வணக்கம் தல

0
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 8,150 
 
 

நடக்கவே முடியாத விஷயங்களை நடந்ததாகச் சொல்லி, உங்களை மட்டுமல்ல… ஊரையே ஒருவர் ஏமாற்றி னால், அவர் பெயர்தான் பளு. சென்னை நகரின் கட்டடங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு இருக்கும் குடிசை ஏரியாக்களில் இன்னமும் வாழ்கிறார்கள் பளுவான்கள்!

தலைவர்தான் நம் கதையின் பளு. அவருடைய மூணு வயது மகனுடன் லுங்கியை அடித்து மடித்துக் கட்டிக் கொண்டு, கடைக்கு அழைத்து வரும் ஸ்டைல் அவருக்கு மட்டுமே உரியது. ”கடில கீறவங்க எல்லாம் ஒதுங்குங்க. கொய்ந்த அய்ட்டத்தப் பாத்து வாங்க ணும்ல. இன்னாடா வோணும்? இன்னா வோணும்… எது வொண்ணா லும் வாங்கிக்கோ.”

குழந்தை கடையில் உள்ள பொருட்களை எல்லாம் ஒரு பார்வை பார்த்துவிட்டு, பெரிய சைஸ் கேட்பரீஸ் சாக்லேட்டைக் கை காட்டும். விலை அதிகம் என்பதை உணர்ந்த தலைவா, ”சாக்லேட்லாம் உடம்புக்கு ரிஸ்க்கு நைனா… ரஸ்க்கு வாங்கிக்கோ” என்பார். கடைக்காரருக்கு மட்டுமல்ல; குழந்தைக்கும் தெரிந்தே இருந்தது. ரஸ்க்தான் தலைவாவோட ஆல் டைம் பர்ச்சேஸ் என்பது.

தலைவாவுக்குத் தெரியாத விஷயம் ஏதும் இல்லை. எல்லாம் தெரியும் என்பார். எப்போதும் செல்லில், ”செவன் குரோர்னு சொல்றான், ஃபைவ் குரோருக்கு ஃபைனலைஸ் பண்ணிடலாம். பார்ட்டிய மட்டும் நீங்க கரெக்ட் பண்ணுங்க” என்பார். மேல சொன்ன குரோர்கள் ஏறும்… இறங்கும். தலைவா சொல் மட்டும் மாறாது. யாரும் எதுவும் கேட்காமலேயே அவராகவே பேச்சை ஆரம்பித்து, பளுக்களைத் தள்ள ஆரம்பிப் பார் தலைவா.

”என்ன இவ்னே, கண்ணு ஏன் ரெட்டாக் கீதுன்னுதானே பாக்குற?”

”ஆமா தல?”

”நைட்லாம் தூக்கம் இல்லபா.”

”இன்னாத்துக்கு?”

”ஏன்னுதானே கேக்குற? வீட்ல இருந்த எல்லாப் பொருளையும் (பொருள்: ரவுடிகள் பயன்படுத்தும் கத்தி, பைப் போன்றவற்றின் குறி சொல்!) மூட்ட கட்டி நைட்டு எத்தும் போயி அடையார் ஆத்துல போட்டு வன்ட்டேன்.”

”ஏன் தலைவா?”

”கல்யாணம் ஆயி, கொயந்த குட்டினு ஆன பெறவு, முன்னாடி மாறியே தவ்லத்தா இருக்கக் கூடாதுல்ல… எல்லாத்தியும் தல மூய்கிறதுதானே சரி, அதான்!” (தலைவா சண்ட போட்டு யாரும் இதுவரை பார்த்ததே இல்லை. நாட் டான் கடையில் மாங்காய் திருடி, அவரைக் கட்டி உதைத்தது எல்லாம் பழைய கதை.)

ஒருமுறை லொட்ட சுரேஷ§ம், அவன் ஃப்ரெண்டு அமுதுவும், தெருவில் வந்து கொண்டு இருந்தார்கள். தலைவாவைப் பார்த்துவிட்ட லொட்ட சுரேஷ், ”வணக்கம் தல” எனக் கும்பிட்டான்.

”வணக்கம்… வணக்கம். இன்னா, வெளிய எங்கியோ கௌம்பிட்ட போலகீது…”

”ஆமா தல. இது நம்ம பிரண்டு அம்து… இவனுக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கணும். அதான் போய்க்கிட்டு இருக்கோம்.”

”இன்னா வெலைல வாங்கப் போறீங்க?”

”ஒரு 15 ஆயிரத்துல இருந்து… 20 ஆயிரத்துக்குள்ள…”

”நம்ம வீட்ல ஒரு கம்ப்யூட்டர் பிரியாதான் இருக்கு, அத எடுத்துக்கிட்டு போ.”

”வெல எவ்வளவு தல?”

”பிரியா வோணும்னா எடுத்துக்க. இல்ல, எட்த்தக் காலி பண்ணு.”

”அது நல்லாயிருக்காது தல.”

”நம்ம கம்ப்பியூட்டர் நல்லா இருக் கும்பா.”

”ஐயோ… நான் அதச் சொல்லல தல… காசு கொடுக்காம…”

கூட வந்த பிரண்டும், ”ஆமா சார்… காசு கொடுக்காம ஒரு பொருள எப்படி வாங்க முடியும் சொல்லுங்க…”

”அப்போ, காசு கொடுக்காம என் கம்ப்பியூட்டர வாங்க மாட்டீங்க இல்ல… சரி, லொட்ட ஒரு 1,500 ரூபா குடுத்துட்டுப் போ.”

”தல, இவ்ளோ கம்மியா…”

”எனக்குப் பணம் முக்கியம் இல்லடா… நம்ம பசங்கதான் முக்கியம்.”

”ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்…”

”அங்கிளா… இன்னாடா இவன், நம்மள அங்கிள்ன்றான்?”

”ஸாரி தல… அவன் பங்களா ஏரியாப் பையன்… அதான். அம்து… ‘ஸாரி தல’ன்னு சொல்றா…”

”ஸாரி தல!”

”ஓ.கே… ஓ.கே…”

1,500 ரூபாய்க்கு கம்ப்யூட்டர் கிடைத்ததில் அமுதுவுக்கு அப்படி ஒரு சந்தோஷம். ”தேங்க்ஸ் மச்சி… வீட்ல அம்மா கேட்டா, 15 ஆயிரம்னு சொல்றா. மிச்சப் பணத் துல மஜா பண்லாம். யாரு மச்சி அவரு?”

”அவரு எங்க ஏரியாவுல ஒரு தலடா. நான்கூட அந்தாளு ஒரு டுபாக்கூர்னு தப்பா நினைச்சுக்கிட்டு இருந்தேன்டா. இன்னிக்கு உனக்கு கம்ப்யூட்டர் வாங்கின பிறகுதான், அவரு மேல மதிப்பே வந்து இருக்கு!”

மானிட்டர், சி.பி.யூ, மௌஸ், கீ-போர்டு எல்லாம் பெட்டிகளில் இல்லாமல், சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் கவர்களில் சுற்றப்பட்டு இருந்தன.

”தலைவா, பாக்ஸ் இல்லியா?”

”பாக்ஸவுட கவர்தான்டா சேஃப்டி… பாக்ஸ் வேணும்னா சொல்லு, நம்ம கைலான் கடைல வாங்கிடலாம்… வோணுமா?”

”அங்கிள், ஸாரி தல, பாக்ஸ் வேணாம்.”

”அலுங்காமகொள்ளாம அலேக்கா எத்தும் போங்கடா…”

”டேய், மொதல்ல கம்ப்யூட்டர மாடில இருக்கிற என் ரூமுக்கு எடுத்துட்டுப் போய், என்ன பிராசஸர்னு செக் பண்ணணும்டா.”

தலைவா வீட்டு கம்ப்யூட்டர் அமுது வீட்டு மாடிக்கு ஷிஃப்ட் ஆகியது. மானிட்டர், சி.பி.யூ, மௌஸ், கீ-போர்டு எல்லாம் அதற்குரிய வயர்களால் இணைக்கப்பட்டன. பெரும் தவிப்போடும் ஆசையாகவும் கம்ப்யூட்டர் ஆன் செய்யப்பட்டது. மானிட்டரில் படம் வரவில்லை. கலவர முகத்தோடு அமுது கீ-போர்டில் என்டரை அழுத்தினால்… அது பாறாங்கல்லைப்போல் உறுதியாக, அழுத்த முடியாமல் இருந்தது. மற்ற கீக்களும் அப்படியே. அமுதுவும் சுரேஷ§ம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

”வயரு ஏதாவது லூஸ் கனெக்ஷனா இருக் குமாடா?” எனக் கேட்டுக்கொண்டே, லொட்ட சுரேஷ், சி.பி.யூ-வைத் தொட, ”அம்மா!” ஷாக் அடித்துத் தூக்கி எறியப்பட்டான்.

”டேய் சுரேஷ§… இன்னாடா ஆச்சி உனக்கு?”

”கம்ப்யூட்டர் ஷாக்கடிக்குது மச்சி…”

சுவரில் மோதி தலை வீங்கி இருந்தது. அமுது வெளியில் சென்று வீட்டின் கரன்ட் பாக்ஸை ஆஃப் செய்துவிட்டு வந்து, மெள்ள சி.பி.யூ-வைத் தொட்டான். ஷாக் வரவில்லை.

”டேய், பாத்துடா… இர்றா…”

சி.பி.யூ-வைப் பின் பக்கமாகச் சாய்க்கஉள்ளே எப்போதோ தேங்கி இருந்த மழை நீர் கொட்டியது. கலவர முகத்தோடு முன் பக்கம் சாய்த்துப் பார்க்க, ஃபிளாப்பி டிஸ்க் வழியாக ஒரு பெரிய கரப்பான் பூச்சியும், அதைத் தொடர்ந்து சிறு கரப்பான் பூச்சிகளும் வெளி வந்து அமுதுவுக்குப் பயமூட்டின.

”இன்னா மச்சி, கம்ப்யூட்டர்ல கரப்பான் பூச்சிகூட இருக்குமா” என லொட்ட சிரித்துக் கொண்டே கேட்க…

”வெளிய போடா…”

”அம்து…”

”என்ன நல்லாப் பழி வாங்கிட்டல்ல நீயி…”

”கம்ப்யூட்டரப் பத்தி எனக்கு இன்னா மச்சி தெரியும். அந்த ஆளு தப்பு பண்ணதுக்கு நான் இன்னா மச்சி பண்ண முடியும்? பணத்தக் கண்டிப்பா வாங்கிக் குத்துர்றேன் மச்சி…”

”எனக்குப் பணம் வேணாம்… அத வாங்கி நீயே பத்திரமா வெச்சுக்க. பின்னாடி நீ குடிக்க தேவைப்படும். என்ன மாதிரியே நீ ஒருநாள் ஃபீல் பண்ணுவ!”

லொட்ட சுரேஷ§க்குப் பயங்கரக் கோவம். கிருபாவைக் கூட்டு சேர்த்துக்கொண்டு தலைவாவிடம் பஞ்சாயத்துக்குப் போனான். கிருபாவுக்கோ விஷயத்தைக் கேள்விப்பட்டதில்இருந்து ரொம்ப சந்தோஷம். மொத்த மேட்ட ரையும் கலெக்ட் பண்ணி, நைட்டு பசங்ககூட சேர்ந்து லொட்டைய ஓட்டணும்னு பிளான் போட்டு, சும்மா கூட வந்திருக்கான்.

”நீ எல்லாம் ஒரு மனுசனாயா?”

”டேய், இன்னாடா தலிவாவப் பாத்து இப்டிப் பேசுற… கம்ப்யூட்டர் வொர்க் ஆச்சா இல்லியா?”

”யோவ், வாய மூடுய்யா… அப்புறம் அசிங்கமாத் திட்றப்போறேன்.”

”கிருபா, லொட்ட சரக்கு சாப்டுட்டு வந்திருக் கானா?”

”நீ குத்த கம்ப்யூட்டர்ல இருந்து தண்ணி ஊத்துதுய்யா!”

”தண்ணி ஊத்துதா? இன்னாடா சொல்ற? நல்லா பிளாஸ்டிக் கவர் போட்டு பேக் பண்ணி வெச்சிருந் தேனே… தண்ணி எப்டி லொட்ட ஊத்தும்? சரி, ஒண்ணும் பிரச்ன இல்ல. நீ குத்த துட்ட நாளைக்கு வாங்கிக்கோ. நீ வர்றதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் தெருவுல விளையாடுற கொய்ந்திகளுக்கு சினாக்ஸ் வாங்கிக் குத்தேன்!”

”1,500 ரூபாய்க்குமா ரஸ்க் வாங்கிட்ட?”

”கிருபா, இவன் குச்சுட்டு உளர்றான். இவனக் கூட்டிட்டுப் போ.”

”யோவ், நான் ஒண்ணும் குடிக்கல. இப்டி என்ன அசிங்கம் பண்ட்டியே…”

”நீ ஒண்ணும் கவலப்படாத. உன் ஃபிரண்டுகிட்ட சொல்லி, நாளைக்கு அத வெயில்ல காயவெச்சு, அப்புறம் டிரை பண்ணச் சொல்லு.”

”போயாங்க…”

அதிலிருந்து பசங்க, தலைவாவை எப்போ பார்த் தாலும், ‘கம்ப்யூட்டர் தலைவா’ எனக் கூப்பிட ஆரம் பித்துவிட்டார்கள். யாராவது, ‘எதுக்குத் தலைவா இப்படிக் கூப்பிடுறாங்க’ எனக் கேட்டால், ‘நம்ம கம்ப்யூட்டர்மேரி ஸ்பீடா வொர்க் பண்றோம்ல… அதான்!’ என அதையும் பெருமையாகச் சொல்லுவார். ஏரியாவில் தலைவாவைச் சமாளிக்கும் தில் அந்தப் பசங்களிடம் மட்டுமே உண்டு. எமகாதகப் பசங்கள். எந்த நேரம், எந்த வம்பை ஓசியில் வாங்கி வந்து நிற்பார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.

காலை நேரம் பசங்க அனைவரும் பரபரப்பாகக் கையில் நோட்டுப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, ஏரியாவில் இருந்து பஸ் ஸ்டாப்பை நோக்கிப் பறப் பார்கள். எஸ்.எஸ்.எல்.சிகூட பாஸ் பண்ணாத பசங் களை, எந்த காலேஜ்ல சேர்த்துப்பாங்கன்னு உங்க ளுக்கு எழும் சந்தேகம் நியாயமானது!

அடையார் டிப்போல ஃபுட்போடுல ஏறி, பாட்டு பாடிக்கிட்டே எம்.ஜி.ஆர். ஜானகி, னிவிசி, பிரசிடென்சின்னு போய்ட்டு, கொஞ்ச நேரத்துல பசங்க திரும்ப ஏரியாவுக்கே வந்துடுவாங்க. இவர்களும், இவர் களுடைய முன்னோர்களும் காலங்காலமாகக் கடைப்பிடித்து வரும் பழக்கம் இது. ஆளுக்கொரு ஃபிகர்னு பிரிச்சிக்கிட்டு… கஷ்டப்பட்டு பாட்டு எல்லாம் பாடி, மூணு வருஷமா பஸ்ஸ சிரிக்க வெச்சாலும்… லொட்ட சுரேஷைத் தவிர, யாருக் கும் ஃபிகர் மடிஞ்ச மாதிரி தெரில.

அந்த எம்.ஜி.ஆர். ஜானகி பொண்ணு இப்பதான் லொட்டய பாசமாப் பார்க்க ஆரம்பிச்சிருக்கு. பஸ் ஸ்டாண்டுல, லொட்ட சுரேஷ் வர்ற வரைக்கும் காத்திருந்து, அவன் வந்தவுடன் பக்கத்துல நின்னு, அவனப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தி ருந்தது. பஸ்கள் காலியாக வந்தாலும் ஏறாமல், அவன் அருகில் நின்றுகொண்டே இருந்தது. லொட்ட நம்ம பசங்ககூட போகாம, இந்த பொண்ணுகூட நிற்க ஆரம்பித்துவிட்டான்.

கம்ப்யூட்டரால் காயம்பட்ட அமுது… கிருபா, முரளி, கஞ்சி தல முருகன், வேலா, மாரி என எல்லோரிடமும், ”லொட்ட என்னை கஷ்டப்படுத்திட்டான், நான் பட்ட மாதிரியே மனசளவுல அவனும் கஷ்டப்படணும், அதுக்கு நீங்க ஏதாவது செஞ்சே ஆகணும்” என டாஸ்மாக்கில் கண்ணீர் விட, வேலனைத் தவிர, அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

பஸ் ஸ்டாண்டை நோக்கி வந்துகொண்டு இருந்தவர்களிடம், கிருபா ஒரு குவார்ட்டர் பாட்டிலைக் காட்டி, ”இன்னியோட லொட்ட கத முடிது மச்சான்…”

”என்னடா இது…”

”அந்தப் பொண்ணு மேல ஆசிட் அடிக்கப் போறியா…”

”சீச்… ச்சி…”

”சிம்பிள், பட் பெயின்ஃபுல்…”

”இன்னாடா, சினிமா டயலாக் வுட்ற…”

”வெயிட் அண்ட் வாட்ச் மச்சி…”

பஸ் ஸ்டாண்டில் எப்போதும்போல் லொட்டையும், அந்தப் பொண்ணும் சிரித்துக் கொண்டு இருந்தார்கள்…

கிருபா லொட்டை பக்கத்தில் போய், திடீர் எனப் பாக்கெட்டில் இருந்த குவார்ட்டர் பாட்டிலை வெளியில் எடுத்துக் காட்டி,

”மச்சி, நீ ஓல்டு காஸ்க்தானே கேட்ட. அது இல்லியாம்டா. ஓல்டு மாங்கு ஓ.கே-தானே?”

லொட்ட கோவமாய், முகம் வெளறி, ”டேய், இன்னாடா…”

”மிக்ஸிங்கும் சைடிசும் மாரி வாங்கிட்டு வரான்னு” சொல்ல…

காதலைச் சொல்லாமல் மனசுக்குள் தேக்கிவைத்திருந்த பொண்ணு, கண்ணீர்த் துளிகளைச் சிந்தி, லொட்டையின் காதலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு, பஸ்ஸில் ஏறாமல் வீட்டுக்கு வேகமாக நடக்க ஆரம்பித்தது.

”என்னங்க… என்னங்க… என் ஃப்ரெண்டு ஏதோ விளையாட்டுக்கு…”

”இதோ பாருங்கோ… நீங்க யாருன்னே நேக்கு தெரியாதபோது, உங்க ஃப்ரெண்ட பத்தி நான் என்னத்துக்குத் தெரிஞ்சுக் கணும்…”

”நீங்க என்ன பாத்து டெய்லி சிரிச்சீங்கில்ல…”

”நான் உங்களப் பாத்து சிரிச்சா, அதுக்கு என்ன இப்போ. நான் ரோட்ல போற நாய பார்த்தாகூடத்தான் சிரிப்பேன். உங்க பேரு என்னன்னுகூட நேக்கு தெரியாது… செத்த வழிய விடுங்கோ”ன்னு வெடுக்கெனக் கிளம்பிவிட்டாள்.

பஸ் ஸ்டாண்டு மகிழ்ச்சியில் திளைத் திருந்தது.

”மச்சான், மச்சான் அமுதுக்கு போன் போட்டு மேட்ர சொல்லேன்” என கிருபா சொல்ல… அவன் முகத்தில் குத்து விழுந்தது… ரோடு என்றுகூடப் பார்க்காமல், லொட்டை யும் கிருபாவும் கட்டிப் புரண்டார்கள். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சண்டை நிறுத்தப்பட்டு, இருவரும் வாய்க்கு வந்த படியே திட்டிச் சென்றார்கள்.

”டேய் கிருபா… இங்க வாடா. ஏய் லொட்ட, நீயும் இங்க வா…”

”எதுக்கு தல..?”

”போன மாசம், ரோட்ல ரெண்டு பேரும் சண்ட போட்டீங்களாமே… அசிங்கமா இல்ல?”

”அதெல்லாம் இல்ல தல…”

”வேற ஏரியா பசங்கள நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து அடிச்சிருந்தா, சந்தோஷப்படலாம்… உங்களுக்குள்ளியே அட்சிக்கினா இன்னான்னு சொல்றது. பத்து வர்சத்துக்கு முன்னாடி, நம்ம ஏரியா பொண்ண பக்கத்து ஏரியா பையன் ஒருத்தன்…”

”ஐயையோ… எங்கள உட்ரு தல… நாங்க இனி, எப்பியும் சண்ட போட மாட்டோம்!’

– டிசம்பர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *