(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காடாறு மாதம் நாடாறு மாதம் விக்கிரமாதித்தன் போல, என் நண்பன் கிச்சா, வருடத்தின் முதல் பாதி ஆறு மாதங்களில் ஏதாவது ஒரு ஆபீஸில் வாட்ச்மேனாகவோ பியூனாகவோ வேலை பார்க்கும் தொழிலாளியாகவும், அடுத்த ஆறு மாதங்களுக்கு அப்பளம் விற்பது, ஆயுர்வேதத் தைலம் தயாரிப்பது போன்ற சொந்தமாக பிஸினஸ் செய்யும் முதலாளியாகவும் இருப்பது வழக்கம். எல்லாவற்றுக்கும் கிச்சாவுக்குப் பக்கபலமாக இருப்பது எச்சுமிப் பாட்டிதான்.
இப்படி பியூன், அப்பளம் எதுவுமில்லாமல் ரெண்டுங்கெட்டானாக (வேலை இல்லாமல்) வீட்டுத் திண்ணையில் கிச்சா புரண்டு கொண்டிருக்கும் சமயம் பார்த்து எச்சுமிப் பாட்டிக்குத் தூரத்து உறவினரும், கிச்சாவுக்கு வெகு தொலைதூரத்து உறவினருமான கும்பகோணம் ஐடியா ஆராமுது பிரசன்னம் ஆவார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, பட்டிக்காட்டான் யானையைப் பார்ப்பது போல, சுத்தமாக ஒரு எழவும் புரியாமல் பேய் முழி முழித்தபடி கிச்சா டி.வி.யில் ‘சாணக்யா’ இந்தித் தொடரைப் பார்த்துக் கொண்டிருந்தபோது வந்தார் கும்பகோணம் ஆராமுது. கிச்சாவின் முதுகில் எதிர்பாராதவிதமாகக் கோட்டை அறை அறைந்து தாக்கிவிட்டு, ‘அடேய் கிச்சா கண்ணா. இப்ப நீ டி.வி.யில பார்க்கறது நம்ம ஊர் நிகழ்ச்சிகளை. நான் கொடுக்கப் போற ஐடியாவால, நீ இனிமே அகில உலக > நிகழ்ச்சிகளைப் பார்க்கப் போறே. நீ மட்டும் பார்க்கப் போறதில்லை. திருவல்லிக்கேணியே உன்னால காணப் போறது’ என்று கூறிவிட்டு, இன்னொரு கோட்டை அறை விட்டார்.
இரண்டு மாதங்களுக்கு முன்புதான் டி.வி-யே வாங்கிய கிச்சா, அதுநாள்வரையில் எல்லார் வீட்டு மொட்டை மாடியிலும் போடப்பட்ட ஆர்டினரி டி.வி. ஆன்ட்டெனாவையே – வெயிலில் துணிமணிகளை உலர்த்துவதற்காகப் போடப்பட்ட மாடர்ன் கொடிக் கம்பி என்று சாமி சத்தியமாக நம்பிக் கொண்டிருந்தான். அப்படிப்பட்ட அவனுக்கு ஸாடிலைட் டி.வி., டிஷ் ஆன்ட்டெனா பற்றியெல்லாம் சொல்லி விளக்குவதற்குள் ஆராவமுது அரைவமுது ஆகிவிட்டார்.
மறுநாளே, டிஷ் – ஆன்ட்டெனா போடுவதற்கான லைசென்ஸை ஒரு கையிலும் சாதா ஆன்ட்டெனா போல் ஒல்லியாகத் தோற்றமளித்த ஒரு ஆசாமியை மறுகையிலும் பிடித்தபடி வீட்டுக்குள் நுழைந்து ‘இவர் பேர் கஜபதி ஆசாரி. பெரிய ஸ்தபதி. ஆகம சாஸ்திரம், சிற்ப சாஸ்திரமெல்லாம் கரைச்சுக் குடிச்சவர். கோயில் விமானம் கட்டத் தெரியும். சிலை பிரதிஷ்டை பண்ணவும் தெரியும்’ என்று அவரை அறிமுகப்படுத்தினார் ஆராமுது.
‘அதெல்லாம் சரி, இவர் இப்ப இங்கே ஏன்? எதற்கு? எப்படி?’ என்ற கேள்விகளைக் கிச்சா முகஜாடையில் கேட்க, ‘நம்ம வீட்டுல போடப் போற டிஷ்-ஆன்ட்டெ. னாவை நிர்மாணிச்சு மொட்டை
மாடில கஜபதி ஸ்தபதி பிரதிஷ்டை பண்ணப் போறார்’ என்று ஆராமுது முத்தாய்ப்பாகக் கூற, கஜபதி ஸ்தபதிக்கும், டிஷ்-ஆன்ட்டெனாவுக்கும் உள்ள சம்பந்தம் ‘குலாம் காதர் கோகுலாஷ்டமி யாகக் கிச்சாவுக்குப் பட்டாலும் புரியாத >விஷயங்களில் இதுவும் ஒன்றாக இருந்துவிட்டுப் போகட்டும் என்று சமாதானம் செய்து கொண்டான்.
ஒரு நல்ல நாளில் மொட்டை மாடியில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துவிட்டு, ஆராமுது கொடுத்த ‘சயின்ஸ் டுடே’ கட்டிங்கில் வெளியான டிஷ்-ஆன்ட்டெனா படத்தைப் பார்த்து மரத்தில் தான் செய்து வைத்திருந்த மாடல் டிஷ்-ஆன்ட்டெனாவைப் பக்கத்தில் வைத்துக் கொண்டார் கஜபதி ஸ்தபதி. ஆகம சாஸ்திரத்தின் பேரில் கொண்ட ஈடுபாடு காரணமாக ஆராமுது கொடுத்த அலுமினியக் கம்பிகளைப் புறக்கணித்துவிட்டு, டிஷ்-ஆன்ட்டெனாவைத் தன்னிடம் ஸ்டாக்கில் இருந்த பஞ்சலோகக் கம்பிகளைப் பயன்படுத்திக் கட்ட ஆரம்பித்தார் கஜபதி ஆசாரி. ஆன்ட்டெனாவின் ஈசான்ய மூலையில் லிங்கப் பிரதிஷ்டை செய்து சிவன் சந்நிதியையும், அதற்கு நேர் எதிர்ப்புறத்தில் பள்ளிகொண்ட பெருமாள் சந்நிதியையும் கம்பிகளை வளைத்தே லாகவமாகச் செய்து முடித்தார். இப்படியாக கஜபதி ஆசாரியின் ஆன்மிகக் கைவண்ணத்தால் பல தெய்வங்கள் கொலு வைக்கப்பட்ட கிச்சாவின் டிஷ்-ஆன்ட்டெனா, முடிவில் டிவைன் ஆன்ட்டென மாறியது. கஜபதி ஆசாரியின் வேண்டுகோளுக்கிணங்க எச்சுமிப் பாட்டி, கனபாடிகள் பலரை வரவழைத்து வேத கோஷங்களுடன் கிட்டத்தட்ட ஒரு அஸ்வமேத யாகமே செய்தாள். ஒரு வாரம் இந்தக் கூத்துக்காக கிச்சாவோடு கண் விழித்த அசதியோடு வீடு வந்து படுத்த நான், அடித்துப் போட்டது போல தூங்க ஆரம்பித்தேன். டெலிபோன் மணி அடிக்கும் ஓசை எழுந்தேன். டெலிபோனில் கிச்சா ‘உடனே வா…’ என்றான்.
‘அட்வான்ஸ் கொடுத்தவர்கள் அரித்துப் பிடுங்குவதால் இன்றிரவே டிஷ்-ஆன்ட்டெனாவை ஸ்டார் டி.வி. எடுக்கும் திசையில் பொஸிஷன் செய்து ஒளிபரப்பை ஆரம்பித்து விட வேண்டும்…’ என்றான் கிச்சா. பேரிங் பொருத்தப்பட்ட அந்தப் பிரம்மாண்டமான டிஷ்-ஆன்ட்டென னாவை ஸ்டார் டி.வி. சிக்னலுக்காக “போறுமா.. போறுமா’ என்று ஐலேஸா கேட்டபடி மொட்டைமாடியில் கிச்சா சுழற்ற, கீழே பூஜை அறையில் தற்காலிகமாக வைக்கப்பட்ட கண்ட்ரோல் ரூமில் இருந்துகொண்டு டி.வி. மானிட்டரில் படம் தெரிகிறதா என்று பார்த்தபடி ரிஸீவர், பூஸ்ட்டர் முதலியவற்றைத் திருக ஆரம்பித்தேன்.
அப்போதுதான் அது நடந்தது. மின்னலடிக்கும் வெள்ளையாக இருந்த டி.வி. திரை சட்டென்று ‘சொட்டு நீலம் டோய்’ ஆனது. கிச்சாவையும் கீழே கூப்பிட்டேன். நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது நீலத்திரையில் காமிராமேன் பி.சி. ஸ்ரீராமுக்குப் பிடித்த ஒளிச்சிதறல்கள் ஆங்காங்கு டால் அடிக்க ஆரம்பித்தன. ஒளியோடு கூடவே லேசாக ‘நாராயணா… நாராயணா… ஒலி கேட்க, டி.வி. திரை மத்திக்கு தம்புரா சகிதமாக நாரதர் மிதந்து வந்தார். எங்களைப் பார்த்துப் புன்னகைத்தார். கிச்சா என்னைப் பார்த்து, ‘ஸ்டார் டி.வி. புரோக்ராம்ல திருவிளையாடல் படம்லாம்கூடக் காட்டுவாங்களா? ஸ்டார் டி. .₤1.00 கேபிள் டி.வி.யா?’ என்று கேனத்தனமாகக் கேட்டு முடிப்பதற்குள் டி.வி. திரை சைஸுக்கு இருந்த நாரதர், டி.வி.யை விட்டுக் கீழே இறங்கி எங்களுக்கெதிரில் எங்கள் சைஸுக்கு உயர்ந்து நின்றார். நாரதரை நேருக்கு நேர் பார்த்த அதிர்ச்சியில் நானும் கிச்சாவும் கோரஸாக மயக்கம் போடாத குறையாக நிற்க…
‘பக்தன் கிச்சாவே! ஆன்ட்டெனா மூலம் நீ காட்டிய அளவிடற்கரிதான பக்தியை மேலே உள்ள எல்லோர் சார்பிலும் மெச்சுகிறோம்! இனி உன் டிஷ்-ஆன்ட்டெனா வாயிலாக வைகுண்டம், கைலாசம், இந்திரலோகம் என்று ஆரம்பித்து யமலோகம் வரையில் உள்ள எங்களது வானுலக நிகழ்ச்சிகளை பூலோகத்துக்கு ஒளிபரப்ப அனுமதிக்கிறோம். நிகழ்ச்சிகளைத் தொகுத்து அளிக்கும் பூரண உரிமையைக் கிச்சா என்கிற உனக்கே அளிக்கிறோம். நாராயண… நாராயண…’ என்று பகர்ந்துவிட்டு, நாரதர் பழையபடி டி.வி.க்குள் நுழைந்து காணாமல் போனார்.
இப்படியாகச் சாதாரண மனிதர்கள் நிகழ்த்தும் ஸ்டார் டி.வி. நிகழ்ச்சிகளைக் காட்டுவதற்காக போடப்பட்ட கிச்சாவின் டிஷ்-ஆன்ட்டெனா, நாரதர் உபயத்தால் தெய்வங்கள் பங்கேற்கும் சூப்பர் ஸ்டார் டி.வி. நிகழ்ச்சிகளைக் காட்டிப் பிரபமைடைய ஆரம்பித்தது.
சேனல் ஒன், சேனல் டூ போன்று பெயரிடும் சிஸ்டத்தை ஓரங்கட்டி தனது சேனல்களுக்கு ‘விஷ்ணு சேனல்’, ‘பிரம்மா சேனல்’, ‘சிவன் சேனல்’ என்று புதுமையாக நாமகரணம் செய்வித்தான். விஷ்ணு சேனலில் நிஜ சொர்க்கவாசலே காட்டப்பட்டது. சிவராத்திரியன்று (நிஜ) சிவதாண்டவம் நேயர்களை மெய்சிலிர்க்க வைத்தது!
தினமும் இரவு எட்டு மணிக்கு பிரம்மா செய்திகள் வாசிப்பார்.
சென்ற வார ‘எதிரொலி’யில் ‘செய்திகள் வாசிக்கும் பிரம்மாவின் மூன்றாவது தலையில் உள்ள இரண்டாவது வலதுபக்கக் காதில், கடந்த வாரம் குண்டலம் மிஸ்ஸிங்… ஏன்?’ என்ற பிரம்மபுரம் கலைவாணியின் கடிதம் வாசிக்கப்பட்டது.
‘ஒளியும்-ஒலியும்” நிகழ்ச்சிக்குப் பதிலாக, வெள்ளிக்கிழமை இரவு ‘சேனல் இந்திரா’வில் ரம்பா, ஊர்வசி, மேனகாக்களின் ஸோலோ, டூயட், குரூப் டான்ஸுகள்…
‘மனைமாட்சி’யில் ‘சமைத்துப் பார்’ நிகழ்ச்சியில், ஓலைச் சுவடிகளைப் பார்த்தபடி சமைத்துக் காட்டினார் நளன்!
ஸ்போர்ட்ஸ் சேனலில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே வெறித்தனமாக நடக்கும் விளையாட்டுப் போட்டிகள். உதாரணமாக, கயிறு இழுக்கும் போட்டியாகப் பாற்கடலில் பாம்பு கட்டி இழுப்பது, தேவர்களுக்குச் சொந்தமான பொருட்களைக் கவர்ந்துகொண்டு ரிலே ரேஸ் போல அசுரர்கள் ஆகாசத்தில் ஓடுவது போன்றவை.
இப்படியாக, சூப்பர் ஸ்டார் டி.வி.யின் மூலம் கிச்சா தமிழ்நாட்டையே வளைத்துப் போட்டான்.
டெலிபோன் மணி அடித்தது. அந்தச் சத்தத்தில் விழித்துக் கொண்ட எனக்கு, முதல் நாள் இரவு அசதியோடு படுத்தது நினைவுக்கு வந்தது. டெலிபோனில் கிச்சா பரபரப்போடு ‘ஹலோ சொன்னது கேட்டது. என் நாரதர் கனவைக் கிச்சாவிடம் சொல்ல நான் ஆரம்பிப்பதற்குள் என்னைப் பேசவிடாமல், ‘உடனே வா…ஆபத்து…’ என்று சொல்லிக் கிச்சா டெலிபோனை வைத்துவிட்டான்.
திருவல்லிக்கேணிக்குச் சென்றபோது, கிச்சா வீட்டு வாசலில் கூச்சலும் குழப்பமுமாக ஒரு கும்பல் கொதித்துக் கொண்டிருந்தது. விசாரித்ததில் தெரிந்த விஷயம் இதுதான்.
முதல் நாள் இரவு நான் வீடு திரும்பிய பிறகு ஒண்டியாகக் கிச்சா ஒருவனே கஜபதி ஆசாரி செய்த டிஷ்-ஆன்ட்டெனா னாவை அட்ஜஸ்ட் செய்து கனெக்ஷன் கொடுத்திருக்கிறான். ரிஸீவர், பூஸ்டர் இத்யாதிகளை கிச்சா முடுக்கிவிட்ட அடுத்த கணம், திருவல்லிக்கேணியில் அட்வான்ஸ் தந்து கனெக்ஷன் வாங்கியவர்கள் அத்தனை பேர் வீட்டில் உள்ள டி.வி.க்களும் ‘டப்..டப்..’ என்ற சத்தத்தோடு பொறி பறக்கச் சிறிது நேரம் புஸ்வாணமாக உமிழ்ந்துவிட்டு அகால மரணம் அடைந்து விட்டன. தொடர்ந்து எல்லோர் வீட்டிலும் பவர் கட், டெலிபோன் டெட்.. சில பேர் வீட்டில குழாயில் தண்ணீர் நின்று போய்விட்டது. இதற்கெல்லாம் காரணமான அந்த டிஷ்-ஆன்ட்டென னாவை உடைத்து எறிவதற்காகத்தான் கோபத்துடன் கும்பல் கூடியிருக்கிறது. பாவம் கிச்சா… பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருந்தான். அவர்களைச் சமாதானப்படுத்திவிட்டு முதல் காரியமாக நானும் கிச்சாவும் அவர்கள் வீடுகளுக்கு அந்தக் கண்றாவி டிஷ்-ஆன்ட்டெனாவிலிருந்து கொடுத்த கேபிள் கனெக்ஷனை ஒவ்வொன்றாகப் பிடுங்கியெறிந்தோம்.
சோர்ந்து போன கிச்சாவுக்கு இதம் அளிக்க, நான் கண்ட நாரதர் கனவைக் கூறினேன். ‘ஒருவேளை கனவு நிஜமாகிறதா பார்ப்போம்’ என்ற நப்பாசையில் மீண்டும் ஒரு தபா கிச்சா கண்ட்ரோல் அறைக்குச் சென்று ரிஸீவர் பூஸ்ட்டரைத் திருகி விஷமம் செய்து டிஷ்-ஆன்ட்டென னாவை உசுப்பிவிட, மொட்டை மாடியில் ஒரே சமயத்தில் நூறு பேர் குதித்த சத்தம் கேட்டது. போய்ப் பார்த்தபோது, அந்த டிஷ்-ஆன்ட்டெனா தனது பேரிங் பீடத்தை விட்டுக் கீழே இறங்கித் தரையில் சப்பணம் இடாத குறையாக அமர்ந்திருந்தது.
சமீபத்தில் கிச்சாவைப் பார்க்கப் போனபோது, மொட்டை மாடியில் குழிவான ராட்சஸத் தட்டுபோல மல்லார்ந்து கிடக்கும் அந்த டிஸ்-ஆன்ட்டெனாவின் உள்புறத்தில் சாப்பாட்டுக்கு ‘சைடு டிஷ்’ஷாக இருக்கும் வடாம் – வத்தல் வகையறாக்களைக் காயப்போடுவதற்காகவும் ஊறுகாய்களை உலர்த்துவதற்காகவும் போட்டுக் கொண்டிருந்தாள் எச்சுமிப் பாட்டி. ஒரு மாதத்துக்கு முன்பு டிஷ்- ஆன்ட்டென னாவாக இருந்தது இப்போது சைட் டிஷ்- ஆன்ட்டெனா னாவாக மாறியதைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று எனக்குப் புரியவில்லை.
– மிஸ்டர் கிச்சா, முதற் பாதிப்பு: 2004, கிழக்கு பதிப்பகம், சென்னை.