பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 16,311 
 

“சார்.. ஒரே காத்தும் மழையுமா இருக்கு… சீக்கிரம் வீட்டுக்கு விடுங்க… பஸ் ஸ்டாண்டு போயி பஸ்ஸ புடிச்சா… ஒரு மணி நேரமாகும் வீட்டுக்கு போறதுக்கு… இப்பவே மணி ஆறாச்சு… இருட்டிக்கிட்டு வேற கெடக்கு…”, என நான் புலம்பியது யார் காதிலும் விழுந்த மாதிரியே தெரியவில்லை…

அவரவர் அவரவர் வேலையை முடித்துவிட்டு கிளம்புவதிலேயே குறியாக இருந்தனரே தவிர… எனக்கு உதவி செய்து… என்னை சீக்கிரம் வீட்டிற்கு அனுப்பிவைக்க யாருமே முன்வரவில்லை… இத்தனைக்கும் எல்லாரும் ஆண்கள்..என்னைத்தவிர.. மேலும் எல்லோருக்கும் இதே ஊர்தான்…

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன்… மணி ஆறரை ஆச்சு… அடுத்த பஸ் ஆறு நாப்பதுக்கு… ஹேண்ட் பேக்கை எடுத்தேன்.. எல்லோரையும் முறைத்தேன்… ஓட்டமும் நடையுமாக பஸ் ஸ்டாண்டு வந்தேன்..வரும் வழியில் தான் பஜார்.. ஆனால் பத்துக்கு ஒன்பது கடைகளை மூடிவிட்டிருந்தார்கள்… மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது.. காற்று மட்டும் “கிளம்பு” “கிளம்பு” எனச் சொல்வது போல் சுழற்றி சுழற்றி அடித்துக்கொண்டிருந்தது. விளம்பரப் பலகைகள் சில தனது நிலை இழந்து தள்ளாடிக் கொண்டிருந்தன.

ஒரு வழியாக பஸ் ஸ்டாண்டுக்குள் நுழையும் போதே எனது பஸ் கண்ணில் பட்டு விட்டது. “அப்பாடா…”, என பெருமூச்சிட்டவாறே ஏறி உட்கார்ந்தேன்…எண்ணி ஒரு இருபது பேர் தான் இருப்பார்கள்.. இரண்டு மூன்று பெண்கள் கூட்டாய் உட்கார்ந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். வழக்கமாக பஸ்ஸில் பயணம் செய்யும் நடுத்தர வயது ஆண் ஒருவரும் உட்கார்ந்திருந்தார். அவரை ரொம்ப தடவை பார்த்திருந்தாலும் பேசிக் கொண்டதில்லை..

வீட்டில் வேறு சிறு குழந்தை… என்னைத் தேடிக்கொண்டுப்பான்.. அம்மா அப்பா தான் பார்த்துக் கொண்டார்கள்.. கணவர் வெளிநாட்டில்.. ஆறு மாதத்திற்கு ஒரு முறை வருவார். நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இடம் என் வீட்டிலிருந்து அருகில் இருப்பதால் என்னை இங்கேயே தங்கிக் கொள்ள மாமியார் வீட்டில் அனுமதி கொடுத்துள்ளார்கள்.

கரெக்ட்டான நேரத்துக்கு பஸ் கிளம்பியது. கடிகாரத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டேன். ஏழு நாப்பதுக்கு வீட்டுக்கு போயிரலாம் என கடிகாரம் என்னிடம் சொல்வது போலத் தோன்றியது.

ஆனால் நடந்தது…

பஸ் கிளம்பி பத்து நிமிடம் வரை எல்லாமே எப்பவும் போல நார்மலாகத்தான் நடந்து கொண்டிருந்தது. முதல் இரண்டு ஸ்டாப்பிலேயே அந்த மூன்று பெண்களும் இறங்கி விட்டனர்..

சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்தால்.. எல்லாருமே ஆண்கள்..அதிலும் இளைஞர்களாகவே கண்ணில் பட்டனர். எதிர்பக்கம் அமர்ந்திருந்த அந்த நடுத்தர வயது நபரையும் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்து புன்னகைத்தார். எனக்கு கொஞ்சம் தைரியமாக இருந்தது.

அதுவரை ஆசுவாசமாக அடித்துக் கொண்டிருந்த காற்று.. என்ன நினைத்ததோ.. பெரும்புயல் போல வேகமாக அடிக்கத் துவங்கியது. ரோட்டோரம் பார்த்துக்கொண்டிருந்த போதே.. தொலைதூர மரங்கள் சடார் சடாரென முறிந்து விழ ஆரம்பித்தன.

“கடவுளே.. கடவுளே…”, என மனதுக்குள்ளேயே கடவுளை வேண்ட ஆரம்பித்தேன். இன்னும் பத்து கிலோமீட்டர் செல்ல வேண்டி உள்ளதாக.. அப்போது அடித்த மின்னல் பட்டு.. சாலையோரக் கல் எனக்கு தகவல் சொன்னது. ஆங்காங்கே கேட்கும் மரங்களின் முறிவொலியுடன்.. காற்று ஆடும் தாண்டவமும்….”உய்.. உய்…உய்..” எனக்கேட்க பஸ்ஸே ஒரு அதிர்ச்சியில் உறைந்து போய்… மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.

அப்போது தான் அது நடந்தது…

சாலையோர பெருமரமொன்று பஸ்ஸின் முன்னால்.. பெருத்த சத்தத்துடன் வேரோடு பெயர்ந்து விழந்தது… பஸ்ஸில் எல்லாருமே ‘ஓ’வென கத்த… சட்டென நிறுத்திவிட்டார் டிரைவர்…

எனக்கு திக்கென்று ஆகிவிட்டது.. ‘”ஐயோ”… ரோட்டையே கவர் பண்ணிடுச்சே! இந்த மரம்.. இப்ப எப்படி வீட்டுக்கு போறது.. ?’ என மனதிற்குள்ளேயே புலம்ப ஆரம்பித்தேன்..

என்னிடம் இருந்த குடையை வாங்கிக் கொண்டு கண்டக்டர் கீழே இறங்கிப் போனார். ஐந்து நிமிடம் கழித்து வந்தவர்.. மிகப்பெரிய அதிர்ச்சியூட்டும் விசயத்தை சொல்லப்போகிறார் என்பது குடையைக் கொடுக்கும் போது எனக்குத்தெரியாது..

“எல்லாரும் கேட்டுக்கோங்க.. நம்ம பஸ்ஸுக்கு முன்னாடி ஒரு மரம் இல்ல… மொத்தம் ஆறு மரம் விழுந்து கெடக்கு… எப்படியும் விஷயம் பரவி.. ரோடு கிளியர் ஆறதுக்கு ஒரு ரெண்டு மூணு மணி நேரமாவது ஆகும்..”னு ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்..

‘ரெண்டு மூணு மணி நேரம்னா… பத்து பதினொன்னு வரைக்கும் இங்கேயேவா..மழையும் காத்தும் கதிகலங்க வைக்குதே..’ நினைத்துப் பார்க்கவே கொடூரமாக இருந்தது எனக்கு…

அப்போது எதிரே இருந்த அந்த ஆண்.. செல்போனில் யாருக்கோ இத்தகவலை சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது தான் எனக்கும் தோணியது. உடனே செல்லை எடுத்து இந்த விஷயத்தை வீட்டில் சொன்னேன்.. பதட்டமாக பேச ஆரம்பித்தவர்கள்.. பிறகு நிதானமாகி…”ஒன்னும் பிரச்சனை இல்லம்மா.. குழந்தை இப்பத்தான் சாப்பிட்டுட்டு தூங்கிட்டான். நீ எல்லாம் சரியானவுடனே
வா..” என ஆறுதல் கூறினர் அம்மாவும் அப்பாவும்.. சரியென்று நான் போன் வைத்த பிறகும்.. எதிர்சீட்டு ஆணின் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது..

“கணேசா.. நீ வர்றியா. சரி சரி வந்திடு.. கார் பாத்து ஓட்டிட்டு வாடா… பக்கத்துல வந்தவுடனே போன் பண்ணு”, எனச் சொல்லி போனை வைத்துவிட்டார்.

அவர் பேசியதிலிருந்து ஒன்று புரிந்தது.. அவருக்காக காரை கூப்பிட்டுருக்கார்.. அந்த விஷயமே எனக்கு ஒரு திருப்தியாகப் பட்டது. இதற்குள் கண்டக்டர் பக்கத்திலிருந்த டீக்கடைக்குச் சென்று பன்னும்,
டீயும் வாங்கி வந்து எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். டீயே குடுக்காத நான், அடித்துக் கொண்டிருந்த குளிர்ந்த காற்றிலிருந்து தப்ப.. நன்றியுடன் டீயை வாங்கிக் குடித்தேன்.. பத்து பதினைந்து நிமிடங்கள் ஓடி விட்டிருந்தது.. இப்படியும் மனிதருண்டா என வியந்து கொண்டிருந்த போது.. எதிர் சீட்டு ஆணுக்கு மீண்டும் போன் வந்தது.

“ஹலோ.. கணேசா.. இரு… வந்துட்டியா.. இதோ வந்திட்றேன்…” எனக்கூறியவாரே கிளம்ப ஆரம்பித்தார். எப்படியும் பாதி பேரையாவது கார்ல வரச் சொல்லி கூப்பிடுவார்.. என நினைத்த படியே என் கைப்பையை தூக்கிக் கொண்டு தயாராக ஆரம்பித்தேன்.

எழுந்த அந்த மனிதர்.. எங்கள் யார் மீதும் அவரது பார்வை படாதவாறு அமுக்கமாக கிளம்பி மரங்களுக்கு இடையே புகுந்து வேகமாக நடக்க ஆரம்பித்தார். இப்போது தான் மனித நேயத்தைப் பற்றி மெச்சினேன்.. அதற்குள் மனுசப்புத்திய ஒருத்தர் காட்டிட்டாரே.. நினைக்க நினைக்க எனக்கு கோபம் கோபமாக வந்தது.

அட யாரையும் கூப்பிட வேணாம். இந்த பஸ்லயே நான் மட்டும் தான் பொண்ணு… அட்லீஸ்ட்.. டிராப் பண்ணீட்றேன் வாறியாம்மான்னு.. ஒரு வார்த்தையாவது கேட்டுறுக்கலாம்ல… நினைக்கும் போதே அவர் மேல ஆத்திரமாக வந்தது.

இப்ப எவ்வளவு நேரம் ஆகுமோ… கடவுளே.. ஒரே பசங்களா வேற இருக்காங்களே.. என நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பையன் பக்கத்தில் வந்தான்.

“அக்கா.. எங்க பிரண்ட்சை கூப்பிட்டிருந்தோம்.. பைக்க எடுத்துட்டு பத்து பேரு அந்தப்பக்கம் வந்துட்டாங்க.. நீங்க வந்தீங்கன்னா.. உங்களையும் உங்க வீட்ல டிராப் பண்ணீட்றோம்..” எனக் கேட்க ஆரம்பித்தான்..

எனக்கோ உள்ளுக்குள் பயம்..

“இல்ல.. நான் பாத்துக்கறேன்..” எனசொ சொன்ன போது கண்டக்டர் வந்து விட்டார்.

“பயப்படாம போம்மா.. இன்னும் ஒரு வேலையும் ஆரம்பிக்கல.. இந்தப் பசங்கள எனக்கு நல்லாவேத் தெரியும். எவ்வளவு நேரம் தான் பஸ்ஸுலேயே இருக்கப் போற,,” எனச் சொல்ல… அவர்களுடன் கிளம்புவது தான் எனக்குச் சரியாகப் பட்டது.

காற்று அது பாட்டுக்கு அடித்துக் கொண்டு தான் இருந்தது. மழை அது பாட்டுக்கு கொட்டிக் கொண்டு தான் இருந்தது.

மெல்ல மெல்ல மரங்களுக்கிடையே புகுந்து புகுந்து ஒரு வழியாக் ஆறு மரங்களையும் கடந்து வந்தால்.. பத்து பனிரெண்டு பையன்கள் பைக்குடன் தயாராக இருந்தார்கள்.

என்னை நடுவிலிருந்த பைக்கில் உட்காரச் சொன்னவர்கள்… ஒரு அரண் போல என்னைச் சூழ்ந்தபடி.. பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்…மீண்டும் மனித நேயம் பற்றி நான் உயர்வாக நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அந்த நடுத்தர வயது ஆண் சென்ற கார் மீது ஒரு பெருமரம் விழுந்து நொறுக்கியிருந்தது.

– 28.05.2017 தினமலர் வாரமலர் திருச்சி பதிப்பில் வெளியான

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *