என்றும் இருப்பேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: December 1, 2023
பார்வையிட்டோர்: 2,187 
 
 

(2023ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முதற் காட்சி | இரண்டாம் காட்சி 

(விளக்குகள் ஒளிர்கின்றன. மேடையில் முதலில் நாம் பார்த்த அதே கவியரங்க மேடை. நடுவராக மங்கையர்க்கரசி அமர்ந்திருக்கிறார். அமர்ந்தபடியே பேசுகிறார்) 

மங்கையர்க்கரசி 

கடல் சூழ்ந்த உலகின் கண் வாழும் மகா ஜனங்களின் ஒரு திரளாக இங்கு அமர்ந்திருக்கும் தமிழ் கூறும் நல்லுலக மக்களுக்கு அடியேனுடைய பணிவான வணக்கங்கள். 

வாய்ப்புகள் எப்போது வேண்டுமானாலும் எவருடைய கதவையும் தட்டும் என்பதற்கு அடியாள் இங்கு அமர்ந்திருக்கும் காட்சியே சாட்சி. அன்புக்குரிய அரங்கநாதனாருக்கு உடல் சுகவீனம் என்பதால் அடியாளை இங்கு அமரச் செய்தார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நின்றவூர் நித்திலம். அரங்கநாதனார் போல் தகுதி என்பது உண்டோ இங்கு அமரலாமா என்றெல்லாம் என் நெஞ்சில் வினா எழவில்லை. 

ஆசிரியர் வீட்டில் பாடம் படிக்கச் செல்வார்கள் மாணாக்கர். 

ஆசிரியர் ஏதோ காரணமாக வீட்டில் இல்லாது போனால் மாணாக்கரை அவரது குடும்ப உறுப்பினர் கவனிக்க முன் வருவர் அல்லவா? 

அது போலவே சகோதரரின் பணியை இந்தச் சகோதரி ஏற்க முன் வந்தேன். அவரைப் போல பாடம் நடத்த மன்னிக்கவும் கவியரங்கை நெறிப்படுத்த அடியாளுக்கு ஆற்றல் இல்லை என்னும் ஆசையால் இங்கு வந்து அமர்ந்தேன். சகோதரரின் பணியை முடிக்கும் ஆசையால் இங்கு வந்து அமர்ந்தேன். 

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நின்றவூர் நித்திலம் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறேன். 

நின்றவூர் நித்திலம் என்ற பெயர்க் காரணத்தை அவரிடம் நான் வினவினேன். 

பாட்டனார் அன்புடன் வைத்த பெயர் என்றார்.நின்றவூர் நித்திலம் என்ற பெயரே ஆழ்வாரின் அருளிச் செயல். 

ஆம் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார், திருநின்றவூர் திருத்தலத்தில் பாட வந்தபோது ஆலயத்தில் கிட்டவில்லை பெருமாள் தரிசனம். 

திருநின்றவூர்தான் சிவபெருமானுக்கு தமது இதயத்திலேயே பெரிய ஆலயம் கட்டிய பூசலார் நாயனார் அவதரித்த பூமி என்பதையும் நினைவூட்டுகிறேன் அடியாள். 

திருநின்றவூர் பெருமாளைப் பாடாமல் இங்கிருந்து சென்ற திருமங்கை மன்னன், திருக்கடல்மல்லை என வழங்கும் மாமல்லபுரத்துப் பெருமாளைப் பாடும் போது நின்றவூரானை நினைத்துப் பாடுகிறார். 

“நீண்டவத்தக் கருமுகிலை யெம்மான் தன்னை 
நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார்சோலை 
காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல்மல்லைத் தல சயனத்தே.” 

நித்திலம் என்பதன் பொருள் முத்து கண்ணே முத்தே என்று குழந்தையைக் கொஞ்சுவோம். அடியார் இறைவனைக் கொஞ்சி நிற்பதைப் பாருங்கள். நின்றவூர் நித்திலம் அவர்களுக்கு நெஞ்சு நிறைந்த வாழ்த்துக்கள். 

உழைப்பாளரின் பெருமையைப் பறை சாற்றும் மே தினத் தருணத்தில் இங்கே கவி பாட வந்துள்ளனர் இளைய பாரதத்தினர். 

இளைய பாரதத்தினாய் வா வா என்றார் மகாகவி பாரதி. அடியாளும் அவர்களை உவப்புடன் அழைக்கிறேன். முதலில் கவிதை பாட வருகிறார் தொழிற்சங்கத் தலைவராகவும் இருக்கும் சாக்ரடீஸ். 

ஏதென்ஸ் நகரத்து இளைஞர்களே வாருங்கள் என்றழைத்து அறிவாற்றல் தந்தான் அறிஞன் சாக்ரடீஸ். நான் இந்த இளைஞரைக் கவிதை தர அழைக்கிறேன். தலைப்பு : உழைப்பு 

(சாக்ரடீஸ் உரை மேசை அருகே) 

சாக்ரடீஸ் 

அருந்தமிழுக்கும் அன்னை மங்கையர்க்கரசிக்கும் வணக்கம். படைப்பவனின் உழைப்பால் உருவாகிக் கிடந்தது சோம்பேறி உலகம். 

மனிதன் வந்தான் மாயமாய் ஏதும் புரியாமல் 
இருந்த அவனியில் 
உழைப்பு என்னும் கைவிளக்கே 
அவனை வளர்ச்சிக் கடலில் 
பசுமைக் கரைகளைக் காணச் செய்தது. 

கற்காலத்திலும் 
அதற்குப் பின்னும் உழைப்பு உழைப்பு 
உழைப்பே இவனுக்கு ஆசிரியன். 

இயற்கையன்னை தன் 
மகனான இவனிடமே பலமுறை சீற்றம் கொண்டு சோதித்தாள். 
அந்த சோதனைப் பொழுதுகளிலும் உழைப்பே இவனை நெறிப்படுத்தியது. 
மனிதக் கூட்டத்தின் வரலாறே உழைப்பின் வியர்வைத் துளிகளால் எழுதப்பட்டிருக்கிறது. 

இடையே… 
காலப் போக்கில் 
ஏதேதோ மாற்றங்கள் 
மன்னர்கள், சாதிகள், 
மதங்கள், இனங்கள் 
போர்கள், இரத்த வெள்ளங்கள் 
இவற்றை எண்ணி 
மறுகுவதை சற்றே மறப்போம்… 

மாநகரங்களில் கட்டிடத் 
தோப்புகள்…
கட்டி முடித்தது 
உழைப்பின் கைகள் ! 

கிராமத்து வயலில் 
உழைப்பு இசை பாடிக் 
கொடுத்த நெல்மணிகளே 
மாநகரவாசிகளின் 
வயிற்றுப் பசியை ஆற்றுகிறது 
திருவள்ளுவப் பெருந்தகை 
சொன்னாரே 
சுழன்றும் ஏர் பின்னது உலகம் என்று. 

அனைத்துத் துறைக்கும் 
ஆதார சுருதியாய் 
அறிவியல் பெருவிந்தைகளின் 
வலிமையான அடித்தளமாய் 
உழைப்பைத் தவிர வேறு ஏதும் 
புலனாகவில்லையே உலகத்தீரே. 

உழைப்பை வணங்கி 
வழிபட உழைப்புக்கென 
தெய்வம் ஏதும் கொள்ளவில்லை
நம் முன்னோர். 

உழைப்பை வணங்கி 
நேரம் வீணாகச் செலவாவதைக் 
காட்டிலும் உழைப்பதே 
மேல் எனக் கொண்டனரோ? 
அடடா! எனக்கும் பணிகள் 
உள்ளனவே ஏராளமாக …

வாய்ப்புக்கு நன்றி. விடைபெறுகிறேன். 

மங்கையர்க்கரசி : நன்றி இளைஞரே. தொழிற்சங்கத் தலைவர் என்றால் பணிகள் ஏராளம் தான். 

தொழிற்சங்கத் தலைவருக்குள்ளும் ஒரு கவிஞன் இருப்பதைக் கண்டோம். தமிழ் அறிஞர் ராயப்பேட்டை முனிவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என்பதை இளம் தலை முறைக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் நான். 

சாக்ரடீஸின் கவிதை உழைப்பின் பெருமைகளை நமக்கு எடுத்துரைத்தது. புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனாரின் வைர வரிகள் என் மனதில் ஓடின. “சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே முன்னம் எத்தனை தோழர்கள் இரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே.” 

இப்பொழுது இல்லறம் என்னும் தலைப்பில் கவி பாட இளம் மங்கை தென்றல் வருகிறார். கவி படிக்க வாருங்கள் அம்மா. ‘இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்’ என்ற திரைப்பாடல் என்னுடைய நினைவில் உதித்தது. இந்த மன்றத்தில் இந்தத் தென்றல் பைய நடந்து வருகிறது பாருங்கள். கேளுங்கள். 

(தென்றல் உரை மேசை அருகே) 

தென்றல் 

இருந்தமிழே உன்னால் இருந்தேன் வானோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் என்று கவி வாணர் புகழ்ந்துரைத்த தமிழிணங்குக்கு வணக்கம் கூறி என் உரையைத் தொடங்குகிறேன். நடுவருக்கும் அவையோருக்கும் வணக்கங்கள். 

இல்லறம் 

ஜிம் என்னும் ஆடவனையும்
ஸ்டெல்லா என்னும் மங்கையையும்
திருமணம் இணைத்து வைத்தது. 

வருவாய் சொற்பம் என்றாலும்
அன்புக்குப் பற்றாக்குறை இல்லை
காதலுக்கோர் அளவில்லை. 

கிறிஸ்துமஸ் பண்டிகை தருணம்
யேசு கிறிஸ்துவின் பிறந்தநாள்
கொண்டாடத்தில் கணவனுக்குப்
பரிசு தர நினைத்தாள் ஸ்டெல்லா.

கணவன் ஆசையாய்ப் பாதுகாத்து
வைத்திருக்கும் பட்டை இல்லா
கைக் கடிகாரத்திற்குத் தன்னுடைய
நீண்ட கூந்தலை விற்று
பிளாட்டினப் பட்டையை 
ஆசை ஆசையாய் வாங்கி வந்தாள்
ஸ்டெல்லா என்னும் காதலி. 

கணவன் இன்ப அதிர்ச்சிக்குள்ளாவதை 
மனதில் கண்டு மகிழ்ந்து இல்லம் நோக்கி நடந்தாள். 

ஆருயிர்க் காதலி டெல்லாவின் 
அழகிய கூந்தலை அலங்கரிக்கத்
தன்னுடைய விலை உயர்ந்த வாட்ச்சை
விற்று தங்க கிளிப் வாங்கி வந்தான் ஜிம். 
மனைவி மனம் மகிழ்ந்து போவாள்
என்றெண்ணி வீடு நோக்கி
நடை போட்டான் அவன். 

இதுதான் இல்லறம் ஒருவரை
ஒருவர் விடாமல் சார்ந்து நிற்கும்
நானிலம் போற்றும் நல்லறம்.
ஓ ஹென்றியின் கதையை
என் வார்த்தைகளில் சொல்ல முயன்றேன். 

வாய்ப்புக்கு நன்றி. வணக்கம். 

மங்கையர்க்கரசி : நன்றி தென்றல் தென்றலாகக் கதைக் கவிதையை நம் செவிகளில் வார்த்த செல்வி தென்றலை வாழ்த்துகிறேன். ஓ ஹென்றியின் புகழ் பெற்ற கிஃப்ட் ஆஃப் மேகி என்னும் சிறுகதையை நீங்களும் வாசித்திருப்பீர்கள். ஒருவரை ஒருவர் முழு மனதுடன் சார்ந்து வாழ்தலே இல்லறம் என்ற பக்குவ வார்த்தையையும் கூறிய தென்றல் எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் அவையோரின் சார்பில். இப்பொழுது இளைஞர் கதிரவன் உதிக்கிறார். மன்னிக்கவும் வருகிறார். கதிர் வாருங்கள் இவர், திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றுவதால் திரைக்கதை என்ற தலைப்பில் கவிதை சொல்வார். தாங்கள் இயக்குநராகப் பரிணமிக்க வாழ்த்துகிறேன். ஆசீர்வதிக்கிறேன். 

(கதிரவன் உரைமேசை அருகே) 

கதிரவன் 

ஆசிகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அம்மா. திரைக்கதை என்பது நுட்பங்கள் நிறைந்தது என்பதால் அதைப் பற்றிப் பேசி அவையோரை சலிப்படையச் செய்ய நான் விரும்பவில்லை. மன்னிப்பு கோருகிறேன். 

மங்கையர்க்கரசி : சரி. எங்களுக்காக ஒரு கதையைக் கூறுங்கள் உங்கள் பாணியில். 

கதிரவன் : நன்றி அம்மா. அவ்வாறே. 

இந்த ஒரு நிமிடக் கதையின் பெயர் காபி ஷாப். 

சென்னையிலிருந்து திருச்சி நோக்கிப் பயணித்தால் ஆங்காங்கே காபி கடைகள் செங்கல்பட்டுக்கு அருகே அது போன்ற ஒரு காபி விற்பனையகம். இருட்டு தழுவும் இரவு நேரம். அங்கு இருந்த இரவுப் பணியாளன் வசந்த் முகத்தில் களிப்பு. வீட்டுக்குப் போயிருந்த காசாளன் பாலா கடைக்குள் வந்தான். ‘என்ன முகத்தில் மகிழ்ச்சிக் குறி?’ கேட்டான் பாலா. 

‘இனி மேல் நான் காபி ஆற்ற மாட்டேன். கிளாப் பலகையைப் பிடிக்கும இந்தக் கை.’ 

‘அப்படி என்ன ஆச்சு? 

சற்று முன் இயக்குநர் சுகுமாரன், நாயகன் ராகேஷ், தயாரிப்பாளர் ரமேஷ் மூவரும் இங்கே நம்மிடத்தில். என் பேய்க் கதையைச் சொன்னேன் அவர்களிடம். உற்சாகத்துடன் செவி மடுத்தார்கள். நாளையே சென்னை வா என்றார்கள்’. வசந்த் மகிழ்ச்சியோடு நடந்ததை விவரித்தான் விழிகள் மலர. பாலா சொன்னான் : தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கி செய்தியைப் பார். செங்கல்பட்டு சுங்கச் சாவடி அருகே மகிழ் உந்து விபத்தால் மூவரும் உலகை விட்டு மறைந்து நான்கு மணி நேரமாயிற்று! 

‘அய்யிய்யோ….அப்படி ஆனால் இங்கு கதை கேட்டுச் சென்றது…. மயங்கி விழுந்தான் வசந்த். விடைபெறுகிறேன். நன்றி வணக்கம். 

மங்கையர்க்கரசி : (சிரிக்கிறார்) சரிதான். பேய்க் கதையை ஆவிகளிடம் சொல்லியிருக்கிறான் அந்த இளைஞன். காதல் திரைப்படங்கள் வரும் ஒரு காலத்தில். சண்டை திரைப்படங்கள் வரும் மற்றொரு காலத்தில், இப்போது என்னவோ பேய்க் கதைகளாக வருகின்றன. காரணம் என்ன என்பது கதிரவனுக்குத் தெரிந்திருக்கும் அவர் திரைத் துறையில் இயங்கி வருவதால். 

தென்றல் ஒரு காதல் கதையைப் பகர்ந்தார். கதிரவன் ஒரு நிமிடக் கதையை மொழிந்தார். கதைக் கவியரங்கம் ஆகி விடும் போலிருக்கிறது. 

‘வள்ளி கணவன் பேரை வழிப் போக்கர் சொன்னாலும் உள்ளம் குழையுதடி’ என்கிற காவடிச் சிந்து வழிநடைச் சிந்து பாடலைப் பாடியவர் அண்ணாமலை ரெட்டியார். பாமரரையும் பாட வைத்த இந்தக் கவிஞன், நிலவுலகில் வாழ்ந்தது இருபத்தாறு வயது வரை மட்டுமே. திருமுருகன் வருகிறார். திருமுருகன் என்றதும் அடியாளுக்கு காவடிச் சிந்து பாடல் நினைவில் தோன்றியது. அண்ணாமலையாரும் தோன்றினார். வாருங்கள் திருமுருகா. 

(திருமுருகன் உரை மேசை அருகே) 

திருமுருகன் 

(பின்னணியில் சலசலப்புக் குரல்கள். ‘சங்கப் பணியை விட்டு விட்டு கவியரங்கில் உட்கார்ந்திருப்பது சரிதானா சாக்ரடீஸ்… இது தான் நீ சங்கத்திற்கு செய்யும் பணியா மே தின நாளில்…) 

(மேடை மீது தக்காளியும் முட்டையும் வீசப்படுகின்றன) மங்கையர்க்கரசி : சாக்ரடீஸ் கடமை தவறாதவர். அவருக்கு வேண்டாதவர்கள் இப்படி நிகழ்ச்சிக்கு இடையூறு செய்வது கோழைத்தனமான செயல். நிகழ்ச்சியை நடத்த விடுங்கள். 

(மேடை மீது மீண்டும் தக்காளியும் முட்டையும் வீசப் படுகின்றன) 

மங்கையர்க்கரசி : இப்படி அழுகிய பொருட்களை வீசுவதற்குப் பதிலாக, தின்பண்டங்களை வீசினால் கொறித்துத் தின்போம் நாங்கள் அனைவரும். 

(திருமுருகன் உரை மேசையிலிருந்து நகர்கிறான் சாக்ரடீஸ் உரை மேசை அருகே வந்து நிற்கிறான்.) 

சாக்ரடீஸ் : என்மீது வெறுப்பு கொண்டவர்கள், இந்த நிகழ்ச்சியை நடத்த விடக் கூடாது என்ற தீய எண்ணத்தில் வந்துள்ளார்கள். இந்த அசம்பாவிதத்துக்காக மன்னிப்பு கோரி நிற்கிறேன். 

(கை கூப்புகிறான். அவன் மீதும் தக்காளியும் முட்டையும் வந்து விழுகிறது). (விளக்குகள் அணைகின்றன). 

(பின்னணியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நின்றவூர் நித்திலத்தின் குரல்) நான் நித்திலம் பேசுகிறேன். விஷமிகள் மின்சார இணைப்பைத் துண்டித்துள்ளார்கள். மேடையில் இருப்பவர்களும் நேயர்களும் அவரவர் இடத்திலேயே இருக்கும்படி வேண்டுகிறோம். சில நிமிடங்களில் மீண்டும் ஒளி வரும். அமைதி காக்கவும். 

(மீண்டும் மேடையில் விளக்குகள் ஒளிர்கின்றன.) (நித்திலத்தின் குரல் : அனைவருக்கும் நன்றி) 

மங்கையர்க்கரசி : அமைதி காத்து நின்ற இளம் கவிஞர்களுக்கும் நேயர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜெனரேட்டர் வாயிலாகக் கொடுக்கப் பட்டிருக்கும் மின் சக்தி சில மணித்துளிகள் மட்டுமே இருக்கும். போதுமான எரிபொருள் இல்லாமையே காரணம். திருமுருகனின் கவிதையுடன் இந்தக் கவியரங்கை நிறைவு செய்ய உத்தேசம். மற்றவர்கள் ஏமாற்றம் கொள்ள வேண்டாம். மன்னிக்கவும். திருமுருகனுக்குத் தரும் தலைப்பு காலம் வரும். 

(திருமுருகன் உரை மேசை அருகே) 

திருமுருகன் 

வணக்கம் 

காத்திருங்கள் 
எதுவும் எளிது இல்லை 
இவ்வவனியிலே. 

காலம் வரும் வரை 
காத்திருங்கள் 
எதுவும் எளிது இல்லை. 

புயலுக்கு 
தென்றலுக்கு 
மகிழ்ச்சிக்கு 
துயரத்திற்கு 
எதற்கும் காத்திருங்கள் 
தயாராகவும் இருங்கள். 

வேலைக்கு… 
வேலைக்கு பின் 
கண்ணாமூச்சி காட்டும் 
பதவி உயர்வுக்கு 
காத்திருங்கள் 
எதுவும் எளிது இல்லை 
இவ்வவனியிலே. 

திருமணத்திற்கு… 
திருமணத்திற்குப் பின் 
உங்கள் இரத்தம் தாங்கிய
உயிருக்கு… 

காலம் வரும் வரை
காத்திருங்கள் 
எதுவும் எளிது இல்லை
இவ்வவனியிலே… 

வாய்ப்புக்கு நன்றி. 

மங்கையர்க்கரசி : பக்குவமாய்ப் பேசிச் சென்ற இளைஞரைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். பொறுமையே பெருமை என்பதை தமது வார்த்தைகளில் வார்த்தளித்த திருமுருகனுக்கு வாழ்த்து. சற்று முன்பு இங்கு விரும்பத் தகாதவை நிகழ்ந்த போது பொறுமை காத்த நேயர்களும் கவிஞர்களும் பொறுமையின் பெருமைக்குச் சான்றாய்ச் செயல்பட்டார்கள். 

சாக்ரடீஸ், சிறிய வயதில் தலைவனாக ஆகி விட்டதைக் கண்டு சிலர் அடைந்த வயிற்றெரிச்சல் இங்கு வந்து ஆட்டம் காட்டியிருக்கிறது. சாக்ரடீஸ், எதுவும் எளிதில்லை என்றாரே நம் இளவல் திருமுருகன். தலைவனாக இருப்பதும் எளிதில்லை. தொடரட்டும் உங்கள் தொண்டு. 

(சாக்ரடீஸ் உரை மேசை அருகே கை கூப்பி நிற்கிறான்) 

மங்கையர்க்கரசி : நாங்களும் நேயர்களும் நகராமல் இருந்தது போலவே நீங்களும் பலமான குத்து விழுந்தாலும் குத்துச் சண்டை அரங்கிலேயே இருங்கள். உங்கள் முறை வரும். அப்போது வீழ்த்துங்கள் வஞ்சகர்களை. வாழ்த்துக்கள். ஆசிகள். இத்துடன் இக் கவியரங்கம் நிறைவு பெறுகிறது. மீண்டும் சந்திப்போம். வாழிய செந்தமிழ். வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித் திருநாடு. உலகில் அமைதி நிலவட்டும். நன்றி வணக்கம். 

(திரை) 

மூன்றாம் காட்சி 

(மேடையில் கவியரங்க அமைப்பு. நடுவர் இருக்கையும் பிற இருக்கைகளும் காலியாக இருக்கின்றன. மேடையின் வலப்பக்கத்திலிருந்து நின்றவூர் நித்திலம் வருகிறார். கையில் மைக் வைத்துக் கொண்டு நின்றபடியே பேசுகிறார்) 

நின்றவூர் நித்திலம்

அனைவருக்கும் வணக்கம். மற்றுமொரு இனிய மாலைப் பொழுதில் தங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதுவும் ஒரு கவியரங்க நிகழ்ச்சியே. முற்றிலும் பெண்மணிகள் மட்டுமே கலந்து கொள்ளும் மகளிர் கவியரங்கம் ஆகும் இது. தலைமை வகிக்கிறார் டாக்டர் ரங்க நாயகி. நவராத்திரியில் நடக்கிற நிகழ்ச்சியாயிற்றே சுண்டல் கிடையாதா என்று ஓர் அன்பர் குரல் கொடுக்கிறார். செவிக்கு உணவு இல்லாத போது தானே சிறிது வயிற்றுக்குத் தர வேண்டும்? செவிக்கு உணவு சற்று நேரத்தில் கிடைக்கும். காத்திருங்கள் மிக்க நன்றி. 

