கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: January 8, 2024
பார்வையிட்டோர்: 3,938 
 
 

அது ஒரு அழகான சனிக்கிழமை காலை. காற்றில் லேசான சூடும் குளிரும் கலந்திருந்தது. நான் என்னுடைய வழக்கமான டென்னிஸ் விளையாட்டிற்குப் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்த போது என் பாஸ் போனில் அழைத்தார். “எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு ஜீவா பூங்காவிற்குப் போ.” என்று சொல்லி துண்டித்து விட்டார்.

நான் அவரிடம் வேறு எந்த கேள்வியும் கேட்கவில்லை. இஸ்ரோவில் புதிதாக உருவாக்கப்பட்ட Unidentified Aerial Phenomena (UAP) பணிக்குழுவில் UFO சம்பவங்களை ஆய்வு செய்யும் வேலை எனக்கு. என் பாஸ் என்னை ஒரு பூங்காவிற்கு சனிக்கிழமை அன்று போகச் சொன்னால் அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கும்.

நான் சம்பவ இடத்திற்கு போய்ச் சேர்ந்த போது, ஒரு பெரிய கூட்டம் அங்கு கூடி இருந்தது. சுற்றிக் கட்டியிருந்த மஞ்சள் நாடா அவர்களை மேலே போக முடியாமல் தடுத்தது. நாடாவிற்கு அப்பால் இருந்த எனது சக ஊழியர் அலோக் என்னை கையசைத்து கூப்பிட்டார். நான் நாடாவின் கீழ் குனிந்து மெதுவாக அலோக் இருக்கும் மையத்தை நோக்கி நடந்தேன்.

“என்ன நடந்தது என்பதை சுருக்கமாகச் சொல்ல முடியுமா?” என்று நான் அலோக்கிடம் கேட்டேன்.

“இன்று காலை 8:15 மணியளவில், பூங்காவில் ஜாகிங் செய்து கொண்டிருந்த பலர் ஒரு பறக்கும் தட்டைக் கண்டனர். அது மிக அதிக வேகத்தில் பறந்து மரங்களுக்குப் பின்னால் மறைந்தது. கூடவே பலத்த சத்தமும் கேட்டது. இங்கிருந்து பல அழைப்புகள் 100ம் நம்பருக்கு செய்யப்பட்டுள்ளன. நாங்கள் இங்கு வந்து சேர்ந்த போது, இந்த பொருளை பார்த்தோம்.”

முப்பது அடி விட்டமும் பத்து அடி ஆழமும் கொண்ட ஒரு பள்ளத்தை அலோக் சுட்டிக்காட்டினார். நடுவில் ஒரு பெரிய உலோகப் பொருளின் உருகிய எச்சங்களின் குவியல் இருந்தது.

“பைலட் இருந்தாரா?”

“இருந்தார் என்று நம்புகிறோம். ஒரு எரிந்த உடல் போன்ற மிச்சங்களை நாங்கள் கவனித்தோம். அவை என்ன என்று கண்டு பிடிக்க ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். இன்னும் DNA ரிசல்ட் வரவில்லை.”

“வேறு ஏதாவது விவரம்?”

“மற்ற அனைத்தும் தீப்பிடித்து உருகியபோது, இந்த துண்டு மட்டும் தப்பித்தது.” அவர் ஒரு சிறிய உலோகத் துண்டு அடங்கிய ஜிப்லாக் பையை என்னிடம் கொடுத்தார். அதில் 011010001 என்ற எண் அச்சிடப்பட்டிருந்தது.

அவர் சிறிதாக புன்னகைத்து, “பைனரி சிஸ்டத்தைப் பயன்படுத்தும் வேற்று கிரக ஏலியன்களின் கை வேலையா இது?” என்று கேட்டார்.

நான் பதிலளிப்பதற்கு முன் சில வினாடிகள் யோசித்தேன். “ஒரு வேற்று கிரக நாகரிகம் பைனரி அமைப்பைப் பயன்படுத்தலாம், ஆனால் அது நம்மைப் போலவே அதே குறியீடுகளை – அதாவது 0, 1 – பயன்படுத்துவது சாத்தியமில்லை. இது மனிதர்களின் வேலை போல் தான் தெரிகிறது.”

“இன்று இங்கு வந்த பறக்கும் தட்டு அதி வேகத்தில் நகர்ந்தது. அந்த வேகத்தில் ஒரு பொருளை நகர்த்தும் தொழில் நுட்பம் நம்மிடம் இல்லை. மேலும்…” அப்போது அவரது தொலைபேசி ஒலித்தது. பேசி முடித்ததும் அவர் முகம் வெளிறியது.

“ஆய்வகத்திலிருந்து ரிசல்ட் வந்து விட்டது. நீங்கள் சொன்னது சரிதான், பறக்கும் தட்டை ஒட்டிய பைலட் ஒரு மனிதர்,” என்றார் அலோக்.

ஒரு நிமிடம் இருவரும் மௌனமாக இருந்தோம். பின்னர் நான் மெதுவாக, “இதற்கு ஒரே ஒரு விளக்கம் தான் உள்ளது. இன்று காலை இங்கு வந்த பறக்கும் தட்டு எதிர்காலத்தில் இருந்து வந்திருக்க வேண்டும். நாம் அதிக வேகத்தில் பறக்கக்கூடிய எதிர்காலம்.”

“அதற்கு ஏதாவது ஆதாரம்?”

“உலோகத் துண்டில் உள்ள எண் – 011010001. அது பைனரி எண் அல்ல. அது ஒரு தேதி. பறக்கும் தட்டு தயாரிக்கப்பட்ட தேதியாக இருக்க வேண்டும்.”

“என்ன தேதி அது…?”

“10001 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி.”

Print Friendly, PDF & Email

3 thoughts on “011010001

  1. விவரமான உங்கள் கருத்தைப் பகிர்ந்ததற்கு நன்றி, விஜய்.

    வெளிநாட்டு உளவுபார்ப்பு வாகனம் என்பது ஒரு வித்தியாசமான கோணம். அது இன்னொரு கதைக்கு நல்ல வித்தாக அமையும். நீங்களே அந்தக் கதையை எழுதலாம். உங்களுக்கு நல்ல எழுத்துத் திறமை இருக்கிறது.

    அதி வேக பறக்கும் தட்டு என்றாலே ஏலியன்கள் தான் நினைவிற்கு வருவார்கள். பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து தொழில் நுட்பத்தில் வெகுவாக முன்னேறி விட்ட மனித குலம் ஏன் பறக்கும் தட்டில் பயணிக்க கூடாது என்று நினைத்ததின் விளைவே இந்தக் கதை.

    1. நன்றி நண்பரே! நான் கதை எழுதியதுண்டு. என் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளேன்.

      ஆனால் அதைக் குறித்து யாரிடம் இருந்தும் எனக்கு எந்தக் கருத்துரையும் கிடைக்கவில்லை. நான் சரியான பாதையில் பயணிக்கிறேனா என்பதை என்னால் அறிய முடியாமல் இருந்தேன்; என் எழுத்துக்கள் ஒருவரின் மனதில் என்ன சிந்தனையை ஏற்படுத்துகின்றன என்று அறிய ஆவலாக இருந்தேன்.

      நெருங்கிய நண்பர்களும் கூட நேர்மையான கருத்தைத் தெரிவிக்கவில்லை. அப்போது தான் எழுத்தாளர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் ஒரு வாசகனின் (அ) இரசிகனின் கருத்து எந்தளவுக்குத் அத்தியாவசியமானது என்பதை உணர்ந்தேன். அதனாலேயே கருத்துரை எழுதி வருகிறேன். இப்போது இது என் தொழிலாகவே மாறி வருகிறது.

      என் கருத்துரைகள் மூலமாக நான் யாரையும் புண்படுத்தவோ, திசை திருப்பவோ முயற்சிக்கவில்லை. இருப்பினும் சில நேரங்களில் அப்படியும் நடந்து விடுவதுண்டு.

