ராம சுப்புவும் அவனது கனவும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 24, 2019
பார்வையிட்டோர்: 91,739 
 
 

எந்த தவறை செய்தாலும் தப்பித்துக்கொள்பவனை பற்றி நீ என்ன நினைக்கிறாய்?

மரத்தில் உட்கர்ந்துகொண்டிருந்த இரு கிளிகளில் ஒரு கிளி கேட்கவும், அப்படி தப்பித்து கொண்டே இருப்பவனுக்கு அதிர்ஷ்டம் கூடவே இருக்கிறது என்பேன்.நீ என்ன சொல்கிறாய்?

உண்மைதான், என்று கொஞ்சம் யோசிப்பது போல் தலையை சாய்த்தது கிளி. அப்படியானால் ஏதோ ஒரு கதை கிளி வாயில் இருந்து வரப்போவதை யூகித்துக்கொண்ட இன்னொரு கிளி தன் காதை தீட்டிக்கொண்டு கவனிக்க ஆரம்பித்தது.

கனவு என்னும் மாய லோகத்தில் மேகங்களுக்கிடையில் குதிரையில் அதுவும் விலையுயர்ந்த அரேபிய குதிரையில் ஏறிக்கொண்டு செல்கிறான் நம் ராம சுப்பு. மேகங்களுக்கிடையில் அது சென்று கொண்டிருப்பதால் அனேகமாக அது பறந்து கொண்டுதான் இருக்க வேண்டும் என்று வாசகர்களாகிய நாம் யூகம் செய்து கொள்வோம். அவனது உயரம் நாலே முக்கால் அடிதான் என்றாலும் அவன் எப்படி அந்த குதிரையில் ஏறி உட்கார்ந்தான் என்பதை அந்த கனவில் அவன் காணவில்லை என்பதால் வாசகர்கள் ஆகிய நாம் மேற்கொண்டு கேள்வி கேட்காமல் கதையை தொடர்வோம்.

பறந்து கொண்டிருந்த குதிரையில் இன்பமாய் உட்கார்ந்து வந்து கொண்டிருந்த ராம சுப்பு, தன் தலையை சாய்த்து கம்பீரமாய் வலது புறமும் இடது புறமும் பார்த்த பொழுது எதுவும் கண்ணுக்கு தெரியாமல் வெறும் மேக்க்கூட்டங்களாகவே தெரியவே சட்டென குனிந்து கீழே பார்த்தான்.

பூமி தன் அற்புத காட்சிகளாய் மலைகளும், நதிகளும் காடுகளும், விளை நிலங்களுமாய் காணப்பட்டதை பார்த்த ராம சுப்பு, அதன் அழகில் சொக்கிப்போய், இப்படியே அந்த சீன பெருஞ்சுவரை பார்த்தால் எப்படி இருக்கும் என நினைத்தான். அவன் நினைத்த மாத்திரத்தில் அந்த குதிரை திடீரென தான் பறப்பதை வேகம் எடுக்க சற்று திடுக்கிட்ட ராம சுப்பு பயத்தால் தன் கண்ணை மூடிக்கொண்டான். இப்படி ஐந்து நிமிடம் கண்ணை முடியவன் குதிரை தன் வேகத்தை மட்டுப்படுத்தி பறப்பதை உணர்ந்து கொண்டவன், மெல்ல கண் திறந்து பார்த்தான் வலது புறமும்,இட்து புறமும் மீண்டும் மேகங்களாய் தெரிய தன் தலையை கீழ்புறம் திருப்பி பார்த்தவன் அப்படியே வியந்து போனான்.

ஆம் ராம சுப்பு தற்பொழுது சீன பெருஞ்சுவரின் மேல் புறம் பறந்து கொண்டிருந்தான். இப்பொழுதுதான் அவனுக்கு ஒரு உண்மை புரிந்தது. அதாவது இந்த குதிரையில் உட்கார்ந்து எங்கே செல்ல வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த இடத்துக்கு நம்மை கூட்டி சென்று விடும் என்று உணர்ந்து கொண்டவன் பேஷ்..பேஷ்..என்று தன்னையே பாராட்டிக்கொண்டான்.

இருந்தாலும் கீழிலிருந்து சைனாக்கார்ர்கள் ஏதேனும் ராக்கெட்டை விட்டு தன்னை வீழ்த்தி விடுவார்களோ என்று ஒரு கணம் நினைத்து பார்த்து தன் உடமபை உலுக்கிகொண்டான். அப்பொழுது சர்ரென்று தன் காதை உரசி ஒரு ராக்கெட் பறப்பதை உணர்ந்தவன் ஐயோ என்று வாய் விட்டு கூவியவன் மீண்டும் ஒரு உண்மையை புரிந்து கொண்டான்.

அதாவது இந்த குதிரையில் உட்கார்ந்திருப்பவன் என்ன நினைத்தாலும் அப்படியே நடக்கும் என்பதை உணர்ந்தவன், இனிமேல் ஜாக்கிரதையாகத்தான் நினைக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டவன்.மறந்து போய் அடுத்து அரபிக்கடலையும், வங்காளக்கடலையும் ஒரு சுற்று பறந்து வந்தால் எப்படி இருக்கும் என நினைத்தவன் சட்டென அதை மாற்ற நினைக்கு முன் குதிரை அவனை இருத்துக்கொண்டு வேகம் எடுத்தது.

இப்பொழுது கடலின் பேரிரைச்சல் அவன் காதுகளில் விழுந்தாலும் பயத்தால் கீழே பார்க்காமல் தன் கண்களை இறுக மூடிக்கொண்டான். காரணம் பயம் மட்டுமல்ல என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தன் எண்ணங்களுக்கும் இப்பொழுது அவன் பயப்படக்கூடிய சூழ்நிலையில் இருந்தான். அதாவது இவன் தெரியாமல் கீழே குனிந்து கடலை பார்த்தான் என்று வைத்துக்கொள்ளுங்கள், உடனே இவனது எண்ணம் என்ன நினைக்கும்?

கடலுக்குள் விழுந்துவிடுவோமோ என்று நினைக்கும். அப்படி நினைத்தால் என்ன நடக்கும்?

வாசகர்கள் தற்பொழுது அவன் கண்ணை மூடிய காரணம் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

கடல் சத்தம் தற்பொழுது கேட்காததால் கடலை சுற்றி வந்து விட்டோம் என்பதை முடிவு செய்து கொண்ட ராம சுப்பு மெல்ல கண்ணை திறந்தான். குதிரை அமைதியாக பறந்து கொண்டிருந்தது. போதும் நம் வீட்டின் முன்னால் இறங்கிக்கொள்ளலாம் என்று நினைத்த

மாத்திரத்தில் குதிரை சர்..ரென கீழே இறங்கியது.

அங்குதான் ராம சுப்பு சிறிய தவறு செய்து விட்டான். வீட்டின் முன்னால் இறங்க நினைத்தானே தவிர வீட்டின் முன்னால் கார்ப்பரேசன் தெருவில் அவன் வீடு இருப்பதையோ, கார்ப்பரேசன்கார்ர்களால் பாதாள சாக்கடை இணைப்புக்காக அங்கு பெரும் குழி வெட்டப்பட்டிருந்த்ததையோ மறந்து விட்டதால் குதிரை அவனை அந்த குழிக்குள் இறக்கி விட்டு விட்டு அதாவது ஏறக்குறைய தள்ளி விட்டு விட்டு பறந்து விட்டது. இவன் மடாரென கீழே விழுந்த்தினால் தலை போய் அந்த குழியின் ஒரு முனையில் இருந்த கல்லில் போதியதால் வேதனை பொறுக்காமல் ஐயோ என்று கத்தினான்.

அடிபட்ட வலி பொறுக்க முடியாமல் கண்களை திறந்தவனுக்கு எதிரே பல மனித முகங்கள் அவனை பார்த்துக்கொண்டிருப்பது போல தென்பட்டது. ஐந்து நிமிடங்கள் ஒன்றும் புரியாமல் மலங்க ..மலங்க விழித்து பார்த்தவனுக்கு அப்புறம்தான் புரிந்தது, தன்னை பார்த்துக்கொண்டிருந்தது அவனுடைய அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த சகாக்கள் என்று.

அப்படியானால், அப்படியானால், தலையை சிலுப்பியவனுக்கு அந்த சுரீர் என்று ஒரு இடத்தில் தலை வலிக்கவும், அந்த இடத்தை கைகளால் தேய்த்து விட்டுக்கொண்டான். இப்பொழுது அவனுக்கு ஞாபகம் வந்து விட்டது. தான் இறங்கிய இடம் தமது வீடு அல்ல நாம் வேலை செய்து கொண்டிருக்கும் அலுவலகம் என்று. அது மட்டுமல்ல தான் குழியில் விழவில்லை, தன்னுடைய நாற்காலியில் இருந்து விழுந்திருக்கிறோம். அப்பொழுதுதான், தன் தலை போய் எதிரில் உள்ள டேபிளின் முனையில் இடித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டவன் மீண்டும் வலி தாளாமல் தன் தலையை தேய்த்து விட்டுக்கொண்டான்.

“ஆபிஸ் நேரத்துல தூங்கிட்டு இருக்கறயா? மானேஜரின் அந்த கேள்வி அவனை பட பட வென ஞாபகங்களை கொண்டு வந்து விட்டது. அப்படியானால் நாம் அலுவலகத்தில் நாற்காலியில் உட்கார்ந்து தூங்கியிருக்கிறோமா? அடக்கடவுளே அதுதான் எல்லோரும் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்களா? ராம சுப்புவுக்கு அடிபட்ட வேதனையை விட அவனது மேனேஜரின் கோபமான முகமும், அடுத்து அவனுக்கு விழப்போகும் திட்டுக்களை இரசிக்க காத்திருக்கும் அவனது சகாக்களுமே, பெரும் கவலையாக இருந்தது.

வா என் ரூமுக்கு, மேனேஜரின் அதிகாரமிக்க குரல் அவனை உலுப்பி விட,அவனுக்கு திட்டு விழும் நாம் காதார கேட்கலாம் என எதிர் பார்த்த அவனது சகாக்களுக்கு சிறிது ஏமாற்றமாகி விட்டது.

இவன் பலியாடு போல மானேஜரின் அறைக்குள் நுழைந்தான். மனேஜரின் கதவு படாரென சாத்தப்பட, இதே போல அவனுக்கும் மண்டக்கப்படி மானேஜரிடம் கிடைக்கும் என்று அவனது சகாக்கள் நினைத்து அவனது வருகைக்காக காத்திருந்தனர்.

உள்ளே சென்று அரை மணி நேரமாகியும் எந்த சத்தமும் வராததால் இன்று மானேஜர் அவனது சீட்டை கிழித்து விட்டார் போலிருக்கிறது என்று எண்ணத்துக்கு வந்து விட்டனர், அவனது சகாக்கள்.

சுமார் நாற்பது நிமிடங்கள் கழிந்த பின்னால் மானேஜர் கதவு திறந்தது. கண்ணீரும் கம்பலையுமாய் ராம சுப்புவை எதிர்பார்த்தவர்கள் அவன் புன் சிரிப்புடன் அவர்களை கடந்து சென்று (ஓரக்கண்ணால் இவர்களை பார்த்துக்கொண்டு) கம்பீரமாய் தன் நாற்காலியில் உட்கார்ந்தான்.

சகாக்கள் தலையை பிய்த்துக்கொண்டனர்.துங்கிக்கொண்டிருந்தவனை மானேஜர் கையும் களவுமாய் பிடித்து கையோடு ஆட்டை இழுத்து செல்லும் புலி போல மேனேஜர் அவனை இழுத்துக்கொண்டு போயும், வெளியே வந்தவன் லாட்டரியில் பரிசு விழுந்தவன் போல் சிரித்துக்கொண்டு வருகிறானே.எப்படி?

உள்ளே என்ன நடந்தது? மேனேஜர் அறையிலிருந்து இவ்வளவு லேட்டா வருகிறாயே? கண்ணீரும் கம்பலையுமா வருவான் என்று எதிர்பார்த்து ஏமாந்த பக்கத்து சீட்டிலிருந்த இவனது சகா கேட்டார்.

“ராம சுப்பு” கர்வமாய் அவரை பார்த்து மேனேஜர் உள்ளே போனவுடன், எப்படியா உட்கார்ந்தா தூங்கிடறே? சாஞ்சா தூங்கிடறே? எனக்கு தூக்கமே வர மாட்டேங்குதய்யா ! பகல்லயும் வரமாட்டேங்குது.இராத்திரியும் வரமாட்டேங்குது.எப்படி இவ்வளவு சுலபமா தூங்கறே? தயவு செய்து எனக்கு சொல்லுயா? அப்படீன்னாரு நான் சில டிப்ஸ் எல்லாம் அவருக்கு சொல்லி கொடுத்திட்டிருந்தேன். அதுதான் வெளியே வர லேட்டாயிடுச்சு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *