கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 51 
 
 

    செங்கலங்கை நகர் வடுகநாத முதலியார் என்ற பெயரைக் கேட்டவுடன் அவருடைய சொன்ன சொல் தவறாத நேர்மையே நினைவுக்கு வரும். தருமன், அரிச்சந்திரன் முதலிய இதிகாச புருஷர்களின் மறு பிறப்போ என்று மதித்து மரியாதை செய்வர் அவரை . கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் உயிரையே ஈடு கொடுக்க வேண்டுமென்றாலும் கொடுக்கத் தயங்காத கொடைஞர் அவர். இப்படிப்பட்டவள்ளல் ஒருமுறை புகழேந்திப் புலவரைச் சந்தித்து அளவளாவும் வாய்ப்பைப் பெற்றார். முடிவில் விடைபெற்றுக்கொள்ளும்போது வடுகநாதர் புகழேந்திப் புலவரை ஒருநாள் தம் வீட்டிற்கு விருந்துண்ண அழைத்தார். புகழேந்திப் புலவரும் அப்படியே விருந்துண்ண வருவதாக புகழேந்து, மருந்து கொன வைத்து ஒப்புக்கொண்டார். கொடை வள்ளலும் கவி வள்ளலும் ஒருவரை ஒருவர் மதித்து அன்புடன் பழகும்போது மறுப்புக்கு இடமிருக்க முடியாதல்லவா? அடுத்த இரண்டொரு நாட்களில் விருந்துக்கு ஏற்ற நாள் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட்டு வடுகநாதர் சென்றார்.

    விருந்து நாள் வந்தது. வீட்டில் வடுகநாத முதலியாரின் தம்பி ஒருவன் வெகு நாட்களாகச் சூலை நோயோடு படுத்த படுக்கையாகக் கிடந்தான். வடுகநாதருக்கு அந்தத் தம்பியின் மேல் அளவு கடந்த ஆசை. அவன் நோய் தீர விதவிதமான வைத்திய வித்தகர்களையெல்லாம் கொண்டு மருந்து கொடுத்து வந்தார். துரதிருஷ்டவசமாகப் புகழேந்திப் புலவருக்கு விருந்திட வேண்டிய அன்று அவனுடைய நோய் வேதனை மிகுந்து ‘நம்ப முடியாத கட்டத்தை அடைந்திருந்தது.

    ஏற்கெனவே விருந்துக்குரிய ஏற்பாடுகளையெல்லாம் செய்தாகிவிட்டது. வடுகநாதர் புகழேந்திப் புலவரை அவர் தங்கியிருக்கும் இடத்திலிருந்து மேளதாள் மரியாதைகளோடு அழைத்து வந்தார். தம்பியின் நிலையை எண்ணிப் பதைத்தது அவர் நெஞ்சு. அதே சமயத்தில் அழைத்த விருந்தை நிறுத்தினான்’ என்ற பழியும் ஏற்படக்கூடாது என்பதை எண்ணி மலர்ந்த முகமும் புன் சிரிப்புமாக உபசாரங்களை நடத்தினார். புலவரை ஆசனமிட்டு அமர்த்தி உண்ணச் சொல்லித் தாமும் மனைவி யுமாகச் சேர்ந்து உபசரித்தனர். புகழேந்திப் புலவர் உண்டு கொண்டிருந்தார். இடையே யாரோ வந்து அழைக்கவே வடுகநாதர் வீட்டின் மறுபுறத்திலுள்ள சிறு கட்டிடம் வரை போய்த் திரும்பி வந்தார். இப்போது அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்த புகழேந்திப் புலவருக்கு அவர் எதையோ மறைத்து நடிப்பது போலத் தெரிந்தது. வடுகநாதர் முகத்தில் ஈயாடவில்லை . கண்கள் சற்றே கலங்கிச் சிவந்திருந்தன. வாய் சிரிக்க முயன்றது. முகத்தை மலர்ச்சியாக வைத்துக்கொள்ள அவர் முயன்றார். “என்ன வடுகநாதரே! ஏதாவது வருந்தத்தக்க செய்தியா?.” என்று சோற்றைப் பிசைந்து கொண்டே அண்ணாந்து பார்த்தபடி கேட்டார் புகழேந்தி “இல்லையே. ஒன்றுமில்லை..” என்று ஏதோ மழுப்பி விட்டு மறுபடியும் சிரிக்க முயன்றார் வடுகநாதர். எங்கோ வீட்டின் ஒரு மூலையில் அழுகையோடு இலேசாக விசும்பும் ஒலிகள் புகழேந்தியின் காதில் அரைகுறையாக விழுந்தது. புலவர் தயங்கினார். வடுகநாதர் இந்தக் குறிப்பை உணர்ந்து கொண்டாரோ என்னவோ, எங்கோ எழுந்து போய்விட்டு வந்தார். இப்போது விசும்பல்’ ஒலி கேட்கவில்லை.

    விருந்து முடிந்தது. புகழேந்திப் புலவர் தாம்பூலம் தரித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் வடுகநாதர் அடக்க ஒடுக்கத்தோடு நின்றவண்ணம் இருந்தார். சற்று நேரத்தில் புகழேந்திப் புலவர் விடை பெற்றுக் கொண்டார்.

    வடுகநாதர் வீட்டு வாசற்படியை விட்டு இறங்கி நாலு எட்டு நடந்திருப்பார். பக்கத்தில் ஒரு வீட்டிலிருந்து வந்த பேச்சொலி தெளிவாக அவர் காதில் விழுந்தது.

    “என்னதான் வள்ளலாக இருக்கட்டுமே! அதற்காகத் தம்பி இறந்து போனால் அவன் பிணத்தையும் மூடி வைத்து விட்டு விருந்திட வேண்டுமா என்ன?” நெருப்பாகப் பாய்ந்து தாக்குவது போலிருந்தது புலவருக்கு. வடுகநாதரின் வள்ளன்மைத் தியாகம் எவ்வளவு பெரிது என்று அளவிட முடியாமல் தவித்தது அவர் மனம். பயங்கரமான ஆனால், பண்பாடு என்ற பிடிவாதம் பொருந்திய வடுகநாத வள்ளலின் தியாகத்தைப் பாட்டாகப் பாடியவாறே நடந்தார் புகழேந்திப் புலவர்.

    “தன்னுடன் கூடப் பிறந்த
    சகோதரத் தம்பி உயிர் அந்நிலை மாண்டது தோன்றாமல்
    மூடிவைத்து அன்னமிட்டான் மன்னவர் போற்றிடவாழ்
    செங்கலங்கை வடுகனுக்குக் கன்னனும் சோமனுமோ “
    இணையாகக் கழறுவதே.”

    அன்னம் = விருந்துச்சோறு, கர்ணன், சோமன் = வள்ளல்கள், கழல் = கூறல்.

    கர்ணனையும் சோமனையும்கூட வடுகநாதனுக்கு இணையாகக் கருத முடியவில்லை புலவரால்.

    – தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

    Print Friendly, PDF & Email

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *