கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 47 
 
 

    திருமயிலை வள்ளல் வேங்கடசாமியை அறியாத தமிழ்ப் புலவர்கள் இருக்க முடியாது. தமிழ்ப் புலவர்கள் என்று வருவோர்க்கு அடையாத கதவு திருமயிலை வள்ளலின் கதவு. கொடுத்து மகிழ்வதையே ஒரு கடமையாகக் கொண்டிருந்தார் அந்த வள்ளல் தமிழ்க்கவிஞருலகம் முழுவதும் அவருடைய இந்த மழைபோலக் கொடுக்கும் இயற்கையான கொடையை அறிந்தும் அனுபவித்தும் இருந்தது; பாடியும் புகழ்ந்தும் அவரைப் பாராட்டி மகிழ்ந்தது; அறியாதவர்களுக்கு அவர் பெருமையை அறிவித்தது.

    அப்படி அவர் புகழையும் கொடைத் திறத்தையும் அறிந்து, கேள்விப்பட்டு, அவர்பால் வந்த தமிழ்க் கவிஞர்களுள் இராமச்சந்திர கவிராயரும் ஒருவர். இராமச்சந்திர கவிராயர் திருமயிலையை அடைந்து வேங்கடசாமி வள்ளலின் வீட்டிற்குச் சென்றபோது அவர் பூஜை அறையில் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தார். அவ்வாறு வழிபாடு செய்து கொண்டிருந்த போதும் ‘வாசலில் புலவர் ஒருவர் வந்திருப்பது ‘ தெரிந்த வள்ளலுக்குப் பாராமுகமாக இருக்க முடியவில்லை. பூஜையை நடுவில் நிறுத்திவிட்டு வெளியே வந்தார். வாயிலில் காத்திருந்த இராமச்சந்திர கவிராயரையும் உள்ளே வரவேற்று உபசரித்துப் பூஜையறைக்கு அழைத்துச் சென்றார். கவிராயர் ஒரு புறம் அமர்ந்து கவனிக்க, நடுவில் நிறுத்திய பூஜையைத் தொடர்ந்தார் வள்ளல். சாம்பிராணிப் புகையும் சந்தனமும் பூக்களின் மணமும் புலவரின் உள்ளத்தில் மகிழ்ச்சி நினைவுகளை உண்டாக்கிக் கவலை நீங்கி மலரச் செய்தன. பூஜையறையைச் சுற்றிச் சுழன்றன கவிராயர் கண்கள்.

    கைதேர்ந்த ஓவியர்கள் மூலம் எழுதி வாங்கித் தொங்க விட்டிருந்த கடவுளர் படங்கள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. பூஜையறைக்கே தெய்வீக அழகைக் கொடுத்தவை அந்தப் படங்கள்தாம். மூங்கிற் புதருக்கு நடுவே நெல்லையம்பதியில் சிவபெருமான் இலிங்க ரூபத்தோடு மறைந்து வசித்ததாகச் சொல்லப்படும். புராண ஐதிகத்தை விளக்கியது அந்தச் சிவபெருமான் படம். மூங்கிற் புதரும் அதன் நடுவில் இலிங்கமும் படத்தில் நன்கு சித்தரிக்கப்பட்டிருந்தன. அடுத்துப் பாற்கடலில் ஆதிசேடன் குடை பிடிக்க அறிதுயில் புரியும் திருமாலின் தெய்வீகக் காட்சி படமாக விளங்கியது. மலர்ந்த செந்தாமரை மலருக்கு நடுவில் கையில் ஏட்டுடனும் படைப்புக் கருவியுடனும் உட்கார்ந்திருப்பதாக வரையப்பட்டிருந்த பிரம்மாவின் சித்திரமோ, முன்னதைவிட நன்றாக இருப்பதுபோல் தோன்றிது. இவைகளுக்கும் மேலாகக் கையில் வேல் பிடித்து வெண்ணீறு அணிந்து மலைமேல் நிற்பதாகக் காட்சி கொடுத்த முருகன் ஓவியமும், அப்பம், பொரி, அவல், கனி முதலியன கூடை கூடையாக முன்னே படைக்கப்பட்டிருக்கும் நிலையிலே அமர்ந்திருக்கும் விநாயகர் ஓவியமும் விளங்கின.

    அந்தத் தெய்வங்களின் படங்களையும் அவற்றிற்குத் தூபம் காட்டி வழிபாடு நடத்திக் கொண்டிருக்கும் வள்ளலான வேங்கடசாமியையும், மாறி மாறிப் பார்த்தவாறே ஏதோ ஒரு வேடிக்கையான கற்பனைக்கு ஒப்பிடத் தொடங்கிவிட்டார் கவிராயர்.

    மூன்று கண்களையுடைய சாமியான சிவபெருமானோ மூங்கிற் புதருக்குள்ளே போய் ஒளிந்துகொண்டார். உயிர்களை எல்லாம் பாதுகாக்கும் தொழிலையுடைய திருமாலான சாமியோ பேசாமற் கொள்ளாமல் பாற்கடலில் போய்த் தூங்கத் தொடங்கி விட்டார். வேலையெனக் கொண்டு உயிர்களை எல்லாம் படைத்த பிரமனோ தாமரைப் பூவிலேறி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். சரி! இவர்கள் தான் போகிறார்கள் என்றால் இந்த முருகனுக்கு என்ன கேடு வந்தது? அவனும் வேலைப் பிடித்துக்கொண்டு மலைமேலேறி நிற்கிறான் பாவம் அப்பாவிப் பிள்ளையாரோ அப்பம், பொரி, அவல், கனிகளைக் கொடுப்பவர்களிடம் வாங்கியுண்ண ஆசைப்பட்டதனால் வழியிலுள்ள ஓர் அரச மரத்தின் நிழல் பாழாகாமல் உட்கார்ந்து கொண்டார். “கடைசியில் நம்மைப் போலப் பாடித் திரியும் புலவர்களுக்கு மனம் நோகாமல் உதவி செய்கின்ற சாமி யார் என்று பார்த்தால் எஞ்சுவது இதோ அந்தச் சாமிகளுக்கெல்லாம் பூசை செய்து கொண்டிருக்கும் இந்த வள்ளல் வேங்கடசாமிதான். இவனைப் பெற்ற தகப்பனாராகிய பொன்னப்பசாமியைத்தான் நம் போன்ற தமிழ்ப் புலவர்கள் வாயார வாழ்த்திப் புகழவேண்டும்!” தாம் பூஜையறையில் கண்ட படங்களோடு வேடிக்கையாக வேங்கட சாமியை ஒப்பிட்டுப் பார்த்த புலவரின் மேற்கண்ட சிந்தனைச் சிப்பியில் ஒரு தனிப் பாடல். முத்து விளைந்து ஒளி வீசிடலாயிற்று. வீசிடலாயிற்று.

    “மூங்கிலிலே ஒளிந்திருந்தான் முக்கண் சாமி
    முதியகடற் போய்ப்படுத்தான் முகுந்த சாமி
    தாங்கமலப் பொகுட்டுறைத்தான் தலைநாற் சாமி
    தடைவரையில் உழன்று நின்றான் தகப்பன் சாமி
    வாங்கியுண்ண வழிகாத்தான் வயிற்றுச் சாமி
    வாணருக்கு இங்கு தவுவாரார் மற்றோர் சாமி
    ஓங்கியசீர் மயிலையிற்பொன்னப்ப சாமி
    உதவிய வேங்கடசாமி யுசித வேளே!”

    முக்கண் சாமி = சிவபெருமான், முகுந்தசாமி – திருமால், கமலப்பொகுட்டு = தாமரை மலரின் நடு. தலைநாற்சாமி = பிரமன், தடவரை = பெரியமலை, தகப்பன் சாமி = முருகன், வயிற்றுச்சாமி – பிள்ளையார், வாணருக்கு – தமிழ் கற்றவர்களுக்கு.

    சந்தர்ப்ப சாமர்த்தியமும் சிந்தனையும் ஒரு சேர விளைந்த இப்பாடல்தான் அந்த அழகிய கவிதை முத்து.

    – தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

    Print Friendly, PDF & Email

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *