போன மாமா திரும்பி வந்தார் வீடு கட்ட…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 4, 2023
பார்வையிட்டோர்: 3,934 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எந்தப் பிரச்னைக்கும் அலட்டிக் கொள்ளாமல் எப்போதும் சித்தர்கள் போல இருக்கும் எங்கள் குடும்பத்தினரை, ரயில்வே பாஸ் இருக்கும் தைரியத்தில், வருடத்துக்கு ஒரு தரமாவது பெட்டி படுக்கை ப்ளஸ் ஏதாவது ஒரு பூதாகாரமான பிரச்னை சகிதமாக வந்து வைரஸ் போலத் தாக்குவார் என்னுடைய நாக்பூர் ‘நாணா’ (நாராயணன்) மாமா!

வந்த கையோடு தனது பனங்காய் பிரச்னைகளை எங்கள் குருவித் தலையில் போட்டுவிட்டு எங்கள் நிம்மதியைக் குலைப்பார் அவர்!

நான்கு மாதங்களுக்கு முன்பு தன் கடைக் டசிப் பெண்ணின் கல்யாணத்தை முடித்த கையோடு நாணா மாமாவை நாக்பூருக்கு ரயிலேற்றிவிட்டு முதலில் பிரிவு உபசாரமாகப் போலிக் கண்ணீரோடு கையசைத்த நாங்கள், ரயில் கண்ணைவிட்டு மறைந்ததும் ‘அப்பாடா, தொலைந்தான் கபாலி” என்று என் அப்பா, பெரியப்பா உள்பட அனைவரும் கோரஸாக வாய்விட்டுக் கூவிவிட்டு சந்தோஷமாக வீடு திரும்பினோம். ஆனால், எங்கள் நிம்மதியைக் குலைப்பது போல, எண்ணி நாலே நாள்களில் மறுபடி நாணா மாமாநாக்பூரிலிருந்து, போன ரயிலிலேயே திரும்பி வந்தார்!

எங்கள் உழைப்பில் தனது ‘கல்யாணம் பண்ணிப் பார்’ கஷ்டத்தைத் தளுக்காகத் தீர்த்துக் கொண்ட நாணா மாமா, கூடிய சீக்கிரம் தான் ரிடையராகப் போவதால் மெட்ராஸில் வீடு கட்டிக் கொண்டு நிரந்தரமாக வந்துவிடப் போவதாகக் கூறிவிட்டு ‘வீட்டைக் கட்டிப் பார்’ விவகாரத்தையும் எங்கள் வியர்வையில் முடித்துக் கொள்ள முடிவு செய்திருந்தார். விஸ்வாமித்திரர் கையில் ராமரை ஒப்படைத்த தசரதனின் ஸ்டைலில் நாணா மாமாவின் இந்த வீடு கட்டுமானப் பணியை என்னிடம் ஒப்படைத்தார் என் அப்பா.

அதிலிருந்து, என்ன செய்யலாம் என்று கான்க்ரீட் – சிமெண்ட் குழம்புக் கலவை போல குழம்பிக் கொண்டிருந்த எனக்கு, ‘எச்சுமிப் பாட்டி எண்டர்பிரைசஸ்’ என்ற நாமகரணத்தோடு இவ்விடம் காலிமனைகள் வாங்க, விற்க, வீடுகள் கட்ட, இடிக்க, பிரிட்ஜ் போட, ஃப்ளை ஓவர்கள், அணைகள் கட்ட…’ என்று தாஜ்மஹால் தவிர, தான் பார்த்த அத்தனைக் கட்டட வித்தைகளையும் ‘சகாய விலையில் செய்து தரப்படும்’ என்று தினத்தந்தியில் சில நாள்களுக்கு முன்பு விஸ்வேஸ்வரய்யா கணக்கில் விளம்பரம் செய்துவிட்டு, இன்னமும் கன்னிகூடக் கழியாமல் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் கிச்சாவின் ரியல் எஸ்டேட் பிஸினஸ் நினைவுக்கு வந்தது. கூடவே, தன் பேரனுக்கு ஒரு சான்ஸ் தரும்படி எச்சுமிப் பாட்டி உயிரை வாங்கியதால், நச்சரிப்புத் தாங்காத நவநீதக்கோனார் தன் வீட்டுக்கு பாத்ரூம் கட்டித் தருமாறு வேண்டா வெறுப்பாகக் கூற, பாத்ரூம் என்ற பெயரில் கிச்சா கட்டிய அந்தச் செங்கல் சூளை மனத்திரையில் தோன்றியது.

கதவுக்கு இடம் வைக்காமல் சுத்தமாகச் சமாதி போல கிச்சா அந்த பாத்ரூமைக் கட்டிவிட்டு, கடைசி நிமிடத்தில் சமயோசிதமாக பாத்ரூமுக்குள் மேலிருந்த வழியாக நுழையப் படிக்கட்டுகளை போட்டுத் தர, வேறுவழியில்லாமல் தினமும் கோனார் பாவம், நுரைதப்ப படிகளில் ஏறி குளத்துக்குள் இறங்குவதுபோல இறங்கி அரும்பாடுபட்டுக் குளிக்கும் அவலநிலைக்கு ஆளானார். இந்த அழகில் வீட்டு ‘சம்ப்’ புக்குப் போடுவது போல பாத்ரூம் கூரையில் குளிக்கும்போது மூடிக்கொள்ள கிச்சா போட்டுக் கொடுத்த

துருப்பிடித்த இரும்புக் கிராதிப் பலகை, ஒருமுறை அறைந்து சாத்தியதில் இறுக்கமாக மூடிக் கொண்டது. சோப்பு நுரையோடு உள்ளே வசமாக மாட்டிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்த கோனார், பாத்ரூமை உடைத்துத் தன்னைக் காப்பாற்றும்வரை பொழுது போவதற்காக அந்த இரண்டு நாள்களும் விடாமல் தொடர்ச்சியாகக் குளித்து கின்னஸில் இடம்பெற்றார்!

எங்கள் உயிரை வாங்கும் நாணா மாமாவை பிரமோட்டர் கிச்சாவிடம் கோர்த்துவிட்டால், என் தந்தையின் கட்டளையை நிறைவேற்றியது போலவும் இருக்கும் அதேசமயம் நாணா மாமாவைப் பழிவாங்கியது போலவும் இருக்கும் என்ற எனது ‘ஒரு கல் இரண்டு மாங்காய்’ திட்டத்தில் உற்சாகம் அடைந்தேன்.

ஒரு கெட்ட நாளில் நாணா மாமாவுக்கு வீடு கட்டப் போகும் காலி மனையைக் காட்ட கிச்சாவும் எச்சுமிப் பாட்டியும் அவரை ஒரு டாக்ஸியில் திணித்து, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துப் போனார்கள். ஒரு கட்டத்தில் எங்கே தன்னுடைய நாக்பூர் வந்துவிடுமோ என்ற நாணா மாமா கவலையில் ஆழும் அளவுக்குப் போய்க்கொண்டே இருந்த அந்த டாக்ஸி, ‘அரதலைப்பழசூர் ஊராட்சி ஒன்றியத்தை நெருங்கியதும் இனி பயணம் தொடர முடியாத அளவுக்குப் பாதை மலையும் பள்ளத்தாக்குமாக இருக்கவே, நின்றது.

‘களுக்புளுக்’ என்று சத்தம் வரும் அளவுக்கு வியர்வையில் தெப்பமாய் நனைந்திருந்த நாணா மாமாவை மேலும் நாலு மைல் நடத்தி அழைத்துச் சென்று, ‘பொறம்போக்கூர்’ பஞ்சாயத்தைச் சேர்ந்த ‘புதர்பாக்கம்’ காலனி என்ற வெட்டவெளியைக் காட்டிவிட்டு, ‘இங்கிருந்து கல் எறியும் தூரத்தில் உங்கள் பிளாட் இருக்கிறது’ என்று கூறி, கிச்சா நெஜமாவே கல்லை எறிந்து காட்ட, புதர் மறைவில் இயற்கை அழைப்பில் லயித்துக் கொண்டிருந்த சிலர் மீது அது பட, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அவர்கள் அரிவாளோடு ‘டாய்’ என்று குரல் கொடுத்தவாறு கோபத்துடன் பாய்ந்து வர, அவர்களைக் கிச்சா சமாதானப்படுத்த, ‘பாதியில்’ வந்ததால், அவர்களும் அவசரமாகப் பின்வாங்கினார்கள். கிச்சாவோ அவர்கள் அமர்ந்திருந்த புதர் மறைவைக் காட்டிப் பரவசத்துடன் ‘சார், வீடு கட்டற பட்சத்துல, இந்த இடத்துல பாத்ரூமை வெச்சுக்கலாம். சகுனமா இருக்கு…’ என்று சிலேடையாகக் கூறினான்.

இத்தனை அவஸ்தையிலும் கிச்சா காட்டிய இடத்தில் கிரவுண்ட் விலை சல்லிசாக இருந்ததால் பொறுமையாக இருந்த நாணா மாமாவிடம் ரயில்வே லைனைக் காட்டி ‘பக்கத்துலேயே ஸ்டேஷன் இருக்கு. நெனைச்சா நீங்க நாக்பூர் போகலாம் என்று எச்சுமிப் பாட்டி கூறியதும், பரவசத்தின் உச்சிக்கே போய்விட்டார் நாணா மாமா.

தடம் புரண்டால்தான் அந்த மயான ஏரியாவில் ரயில் நிற்கும் என்பது பாவம், நாணா மாமாவுக்குத் தெரியாது. அப்போது ஒரு புதர் மறைவிலிருந்து ‘சின்ன புலியா, இல்லை பெரிய பூனையா’ என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒரு ஐந்து எட்டிப் பார்த்து உறுமிவிட்டு மறைய, வெலவெலத்துப் போன நாண மாமாவை, ‘டெவலப்பிங் ஏரியா… காலனி வந்துட்டா அதெல்லாம் காட்டுக்குள்ள ஓடிப்பூடும்’ என்று கூறி கிச்சா சமாதானப்படுத்தினான்.

நாணா மாமாவுக்கு வயிற்றில் இனம் புரியாத பீதி புளியைக் கரைத்தாலும், விதி விளையாடவே, வீடு கட்டுவதற்காக 75 சதவீதப் பணத்தையும் ‘எச்சுமிப் பாட்டி எண்டர்பிரைசஸ்’ பெயரில் பாங்க்கில் போட்டுவிட்டார்.

நாணா மாமாவுக்கு வீடு கட்டும் பணியில் இறங்கிய கிச்சா, முதல் வேலையாக கிரவுண்டைச் சுற்றிக் கோட்டை மதில் உசரத்துக்கு காம்பவுண்ட் சுவரைக் கட்டினான். அதுவும் வளைந்து வளைந்து ‘கிரேட் வால் ஆஃப் சைனா’ போல இருப்பதைப் பார்த்த நாணா மாமா ‘இதில் ஏதாவது சூது உள்ளதோ…’ என்ற பாவனையில் பரிதாபமாகப் பார்க்க, ‘சதுரமாக காம்பவுண்ட் சுவர் கட்டுவதைவிட இப்படி வளைத்து வளைத்துக் கட்டினால் செங்கல் மிச்சமாகும்’ என்று கூறிய கிச்சா, அதை நிரூபிப்பது போல மிச்சமான இரண்டே இரண்டு செங்கற்களைக் காட்டி அவரைச் சிந்திக்க வைத்துக் குழப்பினான்.

நடப்பது நடக்கட்டும் என்று நாக்பூர் புறப்பட்டுப் போனார் நாணா மாமா. ஆனால், நான்கு மாதங்களில் கிச்சா அடித்த ‘ஸ்டார்ட் இம்மீடியட்லி. பில்டிங் எக்ஸ்பையர்ட் தந்திக்கு அர்த்தம் புரியாமல் அலறிப் புடைத்துக் கொண்டு வந்த நாணா மாமாவை ஜல்லி தூக்கும் பாண்டு பாத்திரத்தில் உட்கார வைத்து கயிறு கட்டி காம்பவுண்ட் சுவர் தாண்டி ஏற்றி இறக்கினான் கிச்சா.

அந்த நான்கு மாதங்களில் கிச்சா தோட்டத்தில் வேலிகாத்தான், அரளி, நெருஞ்சி முள், ஆமணக்கு என்று தேவையில்லாமல் போட்ட விஷச்செடிகள், கட்டிய வீட்டையே மறைக்கும் அளவுக்கு ராட்சஸத்தனமாக வளர்ந்திருந்தன. அதைப் பார்த்த நாணா மாமா, ரகசியமாகக் கண்ணீர் வடித்தார். ஒரு மாதிரியாக புல் பூண்டு புதர்களை வெட்டி கிச்சா செப்பனிட்டுக் கொடுத்த ஒற்றையடிப் பாதையில் நடந்து வீட்டை நெருங்கிய நாணா மாமா, வாசலில் தான் விரும்பிக் கேட்ட போர்டிகோ, வராண்டா போன்ற விஷயங்கள் இல்லாதது கண்டு ‘எங்கே அவை?’ என்று சற்றுக் கோபமாகக் கேட்க, எச்சுமிப் பாட்டியும் கிச்சாவும் என்னமோ காணாமல் போன குழந்தையைத் தேடுவது போல சிறிது நேரம் தேடினார்கள். பின்னர் திடீரென்று நினைவுக்கு வந்ததுபோல, ‘மன்னிக்கணும் மாமா, வீட்டு பிளானைத் தெரியாத்தனமா தலைகீழாத் தொங்கவிட்டு அதைப் பாத்துப் பாத்துக் கட்டினதுல மேஸ்திரி மறந்துபோய் மாடியை முதல்ல கீழே கட்டிட்டார். அப்புறம் யாரோ பிளானை சரியா மாட்டிட்டாங்க போலருக்கு. அதனால மறுபடி ஒரு தடவை மாடியை மாடியிலேயே கட்டிட்டார். அதான் மேல கீழ, ரெண்டு மாடியா போயிட்டதால பால்கனி ரெண்டாயிடுத்து. நீங்க கேட்ட போர்டிகோ, வராண்டா மிஸ் ஆயிடுத்து…’ என்று கூறிய கிச்சாவின் கழுத்தை நெரிக்கப் பாய்ந்தவரின் கவனத்தை, வீட்டை ஒட்டி வலது-இடது புறத்தில் தலா ஒன்றாக துவாரபாலகர்கள் கணக்கில் நின்ற ரெண்டு சிங்கிள் ரூம்கள் ஈர்க்கவே, கிச்சாவிடம் அதைக் காட்டி ‘அந்த ரெண்டு அவஸ்தைகள் என்ன?’ என்று கர்ஜித்தார்.

