வியாதிகள் இல்லையடி பாப்பா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 19, 2022
பார்வையிட்டோர்: 9,858 
 
 

எனக்குத் தெரிந்து எந்தவிதப் போட்டியும் இல்லாமல் பிரமிக்க வைக்கும் கின்னஸ் உலகத்தின் உச்சாணிக் கொம்பில் உட்காரும் தகுதி எனது நண்பனும் இந்தக் கதையின் நாயகனுமாகிய ‘கிச்சா’ ஒருவனுக்குத்தான் உண்டு.

நண்பர்களால் ‘கிச்சா’ என்று செல்லமாக சுருக்கமாக அழைக்கப்படும் ‘வேங்கட ரமண வராக சீனிவாச வைத்தியநாத’ என்று ஆரம்பித்து ரொம்ப நேரம் கழித்து ‘கோவிந்த முகுந்த கோபாலகிருஷ்ணன்’ என்று ஒருவழியாக முடியும் முழுப்பெயர் கொண்ட (இந்த மூச்சு முட்டும் முழுப் பெயருக்காக ‘கிச்சா’ மீண்டும் ஒரு தடவை ‘பிரமிக்க வைக்கும் கி.உ.’வில் இடம் பெறலாம்…) இவனது கின்னஸ் சாதனை என்ன என்று கேட்பவர்களுக்கு, இதோ கிச்சாவின் கி.உ. சாதனை…

நாற்பது வயதாகும் கிச்சா, மருந்துக்குக்கூட(!) டாக்டரைப் பார்த்தது கிடையாது. அடைமழைக்குக்கூட ஆஸ்பத்திரியில் ஒதுங்கியது கிடையாது. கிச்சாவின் அகராதியில் மருந்து என்றால் சிவகாசி வெடிமருந்து ஒன்றுதான். அதேபோல் கிச்சாவுக்குத் தெரிந்த ஒரே மாத்திரை தீபாவளிக்குக் குழந்தைகள் கொளுத்தும் பாம்பு மாத்திரை! கிச்சாவிடம் யாராவது ‘அல்சர், அப்பென்டிசைடிஸ், டயாபடீஸ், டான்ஸில்ஸ்’ என்றால், சிறிது நேரம் பேந்தப் பேந்த விழித்துவிட்டு பிறகு சுதாரித்துக் கொண்டு ‘எனக்கும் திருப்பி கெட்ட வார்த்தைல திட்டத் தெரியாதா?’ என்று கேட்டுவிட்டு சகட்டுமேனிக்குத் திட்ட ஆரம்பிப்பான். இவ்வளவு ஏன், மழை வரும் அளவுக்குத் தலைக்கு மேல் புகை மண்டலம் உருவாக்கும் கிச்சாவின் அசுரத்தனமான சிகரெட் பிடிக்கும் கெட்ட பழக்கத்தை நிறுத்த நினைத்த அவனது ஆபீஸ் நண்பர், அவனுக்கு வண்டி வண்டியாக உபதேசித்து விட்டு முடிவில் நாக்கில் சனியாக ‘சிகரெட் புடிச்சா கான்ஸர் வரும்’ என்று எச்சரிக்க, கிச்சா அவர் சொக்காயைக் கொத்தாகப் பிடித்து ‘முண்டம்… சிகரெட் புடிச்சா புகைதான்டா வரும். நீ கான்ஸரோ என்னவோ ஒரு எழவு வரும்கறியே. சிகரெட் புடிச்சா எது வரும்னுகூடச் சரியா சொல்லத் துப்பில்ல. நீயெல்லாம் உபதேசம் பண்ண வந்துட்டே…’ என்று உலுக்கியபடி கேட்க, அவர் ஓட்டமாக ஓடிவிட்டார்.

என்னவோ பத்மஸ்ரீ, பத்மபூஷண் பட்டம் கிடைத்ததுபோல பிளட் பிரஷர், கொலஸ்ட்ரால், ஷுகர், ஸ்பான்டிலைடிஸ் என்று கிடைத்த வியாதியின் பெயர்களைப் பெருமையாக தெருத்தெருவாகப் பீத்திக் கொள்வதை நாமெல்லாம் ‘நாற்பது வயது நாகரிகமாக’ கருதும் இந்த நூற்றாண்டில், இந்த நாகரிகம் ஏதும் அறியாத கிச்சா எப்போதும் நையாண்டிக்கு ஆளாகும் ஓர் அப்பாவி காட்டுமிராண்டி! எது எப்படியோ, கிச்சாவின் இந்த அறியாமைதான் அவனது இன்றைய ஆரோக்கியம். கிச்சாவின் இந்த அறியாமை தந்த ஆரோக்கிய வாழ்வுதனைக் காத்திடும் லைஃப்பாய், இவனது தந்தைவழிப் பாட்டியான எண்பது வயது ‘எச்சுமிப் பாட்டி’!

நமக்குத் தலைவலி வந்தால் உடனே, இதற்குக் காரணம் கண்ணில் கோளாறா? கான்ஸ்டிபேஷனா? இல்லை, கபாலத்தின் உள்ளே கொப்பளமா என்று, வந்த தலைவலி திருகுவலியாக விஸ்வரூபம் எடுக்கும்வரை விதவிதமாக யோசித்து அல்லாடுவோம். காரணங்கள் கேட்டுக் குழப்பிக் கொள்ளத் தெரியாத காட்டுமிராண்டி கிச்சா, தனது தலைவலியை ரசீது போட்டு எச்சுமிப் பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு அவளது அதிரடி வைத்தியத்துக்கு ஆயத்தமாவான்.

வஜ்ஜிரம், கோந்து, கண்ணாடிச் சில்லு, பாட்டரி என்று கண்டதையெல்லாம் போட்டு காத்தாடிக் கயிறுக்கு மாஞ்சா தயாரிப்பது போல, எச்சுமிப் பாட்டி கையில் கிடைத்த மளிகைச் சாமானை எல்லாம் போட்டு சட்டி நிறைய ஒரு பஞ்சவர்ணக் களிம்பைத் தயாரித்து, அதைக் கிச்சாவின் முகத்தில் சுவாசிக்க மட்டும் இடம் விட்டு, கதகளி மேக்கப் போல போட்டுவிடுவாள். சரியாக ஒரு மணி நேரத்தில் கிச்சாவின் தலைவலி குணமானது என்பதைவிட, அதற்கு மேல் அந்தக் கண்றாவிக் களிம்பின் ‘கப்பு’ தாங்க முடியாமல் கிச்சாவை விட்டு தலைவலி இறங்கி எச்சுமிப் பாட்டிக்குத் தெரியாமல் எகிறிக் குதித்து ஓடிவிடும் என்றுதான் சொல்ல வேண்டும்.

வரும் முன் காக்கும் வைத்திய சிகாமணியான எச்சுமிப் பாட்டி வைகாசி, ஆனி மாதங்களில் கிட்டத்தட்ட ரெண்டு மூட்டை வெந்தயத்தை சுமார் நானூறு, ஐந்நூறு லிட்டர் மோரில் கலந்து கிச்சாவுக்கு ‘சலைன் வாட்டர்’ போல ஏற்றிக்கொண்டே இருப்பாள். அம்மி போல வெயிட்டான ஆரோக்கியசாலிகளே ஆடி மாசக் காலராவில் பாத்ரூமுக்குப் பறந்து கொண்டிருக்க… கிச்சா மட்டும் வெந்தய மோர் தந்த கான்ஸ்டிபேஷனில் மாதக் கடைசி வரை மப்பும் மந்தாரமுமாக இருப்பான்.

தமிழ்நாட்டில் ஒரு பயலையும் விட்டு வைக்காமல் அழிச்சாட்டியமாகத் தாக்கும் மெட்ராஸ்-ஐ போன்ற தீவிரவியாதிகளிடமிருந்து தன் பேரனைக் காப்பாற்ற எச்சுமிப் பாட்டி, வியாதிக்கு வியாதி என்ற ஒரு டெக்னிக்கைக் கையாள்வாள்.

பெரிய பெரிய டாக்டர்களையே திடீர்த் தாக்குதலால் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் இந்தத் தொத்து வியாதிகள், எச்சுமிப் பாட்டிக்கு மட்டும் தாம் வருவதற்குப் பத்து நாள்கள் முன்பாகவே, ‘அரைவிங் ஷார்ட்லி’ என்று அசட்டுத்தனமாக அவசரத் தந்தி அடித்துவிட்டுத்தான் வரும். மெட்ராஸ்-ஐ வருவதற்குப் பத்து நாள்கள் முன்பாக பாட்டிக்கு மூக்கிலும் பேரனுக்குக் கண்ணிலும் வேர்க்க ஆரம்பித்துவிடும். பாட்டியும் அவசர அவசரமாக ஓரிரு இலைகளைத் தனக்கு மட்டும் தெரிந்த ஃபார்முலாவில் கசக்கிப் பிழிந்து, அதிலிருந்து வரும் வறுமையின் நிறத்தைவிடக் காட்டமான சிவப்புக் கலர் சாற்றைக் கிச்சாவின் கண்களில் ஊற்றுவாள். இதனால் சிவந்த கிச்சாவின் போலி மெட்ராஸ்-ஓயைப் பார்த்துவிட்டு ஒரிஜினல் ஐ.எஸ்.ஐ. முத்திரை கொண்ட மெட்ராஸ் ஐ சற்று நேரம் குழம்பிவிட்டு ‘ஏன் வம்பு’ என்ற பாவத்தில் அடுத்த வீட்டுக் கண்களுக்கு ஓடிவிடும்.

இவ்வளவு ஏன்… சென்ற வருடம் ஒரு நாள் பாத்ரூமில் வழுக்கி விழுந்த எச்சுமிப் பாட்டியைக் காப்பாற்றப் போன கிச்சா, கால் தடுக்கி கீழே விழ அவனது வலது கை, ஜனகர் வில் போல உடைந்தது. காலனிவாசிகள் அனைவரும்கூடி கிச்சா நலன் கருதி எலும்பு முறிவுக் கட்டுப் போட்டுக்கொள்ள ஆஸ்பத்திரிக்குப் போகுமாறு கெஞ்சியும் அவன் கேட்கவில்லை. பாட்டி, அன்று இட்லிக்காக அரைத்த மாவை கிச்சாவின் வலது கையில் போட்டுப் பூசி, மல்லிகைப்பூ கிளையை ஒடித்து சப்போர்ட்டாக வைத்துக் கட்டி பதியன் போட்டாள். எச்சுமிப் பாட்டியின் கைராசியால் சரியாக ஒரு மாதத்தில் கிச்சாவின் உடைந்த வலதுகை எலும்பு சேர்ந்து ஒழுங்கானது. அதேசமயம் கட்டுப் போடப் பயன்படுத்தப்பட்ட மல்லிகைப்பூ கிளையின் செடி துளிர் விட்டு வளர்ந்து, கிச்சாவையே மூடும் அளவுக்கு மல்லிகைப்பூ பந்தலாக மாறியது. மணக்க மணக்க குணமானான் கிச்சா.

இப்படியாக… சர்வரோக நிவாரணி எச்சுமிப் பாட்டியிடம் தன்னைப் பரிபூரண சரணாகதி செய்து கொண்டதால், கிச்சா தனக்கு நாளொரு நோய் வந்தாலும் பாட்டியின் பொழுதொரு வைத்தியத்தால் பரம சௌக்கியமாக இருந்து வந்தான். பத்தாத குறைக்கு நோயற்ற வாழ்வில் இருந்த கிச்சா, டாக்டர் – பில் இல்லாத குறைவற்ற செல்வத்தால் நம்மைவிட வசதியாக வேறு வளர்ந்தான். ‘எதையும் தீர்ப்பாள் எச்சுமிப் பாட்டி’ என்ற நம்பிக்கையால், கூவத்தில் முங்கி முங்கிக் குளிக்கும் அளவுக்கு கிச்சா மனோதிடமும் ‘தில்’லும் பெற்றிருந்தான்!

எந்த மெட்ராஸ் ஐ வியாதிக்காரன் கண் பட்டதோ தெரியவில்லை… ‘டேப்லெட்டும் – சைட் எஃபெக்ட்ஸும்’ போல் சேர்ந்திருந்த பாட்டியும் பேரனும் பிரிந்தார்கள். காசி, கயா, பத்ரிநாத், ரிஷிகேஷ் என்று தான் வருவதாக வேண்டிக் கொண்டிருந்த புனித யாத்திரையைப் பூர்த்தி செய்ய காணியில் உள்ள மிச்ச மீதி பாட்டிகளோடு எச்சுமிப் பாட்டி புறப்பட்டுப் போனாள்.

அதற்கு ஒரு வாரம் கழித்து ஆபீஸுக்குக்கூட கிச்சா வராததைக் கேள்விப்பட்டு அவனைப் பார்க்க அடித்துப் பிடித்துக்கொண்டு அவன் வீட்டுக்குப் போனேன்.

நான் வீட்டுக்குள் நுழையும்போது, கிச்சா இடுப்பில் ஈர டவலோடு பாத்ரூமிலிருந்து உரலை இழுக்கும் கிருஷ்ணர்போல தவழ்ந்து வந்து கொண்டிருந்ததைப் பார்த்துத் திகைத்தேன். பாத்ரூமில் ‘ஒற்றைக் கண்’ சிவராசனைப் பார்த்தது போல் அவன் முகத்தில் அப்படி ஒரு பீதி…!

என்னைப் பார்த்தபிறகும் கிச்சா முகத்தில் பீதி அகன்றபாடில்லை. வேகமாகத் தவழ்ந்து வந்து தூணைப் பிடித்து எழுந்து நின்று, ‘நல்ல சமயத்துக்கு வந்தேடா… பாட்டி ஊருக்குப் போனதுல எனக்குப் பாதி பலம் போயிடுத்து… நாலு நாளா எழுந்து நின்னா தலை ரங்கராட்டினம் கணக்கா சுத்தறது… பல் தேக்கறதுலேர்ந்து குளிக்கறது வரை எல்லாக் காரியத்தையும் தவழ்ந்து போய் படுத்தவாறே பண்ண வேண்டியிருக்கு… அந்த அளவுக்கு அசுரத்தனமா தலை சுத்தறது… பாட்டி வேற ஊர்ல இல்லை… பயமாயிருக்குடா…’ என்று கூறிவிட்டுத் தேம்பி தேம்பி அழுதான்.

‘தோ பார் கிச்சா… பாட்டி வர்றதுக்கு நாலு மாசம் ஆகும்… அது வரை வெயிட் பண்ணா உன் தலை இப்ப சுத்தற வேகத்துக்குக் கழுத்தை விட்டுக் கழண்டு கீழே தரைல விழுந்து உருண்டு போனாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை… வா… நல்ல டாக்டரா போய் பார்ப்போம்’ என்று கிச்சாவைப் பயமுறுத்தி ஒரு ரிக்ஷாவில் தவழல் ஆசனத்தில் வைத்து எனக்குத் தெரிந்த டாக்டர் தர்மராஜன் நர்ஸிங் ஹோமுக்கு அழைத்துச் சென்றேன்.

வாழ்க்கையிலேயே முதல் முறையாக ஒரு டாக்டரைப் பார்க்கப் போகும் பயத்தாலும், ஏற்கெனவே தலைச் சுற்றலுக்குப் பயந்து தவழ்ந்தவாறும் டாக்டர் தர்மராஜன் நர்ஸிங் ஹோமுக்குள் நுழைந்த கிச்சா, பார்ப்பதற்குப் பலி ஆடு போலக் காட்சியளித்தான்.

கிச்சாவிடம் தெர்மாமீட்டரைக் கொடுத்து வாயில் வைத்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, கிச்சாவைப் பற்றித் தெரிந்துகொள்ள என்னைப் பக்கத்து அறைக்கு தர்மராஜன் அழைத்துச் சென்றார்.

தெர்மாமீட்டரையே பார்த்திராத கிச்சா, பழநி முருகனுக்கு வேண்டிக் கொண்டு இரு கன்னத்திலும் வேல்குத்திக் கொள்வது போல, டாக்டர் கொடுத்த தெர்மாமீட்டரை அகலவாட்டில் எசக்கேடாக வாய்க்குள் நுழைத்துக் கொண்டு, திரும்பி வந்த எங்களைப் பார்த்து, ‘இதற்கு அப்புறம் என்ன செய்வது’ என்ற மாதிரி விழித்தான். மேஜர் ஆபரேஷன் செய்யும் லாகவத்தோடு கிச்சா வாயில் இருந்து தெர்மாமீட்டரை டாக்டர் தர்மராஜன் விடுவித்தார்.

பிறகு பிளட் பிரஷர் பார்க்க கிச்சாவின் கையில் ஒரு ரப்பரை இறுக்கமாகச் சுற்றிவிட்டு, கார்ப்பரேஷன் குழாய் அடிப்பது போல ஆட்டோ ஹாரன் போன்ற ரப்பர் பந்தை தர்மராஜன் அழுத்தி ‘புஸ்க் புஸ்க்’ செய்ய… தேமே என்றிருந்த கிச்சாவின் பிளட் பிரஷர், பயத்தால் தக்காளி விலை போல ஏற ஆரம்பித்தது. தலை சுற்றலுக்கு முதலுதவியாக கிச்சாவின் பிருஷ்ட பாகத்தில் தர்மராஜன் ஓர் ஊசியைப் போட, வலியால் துடித்த கிச்சாவுக்கு தர்மராஜன், எமதர்மராஜனாகக் காட்சியளித்தார்.

டாக்டர் தர்மராஜன், மனுநீதிச் சோழனுக்கு ‘அகில இந்திய ரசிகர் மன்றம்’ வைத்திருப்பவர் என்பதால், எதையும் தீர விசாரித்துத் தெரிந்து கொள்ளாமல் மருந்து தரமாட்டார். விரலில் நகச்சுத்து என்று போனால்கூட, முதுகுத் தண்டுவடத்தில் ‘லம்பர் – பங்க்சர்’ செய்து திரவம் எடுத்துப் பார்த்துவிட்டுப் பிறகுதான் விரலில் லாலிபாப் மாதிரி எலுமிச்சம் பழம் வைத்துக் கொள்ளச் சொல்வார். ப்ரெய்ன் ட்யூமர், ஷார்ட் சைட், சைனஸ், த்ரோட் இன்ஃபெக்ஷன், கொலஸ்ட்ரால், ப்ளட் ஷுகர், யூரின் ஷுகர், அல்சர், ப்ளாடர் ஸ்டோன், கிட்னி ப்ராப்ளம் என்று அடுக்கிக் கொண்டே போன டாக்டர் தர்மராஜன், ‘கிச்சா தற்போது கர்ப்பம்’ என்பது தவிர, மற்ற எல்லா உபாதைகளையும் அவனது தலைச்சுற்றலுக்குக் காரணமாகத் தான் சந்தேகிப்பதாகக் கூறினார். ஏற்கெனவே வியாதிப் பெயர்களைக் கேட்டுக் குறுகியிருந்த கிச்சாவிடம் ‘இன்னின்ன வியாதிகளால் மரணம் இன்னின்ன வழிகளில் சம்பவிக்கும்’ என்று மேலும் மேலும் விலாவாரியாக தர்மராஜன் கூற, கிச்சா பயத்தில் சுருங்கி ஒடுங்கினான்.

கிச்சா விருப்பப்படி ஒரு ரூபாய் நாணயத்தை ‘டாஸ்’ போட்டுப் பார்த்ததில் தலை விழுந்ததால், முதலில் கிச்சாவுக்கு ப்ரெய்ன் ஸ்கேன் – இ.இ.ஜி. – செய்வதாக முடிவு செய்யப்பட்டது. கிச்சாவின் கபாலத்தைப் பரிசோதித்த டாக்டர், எக்ஸ்-ரே படத்தோடு வெளியே வந்து, கிச்சாவைப் பார்த்து ‘உங்க மூளையைப் பாத்தேன்… சுத்தமா ஒண்ணுமே இல்ல…’ என்று சிலேடையாகக் கூற, கிச்சாவுக்கு ஏக திருப்தி!

