கதை ஆசிரியர்: வண்னநிலவன்.
பக்கத்து வீட்டுக்குப் பலாப் பழம் வந்திருக்கிறது.
செல்லப் பாப்பா புரண்டு படுத்தாள். கனமான அடி வயிறுதான் சட்டென்று சிமெண்டுத் தரையின் குளுமையை முதலில் உணர்ந்தது. உடம்பெல்லாம் ஒரு விதமான கூச்சம் பரவிற்று. பல திரிகள் கட்டையாகிவிட்டன. மாற்ற வேண்டும். சிலது எரியவே இல்லை. தீ சரியாக எரியாமல், அடுப்பி ல் எதை வைத்தாலும் இறக்குவதற்கு நேரமாகிவிடுகிறது. ஒரு சிறு விஷயம், திரிகளை மாற்றுவது என்பது. ஆனாலும் திரிகளை மாற்றவில்லை அவள்.
சிமெண்டுத் தரையில் வெறுமனே ஒன்றையும் விரிக்காமல் படுத்துக்கொள்கிறது அவளுக்குச் சின்ன வயசிலேயே பிரியமான காரியம். எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் அந்தக் குளிர்ச்சி எல்லாவற்றையும் மாற்றி மனசை லேசாக்கி விடும். ஆனால் இப்போது இந்தச் சின்னச் சின்ன விஷயங்கள் எல்லாம் கூட வெகு தூரத்தில் சென்று மறைந்துகொண்டு விட்டன.
அண்ணாந்து உயரே சுவரில் தொங்கிய மரஸ்டாண்டை வெறிக்கப் பார்த்தாள். அவளுடைய வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த ஹார்லிக்ஸ் பாட்டில்களும், கிளாஸ்கோ டின்களும் புகையடை பிடித்துப் போயிருந்தன. பல பாட்டில்களில் சாமான்களே இல்லை. இருந்த ஒன்றிரண்டு பாட்டில்களிலும் ரொம்பவும் கீழே ஏதேதோ சாமான்கள் கிடந்தன. மனசுக்கு முட்டிக்கொண்டு வந்தது. பார்வையைத் திருப்பி புரண்டு படுத்தாள்.
அவளையொட்டி சீனிவாசன் படுத்துக் கிடந்தான். அவனுடைய பனியன் பின்புற வாரைப் பிடித்துச் சுருட்டிச் சுருட்டி விளையாடினாள். கழுத்துப் பகுதியிலும், ஓரங்களிலும் அழுக்குச் சேர்ந்து போயிருந்தது. அவளுடைய கைகளில் பிசுபிசுத்தது. அடி வயிறு தரையில் உரச, இன்னுங் கொஞ்சம் அவனுடைய உதுகோடு தன் வயிறும் மார்பும் ஒட்ட நகர்ந்து படுத்துக் கொண்டாள். அவனுடைய முரட்டுத் தலைமயிருக்குள் விரல்களை விட்டு அளைந்தாள். கொஞ்ச நேரத்தில் அது பிடிக்காமல் அவனுடைய பிடரியின் அடியில் முளைத்திருந்த சின்னச் சின்ன முடிகளைத் தொட்டு விளையாடினாள். அவனுடைய அடிக் கழுத்தில் கையை நுழைத்துக் கீச்சங்காட்ட வேண்டுமென்று ஆசையாக இருந்தது. அப்படியே அவனுடைய இடுப்பின் மீது தலையை வைத்துப் படுத்துக்கொண்டாள். சீனிவாசன் விழித்துக்கொண்டான்.
“இன்னம இந்தப் பக்கம் வாங்க, சொல்லுதேன். ஏய் ஸீதா அங்க என்னடி ஆச்சு? நான் வந்துட்டேன்னு நீயும் அடுப்ப அப்படியே போட்டுட்டு வந்திட்டியா?”
”இல்லம்மா… எனக்கு இன்னொரு சொளை வேணும்மா.”
“அவளுக்கு மட்டும் கூட ஒண்ணாக்கும்…? நான் அப்பாட்டப் போய் சொல்லப் போறேன்….?”
“ஏய் தடிக் கழுதைகளா… ஒண்ணையுமே கண்ணால பாத்திராத மாதிரிதான் லெச்ச கெடுக்கியளே. ஒங்களுக்குப் போயி வாங்கிக் கொண்ணாந்து போடுதாங்களே, அவங்களச் சொல்லணும்.”
“இன்னும் ஒண்ணே ஒண்ணும்மா.”
“பாடாப் படுத்துதீங்களே. லோசுக் குட்டியைப் பாருங்க. எம்புட்டுப் புள்ள. ஒனக்கு காய்ச்சலும்மா பண்டம் திங்கக் கூடாதுன்னு சொன்னேன். பாத்துக்கிட்டு பேசாம இருக்கா பாருங்க…. நீங்களா? பேருதான் பெரிய பிள்ளைகள்னு பேரு. பிசாசு மாதிரி….”
அந்தக் குழந்தைகளுக்குள்ளே ஏதாவது தகராறு வந்திருக்க வேண்டும். இரண்டு குடித்தனங்களுக்கும் தடுப்பாக இருந்த பலகைச்சுவரில் யாரோ வந்து மோதி விழுந்ததும், தொடர்ந்து அழுகைச் சத்தமும் கேட்டது.
செல்லப் பாப்பா அவனை அணைத்துப் படுத்திருந்தபடியே தலையை மட்டும் நீட்டி – ஒன்றும் தெரியப் போவதில்லை என்றாலும் – பலகைத் தடுப்பைப் பார்த்தாள். பலகையின் மீது மோதின அதிர்ச்சியில் ஆணியில் மாட்டியிருந்த சீனிவாசனுடைய சட்டை மட்டும் சுருட்டி எறிந்ததுபோல் தரையில் விழுந்து கிடந்தது.
திடீர் திடீரென்று அடுத்த பக்கத்திலிருந்து பலாப் பழ வாடை வீசியது.
சீனிவாசன் திரும்பி, அவள் பிரியப்பட்டபடியே அவளைத் தன் நெஞ்சோடு நெஞ்சாய் வாரியெடுத்துப் போட்டுக்கொண்டான். அவளுடைய முக நெருக்கத்துக்குள்ளிருந்து பல்பொடி வாடை அடித்தது. அவளுடைய கனத்த வயிறு அவனுடைய வயிற்றின் மீது விழுந்து அழுத்தியபோது கேட்டான்.
“செல்லப் பாப்பா, ஒனக்கு இப்படி படுத்தா வயிறு அமுங்கலியா? கஷ்டமா இருக்கா?”
செல்லப் பாப்பா பதில் சொல்லாமல் லேசாகச் சிரித்தாள். இரண்டு உதடுகளிலும் வெள்ளை வெள்ளையாய் மேல் தோல் உரிந்து பார்க்க அழகாக இருந்தது. மெதுவாகச் சிரிக்கிறபோது பின்னும் அந்த அழகு கூடிற்று. இப்போதெல்லாம் செல்லப் பாப்பாவுடைய சிரிப்பில் ஒரு சோர்வு இருக்கிறது. அந்தச் சிரிப்பு அவளுடைய முகத்தில் உண்டு பண்ணின அபூர்வமான சோபையை அவன் ரசித்தான். இன்னொரு தடவை அப்படிச் சிரிக்க மாட்டாளா என்று இருந்தது.
“ஏய்…. ஏய்…. மாடு, எத்தனை தடவை சொல்லட்டும், கொட்டய எல்லாம் ஒரு எடத்துல துப்புங்கன்னு, ஏம் பிராணன ஏன் இப்பிடி வாங்கணும்?”
”யம்மா… நாம் பாரும்மா எல்லாக் கொட்டயவும் சேத்து வச்சிருக்கேன். இந்தப் புள்ள சீதாக் கொரங்குதான் நெடுகத் துப்பிப் போட்டுருக்கா.”
”ஆமா… நீரு ஒம்ம துருத்தியை ஊதிக்கிட்டு கெடயும்.”
“ஏட்டி ஒனக்கு என்ன அம்புட்டுக் கொளுப்பா?”
ஏதோவொரு பாத்திரம் சரிந்து உருண்டுவிட்டது. ஒரே கூச்சலும் அழுகையும், எல்லாவற்றுக்கும் மேலே பழ வாடை மட்டும் தனியே வந்து கொண்டிருந்தது.
எல்லாவற்றையும் செல்லப் பாப்பாவும் சீனிவாசனும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்தபடிக்கே கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
செல்லப் பாப்பா கேட்டாள், “ஒங்களுக்கு ஏன் இன்னுஞ் சம்பளம் போடல?”
சட்டென்று சீனிவாசனுடைய முகம் மாறிவிட்டது. அவனுடைய முகத்தைப் பார்த்த பிறகு, தான் அப்படிக் கேட்டிருக்க வேண்டாமோ என்ற யோசனையுடம் பனியன் மேலே ஏறித் திரைந்துபோய், தெரிந்த முடிகள் அடர்ந்த அவனுடைய தொப்புள் குழியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடைய வெதுவெதுப்பான உடம்பின் சூடு அவளுக்கு இதமாக இருந்தது.
“நாங்க எல்லோரும் சம்பளம் வாங்குறது இல்லன்னு முடிவு பண்ணியிருக்கோம். பேச்சுவார்த்தை முடிஞ்சாத்தான் முடிவு என்னன்னு தெரியும்.”
அவள் ஒன்றும் பேசாமலிருந்தாள். இரண்டு பேருமே மௌனமாக இருந்தது அவர்களுக்கே பயமாக இருந்தது. இரண்டு பேருமே எப்படியாவது ஏதாவது பேசிவிட வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டார்கள்.
இப்போது பழவாடை ரொம்பவும் காரமாக, ஒரு நெடி பரவுவதுபோல் அந்தச் சின்ன அறை முழுவதும் வீசியது.
அவன் கேட்டான்.
”இது என்னம்மோ வாடை அடிக்கே, பனம் பழ வாடை மாதிரி…”
“இல்ல, அது பலாப்பழ வாடை” என்று சட்டென்று சொன்னாள் செல்லப் பாப்பா. அவளுடைய வேகம் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளையே பார்த்தான்.
இன்னமும் பலகைக்கு அந்தப் பக்கத்திலிருந்து அழுகையும் கூச்சலும் ஓயவில்லை. கொஞ்ச நேரத்தில் அந்தப் பழ வாடைக்கூடப் போய்விட்டது. ஆனால் அழுகை மட்டும் நிற்கவில்லை. பழம் நறுக்கித் தந்த அம்மாவுக்காக அடுப்பைக் கவனித்துக் கொண்டிருந்த சீதாதான் அழுது கொண்டிருந்தது. அந்த அம்மாள் அந்தப் பையனைக் கண்டபடி திட்டிக் கொண்டிருந்தாள். வேகமாக வார்த்தைகள் வரும்போது, குரல் முறிந்துபோய், அழுது விடுவதுபோல தொண்டையை அடைத்துக்கொண்டு வந்தது. அந்தக் குழந்தைகள் படுத்துகிற பாட்டைப் பொறுக்க முடியாத தவிப்பு அந்தக் குரல் நெடுகிலும் கேட்டது. சத்தமும், அழுகையும் கூடக் கூட பழ வாடையையே காணவில்லை.
“செல்லப்பாப்பா ரொம்பக் கஷ்டமா இருக்காம்மா? இந்தக் காப்பித் தண்ணிய மட்டும் போட்டு எறக்கி வையி. கெளப்புல போயி இட்லி ஏதாவது வாங்கிட்டு வாரேன். நீ ஒண்ணுஞ் செய்ய வேண்டாம்.” ரொம்பவும் பிரியமாகப் பேசினான் அவன்.
”துட்டு ஏது?”
“அதெல்லாம் இருக்கு. நேத்து அரிகிருஷ்ணங்கிட்டே ஒரு ரூவா கேட்டேன்.”
“எந்த அரிகிருஷ்ணன்?”
“அதுதாம்மா. நமக்குக் கல்யாணம் ஆன புதுசுல ஒரு நா சாயந்திரம் வந்து இந்த நடைவாசல் படியிலேயே இருந்து காப்பியெல்லாம் குடிச்சிட்டுப் பேசிட்டுப் போகல…? அவந்தான்/”
“ம் ஹூம்…”
“சம்பளம் போட்டுருவாங்க, ஒன்னய டாக்டரம்மா கிட்டக் கூட்டிக்கிட்டு போகலாம்னு பாக்கேன். முடியமாட்டேங்கே… இன்னைக்குச் சாயந்தரம் மேகநாதன் இருபது ரூவா தாரேன்னு சொல்லியிருக்கான்.”
”ஒங்க கூடப் படிச்சாரு, பாத்திரக் கட வச்சிருக்காருன்னு சொல்லுவீங்களே அந்த ஆளா?”
“ஆமா, அவந்தான் எம்மேலே கொஞ்சம் உருத்து உள்ளவன். சாயந்தரம் போகணும். நேத்து பஜார்ல வச்சுப் பார்த்தேன். ஒன்னய ரொம்ப விசாரிச்சான். ஒன்னய டாக்டரம்மா கிட்டக் கூட்டிட்டுப் போகணும்ன் பணம் கொஞ்சம் இருந்தாக் குடுன்னு கேட்டேன். கண்டிஷனா சாயந்தரம் வான்னு சொல்லியிருக்கான்.”
அவனைப் பார்த்துக் கொண்டே மேகநாதனை நினைத்துப் பார்த்தாள். அவனை அவளுக்கு நினைவில்லை. அவன் எப்படியிருப்பான் என்று மனசிற்குள் பார்த்துக் கொண்டாள். அவனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அவனைப்பார்த்துவிட்டு வருகிறபோதெல்லாம், அவளை ரொம்பவும் விசாரித்ததாக இவன் சொல்லியிருக்கிறான். அவனைப் பற்றி இவன் பிரஸ்தாபிக்கிற போதெல்லாம் அவனைப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறாள். அவனைப் பற்றியொரு சித்திரம் கூட செல்லப் பாப்பா மனசிலிருக்கிறது.
செல்லப் பாப்பா காபித் தூளைப் போட்டுவிட்டு ஸ்டவ்வை அணைத்தாள். அதை நகர்த்தி வைத்துக் கொண்டே அவனிடம் சொன்னாள். “அந்த ஸ்டவ்வு திரி எல்லாம் சிறுசா போச்சுப்பா. மாத்தணும்.”
“ஆகட்டும், சாயந்தரம் வாங்கிட்டு வாரேன். சாயந்தரம் ரெடியா இரு. வந்ததும் டாக்டர் வீட்டுக்குப் போவோம்.”
”இப்ப எதுக்குப்பா? சம்பளம் வாங்குனம் பொறவு போய்க்கிடலாம்… வீட்டுக்கார ஆச்சிக்கு மொதல்ல வாடகையைக் குடுத்திருவோம்.”
அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. பதிலே பேசாமல் உம்மென்று மேலே அண்ணாந்து பார்த்துக்கொண்டு படுத்திருந்தான்.
“என்ன கோவிச்சிட்டீங்களாக்கும்? என்னப்பா சொல்லிட்டேன்?”
“என்னத்தைச் சொன்ன? ஈர மண்ணுந் தெருப் புழுதியும்….”
அவள்… செல்லப் பாப்பா, ஒரு காலை மடித்து குனிந்த படிக்கே உட்கார்ந்திருந்தாள். காபியிலிருந்து, கொதிக்கிற மணங்கலந்த ஆவி காற்றிலே அலைந்து போய்க்கொண்டிருந்தது.
திடீரென்று அந்தப் பழவாடை முன்பை விட ஆழமாக வீசியது. ஒரு வேளை அந்த அம்மாள் தன் பிள்ளைகளிடம் அந்தப் பழத்தைக் கொடுத்து அனுப்பி இருப்பாளோ என்று ஆசைப்பட்டாள்.
அவள் உட்கார்ந்திருந்த நிலை அவனுக்கு ரொம்பவும் இரக்கத்தை உண்டு பண்ணிற்று. சட்டென்று எழுந்துபோய் அவளுக்கு எதிரே உட்கார்ந்துகொண்டு அவள் நாடியைப் பிடித்து முகத்தைத் தூக்கினான். கலங்கிப் போயிருந்த கண்களுடன் அவனை ஏக்கத்துடன் பார்த்தாள்.
“பின்ன என்னம்மா? நான் ஒண்ணுசொன்னா நீ ஒண்ணு சொல்லுத? மனுஷனுக்கு கோவம் வருமா வராதா, சொல்லு பாப்பம்?”
”நானுந்தான் என்னத்தப்பா பெரிசாச் சொல்லிட்டேன்?”
யாரோ கதவைத் தட்டினார்கள். தொடர்ந்து “யக்கா… யக்கா..” என்கிற குரல் கேட்டது.
செல்லப் பாப்பா, பின்னால் இரண்டு கைகளையும் ஊன்றி மெதுவாக எழுந்திருக்க முயன்றாள். அவன் அவளுடைய தோளைத் தொட்டு உட்காரப் பண்ணினான். அவனே எழுந்து போனான். கேட்ட குரல் சீதாவுடைய குரலாக இருந்தது. ஞாபகமாக அந்த அக்கா குடுத்து விட்டிருக்காங்களே என்று மனசிற்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.
அவன் கதவைத் திறந்தான். சீதாதான் நின்று கொண்டிருந்தது. அவனைப் பார்த்துப் பேசாமல், அவன் நின்றிருந்த இடைவெளியினூடே இவளைப் பார்த்து, “யக்கா, இன்னைக்குச் சாயந்தரம் புட்டாரத்தி அம்மன் கோயிலுக்குப் போயிட்டு வரலாமான்னு அம்மா கேட்டுட்டு வரச்சொன்னா?” என்றாள்.
செல்லப் பாப்பா ஒன்றும் சொல்லாமல் அவனை அண்ணாந்து பார்த்தாள். பார்த்துவிட்டுச் சொன்னாள், “இன்னைக்கி எங்கம்மா வர….? அக்கா வரலையாம்னு சொல்லு.”
சீதா போகும்போது அவளுடைய கடைவாயில் மேல் உதட்டோரமாக பலாப் பழ நார் ஒட்டிக்கொண்டிருந்ததை செல்லப்பாப்பா பார்த்தாள்.
சாயந்திரம் சீனிவாசன் சொன்னபடி வரவில்லை. ரொம்ப நேரம் கழித்துத்தான் வந்தான். கதவைத் திறந்ததும் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டே உள்ளே வந்து உட்கார்ந்தான். சுவரில் மாட்டியிருந்த பெட்ரூம் லைட்டைத் தூண்டி எடுத்துக்கொண்டு வந்து அவனுக்கு முன்னால் வைத்து விட்டு, அவனுக்கென்று எடுத்து மூடி வைத்திருந்த தட்டைத் திறந்து அவனிடம் தந்தாள். அப்படியே சென்று திரும்பவும் படுத்துக்கொண்டாள்.
திடீரென்று அந்தப் பழவாடை வீசிற்று. ஆச்சரியத்துடன் எழுந்து படுக்கையில் உட்கார்ந்து கொண்டாள்.
சீனிவாசன் குனிந்து மெதுவாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.