‘நீங்கதானே அட்டாச்சுடு பாத்ரூம் வேணும்னு சொன்னீங்க… ஒண்ணு லேடீஸுக்கு… இன்னொன்னு ஜென்ட்ஸுக்கு… தனியா கட்டி ரெண்டுத்தையும் தரதரன்னு இழுத்துண்டு வந்து நேத்துதான் சிமெண்ட் அரால்டெய்ட் கலவை போட்டு வீட்டோட அட்டாச் பண்ணேன்’ என்று கூறினான் கிச்சா. அந்த இரண்டில் ஒரு பாத்ரூம் கதவில், பொதுக் கழிப்பிடத்தில் உள்ளது போல ‘ஆண்கள் என்று எழுதி தனது பட, படத்தையும் மற்றதில் ‘பெண்கள்’ என்று எழுதி தனது மனைவியின் படத்தையும் வரைந்திருப்பதைப் பார்த்த நாணா மாமா, பைல்ஸ் வந்துவிட்ட அவஸ்தையில் நெளிந்தார்!

கிச்சாவால் தனக்கு ஏற்பட்ட நிகர நஷ்டத்தையும் தெரிந்துகொள்ள வீட்டுக்குள் நுழைந்த நாணா மாமா, தரையில் தான் சொன்ன மொஸைக்குக்குப் பதிலாக நாலு அடி நடந்தால் உராய்வில் வீடே தீப்பற்றிக் கொள்ளும் அளவுக்குப் பொறி பறக்க வைக்கும் சொரசொரப்பான ஏதோ ஒரு கண்றாவி கடப்பைக் கற்களைப் போட்டிருப்பதைப் பார்த்து, மேஸ்திரி, கொத்தனார் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து குழந்தை போல விசித்து விசித்து அழ ஆரம்பித்தார்.

ஐந்து லட்ச ரூபாயை விரயமாக்கி, வீடு என்ற பெயரில் சினிமா படப்பிடிப்புக்கு மட்டுமே பயன்படும் ஒரு பாழடைந்த புது பங்களாவைத் தன் தலையில் கட்டிய கிச்சா மீது நாணா மாமாவுக்கு ஆத்திரம் வந்தாலும், கூடவே ஆச்சரியமும் அடைந்தார். ஆம். அந்த இரண்டு கிரவுண்டில் வீடு கட்டியது போக எப்படியோ இரண்டு கிரவுண்டை காலிமனையாக மீதி வேறு வைத்திருந்தான் கிச்சா. பூஜை அறை தவிர, மற்ற அறைகள் புறா கூண்டுகள் போல பொந்து பொந்தாக இருந்ததால், அந்த வீட்டை ஏதாவது கோழிப் பண்ணைக்கு வாடகைக்கு விட்டுவிட்டு, கிச்சா மீதியாக வைத்த அந்த இரண்டு கிரவுண்டில் நல்ல காண்ட்ராக்டராகப் பார்த்து புது வீடு கட்டத் தீர்மானித்திருக்கிறார் நாணா மாமா!

– மிஸ்டர் கிச்சா, முதற் பாதிப்பு: 2004, கிழக்கு பதிப்பகம், சென்னை.

கிரேசி மோகன் (16 அக்டோபர் 1952 - 10 சூன் 2019)[3] தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றியவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்தார்.[4] அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *