“என்னது ! வடக்குப்பட்டி ராமசாமி யை கைது பண்ணிட்டாங்களா ?”, டீ குடித்தபடி சிங்கப்பூரான் வீரமுத்து பேச்சை தொடங்கி வைத்தார். கமால்பாய் டீக்கடை கலகலத்தது .
ராமசாமி வளர்த்து வந்த ஒரு ஆட்டு குட்டிக்கு நோய் வந்துடிச்சு. உள்ளூரில் யாரிடமும் இந்த ஆட்டை விற்க முடியாது .இந்த ஆட்டின் கறி ஒன்னுத்துக்கும் தேறாது என்று ஆடு வெட்டும் குட்டிபாய் சொல்லிவிட்டார்.
என்ன செய்வது என்று தெரியாமல் ராமசாமி குழப்பத்தில் இருந்தார்.
இந்த நேரத்தில் அங்கு வந்த முத்தப்பா ‘ராமசாமி, ஒரு குவார்ட்டருக்கு ஏற்பாடு பண்ணுயா ‘ என்றார்.
‘நானே நொந்து போயிருக்கேன் நீ வேற கடுப்ப கிளப்பாத ‘ என்றான் ராமசாமி.
விஷயம் அறிந்த முத்தப்பா ஒரு ஐடியாவ எடுத்து விட்டார்.
‘ராமசாமி நீ என்ன பண்ற நைசா ஆட்ட ஓட்டிட்டு மெயின் ரோடு பக்கம் வா’.
முத்தப்பா வின் ஆலோசனைப்படி மெயின் ரோட்டின் ஓரமாக ஆட்டை கொண்டு வந்தார் ராமசாமி.
அது மாலை நேரமாக இருந்தது இன்னும் சற்று நேரம் ஆனால் இருட்ட தொடங்கிவிடும் .யாருக்காகவோ வெகு நேரம் காத்திருந்தனர் .ஒரு கட்டத்தில் ராமசாமி பொறுமை இழந்து கோபப்பட்டார் . இடை இடையே இந்த ஆடு படுத்துக்கொள்ளும் .அதை எழுப்பி நிற்க வைக்க படாத பாடு பட்டார்.
சற்று தூரத்தில் சரக்கு லாரி வருவது தெரிந்தது.
முத்தப்பா அவசரமாக ஆட்டை விரட்டினார். இவர்கள் திட்டமிட்டது போல் ஆடு லாரியில் அடிபட்டு சிதைந்தது. இருவரும் சுதாரித்து லாரியை மடக்கினர் .
ராமசாமியின் பாக்கியம் கர்நாடக காரன் லாரியாக இருந்தது. முத்தப்பா வின் நண்பர்களும் கூடி கட்ட பஞ்சாயத்து தொடங்கியது.
முடிவில் மூவாயிரம் இழப்பீடாக கிடைத்தது. முத்தப்பா அன் கோ 500 ரூபாய் பெற்றுக்கொண்டு நடையை கட்டியது .
மறுநாள் கும்பகோணம் சென்று ஒரு கடையில் சாமான் வாங்கும்போது மாட்டிக்கொண்டார்.
அடப்பாவிகளா கர்நாடக லாரிக்காரன் கொடுத்த மூவாயிரதுல இருந்த 2 ஆயிரம் ரூபா நோட்டும்
கள்ள நோட்டாம்ல !