(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“வெறும் கதைகள் மட்டும் எழுதினால் போதுமா? நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்குத் தீர்வு காண ஏதாவது வழிகள் சொன்னால் என்ன? நான்கு பேர்களுக்காவது வேலைகள் வழங்குவதற்கு உங்களிடம் ஏதாவது திட்டம் உண்டா?”
மேற்படி குண்டொன்றை நண்பரொருவர் என் தலையில் போட்டதும், நான் சிந்திக்கலானேன். புதிதாக வேலையில்லாத் திண்டாட்டத்திற்குத் தீர்வுகாண எனக்கு வழி தெரியாவிட்டாலும் – நாலு பேர்களுக்கு வேலை வழங்குவதற்கான புதுத் திட்டம் எதுவும் எனக்குத் தோன்றாவிட்டாலும் ஏதோ ‘இல்லை’ என்று சொல்லாமல் வழங்குவதற்கென்று சில வழிகளும் திட்டங்களும் என்னிடமும் இருக்கவே இருக்கிறது.
எனக்குத் தெரிந்த ஒருவரும் – எனது நண்பர்கள் இருவரும் எப்படி வேலையில்லையே என்ற கவலையைப்போக்கி எப்படியெல்லாம் வசதியோடு வாழ்கிறார்கள் என்பதைச் சொல்லுகிறேன். அவர்களது வழிகளையும் திட்டங்களையும் ஏன் ‘வேலையில்லையே’ என வருந்துபவர்களும் பின்பற்றக் கூடாது? எந்தவித மூலதனமோ-விசேட தகுதிகளோ இல்லாது பின்பற்றக் கூடியதாக விளங்கும் அந்த மூவர் காட்டிய வழிகளை இதோ வேலை தேடுபவர்களின் சிந்தனைக்காக தருகிறேன்.
முத்திரை வசூலித்து முன்னுக்கு வந்தவர்
அப்பொழுது நான் வேலை தேடிக்கொண்டிருந்த காலம். யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு பெரிய கட்டடத்தின் ஓர் அறையில் குடியமர்ந்து கொண்ட ஒருவர், தினசரிப் பத்திரிகை ஒன்றில் ஒரு விளம்பரம் வெளியிட்டிருந்தார். அதில், எஸ். எஸ். சி. படித்த வாலிபர்களுக்காகப் பல வேலைகள் காலியாக இருப்பதாகவும், விண்ணப்பப் பத்திரங்களுக்கும் ஏனைய விவரங்களுக்கும் நேரில் அல்லது கடித மூலம் தொடர்பு கொள்ளும்படியாகவும் இருந்தது.
பின் கேட்கவா வேண்டும்? ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் விண்ணப்பித்தார்கள். என்னைப்போன்ற ஆர்வம் மிக்கவர்கள் சிலர் நேரிலேயே அங்கு போய் முற்றுகையிட்டோம். அங்கு வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களுடன் அதனைப் பூர்த்தி செய்து அனுப்பும்போது கூடவே ஒரு ரூபாய்க்கு அஞ்சல் கட்டளை அல்லது பத்துச் சத முத்திரைகள் பத்து இணைக்கும்படியும் கேட்கப்பட்டிருந்தது. (முத்திரைகளை அரசாங்கப் பரீட்சை விண்ணப் பங்களில் செய்வது போல ஒட்டியோ அதன் மேல் கையெழுத்திட்டோ பைத்தியக்காரத்தனம் செய்யவேண்டாம் என்றும் சொன்னார்கள்)
வேலை வழங்கப்போகும் அந்த ஆசாமியிடம் இந்த ஒரு ரூபாய் சங்சதி பற்றி விசாரித்தாடாது அவர் தந்த பதில் எம்மைத் திருப்தி செய்தது. விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் நேர்முகப் பரீட்சைக்கு ஆளை பதிவுத் தபாலில் அழைக்கவே அது எனச்சொல்லட்பட்டது.
அதன் பிறகு என்ன நடந்திருக்கும் என்பதைச் சொல்லவா வேண்டும்? வேலைக்காக கடல் கடந்த நாடுகளுக்கே விண்ணப்பங்கள் அனுப்பும் துணிச்சல் மிக்க நமது வாலிபர்களுக்கு ஒரு ரூபாய் ஒரு பொருட்டா? பத்துச் சத முத்திரைகளும், ஒரு ரூபாய்க்கான அஞ்சல் கட்டளைகளும் அந்த ஆசாமியின் அறையை நிறைத்தன.
இதெல்லாம் நடந்து இப்பாழுது மூன்று ஆண்டு களுக்கு மேலாகிவிட்டது. முறைப்படி விண்ணப்பங்கள் அனுப்பியிருந்த எனக்கோ எனது நண்பர்களுக்கோ அந்த நபரிடமிருந்து பதிவுத் தபால் அல்ல, ஒரு ‘போஸ்காட்’ கூட இதுவரை கிடைக்கவில்லை.
ஆனால், கடைசியாகத் தான் அறிந்து கொண்டேன். விண்ணப்பதாரர்களிடம் இருந்து முத்திரைகள் வசூலித்த அந்த ஆசாமிக்கு, அவைகளை விற்றதில் ஆயிரம் ரூபாய் வரை சேர்ந்ததாம். அவர் இப்பொழுது அதை மூலதனமாகக்கொண்டு தனக்கு நிரந்தரமான வேறு ஒரு வேலை தேடிக்கொண்டார். ஆசாமி ஏமாற்றுக்காரன் தான் என்றாலும், விண்ணப்பதாரர்கள் ஒரு ரூபாய் தானே போனால் போகட்டும் என்று விட்டுவிட்டார்கள். ஒரு ரூபாவுக்காக அவர்கள் என்ன வழக்கா போடுவார்கள்?
எப்படி இருக்கிறது இந்தப் பிழைப்பு? பின்பற்றக் கூடியதாக இருந்தால் சரி, இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது இன்னும் இரண்டுவகைப் பிழைப்புக்கள்.
இலக்கியத் தொண்டன்
மிக மிக எட்ட இருந்துவந்த நண்பர் ஒருவர், நான் முதன் முதலில் புத்தகம் வெளியிட்டதும் எனக்கு மிக மிகக்கிட்டவந்தார். எனக்கு யாருக்குமே இல்லாத ஓர் அபூர்வமான ஆற்றல் இருப்பதாக வியந்த அவர், நான் தமிழ் வளர்ச்சிக்காக ஏதோ மகத்தான சேவை செய்வதாகவும் பாராட்டினார். அந்தச் சேவைக்குத் தன்னால் ஏதாவது உதவிகள் செய்பக் கூடியதாக இருந்தால் அதைத்தான் பெருமையுடன் ஏற்கத் தயார் என்றும் அந்த நண்பர் தொடர்ந்து குறிப்பிட்டார்.
இது தான் சமயம் என்று அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட நான் “உங்களைப் போன்ற எனது நண்பர்கள் ஒவ்வொருவரும் எனது நூலில் குறைந்தது ஐந்து பிரதிகளை யாவது விற்பனை செய்து தந்தால்….” என்றேன்.
“பூ…இதுவா பெரிய காரியம்? ஐந்து என்ன ஐம்பது பிரதிகளை உங்களுக்கு விற்பனை செய்து தருகிறேன்” என்ற நண்பர் தான் எத்தனையோ எழுத்தாளர்களுக்கு அப்படி உதவி செய்ததாக ஒரு பட்டியலையும் வாசித்தார்.
எனக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை, “உங்களைப் போன்ற இலக்கியத் தொண்டர்கள் இருக்கும்போது என் போன்றவர்கள் எதற்காகப் புத்தகம் போடுவதற்குத் தயங்க வேண்டும்?” என்று சொல்லியவாறு ஐம்பது புத்தகங்களை பார்சலாகக் கட்டி நண்பரிடம் ஒப்படைத்தேன். விற்பனையாளர்களுக்குக் கொடுப்பது போல அவருக்கும் இருபது வீத கழிவு தருவதாகவும் குறிப்பிட்டேன்.
கழிவைப்பற்றிச் சொன்னது தான் தாமதம் நண்பருக்குப் பொல்லாத கோபம் வந்து விட்டது. “உம்முடைய கொமிசனை யார் ஐசே கேட்டது? ஏதோ நண்பராயிற்றே நல்ல காரியமாயிற்றே என்று உதவ வந்தால் இப்படியா ‘கழிவை’ப் பற்றிப் பேசுவது?” என்றார்.
இதெல்லாம் நடைபெற்று ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. புத்தகப் பணம் என்று சொல்லி ஒரு சதம்கூட அந்த நண்பர் என்னிடம் தரவில்லை. தற்செயலாக என்னைக் கண்டால் “உம்முடைய புத்தகத்தை யார் ஐசே வாங்குகிறான்?” என்பார். சரி புத்தகங்களையாவது திருப்பித் தரலாமே என்று கேட்டால் அதற்கும் அலட்சியமான – அக்கறையற்ற ஒரு கைவிரிப்புத்தான் பதிலாகக் கிடைக்கும்.
கடைசியாகத்தான் நண்பரைப்பற்றிய உண்மை தெரிய வந்தது. அவருக்குப் பிழைப்பே இது தானாம்! புத்தகம் வெளியிடும் எழுத்தாளர்களுடன் எப்படியோ அறிமுகமாகி அவர்களுடன் ஐக்கியமாகி, ஆசை காட்டி, தேன் ஒழுகப் பேசி ஐம்பது பிரதிகள் பெற்றுக்கொள்வாராம்: அவைகளை விற்றுப் பிழைத்துக் கொள்வாராம்.
புத்தகம் வெளியிடும் எழுத்தாளர்கள் பலர் நட்டம்டைவதுண்டு. ஆனால் புத்தகம் விற்று இலக்கியத் தொண்டு புரியும் இவரோ பிழைத்து வருகிறார்.
எப்படி இருக்கிறது இந்தப் பிழைப்பு? ஒரு வேளை சிலருக்கு இந்த இலக்கியத் தொண்டனைப்போல் புத்தகம் வெளியிடும் எழுத்தாளர்களுடன் அறிமுகமாகிப் புத்தகங்கள் பெறுவதில் சிரமம் இருப்பதாகத் தோன்றலாம். அப்படியானவர்கள் இதே வழி முறைகளை, நாடகமன்றங்ளுடன் அறிமுகமாகி, நாடக டிக்கற்றுக்கள் பெற்று விற்பனை செய்வதில் பின்பற்றலாமல்லவா?
அடுத்து, மூன்றாமவரை அறிமுகப்படுத்துகிறேன்.
தமிழ்த் தொண்டன்
எனக்கு இன்னொரு நண்பர் இருக்கிறார், அவரது மூச்செல்லாம் பேச்செல்லாம் எங்கும் எப்பொழுதும் தமிழ் பற்றியதாகவும் தமிழ்த் தொண்டு பற்றியதாகவுமே இருக்கும்.
அந்த நண்பரின் அளவுக்கு அதிகமான தமிழ் ஆர்வமோ என்னவோ, அவருக்கு அடிக்கடி ஏதாவது தொண்டு செய்தாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அதன்காரணமாக ‘அமரர்…நினைவு மண்டப நிதி’ என்றே ‘அறிஞர்..நினைவு மலர்நிதி’ என்றோ ஒன்றை அடிக்கடி ஆரம்பிப்பார். அதற்காக டிக்கட் புத்தகங்களும் அச்சிடுவார். அவைகளில் தலைப்பாக அமரர் பாரதியின் கவிதை ஒன்றிலிருந்து இரண்டு அடிகளை வேண்டுமென்றே முறித்து மறக்காமல் பொறித்து விடுவார். ‘நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்; நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்’ என்பதுவே அந்த அடிகளாகும்.
இதன் பின் நண்பரின் தமிழ்த் தொண்டு தொடங்கிவிடும். கடைப்படிகள், கனதனவான்களின் வீடுகள் எங்கும் ஏறி இறங்குவார்: பொற்குவைகளும் காசுகளும் சேர்த்து விடுவார். ஆனால்?
நானும்தான் எழெட்டு ஆண்டுகளாகக் கவனித்து வருகின்றேன். இந்த நண்பர் பத்துக்கும் மேற்பட்ட காரணங்களைச் சொல்லி பத்துக்கும் மேற்பட்ட நிதிகள் சேர்த்திருக்கிறார். ஆனால் எங்கும் எந்த ஒரு நினைவு மண்டபத்துக்கும் இதுவரை அடிக்கல் நாட்டப்பட்டது பற்றி அறியேன். அதேபோல எந்த ஓர் அச்சுக்கூடத்திற்கும் ‘நினைவு மலர்’ நிமித்தமாக ‘அட்வான்ஸ்’ கொடுக்கப்பட்டது பற்றியும் தெரியாது.
ஆமாம் அப்படியெல்லாம் நண்பர் செய்திருப்பாரேயானால் ‘தமிழ்த் தொண்டன்’ என்ற பெயர் மட்டும் தான் அவருக்கு நிலைத்திருக்கும். ஆனால் அவர்தான் பிழைக்கவும் தெரிந்தவராயிற்றே!
இதுவரை மூவர் காட்டிய வழிகளையும் சொன்னேன். வேலை இல்லாதவர்களுக்கு இந்த மூன்றில் ஒன்றாவது பின்பற்றக்கூடியதாக இருக்கும் என்றே நம்புகிறேன். இவைகளில் ஒன்றுகூட ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லையென்று அவர்களில் யாராவது சொன்னால் அவர்களைப் பிழைக்கத் தெரியாதவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதை விட வேறுவழியில்லை.
– பெண்ணே! நீ பெரியவள்தான்! (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: ஆனி 1971, தமயந்தி பதிப்பகம், அச்சுவேலி.