      என் நோக்கம், ஒரு படைப்பைக் குறித்தும், அதைச் சார்ந்த விஷயங்களைக் குறித்தும் என் சிந்தனையைப் பகிர்ந்து கொள்வது மட்டுமே ஆகும். தயவுசெய்து உதவியானதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்; அனாவசிய கருத்துக்களை ஒதுக்கி விடுங்கள். நன்றி!

  2. டைம் ட்ராவல் என்று சொல்லப்படும் காலவெளிப் பயணமும், அடையாளம் தெரியாத மர்ம வான் பொருட்கள் (UFO) குறித்த செய்திகளும் எப்போதும் ஆர்வத்திற்குரியதாக இருந்துள்ளன. இந்தக் கதையும் இவற்றைக் குறித்து பேசுகிறது.

    டைம் ட்ராவல் விஷயத்தை எத்தனையோ கதைகளும், திரைப்படங்களும் கையாண்டுள்ளன என்று சொல்லலாம். 1895 இல் எச். ஜி. வெல்ஸ் (H. G. Wells) எழுதிய தி டைம் மிஷின் என்ற நாவல், இத்தகைய விஞ்ஞானப் புனைவு கதைகளைப் பிரபலமாக்கியதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    காலவெளிப் பயணம் (Time travel) சார்ந்த விஷயத்தில் இன்று வரையில் விஞ்ஞான வட்டாரத்தில் நிறைய சர்ச்சைகள் உள்ளன. ஆனால் எப்போதும் இது சுவாரசியத்திற்குரிய கற்பனையாக இருந்து வருகிறது.

    அடுத்து, இந்தக் கதையில் குறிப்பிடப்படுவதைப் போல அடையாளம் தெரியாத மர்ம வான் பொருட்கள் (UFO) அல்லது வானுர்திகள் அல்லது பறக்கும் தட்டுக்கள் குறித்தும் நிறைய ஆய்வுகள் நடந்து வருகின்றன.

    ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பிரதேசத்தில் உள்ள பல விண்வெளி ஆய்வுக் கூடங்கள் அடையாளம் தெரியாத மர்மமான வான் பொருட்கள் பூமியில் வந்திறங்குகிறதா, வேற்று கிரகங்களில் இருந்து சமிக்ஞைகள் ஏதேனும் வருகிறதா என்றெல்லாம் ஆய்வுகள் செய்து வருகின்றன. உலகெங்கிலும் இதை ஆராயும் நிறைய ஆர்வலர்கள் இருக்கிறார்கள்.

    சில வேளைகளில், இம்மாதிரியான அடையாளம் தெரியாத வானூர்திகள் பூமியில் தென்பட்டதாகச் செய்திகள் வருவதுண்டு. ஆனால் இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், பூமிக்குள்ளேயே ஒரு நாடு மற்றொரு நாடு மீது உளவு பார்க்கவும் சில அடையாளம் தெரியாத இரகசிய வான்வெளி வாகனங்களைப் பயன்படுத்துகின்றன. இப்படியான இராஜாங்க விஷயங்களை நாடுகள் வெகுஜனங்களுக்குத் தெரிவிப்பதில்லை. ஏனென்றால், பெரும்பாலான முன்னணி உலக நாடுகள் எல்லாமே இத்தகைய உளவு வேலைகளில் ஈடுபட்டுள்ளன என்பதால், அவை, மற்ற நாடுகளின் உளவு வாகனமாக இருந்தாலும் கூட அந்த நிகழ்வுகளை விண்வெளி அதிசயமாகவும், அது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறி அந்தச் செய்தியை முடித்துக் கொள்வதுண்டு.

    இந்தக் கதையில் ஜீவா பார்க்கில் நொறுங்கி விழுந்த 011010001 என்ற அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு, ஒருவேளை வெளிநாட்டு உளவுபார்ப்பு வாகனமாகவும் இருக்கலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *