மெல்லத் துறந்தது கதவு…

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 26, 2020
பார்வையிட்டோர்: 60,548 
 
 

வாக்கிங் போய் விட்டு வீட்டு வாசலுக்கு வந்தார் எக்ஸெல். வீட்டுக் கதவு மூடியிருந்தது. காலிங் பெல் அடித்தார். கதவு திறக்கவில்லை . இன்னொரு முறை ஓங்கி அடித்தார். அப்போதும் பூங்கதவு திறக்கவில்லை . கோபம் வந்தது. கதவை படபடவென தட்டினார்.

“யாரது? இப்படி தட்டறது?” என கத்தினார் ! மிஸ்டர் எக்ஸ் உள்ளிருந்து.

“நான்தான். உங்க பொண்டாட்டி!”

“எவ்வளவு பேர் இந்த மாதிரி கிளம்பியிருக்கீங்க? என் ஒய்ஃப் காலிங் பெல்தான் அடிப்பாளே தவிர ஒருக்காலும் கதவை தட்டமாட்டா. என் பெண்மணி ஒரு பெல்மணி!

“கதவைத் திறக்கறீங்களா… இல்லே கதவை உடைக்கட்டுமா?”

“உனக்கு கடலையக் கூட உடைக்கத் தெரியாது. உடைச்ச கடலை வாங்கிட்டு வரச் சொல்லுவே. கதவை உடைக்கறயாம். போனா போகட்டும்னு இந்த ஒரு தடவை உன் தட்டலை தட்டக்கூடாதுன்னு திறக்கறேன். இனிமே ஒன்லி பெல். பெல் தவறேல்!”

உள்ளே நுழைந்ததும் எக்ஸெல் கத்த ஆரம்பித்தார்.

“எவ்வளவு நேரம் பெல் அடிச்சேன் தெரியுமா? விரலே வீங்கிப் போச்சு…”

“பொய் சொல்றே… பெல் சத்தம் கேக்கவே இல்லே . நீ சரியா அடிச்சிருக்கமாட்டே. பெல் கீழ்ப்பகுதில அழுத்தணும். நான் அமுக்கறேன் பாரு. நானெல்லாம் அந்தக் காலத்துல பெல் பாட்டம் போட்டவனாக்கும்!”

பெல் ஸ்விட்ச்சின் பாட்டத்தைப் பிடித்து அமுக்கினார். ஸ்விட்ச் ஆட்டம் கண்டதே தவிர மணி ஒலிக்கவில்லை.

“சத்தம் வரல்லியே. பெல் ஃபெயில் ஆயிடுச்சு போல இருக்கு.”

” யாராவது எலெக்ட்ரீஷியனைக் கூப்பிடுங்க!”

எலெக்ட்ரீ ஷியனைக் கூப்பிட்டார் மிஸ்டர் எக்ஸ்.

“ஹலோ…மணிகண்டனா?”

“ஸாரி… என் பேர் இப்போ மணிகரண்டன். அரசாங்க கெஜட்ல போட்டு பேரை மாத்தியாச்சு. இப்போ நான் கெஜட் பாதுகாப்புல இருக்கேன்!”

“சரி கரண்டா … என் வீட்ல ஒரு சின்ன எலெக்டிரிகல் வேலை வர முடியுமா?”

“என்ன வேலை?”

“காலிங் பெல் ரிப்பேர்!”

“ரொம்ப சின்னதா இருக்கே?”

“காலிங் பெல் சின்னதாத்தான் இருக்கும். ட்யூப் லைட்தான் நீளமா இருக்கும். கொஞ்சம் சீக்கிரமா வா…”

“ஓ.கே…கால் மணி?”

‘ஆமா… கால் மணிதான்…”

அரை மணி நேரம் ஆயிற்று. மணிகரண்டன் வரவில்லை . மிஸ்டர் எக்ஸ் அவனுக்கு போன் செய்தார்.

“என்னப்பா? இன்னும் வரல்லே ?”

“உங்க வீட்டு வாசல்லதான் கால் மணி நேரமா மணி அடிச்சு கிட்டிருக்கேன்” என்றான் அவன் போனில்.

“யோவ். மணிதான்யா ரிப்பேர்…”

” அடடா..மறந்துட்டேன் சார்.. எனக்கு ஒரு தடவை ஷாக் அடிச்சது. அதுலேந்து ஷாக் டைம் மெமரிலாஸ் வந்துடுச்சு. கதவைத் திறங்க சார்…”

“கதவைத் தட்டு. திறக்கறேன். அதான் கதவுக்கு மரியாதை!”

மணிகரண்டன் கதவைத் தட்டினான். மிஸ்டர் எக்ஸ் கதவைத் திறந்தார். பெல்லை அடித்துப் பார்த்தால் சத்தம் வரவில்லை.

“பெல் புட்டுகிச்சு சார்…”

ஒரு ஒயரை பல்லால் கடித்தான் மணிகரண்டன்.

“யோவ்… என்னய்யா இது? இதென்ன சென்டிரல் ஜெயில்னு நினைச்சியா?”

“சும்மா இரு சார். வாய்தான் எங்களுக்கு டூல் பாக்ஸ்” என்றவன், “ஒயர் லூஸ் காண்டாக்ட் சார்” என்று எதையோ முடுக்கினான் . பிறகு ஸ்விட்சை அமுக்கினான்.

நேற்றுதான் பிறந்த நாய்க்குட்டி மாதிரி பெல் கீச் கீச்சென்றது.

“சவுண்ட் ஓகே யா சார்?”

“ஒண்ணுமே கேக்கல்லியே?’

“பெல் மேல காதை வைச்சு கேளு சார்….”

“யோவ்…நான் தலகாணி மேலதான் காதை வைச்சு படுப்பேன். பெல் மேல காதை வைச்சு எப்படிய்யா படுப்பேன்?”

“உங்க காதுல விழல்லே … அப்படித்தானே?”

“ஆமா …”

” அப்போ மாத்திட வேண்டியதுதான்…”

“காதையா?”

“இல்லே. பெல்லை. புது பெல் வாங்கிடலாம்…”

“பெல் எங்கே போய் வங்கணும்? ரொம்ப தூரம் போகணுமா? என்னால முடியாதே?”

“பெல்ஜியமா போகப் போறீங்க. இங்கே பக்கத்துல பெல்ராம் சேட் கடைலயே கிடைக்கும்.”

“நீயே போய் வங்கிட்டு வந்துடேன்…”

“சரி. போறேன். உங்களுக்கு எந்த மாதிரி பெல் வேணும்?”

“சுளீர்னு கன்னத்துல அறையற மாதிரி இருக்கணும் சவுண்ட்…”

“கன்னாளனேன்னு ட்யூன் இருக்கற பெல் வாங்கிடலாமா?”

“டொய்ங்… டொய்ங் சவுண்ட் போதும்யா.”

“அது எக்மோர் ஸ்டேஷன் சவுண்ட். அப்புறம் வீட்டுக்குள்ள பாண்டியன் எக்ஸ்பிரஸ்தான் வந்து நிக்கும்.

இப்போ வித விதமா ட்யூன் கூட வந்திருக்கு. நீங்க பெல் அடிச்சா சங்கிலி புங்கிலி கதவைத் திறன்னு ட்யூன் பாடற பெல்கூட வந்திருக்கு. வாங்கிடலாமா?”

“வேணாம். நான் மாட்டேன் வெங்கலப் புலின்னு இவ கதவைத் திறக்க மாட்டா !”

“என்னங்க…. ஏதோ சங்கிலி அது இதுன்னு சொல்றாரு. அதையே வாங்கிடலாம்.” என்றார் எக்ஸெல்.

“சரிம்மா!”

“பழசு எடுத்துக் கிட்டு புது சங்கிலி கொடுப்பாங்களா?”

“ஏம்மா… எனக்கொரு ஐடியா? உங்க பெட் ரூம்லயும் ஒரு பெல் வைச்சிடலாமா? சில சமயம் ஹால்ல அடிக்கற பெல் சத்தம் பெட் ரூம்ல கேக்காது!”

“ஆமா… ஆமா… எனக்கு கேக்கறதே இல்லே. ஒரு தடவை மணியாச்சிலேந்து வந்த என் உறவுக்கார அத்தை ஒருத்தர் அரை மணி நேரம் பெல் அடிச்சிருக்கா…தூங்கிக்கிட்டிருந்த எனக்கு கேக்கவே இல்லே!”

“அப்புறம் என்னாச்சு?”

“அத்தை வெராண்டாலயே படுத்துத் தூங்கிட்டாங்க. காத்தால ஏந்திரிச்சு அரைத் தூக்கத்துல அவங்க மேல நான் தண்ணி தெளிச்சு விட்டுட்டேன். நல்ல வேளை அவங்க நெளிஞ்சதால – மேல நெளி கோலம் போடாம விட்டுட்டேன்!”

“அதனாலதான் பெட் ரூம்ல காலிங் பெல் வைக்கலாம்னு சொல்றேன். என்ன மாதிரி சவுண்ட் வேணும் உங்களுக்கு?”

“கிளி கத்தற சவுண்ட் வைக்கலாம். எனக்கு கிளி ரொம்பப் பிடிக்கும்” என்றார் எக்ஸெல்.

“கிளிக்கு உன்னைப் பிடிக்குமா? எப்போ கிளி ஜோசியம் பாத்தாலும் காளி படம் தான் வருது உனக்கு!”

“ஒரு பெட் ரூம்ல மட்டும் பெல் வைச்சா போதுமா?”

“எல்லா பெட் ரூம்லயும் வைச்சிடலாம்.” என்றார் மிஸ்டர் எக்ஸ்.

“ஆமா… கெஸ்ட் ரூம்லயும் வைச்சிடலாம். போடா… போடா புண்ணாக்குன்னு ட்யூன் வைச்சிடலாம்!”

“ஏங்க பால்கனிக்கு கூட ஒண்ணு வைச்சிடலாமே!”

“பால்கனிக்கா?”

“ஆமா.. துணி காயப் போடறப்ப யாராவது பெல் அடிச்சா?”

“அந்த நேரத்துல யார் பெல் அடிப்பா ?”

“கடைசி வீட்டு காயத்திரி அப்போதான் சரியா வருவா… என்னோட வாஷ் மேட் அவ…”

“சரி…. வைச்சிக்கிட்டு தொவை…”

“பால்கனி பெல்லுக்கு என்ன ட்யூன் வைக்கலாம்?”

“காக்கா கத்தற மாதிரி வைக்கலாமா?” – மணிகரண்டன்.

” எதுக்கு? தினமும் சொந்தக்காரங்க வர்றதுக்கா?’

“கிச்சனுக்கும் ஒண்ணு வைக்கலாமா?” என்றார் எக்ஸெல்.

“எதுக்கு?”

“சிம்னி ஓடற சவுண்ட்ல ஹால்ல அடிக்கற பெல் கேக்கறதே இல்லே …”

“அதுக்கு பெல் எதுக்கு? வாசல்லேந்து ஸ்விட்ச் அமுக்கினா சிம்னி ஆஃப் ஆகற மாதிரி செஞ்சுடலாமே?”

“என் சமையலறையில் உப்பா சர்க்கரையான்னு ட்யூன் வைச்சிடலாம் கிச்சனுக்கு” என்றார் எக்ஸெல்.

“குக்கூ…. குக்கூன்னு குயில் கூவற மாதிரி வைக்கலாம். அப்போவாவது நீ குக் பண்றியான்னு பாக்கலாம்!”

“கடைசில பாத் ரூம்.” என்றான் மணிகரண்டன்.

“இல்லே… இப்போல்லாம் வீட்ல நுழைஞ்சவுடனே பாத்ரூம் இருக்கு…”

“பாத்ரூமுக்கும் பெல் வைக்கலாம்னு சொல்றேன்!”

“பாத்ரூமுக்கு பெல்லா? சிரிப்பாங்க…”

“பாத்ரூம்ல பெல் வைச்சா என்ன பிரச்னை ? அது உங்களை என்ன செய்யுது?”

“ஒண்ணும் செய்ய விடாது. அதான் பிரச்னை …”

“நாம பாத்ரூமுக்கும் வைக்கறோம். ஒரு நல்ல ட்யூன் சொல்லுப்பா” என்றார் எக்ஸெல்.

“கடவுளே…கடவுளேன்னு வைச்சிடுங்க!”

“சூப்பர்! சரி… நீ போய் பெல் வாங்கிட்டு வந்துடு!’

“ஒயர்ல்லாம் யார் வாங்குவாங்க?” என்றான் மணிகரண்டன்.

“ஒயர் எதுக்கு?”

“ஒயரிங் செய்யாம பெல் எப்படி அடிக்கும்? உங்களுக்கு ஒயரிங் எப்படி செய்யணும்? வெளீலயா…உள்ளேயா?”

“வீட்டுக்கு வெளீல எதுக்கு ஒயரிங் செய்யணும்? வீட்டுக்குள்ளேயே செய்…”

“அதில்லே சார். சுவத்தை தோண்டி ஒயரிங் பண்றதா…. இல்லே சுவத்துக்கு வெளீல ஒயரிங் பண்றதா?”

“இவ்வளவு செலவு செஞ்சு ஒயரிங் பண்றோம். அது நாலு பேருக்குத் தெரியற மாதிரி இருக்கட்டுமே!”

“நெருப்பு பிடிக்காத ஒயர் வாங்கலாமா?”

“எனக்குப் பிடிச்ச மாதிரி வாங்கு . நெருப்புக்கு பிடிச்சா என்ன பிடிக்கல்லேன்னா என்ன?”

“ஓ.கே. கடைக்குப் போறேன். ஒரு பை கொடுங்க…”

எக்ஸெல் ஒரு ஒயர் கூடையை எடுத்துக் கொடுத்தார்.

அதன் பிறகு ஒரு நாள் முழுக்க ஒயரிங் வேலை நடந்தது. பெல்கள் பொருத்தப்பட்டன. வாசல் ஸ்விட்சை அழுத்தினால் எல்லா அறைகளிலும் பெல் சத்தம் கேட்டது. ஒரே நேரத்தில் .

அனிமல் சேனல், ம்யூசிக் சேனல், காமெடி சேனல் எல்லாம் போட்ட மாதிரி பல திசைகளிலிருந்தும் சத்தம் வந்து பெல்சுவை விருந்து படைத்தது.

“வித்தியாசமா இருக்குங்க” என்று மணி மகிழ்ந்தார் எக்ஸெல்.

“ஆறாயிரம் ரூபா கொடு சார்” என்றான் மணிகரண்டன்.

“ஆறாயிரமா?”

“இதுவே தோராயமா சொல்லியிருக்கேன். சரியா பில் போட்டா ஏழாயிரம் தாண்டும்…”

பணத்தைக் கொடுத்தும் அனுப்பினார் மிஸ்டர் எக்ஸ்.

“நீ கதவை மூடிக்கோ . நான் வெளில போய் பெல் அடிக்கறேன். நாலா திசைலேந்தும் மணி சத்தம் கேக்குதான்னு சொல்லு!” – கூறிவிட்டு வெளியே போனார் மிஸ்டர் எக்ஸ்.

எக்ஸெல் கதவை சாத்திக் கொண்டார். மிஸ்டர் எக்ஸ் ஸ்விட்சை அமுக்கினார். ஒரு பெல்லும் அடிக்கவில்லை.

“போச்சு…. பெல் அடிக்கவே இல்லே. நம்மள ஏமாத்திட்டான்!”

மணிகரண்டனுக்கு போன் போட்டார் மிஸ்டர் எக்ஸ். அவன் திரும்ப வந்தான். பெல் அடித்தான். எல்லா பெல்லும் ஒலித்தன.

“வேலை செய்யுதே சார்.”

“கதவை மூடிகிட்டு பெல் அடி!”

கதவை மூடினான். பெல் அடிக்கவில்லை.

“ஆமா சார். கதவுக்கும் பெல்லுக்கும் ஏதோ ஒத்துப் போகல்லே. பெரியவங்க எல்லாம் கூடிப் பேசி ஒரு முடிவெடுங்க…”

“என்ன செய்யணும்?”

“கதவை மாத்திடுங்க. எனக்குத் தெரிஞ்சு கதவராயன்னு ஒரு கார்ப்பெண்டர் இருக்காரு. அனுப்பட்டுமா?”

“கதவெல்லாம் மாத்த முடியாது. பர்மா தேக்கு!”

“அப்போ ஒண்ணு செய்யுங்க. வாசல் கதவை எப்பவும் திறந்தே வைச்சிருங்க. அப்போ யார் வந்து பெல் அடிச்சாலும் கேக்கும்.” என்று ஒரு மணியான யோசனையைக் கொடுத்துவிட்டு பறந்து போனான்

– ஏப்ரல் 2020

1 thought on “மெல்லத் துறந்தது கதவு…

  1. I seen your story i were amazedand meaning.so,i glad to sent me that request you are my favourite website toyear

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *