வளர்சிதை மாற்றம்!

 

நிறைய புதுக் கவிதைகளும், நாற்பதுக்கு மேல் கேள்விகளும், கிட்டத்தட்ட நூறு வாசகர் கடிதங்களும் பிரசுரமாகியும், ஒரே ஒரு கதை எழுதிப் பிரசுரமாவது மட்டும் விஜயனுக்கு இதுவரை சித்திக்கவில்லை!

எழுதி அனுப்பும் கதைகளுடன் விளக்கம், இரங்கல், கெஞ்சல் என இணைப்புக் கடிதங்களும் அனுப்பிப் பார்த்தான். கதைத் தலைப்பு, கதைக் கரு, முடிவு என எதனையும், தனது பெயர் தவிர மாற்றிக்கொள்ளலாமென வாக்குமூலம் தந்தான். எந்த எமகாதகனும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரே ஒரு கதை மட்டும் பிரசுரமாகிவிட்டால், இவனது இலக்கியத் திறன் எட்டுத்திக்கும் பரவும் என்பதோடு பொண்டாட்டி சம்பளத்தில் சாப்பிடும் வெட்டிப்பயல் எனும் அவச் சொல்லும் நீங்கி விடும் என நம்பினான்.

எழுதுவதைவிடவும் எந்தப் பெயரில் எழுதுவது என்பதுதான் மிகவும் குழப்பமாக இருந்தது. விஜயன் எனும் தன் பெயரோடு ஈன்றெடுத்த தன் தாயின் பெயரையும் இணைத்து ரத்தின விஜயன் எனும் பெயரில் கவிதை எழுதலானான். கடந்த ஆண்டு இதே பெயரில் மதுரையில் ஒரு நரம்பன் அறிமுகமானதும் தனது பெயரை ஜெய ரத்ன விஜயன் என மாற்றினான். இப்பெயர் ஒரு இனப் படுகொலையாளனின் பெயரின் சாயலில் உள்ளதென கவிஞர் தமிழமுதன் எனும் மாரிமுத்து சங்கடப்படவே, வீர ரத்ன விஜயன் ஆனான்.

எந்த வேலைக்கும் போகாமல் எழுதுவதையும் தபால்கள் அனுப்புவதையுமே வாழ்க்கையாகக்கொண்ட வீர ரத்ன விஜயனை, அவன் மனைவி தேவகி குறைப்பட்டுக்கொள்ளாத நாளில்லை. மெட்ரிகுலேசன் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரியும் அவளுக்கு எழுத் தாளனின் உள்ளக்கிடக்கைகள் புரிபடவில்லை. யாரிடமாவது இவன் தன்னை எழுத்தாளன் என்று சொன்னால் பொங்கி எழுவாள். ஆனால், டீக்கடை பழனி, கரிக்கடை முஸ்தபா பாய், பலசரக்குக் கடை அண்ணாச்சி ஆகியோர் வாய் நிறைய ‘வாங்க எழுத்தாளரே!’ என்பார்கள். கற்றாரைக் கற்றாரே காமுறுவர்!

நிற்க. வீட்டுக்கு வருகிற உறவினர்கள் இரண்டு ரகம். இவனைக் கேவலப்படுத்துவதற்காகவே வந்து போகிறவர்கள் ஒரு ரகம். வந்த இடத்தில் கேவலப்படுத்திவிட்டுப் போகிறவர்கள் மற்றொரு ரகம். அந்தத் துஷ்டர்களிடம், அம்மா ‘இவன் சும்மாதான் சுத்துறான்’ எனும்போது, வீர ரத்ன விஜயன் ரத்தக் கண்ணீர் வடிப்பான். வந்த துன்மார்க்கர்கள் அதே கேள்வியை மீண்டும் தேவகியிடம் கேட்டு ‘கிராஸ் செக்’ செய்யும்போது, ‘விவசாயம் பாக்குறாங்க’ என்பாள். அத்தகைய தருணங்களில் தாயே தேவலை என்று தோன்றும்.

யார் கேட்டாலும், ‘நான் ஒரு ரைட்டர்’ என்பான். இலக்கிய ஞானம் அற்றோர் ‘அப்படின்னா?’ எனக் கேட்டு தங்கள் அறியாமையை வெளிப்படுத்துவதுண்டு. அத்தகைய தருணங்களில் ஒரு துறவியைப் போல பற்றற்ற புன்னகையை உதிர்த்து நகர்ந்துவிடுவான்.

சாமர்த்தியமாய் குடும்பம் நடத்தத் தெரிந்த தேவகிக்கு, இவனது கவிதைகள் பிடிப்பதில்லை. ஆனபோதிலும் பெண் உணர்வு குறித்த கவிதையை ஒரு பெண்ணிடமின்றி யாரிடம் வாசிக்க முடியும்? விஜயன் இருமுறை வாசித்தபோதும் கட்டுரை நோட்டுக்கள் திருத்திக்கொண்டு இருந்த தேவகி சலனமற்று இருந்தாள். சற்றும் மனம் தளரா வீ.ர.விஜயன் அவளருகே சென்று மீண்டும் ஒமுறை வாசிக்கலானான்.

”போய் கோதுமை அரைச்சுட்டு வர முடியுமா, முடியாதா?” என்றாள்.

இப்படி தேவகி தீர்மானகரமாய் கேட்கும்போது மறுத்துவிட்டால், எஸ்.எஸ்.எல்.சி., ஃபெயிலானதில் ஆரம்பித்து கிழமை மறந்து ஞாயிற்றுக்கிழமை கரன்ட் பில் கட்டப் போனது வரை அடுக்க ஆரம்பித்துவிடுவாள். அல்லது போன வாரம் சொன்னது போல, ”நியூயார்க் பத்தி கதை எழுதுறீங்களே… என்ன தெரியும் உங்களுக்கு? எழுதணும்னு நினைச்சா, உருப்படியாத் தெரிஞ்சதை எழுதுங்க” என்பாள்.

வேறு வழியில்லாமல், அந்த எவர்சில்வர் வாளியைத் தனது மொபெட்டின் முன்னால் வைத்தான். ”அடுத்த தெருவுக்கு வண் டியா?” என்று கேட்டவளைமுறைத் தபடி கிளம்பினான்.அங்கேதான் சனியன் சடை போடத் துவங் கியது.

என்னவோ இன்றைக்கு சாயந்திரமே எல்லா மாவு மில்களையும் குண்டு போட்டுத் தரைமட்டமாக்கப் போகிற மாதிரி அநியாயத்துக்குக் கூட்டம். ‘எந்த மில்காரனுக்கு ‘ரைட்டரை’ அடையாளம் தெரியப்போகிறது? பாட்டி சொன்ன மந்திர தந்திரக் கதை எழுதுற பொம்பளையெல்லாம் வெளிநாட்டில் கோடி கோடியாச் சம்பாதிச்சு உலகப் பணக்காரர் பட்டியலுக்கு வந்துடறா. நம்ம நாட்ல படைப்பாளி கோதுமை மாவு அரைக்க கியூவுல நிக்கறான்.’

உள்ளே நுழைந்ததும், தொடர் தும்மல் வர ஆரம்பித்தது. மில்லின் எந்தப் பகுதியில் நின்றாலும் அந்தச் சத்தமும் தூசியும் எரிச்சலூட்டின. முகமும் முடியும் வெள்ளை பூசியிருந்த மாவு அரைக்கும் பெரியவரிடம், ”நான் ஒரு ரைட்டர்” என்றான். சத்தத்தில் ‘இன்னிக்கு வியாழக்கிழமை’ என்பதாக அதனைப் புரிந்துகொண்டு ‘தள்ளி நில்’ என்பதாகக் கைச்சாடை காட்டினார். தொடர்ந்து ஒரு வாரம் இங்கே வேலை பார்த்தால் ஆயுள் செவிடாக மாறவேண் டியதுதான் என நினைத்தான்.

வாளி வரிசையில் வர, இவன் எதிர்க் கடைக்குப் போய் சிகரெட் வாங்கினான்.

மீதி சில்லறை வாங்கும்போது சம்பந்தமில்லாமல் கடைக்காரரிடம், ”மனுஷன் வக்கணையாச் சாப்பிடுறதுக்கு எவ்வளவு பேர் கொடுமைப்படுறாங்க பாருங்க. ஆதி மனுஷங்க போல கிடைக்கிறதை அப்படியே சாப்பிட்டுப் பழகிட்டா உடம்புக்கும் நல்லது, உலகத்துக்கும் நிம்மதி” என்றான். கடைக்காரர் திகிலடையவே உள்ளூர மகிழ்ந்து தெரு முழுதும் காலாற நடந்தான்.

அரை மணி நேரத்துக்கு மேலாகிவிடவே மில்லுக்குள் நுழைந்தான். அரைத்து முடித்திருந்தது. வாளியை மொபெட்டின் முன்னால் வைத்துவிட்டு, வண்டிச் சாவிக்கு பைக்குள் கைவிட்டான். காணவில்லை. மில்லுக்குள் நின்ற இடமெல்லாம் தேடிப் பார்த்தான். பெண்கள் அவரவர் பாத்திரங்களை இறுகப் பிடித்துக்கொண்டு இவனை முறைத்தனர். தெரு முழுதும் பதற் றத்துடன் தேடினான். எழுத்தாளன் ரத்தின விஜயன் எனும் வீர ரத்ன விஜயன், வெறும் விஜயனாய் மாறி பரபரப்படைந்தான். என்ன செய்வதெனத் தெரியவில்லை.

இப்படியான நேரங்களில்வழக் கமாய் தேவகியிடம்தான் யோசனை கேட்பது. தனது முட்டாள்தனப் பட்டியலில் மேலும் ஒன்றாக இதையும் சேர்ப்பாள் என எண்ணித் தவிர்த்தான்.

பக்கத்தில் யாரோ ஒரு ‘மக்கள் சேவகன்’ மொழிந்ததைக் கேட்டு, மெக்கானிக்கை வரவழைத்து பக்கவாட்டுப் பூட்டை உடைத்தான். வாசலிலேயே காத்திருந்தாள் தேவகி. தான் பட்ட சிரமங்களை பயணக் கட்டுரை ரேஞ்சில் விளக்கிக் கூறினான். பிள்ளைகள் எழுதிய கட்டுரைகளைத் திருத்தி கை ஒடிந்திருந்த தேவகி, தலையில் அடித்துக்கொண்டு, ”வீட்லதான் இன்னொரு சாவி இருக்கே. ஒரு எட்டு வந்து அதை எடுத் துட்டுப் போயிருக்கலாம்ல” என்று சர்வசாதாரணமாய் தேவகி சொல்லும்போது, ‘தனக்கு அது நினைவில்லையே’ என விஜயன் கலக்கமுற்றான்.

‘கூறு கெட்ட மாடு நூறு கட்டு புல்லு தின்னுச்சாம்’ எனும் தேவகியின் எதுகை நிறைந்த சொலவடை, கவிஞனை மேலும் கோபப்படுத்தியது. அந்த நேரம் பார்த்து, ஆறுதல் என்ற பெயரில், அவன் தாய் ரத்தினம்மாள், ”அவனப்பத்தி உனக்குத் தெரியாதா? விடும்மா!” என ஏதோ பிறவியிலேயே மனநலம் குன்றியவனைப் போல் அனுதாபப்பட்டது கொஞ்சம் ஓவராகத் தெரிந்தது விஜயனுக்கு. வெளிக் கதவைப் பலம்கொண்ட மட்டும் ஓங்கிச் சாத்திவிட்டு வெளியேறினான்.

பாண்டி கடையில் இரண்டு சிகரெட்கள் வாங்கிக்கொண்டு மனம் வெதும்பி நடக்கலானான். யாருமற்ற பாதையில் இடையிடையே தனக்குத்தானே பேசிக்கொண்டு நடந்தான். கொஞ்சம் கால் வலிக்கிற மாதிரி இருந்தது. ஒரு சிறு கல்பாலத்தில் கால் நீட்டி உட்கார்ந்தான். கையைத் தலைக்கு வைத்துப் படுத்தான். இதமான காற்று சுகமாக இருந்தது. வானம் இருட்டத் தொடங்கியது.

யாரோ தட்டுகிற மாதிரி இருந்தது. விழித்துப் பார்த்தான். இருட்டியிருந்தது. புரண்டு திரும்பு கையில், பக்கத்தில் போலீஸ் ஜீப் வெளிச்சம்.

”யார்றா நீ? இங்க எதுக்கு ஒளிஞ்சு இருக்குற?”

”ஒளியலை சார். என் பெயர் விஜயன் சார்!”

”என்ன செய்ற?”

”ரைட்டர் சார்.”

”எந்த ஸ்டேஷன்ல?”

”அந்த ரைட்டர் இல்ல சார். கதை, கவிதை எழுதுற ரைட்டர். எழுத்தாளர்.”

”ஓஹோ… வண்டியில ஏறு.”

”எதுக்கு சார்?”

”சொல்றேன்ல… ஏறுடா!”

”சார் திட்டாதீங்க. நான் சும்மாதான் வந்து படுத்தேன். அசந்து தூங்கிட்டேன் சார்.”

”பாம் வைக்கிறவன்கூட சும்மாதான் வந்தேன்னு சொல்றான். வண்டியில ஏறுடா …………….!”

வாழ்வில் ஒருமுறைகூட வந்தறியாத ஸ்டேஷனுக்குள் வந்ததும் வேர்க்க ஆரம்பித்தது. அவசரமாக ஒண்ணுக்குப் போக வேண்டும் போலிருந்தது. யாரிடம் கேட்டுப் போவதெனத் தெரியவில்லை. சட்டையைக் கழற்றி நாற்காலியில் தொங்கவிட்டு பனியனோடு எழுதிக்கொண்டிருந்த ஒருவர் இவனை அழைத்து, பெயரைக் கேட்டார். இவன் பெயரைச் சொல்லாமல், ”சார், சார்” என்று கெஞ்சினான். அவர் பொளேரென அறைந்ததும் பேச்சற்றுப் போனான்.

முகவரியை இவன் சொல்ல, அவர் எழுதி முடித்ததும்உள்ளே போய் உட்காரச் சொன்னார். உள்ளே ஏற்கெனவே நான்கைந்து பேர் உட்கார்ந்திருந்தனர். அதில் ஒரு மஞ்சச் சட்டைக்காரன், ”சாதாரண கேஸ் போட்டு விட்டுருவாங்கய்யா. காலைல வீட்டுக்குப் போயிரலாம். இதுக் கெல்லாம் அழுகாதப்பா. சிகரெட் வெச்சுருக்கியா?” என்று கேட்டான். எந்த இடத்திலும் ஓர் அனுபவசாலி இருப்பான்அல்லவா!

பயம் கூடி, பின் தணிந்தது. சிறுநீர் கழித்துவிட்டு வந்ததும் மிகுந்த நிம்மதியாக இருந்தது. அந்தக் கொசுக்கடியிலும் சற்று நேரத்துக்கெல்லாம் மஞ்சள் சட்டை குறட்டைவிட்டுத் தூங்கியது. எப்போது கண்ணயர்ந்தான் எனத் தெரியவில்லை.

என்னதான் வம்புதும்புகளுக்குப் போகாத நடுத்தர வர்க்கத்து ஆளாக இருந்தாலும் விஜயனுக்குள்ளும் ஒரு சத்திய ஆவேசம் கனன்றது. கண் விழித்தவன், ”என்ன காரணத்துக்கு எங்களை இங்கே வைத்திருக்கிறீர்கள்?” எனச் சத்தமிட்டான்.

போலீஸ்காரர் எழுந்து வந்து இவனை நாலு சாத்து சாத்திவிட்டு இவன் குடும்பத்து மூன்று தலைமுறைப் பெண்களையும் திட்டிவிட்டு உட்கார்ந்தார். கண நேரத்தில் விஜயன் உள்ளறையிலிருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டான். அதைப் பறிக்க வந்த காவலரைச் சுட்டான். எட்டிப் பார்த்த அடுத்த இரண்டு போலீஸாரையும் சுட்டுக் கொன்றான். அனைவரும் ரத்த வெள்ளத்தில் மிதக்க, மீதமிருந்த குண்டுகளை வெற்றுச் சுவர்களை நோக்கிச் சுட்டுத் தீர்த்தான்.

”மனிதனை மதிக்கத் தெரியாத உங்களுக்கு ஒரு தமிழ் எழுத்தாளன் கற்றுத் தந்த பாடம் இது” என கர்ஜித்தான்.

”தூக்கத்தில் உளறாதய்யா!” எனப் பக்கத்தில் இருந்தவன் தோளில் தட்டவும்தான் விஜயன் கண் விழித்தான்.

விடிந்ததும் ஒவ்வொருவராய் போய் வீட்டுக்கு போன் பேசச் சொன்னார்கள். அந்த அதிகாலைத் தெரு விளக்குகளின் வெளிச்சத்தில், தெரு மிகவும் அழகாக இருந்தது. தேவகியிடம் போனில் பேசும்போது, ஏனோ அவள் மறுமுனையில் அதிகமாக அழுதாள்.

ஆட்டோவில் தேவதாஸ் மாமாவுடன் வந்து இறங்கினாள். ”பத்து மணிக்கு அய்யாவை வந்து பார்க்கணும். அப்புறம் கோர்ட்ல ஃபைன் கட்டணும்” எனும் நிபந்தனையுடன் வெற்றுப் பேப்பர்களில் கையெழுத்து வாங்கி அனுப்பிவைத்தார்கள்.

நல்ல நாளிலேயே, ‘எழுத்தாளன் வெளக்குமாறுன்னுட்டு. பேசாம ஒரு வேலைக்குப் போற வழியப் பாருங்க’ என்பாள் தேவகி. இனி இந்த சம்பவத்தை அடிக்கடி மேற்கொள்காட்டி, மீதி ஆயுளையும் ரணகளப்படுத்தப் போகிறாள் என நினைத்தான்.

ஆட்டோவிலும் தேவகி பேச வில்லை. கண்கள் சிவந்திருந்தன. இரவெல்லாம் அழுதிருப்பாள் போலிருந்தது.

வீட்டுக்குள் வந்ததும், ”ஏன்டா தம்பி, அடிச்சுட்டாங்களா?” என அனத்திக்கொண்டே இருந்தது. ”இல்லே, கொஞ்சுனாங்க. போம்மா” என்றதும் அம்மா நாட்டுக் கோழி வாங்கக் கிளம்பியது.

தேவகி காபியை ஆற்றிக்கொண்டே உள்ளே வந்தாள். ‘கொல்லப் போறா இன்னிக்கு’ என நினைத்தான்.

”ஏங்க ஒரு போன் பண்ணியிருக்கக் கூடாதா? எங்கேன்னு தேடுறது. என்னன்னு பதறுறது?”

”………………………………………..”

”கண்ணெல்லாம் கலங்கிஇருக்கே. அடிச்சுட்டாங்களாங்க? அவங்களுக்கு எல்லாருமே ஒண்ணு தாங்க. நக்குற நாய்க்கு செக்குன்னு தெரியுமா… சிவலிங்கம்னு தெரி யுமா!” என்றவளை ஆச்சர்யமாகப் பார்த்தான்.

”உலகம் பூரா எழுத்தாளருங்க ஜெயிலுக்குப் போயிருக்காங்க. இதுக்காக வருத்தப்படாம, இதப்பத்தியேகூட எழுதுங்க. தெரியாததை எழுதுறதுக்குப் பதிலா பட்டதை எழுதுங்க. யாருக்காவது உறைக்கும்!”

‘உலக எழுத்தாளர்களோடு ஒப்பிட்டு என் தேவகிதானா பேசுவது?’

அந்தக் கணத்தில் விஜயனுக்கு உலகமே முற்றிலும் புதிதான ஒரு கதை போலவும் தேவகி ஆகப்பெரும் அழகான கவிதையாகவும் தெரிந்தாள்!

- 23rd ஏப்ரல் 2008 

வளர்சிதை மாற்றம்! மீது 2 கருத்துக்கள்

  1. Nithiya Venkatesh says:

    Arumaiyaga ullathu..

  2. augustin says:

    nalla sinthanai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)