அடுத்ததாக இ.ஸி.ஜி. எடுக்க ஏதோ ஒரு கிளினிக்குக்குப் போனோம். அங்கிருந்த டாக்டர், கிச்சாவை அண்டர்வேரோடு மேஜையில் படுக்க வைத்து, ரிஃப்ளெக்ஸ் ஆக்ஷன் பார்ப்பதற்காக ஓர் அலுமினிய உருளையால் அவனது கணுக்கால், பாதம், முட்டி என்று தட்டிப் பார்த்தார். இது தெரியாத கிச்சா அவர் உள்ளே போனதும் என்னைப் பார்த்து, ‘எதுக்குடா என்னை அடிக்கறார்? எம்பேர்ல கோபமா…?’ என்று பரிதாபமாகக் கேட்டான். நான் பதில் சொல்வதற்குள் புயலாக நுழைந்த டாக்டர், கிச்சாவைப் பார்த்து ‘தோ பார் மேன்… ஓடியாடி வேலை செஞ்ச களைப்புக்கு அப்பாலயும் உன் ஹார்ட் நல்லபடியா வேலை செய்யுதான்னு பாக்கணும். அங்க ஒரு ஸ்டூல் இருக்கு. அதுல நீ நாப்பது தடவை ஏறி இறங்கணும். அப்பால இ.ஸி.ஜி. எடுப்போம். கம்பவுண்டர், இவரை இட்டுகினு போ…’ என்று கூற, கிச்சா அண்டர்வேரோடு அடுத்த அறைக்குப் போய் நுரை தப்ப ஸ்டூலில் ஏறி இறங்க ஆரம்பித்தான். நாற்பது தடவை கிச்சாவே எண்ணிக் கொள்வான் என்ற நம்பிக்கையில் கம்பவுண்டர் எண்ணாமல் இருக்க, கம்பவுண்டர் எண்ணுவான் என்று நினைத்ததால் கிச்சா எண்ணாமல் ஏறி இறங்க… கிட்டத்தட்ட நூத்தி நாப்பது தடவை ஏறி இறங்கிய கிச்சா, ஒரு கட்டத்தில் முடியாமல் ஸ்டூலில் இருந்து மயக்கம் போட்டுக் கீழே விழுந்தான். ஆச்சரியம் என்னவென்றால், அந்த அயர்ச்சியிலும் கிச்சாவின் இ.ஸி.ஜி. நார்மலாக இருந்தது. ஆளை விட்டால் போதும் என்று கிச்சாவும் நானும் வெளியே வர, அப்போதுதான் தெரிந்தது கிச்சா சுழற்றி வைத்த பாண்ட் ஷர்ட்டைப் போட்டுக்கொள்ள மறந்து அண்டர்வேரோடு தெருவுக்கு வந்த அசம்பாவிதம்.

அடுத்தபடியாக யூரின் டெஸ்ட், ப்ளட் டெஸ்ட் செய்துகொள்ள பிரபலமான லேப் ஒன்றுக்குச் சென்றோம். டாக்டர் தர்மராஜன் தம்மாத்துண்டு ஊசி போட்டதுக்கே ஊரைக் கூட்டிய கிச்சா, டெஸ்டுக்காகக் கையில் ரத்தம் எடுக்கும்போது என்ன லூட்டி அடிக்கப் போகிறானோ என்று பயந்து கொண்டிருந்த என் வயிற்றில் பால் வார்ப்பது போல அட்டகாசமாக ஒரு நர்ஸ் வந்தாள். பார்ப்பதற்கு ஜாடையில் குஷ்பு போல இருந்த நர்ஸைப் பார்த்ததும் முதன்முறையாக கிச்சாவின் தலை போதையில் சுற்றியது. ரத்தம் எடுக்கப்பட்டதுகூட கிச்சாவுக்குத் தெரியாதது ஆச்சரியம்தான்!

‘குஷ்பு’ நர்ஸ் போனதும் வாட்டசாட்டமாக ஒரு ‘குங்ஃபூ’ நர்ஸ் வந்து கிச்சாவிடம் யூரின் சாம்பிள் எடுக்க ஒரு குப்பியைத் தந்து பாத்ரூமுக்கு விரட்டினாள். யூரின் சாம்பிள் குப்பியை ஒலிம்பிக் ஜோதி போல பிடித்தபடி பாத்ரூமைவிட்டு வேகமாகக் கிச்சா வர, அப்போது அங்கு, என்னவோ பார்ட்டியில் விஸ்கி கிளாஸோடு அலைபவர் போல திரிந்து கொண்டிருந்த ஒரு பெரியவரும் கையில் யூரின் சாம்பிள் குப்பியோடு வர, கிச்சாவும் பெரியவரும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் ‘சியர்ஸ்’ சொல்லிக் கொள்ளாத குறையாக குப்பிகளை மோதி உடைத்தார்கள். கிச்சாவின் யூரின் டெஸ்ட் அதற்குப் பிறகு அரை மணி நேரம் கழித்து, ஐந்தாறு ஆரஞ்சு ஜூஸ் கொட்டிக்கொண்டதில் முக்கி முனகி சுபமாக முடிந்தது.

‘யான் பெற்ற துன்பம் பெறுக இக் கிச்சா’ என்ற வக்கிரத்தில் நான் ஆவலோடு எதிர்பார்த்த என்டோஸ்கோப்பி டெஸ்ட் வந்தது. கிச்சாவைத் தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் போஸில் படுக்க வைத்து… அவன் வாயில் ஒரு ரப்பர் குழாயை டாக்டர் வயிறைத் தொடும்வரை நுழைத்துக்கொண்டே இருந்தார். பார்ப்பதற்குக் குழாயின் விட்டம் சிறியதாக இருந்தாலும், அது தொண்டை வழியாகச் செல்லும்போது நமக்கு வீராணம் குழாயையே விழுங்குவது போல ஒரு எண்ணம் வந்துவிடும்! முழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் கிச்சா விழி பிதுங்க என்னையும் டாக்டரையும், உண்மையை வரவழைக்கக் கைதிகளைக் கொடுமைப்படுத்தும் ஹிட்லரைப் பார்ப்பது போலப் பார்த்தான். வயிற்றுக்குள் போன குழாயின் நுனிப்பகுதியில் உள்ள பல்ப், கிச்சாவின் வயிற்றை வெளிச்சம் போட்டுக் காட்ட, மறுமுனையில் பொருத்தப்பட்ட மைக்ராஸ்கோப் வழியாக டாக்டர் பார்த்து ‘ இதுதான் சிறுகுடல், இது வயிற்றுப் பகுதி… அங்கே தெரியுது பாருங்க, அதுதான் பெப்டிக் அல்சர் வர்ற இடம்’ என்று மகாபலிபுரம் கைடு போல எனக்கும் காட்டி விளக்கினார். என்டோஸ்கோப்பி பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட கிணற்றில் தூர்வாருவது போல இருந்தது. டெஸ்ட் முடிந்த ஒரு மணி நேரத்துக்கு கிச்சா வாயில் குழாய் இருப்பதாக நினைத்து வாயை பலூன் ஊதும் போஸில் வைத்திருந்தது வேறு விஷயம்.

இப்படியாகக் கிச்சாவின் அல்ப தலைச் சுற்றலுக்காக நாங்கள் தலைநகரையே சுற்றினோம். கிச்சாவின் டெஸ்ட் ரிசல்ட்டுகளைப் பார்த்த டாக்டர் தர்மராஜன், ‘எல்லாம் நார்மலாக இருக்கிறது’ என்றார். இருந்தும் கிச்சா தலைசுற்றுகிறது என்று அடம்பிடித்தான். அதைக் கேட்டு டாக்டர் தர்மராஜனுக்கே தலைசுற்றியது. தன் பங்குக்குக் கிச்சாவுக்கு எக்கச்சக்கமான மருந்து மாத்திரைகளைத் தந்தார். இதனாலெல்லாம் அலுத்துப்போன கிச்சா, தலைச் சுற்றலுக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டான். நானும் அலுத்துப்போய் கிச்சாவைக் காண்பதை நிறுத்தினேன்.

காசிக்குப் போன எச்சுமிப் பாட்டி திரும்பிவிட்டதாகக் கேள்விப்பட்டு ஒரு நாள் கிச்சாவின் வீட்டுக்கு காஷுவலாகப் போனேன். கடுமையான ஜுரத்தில் கிச்சா கொதிக்கக் கொதிக்க தீச்சட்டி கோவிந்தன் போலப் படுத்திருந்தான். என்னைப் பார்த்து ஓடிவந்த எச்சுமிப் பாட்டி, ‘ஏண்டா, நான் காசிக்குப் போன சமயத்துல இங்க என் பேரனுக்கு என்னாச்சு? சாதாரணமா ஜுரத்துக்கு கஷாயம் வெச்சுத் தரேன்னு நான் சொல்லி முடிக்கறதுக்குள்ள கிச்சாவுக்கு பாதி ஜுரம் எறங்கிடும். இப்ப என்னடான்னா ஒரு சொம்பு கஷாயம் குடிச்சுட்டு மூடின கண்ணைத் தொறக்காம படுத்துருக்கான். என் பேரனுக்கு என்னாச்சு, புரியலையே…’ என்றாள். எனக்குப் புரிந்தது. பாட்டி சொல்லைத் தட்டாமல் சும்மா இருந்த கிச்சா என்ற சங்கை டாக்டர், அல்சர், கொலஸ்ட்ரால், இ.ஸி.ஜி., இ.இ.ஜி., என்டோஸ்கோப்பி என்று ஊதிக் கெடுத்தது எனக்கு உறுத்தியது.

கிச்சாவின் உபாதைகள் எச்சுமிப் பாட்டியின் கஷாயம், களிம்பு, சூரணத்துக்கெல்லாம் மசியவில்லை. அதே சமயம் அலோபதி மருந்துகளும் கிச்சாவுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஒருமுறை கிச்சாவுக்கு எரித்ரோஸின் மாத்திரை தர முயற்சித்ததில் அது ஏ.கே. 47 துப்பாக்கியிலிருந்து ‘புல்லெட்’ வரும் வேகத்தில் முழுசாக வாயில் இருந்து வெளியே பாய்ந்து டாக்டரின் மூக்குக் கண்ணாடியையே உடைத்து அவரை ‘ஒற்றைக் கண்ணனாக’ ஆக்கியது.

இப்படியாக மருந்து விஷயத்தில் கிச்சா இரண்டுங்கெட்டானாக ஆகிவிட்டதால், கடைசியில் எச்சுமிப் பாட்டி கோபத்தோடும் தமாஷாகவும் ‘எல்லாம் ட்ரை பண்ணியாச்சு. இனிமே ரெண்டையும் சேர்த்துத் தரவேண்டியதுதான் பாக்கி!’ என்று ஒப்பாரி வைத்தாள். கடைசியில் அந்த ஒரு ஐடியாதான் கிச்சாவை எழுந்து நடக்க வைத்தது!

இப்போது கிச்சாவுக்கு வயிற்று உபாதை என்றால் டைஜீன் மாத்திரையை ஓமம் கஷாயத்தில் கலந்து கொடுத்தால்தான் சரியாகிறது. தலைவலி என்றால் எச்சுமிப் பாட்டி தரும் சூரணத்தோடு ‘விக்ஸ் வேபோரப்’பைக் குழைத்து நெற்றியில் தடவிக் கொள்கிறான். இப்படியாக வீட்டில் ஒரு அறையை ‘லேப்’ ஆக மாற்றி இஞ்சி ப்ரூஃபன், திப்பிலி ஸ்டிராய்டு, சல்ஃபா பூண்டு மைஸின் என்று ஸ்பெஷல் ‘மருந்துகள்’ செய்ய வேண்டியிருப்பது கொஞ்சம் பிரச்னையாக இருப்பதாக எச்சுமிப் பாட்டி போன வாரம் என்னிடம் புலம்பியபோது பாவமாகத்தான் இருந்தது!

– மிஸ்டர் கிச்சா, முதற் பாதிப்பு: 2004, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *