மேக்கிங் ஆஃப் கல்ச்சுரல் புரொக்ராம்

5
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 20, 2012
பார்வையிட்டோர்: 15,820 
 
 

நாட்கள் இருந்தபோதெல்லாம் ஓ.பி அடித்துவிட்டு, கடைசி நாளில் தீவிரமாக பரிட்சைக்கு பிரிப்பேர் பன்னும் மாணவனின் மனநிலையில் ஒயிட் போர்டில் கிருக்கிக் கொண்டிருந்தார் இருந்தார் ‘ஃப்ரீயா வுடு ரங்கராஜன்’ சார். மூன்று நாட்களில் மாடல் எக்ஸாம். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் முடிக்க வேண்டிய ஏழு டாப்பிக் இன்னும் முடிக்கவில்லை.

“இன்னைக்கி OS மராத்தான்-தான். IP மேடத்தோட பீரியடையும் சேத்து வாங்கியிருக்கு சனியென்!” மோகன் மெல்லமாக சொன்னபோது எனக்குத் தலைசுற்றியது. பக்கத்தில் சச்சின் தன்னுடைய கனவில் புல்லட்டில் சீறிப்பாய்ந்து கொண்டிருதான் என்று குத்துமதிப்பாக நினைத்தேன். புல்லட் சவுன்ட் வெளியில் கேட்டுக் கொண்டிருந்தது. “கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்…. கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.” உறுதியாக புல்லட்தான்.

“பாவம், நைட்டெல்லாம் தூங்குன டயர்ட்ல தூங்குறாரு வெண்ண.” என்று சொல்லியபடி பின்னால் இருந்த பிரபு சச்சினின் தலையில் ஒருபோடு போட்டு ஒன்றும் தெரியாதது போல் போடர்டை கவனிக்கதொடங்க, கனவில் புல்லட்டை முள்ளுக்காட்டுக்குள் விட்டு பதறி எழுந்த சச்சின், பின்னால் பார்த்து, எவன் அடித்தான் என்று தெரியாமல் எல்லோர்க்கும் பொதுவாய் சில கெட்டவார்த்தைகளை வீசி, முள்ளிற்குள் விழுந்த பைக்கை தூக்கி நிமிர்த்தி தொடர்ந்து பயனிக்க, மீண்டும் தூக்கத்திற்குள் விழுந்தான். ‘ஃப்ரீயா வுடு’ மூன்றாவது டாப்பிக்கில் முக்கிவிட்டு நாளாவது டாப்பிக்கால் நாக்குத்தள்ள வைக்க புக்கை புரட்டி கொண்டிருந்தார்.

“நெக்ஸ்ட் அவர் டாப்பிக் இஸ்.. டெட்லாக்…”

“செத்தொம்டா…” என்று நடுங்கிய இளங்கோ கண்ணில் சாவு பயம் தெரிந்தது.

சுற்றிப்பார்த்தேன். பாய்ஸ், கேர்ள்ஸ் எல்லொரும் கஞ்சா அடித்துவிட்டு நட்டுக்கொண்டவர்கள் போல் காணப்பட்டனர்.

“இந்த கொடூரமிருகத்தோட தாக்குதல் நம்ம மட்டுமில்லை நம்ம சந்ததியினரையும் பாதிக்கலாம். அதனால நாம பாதுகாப்பான இடத்த நோக்கி போகனும். வாங்க ஜிம் நாம முன்னேறலாம். இருட்டுறதுகுள்ள நமக்கு ஒரு பாதுக்காப்பான இடம் கிடைக்குதான்னு பார்போம்.” ரகுநாத் டிஸ்கவரி சேனலில் பேசுவதைபோல் மிமிக்ரி செய்துகொண்டிருந்தான். காலேஜின் ஆஸ்தான மிமிக்ரி ஆர்டிஸ்ட்.

‘ஃப்ரீயா வுடு’ இம்சையில் இருந்து சிறிது நேரமாவது இளைப்பாற இப்போதைக்கு ஒரு சின்ன இன்ட்ரப்ட் போதும். அதை ஊதி பெரியதாக்கி ஓ.பி அடித்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதுதான் அந்த இன்ட்ரப்ட் ஆபீஸ்பாய் ரவி மூலமாக சர்குலர் வடிவில் வந்தது. ‘ஃப்ரீயா வுடு’ அதை வாங்கி வாசிக்கத் தொடங்கியவுடன்தான் அனைவருக்கும் சுயநினைவு வந்தது.

“ஆல் ஹியர் பை இன்ஃபார்ம்ட்…..” என்று வாசிக்கத்தொடங்கியவர் மிச்சத்தை மனதிற்குள் வாசித்து, “ இங்க கவனிங்கப்பா, வர்ற இருபத்தஞ்சாந் தேதி கல்ச்சுரல் புரொகிராம் நடக்கபோது. பாட்டு, டான்ஸு, ட்ராமால பார்ட்டிசிபேட் பன்னுறவங்கெல்லாம் கல்சுரல் இஞ்சார்ஜ் நாகலெச்சுமி மேடத்துட்ட நாளைக்கு நேம் கொடுக்கனுமாம். கொடுக்குறவுங்க கொடுத்துருங்க.” சர்குலரில் கையெழுத்து போட்டுவிட்டு, திரும்பி புக்கை விரித்து, “ டெட்லாக் இஸ் மோஸ்ட் இம்பார்ட்டன்ட் திங்க் இன் தி….” என்று தொடர்ந்தவரை, “சார்.. போதும் சார்…” என்று கோரஸில் வகுப்பறையே கோரிக்கை வைத்தது..

“இன்னும் நிறையா டாப்பிக் இருக்குப்பா. கவனிங்க..”

“சார், அதான் ஓ.எஸ் எக்ஸாமுக்கு ஆறுநாள் இருக்குல.. நாளைக்கு பாத்துகலாம் சார்”

“சரி. ஓகே.. ஓகே.. நாளைக்கி மிச்சம் உள்ள மூனு டாப்பிக்க பத்ரி, தாட்சாயினி, அபிராமி மூனுபேரும் செமினார் எடுப்பாங்க.”

அனைவரும் நிம்மதியுடன் கைதட்டினோம். அதை கவனித்துவிட்ட ‘ஃப்ரீயா வுடு’ சிரித்துக்கொண்டே, “டெட்லாக் இஸ் மோஸ்ட் இம்பார்…” என்று புக்கை விரித்தார்.

“சார்…” கோரஸ்.

“கொஞ்சம் விட்டா கைதட்டி சவுன்ட் கொடுக்க ஆரம்பிச்சுருவீங்கலே. பாடம் எடுக்கல. அமைதியா படிங்க.”

காலேஜ் லைஃப்ல ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு ஆசை இருக்கும். தன்னை எல்லோரும் கவனிக்கனும். தான் மட்டும் தனியாக தெரியவேண்டும். குறிப்பாக பெண்கள் மத்தியில் தான் எப்போதும் ஒரு பவர் ஸ்டார்ராக இருக்க வேண்டும் என்கிற மாபெரும் உந்துதல்களே ஒருவனை பாடகனாக, டான்ஸராக, கவிஞனாக, காமெடியனாக மேடையேறச்செய்கிறது. பெண்களை பொருத்தவரை இந்த விசயத்தில் ஒரு வேறுபாடு உண்டு. ஒரு பெண் நன்றாக ப்ரெசன்ட் பண்ணினாலும் ஆண்கள் அதை எற்றுக்கொள்வதில்லை மாறாக ஓட்டுவார்கள் என்கிற நினைப்பே அவர்களை அடுத்தமுறை மேடை ஏறவும், புதிதாய் மேடை ஏறத்துடிப்பவர்களுக்கும் மனத்தடையை உருவாக்கிவிடுகிறது.

மாடல் எக்ஸாம் எல்லாம் முடிந்து மூன்று நாட்களாகியிருந்தது. கல்ச்சுரல் புரொக்ராமிற்காக இரண்டு மூன்று கமிட்டிகள் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு கமிட்டிக்கும் ஐந்துபேர் வீதம் மாணவர்களை தேர்ந்த்தெடுத்திருந்தனர். நான், முனி, ராம் மூன்றுபேரும் எந்தெந்த கமிட்டிக்கு ஓ.டி கொடுக்கிறார்களோ அந்தந்த கமிட்டியில் சேர்ந்துகொண்டு, ஆடிடோரியத்தில் நடக்கும் ரிகல்சலை பார்க்கச் சென்றுவந்துகொண்டிருந்தோம்.

“இன்னைக்கு சச்சின் ரிகர்சல். வேகத்துல வாங்கடா” முனி சொல்லிக் கொண்டே ஆடிடோரியத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தான். அவனுக்கு பின் நானும் ராமும்.

“அவன் எப்பையும் ‘கலைவானியே உனைத்தானே அழைத்தேன்’னு சிந்துபைரவி பாட்டையே பாடுறான். அத போய் பாத்து என்ன பன்ன. இத்தனை தடவ கலைவானிய கூப்பிட்டதுக்கு இன்னியாரம் கலைவானியே நேர்ல வந்துருக்கனும்.”

“கலைவானி இன்னியாரம் ஓடிருக்குமே தவிர, வந்திருக்காது. எனக்கென்னமோ இந்தப் பாட்டு பாடுனப்பதான் ஏதாவது சோப்புடப்பாவாவது ப்ரைஸ் கிடச்சிருக்கும்னு நினைக்கிறேன். அதுல இருந்து தலைவரு இந்த பாட்ட விடல. வேற எந்த பாட்டையும் கத்துகல.” முனி.

“என்ன இருந்தாலும் நம்ம பயடா, அவன். ஸ்டேஜ்ல பாடும்போது கைதட்டி விசிலடிச்சா ட்ரீட் வைக்குறதா சொல்லியிருக்கான்.” நான்.

ஆடிடோரியத்திற்குள் நுழையும்போது நாகலெச்சுமி மேம் பரதநாட்டியம் கத்துகொடுத்துகொண்டிருக்க, பிரியதர்ஷினியும் காயத்திரியும் ஆடிக்கொண்டிருந்தனர்.

“டே முனி, நேத்து பிரியதர்ஷினியும் ஆர்த்தியும்ல பரதம் ஆடிக்கிட்டிருந்தாளுக. இப்ப என்ன ஆச்சு?”

“ஆர்த்தி அப்பா ‘நாளு பேருக்கு முன்னாடி போய் ரிகார்ட் டான்ஸ் ஆடுரையான்னு’ அடிக்க போய்டாராம். அதனால அந்த புள்ள அழுதுகிட்டே வந்து நான் விலகிக்கிறேன். இந்த தடவை காயத்திரியை சேத்துகுங்கனு சொல்லிட்டு போயிருச்சு. அப்ப நம்ம நாகலெச்சுமி மேடம் போட்ட சீன பாக்கனுமே. ‘பரதம்கிறது தெய்வீக கலை, இட்ஸ் எ ஃப்யர், இட்ஸ் எ லைஃப்’ அப்பிடி இப்பிடினு. இதுவே நாலஞ்சு சினிமால வர்ற ஸ்டெப்ஸை கத்துவச்சுக்கிட்டு காப்பியாத்திக்கிட்டு இருக்கு அதுல ‘இட்ஸ் எ ஃப்யர், இட்ஸ் எ லைஃப்’ வேற.”

நான் பார்த்துகொண்டிருந்தேன். காயத்திரிக்கு ஸ்டெப்ஸ் கத்துகொடுக்க நாகலெச்சுமி படாதபாடு பட்டுக்கொண்டிருந்தது. “ஒனக்கு எத்தனை தடவ சொல்றது? அப்பிடி இல்லமா இப்பிடி” என்று வணக்கம் வைக்க சொல்லிக்கொடுத்துகொண்டிருந்தது பார்ப்பதற்கு, தரையில் காயப்போட்டிருக்கும் அரிசியை இருகைகளையும் விரித்து அள்ளி உலைப்பானையில் போடுவதுபோல் இருந்தது.

சென்ஸார் போர்ட் வேலையை கெமிஸ்ட்ரி புரொப்பசர் ஆவுடையப்பன் பார்த்து கொண்டிருந்தார். கலந்து கொள்பவர்கள் தாங்கள் பாடப்போகும் பாடல், நடிக்கப்போகும் ஸ்கிரிப்ட் ஆகியவற்றை அவர் எடிட் செய்தபிறகுதான் மேடையேற முடியும். சென்ஸார் என்கிற பெயரில் அவர் செய்கிற அடாவடிகள் ஏராளம். காதல் பாடலில் வரும் ‘காதல்’ என்கிற வார்த்தையை ‘அன்பு’ என்று ரீப்ளேஸ் செய்தும், ‘அவன்’, ‘அவள்’ போன்ற சொல்லில் மரியாதை இல்லை என்று சொல்லி ‘அவர்’, ‘அவர்கள்’ என்று மாற்றியும் சினிமா பாடலை ஏசுவின் சுவிசேச பாடலாக மாற்றி தன்னுடைய கவித்திறனை மெச்சிக்கொள்வார்.

இவர்கள் அடிக்கின்ற கூத்தையெல்லாம் வேனு சார் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார். இவர்கள் கலையை வளர்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டு கழுத்தறுத்துகொண்டிருப்பதில் அவருக்கு உடன்பாடுயில்லை என்றாலும், இரண்டு பேரும் அவருக்கு சீனியர் என்பதால் அவரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த்து. அவரும் ரகுநாத்தும் பேசிக்கொண்டிருந்தனர். ரகுநாத் எப்பொழுதும் ஏதாவது நடிகர் வாய்ஸில் பேசிக்கொண்டிருப்பான். அரசியல் பேசும் போது கலைஞர் வாய்ஸ், கோபமாய் இருக்கும் போது கேப்டன், ஜாலிமூடில் இருக்கும் போது பாக்யராஜ்… இது மட்டுமல்லாமல் கிளி, குரங்கு, எருமைமாடு மாதிரியெல்லாம் மிமிக்ரி செய்வான். இப்படி எப்போதும் ஏதாவது ஒரு வாய்ஸில் பேசி தன்னுடைய வாய்ஸையே மறந்துவிட்டிருந்தான்.
திடீரென்று வேனு சார் முகம் மாறத்தொடங்கியது. அவரது கவனம் எல்லாம் கையில் வைத்திருந்த காகிதத்தில் இருந்தது. ரகுநாத் திருதிருவென முழித்துக்கொண்டிருந்தான். வேனு சார் அந்த காகிதத்துடன் ஆவுடையப்பன் சாரை நோக்கி வந்தார். பின்னால் ரகுநாத்தும் ஓடிவந்தான்.

“சார் ரகுநாத் ஸ்கிரிப்டை நீங்க பாத்துட்டீங்களா?” என்றவாறு தன் கையில் இருந்த காகிதத்தை அவரிடம் கொடுத்தார்.

அதைவாங்கிப் பார்த்த ஆவுடை, “ஓ எஸ். பாத்துட்டேனே! நல்ல ஸ்கிரிப்ட். நடிகை உம்மா ரெட்டி தேர்தல்ல நிக்கிறாங்க. அவங்கள ஆதரிச்சு ஒவ்வொரு நடிகரும் வாக்கு சேகரிச்சா எப்படி இருக்கும்கிறதுதான் கான்சப்ட். சூப்பர் கான்சப்ட்ல?”

“நடிகர்கள் பேசுற அந்த ஒருவரி டைலாக்கை பாத்தீங்களா?” வேனு சார் ஆவுடையை மிரட்சியுடன் பார்த்தார்.

“பாத்துட்டேன்.”

“எங்க அத ஒரு தடவ படிங்க..”

ஆவுடை டைலாக்கை தேடிப் படித்தார். “ ‘ஓட்டு வீட்டுல இருக்கிற ஒவ்வொருத்தரும் கல்லு வீட்டுக்கு வரனுமா? ஓட்டாமாய் ஓடி வந்து கற்புகரசி உம்மா ரெட்டியை ஓட்டு போட்டு தேர்தலில் வெற்றி பெறச்செய்யுங்கள்.’ சூப்பர்ல? எதுகை மோனை பின்னிடான்ல. ஆமா, இதுல என்ன பிராபளம்? ”

“பிராபளம் டைலாக்ல இல்ல, இந்த டைலாக்கை இவன் எம்.ஜி.ஆர்., வாய்ஸில் பேசப்போறான், அதான் பிரச்சனையே. எங்க, இந்த டைலாக்கை எம்.ஜி.ஆர்., வாய்ஸில மனசுக்குள்ள பேசிப்பாருங்க”

அவுடை மனசுக்குள் பேசிப்பார்த்த மறுநொடி “அடப்பாவி சண்டாளா! என்னைய சஸ்பன்ட் ஆக்கப்பாத்துட்டியேடா!” என்று பதறினார்.

“சார், இது அவன் தப்புயில்லை சின்ன கம்யூனிகேசன் மிஸ்டேக். அவ்வளவுதான். பிராபளத்தை சால்வ் பன்ன டைலாக்கை மாத்திறலாம். இல்லை, எம்.ஜி.ஆர்., வாய்ஸை லிஸ்டிலிருந்து தூக்கிறலாம்.”

இப்படி ஒரு வாரம் நிறைய கூத்துகளுக்கிடையில் ரிகசல்கள் முடிந்து, இதோ இன்னும் பத்து நிமிடத்தில் தொடங்கயிருக்கிறது கல்ச்சுரல் புரொக்ராம். ஆடிட்டோரியம் சின்னதாக இருந்ததால் ஃபுட்பால் கிரவுன்டில் ஸ்டேஜ் போட்டிருந்தனர். எங்களுக்கு பிளாஸ்டிக் சேர்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தது. நான், முனி, ராம் கடைசி ரோவ்விலிருந்து இரண்டாவது ரோவ்வில் இடம்பிடித்து ரகளை பன்னிக்கொண்டிருந்தோம். இப்படி இரண்டு ரோவ் தள்ளி இடம்பிடித்தால் ரகளை பன்னலாம். மாட்டினாலும் கடைசி ரோவில் உள்ளவர்களைதான் தூக்குவார்கள். யாரும் கேட்பதில்லை என்றபோதிலும், காலேஜ் சாதனைகளை ஆறுமுகம் சார் மைக்கில் படித்துக் கொண்டிருந்தார்.

“டேய் தம்பி, கட்டம்போட்ட சட்ட. கொஞ்சம் எறங்கி ஒக்காரு எனக்கு மறைக்குது.” ராம் அதட்டலுடன் சொன்னான்.

கட்டம் போட்ட சட்டை திரும்பிப்பார்த்தான். அது இங்க்லிஸ் எச்.ஒ.டி ராமநாதன். ராம் தலையை குனிந்து கொண்டான்.

“டேய் மாப்ள, மஃப்டி போலிஸ் நிறையா அலையுதுடோய். கொஞ்சம் அடக்கி வாசிங்க” என்று முனி சொல்லி முடிக்கும்போது ஸ்பீக்கர் அலறியது

“இப்போது நம் கல்லூரிக்கு வருகை தந்திருக்கும் வேம்புலி அம்மன் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் கல்லூரி முதல்வர் திரு. குமாரசாமி அவர்கள் நம் கல்லூரியை பற்றி ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவார். அதை தொடர்ந்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கலை நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும்.”
குமாரசாமி மைக்கை பிடித்து தவளையைபோல் மிமிக்ரி செய்யத்தொடங்கினார். நான் முனியைப் பார்த்து, “செம மச்சி, சூப்பரா மிமிக்ரி பண்றார்ல?” என்றேன்.

“டேய் அவர் வாய்ஸே அப்படிதான்டா. நல்ல கவனிச்சு பார் இங்க்லிஸ்ல ஏதோ பேசுறார் கவனி” முனி விளக்கினான்.

நான் கவனித்தேன். உன்மைதான்.

ஐந்து நிமிடத்தில் அவர் பேசி முடிக்கும் போது வானம் இருளத்தொடங்கி மழை கொட்டியது. “தவள கத்தும்போதே நெனச்சேன். மழை வரும்னு. பாத்தியா, வந்துருச்சு.” ராம் முனியிடம் சொல்லிக்கொன்டே எங்களுடன் பாய்ஸ் ஹாஸ்டலுக்கு ஓடி வந்தான். பெண்கள் ஆடிடோரியத்துகுள் சென்று ஒடுங்கினர். ஹாஸ்டல் கொஞ்ச நேரத்தில் நசநசவென்று ஆகிப்போனது. மழை அரைமனி நேரமாக தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் ஸ்பீக்கர் அலறியது. “மழையின் காரணமாக கல்சுரல் புரொக்ராம் காலவரையற்று தள்ளி வைக்கப்படுகிறது.” என்று சொல்லி டைடானிக் படத்தின் தீம் ம்யூசிக்கை போட்டார்கள். இந்த அட்மாஸ்பியரில் அந்த இசை நன்றாகயிருந்தது.

நான் சச்சின் கொடுக்கவிருந்த ட்ரீட் பறிபோனதை நினைத்துகொண்டிருந்தேன்.

நாகலெச்சுமி, ஆவுடையப்பன் தங்களுடைய கலைதாகத்திற்கு வந்த ஆப்பை நினைத்து நொந்துகொண்டிருப்பார்கள்.

கலைவானிக்கு இம்முறை ஓடவேண்டியிருக்காது, சச்சின் ஆஃப்; கலைவானி சேஃப்.
‘நம்மல விட குமாரசாமி எப்படி சூப்பரா மிமிக்ரி பன்னுனார்’ என்று பொறாமையில் மூழ்கி கொண்டிருப்பான் ரகுநாத்.

இந்த நேரத்தில் வேனு சார் என்ன நினைத்துகொண்டிருப்பார். மழைக்கு நன்றி சொல்லிக் கொண்டிருப்பாரோ?

**இந்தக் கதை தமிழ்மன்றம் இணையதளத்தில் ஏற்கனவே பிரசுரம் ஆனது.

Print Friendly, PDF & Email

5 thoughts on “மேக்கிங் ஆஃப் கல்ச்சுரல் புரொக்ராம்

  1. அருள் சார். சிரிக்காம இருக்க முடியல. சொந்த அனுபவம் போல…

  2. சிரிப்பை அடக்க முடியவில்லை ………….வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *