கொரோனா விதிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 2, 2020
பார்வையிட்டோர்: 41,128 
 

‘தஸ்புஸ்தான்’ நாட்டு அதிபர் ‘மஜீல்’ ஆளுயரக் கண்ணாடி முன் நின்றுகொண்டு தன்னுடைய புஷ்டியான மீசையை வாஞ்சையுடன் நீவி விட்டுக்கொண்டார். முகத்துக்கு மெலிதாக பவுடர் அடித்துக் கொண்டார்.

அவர் இன்று காலை பத்து மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு ‘கொரோனா’ பற்றிய விழுப்புணர்வை ஏற்படுத்தப் போகிறார்.

கொரோனா தொடங்கிய முதல் அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு உரையாற்றுகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும்; பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும்தான் அவரது ஆதர்ஷ தொலைக்காட்சி புருஷர்கள்.

ஆனால் தஸ்புஸ்தான் ஒரு சர்வாதிகார நாடு என்பதால் அதிபர் மஜீல் வைத்ததுதான் அங்கு சட்டம். ஒன்பது ஐம்பது மணிக்கே மக்கள் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து அவருக்காகக் காத்திருந்தனர்.

அதிபர் ‘மஜீல்’ பேச ஆரம்பித்தார்:

கொரோனா வைரஸால் கடந்த நான்கு மாதங்களாக உலக நாடுகள் அனைத்தும் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் கொரோனா வவ்வால்கள் மூலமாக பரவியது என்பது நமக்குப் புரிகிறது.

சில பொருளாதார நிர்ப்பந்தங்களால் நாம் உடனடியாக லாக்டவுனை விலக்கிக் கொள்கிறோம். எனினும் நாம் அனைவரும் புதிய வாழ்க்கை முறைக்கு உடனடியாக மாறவேண்டும். எனவே மக்கள் சில புதிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்: விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதை மீறுபவர்கள் சிரச்சேதம் செய்யப் படுவார்கள்.

முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கும், முப்பது வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கும் திருமணம் செய்ய தடை விதிக்கப் படுகிறது. இதற்கு மேற்பட்ட வயதினர்கள் திருமணம் செய்து கொண்டாலும், பத்து பேருக்கு மேல் கலந்துகொள்ள முடியாது; சமூக இடைவெளியை திருமணத்திற்கு வருபவர்கள் கடைபிடிக்க வேண்டும்.

மணமக்கள் இருவரும் டிசம்பர் 2021 வரை சமூக இடைவெளியை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும். எனவே இதன்மூலம் குழந்தைகள் உடனே பிறப்பது தவிர்க்கப் படும். புது மணத் தம்பதியினர் தாரளமாக தேன்நிலவுக்கு போகலாம். ஆனால் கணவன், மனைவி இருவரும் ஒரே சமயத்தில் ஒரே இடத்துக்குப் போவதைத் தவிர்த்து இருவரும் வேறு வேறு இடங்களுக்குப் போக வேண்டும்.

வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும். ஆனால் சமூக இடைவெளி விட்டு ஒருவர் கும்பிட்டுவிட்டு வெளியே வந்தவுடன், அடுத்தவர் உள்ளே போக வேண்டும்.

சினிமா படப் பிடிப்புகளில் ஹீரோ—ஹீரோயின் நெருக்கமான காதல் காட்சிகள் மூலம் கொரோனா தொற்றும் அபாயம் உள்ளது. எனவே பன்னிரண்டு மீட்டர் சமூக இடைவெளி விட்டு காதல் காட்சிகளைப் படமாக்க வேண்டும். அதேபோல ஹீரோ ஒரே நேரத்தில் ஐம்பது பேருடன் சண்டையிட்டால் கொரோனா ஆபத்து வரும். அதனால், ஹீரோவைப் பார்த்தவுடனே சண்டைக்குத் தயாராகும் வில்லன்கள் தானாகவே குட்டிக்கரணம் அடித்து விழுவது போல காட்சிகள் அமைத்துக் கொள்ளலாம்…

ஏ.டி.எம்களில் ஒருவர் பணம் எடுத்துச் சென்றவுடன், அங்கேயே இருக்கும் பேங்க் ஊழியர்கள் ஏடிஎம் முழுவதையும் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு முற்பகல் இருவரும், பிற்பகல் இருவரும் பணம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும்.

டிவி சேனல்கள் நான்கு பேரைச் சேர்த்து வைத்து நேரடி ஒளி பரப்பாக விவாதம் நடத்தக் கூடாது. நான்கு பேரின் கருத்தையும் தனித்தனியாகப் பதிவு செய்துவிட்டு, அதை ஒரே சமயத்தில் ஒளி பரப்பினால் நான்கு பேர் சேர்ந்து விவாதிப்பது போலவே இருக்கும். யாருக்கும் எதுவும் புரியாவிட்டாலும் காரசாரமாக எடிட் செய்து கொள்ளலாம். இதனால் கொரோனா பரவுவது தடுக்கப்படும்.

உங்கள் வீடுகளில் யாரும் ‘வெல்கம்’ போர்டுகளை வைக்கக் கூடாது; மாறாக ‘வெல்கோ’ போர்டுகளை வைத்தால் கொரோனா வீட்டுக்குள் நுழையாது. ஒருவேளை விருந்தினர்கள் தவறுதலாக வந்துவிட்டாலும் ‘மாஸ்க்’ போட்டபடியே ஜன்னல் வழியாகப் பேசி அனுப்பிவிட வேண்டும். ஜன்னல் கம்பிகளை அவர்கள் தொட்டுவிட்டால் கிருமிநாசினி போட்டு உடனே நன்கு துடைக்கவும்.

மக்களின் ‘தாகத்தை’ கருத்தில்கொண்டு மதுக்கடைகள் திறக்கப் படுகின்றன. ஆனால் ஒருவர் குடித்துவிட்டு போதை தெளிந்து வெளியே வந்த பிறகே அடுத்தவர் கடைக்குள் நுழைய முடியும். நிறைய மது குடித்துவிட்டு ஒருவேளை யாராவது மப்பில் மட்டையானால், அதே இடத்தில் இன்னொருவர் மப்பில் விழ கண்டிப்பாக அனுமதிக்க முடியாது. சமூக இடைவெளி முக்கியம்.

பரத்தையர்கள் தங்கள் தொழிலை எப்போதும்போல தொடரலாம். ஆனால் கூட்டமாக ரோடில் கூடி நின்று ஆண்களுக்கு அழைப்பு விடக்கூடாது. தனியாக மட்டும் நின்றுகொண்டு அழைப்பு விடுக்கலாம். அவர்கள் அப்படி தனியாக அழைப்பு விடுவதற்கு முன், கொரோனா டெஸ்ட் கண்டிப்பாக செய்துகொள்ள வேண்டும். அதற்கான சான்றிதழ் அவர்களிடம் எப்போதும் இருக்க வேண்டும். அதன் வாலிடிட்டி பன்னிரண்டு மணி நேரங்கள் மட்டுமே. ஆண்கள் இதில் மிகுந்த கவனத்துடன் ‘செயல்’படுவது உசிதம்.

ஜூன் 2021 வரை கல்வி நிலையங்களைத் திறக்கக்கூடாது. படிக்காமலேயே மாணவர்களுக்கு ஆல் பாஸ் போட்டுவிடவும். மாணவச் செல்வங்களாவது இந்தக் கொரோனாவினால் நிம்மதியாக இருக்கட்டும்.

சாலைகளில் ஒரு வாகனத்துக்கும் இன்னொரு வாகனத்துக்கும் குறைந்த பட்சம் ஒருகிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். சாலைகளில் ஐந்து கிலோமீட்டர் இடைவெளியில் டீக்கடைகள் இயங்கலாம். ஆனால் ஒரு நபர் காபி அல்லது டீ குடித்த பிறகு, அந்த எச்சில் க்ளாஸை சோப்பு, டெட்டால், சானிடைசர் எல்லாம் போட்டு நன்றாகக் கழுவிய பின், அதைக் காயவைத்து அடுத்தவர் பயன்படுத்த வேண்டும்.

இரு சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு காற்றின் மூலம் கொரோனா தொற்றிவிடும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், முகத்திற்கு மாஸ்க், அதன் மீது ஹெல்மட், ஹெல்மட் மீது இன்னொரு மாஸ்க் என்று தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம்.

கூட்டுக் குடும்பமாக வாழ்கிற குடும்பங்களை கொரோனா தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதால், ஒரு குடும்பத்தில் நான்கு பேருக்கு மேல் சேர்ந்து வாழ அனுமதியில்லை. அந்த நான்கு பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒருவர் தனியாக சாப்பிட்டு முடிந்ததும் அந்த இடத்தை கிருமி நாசினியால் சுத்தம் செய்துவிட்டு, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகே அடுத்த நபர் அந்த இடத்தில் சாப்பிடலாம்.

குடும்ப உறுப்பினர்கள் எந்த விஷயத்துக்கும் ஆன்லைன் மூலமாகத்தான் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள வேண்டும். இதனால் சமூக இடைவெளி நல்ல விதத்தில் பாதுகாக்கப் படும்.

டாக்டர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் துப்புரவுப் பணியாளர்களின் சேவை இந்தக் கொரோனா காலகட்டத்தில் மகத்தானது. இவர்களில் எவராவது இறந்து விட்டால், அவர்களை மரியாதையுடன் புதைக்கவோ, எரிக்கவோ விடாமல் சிலர் சுடுகாட்டின் முன்னே கூடிநின்று எதிர்ப்பு தெரிவிப்பதாக கேள்விப்பட்டேன். சுடுகாட்டில் இவர்களுக்கு என்ன வேலை? இது மிகுந்த வேதனையான விஷயம்.

இனி இம்மாதிரி எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அங்கேயே சுட்டுக் கொல்லப் பட்டு, அதே சுடுகாட்டில் மரியாதையின்றி புதை குழியில் தள்ளப் படுவார்கள்.

கொரோனா மன அழுத்தத்தைப் போக்க ஒரு ஜோக்: நீங்கள் லாக்கப்பில் இருந்தால் அது போலீஸ் கஸ்டடி; அதுவே லாக்டவுன் என்றால் நீங்கள் வீட்டில் உங்கள் மனைவியின் கஸ்டடி. ஹி… ஹி.

இப்போதைக்கு இவைகள்தான் என்னுடைய முடிவு. இந்த முடிவுகள் அவ்வப்போது தேவைக்கு ஏற்ப மாறுபடும். அப்போது நான் மறுபடியும் உங்கள் முன்னே பிரச்சன்னமாவேன்…

இப்போதைக்கு விடை பெறுகிறேன். வணக்கம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *