எஸ்.ஜெகதீசன்

 

எஸ் ஜெகதீசன், யாழ்ப்பாணம், இளவாலையில் பிறந்த பத்திரிகை யாளார், எழுத்தாளர்.  1990 இல் கனடாவிற்கு புலம்பெயர்ந்தார். இவர் இளவாலை புனித என்றியரசர் கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, கொழும்பு அலெக்ஸாண்டிரா கல்லூரி போன்ற பாடசாலைகளில் கல்வி பயின்றார். மேலும் இலண்டன் கணக்கியல் கல்லூரி, இலண்டன் பத்திரிகைத்துறை கலாசாலை போன்ற இடங்களிலும் பயின்றார். 

இளவாலை எஸ்.ஜெகதீசன்,பொதிகை எஸ்.ஜெகதீசன்,பாஞ்சாலன் போன்ற பல புனை பெயர்களில் அறியப்படும் இவர் யாழ் ஈழநாட்டில் உதவி ஆசிரியராகவும், யாழ் சஞ்சீவி,லண்டனில் லண்டன் முரசு ஆகியவற்றில் இணை ஆசிரியராகவும், நோர்வேயில் கதிரவன், கனடாவில் பொதிகை ஆகியவற்றின் ஆசிரியராகவும் திகழ்ந்தவராவார். அர்த்தங்கள் ஆயிரம்,  பிராயச்சித்தம், கவிநாயகர் கந்தவனம்,யாவும் கற்பனை,தகவலில் தெரிந்தவை , இன்னும் இருக்கு ,பொதிகை கலசம் , வானொலி கலசம் , அன்றைய போட்டி , வெகுமதி   ஆகியன இவரது    நூல்கள். 

இரசிகநிதி பொதிகை எஸ்.ஜெகதீசன் – கவிநாயகர் கந்தவனம்

இளவாலை கிராம முன்னேற்றச்சங்கத்துக்காக 1966 ம் ஆண்டு எனது தலைமையில் கவியரங்கு ஏற்பாட்டாளனாக பதின்ம வயதில் அறிமுகமானது எஸ்.ஜெகதீசனின் இலக்கிய உறவு.50 வருடங்களாகி இன்றும் தொடர்கின்றது. 1970 ம் ஆண்டளவில் ஈழநாடு பத்திரிகை உதவி ஆசிரியர் என பின்னர் நெருக்கமாகி 1990ம் ஆண்டு கனடாவில்மேலும் இறுக்கமானாது அந்த இலக்கிய உறவு.

1994 ம் ஆண்டு கனடாவில் முதலாவது மணி விழாவாக எனது மணி விழா அமைய மூலகாரணமாகியதுடன் எனது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர் எஸ். ஜெகதீசன்.அப்பொழுது பொதிகை ஆசிரியராக இருந்த ஜெகதீசனிடம் மணிவிழா வேண்டாம்.வேண்டுமென்றால் என்னைப்பற்றி ஏதாவது எழுதுங்கள் என்றேன்.அவர் கடைசியாக இரண்டையும் செய்தார்.கனடாவில் நடந்த முதலாவது மணிவிழாவும் இதுதான்.கனடாவில் வெளிவந்த முதலாவது வரலாற்று நூலும் இதுதான்.

கவிநாயகர் என்பது எனது புனைபெயர்.அதனை எனக்கொரு கௌரவ பட்டமாக்கியவர் எனது வரலாற்று ஆசிரியர் ஜெகதீசன்.

ஓ கனடா என்ற எனது நூலில் பெரியோர் வாழ்த்து என்ற பகுதியில் எஸ்.ஜெகதீசன் பற்றி இலக்கிய இரசிகநிதி என்ற தலைப்பில் 2002 ம் ஆண்டு பின்வருமாறு குறிப்பிட்டுள்ளேன்.

பொதிகை மலையை கனடாவில் பதிய வைக்கப் பாடுபட்டார். எழுத்துக்கலையின் வித்துவத்தில் கொழுத்துத் திளைத்த புத்தமுதர் இதயம் கவர்ந்த இலக்கியத்தை அதிகம் விதைக்கும் ஆவலினாற் சலிப்பிற் கிடந்த எனைத்தட்டி உலுப்பி எழுப்பி விழாவைத்தார் சப்பென்றுள்ள என் கதையை உப்புத்துாவி உலவ விட்டார. மடுவை மலையாய் மதிக்கின்ற படியை முடியில் பதிக்கின்ற பண்பில் வளர்ந்த எழுத்தாள நண்பர் அன்பு ஜெகதீசர் பரந்த இலக்கிய இரசிகநிதி சுரந்து நன்மை வாழியவே!

ஜெகதீசன் இலக்கிய நெஞ்சமுள்ள எழுத்தாளர்.எழுத்தாளர்களை மதித்து நடக்கும் பத்திரிகையாளர். சுவையான தமிழை வளர்த்தவர்.அவருடைய தமிழில் எப்பொழுதும் ஓர் இனிமை இருக்கும்.அழகாக எழுதும் வல்லமையோடு மற்றவர்களின் எழுத்துக்களை படித்துச் சுவைக்கும் இயல்பு உள்ளவர். ஜெகதீசனை எனது வரலாற்று ஆசிரியர் என்று நான் அழைப்துமுண்டு. அவருக்கு இரசிகநிதி என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தேன்.

யாழ்.ஈழநாட்டில் உதவி ஆசிரியராக பணி புரிந்த காலத்தில் உள்ளுர் கலை இலக்கிய அரசியல் பிரமுகர்களை பேட்டி கண்டு எழுதியதில் வெளியூர் கலை இலக்கிய அரசியல் பிரமுகர்களிடமும் பிரபலமானதாக குறிப்பிடும் ஜெகதீசன் லண்டன் முரசு உலக பிரமுகர்களை தன்னிடம் அழைத்து வந்து – உலகத்திடம் தன்னை எடுத்துச் சென்றதாகக் கூறிடுவார்.

சுமார் 46 வருடங்களுக்கு முன்பாக பேனையும் துவிச்சக்கர வண்டியும் தொலைபேசியும் பிரதம ஊடக கருவிகளாக இருந்த ஒரு காலத்தில் – இருந்த ஒரு தேசத்தில் செல்வச் செழிப்பான பின் புலத்துடன் பத்திரிகை துறையில் நுழைந்த ஜெகதீசன் கணணியும் விமானமும் இணையமும் பிரதியீடு செய்யும் இன்றைய நவீன யுகம் வரை பத்திரிகைகளின் பரிச்சயத்தை வைத்துள்ளார்.

ஜெகதீசனுடன் பழகியவர்கள் நல்லவர் வல்லவர் இனிமையானவர் என்றெல்லாம் சொல்லிக்கொள்வர். காதலர் தினத்தில் பிறந்ததினால் இயல்பாகவே அந்த சுபாவம் அமைந்திருக்கக்கூடும்.ஆனால் நானோ வம்பன் என்றே சொல்லிக்கொள்வேன்.இதனை இழிவு சிறப்பு என புரிந்துகொள்ளாதவர்கள் எந்த வம்புதும்புக்கும் போகாத வம்பன் என்பதையும் இலவசமாக மனதில் இணைத்துக்கொள்வர்.வம்பு என்றால் புதுமை என்றொரு அர்த்தமும் உண்டு. எனவே வம்பன் என்றால் புதுமை செய்பவன்.ஜெகதீசனின் எண்ணத்தில் புதுமை.எழுத்துகளில் புதுமை. படைப்புகளில் புதுமை.இதனை அவருடன் பரிச்சயமுள்ளவர்கள் புரிந்து கொள்வர்.

குடும்பமும் கல்வியும்

14.02.48ல் இளவாலையில் பிறந்தார்.இலங்கை அரச புகையிரத நிலைய அதிபராக பணிபுரிந்த த.சுப்பிரமணியம் அவரது தந்தை.ஞானேஸ்வரி அவரது தாயார்.இராஜேஸ்வரி மகேஸ்வரி புவனேஸ்வரி ஆகிய மூவருக்கும் தம்பி ஜெகதீசன். திருமலர் அவரது மனைவி. கணதீபனும் சர்வதனனும் அவரது மகன்மார். சாஜனா மருமகள். சாயீஸன் பேரன். இங்கு பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

இளவாலை புனித என்றியரசர் கல்லூரி தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி ரெழும்பு அலெக்ஸ்ஸான்டிரா கல்லூரி லண்டன் கணக்கியல் கல்லூரி லண்டன் பத்திரிகைத்துறைக்கலாசாலை என்பன அவரை படிக்க வைத்தன.

ஜெகதீசன் ஒரு மரக்கறிகாரன். தீவிர சிவ பக்தன்.1990 ம் ஆண்டு கனடா வந்தவர் 1995 முதல் பிரதோச விரதம் அனுஸ்டிக்கின்றார்.

பத்திரிகை பணியும் எழுத்தும்

யாழ் ஈழநாடு யாழ் உதயன் சஞ்ஜீவி இங்கிலாந்து லண்டன் முரசு இங்கிலாந்து THE EVENING NEWS சாவி(லண்டன் பிரதிநிதி) சிங்கப்பூர் தமிழ்நேசன்(லண்டன் பிரதிநிதி) நோர்வே கதிரவன் நோர்வே TIDENS KRAV நோர்வே REFUGE (UNHCR வெளியீடு) கனடாவில் பொதிகை ஆகியவற்றில் ஜெகதீசனின் பணி ஊரறிந்தது.

ஈழநாடு(ரஞ்சன்)ஈழநாடு (பரமேஸ்)ஈழகேசரி ரோஜா சுடர் ஒளி தமிழர் தகவல் ஆகிய காகித ஊடகங்களிலும் கீதவாணி கனடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் போன்ற காற்றலை ஊடகங்களிலும் ஜெகதீசனின் ஆக்கங்கள் வந்துள்ளது இங்கு எல்லோருக்கும் தெரியும்.

இலங்கையில் தினகரன் சுதந்திரன் சிந்தாமணி சிரித்திரன் கலகலப்பு மல்லிகை வெள்ளி கலசம் ஆகியவற்றிலும் தமிழ் நாட்டின் குங்குமம் சாவி ஆறாம்திணை உன்னதம் கலை கனவு முகம் யாதும் ஊரே நறுமுகை மற்றும் கனடாவிலிருந்தவாறே மணிலா ரைம்ஸ் கௌதமாலா ரைம்ஸ் போன்றவற்றிலும் கட்டுரையோ கதையோ கவிதையோ பொது அறிவுப் போட்டிகளோ எழுதியது யாருக்குத் தெரியும்?

சிறிது காலம் ரஞ்சனின் ஈழநாட்டில் ஆசிரிய தலையங்கத்தை ஜெகதீசன் எழுதியதாக சொல்பவர் ரஞ்சனின் தாயார் திருமதி ரூபவதி இந்திரலிங்கம்.ரோஜா இதழுக்கு கௌரவ ஆலோசகராக இருந்ததாக ரோஜா ஆனந்த் கூறுவார்.கனடா ஈழகேசரி மூலம் பத்திரிகை ஆசிரியராக தாம் பிறப்பெடுக்க காரணமாக இருந்ததுடன் கௌரவ ஆலோசகராகவும் ஜெகதீசன் இருந்ததை நினைவு கொள்வர் தீவகம் வே.ராயலிங்கம்.நம்நாடு இதழில் சேர்த்துவிட்டதன் மூலம் தன்னையும் பத்திரிகைத்துறையில் பணியாற்ற வைத்தவர் இளவாலை ஜெகதீசன் என நினைவு கூர்வர் குரும்பசிட்டி ஜெகதீஸ்வரன்.

அந்த நாட்களில் ஈழநாட்டில் அவர் எழுதி வந்த நால்வரைக் கேட்டோம் என்ற பகுதி மிகப் பிரபலமானது என எனது நண்பர்களான ரஸிகமணி கனக செந்திநாதன் உடுவில் வி.தர்மலிங்கம் தங்கம்மா அப்பாக்குட்டி மில்க் வைற் கனகராசா போன்றோர் சொல்லக்கேட்டுள்ளேன்.கே.டானியல் டொமினிக் ஜீவா வ.பொன்னம்பலம் அல்பிரட் துரையப்பா போன்றோர் சொன்னதாகவும் படித்துள்ளேன்.இவ்விதம் முன்பு தமிழோசை வானொலிக்காக ஸ்ரீஸ்கந்தாவின் ஏற்பாட்டில் ஜெகதீசனை பேட்டி கண்ட பொழுது நான் குறிப்பிட்டது என் நினைவில் எழுகின்றது.

புனை பெயர்கள்

இளவாலை எஸ்.ஜெகதீசன்,பொதிகைஎஸ்.ஜெகதீசன்,பாஞ்சாலன்,வாஞ்சிநாதன், சிவபுரன்,ஜெகமலர்,சரமாவதி பத்மவியூகன்,பொன்னம்மா தங்கப்பன், பூவாத்தா, பவதாரிணி,லாவண்யா என்ற பல பெயர்கள் ஜெகதீசன் என்ற ஒரு பெயருக்குள் ஒளித்து விளையாடுவதாலோ என்னவோ அவரும் ஒளித்துவிளையாடுவதில் பிரியர்.

1979 ம் ஆண்டு அர்த்தங்கள் ஆயிரம் என்ற பெயரில் இவர் சந்தித்த பிரமுகர்களின் பேட்டி கட்டுரைகளும் 1980 ம் ஆண்டு பிராயச்சித்தம் என்ற பெயரில் 10 சிறுகதைகளும் 1993ம் ஆண்டு கவிநாயகர் கந்தவனம் என்ற பெயரில் எனது வாழ்க்கை வரலாறும் நூலுருவாகின.

அர்த்தங்கள் ஆயிரம்.

இவரது முதலாவது நுாலான அர்த்தங்கள் ஆயிரம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடபெற்றது. பேராசிரியர் சு.வித்தியானந்தன் தலைமை தாங்கினார்.பேராசிரியர் அ.சண்முகதாஸ் வெளியீட்டுரை செய்திருந்தார்.நான் குறமகள் உட்பட பல பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்கியிருந்தோம்.தற்பொழுது லண்டன் புதினம் ஆசிரியராக உள்ள நண்பர் ஈ.கே.ராஜகோபால் விழாவை ஒழுங்காற்றியிருந்தார். போலித் தன்மைகளுக்கும் நீலித் தன்மைகளுக்கும் அவன் இதயத்தில் இடமில்லை.அவனுடன் சேர்ந்து பணியாற்றிய பத்திரிகை அனுபவத்தை மறக்க முடியாது.இதயத்தால் பழகுபவன் அவன். அதனால் தன் எழுத்துக்களால் இதயங்களைப் பேச வைக்கின்றான் என அர்த்தங்கள் ஆயிரம் நூலின் பின் மட்டையில் குறிப்பிட்டுள்ளார் ஜெகதீசனின் நீண்ட கால நண்பரும் பிரபல பத்திரிகையாளருமான இ.கந்தசாமி.

சரிதையின் சாரீரம்

1993ம் ஆண்டு எனது மணிவிழாவிற்காக கவிநாயகர் கந்தவனம் என்ற பெயரில் எனது வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.2002ம் ஆண்டு எனக்கு கலாநிதி பட்டம் கிடைத்ததை கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலாநிதி கவிநாயகர் கந்தவனம் என்ற பெயரில் இரண்டாவது பிரசுரத்தையும் கண்டது. கனடாவில் தமிழில் வெளிவந்த முதலாவது வரலாற்று நூல் என்ற பெருமையை முதலாவது புத்தகமும் இரண்டாவது தடவை வெளிவந்த பொழுது மறு பிரசுரம் பெற்ற முதலாவது வரலாற்று நூல் என்ற பெருமையையும் தனதாக்கியது எனது வரலாறு.தமிழால் தானும் வாழ்ந்து தன் வாழ்வால் தமிழையும் வாழ வைக்கும் இனிய தமிழரின் வாழக்கைக் குறிப்புகள் என முதலாவது பக்கத்தில் ஆரம்பித்தது எனது வாழ்கை.“கருத்துக்களை முன்வைக்கும் அணுகு முறை கையாண்ட இனிய வசன நடை நிகழ்வுகளின் சூழலைப் பிரதிபலிக்கும் உணர்வு நிலை எல்லாமே உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன” என பாராட்டி எழுதியிருந்தார் சைவப் புலவர் சு.செல்லத்துரை அவர்கள்.

எஸ்.ஜெகதீசனின் இலக்கிய பங்களிப்பை கனடாவில் ஐந்து வகையாகப் பிரிக்கலாம்.1. பொதிகை சஞ்சிகை ஆசிரியர்.2. தமிழர் தகவல் பத்தாம் பக்க கட்டுரையாளர்.3.பல நூல்களின் அணிந்துரை அறிமுகவுரை எழுதுபவர்.4.வானொலியில் புகழ் பெற்ற போட்டி நிகழ்ச்சி தயாரிப்பாளர்.5மேடைப் பேச்சாளர்.

பொதிகை.

பொதிகை இதழ் தரமான இலக்கிய இதழ் என்ற நம்பிக்கையைத் தந்ததுடன் மிகுந்த எதிர்பாரப்பையும் ஏற்படுத்தியது. பொதிகை இதழில் விநாயகப்பா என்ற பக்திபாடல்களின் தொடரை எழுதினேன்.துறைசார் பிரமுகர்களை சந்திக்க வைத்து கட்டுரை வடிவில் உரையாடல்களை பதிவு செய்த புதுமையான பகுதியான கற்றாரை கற்றாரே என்பதனை நானும் நிலா குகதாசனும் ஆரம்பித்து வைத்தோம்.புது வருட சிறப்பு மலரில் ஜெகதீசன் வித்தியாசமான முறையில் பத்திரிகையில் ஒரு கவியரங்கை எனது தலைமையில் இதழ் அரங்காக நடத்தினார்.இது பத்திரிகை உலக வரலாற்றில் முதன் முயற்சி எனவும் முன் முயற்சி எனவும் அந்நாளில் போற்றப்பட்டது. அதே போலத்தான் இரண்டெழுத்துடன் அமைந்த குறுக்கெழுத்துப் போட்டியும் பத்திரிகை உலக வரலாற்றில் முதன் முயற்சி எனவும் அந்நாளில் பேசப்பட்டது.

தமிழர் தகவல்

பொதுவாக சஞ்சிகைகளை கையில் எடுப்பவர்கள் அதன் முதலாம் பக்கத்தையோ நடுப்பக்கத்தையோ அல்லது கடைசி பக்கத்தையோதான் முதலில் வாசிப்பார்கள் என்ற சம்பிரதாயத்தை முறியடித்தது ஜெகதீசனின் பத்தாம் பக்கம்.பத்தாம் பக்கத்தை முதலில் வாசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தவர் பலர். கனடாவில் வெளிவந்த சகல தமிழ் பத்திரிகைகளினதும் சஞ்சிகைகளினதும் பெயர் பட்டியலை ஒட்டுமொத்தமாக முதன் முதலில் வெளியிட்டது அழகிய துப்பாக்கிகள் என்ற கட்டுரைதான்.2010 ஆண்டு மலரில் பிரசுரமான இக் கட்டுரையின் ஆரம்ப வரியான ‘எங்கிருந்தாவது சுட்டுக் கொள்ளும்.எவரையாவது சுட்டுத் தள்ளும்’ என்பது இங்குள்ள பத்திரிகைகளின் நிலையை எடுத்துக் காட்டிய ஜெகதீசனின் அழகான தமிழ்-2014 ஜூன் மாத இதழ் கீரிமலை பற்றி நாம் மறந்து போன பல தகவல்களை மீளளித்தது. செப்டம்பர் மாத இதழ் கல்லுக்குள் எமது நினவைத் தோண்டி அடடா..எத்தனை கற்கள் என பிரமிப்பூட்டியது.2008 ஜூலையில் வெளிவந்த களம் காணும் பதவிகள் ராணுவ கடற்படை – விமான படை அணிகளில் உள்ளவர்களின் பதவிகளை காட்டியது.ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு தகவலை புகுத்துவது ஜெகதீசனின் பாணி.இதற்கு பச்சை நாகரீகம் அட்சயம் சிரிக்கும் புத்தர் நுரை மகுடம் மலாலா என பல கட்டுரைகள் உதாரணமாகும்.ஜெகதீசனின் கட்டுரைகளில் ஒவ்வொரு வரிக்குள்ளும் ஏதாவதொரு தகவல் இருப்பது சுவாரஸியமூட்டும் என்பது பலரது கணிப்பு.

நயாகராவிற்கு எத்தனையோ தடவைகள் சென்றுள்ளோம்.நீர் வீழ்ச்சியின் பிரமிப்பை லயித்துவிட்டு திரும்பும் பலரை நீர்வீழ்ச்சியையும் தாண்டி ஏராளமானவை பார்ப்பதற்கு அங்குண்டு எனச் சொக்க வைத்தது 2015 அக்டோபர் இதழில் வெளிவந்த ஜெகதீசனின் கட்டுரை – தேன் நிலவின் தலைநகர் நயாகரா!

இன்னுமொரு சுவையான சம்பவத்தையும் ஜெகதீசனின் திறமைக்கு சான்றாக குறிப்பிடலாம்.மிக அண்மை காலத்தில் தமிழர் ஒருவரின் வாடகை கார் ஒன்றில் பயணிக்க நேர்ந்தது.பயணிக்க வேண்டிய இடத்தைக் கூறியதும் அவசரஅவசரமாக அச் சாரதி காரின் மேற்கூரையின் சூரியமறை மடிப்பில் சொருகியிருந்த 2007 ம் ஆண்டு ஜூலை மாதம் வெளிவந்த தமிழர் தகவலை உருவி எடுத்தபடியே ரொரண்டோவில் பொலிஸார் பதுங்கியிருந்து வேகமாக வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பகுதிகள் எமது பயணப்பாதையில் உள்ளனவா என நோட்டமிட்டார். பின் எனது பக்கம் திரும்பி ‘உவன் ஜெகதீசன் ஒரு சூரன்” என்றார்.நான் ஏன் என்றதற்கு

பொலிஸார் பதுக்கியிருக்கும் இடங்களை இந்த கட்டுரை தவிர அதற்கு முன்னும் அதற்கு பின்னும் தான் எங்குமே கண்டதில்லை.ஆனால் அக் கட்டுரையைப்பார்த்து அவதானமாக இருந்து அபராதத்துக்கு தப்பியது பல முறை. அதனால்தான் சொன்னேன் என்றார்.

இவரால் வரையப்பட்டு வரும் பத்தாம் பக்கம் தனியான வாசகர் வட்டத்தைக் கொண்டது இவர் எழுதும் பத்தியில் தொடாத துறை எதுவுமில்லை எனலாம்:இவரது பார்வை வித்தியாசமானது: எழுத்தின் நடை தனித்துவமானது:இதனால் இவருக்கு ‘வாசகக் காதலர்’ பல்லாயிரம் என குறிப்பிடுகின்றார் மூத்த பத்திரிகையாளரும் தமிழர் தகவல் பிரதம ஆசிரியருமான எஸ்.திருச்செல்வம்.

முன்னுதாரணமான முன்னுரைகள்

எனது வரிக்கவிதைகள் என்ற நூலுக்கு ஜெகதீசன் எழுதிய மதிப்புரையில் கவிநாயகர் கந்தவனம் தமிழில் உயர்ந்தவர்.தழிழருள் உயர் தவர் என்றதுடன் இத் தொகுதியில் உள்ள 65 கவிதைகளில் பல வரிகள் சிறப்பானவை.சில வரிகள் சிவப்பானவை என்கின்றார்.எனது நூல்களில மிகவும் சிறியதான மணிக்கவிதைகளுக்கு பதிப்புரை எழுதும் பொழுது உருவகச் சிறப்பில் மாத்திரை போன்ற இக் கவிதைகள் உள்ளடக்கத்தில் காத்திரம் கொண்டவை என்கின்ற கருத்தை பதிவு செய்திருந்தார்.

தமிழீழ இலக்கியத்தில் அவர் இருக்கின்றார் அவரது இலக்கியத்தில் தமிழீழம் இருக்கின்றது என்றும் துளசிகா சத்யப்பிரியா ராசாத்திராம் பத்மினிபிரியதர்ானி கோமகள் காங்கேயி சக்திகனல் குறமகள் ஆகிய புனைபெயர்களில் வலம் வந்தார் எனவும் ஜெகதீசன் அறிமுகவுரை எழுதியது திருமதி வள்ளிநாயகி ராமலிங்கம் அவர்களுக்கு.

யார்தான் இந்த நிலாவை நிராகரிப்பர்? இந்த நிலாவும்யாரைத்தான் நிராகரிக்கும்? நிலா குகதாசனை இவ்விதம் அறிமுகப்படுத்தும் ஜெகதீசனின் அழகான வரிகள் 20 வருடங்கள் தாண்டியும் இன்னமும் பல இதயங்களில் பிரகாசிக்கின்றது.

புன்னாலைக்கட்டுவனில் பூத்தார்.தெல்லிப்பழையில் வளர்ந்தார்.இளவாலையில் மணந்தார்.நியுஸிலாந்தில் வாசம் வீசுகின்றார் என்ற அறிமுகம் வித்துவான் ஆ.தா.ஆறுமுகம் அவர்களுக்கு.

விலங்கியலை போதித்தார். விலங்கிலும் கீழான வாழ்வை மாணவர் அடையாமல் தடுத்தார்.என்கின்றார் அதிபர் பொ.கனகசபாபதி அவர்களுக்கு.

இந்த வேளையில் எனது நினைவுக்கு வரும் இன்னொன்றையும் சொல்லிக்கொள்வது பொருத்தமாயிருக்கும். மனம் சோர்வுறும் பொழுதெல்லாம் ஜெகதீசனுடன் அல்லது சிந்தனைப் பூக்கள் பத்மநாதனுடன் ஐந்து நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினாலே காணும்.ஒரு வாரத்துக்குத் தேவையான தென்பையும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் பெற்றுவிடலாம் என்பதையும் பொது மேடைகள் உட்பட பல இடங்களில் பகிரங்கமாக கூறிச் சென்றவர் அதிபர் பொ.கனகசபாபதி அவர்கள்.

இதுவரை ஜெகதீசன் எழுதிய 46 முன்னுரைகளைத் தொகுத்தாலே அழகான நூலாகிவிடும்.

போட்டி நிகழ்ச்சிகள்

பேட்டி நிகழ்ச்சிகளை திறம் பட எழுதிவந்த ஜெகதீசன் போட்டி நிகழ்ச்சிக்குள் புகுந்து மூளையை கசக்கிப் பிழிந்தது பொதிகையில்.அதனால் கவரப்பட்ட ரோஜா ஆனந்த் தனது சஞ்சிகையிலும் போட்டி நிகழ்ச்சியை எழுதுமாறு நச்சரித்ததில் ரோஜாவில் குறுக்கெழுத்துப் போட்டி கட்டம் கட்டியது.

பாஞ்சாலன் என்ற புனை பெயரை ஜெகதீசன் பாவித்தது கனடிய ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனத்துக்கு மட்டும்தான். அங்கிருந்துதான் உலகத்திலே ஓர் எழுத்து மட்டும் பதிலாக வரக்கூடியதாக அமைந்த முதலாவது போட்டி நிகழ்ச்சியான புள்ளிப்பூக்கள் கோலமிட்டது.ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு குட்டிக் கதையுடன் கூடிய குறுக்கெழுத்துப் போட்டி இரு எழுத்துகள் பதிலாகக் கொண்ட கலசம் வெற்றிக்கொடி நாட்டியது. தங்கத்தமிழ் வெகுமதி பஞ்சாலாத்தி என்பன பழந்தமிழை புகட்டின.தவிர வாகனங்கள் உணவுகள் பெண்கள் பறவைகள் விலங்குகள் என ஏராளமான போட்டிகள் அறிவுடன் விளையாடின.

சிலசமயங்களில் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதுவதும் அவ்வப் பொழுது கூட்டங்களை அமைப்பதும் முகநூலில் பிறந்த நாள் வாழ்த்து வரைவதும் உதிரிகளெனினும் தற்பொழுது அவற்றிலும் சாமர்த்தியம் காட்டுவதில் வல்லவராகத் தெரிகின்றார் ஜெகதீசன். எண்ணிக்கையில் குறைவானாலும் தரத்தில் நிறைவாகவே எழுதுபவர் ஜெகதீசன்.

சமய சமூக சினிமா அரசியல் இலக்கிய சம்பந்தமான எந்த ஐமிச்சங்களுக்கும் மிகவேகமாக தீர்வு தேவையெனின் எவ்வித தயக்ககுமின்றி ஜெகதீசனை நாடுவேன் என்கின்றார் டாக்டர் கதிர்.துரைசிங்கம். ‘கூகிள் இருக்கப் பயமேன்’ என்றவாறே பதில் பறந்தோடிவரும் என்பவரும் அவர்தான்.

கவிநாயகர் கந்தவனம் கவிதைக் காப்பகத்துக்காக ஒரு பக்கம்

கவிநாயகர் கந்தவனம் கவிதைக் காப்பகம் என்றொரு அமைப்பை ஜெகதீசன் உட்பட பல அறிஞர்கள் உருவாக்கினர். அதன் சார்பாக கவிநாயகர் என்ற பெயரில் உதயன் பத்திரிகையின் ஒரு பக்கத்தை 2004 ம் ஆண்டு பல மாதங்கள் தமிழ் மணம் கமழும் மாத மலராக வடிவமைத்தவரும் இவரே. இலக்கிய ஆர்வலர் பலரின் பாராட்டை பெற்றது. புதியதும் பழையதுமாக எனது கவிதைகள் கட்டுரைகள் ஆன்மீக சிந்தனைகள் கேள்வி பதில் என இளமை உணர்வோடும் புதுமை நோக்கோடும் திகழ்ந்த அதில் மாதாந்தம் நான் கலந்து கொள்ளும் பொது வைபவ நிகழ்ச்சி நிரலும் இடம் பெற்றதால் என்னை கூட்டங்களுக்கு வருமாறு அழைப்பவர்களுக்கு அனுகூலமளித்தது.

கவிநாயகம் வாழ்வும் வரலாறும்

கனடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபன வானொலியில் 2007ம் ஆண்டு வாராவாரம் நேரடி ஒலிபரப்பாக கவிநாயகம் வாழ்வும் வரலாறும் என்ற தலைப்பில் எனது வரலாறு சுமார் ஒரு வருடம் ஒலிபரப்பாகி பின்னர் எனக்கான பவளவிழா குழுவினரால் 500 பக்கங்களுடன் நூலுருவானது.மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் கனமாகவும் காத்திரமாகவும் வானொலிக்காக என்னைப் பேட்டி கண்ட கனடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபன அதிபர் இளையபாரதியே நுாலுக்கு முன்னுரையையும் எழுதியிருந்தார். அதில் அவர் கவிஞர் கந்தவனம் ஐயாவின் வாழ்க்கை வரலாற்றை வானலையில் எடுத்து வர வேண்டும் என்ற எண்ணத்தை தன் இதயத்தில் ஊற்றி நிரப்பியவர் நண்பர் ஜெகதீசன் என குறிப்பிட்டுள்ளார்.

– ஜெகதீசனின் எழுத்துக்கள் இதயத்தை நிரப்ப வேண்டும் என்ற எண்ணம்தான் பலரிடமுண்டு!