(விளக்குகள் அணைக்கப்படுகின்றன. சில நிமிடங்கள் கழித்து மீண்டும் விளக்குகள் ஒளிரும்போது நடுவர் ஆசனத்தில் வயதான பெண்மணி டாக்டர் ரங்கநாயகி அமர்ந்திருக்கிறார். இளம் பெண்மணிகள், அவருக்கு இரண்டு பக்கங்களிலும் சிறிய ஆசனங்களில் அமர்ந்திருக்கின்றனர். டாக்டர் ரங்கநாயகி பேசத் தொடங்குகிறார்) 

டாக்டர் ரங்க நாயகி : 

தேமதுரக் தமிழோசையைப் பருகிக் களிக்கக் குழுமி உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு அடியாளின் வணக்கங்களைத் தெரிவித்து நிகழ்ச்சியைத் தொடங்குகிறேன். 

மங்கையர்க்கரசியார் புண்ணியம் தேடி வடநாடு சுற்றுலா சென்றிருப்பதால் திண்ணையில் அமர்ந்தவனுக்குத் திடுமென கிடைத்த திருமண வாய்ப்பு போல் அடியாளுக்குக் கிடைத்தது இந்த சிங்காசனம். காரணமாய் அமைந்தார் நின்றவூர் நித்திலம். இந்த நிகழ்ச்சியை நடத்துவதால் எனக்குப் புண்ணியம். 

இப்படி ஒரு நிகழ்ச்சிக்குப் போகிறேன் என்றதும் என் மகன் வாய் திறக்கவில்லை கணவர் கேட்டும் கேட்காது போல் இருந்தார். காரியச் செவிடாய் இருப்பது அவர் சாமர்த்தியம். என் மருமகள் ஒரு பார்வை பார்த்தாள். அதன் பொருள் உங்களுககு எதற்கு இந்தப் பணி ?

என் பேரன் மட்டும் துள்ளிக் குதித்தான். உன்னால் முடியும் பாட்டி என்று பூரித்தான். பார்த்தீர்களா? பேரப் பிஞ்சுகளின் தெம்புரையே பாட்டிகளுக்கு கிரியா ஊக்கி. அடியாளுக்கு நடுவர் என்றோ தலைவர் என்றோ சொல்லிக் கொள்ள விருப்பம் இல்லை. நானும் இவர்களில் ஒருவள் என்ன சில பல ஆண்டுகள் முன்னால ஜனித்துவிட்டேன். அது ஒன்றுதான் வேறுபாடு அதனால் இல்லை எல்லைக் கோடு. 

என்னை நெறிப்படுத்தி நடத்தும் நெறியாளர் என்று சொல்லி மகிழ்கிறேன். நன்றி. முதலில் கண்ணகி பற்றி கவிதை பாட கண்மணி வருகிறார். வாருங்கள் கண்மணி என்னும் இளம் பெண்மணி. 

(கண்மணி உரை மேசை அருகே) 

கண்மணி 

என் மகனை இந்த உலகில் வரவேற்ற, முதல் நபரான மருத்துவர் அம்மா, என் கவிதை அரங்கேற்றத்தை வரவேற்க வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இன்ப அதிர்ச்சி தந்த அம்மாவுக்கு நன்றி. 

தங்கள் மருமகளை நான் சந்தித்திடத் தாங்கள் அனுமதிக்க வேண்டும். சாடையால் மாமியார் 

மாமியார் உடன் உரையாடும் பாங்கைக் கற்க வேண்டும். 

ரங்கநாயகி : பொத்தி வைக்காமல் வாழும் உத்திகளைப் பிறருடன் பகிரும் மனம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஏன் இத்தனை குழப்பம்? 

கண்மணி : மருத்துவர் அம்மா கூறியது பதிலா கேள்வியா? புரிந்தும் புரியாதது போலவே இருக்கிறது. சரி நான் கண்ணகியிடம் செல்கிறேன். 

ரங்கநாயகி : இது நல்ல முடிவு. 

கண்மணி: 

வண்ணச் சீறடி மண்மகள் 
அறிந்திலள் என்று துறவுடை அரசன் இளங்கோ 
பாடிய பாவையைப் பற்றி 
நான் பேசப் போவதில்லை. 
தமிழ் இலக்கியம் மற்றுமொரு 
கற்புக்கரசி கண்ணகியைக் காட்டி நிற்கிறது. 

அவளைப் பற்றி சில செய்திகள் உங்களுக்காக. ஆம். இந்த இன்னொரு கண்ணகி, வள்ளலாக வாழ்ந்த மன்னனின் இல்லக் கிழத்தி. 

குளிரால் நடுங்கிய மயிலுக்குப் போர்வை ஈந்த பேகன் என்னும் மன்னன் மனம், அவனுக்காகக் காத்திருக்கும் மயில் போன்ற பெண்ணை மறந்து போனது. பரத்தையர் பால் விழுந்து கிடந்தது. 

பிரிந்தவரைச் சேர்த்து வைக்கும் அருங்குணமும் ஆற்றலும் அனைவருக்கும் இருப்பதில்லை. 

பிரிந்த சோடியைச் சேர்த்து வைக்க முனைந்து நின்றனர் கபிலரும் பரணரும். புலவர்கள் பாடுவதோடு நிறுத்திக் கொள்வதில்லை. 

பரணர், பேகனைச் சந்திக்கச் சென்றார். பரிசில் தரமுன் வந்தான் பேகன். பரணர் பேசினார் : “அன்பு மன்னா! கண்ணீரைத் தாரைத் தாரையாக உகுத்துக் கொண்டிருக்கும் உன்னைக் கரம் பிடித்த இல்லத்தரசியின் துயரம் துடை அதுவே நான் உகக்கும் பரிசில். அதுவே நான் கேட்கும் பரிசில்” துணிச்சலுடன் பேசிய பரணரின் மொழிகளைக் கேட்ட பேகன் மனம் தெளிந்தான். கண்ணகியின் இடம் நாடிச் சென்றான். திருந்தி வந்த மன்னனை மகிழ்ச்சியுடன் களிப்புடன் ஏற்றாள் அந்தப்பெண் மயிலாள். மிக்க நன்றி. வணக்கம். 

ரங்கநாயகி : இலக்கியம் காட்டும் இன்னொரு கண்ணகி பற்றிய வார்த்தைச் சித்திரம் தந்த கண்மணிக்கு நன்றி. 

இப்பொழுது யுவதி இனியவள் வருகிறார் கணவனும் மனைவியும். என்ற தலைப்பில் செப்புவார் அவருடைய உள்ளத்தின் வெள்ளத்தை. 

(இனியவள் உரை மேசை அருகே) 

இனியவள் 

தமிழன்னைக்கு வணக்கம். 

மருத்துவர் அம்மாவுக்கும் அவையினருக்கும் வணக்கம். என்னைப் போன்ற இளம் பெண்மணிகளுக்கும் வணக்கம். 

கணவனும் மனைவியும் 

மேடம்…மேடம் 

ரங்கநாயகி : யாரை அழைக்கிறீர்கள்? 

இனியவள் : மேடம் மேரி க்யூரி இவரது கணவர் பியரி இருவரும் இணைந்து உணவு மறந்து உறக்கம் மறந்து சுகங்கள் துறந்து கண்டுபிடித்தது தான் ரேடியம் என்னும் அறிவியலின் விந்தை. ரேடியம் இல்லாத ஒன்று இன்று இல்லாத இடம் இல்லை. சாக்லேட்டில், பற்பசையில், அழகு சாதனங்களில் மருத்துவத்தில் இன்றியமையாதது ரேடியம். இந்த இணையர் உலகுக்கு அளித்த உன்னதம். 

இயற்பியலுக்காக ஒரு முறையும், வேதியியலுக்காக ஒரு முறையும், நோபல் பரிசு இருமுறை இவரை நாடி வந்தது. நோபல் பரிசைப் பெற்ற முதல் பெண்மணி என்பதும் இவரது வியத்தகு வாழ்வின் மற்றொரு சிறப்பு. 

பின்னாளில் பொலேனியம் என்கிற அறிவியல் விந்தையும் இவர் ஆராய்ச்சியின் பிள்ளை 

கணவனும் மனைவியும் உருவாக்கிய கண்டுபிடிப்புகள் மட்டுமே… இவர்களுக்குப் பிள்ளைகளா என்றால்… இடையறாத ஆராய்ச்சிக்கு இடையே ஓர் ஆண் மகவையும் பெண் பிள்ளையையும் பெற்றெடுத்தார் இந்தப் பெருமாட்டி. 

காரிருள் வரும் வரை கணவனும் மனைவியும் சண்டை யிடுவதை நாம் பார்த்திருப்போம் அன்றாடம் 

கணவனும் மனைவியும் இணைந்து வியக்க வைக்கும் விந்தைகளை உருவாக்கலாம் என்பதில் மேடம் மேரி க்யூரி முன்னோடி. இந்தச் செய்தியைப் புரிந்து நடந்தால் நீங்களும் உங்கள் இணையும் ஆகலாம் நல்ல ஜோடி. வாழ்வே அர்த்தமுள்ளதாகும் என்பதில் ஐயமில்லை போடி. 

மிக்க நன்றி. வணக்கம். 

ரங்கநாயகி : போடி என்று முடித்து விட்டார். படாத பாடுபட்டு ரேடியம் கண்டுபிடித்தார் மேரி க்யூரி. அவருக்கு அல்லும் பகலும் துணை நின்றார் அவரது கண்ணவர் பியூரி . இவர்கள் வாழ்வையே தியரியாகக் கொள்ள வேண்டும் தம்பதியர் என்று சொல்லிச் சென்ற இளம் பெண்மயில் இனியவளுக்கு நன்றி. விரைவில் இந்த இனியவளுக்குப் பிடித்த இனியவர் கரம் பிடிக்கும் நாள் வரட்டும் என்று வாழ்த்துகிறேன். வியத்தகு பணிகளை நீங்கள் இருவரும் முடித்துக் காட்ட வாழ்த்துக்கள். 

பொன்முடியார் என்னும சங்கத்தமிழ்ப் பெண்பால் புலவர் பாடுகிறார். 

ஈன்று புறந்தருதல் 
என்தலைக் கடனே 
சான்றோனாக்குதல் 
தந்தைக்குக் கடனே 
வேல் வடித்துக் கொடுத்தல் 
கொல்லற்குக் கடனே 
நன்னடை நல்கல் 
வேந்தர்க்குக் கடனே 
ஒன்றுவாள் அருஞ்சம முருக்கிக் 
களிறெறிந்து பெயர்தல் 
காளைக்குக் கடனே 

இந்த புறநானூற்றுப் பாடல் ஒவ்வொருவருக்கும் உரிய கடமை பற்றிப் பேசுகிறது. நானும் என்றோ பிடித்ததை நினைவில் இருத்திச் சொல்லிவிட்டேன் பார்த்தீர்களா? 

என் கடன் பணி செய்து கிடப்பதே என்று அருளினார் அப்பர் பெருமான். 

இப்பொழுது கடன் பற்றிப் பேச, ஸ்டெல்லா என்னும் இளம் பெண்மணி வருகிறார் வாருங்கள். 

(ஸ்டெல்லா உரை மேசை அருகே) 

ஸ்டெல்லா 

நெறியாளருக்கும் அவைக்கும் வணக்கம். 

தமிழன்னைக்கு வணக்கம். 

தங்களுக்கு மருத்துவமும் தெரியும் இலக்கியமும் புரியும் என்று இன்று நான் புரிந்து கொண்டேன். கலங்கி நின்றேன். 

ரங்கநாயகி : ஏன் அம்மா? 

ஸ்டெல்லா : மருத்துவர் பொறியாளர் எல்லாம் பேச்சாளர் ஆகவும் எழுத்தாளர் ஆகவும் உருமாறிப் போனால் எங்கள் பாடு இனி திண்டாட்டம் தான் என்பதில் ஐயமில்லை அன்றோ? 

ரங்கநாயகி : எப்போதோ ஒரு முறை நாங்கள் போடும் வேடம் இது இதனால் உங்கள் நெஞ்சில் வேண்டாம் கலக்கம். 

ஸ்டெல்லா : நன்றி. 

கடன் 

கடன் என்பது நம்மொழியில் கடமையையும் குறிக்கும் என்பதைத் தங்கள் மேற்கோள் தெளிவாய்க் காட்டியது. 

இன்று கடன் என்றால் மக்கள் நெஞ்சில் நிற்பது வாங்கும் கடன் 

கைமாற்றாகக் கொடுத்த பணத்தை மீண்டும் கையில் பார்க்க முடிந்தால் அது உங்கள் அதிர்ஷ்டம் 

உட்கார்ந்து கொடுத்த கடனை எல்லாம் ஓடோடி அலைந்தாலும் மீட்க முடிந்ததில்லை. தாட்சண்யப் பட்டுக் கடன் கொடுத்தால் தனநாசம் என்று சரியாய்ச் சொன்னார்கள் பெரியவர்கள். 

தனநாசம் மட்டுமா? வாராக் கடனை நினைத்து நினைத்து வராத நோய்கள் தானே வந்து சேர்கின்றன? 

நெஞ்சைக் கல்லாக்கிக் கொள்ளுங்கள். கரைந்து போய் உருகிப் போய் கடன் கொடுத்து உங்கள் கைப் பணத்தையும் உடல் நலனையும் இழந்து நிற்காதீர்கள். 

நட்பே முறிந்தாலும் உறவே போனாலும் இழப்பு ஏதேனும் வந்தாலும் இருப்புத் தொகையைப் பிறரிடம் கொடுத்து விடாதீர்கள். 

முடை என்று நீங்கள் நிற்கும் போது மற்றவர் ஓடோடிப் போவார்கள் விரைந்து. 

பாடுபட்டுச் சேர்த்த பணத்தைப் பாதுகாத்துச் சேமித்திடுங்கள். கடன் என்று கொடுத்தால் உங்கள் கடமைகளை ஆற்ற முடியாமல் போகும் நிலை வந்து சேரும். 

இந்த உலகில் பிறர் பணத்தில் வண்டியை ஓடுவோர் பலர் உண்டு. யாரையும் ஏமாற்றும் வல்லமை படைத்த அவர்கள் உங்கள் அருகிலும் இருப்பர். 

இது வரை கொடுத்தவை வராமல் போனால் போகட்டும். இனிமேலாவது இரக்கம் கொண்டு எவருக்கும் கடன் தந்து நொந்து போகாதீர். 

மிக்க நன்றி. 

ரங்கநாயகி : பழகியவர்களிடம் அழுதுதொழுது கடன் வாங்கிக் காணாமல் போனவர்களை நானும் என் வாழ்வில் பார்த்திருக்கிறேன். பாடுபட்டுச் சம்பாதிக்கும் பணத்தை கடன் என்று வாரி இறைத்துக் கஷ்டப்படாதீர்கள் என்று பக்குவ வார்த்தை சொல்லிச் சென்ற இளம் மங்கை ஸ்டெல்லாவுக்கு நன்றி. 

தாய்ப்பால் புகட்டும் முறை பற்றிக் கூறுங்கள் என்று ஒருவர் சீட்டு அனுப்பியிருக்கிறார். நிகழ்ச்சிக்கு நடுவே இது போன்ற தகவல், இளந்தாய்மார்களுக்கு நன்மை பயக்கும நன்றாகவே. சீட்டுக்கவி மன்னிக்க… சீட்டு விண்ணப்பம் அனுப்பிய நண்பருக்கு நன்றி. கண் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தும் தகவலை இங்கு கூறுகிறேன். தாய்ப்பால் புகட்டும் தாய்மார்கள், பொத்தான் உள்ள உடை அணிவதே நல்லது. கொக்கி உள்ள உடையைத் தவிர்க்க வேண்டும். 

ஈன்று புறந்தந்த தாய்மார்களே! தாய்ப்பாலை உங்கள் குழந்தை அழுது குரல் கொடுக்கும் போது புகட்டுங்கள். தாய்ப்பாலில் தண்ணீர் அடக்கம். எனவே பச்சிளங் குழந்தைகளுக்குத் தனியாக தண்ணீர் தர வேண்டாம். 

இந்தத் தருணத்தில் இன்றைய புதிய தலைமுறை மகளிரிடம் ஒரு கோரிக்கையை முன் வைக்க விழைந்திடுகிறது என் மனம். ஆடவரிடம் நாம் காணும் உடலுக்கு ஊறு தரும் அனைத்துப் பழக்கங்களுக்கு சில இளம் பெண்களும் அடிமையாகி நிற்பதாக செவிகளில் விழுகிறது அனுதினமும். மூத்தவளாய் நான் கை கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன் அவற்றை உடனடியாக விட்டொழிக்க. 

தாய்மை விரும்பாத பெண் இல்லை அல்லவா? உங்கள் உயிரினுள் வளரும் மற்றொரு உயிர் நலமும் வலிமையும் பெற உங்களுக்குத் தேவை நல்லொழுக்கமும் நல்ல பழக்கமும் என்பதை என்றும் மறவாதீர். நன்றி. 

இப்பொழுது இளம் பெண்மணி ரோஷ்ணி கவிதை கூற வருகிறார். உத்தரப்பிரதேச மங்கை தமிழகம் வந்து சேர்ந்தார். தமிழ் கற்று நம்மிடையே பேசுகிறார். அதற்காக அவருக்கு உங்கள் கரவொலியைப் பரிசாகக் கொடுங்கள். 

(கரவொலி) 

வாருங்கள். ரோஷ்ணி. தொட்டில் என்னும் தலைப்பில் புனைந்த கவிதையைத் தாருங்கள் இந்த அவையில். ரோஷ்ணி என்றால் ஒளி என்று பொருள். ஒளிமிகுந்த முகம் கொண்ட ரோஷ்ணியின் வார்த்தைகளைச் செவி மடுப்போம் நாம். 

(ரோஷ்ணி உரை மேசை அருகே) 

ரோஷ்ணி 

என்னை வாரி அனைத்த தமிழன்னைக்கு வாழ்த்து கூறி, மருத்துவர் அம்மாவின் பரிவான வார்த்தைகளுக்கு நன்றி கூறி என் உரையைத் தொடங்குகிறேன். 

தொட்டில் 

அன்றொரு நாள் – மரத்தினில் தொட்டில் போல் ஊஞ்சலாடும் பறவைக் கூட்டொன்றில் பறவைக் குஞ்சு ஒன்று, 

காலைப் பொழுதில் தாய்ப் பறவையிடம் கெஞ்சியது என்னைப் பறக்க விடு அம்மா, என்னைப் பறக்க விடு. 

சின்னஞ்சிறு குஞ்சுக்குத் தாய்ப்பறவை பதில் உரைத்தது கண்மணியே! சற்றே உறங்கிடுவாய் வலிமை பெறட்டும் சிறகுகளிரண்டும்! அது வரையில் கண் வளர்வாய் வானம் முழுக்கப் பறக்கும் காலம் வரும் இன்று சற்றே கண்வளர்வாய் கண்மணியே! 

அது போன்றே மானிடக் குழவி ஒன்று தாயிடம் கேட்டு நின்றது சேய்ப் பறவை போல் நானும் உன்னைக் கேட்கிறேன் தாயே எழுந்து ஓடியாட என்னை விடு என்றே. சேய்ப் பறவை போல் உனக்கும் தெம்பு வர வேண்டும் அப்பா. சற்றே கண் வளர்வாய் காலம் வந்ததும் சிட்டு போல் பறந்தோடுவாய் என் செல்லமே என்றாள் அன்புத்தாய். 

ஆங்கிலக் கவிஞர் டென்னிசனின் புகழ் பெற்ற தொட்டில் பாட்டை என் பாணியில் சொல்லி வைத்தேன். உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். வாய்ப்புக்கு நன்றி. 

ரங்கநாயகி : நாம் எல்லாம் படித்த டென்னிசனின் தாலாட்டுப் பாடலை நம் மொழியில் நமக்குத் தந்த ரோஷ்ணிக்கு நன்றி. பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கில கவி லார்ட் டென்னிசன், எளிய வார்த்தைக் கவிதைகளால் இங்கிலாந்தைக் கட்டிப் போட்டவர். எளிய பதங்கள் என்ற பாணியைத் தான் நமது முண்டாசுக் கவிஞனும் முன்னெடுத்தான். பாரதி பற்றி ஏன் இப்போது பேசினேன் என்று எண்ணமிடுகிறீர்களா? இளம் பெண் பாரதி வருகிறார் நம்மிடையே. வாருங்கள் பாரதி சத்தம் என்ற தலைப்பு உங்களுக்கு. 

(பாரதி உரை மேசை அருகே) 

பாரதி 

என் தாய் என்னைக் காண்பதற்கு முன்பாக என்னைப் பார்த்தவர் நீர். ஆதலினால் நீரும் எனக்குத் தாயே. உம்மை வணங்கி,தமிழணங்கை வணங்கி என் கவிதையை அரங்கேற்றுகிறேன். 

சத்தம் இடுங்கள் அல்லது 
சத்தம் போடுங்கள். 
உங்கள் இருப்பை உலகுக்குக் 
காட்டிக் கொள்ள 
மக்கள் கூட்டத்தில் நீங்கள் காணாமல் போவதைத் 
தடுத்துக் கொள்ள — 
சத்தம் இடுங்கள் அல்லது 
சத்தம் போடுங்கள். 
நீங்கள் அமைதி விரும்பியாக 
இருக்கலாம். 
நீங்கள் மௌனத்தின் தாசராக 
இருக்கலாம். 
ஆனால், மெளனித்திருப்போர் 
மௌனமாகப் புரட்சி செய்தாலும் 
இந்த உலகம் எளிதில் புறக்கணிக்கும். 
துளி விளக்காயினும் தானே தூண்டிக் கொண்டு 
தானே சுடர் விட்டு ஒளிர வேண்டும் என்பது
இன்றைய உலகின் சட்டம் 

வேலைத் தளங்களில், 
குடும்ப வாழ்வில் வெற்றிகளைப் பெற 
சத்தம் இடுங்கள் அல்லது 
சத்தம் போடுங்கள். 

வெற்றிகரமாகச் சத்தம் 
இடுவோரையே 
சாதனையாளர் என்று 
கொண்டாடும் இந்த உலகம். 

அரிய வேலைகளையும்
முடியாத வேலைகளையும்
எளிதாய்ச் செய்து விட்டு
அமைதியாய் இருப்பது 
உங்கள் அமைதியைக்
குலைத்து விடும். 
நீங்கள் உங்களை 
உலகுக்குக் காட்டிக் கொள்ள
சத்தம் இடுங்கள் அல்லது 
சத்தம் போடுங்கள். 

ரங்கநாயகி : செய்ததைச் சொல்லிக் காட்டக் கூடாது என்பது தவறுதான் அல்லவா? நமது அரிய செயல்கள், அரும்பணிகளைப் பணியிடத்திலும் குடும்பத்திலும் சமுதாயத்திலும் பிறர் புரிந்து கொள்ளாவிட்டால் எடுத்துச் சொல்லிப் புரியவைத்துத் தான ஆக வேண்டும். அதைத்தான் இந்த இளம் கவிதைக்காரி தமது கவிதை மொழியில் சொல்லிச் சென்றார். அமைதியாய் இருந்தால் மனதில் அமைதியின்மையே மிஞ்சும் என்பது சத்திய வார்த்தை. நன்றி இளங்குயில் பாரதியே. 

இப்பொழுது இளம் மயில் வத்சலா இனிய கவிதை செப்புவார் “வேடம்” என்னும் தலைப்பில். சொல்லுங்கள் மேடம். 

(வத்சலா உரை மேசை அருகே) 

வத்சலா 

தமிழணங்கின் சீரிளமையைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்திய பெரியவர்களைப் போல் நானும் வாழ்த்தி எளியாளின் உரையைத் தொடங்குகிறேன். 

வேடம் 

அவர்கள் கபட வேடதாரிகள் என்றறியப் படாமல் நேர்மையாளர் என்ற போர்வையில் 

போர்வையில் உலா வருவார்கள். திருவள்ளுவர் சொன்னாரே மக்களே போல்வர் கயவர் என்று, அது போலவே அவர்களுக்குப் பின்னாளில் உவமை சொல்ல, கவிஞர்கள் அலைய வேண்டாம் என்ற பெரு நோக்கில்தான் இயற்கையன்னை கள்ளிச் செடிகளைப் படைத்தாளோ? 

அவர்கள் – 

தங்கள் முகத்தில் தேனொழுக 

உங்களிடம் பேசியபடியே
உங்கள் முதுகுக்குப் பின்னால்
கொட்டுவதற்குத் தேனீக்களை
அனுப்பி வைப்பவர்கள். 

அவர்கள் – 
நம்மை நோக்கிச் சிரித்தவாறே 
நமக்குச் சவப்பெட்டி 
செய்து விடுகிற அசாத்தியத்
திறமையாளர்கள் 

அவர்கள் – 
இறைவனைப் போலவே 
எல்லா இடங்களிலும் 
நீக்கமற நிறைந்திருப்பவர்கள். 

அவர்கள் –
நேர்மையாளர்கள் என்ற
போர்வையில் உலா 
வரும் கபட வேடதாரிகள். 

அவர்களுடைய போலிப்
புன்னகைகளை நிஜமென
நம்பி ஏமாந்து 
இருந்து விடாதீர்கள் என்றும் 

பிறகு உங்களை நோக்கி 
மலரும் கள்ளமற்ற 
புன்னகைப் பூக்களிலும் 
நாகம் இருப்பதாகச் சந்தேகித்து 
அவற்றைப் புறந்தள்ளி விடுவீர்கள். 

அவர்கள் –
அன்றாடம் நமது
பணிக் களங்களிலும் 
பாதைகளிலும் எதிரே வருபவர்கள். 
அவர்களது நடிப்பாற்றலைக் 
கண்டு ரசியுங்கள். 
அரிதாரம் போடாத ஒப்பனை 

இல்லாத வெளிப்பாட்டை
கண்டு களியுங்கள். 

நிஜமென நம்பி விடாதீர்கள்
வெகுளிப் பெண்ணாக.
அவர்கள் உங்கள் 
நிம்மதிக்கும் தங்கள் 
நாக்காலேயே தீ வைத்து 
விடுவார்கள். 

எச்சரிக்கையாய் இருந்தால் 
மட்டுமே அந்தத் தீ விபத்திலிருந்து 
உங்களை நீங்கள் காத்துக் கொள்ள 
முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
சதா சர்வகாலமும் 

வாய்ப்புக்கு நன்றி. 

ரங்கநாயகி : இறைவனைப் போலவே கபட வேடதாரிகள் எங்கும் வியாபித்து இருக்கிறார்கள். உஷாராய் இருந்தால் பிழைப்போம் என்றார் வத்சலா. வத்சலாவின் எச்சரிக்கை ஒலியை உணர்ந்து நடப்பவர்களுக்கு நல்லது நடக்கும். கோட்டை விட்டவர்கள் கலங்க வேண்டாம். இனிமேலாவது எச்சரிக்கையாக இருங்கள் சக மனிதர்களிடம்.நிகழ்ச்சி நிறைவடையும் தருணம்… 

மகப்பேறு மருத்துவரை மகளிர் கவியரங்கை நெறிப்படுத்தி நடத்தச் செய்த நின்றவூர் நித்திலம் அவர்களுக்கு நன்றி. 

உயிருக்குள் உயிர் வளர்க்கும் உன்னதப் பணியை பெண்களுக்குத்தான் அளித்தான் இறைவன். அந்தப் பெண்மணிகளின் பிஞ்சுகள் உலகைக் காண உறுதுணை புரியும் நான், இங்கே பெண்மணிகளின் கவி மணிகள் ஒலிக்கவும் உறுதுணை புரிந்தேன் என்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. 

இளம் பெண்மணிகளின் பக்குவப் பேச்சைக் கேட்டு இன்புற்ற போது வருங்காலத்தைப் பற்றிய கவலையை விட்டொழித்தேன் நான். இவர்களால் வளர்க்கப்படும் தலைமுறை சாதனைகளைப் படைக்கும் என்பதில் ஐயமில்லை. 

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும் அமைதியுடன் கண்டு களித்த நேயர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். 

இறைவனுக்கு விருப்பமிருந்தால் மற்றொரு நிகழ்வில் சந்தித்து மகிழ்வோம் நாம் எல்லாம். 

மிக்க நன்றி. வாழ்க வளமுடன். 

வாழிய செந்தமிழ். வாழ்க நற்றமிழர் 
வாழிய பாரத மணித் திருநாடு. 
யாதும் ஊரே யாவரும் கேளிர் 

அமைதித் தாயின் மடியில் தவழும் குழந்தையாய் இருக்கட்டும் இந்நிலவுலகு. 

நன்றி. வணக்கம். 

நான்காம் காட்சி 

(பின்னணியில் அடுக்கு மாடி வீடுகளின் மொட்டைமாடி போன்ற தோற்றம். அங்கு ஷாமியானா பந்தல் போன்ற அமைப்பு. நாலைந்து நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. மலர்ந்த முகத்துடன் கூடிய ஓர் இளம் பெண், கையில் மைக் உடன் நின்று கொண்டிருக்கிறாள். நாற்காலிகளில் நடுத்தர வயது மற்றும் முதிய வயது உடைய ஆடவர்கள் வந்து அமர்கின்றனர். இளம்பெண் பேசத் தொடங்குகிறாள்.) 

இளம்பெண் : அனைவருக்கும் வணக்கம். நம்முடைய தென்றல் அடுக்கக் குடியிருப்பில் இந்த இனிய மாலைப் பொழுதில் இங்கு வசிப்பவர்கள் அனைவரையும் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பதில் மலர் விழியாகிய நான் மகிழ்ச்சி கொள்கிறேன். யாவரும் கேளிர் என்று அன்றொரு நாள் சங்கத் தமிழ்ப் பாட்டன் பூங்குன்றனார் சொன்னதை நம்முடைய அடுக்ககத்தில் நாம் பின்பற்றி வருகிறோம் என்றால் மிகை ஆகாது. உண்மை அதுவே. 

பேராசிரியர் ராஜ மாணிக்கம் அவர்களின் மணிவிழா அண்மையில் எளிதாக நடந்து முடிந்தது. அதன் தொடர்ச்சியாக, இன்று மாலைக் கவியரங்கம் நடைபெறுகிறது. இங்கு உறைபவர்களில் சிலர், தங்கள் கவிதைகளை இங்கே மடைதிறந்த வெள்ளமென அளிக்க உள்ளார்கள். 

சிறந்த கவிதைக்குப் பரிசு அளிக்க, இங்கே குழுவாக ராஜகோபாலன் அவர்கள், சோமசுந்தரம் அவர்கள், ரகுராமன் அவர்கள் ஆகியோர் மணிவிழா நாயகர் உடன் அமர்ந்திருக்கின்றனர். அடுக்கக வாசிகளின் அமுதத் தமிழ்ப் பிரவாகம் பருகத் தயார் ஆகுங்கள். 

முதலில் இளம் மங்கை மணிமேகலை வருகிறார். இவர் யாரிடமும் பேசி நான் பார்த்ததில்லை. தாம் உண்டு வீடு உண்டு அலுவலகம் உண்டு என்று இருக்கும் மணிமேகலை யைத்தான் அனைவருக்கும் தெரியும். கவிதை இயற்றவும் தமக்குத் தெரியும் என்று இப்பொழுது நமக்குத் தெரிவிக்கப் போகிறார். வாருங்கள் மணி… 

(மலர்விழி மேடையின் ஓரத்தில் நிற்கிறாள். மணிமேகலை, மேடையின் இடப்பக்கத்திலிருந்து வந்து கையில் மைக்கை வைத்துக் கொண்டு பேசுகிறாள்.) 

மணிமேகலை : அனைவருக்கும் வணக்கம். மணிவிழா நாயகர் ராஜமாணிக்கம் அவர்களின் ஆசியை வேண்டி நிற்கும் இளையவர்கள் நாங்கள். என் கவிதையை வசிப்பிடத்தில் உடன் வசிக்கும் உங்கள் அனைவரின் முன்னிலையில் அரங்கேற்றுவதில் பெருமையடைகிறேன். என் தாய்க்கும் தங்கைக்கும் பெருமை பிடிபடவில்லை. சரி கவிதைக்கு வருகிறேன். கவிதையின் தலைப்பு : ‘சொன்னபடி கேளு’… 

உங்களை ஒருமையில் அழைக்கவில்லை. என் மனதை அழைக்கிறேன். 

சொன்னதைக் கேளாய் மனமே 
உன் துன்பம் எல்லாம் தீரும் தினமே
உன்னதமாய் உலகினில் வாழ்ந்திடவே 
சொன்னதைக் கேளாய் மனமே 
உன் துன்பம் எல்லாம் தீரும் தினமே 
வம்பு என்பது பாவமே புரளி என்பதும்
பாதகமே கொம்பு முளைத்த ஜீவனாய் 
வாழ்வதற்கு சமானமே. 

பாம்பைக் கண்டு அஞ்சுவது போல்
வம்பைப் பேச அஞ்சுவதே நல்லது
சாம்பலுக்கு ஏங்கும் கர்ப்பிணி போல்
வம்புக்கு அலைந்தால் வருமே கெட்டது 
கேள்வி மேல் கேள்வி கேட்டு வாயைக் 
கிளறுவது வம்பர் பழக்கம் இடம் தந்தால் 
வாள் வீச்சாய்ப் போய் நிற்கும் 
என்றும் வேண்டாம் இந்த விபரீதம் 

சொன்னதைக் கேளாய் மனமே 
வம்பைத் தவிர்த்தால் அனுதினமும்
ஆகும் பொன்னாளே. 

நன்றி வணக்கம். 

(கரவொலி) 

(மணிமேகலை மேடையின் வலப்பக்கமாகச் செல்கிறாள். மலர்விழி முன்னால் வருகிறாள். கையில் மைக் உடன் பேசுகிறாள்) 

மலர்விழி : நன்றி. மணி. இவர் யாருடனும் அதிகமாக உரையாடுவதைத் தவிர்ப்பதன் காரணம் இப்பொழுது நமக்குப் புரிகிறது. வம்புக்குப் பயந்து அக்கம் பக்கத்தவர் நட்பைத் தவிர்ப்பது நல்லதல்ல என்பதே இந்தச் சிறியவளின் எண்ணம். வம்பு, புரளி,புரட்டு தவிர்க்கப்பட வேண்டியவை என்கிற பக்குவ வார்த்தைகளைக் கவிதையில் வடித்த மணிமேகலைக்கு நன்றி. 

இப்பொழுது மீண்டும் மணி… இவர் ஆடவர்… கொங்கு மணி வருகிறார்.) 

(கொங்கு மணி மேடையின் இடப்பக்கத்திலிருந்து வருகிறான். மலர்விழி பின்னால் போய் நிற்கிறாள்) 

கொங்குமணி : அனைவருக்கும் வணக்கம். 

அக்கம்பக்கத்தில் உடன் வசிப்பவர்களைக் கவிஞர்களாக்கி அவர்களது கவிதைகளை அரங்கேற்றக் களம் அமைத்துத் தந்திருக்கும் ராஜமாணிக்கம் ஐயா அவர்களுக்கு நன்றி. மலர்களைப் பார்த்தால் நமக்கு எல்லாம் மகிழ்ச்சி. மலர்ந்த முகத்துடன் நிகழ்ச்சியை நகர்த்திக் கொண்டிருக்கும் மலர்விழிக்கு நன்றி. நேரம் என்கிற தலைப்பிலான என்னுடைய கவிதை. 

பாவம் தான் பாவம் தான் கிளியே
நேரத்தை வீணாக்குவது 
பாவம் தான் பாவம் தான் கிளியே
சாபம் தான் சாபம் தான் கிளியே 
நேரத்தின் அருமை அறியாது போனால்
சாபம் தான் சாபம் தான் கிளியே 

மோகம் தான் மோகம் தான் கிளியே
பொழுதை வீணாய்க் கரைப்பதில்
மோகம்தான் மோகம் தான் கிளியே
வேகம் தான் வேகம் தான் கிளியே
காலம் நகர்வதில் என்றும் 
வேகம் தான் வேகம் தான் கிளியே 

மாற்றம் தான் மாற்றம் தான் கிளியே 
நேரத்தின் அருமை உணர்ந்தால் வாழ்வில் 
நல்ல மாற்றம் தான் நல்ல மாற்றம் தான் 
கிளியே என்றும் ஏற்றம் தான் ஏற்றம் தான் கிளியே
ஏமாற்றம் வராது கிளியே… 

நன்றி வணக்கம். 

(கொங்குமணி மேடையின் இடப்பக்கமாகச் செல்கிறான். மலர்விழி முன்னால் வருகிறாள்) 

மலர்விழி : பாவம் என்று தொடங்கினாலும் பாட்டாகவே பாடிச் சென்றார் மணி. பொறுப்பு மிக்க இளைஞர் மணி, நேரத்தின் அருமை அறிந்தால் ஏற்றம் அறியாவிட்டால் ஏமாற்றம் என்று எச்சரித்தார். அவருக்கு நன்றி. இப்பொழுது எடுப்பான உடையணிந்து இளம் மங்கை வீணா வருகிறார்.) 

(மேடையின் வலப் பக்கத்திலிருந்து வீணா வந்து நிற்கிறாள். மைக்கை மலர்விழியிடமிருந்து பெற்றுக் கொள்கிறாள்). 

வீணா : வணக்கம். தாம்பத்யம் என்கிற தலைப்பிலான கவிதை… (சில நிமிடங்கள் மெளனம்) 

(மலர்விழி : வெட்கமோ தயக்கமோ வேண்டாம் வீணா அரங்கேற்று உன் கவிதையை. அனைவரும் அறியட்டும் உன் உள்ளக்கிடக்கையை.) 

வீணா : Read between the lines என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே… 

அது போல்… மலர்விழி என் கவிதையிலிருந்து ஏதோ அறிய முற்படுகிறாள் போலும். சரி தங்கள் பொறுமையைச் சோதிக்கவில்லை. இதோ… 

தாம்பத்யம்…
கனவுகளோடும்
தங்கைகளோடும் 
குதிபோட்டு மகிழ்ச்சி 
ஜதியுடன் வளர்ந்த 
பெரிய வார்ப்படமான 
குழந்தை அவள்… 
சின்னஞ்சிறு 
படிகளில் 
சின்னஞ்சிறு 
பதவிகளில் உழைத்துக் 
களைத்து மீண்டும் 
உழைத்து விழுந்து 
எழுந்து முன்னேறிக் 
கொண்டிருக்கும் அவன்… 

இருவருக்கும் திருமணம் 
மங்கல முடிச்சு இட்டது. 
பெரிய குழந்தையாக இருந்த
அவள் – 
அவனது அன்றாட 
எரிச்சல்களைத் துடைத்து
அவனைப் புதிதாக்கும் தாயானாள்… 
ஆம். அவளது முதல்
குழந்தையாக அவளுடைய
அன்பில் அவன் அன்றாடம்
நீந்திக் களித்தான். 

இல்லறத் தொழிற்சாலைகள் 
தங்கள் உற்பத்தியைக் காட்டாமல்
இருந்ததில்லை அவர்களுக்கும் 
குழந்தைச் செல்வங்கள் கிட்டின. 

குழந்தைகளைப் பராமரிப்பதிலும் 
அவர்களிடம் அன்பைப் 
பொழிவதிலும் இருவரும்
போட்டியிட்டனர். 

அவர்களுடைய வாழ்வு பற்றிய
கனவுகளை நனவாக்குவதிலும்
இருவரும் போட்டியிட்டனர். 

காலதேவன், 
பல ஆண்டுச் சாக்குகளிலிருந்து
பல மாதத் தாட்களைக் 
கொட்டிய வண்ணம் இருந்தான். 

மழலைப் பிள்ளைகள் 
மானிடர் ஆனார்கள். 
அவர்கள், தங்களைப் பற்றி 
தனியாகச் சிந்தித்தார்கள் 
தனியாகத் தேடினார்கள் 
தனித் தனியாய் ஆனார்கள். 

அவர்கள், தங்கள் 
பெற்றோரைப் பழைய கால 
நண்பராய்க் கட்டாயப் 
பாசத்தில் எப்போதேனும் 
பார்த்துச் சென்றார்கள்… 
அவள் 
இப்போது மீண்டும் 
தன்னுடைய முதல் குழந்தையைக் கண்டெடுக்கிறாள்… 
அவனுடைய வெண்ணிறத் 
தலையைக் காதலுடன் 
வருடுகிறாள். 

மிக்க நன்றி – 

(வீணா, புன்னகைத்தபடியே மேடையின் வலப்பக்கம் நோக்கிச் சென்று மறைகிறாள்) 

(மலர்விழி முன்னால் வருகிறாள். மைக்கைப் பிடித்தபடியே பேசுகிறாள். 

மலர்விழி : நூற்றுக்கிழவியின் மனதால் தாம் எழுதிய காதல் கவிதையை இங்கு உரைத்துச் சென்றார். இளம்பெண் வீணா. தாம்பத்யத்தின் பெருமையை உணர்த்தினார். இறுதி வரை உடன் வருபவர் கணவன் மட்டுமே என்றார். அவருக்கு அப்படிப்பட்ட நல்ல இணை விரைவில் கிடைக்க, பெரியவர்களின் ஆசிகள் உறுதுணை புரியட்டும். சுபநிகழ்வுகள் விரைவில் நடக்க வேண்டும் என்று பெரியோர் கூறுவர் அல்லவா? வீணாவின் பெற்றோர் இதை எல்லாம் புரிந்து கொண்டால் சரி. இப்பொழுது தென்றல் அடுக்ககத்தின் ஆடவர்களில் அழகர் வருகிறார். இவருக்கு இரவுப் பணி. இரவினில் வேலை. பகலினில் தூக்கம். தூங்குபவரின் வீட்டுக் கதவை அவசரத்துக்குத் தட்டினால், முகம் சுளிக்காமல் உதவியை அக்கம்பக்கத்தவருக்கு உடனடியாகச் செய்வார். அப்படிப்பட்ட பண்பாளர்… (கரவொலி) 

(மேடையின் இடப்பக்கத்திலிருந்து நடுத்தர வயது கொண்ட வாட்டசாட்டமான ஆடவர், சஃபாரி உடை அணிந்து வருகிறார். அவர்தான் அழகர்) 

அழகர் : அனைவருக்கும் வணக்கம். ஐயா ராஜ மாணிக்கத்தின் மணி விழா வைபவத்தின் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கவிதை பாட வாய்ப்பு கிட்டியதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையோடு வாழ்தல் வேண்டும். இயன்றதைச் செய்கிறேன் அருகில் வசிப்பவர்களுக்கு. அவையில் மறக்காமல் எடுத்துரைத்த சகோதரி மலர்விழிக்கு நன்றி. 

நிகழ்காலம் என்னும் தலைப்பிலான அடியேனுடைய கவிதை… 

நிகழ்காலத்தில் வாழ்… 
இறந்த காலம் இறந்து விட்ட
காலமாயினும் கசப்பு அனுபவங்கள்,
பசப்பு மனிதர்கள் 
உங்களுள் ஏற்படுத்திய 
ரணங்கள் ஆறுவதில்லை 
வள்ளுவப் பெருந்தகை
சொன்னது போல். இருப்பினும், 
இறந்த கால எண்ணங்களான
பெரும் பாரத்தைக் கீழே
இறக்கி விட்டு 
நிகழ்காலத்திற்கு வாழ வாருங்கள். 

எதிர்காலத்திற்காகத் திட்டமிடுங்கள், 
கனவு காணுங்கள். 
எதிர் காலத்தை எதிர்பாருங்கள். 

ஆனால், எதிர்காலச் 
சுமையில் வருங்காலம் பற்றிய
அச்ச உணர்வில் 
நிகழ் காலத்தைக் 
கோட்டை விடாதீர்கள். 

கையில் உள்ள காலம் 
அது நிகழ்காலம் 
இறந்த காலத்தை எண்ணுவதால் 
வராது இலாபம் 
வருங்காலத்தையே நினைத்தால் 
வீணாகும் நிகழ்காலம் 
நிகழ்காலத்தைப் பயனுற 
செலவழித்தால் வருங்காலம் சிறக்கும் 

நிகழ்காலம் உங்களுடன் 
உங்கள் அருகிலேயேதான் 
இருக்கிறது. 
ஆட்டைத் தோளில் வைத்துத் 
தேடியவனைப் போல் 

எதையோ தேடி
அலைந்து மறுகி மாய்ந்து
நிகழ்காலத்தை ஏன்
நிற்க வைத்துக் கொலை
செய்கிறீர்கள்? 

வாழ்வின் பக்கங்களில்
இறந்த காலம் இனிக்கவும்
எதிர்காலத்தில் இமாலய 
சாதனைகள் படைக்கவும் 
நிகழ்காலத்திற்கு வாருங்கள். 
நிகழ்காலத்தில் வாழ வாருங்கள். 

மிக்க நன்றி. வணக்கம். 

(அழகர், மேடையின் வலப்பக்கமாகச் செல்கிறார்)

(மலர்விழி முன்னால் வருகிறாள்) 

மலர்விழி : அழகான கவிதை சொன்ன அழகருக்கு நன்றி. நிகழ்காலம் கையில் உள்ள காலம் அதைப் பயன்படுத்தாமல் விடாதீர்கள் என்று மணி அவர்களைப் போலவே நேரத்தின் அருமையை எடுத்துரைத்தார். அண்ணன் அவர்கள், விரைவில் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் இணைய வேண்டும் என்கிற கோரிக்கையை உடன்பிறவாச் சகோதரி என்கிற உரிமையில் அவர் முன் வைக்கிறேன். இப்பொழுது சுந்தரம் அவர்கள் வருகிறார். 

(மேடையின் வலப்பக்கத்திலிருந்து வேட்டி சட்டை அணிந்து ஐம்பது வயது மதிக்கத் தக்க ஒல்லியானவர் வருகிறார். அவர்தான் சுந்தரம்) 

சுந்தரம் : உறைவிடத்தில் உடன் வசிப்பவர்களின் கவிதைகளை ஆர்வமுடன் கேட்டு மகிழும் தங்கள் அனைவருக்கும் வணக்கமும் நன்றிகளும். இருபது ஆண்டுகளுக்கு முன் அடியேன் எழுதி வைத்த கவிதை இன்றும் பொருந்துகிறது வாசிக்கிறேன். செவி மடுங்கள். நாகரிகப் பூச்சு 

மனிதர்கள் எல்லாம் கற்றனர்.
அகில உலகத்தையும்
வியப்புலகம் ஆக்கினர். 

ஆனால், அன்பையும் 
விட்டுக் கொடுத்தலையும் 
முழுவதுமாய்க் கற்கவில்லை.
அரைகுறையாய்க் கற்றும்
அதன்படி ஒழுகவில்லை. 

கல்வி கற்றனர். 
கற்றுத் தெளிந்தபின் 
ஒற்றுமை என்பதை மறந்தனர். 

படிப்பைக் கொண்டு 
பணம் பண்ணவே 
செய்தனர் எப்பொழுதும் 

படித்தவன் சூதும் வாதும் 
செய்தால் ஐயோ என்று
போவான் என்று 
பாரதி கூறியது 
பலிக்காமல் போய் விட்டதே. 

மனிதர்கள் கற்காத 
வித்தை இல்லை. 
புரியாத விந்தை இல்லை. 

எல்லாம் கற்றபின் 
மனிதம் மறந்தனர் 
இவர்கள் வசதிகள் துறந்து 
நாகரிகம் விலக்கி 
மீண்டும் ஆதிகாலத்து 
மனிதர்களாகி விடலாம். 
ஆமாம் – அப்போதும் 
தங்களுக்குள் சண்டை – 
இப்போதும் தங்களுக்குள் சண்டை – 
பின் எதற்கு இந்த 
நாகரிகப் பூச்சு? 

மிக்க நன்றி. 

(சுந்தரம் மேடையின் இடப்பக்கம் நோக்கிச் செல்கிறார்) மலர்விழி : சிந்திக்க வைக்கும் கேள்வி. நன்றி சுந்தரம் மாமா. இன்னும் சில பேருக்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். மீண்டும் இதுபோன்ற கவியரங்கத்தை இந்த மொட்டை மாடியில் விரைவில் அரங்கேற்றுவோம். விழா நாயகரின் மனைவியாருக்கு உடல் சுகவீனம் என்று தகவல் வந்துள்ளதால் அவர் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்வார். நன்றி. வணக்கம். 

(பேராசிரியர் ராஜமாணிக்கம், கையில் மைக்கை வைத்துக் கொண்டு நின்றபடியே பேசுகிறார்.) 

ராஜமாணிக்கம் : ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கவிஞனும் எழுத்தாளனும் ஒளிந்துள்ளான் என்பதை இங்கு கவிதை உரைத்தவர்கள் நிருபித்ததை நாம் கண்டோம். ராஜாஜி அவர்களிடம் ஓர் எழுத்தாளர் உரையாடியபோது என்ன செய்கிறீர் என்று கேட்டராம். எமக்குத் தொழில் எழுத்து என்று அவர் கம்பீரமாய்க் குரல் கொடுத்தாராம். அப்போது மூதறிஞர், சம்பாதிக்க என்ன செய்கிறீர்? என்று கேட்டாராம். எழுத்து எழுதுகிற அனைவரையும் சிகரத்தில் வைக்காது என்பதை அறிந்தே பலரும் பேனாவை மூடி வைத்து விடுகிறார்கள். ஆனால், சிலருக்கு அந்த நெருப்பு உள்ளுக்குள் கனன்று கொண்டே இருக்கிறது. 

இதுபோன்ற தருணங்களில் வெளிப்படுகிறது. பங்கேற்றவர் களுக்கும் பார்வையாளர்களுக்கும் என்னுடைய நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். சுந்தரம் கூறிய நாகரிகப் பூச்சு கவிதையைப் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். படித்தவன் பாவம் செய்தால் ஐயோ என்று போவான் என்னும் பாரதியின் வாக்கு பலிக்கவில்லையே என்றார். கவி வாக்கு பலிக்காமல் போகா உறுதியாகப் பலிக்கும் என்று நான் அறுதியிட்டுக் கூறுகிறேன். மற்றவர்களுக்கும் பரிசுகள் உண்டு. பரிசுகளை ராஜகோபாலன் தருவார். உடனே செல்ல வேண்டியிருப்பதால் விடை பெறுகிறேன். மன்னித்தருள்க. வாழ்க வளமுடன். இறைவன் தங்கள் அனைவருக்கும் எல்லா பேறுகளையும் வழங்கட்டும். மிக்க நன்றி. (கை கூப்புகிறார்) 

(திரை) 

ஐந்தாம் காட்சி 

(பின்னணியில் மருத்துவரின் வீட்டு வரவேற்பறை போன்ற தோற்றம். டாக்டர் ரங்கநாயகியின் படம், கடிகாரம், மருத்துவம் சார்ந்த போஸ்டர்கள் காணப்படுகின்றன. டாக்டர் ரங்கநாயகி மேடையின் இடப் பக்கத்திலிருந்து வந்து பெரிய ஆசனத்தில் அமர்கிறார். மேடையின் வலப்பக்கத்திலிருந்து இளம்பெண் பாரதி வருகிறாள்) 

ரங்கநாயகி : வாம்மா, பாரதி, உட்காரு, சௌக்கியமா? உடம்புக்கு என்ன? 

பாரதி : வணக்கம் மேம். உடம்புக்கு ஒண்ணும் இல்லை. உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். 

ரங்கநாயகி : பார்த்தியா… சிநேகத்தோட பார்க்க வர்றவங்களையும் பேஷன்ட் ஆகப் பார்க்கிறோம் நாங்க. சாரி பழக்க தோஷம். 

பாரதி : பராவால்லே மேம். இதுல என்ன இருக்கு? உடல் சுகவீனம்னா ஒங்ககிட்ட தானே நாங்க வரப்போறோம். ஒங்க பரிவுக் கரம் எங்க நோயை விரட்டிடுமே…. எங்க பள்ளிக் கூடத்துல ஆண்டு விழா… போன வருஷம் நீங்கதானே ஆண்டு விழா ஃபங்க்ஷனுக்கு ஐடியா கொடுத்தீங்க. இலக்கியம் காட்டும் மாதர் குல மாணிக்கங்கள்… ன்னு சீதா தேவி, பாஞ்சாலி, கண்ணகி, மணிமேகலை, அங்கவை, சங்கவை, கவுந்தியடிகள்… என்று பசங்களைத் தயார் பண்ணி அசத்திட்டோம். அந்த கான்செப்ட் வின்னிங் ஐடியா… அதனால் தான்… ரங்கநாயகி : இந்த வருஷமும் என்கிட்ட யோசனை கேட்க வந்தீங்களா…? 

(மேடையின் இடப்பக்கத்திலிருந்து பதின்பருவச் சிறுவன் ஒருவன் வருகிறான்.) 

ரங்கநாயகி : இதோ… என் பேரன் வரான் பாரு. அவன் சொல்லுவான். என்ன பேரன்னா வாண்டுப் பையன்னு நெனச்சீங்களா 

இவன் ப்ளஸ் டூ படிக்கிறான். சூட்டிகையான பையன்.. இவன் ஐடியா தருவான். 

ராஜேஷ்… ஆண்டு விழா ஃபங்க்ஷனுக்கு ஒங்க ஃகூல்ல ஒரு ஐடியா சொன்னியே அவங்க வேணாம்னு சொல்லிட்டீங்கான்னியே. அதை சொல்லு இவங்க கிட்ட. 

ராஜேஷ் : வணக்கம் மேம். 

பாரதி : வணக்கம்பா 

ராஜேஷ் : ரங்கம்மா… நிராகரிக்கப்பட்டதை சொல்லச் சொல்றீங்க… 

பாரதி : பராவல்ல சொல்லுப்பா… 

ரங்கநாயகி : இவன் பாரதியார் பைத்தியம் 

ராஜேஷ் : ரங்கம்மா… 

ரங்கநாயகி : சாரி. பாரதியார் மேல ஈடுபாடு ஜாதி… 

பாரதி : உங்க பேரனாச்சே… 

ரங்கநாயகி : பாரதியாரை வெச்சுத்தான் இவனோட கான்செப்ட்.. முறைக்காதே… நீயே சொல்லு… 

ராஜேஷ் : மேம். பாரதியார் கதைகளல்ல வர்ற கேரக்டர் நேர வந்து பேசறா மாதிரி… பாரதியாரின் பாத்திரப் படைப்புகள்… மேடையில் வந்து நேரடியா பேசுவாங்க. மாணவர்கள், பாரதியார் கவிதைகள், கதைகள்ல அவர் காட்டற பாத்திரப் படைப்புகளைப் பத்தி படிச்சு உள் வாங்கி அவங்கள மாதிரி மேடையில் வரணும். 

பாரதி : கிரேட் தம்பி. நல்லா இருக்கே… 

ராஜேஷ் : நீங்க எழுதிக் கொடுக்காமல் அவங்களே எழுதினா நல்லா இருக்கும் ஆன்ட்டி. சாரி… அதிகமா பேசிட்டேன். 

பாரதி : நீ சரியாத்தான் சொல்லி இருக்கே. வெரிகுட் மேம். ஒங்க 

பேரன் ஓஹோன்னு வருவான். வாழ்த்துக்கள்..ப்பா.. பாட்டி முகத்தில பெருமையப் பாரு… சரி வரேன் மேம். ஒங்க நேரத்தை வீணாக்க விரும்பலை.. நன்றி ராஜேஷ்… ஆசிகள்.. நீ சொன்ன கான்செப்ட்டையே பயன்படுத்திக்கறேன். 

ராஜேஷ் : நன்றி ஆன்ட்டி… 

ரங்கநாயகி : வாங்க பாரதி. வாழ்த்துக்கள் 

(விளக்குகள் அணைகின்றன) 

(காட்சி மாற்றம்) 

(விளக்குகள் மீண்டும் ஒளிர்கின்றன. பின்னணியில் காந்தியடிகள் மேல் நிலைப்பள்ளி ஆண்டுவிழா என்கிற பதாகை காணப்படுகிறது. ஆசிரியை பாரதி, மேடையின் வலப்பக்கத்திலிருந்து வருகிறாள். கையில் மைக்கை வைத்துக் கொண்டு நின்றபடியே பேசுகிறாள்) 

(குறிப்பு : மேற்கோள் குறிகளில் குறிப்பிடப்படுபவை பாரதியாரின் கவிதைகள்) 

ஆசிரியை பாரதி : அனைவருக்கும் வணக்கம் 

ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக என்னுடைய மாணாக்கர்கள் வழங்கும் மாறுபட்ட கவியரங்கம் இதோ உங்களுக்காக… பாரதியாரின் கதை மாந்தர்களாக என்னுடைய மாணாக்கர்கள் தங்கள் முன்னால். முதலில் சந்தோஷ்… குடுகுடுப்பைக்காரர் ஆக வருகிறார். 

சந்தோஷ் : (குடுகுடுப்பைக்காரன் வேடத்தில்) 

பாரதியின் படைப்புகளில் இடம் பெறும் வேதபுரம் அங்கே நான் நிகழ்த்தினேன் அடியேனுடைய நகர்வலம். ஒரு புதுமாதிரி குடுகுடுப்பைக்காரன் என்று என்னைப் போல் முண்டாசு கட்டிய கவிஞர் அடியேனைப் பற்றிக் கூறுகிறார். 

நான் சொன்ன சொற்கள் உங்களுக்கும் பிடிக்கும் இன்றும். உடுக்கையடித்தபடி நான் சொன்ன பாடல் நானிலம் போற்றும் பாடல். 

“குடுகுடுகுடுகுடு குடுகுடு குடுகுடு 
நல்ல காலம் வருகுது சண்டைகள் தொலையுது
வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு
தரித்திரம் போகுது செல்வம் வருகுது
படிப்பு வளருது பாவம் தொலையுது 
படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால் 
போவான் போவான் ஐயோ வென்று போவான்.” 

நான் உலகம் எல்லாம் சுற்றியவன். வாழ்வதற்குரிய செல்வம் எல்லாம் சேர்த்து வைத்தவன். 

ஜனங்களுக்கு நல்லது சொல்லவே
நான் உலா வருகிறேன். இங்கே
உலா வருகிறேன் ஊர் சுற்றி. 

நல்ல சேதிகளைச் சொல்லிச் 
சென்றால் நல்லது நடக்கும் தேதி வரும்.

“சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது.
தொப்பை சுருங்குது சுறுசுறுப்பு விளையுது
எட்டு லச்சுமியும் ஏறி வளருது 
பயம் தொலையுது பாவம் தொலையுது
சாத்திரம் வளருது சாதி குறையுது 
நேத்திரம் திறக்குது நியாயம் தெரியுது 
பழைய பைத்தியம் படீரேன்று தெளியுது” 

பாரதியின் படைப்பாக வந்த பாத்திரம் நான் உரைத்ததெல்லாம் உண்மையாகட்டும். பாரதம் உலகின் திலகமாகட்டும். 

(உடுக்கையடித்தபடியே சந்தோஷ் மேடையின் இடப்பக்கம் நோக்கிச் செல்கிறான்) 

ஆசிரியை பாரதி : இப்பொழுது பாரதியாரின் பாத்திரப் படைப்பு குள்ளச்சாமியாராக மாணவர் ராஜராஜன் வருகிறார். 

(சாமியார் வேடத்தில், ராஜராஜன், மேடையின் பக்கத்திலிருந்து வருகிறான்) 

ராஜராஜன் : 

பாரதியின் கதைகளில்
உலா வருபவன் நான்.
சுயசரிதையிலும் என்னைப்
பற்றி அவன் சிலாகித்தான்.
அவன் புதுவையில் சந்தித்த
மாகன்களில் நானும் ஒருவன்
என்றே கருதுவோரும் உண்டு. 
கரிய நிறம் எனக்கு கடவுளைப்போல் 
உறுதியான உடல் வயிரத்தைப் போல் 
அன்றொரு நாள் கிழிசல் கந்தைத் துணிகளை 
அழுக்குத் துணிகளை மூட்டையாகிக் 
கட்டி முதுகில் வைத்து நான் போனேன்.
காளிதாசன் என்னும் பாரதி 
என் அருகில் வந்து நின்றான். 
ஈதென்ன சாமி அழுக்குத்துணியை 
கந்தல்களை முதுகில் சுமக்கிறாய். உனக்கு என்ன
பைத்தியமா என்றே வினா தொடுத்தான். 

‘நீ நெஞ்சிலே சுமக்கிறாய். 
நான் முதுகின் மேலே சுமக்கிறேன்’ 
என்று பதிலளித்தே நான் ஓடிப் போனேன். 

மற்றவரை வசியப்படுத்த நான்
சொன்ன உத்தி என்ன தெரியுமா?
“எல்லாமே தெய்வம். தர்மமே
மஹா மந்திரம் உண்மைக்கு வெற்றி
உண்டு. எல்லாரையும் வசப்படுத்த
வேண்டுமானால் எல்லாரையும்
தெய்வமாக நினைத்து மனதால்
வணங்க வேண்டும். ஓம் சக்தி.” 

(ராஜராஜன், மேடையின் இடப்பக்கம் நோக்கிச் செல்கிறான்.) 

ஆசிரியை பாரதி : பாரதி காட்டிய ஓர் ஆண் சாமியாரைக் கண்டீர்கள். இளங்கோவடிகளின் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் என்னும் பெண் துறவி வருவார். 

அதுபோலவே பாரதியின் படைப்புகளில் வரும் பெண்பால் சந்நியாசி மிளகாய்ப் பழச் சாமியார். மாணவி ரம்யா, மிளகாய்ப் பழச் சாமியார் ஆக உங்கள் முன் தோன்றுவார். 

(காவிச் சேலை அணிந்து ரம்யா, மேடையின் இடப் பக்கத்திலிருந்து வருகிறாள்.) 

ரம்யா : பாரதியின் படைப்புகளில் இடம் பெறும் வேதபுரத்துக்கு வடக்கே முத்துப்பேட்டை அடியாளின் இருப்பிடம். திருக்கார்த்திகை தினத்தில் அடியவர்கள் எனக்கு மிளகாய்ப் பழத்தை அரைத்துத் தேய்த்து நீராட்டுவதால் மிளகாய்ப் பழச் சாமியார் என்றே நான் அழைக்கப்பட்டேன். 

நான் பாரதியின் இல்லத்திற்குச் சென்று அங்கு சொன்ன மொழிகளை இங்கு உங்களுக்கும் சொல்கிறேன். 

“ஆண் பெண்ணுக்கு நடத்தும் அநியாயம் சொல்லுக்கு அடங்காது. பெண்ணுக்கு ஆண் நியாயம் செய்வது முக்கியம். விபச்சாரிக்கு தண்டனை இங்கேயே நரகம். ஆண்மக்கள் விபச்சாரம் பண்ணுவதற்கு சரியான தண்டனையைக் காணோம். ஆணும் பெண்ணும் சமானம் பெண் சக்தி.” 

பெண்ணை ஆண் அடித்து நசுக்கக் கூடாது. இந்த நியாத்தை உலகத்தில் நிறுத்துவதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும். உங்களுக்குப் பராசக்தி நீண்ட ஆயுளும் இஷ்ட காம்ய சித்திகளும் தருவாள்.” 

(ரம்யா, மேடையின் இடப்பக்கம் நோக்கிச் செல்கிறாள்) 

ஆசிரியை பாரதி : இப்பொழுது மாணவர் தமிழ்ச் செல்வன் வருகிறார். தம்பி, நீங்கள் ஏற்றிருக்கும் வேடம் என்ன? பாரதியின் எந்தப் பாத்திரமாக இங்கு வந்திருக்கிறீர்? 

தமிழ்ச் செல்வன் : அம்மையே, எனது பெயர் வேணுமுதலி. காளிதாசன் என்னும் பெயரில் கதை எழுதிய பாரதியின் தோழர்களில் ஒருவன். நாங்கள் அனுபவித்த மழைக் காலப் பொழுதைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம். 

ஆசிரியை பாரதி : பகருங்கள். காத்திருக்கிறார்கள் நேயர்கள். தமிழ்ச்செல்வன் : கடற்கரையில் காற்று வாங்கப் போனோம் காளிதாசரும் நானும் உடன் ராமராயரும் பிரமராய அய்யரும் மழை வருவது போல் உணர்ந்தால் நான் பாட்டுப் பாடி மழைக்கு வரவேற்புரை செய்தேன். 

“காற்றடிக்குது கடல் குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகனே
தூற்றல் கதவு சாளரமெல்லாம்
தொளைத்தடிக்குது தாடகத்திலே மழை
தொளைத்தடிக்குது கூடத்திலே” 

ராமராயரும் பிரமராயரும் மழை வருமா வராதா என்று தங்களுக்குள் பந்தயம் பேசினார்கள். வராது என்றவரின் வாக்குக்கு மாறாக மழை பொழிந்தது கொட்டித் தீர்த்தது நிலத்தில். ஓடி ஒதுங்கினோம் இடம் தேடி. மழையில் நனைந்து மகிழ்ந்த நான் பாடினேன் பாட்டு 

“திக்குகள் எட்டும் சிதறி – தக்க 
தீம் தரிகிட தீம் தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட 
பக்க மலைகள் உடைந்து வெள்ளம் 
பாயுது, பாயுது, பாயுது, தாம்தரிகிட 
தக்கத் ததிங்கிட தித்தோம் – அண்டம் 
சாயுது, சாயுது, சாயுது, பேய் கொண்டு 
தக்கை யடிக்குது காற்று தக்கத் 
தாம் தரிகிட, தாம் தரிகிட, தாம் தரிகிட, தாம் தரிகிட
வெட்டியடிக்குது மின்னல் – கடல் 
வீரத் திரை கொண்டு விண்ணையடிக்குது 
கொட்டி யிடிக்குது மேகம் – 
கூ கூவென்று விண்ணைக் குடையுது காற்று 
சட்டச்சட, சட்டச்சட, டட்டா – என்று 
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம் 
எட்டுத் திசையும் இடிய மழை 
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா! 
தக்கத் தகத் தக்கத் தக, தித்தோம்” 

மாமழையும் நின்றது. 
பறவைகள் கூட்டை நாடுவது போல் நண்பர்கள் நாங்கள்,
வீடுகளை நோக்கிச் செல்லும் 
வழியிலும் என் பாட்டு தொடர்ந்தது. 
‘அண்டங்குலுங்குது தம்பி தலை 
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மாண்புக் குதித்திடுகின்றான் திசை
வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடுகின்றார் என்ன 
தெய்வீகக் காட்சியைக் கண்முன்பு
கண்டோம். கண்டோம். கண்டோம் கண்டோம். இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!
தக்கத்தகத் தக்கத்தக தித்தோம்.” 

நன்றி வணக்கம். 

ஆசிரியை பாரதி : மகாகவி பாரதியார் தமது புனைவுகளில் உருவாக்கிய சில பாத்திரப் படைப்புகளைத் தங்கள் முன் நிறுத்தினார்கள் என்னுடைய மாணவமணிகள். ரசித்திருப்பீர்கள் என்பதற்கு அத்தாட்சியாகத் தங்கள் கரவொலியை எதிர்பார்க்கிறேன். 

(பலத்த கரவொலி) 

ஆசிரியை பாரதி : தங்கள் கரவொலி அவர்களுக்கும் எனக்கும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கின்றது. 

“வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்,
வாழிய பாரத மணித் திருநாடு. 
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு 
வாழும் மனிதருக்கெல்லாம் 
பயிற்றிப் பல கல்வி தந்து இந்தப் 
பாரை உயர்த்திட வேண்டும். 

ஒன்றென்று கொட்டு முரசே! அன்பில் 
ஓங்கென்று கொட்டு முரசே! 
நன்றென்று கொட்டு முரசே! இந்த 
நானில மாந்தருக்கெல்லாம்.” 

மிக்க நன்றி,வணக்கம். 

(குறிப்பு: மேற்கோள் குறிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவை பாரதியார் கவிதைகள்.) 

(திரை) 

(நிறைந்தது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *