கையருகே ஆகாயம்

 

கதை ஆசிரியர்: சாரு நிவேதிதா.

ராமசாமியை எனக்கு முன்பின் தெரியாது. என் வாசகர் என்று எனக்கு அறிமுகமானார். ஓரிரு மாதப் பழக்கத்திற்குப் பிறகு , ” நீங்கள் பாரீஸ் பற்றி நிறைய எழுதியிருக்கிறீர்கள். உங்களோடு ஒருமுறை அங்கே போக வேண்டும்! “ என்றார்.

எனக்கும் ஒரு துணை கிடைத்தது என்ற சந்தோஷத்தில் உற்சாகமாகக் கிளம்பினேன். அப்போது டிசம்பர் மாதம். டிசம்பர் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம்.

என் பிறந்த நாள் டிசம்பரில் தான். வருடா வருடம் டிசம்பர் மாதம் பாரீசுக்குச் சென்று என் பிறந்த நாளை நானே கொண்டாடுவது வழக்கம். ஐரோப்பாவில் குளிர்காலம் வித்தியாசமாக இருக்கும். ஊட்டியில் கூட குளிர் காலத்தில் குளிர் ஜீரோ டிகிரிக்குப் போகும் என்றாலும் , அதே ஜீரோ டிகிரி ஐரோப்பாவில் வேறு மாதிரி இருக்கும். காலம் , காலமாக வெப்பத்தைக் காணாமல் குளிரிலேயே உறைந்து கிடப்பதால் ஐரோப்பிய மண்ணின் குளிருக்கு வீரியம் அதிகம். ஆனால் , ராமசாமியால் எப்படி அந்தக் குளிரைத் தாங்க முடியும்.

” நாம் ஏப்ரல் , மே கோடைக் காலத்தில் போகலாம் “ என்றேன். அவர் கேட்கவில்லை. இப்போதே கிளம்பினால் தான் ஆயிற்று என்று ஒற்றைக் காலில் நின்றார். ராமசாமி , நாமக்கல்லில் ஒரு கோடீஸ்வரர் ; பண்ணையார். ஏகப்பட்ட லாரிகள் ஒடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் , பார்ப்பதற்கு ஏதோ டாஸ்மாக் பாரில் எடுபிடி வேலை செய்பவர் போல் தோற்றம் தருவார். காலில் ரப்பர் செருப்பு ; அதிலும் , ஒரு அறுந்த வாரை ஊக்கு போட்டு மாட்டியிருப்பார். சுருக்கம் விழுந்த சட்டை. எவ்வளவு அவசரமாக இருந்தாலும் ஆட்டோவில் ஏற மாட்டார் ; எல்லாவற்றுக்கும் பஸ் தான்.

” இப்படியெல்லாம் பாரீஸ் வந்தால் குளிரில் விறைத்துச் செத்துப் போய் விடுவீர்!“ என்று எச்சரித்தேன். பாரீஸ் போய் வாங்கினால் , நம்மூர் காசுக்கு விலை ஐந்து மடங்கு ஆகி விடும் என்று சொல்லியும் செவி சாய்க்கவில்லை. பிறகு கட்டாயப்படுத்தி ஷூ , ஸ்வெட்டர் எல்லாம் வாங்கச் செய்தேன்.ஜீரோ டிகிரி குளிரில் வாழ வேண்டுமானால் , ஒருவர் குறைந்தபட்சம் 12 கிலோ எடையுள்ள கம்பளி உடுப்புகளை அணிந்திருக்க வேண்டும்.

கம்பளி சாக்ஸ் , குளிர் நாடுகளுக்கேற்ற ஷூ (அதன் விலை இந்தியாவில் ரூ. 10,000), கையுறை , ஸ்வெட்டர் , கம்பளி கோட்டு , மப்ளர் , குல்லாய் என்று இத்தனை உருப்படி தேவை. ஆனால் , ராமசாமி ரூ. 300 க்கு ஒரு ஷூவை வாங்கினார். கோட்டு இல்லை ; மப்ளர் இல்லை ; கையுறை இல்லை ; எதுவுமே இல்லை! கிளம்பி விட்டார். விமானத்திலேயே பிரச்னை ஆரம்பமாகி விட்டது. ராமசாமியிடம் ஒரு விநோத பழக்கம் என்னவென்றால் – அவருக்கு அருகிலேயே , அவரைத் தொடக் கூடிய தூரத்திலேயே நீங்கள் அமர்ந்திருந்தாலும் எங்கோ அடுத்த வயக்காட்டில் நின்று கொண்டிருக்கும் ஒருவரைக் கூப்பிடுவது போன்ற குரலில் பேசுவார் ; கத்துவார் என்பதே சாலப் பொருத்தம்.

விமானத்தில் அவருக்குப் பக்கத்து சீட்டு தான் எனக்கு. ஆனாலும் , வானில் பறந்து கொண்டிருக்கும் மற்றொரு விமானத்தில் அமர்ந்திருக்கும் ஒருவரோடு பேசுவதாக நினைத்து , என் செவிச் சவ்வுகளைக் கிழித்துக் கொண்டிருந்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஒரு வெள்ளைக்காரர் , ராமசாமியிடம் மெதுவாகப் பேசுமாறு கேட்டுக் கொண்ட போது , இரண்டு நிமிடம் அடங்கி விட்டு , பிறகு , மீண்டும் அதே உச்சத்தில் ஆரம்பித்தார். நான் , சைகையில் வெள்ளைக்காரனைக் காண்பித்தேன். உடனே சப்தமாக , ” அவங்கெடக்கான்… நம்ப ஊருக்கு வந்துட்டு அவன் என்ன நம்பள நாட்டாமை பண்றது ? “ என்றார்.

” இது உம்முடைய நாமக்கல் அல்ல ; இப்போது நாம் ஆகாயத்தில் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம். அநேகமாக துருக்கியாக இருக்கலாம்.. “ என்று அவரிடம் சொல்ல நினைத்தேன்.ஆனால் , அதற்கும் ஏதாவது குதர்க்கமாக பதில் சொல்வார். அதனால் , கண்களை மூடித் தூங்க ஆரம்பித்தேன். தூக்கம் வரவில்லை ; இருந்தாலும் , கண்களைத் திறக்க அச்சமாக இருந்தது. எவ்வளவு நேரம் அப்படி இருக்க முடியும் ? பிறகு லேசாகக் கண்ணைத் திறந்து பார்ப்பேன். அவ்வளவுதான் , எலியை கவ்வுவதற்காகப் பாயும் பூனையைப் போல் பாய்ந்து பிடித்துக் கொள்வார்.

பிறகு , மறுபடியும் ஆரம்பிக்கும் கச்சேரி. இப்போது முன்னை விட சுதி ஏறியிருக்கும். ஆமாம் , விமானத்தில் தரும் ஸ்காட்ச் விஸ்கியை அதற்குள் நாலைந்து ரவுண்ட் போட்டிருப்பார். ஏதாவது சுவாரசியமாக இருந்தாலும் கேட்டுக் கொண்டிருக்கலாம். எல்லாம் அவருடைய மனைவியைப் பற்றிய புகார் கதைகள். ஆனால் , எனக்கு என்னவோ அந்தப் பெண்மணி மீது மதிப்பு தான் கூடியது. இப்படி 24 மணி நேரமும் தவளையைப் போல் கத்திக் கொண்டிருக்கும் மனிதரோடு இத்தனை வருடம் குடித்தனம் நடத்திஇருக்கிறாளே , அவள் எப்பேர்ப்பட்ட பொறுமைசாலியாக இருக்க வேண்டும்!

பாரீஸ் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் என் தோள் பையைத் திறந்து ஒரு பொருளை எடுத்து , ; இதோ பாருங்கள் பெருமாள்! ; என்று பெருமையுடன் காண்பித்தார் ராமசாமி. இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். எனக்கு அந்த ஆண்டு தான் இதய அறுவை சிகிச்சை நடந்திருந்ததால் , சுமை எதுவும் தூக்க வேண்டாம்! என்று எச்சரித்திருந்தார் மருத்துவர். ஆக , என் பையையும் ராமசாமியேதான் தூக்கி வர வேண்டியிருந்தது. உண்மையில் எனக்கு இத்தனை உதவி செய்த ஒரு நண்பரைப் பற்றி பொல்லாங்கு சொல்வது பற்றி எனக்கே நாணமாகத் தான் இருக்கிறது. என்ன செய்ய ? என் தொழில் (எழுத்து) அப்படி!

என் கைப்பையிலிருந்து ராமசாமி எடுத்துக் காண்பித்த பொருளைப் பார்த்ததும் நான் ஒருகணம் ஆடிப் போய் விட்டேன். விமானத்தில் போர்த்திக் கொள்வதற்காக போர்வை கொடுப்பர் அல்லவா , அந்தப் போர்வையை என் பையில் வைத்து எடுத்து வந்திருக்கிறார்! அந்தக் குளிரிலும் எனக்கு வேர்த்து விட்டது. மாட்டியிருந்தால் அவமானமாகப் போயிருக்குமே! ” இங்கே குளிர் அதிகமில்லே ? அதுதான் எடுத்து வைத்துக் கொண்டேன் ” என்றார் ராமசாமி. எனக்கு வந்த கோபத்தில் எதுவும் பேசவில்லை. விமான நிலையத்திலிருந்து டாக்சி பிடித்து லாட்ஜில் ரூம் போட்டோம் ; ஆனால் , அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. நாங்கள் சென்ற இடம் கார் துநோர் என்ற பாரீசின் வடக்குப் பகுதி. அங்கே வசிக்கும் பெரும்பான்மையோர் வட ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த கறுப்பின முஸ்லீம் மக்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள்.சிறிய லாட்ஜுகளின் உரிமையாளர்கள் பலரும் அல்ஜீரியர்கள். அவர்களிடம் சென்று , “ எங்கள் இருவருக்கும் ஒரே அறை வேண்டும்… ” என்று சொன்னதும் சைத்தானை நேரில் கண்டது போல் , ” ஹராம் , ஹராம்… “ என்று கத்தினர்.

இந்த இடத்தில் எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. என் நண்பர் ஒருவரின் மகன் அமெரிக்காவில் வேலை செய்கிறான். அவன் ஒரு அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான்.விசனத்தில் இருந்த நண்பருக்கு ஆதரவாக என் மற்றொரு

நண்பனான நிக்கி என்ன சொன்னான் தெரியுமா ? “ சந்தோஷப்படுங்கள் , அட்லீஸ்ட் அவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டானே என்று! “, இன்னமும் புரியவில்லையா ?

அதாவது , அந்த அல்ஜீரியர்கள் என்னையும் , ராமசாமியையும் , ‘ ஹோமோ ‘ என்று நினைத்து விட்டனர். சே… சே… என் வாழ்விலேயே அப்படி ஒரு அவமானகரமான சம்பவத்தை நான் அனுபவித்தது இல்லை. பிறகு ஒரு மூன்றாந்தரமான லாட்ஜில் ரூம் போட்டோம். ஓனர் ஒரு வயதான ப்ரெஞ்சுக்காரி என்பதால் பிரச்னை இல்லை.முதல் நாளே ஆரம்பித்து விட்டது பிரச்னை. குளிர் ஜுரம் கண்டவனைப் போல் வெடவெட என்று நடுங்கிக் கொண்டிருந்தார் ராமசாமி. அறையை விட்டு வெளியே வரவே இல்லை.

மதிய உணவுக்கும் , இரவு உணவுக்கும் மட்டும் தான் வெளியே வந்தார். வடக்கு பாரீசில் நாங்கள் தங்கியிருந்த இடத்தின் பெயர் லா சப்பல். இது ஒரு குட்டி யாழ்ப்பாணம். திரும்பின இடமெல்லாம் தமிழ்க் கடைகள் தான். அதனால் , தமிழ்ச் சாப்பாட்டுக்குப் பிரச்னை இல்லை. ஆனால் , இவ்வளவு தூரம் வந்து , இவ்வளவு பணம் செலவு செய்து ரசமும் , சாம்பாரும் சாப்பிட வேண்டுமா என்பது தான் என் கேள்வி. இருபத்து நாலு மணி நேரமும் அறையிலேயே அடைந்து கிடந்து , சாம்பார் சாதம் சாப்பிடுவதற்கு ஒரு ஆள் ஏன் பாரீஸ் வரை வர வேண்டும் ?

அறையில் மற்றொரு பிரச்னை , சிகரட். ராமசாமிக்கு விழித்திருக்கும் நேரமெல்லாம் வாயில் சிகரட் புகைத்து கொண்டிருக்க வேண்டும். அதிலும் , அவர் குடிக்கும் சிகரட் , இந்த உலகத்திலேயே படு மட்டமான ரகம். எங்களுடைய நிதி நிலமை தனித்தனி அறைகளில் தங்குவதற்கு மதிக்கவில்லை. இது எல்லாவற்றையும் கூட மன்னித்து விடுவேன். ஆனால் , ஸ்பெய்னிலிருந்து நாங்கள் பாரீசுக்கு வந்த ரயில் பயணத்தில் ராமசாமி செய்த ஒரு காரியத்தை மட்டும் என்னால் மன்னிக்கவே முடியாது.

பிரான்சிலிருந்து ஸ்பெய்ன் சென்று விட்டு , அங்கிருந்து பாரீசுக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தோம். முந்தின தினம் தான் கிறிஸ்துமஸ். அது ஒரு பகல் நேரம். வரும் வழியெல்லாம் கிறிஸ்துமஸ் மரங்களும் மற்றும் பெயர் தெரியாத ஆயிரக் கணக்கான மரங்களிலும் பனித் துகள்கள் பொடிப் பொடியாக விழுந்து , மரங்களையே மறைத்துக் கொண்டிருந்தன. இந்த இடத்தில் வாசகர்கள் என்னை மன்னிக்க வேண்டும். அந்தப் பரவசமான காட்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலாதவனாக இருக்கிறேன். ஒரு மகா அற்புதம் கண் முன்னே விரிந்து கிடந்தது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு ஸ்டேஷன் வரும். அப்புறம் வருவதெல்லாம் அந்த அற்புதம் தான். அந்த ரயிலைத் தவிர அங்கே மனித வாழ்வின் சுவடே தெரியாமல் கிடந்தது. எதிரே தூங்கிக் கொண்டிருந்தார் ராமசாமி. ஆம் , சொல்ல மறந்து விட்டேன். அவர் சிகரட் குடிக்காத நேரத்திலெல்லாம் தூங்கிக் கொண்டிருந்தார். உட்கார்ந்தபடி தூக்கம் , நின்றபடி தூக்கம். மனிதர் சல்லாப நேரத்தில் கூட தூங்கிக் கொண்டிருந்திருப்பாரோ என்ற அச்சம் ஏற்பட்டது

எனக்கு.எழுப்பி விட்டு அந்த அற்புதத்தைப் பார்க்கச் சொன்னேன். கண்களில் எந்த பாவமும் இன்றி ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்து விட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தார். காலை எட்டு மணியிலிருந்து மாலை ஆறு மணிக்கு பாரீஸ் வந்து சேரும் வரை தூக்கம் தான். ஆனால் , சைத்தான் எனக்குள்ளேயும் இருக்கிறான் என்று தோன்றியது. கடவுள் உனக்கு சொர்க்கத்தைக் காண்பித்தான். அதைப் பார்த்து அனுபவிப்பதை விட்டு விட்டு , உன்னை எவன் , பக்கத்திலிருப்பவனின் தூக்கத்தைப் பற்றி எண்ணி எரிச்சலடையச் சொன்னது ? பாரீஸ் வந்ததுமே பயணத் தேதியை முன்னதாகவே மாற்றிக் கொண்டு ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

சென்னை வந்து இரண்டு வாரம் இருக்கும். ராமசாமிக்கு போன் போட்டேன். அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று தெரிந்தது. அப்போது ஒரு நாள் – ஒரு பெண்ணிடமிருந்து எனக்கு போன் வந்தது.ராமசாமியின் மனைவி. அப்போது தான் முதல் முறையாக என்னோடு பேசுகிறார். அவர் கேட்ட முதல் கேள்வி:

“ ராமசாமி எங்கே ? “

“அடப்பாவி , நாங்கள் வந்தே இரண்டு வாரம் ஆகிறதே! இன்னுமா அவர் ஊர் வந்து சேரவில்லை ? “

ராமசாமியின் மனைவி உஷ்ணமாகி விட்டார்…

“ராமசாமி காணவில்லை என்று நான் போலீஸில் புகார் கொடுக்கப் போகிறேன். போலீஸ் உங்களிடம் வருவார்கள். தயாராக இருங்கள் “ 

தொடர்புடைய சிறுகதைகள்
பொதுவாக டிசம்பர் 31ஆம் தேதி இரவு புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக அதிவீரன் வெளியே செல்வதில்லை. அதற்கு அர்த்தம் வீட்டுக்குள் கொண்டாடுகிறான் என்பதல்ல. புத்தாண்டையே கொண்டாடுவதில்லை. அதற்கும் விசேஷமான காரணம் ஒன்றும் இல்லை. அவனுக்கு கூட்டம் என்றால் பிடிக்காது. அதனால் அன்று இரவு வெளியே ...
மேலும் கதையை படிக்க...
அதிவீர பாண்டியன் இப்போது மைலாப்பூரின் மேற்குப் பகுதியிலிருந்து கிழக்குப் பகுதிக்கு வீடு மாற்றி விட்டான். மேற்கு மைலாப்பூர் நடுத்தர வர்க்க பிராமணர்கள் வாழும் பகுதி என்பதால் அவனுக்கு சில கலாச்சார சிக்கல்கள் இருந்தன. உதாரணமாக, அவன் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தான். ...
மேலும் கதையை படிக்க...
இன்றோடு பதினஞ்சு நாளைக்கு மேல் இருக்கும் தொண்டையில் இந்த முள் சிக்கி. மீன் சாப்பிட்ட போதுதான் சிக்கியிருக்க வேண்டும். இதுக்குத்தான் நான் ருசியா இருக்கிற மீனாயிருந்தாலும் முள் மீனாக இருந்தால் தொடுவதேயில்லை. சில மீன்களில் நடுமுள் மட்டும் இருக்கும். கோழிச் சிறகுமாதிரி. ...
மேலும் கதையை படிக்க...
ஹாலிவுட் படங்களைக் கொஞ்சம் உல்டா பண்ணி தமிழ் மக்களுக்குக் கொடுத்து, அவர்களைச் சந்தோஷப்படுத்துவது கோடம்பாக்கத்து வழக்கங்களில் ஒன்று. அதன்படி, பிரபல எழுத்தாளன் கச்சிராயனைச் சந்தித்த சிரஞ்சீவி என்ற ஓர் இளம் தயாரிப்பாளர், அவன் கையில் ஒரு டி.வி.டி-யைக் கொடுத்து "இதுதான் என் ...
மேலும் கதையை படிக்க...
பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி
தில்லியில் இதுவரை ஏழு வீடுகள் மாற்றி இப்போது இந்த மயூர் விஹார் வீடு எட்டாவது. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிரச்சினை. வீடு என்றால் எதுவும் தனி வீடு அல்ல. ஒண்டுக்குடித்தனம்தான். அநேகமாக எல்லா வீடுகளிலும் வீட்டுச் சொந்தக்காரர்களுடன் தான் குடியிருக்க நேர்ந்தது. ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: சாரு நிவேதிதா. பார்பராவைச் சந்தித்தது ரொம்பவுமே எதேச்சையாக நிகழ்ந்த ஒன்று. ஒரு வேளை எல்லாச் சந்திப்புகளுமே எதேச்சையானது தானோ என்னவோ ! ஒரு வருடத்திற்கு முன்னால் மதுரையில் ஒரு நாடக விழா நடந்த போது அதில் என் நண்பன் மாணிக்கம் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: சாரு நிவேதிதா. ஒரு ஐப்பசி மாதத்து அடைமழை இரவின் போது தான் அந்த நாயின் தீனமான அழுகைச் சத்தம் கேட்டது. அந்தத் திரு.வி.க. வீதியில் நாய்கள் அதிகம். அதிலும் விதவிதமான நாய்கள். பல இனத்தைச் சேர்ந்த நாய்கள் நறுக்கி விட்டதைப் போல் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: சாரு நிவேதிதா. இரவு ஒன்பது மணி சுமாருக்கு அந்தச் சம்பவம் நடந்தது. வீட்டுக் கதவை ‘ பட பட ‘ வென்று யாரோ தொடர்ந்து தட்டினார்கள். இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசித்தபடி வந்து பார்த்தால் வெளியே சுந்தரம். ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: சாரு நிவேதிதா. குளிராக இருந்த ஒரு விடியற்காலையில்தான் இறந்துபோன அந்த மனிதன் வீங்கிய ஒரு சூட்கேசுடனும் அக்குளில் இடுக்கிய சில நாளிதழ்களுடனும் இங்கிலாந்திலுள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் பறந்து வந்து இறங்கினான்.கைவசம் விசா இல்லாததனால் பிரிட்டிஷ் விமானத்தள அதிகாரிகள் அவனை ...
மேலும் கதையை படிக்க...
வீட்டுக்கு எதிரே தெரிந்த கூட்டத்தை பார்த்ததும் ‘பகீர்’ என்றது. கிட்டத்தில் போனதும் தான் எதிர் வீட்டில் கூடியிருந்த கூட்டம் என்று தெரிந்தது. ரூபவதியின் கணவர் கத்திக் கொண்டிருந்தார். ‘அடிப்பேன், வெட்டுவேன், குத்துவேன், கூறு கூறாகக் கிழித்துப் போடுவேன்’ என்றும் இன்னும் பிரசுரிக்க ...
மேலும் கதையை படிக்க...
புத்தாண்டுக் கொண்டாட்டம்
ஆட்டுக்கால் சூப்
முள்
கோடம்பாக்கம்
பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி
என் முதல் ஆங்கிலக் கடிதம்
அவ்வா
வெளியிலிருந்து வந்தவன்
உலக முடிவு வரை – தாமஸ் ஜோசப்
சைக்கிள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)