ஜனவரி முதல் தேதியன்று என் புது டைரியில் நான் இரண்டொரு குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்த சமயம், “ஸார்” என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். கணேசய்யர்! வருஷ ஆரம்பத்தில் நண் பர்கள் ஒருவருக்கொருவர் ஆசி கூறும் சம்பிரதாயப் படி, “புது வருஷம் உங்களுக்கு நன்மையை அளிக் கட்டும்!” என்று அவரை நான் வரவேற்றது ரொம்பப் பிசகு என்பது அடுத்த நிமிஷமே தெரிந்துவிட்டது. எடுத்த எடுப்பிலேயே மனுஷர், “உங்கள் ஆசீர்வாதம் பலிக்க வேண்டுமானால், ஒரு ஐம்பது ரூபாயாவது கொடுத்து உதவவேண்டும்” என்று கடன் கேட்டார்.
“புது வருஷம் பிறக்கும்போதெல்லாம் புதுசாக ஒரு தீர்மானம் செய்துகொள்வது என் வழக்கம். அதன்படி இந்த வருஷம், ‘யாருக்கும் கடன் கொடுப் பதில்லை’ என்று தீர்மானம் செய்திருக்கிறேன். உங்களுக்குச் சந்தேகமிருந்தால், இதோ பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு, என் டைரியின் ஆரம்பக் குறிப்புகளை அவரிடம் காண்பித்தேன்.
அவற்றைப் பார்த்ததும் அவர், “அட நாராயணா!” என்று ஒரு பெருமூச்சு விட்டார். பின்பு, “நான் இப் போது உங்களிடம் கடன் கேட்கும்படி நேரிட்டி ருப்பதே ஒரு டைரியினால்தான், ஸார்!” என்றார்.
“நிஜமாகவா?” என்றேன்.
“ஆமாம். போன வருஷம் என் நண்பன் ஒருவன் புது டைரி ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தான். ‘வரவு செலவு கணக்கைத்தான் இதில் எழுதவேண்டு மென்பதில்லை. அன்றாடம் தோன்றும் எண்ணங் களைக்கூட இதில் எழுதி வைத்துக் கொள்ளலாம்’ என்று யோசனையும் சொல்லிக் கொடுத்தான்.”
“அதன்படியே உங்கள் எண்ணங்களை எழுதி வந்தீர்களாக்கும்..?”
“ஆமாம்! ‘இன்று சமையல் மோசம்’, ‘மங்களத்திற்கு மூளை கிடையாது’ என்று என் மனைவியைப் பற்றியே எல்லாக் குறிப்புகளையும் எழுதி வந்தேன். ஒரு சமயம் எனக்குத் திகில் உண்டாகிவிட்டது. அவற்றை அவள் பார்க்க நேரிட்டால் சண்டை வந்துவிடாதா? ஆகவே, டைரியில் எழுதி வைத்திருந்த குறிப்புகளைக் கிழித்தெறிந்துவிட்டு, டைரியை ஒரு மூலையில் போட்டுவிட்டேன். உடனே என் சம்சாரம் அந்த டைரியை எடுத்து வைத்துக்கொண்டு ரகசிய மாகக் குறிப்புகள் எழுத ஆரம்பித்துவிட்டாள்.”
“ரகசியமாகவா..?!”
“ஆமாம்! ஒருநாள் அவள் கோவிலுக்குப் போயி ருந்தபோது, அவள் பெட்டியிலிருந்து டைரியை எடுத்துப் பார்த்தேன். தூக்கிவாரிப் போட்டது. ‘புஷ்பம் வாங்கித் தருவதென்றால் என் கணவருக்கு மனசே வராது’ என்று ஆரம்பத்திலேயே எனக்கு ‘டோஸ்’ கொடுத்திருந்தாள்.”
“அட, ராமா! அப்புறம்..?”
“அப்புறம் என்ன…. அவளுடைய அபிப்பிராயத்தை மாற்றுவதற்காக மறுநாள் முதல் தவறாமல் புஷ்பம் வாங்கிக் கொடுத்து வந்தேன்.”
“அப்புறம்..?”
“‘என் பெற்றோர்களைக் கண்டால் என் கணவ ருக்கு ஆவதேயில்லை’ என்று ஒருநாள் எழுதியிருந் தாள். அதைப் பார்த்துவிட்டு மறுநாளே அவளுடைய பெற்றோருக்குத் தந்தி அடித்து, அவர்களை வர வழைத்தேன். தவிர, அவளுடைய குறிப்புகளின்படி ஏழு புடவைகள், நாலு ஜதை வளையல்கள், வைர மூக்குத்தி வாங்கிக் கொடுத்தாயிற்று. அவற்றால் ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன்! ‘புது வருஷத்தன்று கல்லிழைத்த மோதிரம் வாங்க வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. என் கணவர் வாங்கிக் கொடுப் பாரா?’ என்று நேற்று ஒரு குறிப்பு எழுதி வைத்தி ருந்தாள். அதைப் பார்த்துவிட்டுத்தான் உங்களிடம் கடன் கேட்க வந்தேன். இன்று அவளுக்குக் கல் இழைத்த மோதிரம் வாங்கிக் கொடுக்காவிட்டால் என் மானமே போய்விடும்!”
கணேசய்யர் இவ்விதம் கூறவும், எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது. உடனே ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்து அனுப்பி வைத்தேன்.
– ஆனந்த விகடனில் 40, 50 -களில் பல ஒரு பக்கக் கதைகளை எழுதியவர் ‘சசி’. ( இயற்பெயர்: எஸ்.ஆர்.வெங்கடராமன்). ‘ரமணி’ என்ற பெயரிலும் ‘திண்ணைப் பேச்சு’ கட்டுரைகளை எழுதினார். 14 வருடங்கள் விகடனில் உதவி ஆசிரியராய்ப் பணி புரிந்த ‘சசி’ 25 ஏப்ரல் 1956 இல் காலமானார்.