கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 31,208 
 
 

“வாங்க சார்.. வாங்க சார்… வாங்க சார்”னு கூப்ட்டு கூப்ட்டு ஓஞ்ச சமயத்துல,

“சரி சரி அடுத்த திங்கக்கிழம வரேனு” ஒத்துக்கிட்டாரு எங்க எம்டி..

எதுக்கு எங்க… அப்படீன்னு நான் சொல்றதுக்கு முன்னாடி எங்க எம்டியைப்பத்தி சொல்லீட்றேன்…

ஒரே சிடு சிடுன்னு இருப்பாரு… யாருக்கிட்ட எப்ப பேசினாலும் கோபமாவே இருப்பாரு.. அது ஏன்னே யாருக்கும் தெரியாது.. ஆனா ஒரே ஒரு நேரத்தில மாத்திரம் ரொம்ப ஹேப்பியா இருப்பாரு..

அது சாப்படர நேரம்….

நல்ல சாப்பாட்டுப்பிரியர்… அதுவும் மிகச்சிறந்த ரசவாதி… நான் சொல்ற ரசவாதிக்கு என்ன அர்த்தம்னா… ரசப்பிரியர்… ரசஞ்சோறு சாப்பிடரதும் சரி.. அதுக்கு பின்னாடி அத ருசிச்சி ருசிச்சி சப்பு கொட்டிட்டே குடிக்கறதும் சரி.. வெட்கப்படவே மாட்டாரு… அப்ப நாம என்ன கேட்டாலும் சரின்னுருவாரு..

அப்படித்தான் ஒரு நாள்…

அவர் ரசமோகத்தில் ஆழ்ந்திருந்த வேளையில அக்கவுண்டண்ட் சுப்பிரமணி ரசத்தை மட்டுமே புகழ்ந்து பேசி ரெண்டாயிரம் ரூபா இங்கிரிமெண்ட் வாங்கிட்டாரு….

அட அதவிடுங்க.. நம்ம பியூனு பொன்னுச்சாமி அடுத்த ரெண்டாவது நாள் சாப்பாட்டு வேளையில ரசத்துக்கு புகழ் சேத்து ஐநூறு ரூபா இங்கிரிமெண்ட் வாங்கனதோட மட்டுமில்லாம நாளு நாள் லீவும் வாங்கீட்டாரு….

நான் ஆரம்பிச்சக் கதைக்கு வர்றேன்… அவர் ஒரு தனிக்கட்டை.. எப்போதுமே ஓட்டல்ல இருந்து வரவச்ச சாப்பாட்டத்தான் லஞ்சுல சாப்பிடுவாரு…

“அடுத்த திங்கக்கிழமை வீட்டுக்கு சாப்பிட வாங்க சார்.. என் மனைவி சமையல்ல கெட்டிக்காரி… அதுவும் ரசம் வச்சா அடுச்சுக்க ஆளே இல்லேனு சொல்லி சொல்லி அவரோட சம்மத‌த்தை எப்படியோ வாங்கீட்டேன்…”

இனிமே தான் இந்தக் கதையோட டர்னிங் பாய்ண்ட்டே ஆரம்பிக்கப்போகுது.. எப்படியோ எம்டி சம்மதம் வாங்கியாச்சு.. இப்போ வீட்டுல போர் ஆரம்பமாயிருச்சு..

அவரு கோவக்காரரு.. சிடுமூஞ்சி.. ஆனா ரசம் மட்டும் கலக்கலா வச்சு அவர அசத்திட்டோம்னா… அடுத்த புரமோசன் கூட அவசரமா கொடுத்துடுவாருன்னு சொல்லி சொல்லி… எப்படியோ மனைவியை அந்த மெகா சமையலுக்கு தயார் படுத்தியாச்சு..

அந்த நாளும் வந்தது…

காலையில இருந்தே ஒரு ஐம்பது தடவையாவது ஆபிஸிலிருந்து போன் பண்ணியாச்சு..

ஒரு ஐம்பது மெசேஜ் அனுப்பியாச்சு… ஒரு நூறு வாட்ஸ் அப்பியாச்சு… ஆச்சா.. ஆச்சா… ரசம் எப்படி வந்துருக்கு… செம டேஸ்டா…னு ஒரு வழி பண்ணிட்டு… லஞ்சுக்கு கிளம்பும் போதும் போன்ல சொல்லிட்டு… இதோ கிளம்பிக்கிட்டு இருக்கேன் எம்டியோட கார்ல எங்க வீட்டுக்கு…

வாங்க.. நீங்களும் வந்து எங்கலோட லஞ்ச் சாப்பிடுங்க….

வீட்டுக்குல நுழையும் போதே வீடே கம கமனு செம வாசனையா இருந்துச்சு…

இரண்டு பொரியல், மூணு கூட்டு, சாதம், அப்பளம், சாம்பார், மோர்க் குழம்பு, காரக்குழம்பு, ரசம், மோர், ஊறுகாய் என எல்லாமும் மட்டுமல்லாமல் கூடவே இனிப்பான பாயாசமும், நொறுக் மொறுக் பருப்பு வடையும்…..

ஒரு பின்னி பின்னீட்டார் எங்க எம்டி… நான் உங்கள சாப்பிட கூப்பிட்டேன் பாருங்க.. அதே மாதிரி அவரும் என்னையும் கூடவே உட்கார்ந்து சாப்பிட கூப்பிட்டாரு….

அவரு ஒவ்வொன்னா டேஸ்ட் பாக்க டேஸ்ட் பாக்க.. நானும் கூடவே டேஸ்ட் பார்த்து பார்த்து… அப்பறம் சாப்பிடவும் ஆரம்பிச்சேன்…

அவரோட பேவரேட் ரசத்தோட டர்னும் வந்தது. நானும் அதே சமயத்துல சாம்பார், காரக்குழம்பு முடிச்சிட்டு ரசத்துக்கு வந்திருந்தேன். முதல்ல கொஞ்சமா சாப்பிட்டவர் லேசா முகம் சுளிச்ச மாதிரி இருந்துச்சு… ஐயையோ என்னாச்சு… அப்படீங்கற மாதிரி நானும் என் மனைவி முகத்தைப் பார்க்க… பேயடிச்ச மாதிரி எங்க முன்னாடி நின்னுட்டிருந்த அந்த முகத்தைப் பார்த்தவுடனே நானே பயந்திட்டேனா பார்த்துக்கோங்களே… ஆனா ஒரு செகண்டு தான் எங்க எம்டி முகமாற்றம் அதுக்கு அப்பறம் அவர் ரசம் சாப்பிடஆரம்பிச்சார் பாருங்க… இதுக்கு நடுவுல நானும் ரசம் ஊத்தி சாப்பிட்டுப்பார்த்தா எப்பவும் வைக்கற மாதிரி இல்லாம.. ஏதோ ஒரு புது மாதிரி டேஸ்ட்ல இருந்துச்சு… ஆனாலும் சாப்பிடர மாதிரி…

ஆனா எங்க எம்டி ரசத்தை கொஞ்சம் கூட மிச்சம் வைக்கற மூடுல இல்ல போல.. அதுக்கு அப்பறம் மோர் ஊத்தி சாப்பிடணும்னு கூட மறந்துட்டாரு போல.. முழுச்சட்டியையும் காலி பண்ணீட்டுத்தான் எங்க முகத்தையே பார்த்தார்… அவர் முகத்தில அப்படி ஒரு பரம திருப்தி… என் மனைவி ஒரு பெருமூச்சு விட்டது என் காதில் மட்டும் லேசா விழுந்துச்சு….

“ஆஹா ஓஹோ பிரமாதம் ஜாமாய்ச்சிட்டீங்க…” அப்பறம் என்னன்ன மாதிரியெல்லாம் பாராட்டணுமோ அப்படியெல்லாம் ரசத்தை மட்டுமே தனியா பாராட்டு பாராட்டுனு பாராட்டிட்டார்…..எனக்கோ வானத்தில பறக்கற மாதிரி இருந்துச்சு…

இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு சந்தேகம்.. கண்டிப்பா தினமும் வைக்கற அளவுக்கு இன்னிக்கு ரசம் என்னோமோ எனக்கு டேஸ்ட்டாவே இல்ல.. ஆனா எப்படியோ அது எங்க எம்டிக்கி பிடிச்சுபோனதால நல்லதா போச்சு… அப்படி என்ன தான் புதுசு இன்னைக்கு ரசத்துல…

இந்த என்னோட உலக மகா பெரிய சந்தேகத்தின் விடை நான் மறுபடியும் எம்டி கூட ஆபிஸ் போயிட்டு சாயந்தரம் ஆபிஸ் வந்தவுடனே எனக்கு தெரிஞ்சப்ப‌ என் முகத்தப் பாக்கணுமே…

பின்குறிப்பு:

மாலையில் எனக்கு முன் என் மனைவி உரைத்த ரசத்தின் சுவை மாற்றத்தின் ரகசியம்..

“நீங்க எப்ப உங்க எம்டி நம்ம வீட்டுக்கு சாப்பிட வர்ராருன்னு சொன்னீங்களோ அப்ப இருந்தே நான் ரொம்ப படபடப்பா இருந்தேன்… அதுவும் ரசத்தை மட்டுமாவது ரொம்ப நல்லா வைக்கணும்னு சொன்னப்பறம், ரசம் வைக்கற போது அவ்வளவு டென்சன்… நம்ம வீட்டு ரசத்தோட டேஸ்ட்டுக்கு காரணமே நம்ம ரசப்பொடி தான்.. அதை நான் பூஸ்ட் டப்பாவுல தானே போட்டு வச்சிருப்பேன்.. அதை மட்டுமில்ல நம்ம வீட்டுல இருக்கற எல்லா பொடியுமே பூஸ்ட் டப்பாவுல தான் இருக்கும்.. இன்னைக்குனு பார்த்து ரசப்பொடி கொஞ்சம் தான் இருந்துச்சு.. அத மட்டும் போட்டு ரசம் பண்ணிட்டு டெஸ்ட் பண்ணிப் பார்த்தா நல்லாவே இல்ல… சரி சரி பழசு ஒரு டப்பாவுல‌ இருந்துச்சே.. அப்படீனு ஒரு டப்பாவா எடுத்தப்பத்தான் சட்டுனு கரண்டு போயிடுச்சு… கரண்ட் போனாத்தான் நம்ம கிச்சனே இருட்டா ஆயிடுமே… இதுக்கு நடுவுல தான் உங்க கால் வேற.. கிளம்பீட்டோம்… அப்படீன்னு.. இருந்த டென்சன்ல எடுத்த பொடியப் போட்டு.. எடுத்து டெஸ்ட் பண்ணா ரசம் இனிக்க ஆரம்பிச்சிருச்சு… ஐயையோ அப்படீன்னு இன்னொரு பொடி போட்டேன்.. கொஞ்சம் டேஸ்ட் வந்த மாதிரி இருந்துச்சு.. ஐயையோ இது இல்லையா அப்படீன்னு இன்னொரு டப்பாவ எடுத்து கொஞ்சம் பொடி போட்டேன்.. சரின்னு படபடப்பிலேயே இறக்கி வச்சிட்டேன்.. அப்பறம் கரண்ட் வந்தப்புறம் நான் என்ன பொடி தான் போட்டேனு பார்த்தப்ப எனக்கு மயக்கமே வந்திருச்சு…

“அப்படி என்ன என்ன பொடி தான் ரசம் வைக்க போட்ட..?”

“முதல்ல போட்டது கொஞ்சம் பூஸ்ட், அப்பறம் போட்டது கொஞ்சம் பிரியாணி மசாலா, அப்பறம் மீன் மசாலா, கடைசியா போட்டது இட்லி பொடி..”

“அடிப்பாவி…!”

“இதை கண்டிப்பா எங்க எம்டிகிட்ட சொல்லிடாதீங்க… ப்ளீஸ்..”

கதையின்நீதி:

ரசப்பிரியர்களுக்கு புதிய மாற்றத்தில் எப்படிப்பட்ட ரசம் கொடுத்தாலும் நமக்கு சாப்பிட கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது….

– 19.02.2017 தினமலர் வாரமலர் திருச்சி பதிப்பில் வெளியான கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *