் பொட்டு நெற்றியில் ஒளி வீச, புன்னகை பூத்த முகத்தோடும் கருணை வழியும் கண்களோடும் லட்சுமிகரமாகத் தோற்றமளிக்கும் மாமியாரின் உருவப்படம் அவளிடம் என்னென்னவோ சொல்வது போல் தோன்றியது

அவள் விழிகளில் கண்ணீர் திரையிட்டது அவன் கண்களிலோ கோபம் கொப்பளித்தது.

”கடுதாசியிலே புதுசா என்ன எழுதியிருக்கப்போறாங்க? பெண்டாட்டியையும் பிள்ளைகளையும் கூட்டிக்கிட்டு, நான் கண்ணை மூடுறதுக்குள்ளே ஒருமுறை வந்துட்டுப் போகக் கூடாதா ன்னு அழுதிருப்பாங்க. ஒவ்வொரு கடுதாசியிலேயும் முதல்லே இந்த அழுகைதான் இருக்கும், அப்புறம் தீபாவளி வருது… திருக்கார்த்திகை வருது, பொங்கல் வருது. பங்குனி உத்தரம் வருது .” முடிஞ்சாச் செலவுக்குக் கொஞ்சம் பணம் அனுப்புன்னு எழுதுவாங்க எப்பவும் வாடிக்கையா வந்துக் கிட்டு இருக்கிறது. இந்தச் சேதிதான். பணம் இங்கே சும்மா கொட்டிக்கிடக்கும்கிறது அவங்க நினைப்பு. அதை உடனே படிச்சுக் காண்பிக்கலேன்னு இப்ப அழுகை பொத்துக் கிட்டு வருது அந்தச் சேதிகளைத் தெரிஞ்சுக்கிட்டு நீ என்ன செய்யப்போறே? நாளைக்கே புறப்பட்டுப் போய் அவங்க ஆசையை நிறைவேற்றப் போறியா? இல்லே உடனே ஓடிப் போய் மணியார்டர் ‘ பண்ணப் போறியா?

மனக் குமுறலைக் கடுகடுப்பான வார்த்தைகளாக்கி வாரி இறைத்து விட்டு, வேலு ‘விருட் ‘டென்று வெளியே கிளம்பி னான் “ மாமி” மாமின்னு இவ தவிக்கிற தவிப்புல்ல எப்போ பார்த்தாலும் பெரிய தொந்தரவா இருக்கு? அவங்களுக்கு அண்ணன் பொண்ணு. தம்பி பொண்ணுங்கிற சொந்த மருமகள் மாதிரில்ல கிடந்து தவிக்கிறா? என்று போகிற போக்கில் முணுமுணுத்துக் கொண்டே நடந்தான்.

வெந்த புண்ணில் வேல் சொருகியது போல் இந்தச் சொற்கள் கண்மணியின் நைந்த இதயத்தை மேலும் புண்ணாக்கின.

என் மாமிக்கு நான் சொந்த மருமகள் இல்லையா? நான் அவங்களுக்கு யாரோ ஒருத்திதானா.

கோ வென்று கதறியழ வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

மெதுவாக எழுந்து அலமாரி மீதிருந்த அந்தக் கடிதத்தை எடுத்தாள் எடுக்கும் போது ஏனோ அவள் கை நடுங்கியது. தேகம் குலுங்கி ஆடியது,

சொந்தம் என்பதற்குச் சமூகம் விதித்துள்ள வரை முறைகளை வைத்துப் பார்த்தால் கண்மணி யாரோ ஒரு சீனத்திதான்!

குடும்பக் கட்டுப்பாடு பிரபலமடையாத அப்போது ஒரு சீனக் குடும்பத்தில் ஏழாம் குழந்தையாகப் பிறந்தவள் அவள்.

அது சீனர்களுக்குக் குரங்கு வருஷம். குரங்கு வருஷத்தில் பிறக்கும் பெண் குழந்தை குடும்பத்துக்குச் சுபிட்சத்தைக் கொண்டு வராது என்னும் ஒரு நம்பிக்கையால் அவளை மறு மாதமே விற்று விட்டார்கள் பெற்றவர்கள்!

பெண் குழந்தை இல்லாத ஒரு தமிழ்க்குடும்பம் அவளை கண்மணி விலைக்கு வாங்கிக் கொண்டது. அங்கே அவள் என்னும் அழகிய பெயரில் செல்லக்கிளியாக வளர்ந்து பெரியவளானாள்.

அவளுக்குத் தெரிந்தது தமிழ் மொழிதான். அவளுடைய முன்னறி தெய்வங்கள் அந்தத் தமிழினத்துத் தாய் தந்தையர் தாம்! அவள் உயிரிலும் உணர்விலும் ஒன்றிக் கலந்திருப்பது தமிழ்ப் பண்பாடுதான்!

அந்தப் பேசும் தங்க விக்கிரம் வேலுவுக்கு வாழ்க்கைத் துணைவியாகிப் பதினைந்து வருடங்கள் ஆகின்றன.

அவன் தமிழகத்திலிருந்து இங்கு வந்தவன். அவனைப் பெற்று வளர்த்த தாய் தமிழகத்தில் இருப்பது கல்யாணத்துக்கு முன்பேயே கண்மணிக்குத் தெரியும். கல்யாணமானதும் அவளுடைய வேண்டுகோள் இதுதான் :

ஊருக்குப் போய் மாமியைப் பார்க்கணும்னு ஆசையாயிருக்கு துங்க! அவங்களோட ஆசீர்வாதத்தைப் பெறணும்’னு மனசு துடிக்குதுங்க, ரெண்டு பேருமாய் போயிட்டு வருவோம் ஏற்பாடு பண்ணுங்க…

அந்த இளமஞ்சள் நிற இளமேனியாளை அழைத்துச் சென்று தன் அன்னையிடம் காட்ட வேண்டுமென்று அவனுக்கும் ஆவலாகவே இருந்தது. போக வரக் கப்பல் டிக்கட்டுக்கும், இதர செலவுகளுக்கும் பணம் சேர்த்துக்கிட்டு புறப்படுவோம். டீன்றான் வேலு.

இருவருமாகச் சிக்கனத்தைக் கடைப்பிடித்துப் பணம் சேர்க்கவும் தொடங்கினார்கள்.

முதல்வருஷம் முழுவதும் சேர்த்த் பணத்தை அவ்வருஷக் கடைசியில் முழுசாகச் செலவழிக்கும்படி நேர்ந்தது. அதாவது, அப்போது அவர்கள் முதல் குழந்தைக்கு அம்மா அப்பா ஆனார்கள்!

அதே போல் மறு வருஷமும் பணம் சேர்த்தார்கள். மறு பிரசவத்தின் போது அதுவும் செலவாகித் தீர்ந்தது அடுத்ததும் இப்படியேதான்.

இப்போது அவர்களுக்கு ஆறு குழந்தைகள்! பெரிய குடும்பம். சின்னக் குடும்பமாக இருக்கும் போதே மிச்சம் பண்ண முடியவில்லை. இப்போது என்ன செய்ய முடியும்? வாழ்க்கைச் செலவுக்கே பற்றாக்குறையான வருவாய்.

ஊருக்குப் போய் வரப் பணம் சேர்ப்பது இனிமேல் இயலாத காரியம் என்று வேலு எப்போதோ முடிவு செய்து விட்டான்.

தீபாவளி, பொங்கல் போன்ற திரு நாட்களுக்குக் கூடத் தன் தாய்க்கு அவனால் ஒரு பத்து இருபது அனுப்பி வைக்க முடியவில்லை. இயலாமை, வேலுவின் இதயத்தை கல்லாக்கி வெகுநாட்கள் ஆகி விட்டன.

இப்போது அவன் தாயின் கடிதத்தைப் பிரித்துப் பார்க்கவே விரும்புவதில்லை. ஊர்க்கடிதம் வந்தால் அவன் முகத்தில் அன்று முழுவதும் ஈ ஆடாது பேச்சில் கடுகடுப்பும் செய்கையில் சிடு சிடுப்பும்.

ஆனால் கண்மணி அவனுக்கு நேர்மாற்றமாக இருந்தாள்.

மாமியாரை பார்த்து வர ஊருக்கு போக முடியவில்லையே என்பது தினமும் அவள் நெஞ்சத்தை வாட்டிக் கொண்டிருக்கும் நெடுந்துயரம்.

மாமியாருக்கு அவ்வபோது கொஞ்சம் பணம் அனுப்பி உதவ வழியில்லையே என்பது அவள் உள்ளத்தைச் சதா உறுத்திக் கொண்டிருக்கும் பெருங்கவலை.

மாமியாரிடமிருந்து வரும் கடிதங்களைப் படித்து புரிந்து கொள்ளுமளவுக்கு தமிழ் கற்கவில்லையே என்பது அவள் அகத்தை வதைத்துக் கொண்டிருக்கும் வேதனை.

வேலுவுக்கோ அவள் ஒரு விசித்திரப் பிறவியாகத்தோன்றினாள் ‘மாமி’ என்று சொல்லும்போதேல்லாம் அவள் குரலில் பாசம் பெருகி வழிவதும் அவள் கண்களில் வாஞ்சை பொங்கி நிறைவதும் வேலுவுக்கு பெருமையாக இருந்தது ஒரு காலம். இப்போது …?

மாமியை பார்க்க முடியாத பாவியாக இருக்கிறேனே, என்று அவள் ஏங்கிப் பெருமூச்சு விடுவதும் “மாமிக்கு எப்படியாவது பணம் அனுப்புங்க”, என்று நிலைமை உணராமல் நச்சரிப்பதும் அவனுக்குக் கோபத்தையும் எரிச்சலையும்தான் கிளப்பி விட்டன.

அந்தப் பெண்ணுள்ளத்தில் சுடர் விட்டுக் கொண்டிருந்த மகத்தான அன்பு பேரொளி அவனுக்குபுலப்படும் ஒன்றாகயில்லை.

அது அவனுக்கு எப்படி புலப்படும் அவள் வேறோர் இனத்தில் பிறந்த யாரோ ஒருத்தி என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கும் போது?

மூத்த பையனுக்குச் செகண்டரி ஸ்கூல் கட்டணம் ஆறு வெள்ளி, அதற்கடுத்த பெண்ணுக்கு எலிமென்ட்ரி ஸ்கூல் கட்டணம் ஒரு வெள்ளி, மூன்றாம் பிள்ளைக்கு நோட்டு புத்தகம் வாங்க நாற்பத்தைந்து காசு… இப்படியாக நாளைய தினம் வேலுவுக்குக் கிட்டதட்ட பத்து வெள்ளி வேண்டியிருந்தது அந்தப் பத்து வெள்ளி தேவை அவனை விழி பிதுங்க செய்த கொண்டிருந்த வேளையில் தான் தாயிடமிருந்த அந்தக் கடிதம் வந்திருந்தது.

கண்மணியை கண்கலங்க வைத்துவிட்டுஅப்போதுவெளியே சென்ற வேலு, பத்து வெள்ளி கைமாற்று வாங்கப் பத்து நண்பர்களை நாடிப்போயும் பலன் இல்லாமல் வெறுங்கையோடும் வேதனையோடும் வீடு திரும்பிய போது இருட்டி விட்டது.

வாசற்படியில் கால் வைக்கும் போதே அவன் மனம் ‘திக், கென்றது வீடு இருண்டு கிடந்தது. கண்மணி ஏன் இன்னும் விளகேற்றாமல் இருக்கிறாள்? ஒரு நாளும் இப்படி இருக்க மாட்டாளே?

உள்ளே நுழைந்த வேலுவின் பார்வை முன் கூடத்துச் சுவர் மீது தற்செயலாகச் சென்றது. அங்கு மாட்டி வைத்திருந்த அம்மாவின் புகைப்படத்தைக் காணவில்லை. எங்கே அது?

அவன் உடம்பு படபடத்தது.

மெதுவாகச் சாமி அறைக்குள்ளே சென்றான். அங்கே குத்து விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த மங்கலான வெளிச்சத்தில் அவன் கண்ட காட்சி…

குத்துவிளக்கின் எதிரில் அம்மாவின் உருவப்படம் இருந்தது, அதன் மூன்னாம் ஓர் உடைந்த உண்டியல் அதிலிருந்த காசு நாணயங்களும் வெள்ளி நோட்டுகளும் அங்கு சிதறிக் கிடந்தன· பக்கத்தில் அழுது, அழுது வீங்கிய முகத் தோடும், கண்ணிரைக் கொட்டிக் கொட்டி வற்றிப் போன கண்களோடும் சோகமே உருவானவளாகச் சாய்ந்திருந்தாள் கண்மணி?

இதெல்லாம் என்ன? என்ன கண்மணி? என்று பதற்றத்தோடு கேட்டான் வேலு.

அவனைக் கண்டதும் அணை கடந்த வெள்ளம் போல் அழுகை பீறிட்டது. மாமி தெய்வமாகிட்டாங்க. என்று கதறினாள்.

அதர்ச்சியால் வேலு சிலையாகி நின்றான்.

கடுதாசியைப் படிச்சுப் பாருங்கன்னு அப்பவே கெஞ்சினேன் உங்கபாட்டுக்கு வெளியே போயிட்டீங்க. நீங்க வரும் வரைக்கும் என்னாலே பொறுத்திருக்க முடியலே. பக்கத்து வீட்டுக்காரங்க கிட்டே கொடுத்துப் படிச்சுக் காட்டச் சொன்னேன். ஐயோ…. மாமி… என் மாமி…

அறை முழுவதையும் எதிரொலித்த அவள் அலறல் அவன் அகம் முழுவதையும் குலுக்கி உலுக்கியது.

உங்களுக்குக் கூடத் தெரியாமல் நான் சிறுகச் சிறுகச் சேமிச்ச பணத்தைப் பாருங்க. எப்பவாவது ஒருநாள் மாமியைப் பார்த்தே தீரணும்’னு உங்களுக்கு வாழ்க்கைப்பட்ட தேதியிலே யிருந்து சேர்த்த உண்டியல் இதோ இன்னிக்கு உடைஞ்சு கிடக்கு. இனி நான் மாமியை எப்போ பார்க்கப் போறேன்?

வேலுவின் கண்களில் நீர் பெருகியது. குனிந்து கண்மணி யின் கைகளைப் பற்ற முயன்றான்.

இப்ப எதுக்கு அழறீங்க? உங்களுக்கு ஏன் அழுகை வரணும்? பெத்து வளர்த்த தாய் என்கிற பாசம் உங்க மனசிலே இருந்துச்சா? பிரியம் இருந்துச்சா? ஒண்ணுமே இல்லை! உங்க மனசு கல் மனசு.

அவள் உள்ளத்தின் குமுறல் அலைகள் வேலுவை நிலை குலையச் செய்தன.

நாம் பெத்த பிள்ளைகள் மேலே உங்களுக்கு எவ்வளவு பாசம்? எவ்வளவு வாஞ்சை? இவங்களை வளர்க்க எவ்வளவு பாடு படுறீங்க? இவங்க உடம்பிலே லேசாக் காய்ச்சல் அடிச்சாலும் எப்படிப் பதைபதைக்கிறீங்க? இவங்களோட எதிர் காலத்தைப் பத்தி எவ்வளவு அக்கறைப் படுறீங்க? ஏன்? இவங்க உங்க பிள்ளைகள்’னு தானே?. இதே மாதிரிதான் நீங்களும் அவங்களுக்குப் பிள்ளையா இருந்தீங்க. இப்ப இவங்களை வளர்த்து ஆளாக்க நீங்க படாத பாடெல்லாம் படுற மாதிரிதான் உங்களை வளர்க்க அவங்களும் பட்டிருப்பாங்க. இதை ஏன் நீங்க உணராமல் இருந்தீங்க? ஏன் உணரலே?

கண்மணியின் கைகளைப் பற்றிய வேலுவின் கைகள் நடுங்கின. இரண்டடி பின் வாங்கி நின்று அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கினான். அந்த மஞ்சள் முகம் அவன் மன அரங்கம் முழுவதும் வியாபித்து உணர்ச்சி அலைகளைக் கொந்தளிக்கச் செய்தது. அந்த ஆயிரமாயிரம் உணர்ச்சி அலைகளின் அலறல் இப்படித்தான் ஒலித்தது.

நீ யாரோ ஒருத்தியில்லை கண்மணி! நீ யாரோ ஒருத்தியில்லை…

– சிங்கப்பூர்க் குழந்தைகள் (சிறுகதை தொகுப்பு), முதற் பதிப்பு:1989, சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *