சுந்தரமூர்த்தி நாயனார் யட்சகானம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை நாடகம்
கதைப்பதிவு: May 16, 2024
பார்வையிட்டோர்: 5,077 
 
 

(இந்நூல் அ.கீ.சு.நூலக ஓலைச்சுவடியிலிருந்து (எண்.ஆர். 2721) பதிப்பிக்கப்படுவதாகும், கி.பி. 1848 ஐ ஒட்டிய காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பொதுப் பதிப்பாசிரியர் முன்னுரை 

அ.கீ.சு. நூலகத்தில் நன்முறையில் பாதுகாக்கப்பட்டு வரும் தமிழ்ச் சுவடிகள் தமிழகத்தின் செல்வமாகும். 

தற்போது இந்நூலகத்திலுள்ள ஓலைச்சுவடிகளில் இது வரை அச்சில் வெளிவராத நூல்களை அச்சிட்டு வெளியிடுவதில் தமிழக அரசும், தொல்பொருள் துறையும் முனைப்பாகச் செயல்படுகின்றன. 

இவ்வகையில், தமிழக அரசின் பண்பாட்டுத் துறையின் முன்னாள் செயலர் திரு.சா.பா. இளங்கோவன் இ.ஆ.ப.அவர்களும்,தற்போதைய செயலர் திரு. இரா. கிறித்துதாசு காந்தி இ.ஆ.ப. அவர்களும் பாரட்டிற்குரியவர்கள். 

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு தமிழில் சிறப்பான வரலாறு ஆகும்; எத்தனையோ ஆய்வுகளுக்கு இவை இடந்தருபவை. 

இம்முறையில், தற்போது வெளிவரும் சுந்தரமூர்த்தி நாயனார் யட்சகானம் சிறந்த ஆய்வுப் பொருளாகும். நல்ல இசை நாடகமாகிய இந்நூலைச் சிறப்பாகப் பதிப்பித்துள்ளவர் டாக்டர் எஸ். சௌந்தரபாண்டியன், காப்பாட்சியர்,அ.கீ.சு. நூலகம் அவர்களாவார். அவர்களுக்கு என் நன்றி உரியது. 

நடன. காசிநாதன்
இயக்குநர், தொ. பொ . ஆ . துறை, சென்னை. 


சுந்தரமூர்த்தி நாயனார் யட்சகானம் பதிப்புரை 

சுந்தரமூர்த்தி நாயனார் யட்சகானம் எனும் இந்நூல் அ.கீ.சு.நூலக ஓலைச்சுவடியிலிருந்து (எண்.ஆர். 2721) பதிப்பிக்கப்படுவதாகும். 

இந்நூல் இதுவரை அச்சில் வெளிவராதது ஆகும். 

சுந்தரமூர்த்தி நாயனாரின் வரலாற்றை இசைநாடக வடிவில் அழகுறக் கூறும் நூல் இது. 

சுந்தரர் விலாசம் என்ற பெயரில் ஓலைச்சுவடியில் இது வரையப்பட்டுள்ளது. 

இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. 

வையூர் என்ற ஊரின் அரசன் ஒருவன் கேட்டுக்கொண்டதன் பேரில் இந்நூல் எழுந்ததாக நூல் கூறுகிறது. இந்த வையூர் யாங்குளது எனத் தெரியவில்லை; திருவெண்ணெய்நல்லூர்ப் பகுதியில் (தெ.ஆ.மா) உள்ள ஐயூர் அகரம் எனும் ஊராக இருக்கலாம். 

ஓலைச்சுவடியில் குறிக்கப்பட்டுள்ள குறிப்பால் இந்நூல் கி.பி. 1848 ஐ ஒட்டிய காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. 

யட்சகானம் என்பது தமிழுக்கு முற்றிலும் புதிதல்ல; தமிழ்த் தெருக்கூத்தின் ஒரு வடிவமே யட்சகானம்! எனவே யட்சகான நாடக வகைக்கு மூலம் தமிழ்த் தெருக்கூத்தே இருப்பினும் யட்சகானம் என்ற பெயரில் முதன்முதலில் நமக்குக் கிடைப்பது தெலுங்கு யட்சகானமான சுக்கிரீவ விஜயம் (கி.பி.15 ஆம். நூ.ஆ)நூலே. 

கன்னட மொழியிலும் யட்சகானங்கள் உள. தேவிதாசா இயற்றிய கிருணார்ஜுனா எனும் யட்சகானமே (கி.பி. 17ஆம் நூ.ஆ) கன்னட மொழியில் எழுந்த முதல் யட்சகானம் எனப்படும். 

கன்னட மொழியில்தான் யட்சகானம் முதலில் தோன்றியது என்பார், ஏகலகானா என்ற பாடல் வகையிலிருந்து யட்சகானம் தோன்றிற்று என்பர். யஷகான மகரந்தம் எனும் கன்னட நூலில் Yakshas எனும் கன்னட இனத்தார் பாடி ஆடியநாடக வகையாதலால் இது யட்சகானம் ஆயிற்று என்று ஆயப்பட்டுள்ளது. 

தெலுங்கில்தான் முதன்முதலில் யட்சகானம் தோன்றியது என்பார், கி.பி.12ஆம் நூற்றாண்டிலேயே யட்சகானம் பற்றிய குறிப்பு தெலுங்கில் உள்ளது என்பர். ஜெம்காஸ் என்ற தெலுங்கு இனத்தார் ஆடிப்பாடிய நாடக வகையே யட்சகானம் என்பர். 

யட்சகான நூலில் உள்ள திபதை என்ற யாப்பில் அமைந்த பாக்களே, யட்சகானம் என்ற வடிவை, பிற தமிழ்க் கூத்துக்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. 

திபதை என்பது இரண்டிரண்டு அடிகளில் எதுகை பெற்றுவந்து, அடிக்கு நான்கு சீர்கள் கொண்டு நான்காம் சீர், பெரும்பாலும் ஈரசைச்சீராக நடக்கும் ஒரு யாப்பு வடிவாகும், த்விபதா என்று தெலுங்கில் செப்புவர். திபதை யாப்புக்கு அடிவரையறை இல்லை. ஒவ்வோர் அடியிலும் உள்ள நான்கு சீர்களும் தெலுங்கில் அமைவதானால், ‘இந்திர கணம், இந்திர கணம், இந்திர கணம், சூரியகணம்’ என்ற அமைப்பில் வரவேண்டும் என்பர்; (கணம் – சீர்) 

சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றை நாடகமாக நடித்துக் காட்ட விரும்புவோர் இந்நூலைப் பயன் கொள்ளலாம். 

தமிழில் வல்லாளராசன் யட்சகானம், நீலியட்சகானம் ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன. அச்சில் வராத சில யட்சகானச் சுவடிகள் அ.கீ.சு.நூலகத்தில் உள்ளன. 

திருத்தொண்டர் புராணத்தினை அடியொட்டி, வழிவழியாக வழங்கிவரும் சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றை வருமாறு எழுதலாம். 


சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு 

கயிலாயத்தில், சிவனும் பார்வதியும் இருந்தனர். அவர்களுக்குத் தொண்டு செய்து கொண்டு அங்கு வாழ்ந்து வந்தார் ஆலால சுந்தரர். 

ஒரு நாள் ஆலால சுந்தரர், சிவன் பார்வதியாருக்காக பூப்பறிப்பதற்கு நந்தவனம் சென்றார். அங்கே அநிந்திதை, கமலினி என்ற இரு அழகிய பெண்களைக் கண்டார்! அவர்கள் மீது காமம் கொண்டார். அவர்கள் வேறு யாருமல்லர், பார்வதியின் தோழிகள். 

மலரைக் கொண்டு சுவாமி சன்னதிக்குள் சென்றார் ஆலாலசுந்தரர் இவரின் பெண் ஆசையைக் கண்ட பெருமான், “நீ பூலோகம் சென்று இன்பம் அனுபவித்துவிட்டுப் பிறகு இங்கே வரலாம் என்று பணித்தார். பார்வதியும் அப்படியே கூறிவிட்டார். 

இதன் காரணமாக நடுநாட்டைச் சேர்ந்த திருநாவலூர் (தெ.ஆ.மா. சேந்தமங்கலம் அருகே) எனும் ஊரில், ஆதி சைவ பிராமணர் குலத்தில் சடையனார் எனும் தந்தைக்கும் இசைஞானியார் எனப் பெயரிய தாய்க்கும் மகனாகப் பிறந்தார். 

சுந்தரமூர்த்தி நாயனாரின் பிள்ளைப் பருவத்துப் பெயர் நம்பியாரூரர். இவர் பிள்ளைப் பருவக் காலத்தில் அழகாக இருந்ததால் அந்நாட்டரசன்,நரசிங்க முனைவைராயர் தந்தை சம்மதத்துடன் ஆரூரை வளர்த்தார். 

பிறகு ஆரூரருக்கு மணம் நிச்சயமாயிற்று புத்தூர் சடங்கவிமறையோன் என்பாரின்மகளை மணப்பதற்காக, மணப்பந்தலில் அமர்ந்திருந்தார் ஆரூரார். 

அப்போது, திருமணம் நடக்கவிடாமல் தடுத்தார் ஒரு முதியவர்! உனக்கும் நமக்கும் ஒரு வழக்குண்டு! அது தீர்ந்த பின் தாலிகட்டலாம் என்றார் அவ்வேதியர். 

“அது என்ன?” – நம்பியாரூரார் கேட்டார். 

“நீ நமக்கு அடிமை; இதோ முறியோலை!” என்று ஓர் ஓலைத் துண்டைக் காட்டினார் அவ்வேதியர். 

அங்குள்ளோர் நகைத்தனர். ஓலையைக் காட்டினார் அப்பிராமண முதியவர்.

உடனே அதை வாங்கிக் கிழித்துப் போட்டார் நம்பியாரூரார். 

முதியவர் விடாது, வாதிடவே, அண்டியிருந்தோர் விசாரித்தனர். “உனக்கு எந்த ஊர்? என்று கேட்டனர். “திருவெண்ணெய்நல்லூர்” என்றார் அப்பிராமண முதியவர். “எனவே அங்கே சென்று வழக்கைக் வழக்கிடுக” என்று அவர்கள் கூறினார். 

புத்தூர்ப் பெண்ணைச் சுந்தரர் மணக்கவில்லை.பிறகு அங்கே ஆரூரருக்குத் தரிசனம் தந்தார். சிவன். 

பிறகு “தலந்தோறும் என்னைத் துதித்துவா” என்று சிவன் கட்டளையிட்டார். 

“பித்தன் என்று என்னை வைததால், அப்படியே ஒரு பாட்டுப்பாடு” என்றார். “பித்தா பிறைசூடி” என்ற பதிகத்தை பாடினார். ஆரூரர். 

ஒரு நாள், திருவதிகையைச் சேர்ந்த சித்தவடமடத்தில் ஆரூரர் தூங்கினார். அப்போது அவரது தலையை ஒரு கால் மிதித்தது. “ஏன் மிதிக்கிறீர்?” என்று ஆரூரர் கேட்டதற்கு, “வயதாயிற்று,தெரியவில்லை” என்று பதில் சொன்னார். கொஞ்சம் தள்ளிப் படுத்தார் ஆரூரர்.அங்கேயும் அப்பெரியவர், காலால் ஆரூரை மிதித்தார்! “நீர் யாரையா?” என்றார் ஆரூரர்! “எம்மை அறிவாயோ?” என்று கூறி மறைந்தார் அவர்! அங்கேயே “தம்மானை” என்ற பதிகத்தைப் பாடினார் ஆரூரர். 

பிறகு சிதம்பரத்தில் வழிபாடு செய்யும் போது. “திருவாரூருக்குவருக” என்று அசரீரி பிறந்தது. அதன்படியே திருவாரூர் சென்றார். 

இஃது இப்படியிருக்க பார்வதி கட்டளைப்படி கமலியார், திருவாரூரில் கணிகை குலத்தில், பரவையார் என்ற பெயரில் வளர்ந்து வந்தாள். ஒரு நாள், சுந்தரர், பரவையாரைக் காணவே அவரை மணக்க விரும்பினார். மணமுடிக்குமாறு சிவனை வேண்டினார். சிவனின் ஆணையைக் கனவில் பெற்றார், பரவையாரைச் சுந்தரருக்கு மணம் செய்து தந்தனர். 

பிறகு, கோளிலி என்று, குண்டையூர்க் கிழார் கொடுத்த நெல்லைத் திருவாரூரில் சேர்க்கும் படி பெருமானைக் கேட்டுப் பூதகணங்களால் திருவாரூரில் பெற்று, கோட்புலியார் அடிமைகளாகத் தரப்பெற்ற சிங்கடி, வனப்பகை எனும் இரு பெண்களையும் தம் மகள்கள் ஆக்கிக் கொண்டார். 

பிறகு, திருப்புகலூர் சென்று, செங்கல் பொன்னாதல் பதிகம் பாடினார். 

பிறகு, ஒரு நாள் திருமுதுகுன்றடைந்து, பொன் வேண்டினார்; பொன் பெற்று, மணிமுத்தா நதியில் போட்டு, இதைத் திருவாரூர்க் குளத்தில் தரவேண்டும் என வேண்டினார். திருவாரூர் குளத்தில் மூழ்கி வருகையில் பொன் கிட்டவில்லை! பிறகு பதிகம் பாடவே, பொன் கிடைத்தது. 

ஒரு நாள் திருக்கருகாவூரில் தண்ணீர்ப்பந்தல் அமுது வைத்துக் காத்திருந்து, ஆரூரர் வந்தும் படைத்து, பிறகு மறைந்தார் சிவன்! 

ஒரு நாள் திருக்கச்சூரில்சுந்தரர் பசியால் வாடவே,சிவனே பிராமணராக வந்து, “இங்குள்ள பிராமணர் வீடுகளில் அன்னம் பெற்று வருகிறேன்” என்று சொல்லி, அன்னம் கொணர்ந்து பசியாற்றி, மறைந்தார்! 

சுந்தரர் பிறகு திருவொற்றியூர் வந்தார். அங்கு அநித்திதை, சங்கிலியார் என்னும் பெயரில் வளர்ந்து வந்தாள். “இன. மேல் பரவையாரிடம் போகமாட்டேன்” என்று மகிழமரத்தின் அடியில் நின்று சத்தியம் செய்து தந்து, அச்சங்கிலியாரை மணந்தார் சுந்தரர்! 

ஒரு நாள் சத்தியத்தை மறந்து, திருவாரூர் செல்லப் பயணமானார்! ஆனால் இரு கண்களும் பார்வை இழந்தன. 

பிறகு திருவெண்பாக்கத்தில் சிவனால் கோல் தரப்பெற்றார். 

பிறகு, காஞ்சியில் ஒரு கண் பெற்றார்!. திருவாரூரில், இரண்டாவது கண்ணையும் பெற்றார்! 

திருவாரூரில், சிவனையே தூதாக அனுப்பி, பறவையாரின் ஊடலைத் தணித்தார்! 

இப்படி இவர் செய்ததைக் கண்டு வெறுத்து இவரது வருகையை அறிந்து உயிர் நீங்கினார் உயர்கோன் கலிக்காம நாயனார்! பிறகு சுந்தரர் அவரை உயிர்ப்பித்துத் தந்தார்! 

சுந்தரர் பெருமைகளைக் கேட்ட சேரமான் பெருமாள் நாயனார் திருவாரூரில் சுந்தரரோடு நட்புக் கொண்டார். பிறகு, சேரமானோடு சேரநாடும் சென்றார். 

சேரமான் தந்த பொருட்களோடு திரும்புகையில், திருமுருகன் பூண்டிக் அருகில் கொள்ளையர் திருடிக் கொண்டனர். பிறகு சுவாமியிடம் முறையிட,அவற்றைத் திரும்பப் பெற்றார் சுந்தரர்! 

ஒரு நாள் திருப்புக் கொளி சென்றார். அங்கே ஐந்து வயதான ஆண்டான்பிள்ளைகள் இருவர் ஏரிக்குச் சென்றனர். ஒருவன் முதலையால் இறந்தானாம்; திரும்பியவனுக்கு உபநயனம் நடந்ததாம்! இருவேறு நிகழ்ச்சிகளால் வேதனை அடைந்து, அந்த ஏரிக்குச் சென்று, முதலையிடமிருந்து பிள்ளையைப் பெற்றுத் தந்தார்சுந்தரர்! 

பிறகு திருவஞ்சைக் களம் சென்றார். திருவஞ்சைக்களத்தில் வெள்ளை யானையில் சுந்தரரை ஏற்றி கயிலைக்கு அழைத்துச் சென்றனர். 

திருவஞ்சைக் களத்தில், சேரமானை மனத்தில் நினைத்தாராம் சுந்தரர். அதனால் குதிரை ஏறி, திருவஞ்சைக்களம் வந்த சேரமான், சுந்தரரை வணங்கி இருவருமே திருக்கயிலை சென்றனராம்! 

சுந்தரர் காலம் 

சுந்தரமூர்த்தி நாயனாரின் காலம் பொதுவாகக் கி.பி. 7ஆம் நூற்றாண்டு எனப்படும். 

சுந்தரமூர்த்தி நாயனாரின் சம காலத்தோர் 

  • சோமாசிமாற நாயனார் 
  • பெருமிழலைக் குறும்பர் 
  • விறன்மிண்ட நாயனார் 
  • கோட்புலி நாயனார் 
  • மானக்கஞ்சாற நாயனார் 
  • சடையனார் 
  • ரயர்கோன் கலிக்காமர் 
  • இசை ஞானியார் 

இந்நாடகத்தில் வரும் உரையாடல் பகுதிகள் தமிழ்உரைநடை நோக்கில் ஆய்வுக்குப் பெரிதும் பயன்படுவதாகும். 

மேலும் தெ.ஆ.மாவட்ட ஊர்ப்பகுதி ஆய்வுகளுக்கும் அகச் சான்றுகளும் உள. 

தமிழ் இசையில் இந்நூல் குறிப்பிடத் தகுந்ததாகும். இதில் உள்ள தருக்கள் இராக தாளத்திற்கு உட்பட்டு மிக அருமையாகச் செல்லுகின்றன. 

இவ்வாறு பல்வழிகளிலும் போற்றத்தகும் இந்நூலை அறிஞர்கள் வரவேற்பர் என நம்புகிறேன். 

இவண், 
டாக்டர். எஸ். சௌந்தரபாண்டியன் 
எம்.ஏ(தமிழ்)., எம்.ஏ(ஆங்)., பி.எட்., டிப்.வ.மொ., பி.எச்.டி. காப்பாட்சியர், அ.கீ.சு. நூலகம். 


சுந்தரமூர்த்தி நாயனார் யட்சகானம் 

பகுதி-1 | பகுதி-2

காப்பு 

நேரிசை வெண்பா 

1. காவைநகர் பாலக் கணபதியைப் போற்றி செய்து
மாவை நகர் பிள்ளையாரை வாழ்த்தியே -தேவர்தொழும்
தூயகந்த வேளருளால் சுந்தரர் விலாசத்தை 
நேயமுடன் சொல்வேன் நினைந்து! 

காவை நகர் – காவனூர் (தெ.ஆ.மா.). மாவை நகர் – மாம்பலப் பட்டு (தெ.ஆ.மா.) 

அகவல் 

2. மலர்தலை யுலகில் வளர்தொண்டை நாட்டின் 
பலர்புகழ் தெய்வத்துப் பாலிமா நதியின்
வடகரை சிறந்த … 
சத்திய வாசகனார் 
கயிலைமே லகன்று காசிவந் திருந்து 
நயமதா யறங்கள் நாடோறும் புரிந்து 
காசிமா நகரைக் கதிவந் திடுமுன் 
வாஞ்சையா யுமையாள் வணங்கியே பரவி 
முந்துபூ சனனசெய முதல்வனார் பரவின
சந்திர… செயசந்திர சேகரனார் 
மலரடி வணங்கி வாழவந் தவள்தன்
இலைசூழும் கமல யிணையடி தொழுது
விளங்கு சக்கரத்தை வீற்றிருந் தவரை
விளம்பிப் பணிந்து மனதினால் நினைந்து
தந்திமா முகனை தணிகைவாழ் குகனை
சிந்தையால் தினமும் தியானமே புரிந்து
பிராசவெண் தவளப் பெரியதா மரையில் 
சரஸ்வதி தாளை சந்ததம் பரவிச் 
சுந்தரத் தம்பிரான் தோழ ராரூரன்
செந்தமிழ் பாடத் திருத்தொண்டர் தொகையில்
சாத்திய சரணபங் கயத்தைப் 
போற்றியே பணிந்து புகழ்ந்திடு வேனே! 

(தொண்டை நாடு தற்போதைய சென்னை, செங்கற்பட்டு மாவட்டப் பகுதிகள்; பரவி – வணங்கி; தந்தி – யானை; தந்திமாமுகன் – பிள்ளையார், தணிகை – திருத்தணி எனும் தலம்; குகன் – முருகன்; தவளம் – வெண்மை நிறம்) 

நாடகத் தரு 

1. சவுபாக்கியவதி காந்த சதுர்வேத வேதாந்த
சருவேச காலாந்தகா செய செய! 
செய செய கோதண்ட செயஞான மார்த்தாண்டா
செயவிமல காலகண்டா செய செய்! 

திபதை 

2. கங்கையும் பிறையுங் கடுக்கை…
திங்கள் வேணியாளர் திருவருள் கொண்டு
வெளிமால் வரையை விடுத்தினி தகன்று
தெள்ளுசீர் புவியீர் செனனிக்க வேண்டி 
திருப்பெண்ணைக் கரையில் 
முக்கிய மான முனைபாண்டி நாட்டில் திசையெலாம் புகழும் திருநாவ லூரின் 
இசைஞானி வயிற்றினில் இனிதுடன் பிறந்து 
சைவனார் தந்தை சடையனார் மகிழ்ந்த 
தேய்வான பிறைபோலத் தினந்தினம் வளர்ந்து 
பதினாறு வயதுப் பாலக னாகிய 
அதிரூப மாகி யாரூ ரென்னை 
மணம்வந்த புத்தூர் மணக்கா வணத்தில் 
இணைந்துபொற் பீடத் திருந்திடும் போதில் 
அலகிலா வொளியார் அந்தண ராகி 
மலரடி நோவ வந்துமுன் தோன்றி
என்னுட அடிமை யெனக்குநீ தோழன்
முன்னமே யென்னை முனிவோரும் பேசிச்
சாதக முறியும் தன்கையிற் கொண்டு
வாதுகள் பேசி மடிபிடித் திழுந்து
விந்தை யிதென்ன வெண்ணைநல் லூரில்
அந்தணர் சபையில் அடிச்சுவட் டோடி
வழக்குநாம் செயித்து வலியவாள் கொண்டு
தழைக்கவே புரிந்து சரித்திர முழுதுங்
கமலி னிந்திகை கன்னிமா ரென்னுஞ்
சுமர்விழிப் பரவை சங்கிலி தன்னை
செய்யவா ரூரில் திருவொற்றி யூரில்
வையகம் புகழும் மணம்புணர்ந் ததுவும்
அங்கவர் தமக்கால் அர்த்தராத் திரியில்
துங்கமுக் கண்ணனார் தூதுசென் றதுவும்
மத்துள தேவதையும் மலையாள வழியிற்
பத்தி வேடுவர்கள் பறித்தது முதலாய்
கவிதமிழ் புராணக் கதைச்சுத கரத்தை
செவியில் நிறைந்து திகட்டிய தென்ன
இகமெல்லாம் மகிழ யிதயங் களிக்க
சகசமாய் விழியிற் தான்பார்த்து வேண்டி
மறைபால் வள்ளல் வையூர்க் கரசன்
துரைபாலர் போற்றும் சத்திதன் புதல்வன்
அம்புவிப் புலிவோர்க் காதர வாகும்
தம்பூ பதிதான் சாத்தெனச் சொல்ல
வெண்ணிசேர் பதாகை விளங்குசீர் கருணன்
இனிய பூபன் இனியான் உதவும்
சுந்தர விலாசம் சுபல நாடகத்தைக் 
கந்தவே ளருளின் கழறிய லதனால் 
விசித்திர மாய றைந்துகொள் ளாமல் 
சிவசரித் திரமாய்ச் செப்பிய வதனால் 
பூஞ்சொல் லாயினும் புலவர்கள் ளானோர் 
தீஞ்சொல்லால் மனதில் இசைந்துகொள் வீரே 

(திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூர் என்ற ஊரில் இசைஞானி எனும் தாயிடத்துப் பிறந்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். தந்தை பெயர் சடையனார். சுந்தரமூர்த்திநாயனாருக்குப் பதினாறு வயதில் புத்தூர் என்ற ஊரில் மணம் நடக்க இருந்தது. மணப்பந்தலில் அமர்ந்த அவரை இழுத்து, “உனக்கும் எனக்கும் வழக்கு உள்ளது; இந்த ஓலை முறியின்படி நீ என் அடிமை” என்று மணத்தை தடுத்தார். சிவன். பிறகு,பரவை சங்கிலி எனும் இருவரை, இருவேறு நிலைகளில் மணந்து கொண்டார். பின்பு, பரவையார் சுந்தரரிடத்தில் ஊடலாக இருக்கவே, அதனைக் போக்கச் சிவனார் தூது சென்றார். சுந்தரருக்குச் சேரமான் தந்த பொருளை வழிப்பறி செய்தனர். சிலர். இப்படிப்பட்ட வரலாறுகளையெல்லாம் பாடுவதற்காக வையூர் எனும் ஊருக்கு அரசன் புலவரை வேண்டினான். பாடியதில் தவறுகள் இருப்பின் பொறுத்துக் கொள்க). 

வசனம் 

சகலசீவ தயாபரமா யிருக்கப்பட்ட தம்பிரான் தோழராகிய சுந்தரர் விலாசத்தை யெம்மாலான மாத்திரம் தமிழினாலே நாடகம் பண்ணி நடிக்கின்றோம். நான் பண்ணின நாடகத்திலே தப்புண்டாகிலும் மெய்யாகக் கொண்டு சகலசினரும் பராக்கில்லாமல் பார்த்து அனுக்கிரகம் பண்ணுகோளையா! 

(நாடகம் பார்ப்போரை பார்த்துக் கூறும் கூற்று தம்பிரான் தோழர் என்று சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒரு பெயர் உண்டு. சினரும் – மக்களும்; பராக்கில்லாமல் அங்கும்மிங்கும் பார்த்துக் கொண்டிருக்காமல்) 

விருத்தம் 

3. பூப்பிள்ளை மதிமான் தன்னைப் புரிசடை மீதில் சூடிச் 
சேப்பிள்ளை மடமான் தன்னைச் செங்கையில் 
தரித்தார் தோழன் 
கோப்பிள்ளை சைவ வேதக் குரிசில் சுந்தரன் கலியாண
மாப்பிள்ளைத் தோழன் விப்பிர வித்திரன் வருகின் றானே! 

(நாடகத்தின் மாந்தனாகிய விப்பிரவித்திரன் இங்கு முதன் முதலாக அறிமுகம் செய்து வைக்கப்படுகிறான். விப்பிரவித்திரன் என்பான், சுந்தரமூர்த்தி நாயனாரின் மாப்பிள்ளைத் தோழனாகக் காட்டப்படுகிறான். விப்ரவக்கிரன் என்றும் பின்னர் குறிக்கப்படுவான்.) 

தரு 

4. தடித்த காதுங் தொள்ளக் காதுஞ் 
சடிச்ச முகமும் வெள்ளிக் கண்ணும் 
அழகான விப்பிரவித்திரன் வந்தானய்யா! 
வாடிக்கையாய் நீறுபூசி மார்பில்பூ ணூலும் போட்டு
வேடிக்கையாய் வந்த சுந்தரர் 
விப்பிரவித்திரன் வந்தானய்யா! 
தச்சகந்தல் குல்லா யிட்டு தாளிபில்லை பதக்கம் போட்டு
மெச்ச மெச்ச சொகுசான விப்பிரவக்கிரன் வந்தானய்யா!
சொந்தமாவோர் கையில் கோலும் சுந்தரனார் தோழனென
விந்தை யாய்ஓய் யாரமான விப்பிரவக்கிரன் வந்தானய்யா! 

(தொள்ளைக்காது ஓட்டைக்காது; தச்ச ஒட்டுப்போட்டுத் தைத் த; விப்பிரவித்திரன் . விப்பிரவித்திரன் என்று கேலியாகக் குறிக்கப் படுவது நோக்கற்பாவது விதூஷகன் எனப்படும் கோமாளி இவன். எனவே அதற்கேற்ப இவனது உருவம், ஆடை ஆகியவை பொருத்தமாக உள்ளமையை மேற்பாட்டு தெரிவிக்கிறது.) 

வசனம் 

வாரும் பிள்ளாய் பிராமணா! நீ எங்கே இருந்து வருகிறாய்? சொல்லும் பிள்ளாய்! ஆனால் சொல்லுகிறேன் கேளுங் கேளய்யா! திருநாவலூரிலிருந்து சுந்தரர் மணத்திற்கு வருகிற நான் மாப்பிள்ளைத் தோழன்! இந்த வார்த்தை முன்னே சொல்ல வந்தேனய்யா! 

(திருநாவலூரென்பது சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த ஊர். எனவே, விப்பிரவித்திரனும் அதே ஊர்க்காரனாகக் காட்டப்படுகிறான்). 

விருத்தம் 

5. காழ்கொண்ட கண்டன் முந்தி 
கனிவினால் வலிய வந்ததென் 
ஆள்கொண்டே ஆள வல்ல ஆண்டவ னாகி நின்று
தூதனாய்த் தோழ னாகி சொலுந்தமிழ் பாடற் கெல்லாம்
மாதன மளிக்க வல்ல வன்பின னாகி நிற்கும் 

6.மாதவம் புரிந்து முன்மன வன்தொண்ட என்னும் நாமம்
பூதல மாறிய முக்கட் புங்கன் சொல்லா ரூரன் 

7. படங்கவி பணிபூ ணாரம் பரமநற் றூளி யினால்
தடங்கலி னசவன் பெற்ற தையலை மணந்து கொள்ளத்
தந்திடு உளமும் கொண்டு தமையன்தான் வளர்ந்து வீறு
மதிர்ந்திடா அரசுங் கொண்ட நரசிங்க முனையர் தந்த 

8. செல்வமும் கொண்டு ரத்ன செம்பொன்ஆ பரணம் பூண்டு
வல்லமை யாகி நல்ல மணப்பிள்ளை கோல மாகி
தனம்பெறு சுற்றஞ் சூழத் தாண்டுபொற் பரியி லேறி
வளம்பெறு புத்தூ ருக்கு மகிழ்வுடன் வருகின் றாரே! 

(ஆறாம் பாடலில் ஈரடிகள் ஓலையில் பழுதடைந்தன. குதிரைமீது ஏறிக்கொண்டு, ஆபரணங்களுடன், திருமணம் செய்து கொள்வதற்காக மாப்பிள்ளையாகிய சுந்தரமூர்த்தி நாயனார், புத்தூர் வரும் செய்தி மேலே உரைக்கப்பட்டது) 

தரு 

9. தவளமுத்துக் குல்லா யிட்டு தாளிபில்லை பதக்கம் பூண்டு
சவளமுன்னூல் சைவ வேதர் துரங்கமேல் வந்தனர் பாரீர்!
பொன்னாடை தன்னைப் போர்த்துப் 
பூஷணமெல் லாமணிந்து 
மன்னமன்னர் புகழ் சைவர் வலிமையாய் வந்தனர் பாரீர்!
இருபுறமும் கவரி வீச எழுகடல்போல் மேளம் பொங்க
சுருபமத ராச னென்ன சொகுசுடன் வந்தனர் பாரீர்! 
சடங்கவி யாற்முத லாவுள்ள; சம்பந்திமா ரெதிரே கொள்ள
துடங்கிய ஆருர னென்னுஞ் சுந்தரர் வந்தனர் பாரீர்! 

(திருமணத்துக்கு வரும் சுந்தரமூர்த்தி நாயனாரின் தோற்றப் பொலிவு முதலியன இங்கு காட்டப்படுகிறது. குதிரைமீது அமர்ந்தபடி சுந்தரர் வந்தாராம்! அவர் முத்துப் பதித்த குல்லாய் அணிந்திருந்தாராம்! பதக்கமும் பூண்டிருந்தாராம்! சடங்கவி என்பது சுந்தரமூர்த்தி நாயனாரின் மாமனார் பெயர். சடங்கவி என்பாரும் அந்தணரே. இருபுறமும் கவரி வீச,மேளதாளங்களுடன் சுந்தர மூர்த்தி நாயனார் திருமணத்துக்கு வருவது வெகு களிப்புடன் மேலே பாடப்படுகிறது.) 

வசனம் 

‘வாழும் பிள்ளாய் விப்பிரவக்கிரா! சடங்கவியார் வீட்டுக்குப் போய் பந்தல் பரப்பு பல்லக்குஞ் சில முஸ்தீப்பும் ஆச்சுதோ வென்று பார்த்து வாரும்! 

என்ன அப்படியே விசாரிப்பேன், பந்தலுஞ் சில முஸ்தீப்பு மாச்சுது! சீக்கிரமாய்க் கோலம் வரவேணுமையா! (3) 

(சுந்தரமூர்த்தி நாயனார் மாப்பிள்ளைக் கோலத்துடன் வரவே, அவரை வரவேற்க மாமனார் வீட்டில் ஏதாவது ஏற்பாடுகள் உள்ளதா என்று இங்கு கேட்கப்படுகிறது. முஸ்தீப்பு ஏற்பாடு. பந்தல் போட்டுத் திருமணம் செய்வது சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தும் இருந்தது என்பது இவண் குறிக்கத்தக்கதே) 

தாடிப்பதம் 

10. கோலம் பாரீர்! சுந்தரர் கோலம் பாரீர்! 
சிங்கார மாகிய குமர வேலன் 
தனுவேளென் சாலவே அழகோ? 
முடுகுவம் பரிதன்னிலே ஒருவீதி வருகிற (கோலம்) 

வந்தி மாகதம் புகழும் சங்கீதங்கள் தொனியாக 
இங்கித மந்தமாருதம் வீச நாட்டியமதாய்ச் சூழ்ந்திட 
வீதி வருகிற (கோலம்) 

பேரி காளத் தூரிய வானிடி போல முழங்கிடச் 
சாரி யாகிய சனமசர மேளமதாய்த் தெருவீதி வருகிற (கோலம்) 

மன்னர் போற்றிய நாவலூர் வரும் 
வள்ளல் கொற்றத்தார் வந்தா ரெனச் 
சின்ன மூதிடச் சைவ வேதியர் 
திரண்டு சூழ்ந்திட வீதிவருகிற (கோலம்) 

(இது பதம் என்னும் இசைப்பாட்டு சுந்தரமூர்த்தி நாயனாரின் வருகையே இங்கும் பேசப்படுகிறது. முருகன், மன்மதன் இருவரும் சுந்தரமூர்த்தி நாயனாரைவிட அழகோ? என்று கேட்கப்படுகிறது வந்தி, மாகதம் ஆகிய தேசங்கள் புகழக்கூடிய சங்கீதங்கள் முழங்கச் சுந்தரமூர்த்தி நாயனார் வருகை தருகிறாராம்! சனங்கள் அமர்ந்து விடுகிறார்களாம்! நாவலூர் வள்ளல் வருகைக்காகச் சின்னம் எனும் வாத்தியமும் ஊதப்படுகிறததாம்! சைவ வேதியர்களெல்லாம் சுந்தரமூர்த்தி நாயனாரோடு உடன் வருகிறார்களாம்!] 

விருத்தம் 

11. கோலம்வந் தினிய யோகக் குதிரை மாதர் 
கால மங்களங்கள் பாடி தனித்தனித் தீப மேந்தி 
சீல மாமனார் தன்னில் திருமுத்தம் புகுந்தா ராராம் 
மாலிவ னென்ன பொன்னின் மனைமிசை வருகின் றாரே! 

(சுந்தரமூர்த்தி நாயனார் தன் மாமனார் வீட்டில்வந்திறங்கி, முற்றம் புகுந்ததும், ‘யாராம் இவர்?’ என்று அதிசயத்தார்களாம். பெண் களெல்லாம் மங்களங்கள் பாடினார்களாம்!) 

வசனம் 

அந்தச் சமயத்திலே, புரோகிதர் வருகிற விதம் எப்படியென்றால்”. 

விருத்தம் 

12. வன்னிய சதிரங்கத்தாய் நோக்குபவர் சாங்கத் தோடு 
வாசிக்க வல்ல சுருதியா றங்கஞ் சொல்லி 
மன்னிய சாத்தாங் கதை வழங்கவே வாங்க வல்லோன்
பன்னுவீர் புரோதி தன்பூப் பந்தலில் வருகின் றானே! 

புரோகிதன், பூக்கள் அலங்கரிக்கப்பட்ட மணப்பந்தலுக்கு வருகிறான்! நான்கு (சதிர்) அங்கம், பஞ்சாங்கம் (ஐந்து), ஆறங்கம் என்று எண்களில் அணிசேர்க்கிறது இவ் விருத்தம்! 

தரு 

13. வந்தனர் வந்தனரே! புரோகிதர் வந்தனர் வந்தனரே! 
வந்தனர் கந்த மணிந்தனர் சிந்தை யுகந்தனர் 
அட்சதை தந்தன ரிங்கே!  (வந்தனர்) 

சால வேத ஞானசிலநன் னூலினரே 
குந்திய காலினர் கையொடு கோலினர்
பிரமனைப் போலினர் இங்கே வந்தனர்! (வந்தனர்) 

(புரோகிதர் வருகை, தரு எனும் இசைப்பாட்டில் பாடப்படுகிறது. கந்தம் சந்தனம் முதலிய நறுமணப் பொருட்கள். கோலினர் என்பதற்கு இயைபாகப் போலினர் என்று ஆண்டது. நயமிக்க சொல்லாட்சி! 

விருத்தம் 

14. அட்ட ஐசுவரிய மஸ்து ஆயிரர் ஆரோக்கி மஸ்து
இட்ட காமியார்த்தம் மஸ்து ஈசுரர் கடாக்ஷம் மஸ்து
துட்ட நிக்கிரகம் மஸ்து சுபமஸ்து அவிக்கின மஸ்து
சிட்ட காமியார்த்த மஸ்து சிந்திதா பலித மஸ்து 

(அஸ்து உண்டாகட்டும்; வடசொல். சுபமஸ்து – சுபம்  உண்டாகட்டும். துட்டநிக்கிரகம் – துட்டர்களை அழித்தல்; அவிக்கினம் இடர் வராமல் இருக்க, இட்ட காமியார்த்தம் – விரும்பும் பொருள்; சிந்திதாபலிதம் -ஆசைப்படுவது நடக்கும்.) 

வசனம் 

“அகோ புரோகிதரே நமஸ்காரம்! நமஸ்காரமய்யா!” 

விருத்தம் 

15. கெந்தம் அட்சதையும் நாளி கேரமும் பழமுங் கொண்டு
தந்திடு மரிசி புஞ்பந் தாம்பூலங் கொண்டு வாரும்
செந்தழல் வளர்த்த நெய்யும் தெட்சிணை பணமுந் தாரும்
அந்தநீர்க் கரகம் வைத்தே அருச்சனை செய்கு வீரே! 

(நாளிகேரம் – தேங்காய், கரகம் – கும்பம் வளர்த்த – வளர்க்க; செந்தழல் – செந்தீ;ஓமத்தீ தேங்காய், பழம், பூ, நெய், தட்சிணை ஆகியவற்றைக் கொண்டு வருமாறு புரோகிதர் கேட்கிறார்) 

முகூர்த்தம் நெருங்கிவிட்டது! 

16. பாலிகையில் முளைத்தெழுந்து பரதேசம் போய்வந்து 
காலவே அரசாணி பிரதட் சிணமும்வந்து 
செந்தழலை வளர்த்தோம் செய்து நிறமாய்வேத 
மந்திரமொடு பொற்காப்பு மலர்கையிற் றரித்து 
சீலமொடுஞ் சடங்கனைத்துஞ் செய்துநேர மாச்சுதினி 
தாலிகட்டவே முகூர்த்தம் சமய மிதுதானே! 

(பாலிகை முளைப்பாலிகை, நவதானியங்களை முளைக்க வைப்பது, அரசாணி அரசாணிக்கால். தாலிகட்டும் நேரம் இது என்று புரோகிதர் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.) 

வசனம் 

“இப்படியாகச் சடங்குகளெல்லாம் முடித்து, முகூர்த்தம் வேளையாச்சுதென்று புரோகிதன் சொல்லுகிற சமயத்திலே பரமேஸ்வரன் பிராமண ரூபமாய் வந்து தடுத்தாட் கொள்ளுகிற விதம் எப்படியென்றால்” (6) 

(சுந்தரமூர்த்தி நாயனார் மணவறையில் உள்ளார், ‘புரோகிதர் நேரமாச்சுது’ என்று குரல் கொடுக்கிறார்; அப்போது வந்து தடுக்கிறாராம் சிவன் திருமணத்தை!) 

சிவபிரான் வருகை 

17. தெள்ளுசீர் முனிவர் தேவர் 
வெள்ளியங் கயிலை வெற்பில் விடுத்து
சந்திர சேகரனார் தம்முட அடிமை
சுந்தரர் தமையோர் தொல்முறைப் படியே
அடையவே வலுவாய்க் கொள்ளப் புவியில்
சடைய தெனவே தாலமெழுந் தருளி
செய்யபா தங்களைத் தீபங் காட்டி
வைய்யமேல் பிடிக்கும் வகையது போல
வந்துமா னிடர்போல வடிவது கொள்ள
சிந்தையைப் புரிந்து திருவருள் தழைத்து
கங்கையிற் பணியும் கடுக்கை கொக்கிறகும்
திங்கள்வான் பிறையும் செஞ்சுட ரடவியும்
மெங்ஙனே துடிப்பாய் யிருந்துதோ தலையில்
பங்கமாய் நரைத்துப் பதித்தபூஞ் சிகையும்
ஒத்தைநேத் திரத்தை ஒளிக்கினும் தன்னுள்ள
மற்றநீள் நெருப்பை மறைத்ததோ வகையோ
தெரிகிலா னுதலிற் திருநீ றணிந்து
அர்த்தாகிய கந்த மாக்ஷதை புனைந்து
கந்தர மதனிற் கருப்பினை மறைத்து
சந்தன சுகந்தஞ் தன்னையே தரித்ததும்
மன்னுபூங் கொன்னை மாலைமார் பகத்து
முன்னமே விளங்கு முப்புரி நூலும்
பச்சைமா நிறமும் பாதியிற் சிகப்பும் 
இச்சையாய் விருத்தே ஏகமோர் நிறமாய்
மருவுமான் மழுவு மறைத்ததை மறைத்து
ஏமகையிற் குடையும் ஒருகையிற் கோலு 
மாகிய கறித்தோ லாடையை யொளித்து
யேகநூல் கலையை யியல்பினா லுடுத்து
குஞ்சித பதமுங் கூத்தாடுந் தாளும்
செஞ்ச வேஷமதாய்த் திக்கென நடந்து
கருணைவந் தொழுகும் கதிர்மதி விழிகள்
அருணைதா மரைபோல் அலர்ந்தழ கொழுக
தேவியு மறையுஞ் செய்துதான் தனித்து
மேவிய முதிய விப்பிரர் வந்தனரே! 

(தோலாடை தவிர்த்துவிட்டு, நூலாடையை கட்டிக் கொண்டு, ஒரு கையில் குடையையும் மறு கையில் ஒரு கோலையும் கொண்டு, முதியவர் வேடத்தில் சுந்தரரை ஆட்கொள்ள வந்த பாங்குமேலே வருணிக்கப்பட்டுள்ளது.) 

தரு 

கிழவிப்பிரனார் வந்தாரே! 

18. கிழவிப் பிரனா ரிதோவந் தனர்காண்! 
கிழவிப் பிரனா ரிதோவந் தனர்காண்! 
கிழவிப் பிரனார் மதிசூழவிப் பிரமானமாய் 
கந்தா க்ஷதையிட்ட நீறு நெற்றிதோண! (கிழ) 

பேறலாத வேயரவர் பரிபுரத் தாளினர் பரதநாட்டியம்விட்டு 
பாரினில் மெல்ல மெல்ல பதியவே நடந்து! (கிழ) 

வெண்ணீறு பூசிய தென்னவே! தலைமே லெங்கும் 
நரைமயிர் மின்னவே! 
கண்ணான மூன்றினில் அதியாய்ச்சொரி 
கண்ணை! கரந்திரு 
கண்ணீர் கருணையே சொரிய!  (கிழ) 

குஞ்சரத் தோலுரி போலவே கரைக் 
கோவணஞ் சோமனுஞ் சாலவே 
தலையினை விட்டெறிந் தாரென – கையினிற் 
கோலும் குடையுமே கொண்டு! (கிழ) 

(கிழவர் வேடத்தில் சிவனார் வந்ததையே மேலைத் தருவும் புகழ்கிறது. 

மூன்றாவது கண்ணாகிய நெற்றிக் கண்ணை மறைத்துவிட்டு, மற்ற இரு கண்களிலும் கருணையானது சொரிய அக்கிழவர் வந்தாராம்! அவர் நாட்டியம் ஆடுதலை நிறுத்திவிட்டு, மெல்ல மெல்லத் திருமணம் நடக்கும் புத்தூருக்கு வந்தாராம்! 

விப்பிரன் பிராமணன்.) 

சிவனார் விசாரித்தல்! 

விருத்தம் 

19. இந்தவூர் புத்து ராமோ யெமக்கொரு தொண்ட னாரும் 
சுந்தரர் மணஞ்செய் வீடு தூரமோ கிட்ட மேயோ? 
அந்தமே ளத்தி னோசை அவன்கலி யாணந் தானோ?
நந்தமக் கறிய நீங்கள் நவிலு நவிலு வீரே! 

(கிழவேடத்தில் வந்த சிவன், ‘இந்த ஊருதான் புத்தூரா? சுந்தரர்னு ஒருத்தர் திருமணம் செய்யப்போகிறாராமே. அவரு வீடு கிட்டவா தூரத்திலா? அதோ மேளச்சத்தம் கேட்கிறதே அது அவர் கலி யாணத்திற்குத்தானா? எனக்குச் சொல்லுங்கள்! என்று மக்களை விசாரிக்கிறார்!} 

வசனம் 

“வாருமையா விருத்தரே!சுந்தரர் மணஞ்செய்கிற வீடுயிதுதான்!” என்று சொல்ல, அப்போ, பந்தலிலே யிருக்கிற பெரியோர்கள் எதிரே வந்து சொல்லுகிற வசனம் எப்படியென்றால்” (7)

(விருத்தர் – முதியவர்; இங்கே சிவன்)

– தொடரும்…

– கீழ்த்திசைச் சுவடிகள் வெளியீடு எண் : 81, சுந்தரமூர்த்தி நாயனார் யட்சகானம்

– பதிப்பாசிரியர்: டாக்டர் எஸ்.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்), பி.எட்., டிப்.வ.மொ. பி.எச்.டி., காப்பாட்சியர், அ.கீ.சு. நூலகம், சென்னை-600 005.

– பொதுப் பதிப்பாசிரியர்: நடன காசிநாதன் எம்.ஏ., இயக்குநர், தொ. பொ.ஆ.துறை, சென்னை-600 113.

– அ.கீ.சு.நூ. 1995

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *