முப்பத்தோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நிர்மலா

 

முப்பத்தோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நிர்மலா சொன்ன கைகுவித்த கனவான் கதை

“கேளாய், போஜனே! ‘தேசூர், தேசூர்’ என்று ஓர் ஊர் உண்டு. அந்த ஊரிலே ‘தெய்வசிகாமணி, தெய்வசிகாமணி’ என்று ஒரு கிரகஸ்தர் உண்டு. ‘தான் உண்டு, தன் குடும்பம் உண்டு’ என்று வாழ்ந்து வந்த அவர் ஒரு நாள் காலை வழக்கம்போல் வெளியே செல்ல, வழியில் அவரைப் பார்த்த கனவான் ஒருவர் சிரம் தாழ்த்திக் கரங் குவித்துக் காலே அரைக்கால் சிரிப்புடன் அவரை வணங்க, ‘யார் இவர்? இதற்கு முன் எங்கே பார்த்திருக்கிறோம் இவரை? எப்படி அறிமுகமானார் இவர்?’ என்று ஒன்றும் புரியாமல் ‘பதிலுக்கு இவரை வணங்குவதா, வேண்டாமா?’ என்று ஒரு கணம் யோசித்து, மறுகணம், ‘எதற்கும் வணங்கித்தான் வைப்போமே!’ என்று வணங்கிவிட்டு அவர் மேலே செல்வாராயினர்.

ஆனாலும் அவர் மனம் அவரைச் சும்மா விடவில்லை; ‘யார் அந்தக் கனவான், அவரை எங்கே பார்த்தோம்?’ என்று வழி முழுவதும் அவரைச் சதா அரித்து எடுத்துக்கொண்டே இருந்தது. அது மட்டுமல்ல; அவருடைய ஞாபகசக்தியின் மீதே அவருக்கு கோபம் கோபமாக வந்தது. ‘அப்படி என்ன வயதாகிவிட்டது தனக்கு? அதற்குள் இத்தனை ஞாபக மறதியா?’ என்று அவர் தன்னைத் தானே கடிந்து கொண்டார். திரும்பிப் போய், ‘யார் நீங்கள்? என்னை இதற்கு முன் எங்கே பார்த்தீர்கள்?’ என்று அந்தக் கனவானையே கேட்டுவிடலாமா, என்றுகூட அவர் நினைத்தார். ‘அப்படிக் கேட்டால் அது மரியாதைக் குறைவாக அல்லவா இருக்கும்? ‘என்னய்யா, இதற்குள் என்னை மறந்துவிட்டீரே!’ என்று அவர் சமீபத்தில் நிகழ்ந்த ஏதாவது ஒரு சம்பவத்தை நினைவூட்டிச் சிரித்தால் தன் முகத்தில் அசடு அல்லவா வழியும்? வேண்டாம்; இன்று முழுவதும் யோசித்துப் பார்ப்போம்!’ என்று அரிக்கும் மனத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டே அவர் பின்னும் மேலே செல்வாராயினர்.

அன்று முழுவதும் மட்டுமல்ல; அதற்கு அடுத்த நாளும், அதற்கு அடுத்த நாளும்கூட அவர் யோசித்துப் பார்த்தார், யோசித்துப் பார்த்தார், அப்படி யோசித்துப் பார்த்தார். ‘அந்தக் கனவான் யார், அவரை எங்கே பார்த்தோம், எப்படி அறிமுகமானோம்?’ என்பது அவருடைய நினைவுக்கு வரவேயில்லை. இதற்கிடையில் அந்தக் கனவானும் அவரைக் கண்டதும் கை குவித்துக் காலே அரைக்கால் சிரிப்புச் சிரிப்பதை நிறுத்தவேயில்லை. ‘இது என்ன குழப்பம்? இந்தக் குழப்பத்தைத் தெளியவைக்க இவ்வளவு பெரிய உலகத்தில் யாருமே இல்லையா?’ என்று அவர் ஒரு நாள் அதிஅதிஅதி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தகாலை அவரைப் பார்க்க வந்த நண்பர் ஒருவர், ‘என்ன அப்படி யோசிக்கிறீர்கள்?’ என்று கேட்க, அவர் விஷயத்தை சொல்ல, ‘இருக்கவே இருக்கிறார் மிஸ்டர் விக்கிரமாதித்தர்; அவரைப் போய்ப் பார்த்தால் உங்கள் குழப்பத்தை ஒரு நொடியில் தெளிய வைத்துவிடுவாரே!’ என்று நண்பர் சொல்ல, ‘அதுதான் சரி; ஏற்கெனவே இருக்கிற குழப்பங்களோடு இந்தக் குழப்பத்தையும் சேர்த்துக் குழப்பிக் கொண்டிருக்க இனி என்னால் முடியாது!’ என்று அவர் அன்றே போய் விக்கிரமாதித்தரைப் பார்ப்பாராயினர்.

அவருடைய குழப்பத்தைக் கேட்டார் மிஸ்டர் விக்கிரமாதித்தர்; சிரித்தார். ‘என்ன, சிரிக்கிறீர்கள்?’ என்றார் இவர்; ‘ஒன்றுமில்லை’ என்று சொல்லிக்கொண்டே அவர் தமக்கு அருகிலிருந்த காலண்டரை ஒரு பார்வை பார்த்து விட்டு, ‘இன்னும் ஒரு வாரம் கழித்து வந்து என்னைப் பாருங்கள்!’ என்றார். இவர் விழித்தார்; ‘என்ன விழிக்கிறீர்கள்?’ என்றார் அவர். ‘இந்த விஷயத்தில் தெளிவு காண உங்களுக்கே ஒரு வார கால அவகாசம் தேவை யென்றால் என்னுடைய குழப்பம் பெரிய குழப்பமாய்த்தான் இருக்கும் போலிருக்கிறதே!’ என்றார் இவர்: ‘ஆமாம், கொஞ்சம் பெரிய குழப்பம்தான்; நீங்கள் போய் வாருங்கள்!’ என்றார் அவர்.

ஒரு வாரம் ஓடி மறைந்தது; மறுபடியும் வந்து விக்கிரமாதித்தரைப் பார்த்தார் தெய்வசிகாமணி. அவரைப் பார்த்ததும், ‘இப்போது அந்தக் கனவான் உங்களைக் கண்டதும் கை குவிக்கிறாரா? காலே அரைக்கால் சிரிப்புச் சிரிக்கிறாரா?’ என்ற விக்கிரமாதித்தர் கேட்க, ‘அதெல்லாம் ஒன்றுமில்லை; அவர் இப்போதெல்லாம் என்னைப் பார்த்தாலும் பார்க்காதவர்போல் போய்விடுகிறார். ஏன், எனக்காக நீங்கள் அவரைப் பார்த்து ஏதாவது சொன்னீர்களா?’ என்று தெய்வசிகாமணி உசாவ, ‘நல்ல ஆளய்யா, நீர்! அவரை நான்தான் எதற்காகப் போய்ப் பார்க்கவேண்டும், நீர்தான் எதற்காகப் போய்ப் பார்க்க வேண்டும்? அவர் உம்மைப் போன்றவர்களைக் கண்டால் எப்போது கரங் குவிப்பார், எப்போது கரங் குவிக்க மாட்டார் என்பது எனக்குத் தெரியாதா?’ என்பதாகத்தானே அவர் இவரைப் பார்க்க, ‘அது உங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதுமா? எனக்கும் தெரிய வேண்டாமா?’ என்பதாகத்தானே இவர் அவரைப் பார்க்க, ‘நம் இருவருக்கும் மட்டும் தெரிந்தால் போதாது, இந்த உலகத்துக்கே தெரியவேண்டிய விஷயம் அது. சொல்கிறேன், கேளும்: சென்ற வாரம் நடந்து முடிந்த முனிசிபல் தேர்தலில் அந்தக் கனவான் ஒரு வேட்பாளர். அவரைப் போன்ற வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்னால் தெரிந்தவர்களைக் கண்டாலும் சரி, தெரியாதவர்களைக் கண்டாலும் சரி; சிரம் தாழ்த்திக் கரங் குவித்துக் காலே அரைக்கால் சிரிப்பு, அரைச் சிரிப்பு, முக்கால் சிரிப்பு, முழுச் சிரிப்பெல்லாம்கூடச் சிரிப்பார்கள். தேர்தல் முடிந்ததும் தெரியாதவர்களை என்ன, தெரிந்தவர்களைக் கண்டாலும் தெரியாதவர்கள்போல் போய்விடுவார்கள். இந்த உண்மையை நீரே தெரிந்துகொண்டு விடுவீர் என்று நினைத்துத்தான் ஒரு வாரம் கழித்து உம்மை நான் வரச் சொன்னேன். இப்போதாவது தெரிந்துகொண்டு விட்டீரா, இல்லையா?’ என்று மிஸ்டர் விக்கிரமாதித்தர் கடாவ, ‘தெரிந்துகொண்டு விட்டேன், தெரிந்துகொண்டு விட்டேன்!’ என்று தன் தலையைப் பலமாக ஆட்டிக்கொண்டே தெய்வசிகாமணி அவரிடமிருந்து விடை பெற்றுக் கொள்வாராயினர்.”
முப்பத்தோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான நிர்மலா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; முப்பத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நித்தியகல்யாணி சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு… என்றவாறு… என்றவாறு…

- மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை 

தொடர்புடைய சிறுகதைகள்
நண்பர் நட்-'நட்'டாவது, 'போல் 'டாவது என்று நினைக்காதீர்கள் 'நடேசன்' என்ற பெயரைத் தான் 'நட்' என்று 'ரத்தினச் சுருக்க'மாகச் சுருக்கி வைத்துக் கொண்டிருக்கிறார் நண்பர். காரணம், தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழில் கவிதை எழுதுவதை அகௌரவமாக எண்ணி, அவர் ஆங்கிலத்தில் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டது ...
மேலும் கதையை படிக்க...
பத்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கனகதாரா சொன்ன நள்ளிரவில் வந்த நட்சத்திரதாசன் கதை "கேளாய், போஜனே! ஒரு நாள் நள்ளிரவு நேரம்; ‘நட்சத்திர மாநகர், நட்சத்திர மாநகர்' என்று சொல்லா நின்ற தியாகராய நகரிலே, யாரோ ஒருவன் பதுங்கிப் பதுங்கிப் போய்க்கொண்டிருக்க, அவனைக் கண்ட ...
மேலும் கதையை படிக்க...
பதினெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பரிமளா சொன்ன கள்ளன் புகுந்த கதை "கேளாய், போஜனே! பெரும்பாலும் விமானத்திலேயே பிரயாணம் செய்துகொண்டிருந்த மிஸ்டர் விக்கிரமாதித்தர், ஒரு சமயம் ஏதோ ஒரு மாறுதலை உத்தேசித்து ரயிலியே பிரயாணம் செய்ய, அந்த ரயில் யாரோ ஒரு புண்ணியாத்மா நடுவழியில் ...
மேலும் கதையை படிக்க...
"டேய், உன் அப்பாடா!" என்று தன் சகாக்களில் ஒருவன் தன்னை எச்சரித்ததுதான் தாமதம், அதுவரை கோலி விளையாடிக் கொண்டிருந்த குமார், தன் கையிலிருந்த குண்டைக் கீழே விட்டெறிந்துவிட்டு, விட்டான் சவாரி, வீட்டை நோக்கி. வந்த வேகத்தோடு வேகமாகக் கை கால் முகத்தைக் கழுவிக் ...
மேலும் கதையை படிக்க...
நாளை பொழுது விடிந்தால் தீபாவளி. வழக்கத்துக்கு விரோதமாக வெறுங்கையுடன் வேலையிலிருந்து வீடு திரும்பிய வெங்கடாசலத்தைச் சூழ்ந்து கொண்டு, "அப்பா, எனக்குப் பட்டுப் பாவாடை!" என்றது ஒரு குழந்தை; "அப்பா, எனக்குப் பட்டுச் சட்டை!" என்றது இன்னொரு குழந்தை. "எனக்குப் பட்டுப் பாவாடையும் ...
மேலும் கதையை படிக்க...
பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன பரோபகாரி கதை ‘விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டுவர, அது அவருக்குச் சொன்ன பதினைந்தாவது கதையாவது: ‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! 'தயாநிதி, தயாநிதி' என்று ஒரு 'தனி மனிதன்’ தரங்கம்பாடியிலே உண்டு. ...
மேலும் கதையை படிக்க...
சொல்வதற்கு மட்டுமல்ல; நினைப்பதற்கே நெஞ்சம் ‘ரஸக் குறை'வாக இருந்தாலும், அந்தக் கடிதம் அவளை அன்று அப்படித்தான் நினைக்க வைத்தது. 'வாழ்க்கை, வாழ்க்கை' என்கிறார்களே, அந்த வாழ்க்கை என்பது தான் என்ன? அதில் உடலுறவைத் தவிர வேறு ஒன்றுமே கிடையாதா? அந்த உறவு இல்லாவிட்டால் ...
மேலும் கதையை படிக்க...
மூடியிருந்த 'ரயில்வே கேட்'டுக்கு முன்னும் பின்னும் மத்திய சர்க்காரை மீறி ஒன்றும் செய்ய முடியாத மாகாண சர்க்கார்களைப் போலச் சகல வண்டிகளும் நின்று கொண்டிருந்தன; சகல மக்களும் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது 'பாம், பாம்' என்று குரல் கொடுத்துக் கொண்டே வந்த லாரி ...
மேலும் கதையை படிக்க...
இருபத்து நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மனோரஞ்சிதம் சொன்ன கடவுள் கல்லான கதை "கேளாய், போஜனே! அல்லும் பகலும் அனவரதமும் ‘கடவுளே கதி’ என்று இருந்த ஓர் ஆத்மாவுக்குத் திடீரென்று ஒரு நாள் ஒரு சந்தேகம் பிறந்தது. அந்தச் சந்தேகம் என்ன வென்றால்: ‘மற்ற யுகங்களிலெல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
மொட்டை மாடியிலே காலை நீட்டிப் போட்டு உட்கார்ந்து, "ஓர் ஊரிலே ஓர் ராஜாவாம்..." என்று ஆரம்பிப்பாள் பாட்டி. அவள் நீட்டி காலில் படுத்தபடி, வானத்திலிலுள்ள நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டே "ம்" என்பான் பேரன். "அந்த ராஜா ஒரு நாள் காட்டுக்கு வேட்டையாடப் போனானாம்..." "ம்" "அந்தக் ...
மேலும் கதையை படிக்க...
திருப்தி
பத்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கனகதாரா
பதினெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பரிமளா
மூன்று பொம்மைகள்
ஈசன் விட்ட வழி
பரோபகாரி கதை
வணக்கத்துக்குரியவள்
ஐந்தாண்டுத் திட்டம்
இருபத்து நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மனோரஞ்சிதம்
சிறுகதை மன்னன் பெற்ற செல்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)