வெளியிலிருந்து வந்தவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 14,802 
 
 

கதை ஆசிரியர்: சாரு நிவேதிதா.

இரவு ஒன்பது மணி சுமாருக்கு அந்தச் சம்பவம் நடந்தது. வீட்டுக் கதவை ‘ பட பட ‘ வென்று யாரோ தொடர்ந்து தட்டினார்கள். இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசித்தபடி வந்து பார்த்தால் வெளியே சுந்தரம். பார்த்த மாத்திரத்தில் தெரிந்து விட்டது – நிறை போதையில் இருந்தான் அவன்.

மது , மாது , சூது என்ற மூன்று தீமைகளில் ( ?) கடைசி இரண்டைப் பற்றியும் எங்களுக்குள் அவ்வளவு பிரச்னை இல்லை , ( எங்களுக்குள் என்பது என்னையும் என் மனைவி ஜென்னியையும் குறிப்பது) அந்த இரண்டும் என்னை அண்டவே அண்டாது என்பதில் ஜென்னி உறுதியாக இருந்தாள். ஆனால் அந்த முதல் விஷயம்தான் உதைத்தது.

அதனால் என்னை ஒரு குடிகாரன் என்று நினைத்து விடாதீர்கள். நான் குடிப்பதில்லை. ஆனாலும் என் நண்பர்கள் பலருக்கும் இந்தப் பழக்கம் இருந்தது. இதைப் பற்றி நான் ஆதரவாகப் பேசியதுதான் ஜென்னியை கலவரப்படுத்தியது என்று சொல்ல வேண்டும்.

இப்படியான ஒரு தினத்தில் தான் இரவு ஒன்பது மணி சுமாருக்கு அந்தச் சம்பவம் நடந்தது.

வீட்டுக் கதவை ‘ பட பட ‘ வென்று யாரோ தொடர்ந்து தட்டினார்கள். இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசித்தபடி வந்து பார்த்தால் வெளியே சுந்தரம்.

பார்த்த மாத்திரத்தில் தெரிந்து விட்டது – நிறை போதையில் இருந்தான் அவன்.

என் வீட்டு முகவரி இவனுக்கு எப்படித் தெரிந்தது ?

குடித்திருந்தாலும் சுந்தரம் புத்திசாலி. என் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டு விட்டான்.

” நீ தானே உன் விலாசம் கொடுத்தாய் ? ஞாபகம் இல்லை ? இதோ பார்”

– சொல்லிக் கொண்டே தள்ளாடியபடி தன் ஜோல்னாப் பையிலிருந்து டைரியை எடுத்து பக்கத்தையும் புரட்டிக் காண்பித்தான்.

உருப்பட்டாற்போல்தான். அவன் டைரியில் என் முகவரியை நானே என் கைப்பட எழுதியிருந்தேன்.

‘ இப்போது ஜென்னி வந்து பார்த்தால் என்ன சொல்வது ? இவனை எப்படி பாதுகாப்பாக வெளியேற்றுவது ? நாளைக்கு ஆபீஸ் வேறு இருக்கிறதே ?’ என்று பல விதமாய் குழம்பிக் கொண்டிருந்த போது ஜென்னியே வந்து விட்டாள்.

அவளிடம் சுருக்கமாக அறிமுகப்படுத்தினேன். விமானம் திடீரென்று நடு வானில் பழுதடைந்து விட்டால் ஒரு விமானியின் மூளை எவ்வளவு சடுதியில் வேலை செய்யுமோ அந்த அவசரத்தில் யோசிக்க ஆரம்பித்தது என் மூளை.

” சரி சுந்தரம் … கிளம்பு … பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் வந்து உன்னை ஏற்றி அனுப்புகிறேன்” என்றேன்.

” என்னாழ் நழக்க முழியாது , அதனாழ்தான் உன் வீழ்ழுக்கு வந்தேன்” என்று ழகரத்திலேயே பதில் சொன்னான் சுந்தரம்.

இப்போது இவனை தங்கச் சொல்லி விட்டு பிறகு ஜென்னியிடம் பிரச்னை வைத்துக் கொள்வதில் எனக்கு இஷ்டம் இல்லை.

” பரவால்ல … என் தோளைப் பிடிச்சுக்கிட்டு நட.. பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலதான்” என்றபடி கைத்தாங்கலாகவே அவனை அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.

தெருமுனை தாண்டி மெயின் ரோடு வரை சமாளித்து நடந்தவன் பஸ் ஸ்டாண்ட் வருவதற்குள் தரையில் சாய்ந்து விட்டான்.

தூக்கி விட்டேன் , மறுபடியும் விழுந்தான். நல்ல பளுவாக இருந்தான். இல்லாவிட்டால் விக்கிரமாதித்தன் வேதாளத்தைத் தூக்கிக் கொண்டு போவது போல் போய்விடலாம்.

எல்லோரும் எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றார்கள். அவர்கள் என்னையும் அவனோடு சேர்த்தே நினைத்திருப்பார்கள் என்பது கொஞ்சம் அவமானமாக இருந்தது.

திடீரென்று போலீஸ் பயமும் தொற்றிக் கொண்டது. இரவில் வரும் ரோந்துப் போலீசார் எங்கள் இருவரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு போய் விட்டால் என்ன செய்வது ? இரவு முழுவதும் லாக்கப்பில் அல்லவா இருக்க வேண்டும் ? ஜென்னி என்னவெல்லாம் நினைத்துக் கவலைப்படுவாள் ?

என்ன இது முட்டாள்தனம் என்று நொந்து கொண்டேன். முகவரியைக் கொடுத்ததே தவறு , அதைவிடத் தவறு இந்த நிலையில் இவனை இங்கே அழைத்துக் கொண்டு வந்தது …

இவ்வளவு யோசனைகளுக்கிடையிலும் அவனை நான் தூக்கி விடுவதும் அவன் கீழே விழுவதுமான காட்சி தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் என்றே தெரியவில்லை. சுந்தரத்தின் வேஷ்டி சட்டையெல்லாம் சேறும் சகதியுமாய் ஆகியிருந்தது.

களைப்பும் சோர்வுமாய் அந்த நடைபாதையிலேயே உட்கார்ந்தேன்.

சாலை ஓரத்தில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் விழுந்திருந்த சுந்தரத்தின் வாயிலிருந்து விளங்காத சொற்கள் பல வெளியேறிக் கொண்டிருந்தன.

ஒருகணம் இவனை இப்படியே போட்டு விட்டுப் போய் விட்டால் என்ன என்று தோன்றியது. பிறகு அப்படித் தோன்றியதற்காக எனக்குள் நான் கூனிக் குறுகிப் போனேன்.

சில சந்தர்ப்பங்களில் மனிதனுக்கு எவ்வளவு பாதகமான யோசனைகளெல்லாம் வருகின்றன என்று ஆச்சரியமும் கொண்டேன்.

இப்படியே நீண்ட நேரம் போராடி வீட்டுக்கு அவனைக் கொண்டு வந்து சேர்த்த போது வாசல் படியிலேயே உட்கார்ந்திருந்தாள் ஜென்னி.

” என்னங்க இது… எங்கே போயிருந்தீங்க ? எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலே” என்று சொன்னவளின் கண்கள் கலங்கியிருந்தன.

” அதெழ்ழாம் ஒன்னும் பயப்பழாதே தங்கச்சி. ஒழு சின்ன ப்ழாப்ழம். அழான் லேட்”

” சரி வா… சுந்தரம். தூங்கலாம்” என்றேன்.

” என்ன கண்ணாயிழம்… சாப்பிழாம எப்பழி தூங்கழது ?”

” இந்த நிலைமையில் உன்னால் சாப்பிட முடியுமா ?”

” சாப்பிழாம எனக்கு தூக்கம் வழாதே.” குடித்திருப்பவனிடம் விவாதம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று எண்ணி “என்ன சாப்பிடறே , குழம்பு சாதமா ? தயிர் சாதமா ?” என்று கேட்டேன்.

” ழாத்திழிலெ நா சோழு சாப்பிழ மாட்டனே. இட்ழி தோசை…”

எங்கள் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த ஜென்னி என்னைத் தனியாக அழைத்து “தோசை மாவு இல்லை. உங்க ஃப்ரெண்ட் சப்பாத்தி சாப்பிடுவாரான்னு கேளுங்க… சட்டுன்னு போட்டுத் தந்திர்றேன்…. தொட்டுக்க குழம்பு இருக்கு” என்றாள்.

” என்னது , ராத்திரி பண்ணண்டு மணிக்கு சப்பாத்தியா ? நீ வேற நாளைக்கு ஆபீஸ் போகணும்… விடு”

இப்படி நான் சொல்லி முடிப்பதற்குள் “சப்பாத்தி போழும்” என்ற பதில் வந்தது சுந்தரத்திடமிருந்து.

இரண்டு சப்பாத்தி சாப்பிட்டு விட்டு தட்டிலேயே கை கழுவி விட்டு அந்த இடத்திலேயே சுருண்டான் சுந்தரம்.

‘ இரவில் வாந்தி எடுத்து வைத்து விடாமல் இருக்க வேண்டுமே ‘ என்று பயந்து கொண்டே வந்து படுத்தேன். அதற்குள் தூங்கிப் போயிருந்தாள் ஜென்னி.

காலை நேர அவசர ஓட்டத்தில் அவனை எப்படி கவனிப்பது என்ற கவலை எழுந்தது. எழுந்து கொள்வானா , எழுந்ததும் கிளம்புவானா , குளிக்க வேண்டும் சாப்பிட வேண்டும் என்று சொன்னால் என்ன செய்வது – அவசரத்தில் நானும் ஜென்னியுமே காலை டிபனை வீட்டில் சாப்பிடாமல் ஆபீசுக்கு எடுத்துக் கொண்டு போய்தான் சாப்பிடுவோம். சமயங்களில் டிபன் செய்யவே நேரம் இல்லாவிட்டால் ஆபீஸ் கேண்டீனில்தான் டிபன் – கார்த்திக் (என் பையன்) எழுந்தால் சுந்தரத்தைப் பார்த்து என்ன நினைப்பான். அவனுடைய மதிப்பீட்டில் நான் எவ்வளவு தூரம் தாழ்ந்து போவேன். ஜென்னி இதையெல்லாம் எப்படி எடுத்துக் கொள்வாள் என்றெல்லாம் பலவாறாக யோசித்துக் கொண்டே என்னையும் அறியாமல் உறங்கிப் போனேன்.

காலையில் எழுந்து எழுப்பிப் பார்த்தேன். சில வித்தியாசமான சப்தங்களைக் கொடுத்துவிட்டு புரண்டு படுத்தானே ஒழிய எழுந்து கொள்ளவில்லை.

வாசலை ஒட்டி படுத்துக் கிடந்த அவனை கால்களைப் பிடித்து இழுத்து ஓரமாய்க் கிடத்தினேன்.

கார்த்திக் எழுந்து வந்து ‘ இந்த அங்கிள் யார் ?’ என்று கேட்டான். (அங்கிள் என்ற வார்த்தையை அவன் சற்று தயக்கத்துடனேயே சொன்னதாக எனக்குத் தோன்றியது)

” ஊரிலிருந்து வந்திருக்கிறார்…. உடம்பு சரியில்லை” கார்த்திக் பள்ளிக்குக் கிளம்பிச் சென்ற பிறகு சுந்தரத்தை மீண்டும் எழுப்ப முயன்றேன். மணி அப்போது ஏழரை. இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆபீஸ் கிளம்பியாக வேண்டும்.

” கொஞ்சம் மோர் வேண்டும்” என்றான் சுந்தரம் இருந்த தயிரில் கொஞ்சம் எடுத்து நீர் கலந்து மோராக்கிக் கொடுத்தேன்.

குடித்து விட்டு மீண்டும் சாய்ந்து விட்டான். அவன் தாடியில் சிந்தியிருந்த மோரைத் துடைத்து விட்டேன்.

அரை மணி நேரம் சென்று மீண்டும் எழுப்பிப் பார்த்தேன் , பயனில்லை.

” நாம் ஆபீஸ் போக முடியாது. மட்டம் போட்டு விட வேண்டியதுதான்” என்றாள் ஜென்னி.

சுமார் ஒரு மணி இடைவெளி விட்டுவிட்டு எழுந்து மோர் கேட்டான் சுந்தரம். மதியம் எழுப்பி மோர் சாதம் சாப்பிட வைத்தேன். சாப்பிட்டு முடித்ததும் கிளப்பி விட்டு விடவேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டேன்.

ஆனால் அதுவும் முடியாமல் போனது. சாப்பிட்டவுடன் மீண்டும் தூங்கி விட்டான்.

எப்போது இவன் எழுந்து கொள்வான் என்ற கவலை ஏற்பட்டது எனக்கு. ஏதாவது ஒன்று கிடக்க ஓன்று ஆகி விட்டால் என்ன செய்வது என்ற பயமும் எழுந்தது. இடையில் அம்மாவோ அப்பாவோ தாம்பரத்திலிருந்து வந்து விட்டால் அவர்கள் என்ன நினைப்பார்கள் ? அவர்களிடம் என்ன சொல்லி சமாளிப்பது ? – மனசில் என்னென்னவோ யோசனைகள் வந்து மோதிக் கொண்டிருந்தன.

நான்கு மணி ஆகியும் அவன் எழுந்து கொள்ளாததைப் பார்த்து அவன் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினேன்.

” எழுந்து கொள் சுந்தரம்…. நாங்கள் கொஞ்சம் அவசரமாக வெளியே கிளம்ப வேண்டும்” என்று சமயோஜிதமாக ஒரு பொய்யைச் சொன்னேன்.

எழுந்து முகம் கழுவிக் கொண்டவன் சட்டை அழுக்காகி விட்டது என்று சொல்லி என்னிடமிருந்து ஒரு சட்டை வாங்கிப் போட்டுக் கொண்டான்.

” என்ன கிளம்பலியா… வாங்க… அப்படியே உங்களோடயே நானும் கிளம்பிடறேன்”

‘ அடக் கடவுளே… இது என்ன புதுப் பிரச்னை ‘ என்று நினைத்தபடி இதை எப்படி சமாளிப்பதென யோசித்தேன். ஆனால் அன்றைக்கென்று பார்த்து என் மூளை ஒழுங்காகவே வேலை செய்தது. (பொதுவாக ஆபத்து நேரங்களில் என் மூளை ஸ்தம்பித்து விடுவதுதான் வழக்கம்!)

” இல்லை சுந்தரம்…. ஜென்னி கிளம்ப முன்னே பின்னே ஆகும்…. நீ கிளம்பு” என்றேன்.

” அப்படியா …. அதுவும் சரிதான்” என்றவன் ஜென்னியிடம் “வர்றேன் தங்கச்சி…. ரொம்ப சிரமம் கொடுத்திட்டேன். மன்னிக்கணும்” என்று இரண்டு கைகளையும் கூப்பி வணங்கி விட்டுக் கிளம்பினான்.

வீதி வரை சென்று வழி அனுப்பிவிட்டு வீட்டுக்குள் தயக்கத்துடன் நுழைந்தேன். ஜென்னியை இனிமேல் எப்படி எதிர்கொள்வது என்ற பயம் கவ்வியது.

அப்போது “ஏங்க…. உங்க ஃப்ரென்ட் ரொம்ப பாவம் இல்லீங்க ?” என்றாள் ஜென்னி. அவள் குரலில் உண்மையான வருத்தம் தொனித்தது.

சாரு நிவேதிதா (Charu Nivedita, பிறப்பு: 18 டிசம்பர் 1953) தமிழின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர். மிக பரந்த வாசகர் பரப்பை கொண்டவர். அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்ற கருத்தை இவரது படைப்புகள் மையமாகக் கொண்டுள்ளன. அடுத்த மனிதரின் சுதந்திரத்தில் குறுக்கிடாமலும் அதே சமயம் நம்முடைய தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்காமலும் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை என்ற கருத்தை முன்வைப்பவை சாரு நிவேதிதாவின் படைப்புகள். இறுக்கம் மிகுந்த…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *