பதின்மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சூரியா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 1,938 
 
 

பதின்மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சூரியா சொன்ன மாண்டவன் மீண்ட கதை

“கேளாய், போஜனே! ‘பசியெடுத்தான் பட்டி, பசியெடுத்தான் பட்டி’ என்று ஒரு கிராமம் உண்டு. அந்தக் கிராமத்திலே ‘குப்பன், குப்பன்’ என்று ஒரு குடியானவன் உண்டு. அவனுக்கு ஒரு தவமும் செய்யாமலேயே ஒன்பது குழந்தைகள் பிறந்தன. கொஞ்சம் வளர்ந்ததும் ஊருக்கு ஒன்றாகச் சொல்லிக்கொள்ளாமல் ஓடிப்போனவை போக, பாக்கி இருந்தவை இரண்டு. அவற்றில் ஒன்று ஆண்; இன்னொன்று பெண். பையனின் பெயர் சப்பாணி; பெண்ணின் பெயர் வெள்ளரி. அந்த வெள்ளரி தாவணி போட ஆரம்பித்ததுதான் தாமதம், கிராமத்துக் காளைகள் அனைத்தும் அவளைச் சுற்றிச் சுற்றி வந்து வட்டமிட்டன. ‘இதென்னடா, வம்பு! இவளை எவன் கையிலாவது பிடித்துக் கொடுக்காதவரை இந்தத் தொல்லை தீராதுபோலிருக்கிறதே? இந்த வருஷமாவது நாலு தூறல் விழுந்தால் இருக்கிற இடத்திலே எள்ளாவது, கொள்ளாவது விதைத்துப் பார்க்கலாமென்று நினைத்தேன். ஒரு தூறல்கூட விழ வில்லை. நாடாள வரும் மந்திரிகளோ மழை பெய்தால் அதற்குக் காரணம் நாங்கள்தான் என்று மார் தட்டிச் சொல்கிறார்கள்! பெய்யாவிட்டாலோ அதற்குக் காரணம் யார் என்று சொல்லாமலே இருந்துவிடுகிறார்கள். இப்போது நாம் இந்தப் பெண்ணின் கலியாணத்துக்கு என்ன செய்வது?’ என்றான் குப்பன். ‘கவலைப்படாதே, அப்பா! நான் பட்டணத்க்குப் போய் அதற்கு வேண்டிய பணத்தை சம்பாதித்துக் கொண்டு வருகிறேன்!’ என்றான் சப்பாணி. ‘செய் மகனே, செய். எனக்கோ வயதாகிவிட்டது. இனி நீதானே இந்தக் குடும்பத்தின் பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும்?’ என்றான் குப்பன். பையன் அன்றே பட்டணத்துக்குப் புறப்பட்டான்.

அவன் போன நாளிலிருந்தே அவனைப் பணத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த குப்பன், ஒரு நாள் வழக்கம் போல் அவனை எதிர்பார்த்துத் திண்ணைக்கு வந்து உட்கார, கையில் அன்றைய தினசரிப் பத்திரிகையோடு வந்த அந்த ஊர் கர்ணம் அவனை நோக்கிப் பரபரப்புடன் வந்து, ‘ஏண்டா, குப்பா! உனக்குச் சங்கதி தெரியுமா?’ என்று கேட்க, ‘என்ன சங்கதி?’ என்று அவன் அவரைத் திருப்பிக் கேட்க, அவர் தம் கையில் இருந்த பத்திரிகையைத் துக்கிப் பிடித்து, ‘பட்டினிச் சாவு! பரிதாபம்! அந்தோ, பரிதாபம்! ஏப்ரல் 1-இன்று காலை இருபது இருபத்திரண்டு வயது மதிக்கத் தகுந்த வாலிபன் ஒருவன், ‘பசி! ஐயோ, பசி!’ என்று அடி வயிற்றில் அடித்துக்கொண்டே சென்னை தங்கசாலை தெரு வழியாக வந்துகொண்டிருந்தான். அப்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்த அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. அவனுக்கு எதிர்த்தாற்போல் வந்துகொண்டிருந்தார். அவர், “ஸ், சத்தம் போட்டுச் சொல்லாதே! ரகசியமாகவாவது சொல்லித் தொலை!” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் மயங்கி கீழே விழுந்தான். அதற்குப் பிறகு பேச்சுமில்லை, மூச்சுமில்லை. அவனுடைய சட்டைப் பையிலிருந்து கிடைத்த ஒரு கடிதத்திலிருந்து அவன் பசியெடுத்தான் பட்டியைச் சேர்ந்தவனென்றும், பெயர் சப்பாணி என்றும் பிழைப்பதற்காகப் பட்டணத்துக்கு வந்தவனென்றும், அவனுடைய தகப்பனார் பெயர் குப்பனென்றும் தெரிகிறது’ என்று படிக்க, அதைக் கேட்ட குப்பன், ‘ஐயோ, மகனே! போய்விட்டாயா?’ என்று அலற, உள்ளே இருந்தபடி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த வெள்ளரி, ‘ஐயோ அண்ணா! இதற்குத்தானா நீ பட்டணம் போனாய்?’ என்று தன் தலையைச் சுவரில் மோதி அழுவாளாயினள்.

பார்த்தார் கர்ணம்; ‘இனி அழுவதில் பிரயோசனம் இல்லை; பட்டணத்துக்குப் போய் அவனுடைய பிணத்தைக் கொண்டுவரப் பாருங்கள்!’ என்றார். ‘அதற்கும் பாழாய்ப் போன பணம் வேண்டுமே, எங்கே போவேன்?’ என்றான் குப்பன்; ‘அப்படியானால் ஒன்று செய். மொத்தம் இருந்த ஒன்பதில் ஏழு போக, பாக்கி இருந்தது இரண்டு. அந்த இரண்டிலும் ஒன்று போக, பாக்கி இருப்பது ஒன்று என நினைத்துக்கொள்!’ என்றார் கர்ணம். அப்படியே நினைத்துக் குப்பன் தன் மகனை மறந்து, அவனுக்குரிய ஈமக்கடன்களை மட்டும் மறக்காமல் செய்து முடிப்பானாயினன்.

இது நடந்த இரண்டாம் நாள் இரவு யாரோ வந்து தன் வீட்டுக் கதவைத் தட்ட, ‘யார் அது?’ என்று குப்பன் உள்ளே இருந்தபடியே கேட்க, ‘நான்தான் அப்பா, சப்பாணி! கதவைத்திற, அப்பா!’ என்று வெளியே இருந்தபடி சப்பாணி குரல் கொடுக்க, அதைக் கேட்ட வெள்ளரி, ‘ஐயோ, பிசாசு! அண்ணன் பிசாசா வந்து அலைகிறான், அப்பா!’ என்று அலற, ‘அடப் பாவி! செத்தும் உன்னை விடவில்லையா, இந்த வீட்டு ஆசை? போடா நாயே, போ!’ என்று குப்பன் உள்ளே இருந்தபடியே அவனைக் கொஞ்சம் செல்லமாக விரட்ட, ‘இல்லை, அப்பா! நான் செத்துப் போகவில்லை; உயிரோடுதான் இருக்கிறேன். கதவைத் திற, அப்பா!’ என்று சப்பாணி வெளியே இருந்தபடி கெஞ்ச, ‘திறக்காதே, அப்பா! அது உள்ளே வந்து நம்மை என்ன செய்யுமோ, என்னவோ?’ என்று வெள்ளரி குப்பனைத் தடுக்க, ‘நானா திறப்பேன்? செருப்பால் அடி, ஜோட்டால் அடி! காடு போன பிள்ளை உயிரோடு வீடு திரும்பி வந்தால்கூடச் சேர்க்கக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்களே, அது எனக்குத் தெரியாதா? நாளைக்கு ஆகட்டும், பூசாரி பொன்னப்பனைக் கூட்டி வந்து, பெரிய பூஜை போட்டு, இந்தப் பேயை ஒரேயடியாக ஒழித்துக் கட்ட ஏற்பாடு செய்கிறேன்!’ என்று அவன் கருவ, சப்பாணி சிரித்து, ‘ராத்திரியாயிருக்கவே இப்படிப் பயப்படுகிறீர்கள் போல் இருக்கிறது! நான் வேண்டுமானால் இந்தத் திண்ணையிலேயே படுத்துக் கொள்கிறேன். பொழுது விடிந்ததும் நீங்களாகவே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள் – நான் பிசாசா, இல்லையா என்று!’ என்பதாகத் தானே சொல்லி விட்டுத் திண்ணையில் படுக்க, ‘ஏதேது, இந்தப் பேய் அவ்வளவு லேசில் இந்த வீட்டை விட்டுப் போகாது போலிருக்கிறதே!’ என்பதாகத்தானே குப்பன் கதவைத் திறந்து கொண்டு கழியும் கையுமாக வெளியே வந்து, ‘போகிறாயா, இல்லையா?’ எனச் சப்பாணியை அடித்து விரட்ட, அக்கம் பக்கத்திலிருந்தவர்களும் அந்த அரவம் கேட்டு ஆளுக்கொரு கழியுடன் அங்கே வந்து, ‘போ, காட்டுக்குப் போ! வீட்டுக்கு வராதே, காட்டுக்குப் போ!’ என்று அவனை ‘அடி, அடி’ என்று அடித்து விரட்டுவாராயினர்.

வேறு வழியின்றிச் சப்பாணி ஓட, அதுகாலை நல்ல வேளையாக அந்த வழியே வந்த மிஸ்டர் விக்கிரமாதித்தர் அவனைக் கண்டதும் தம் காரை நிறுத்தி, ‘என்ன சமாசாரம்?’ என்று விசாரிக்க, ‘முதலில் அவர்கள் கையிலுள்ள கோல்களைக் கீழே போடச் சொல்லுங்கள்; நான் என்னுடைய கதையைச் சொல்கிறேன்!’ என்று அவன் சொல்ல, அவர் அப்படியே செய்துவிட்டு, ‘அது என்ன கதை, சொல்?’ என்று கேட்க, அவன் சொன்ன கதையாவது:

சப்பாணி சொன்ன காடு விட்டு வீடு வந்த கதை

‘இரண்டு நாட்களுக்கு முன்னால் ‘பட்டினிச் சாவு’ என்ற தலைப்பில் தினசரிப் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியாகி யிருந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்தச் செய்திக் குரியவன் நான்தான். என் பெயர் சப்பாணி. என்னுடைய தங்கை வெள்ளரியின் கலியாணத்துக்காக கொஞ்சம் பணம் சம்பாதித்துக்கொண்டு வரலாமென்று நான் பட்டணத்துக்குப் போனேன். ‘வேலை, வேலை’ என்று நகரெங்கும் தேடியலைந்ததுதான் மிச்சம்; ஒரு வேலையும் கிடைக்க வில்லை. அதற்குள் கையிலிருந்த காசும் செலவழிந்து விடவே, ‘பசி, பசி!’ என்று பட்டணத்து வீதிகளில் நான் சுற்றி அலைந்தேன். அந்த நிலையில் என்னைக் கண்ட ஆளுங் கட்சிக்காரர் ஒருவர், ‘ஸ், கத்தாதே! என்று சொன்னதுதான் எனக்குத் தெரியும்; அதற்குப் பிறகு நான் நினைவிழந்து கீழே விழுந்துவிட்டேன். சில விநாடிகளுக் கெல்லாம் சூடான காப்பி துளித் துளியாக வந்து என் வாயில் விழுந்தது; இழந்த உணர்வை மீண்டும் பெற்று மெல்லக் கண் திறந்தேன். என் வாயில் காப்பியை ஊற்றிக்கொண்டிருந்த ஒருவர், ‘ஸ், கண்ணைத் திறக்காதே!’ என்று சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே என்னுடைய கையில் பத்து ரூபாய் நோட்டு ஒன்றைத் திணித்துவிட்டு, ‘இதை வைத்துக் கொள்; கொஞ்ச நேரம் செத்தவன்போல நடி!’ என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே ஏதோ ஒரு கொடியை எடுத்து விரித்து என்மேல் போர்த்தினார். அப்போதுதான் அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்த யாரோ ஒருவர் என்பது எனக்குத் தெரிந்தது. பத்து ரூபாய் சும்மாவா? அவர் சொன்னது சொன்னபடி நான் கண்களை இறுக மூடிக்கொண்டு, கால்களை விறைத்து நீட்டிக் கொண்டேன். அவ்வளவுதான்; “பாரீர், பாரீர்! பட்டினிச் சாவு பாரீர்! கையாலாகாதவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்காதீர், ஒப்படைக்காதீர் என்று நாங்கள் அப்போதே கரடியாய்க் கத்தினோமே, கேட்டீர்களா? கொடுத்தீர்கள்; அதன் பலனை இப்போது அனுபவிக்கிறீர்கள். ஞாபகமிருக்கட்டும்; அடுத்த தேர்தலிலாவது உங்கள் வோட்டை எங்களுக்கே போட்டு, நீங்கள் எங்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கவில்லையென்றால், இன்று வீதிக்கு வீதி விழும் பட்டினிச் சாவு நாளை வீட்டுக்கு வீடு விழ ஆரம்பித்துவிடும், ஜாக்கிரதை!’ என்று அங்கே கூடியவர்களை எச்சரித்துவிட்டு, அவர்கள் கலைந்து சென்றதும், தமக்குத் தெரிந்த ரிக்ஷாக்காரன் ஒருவனை அழைத்து, அவனிடம் இன்னொரு பத்து ரூபாய் நோட்டை நீட்டி, ‘அசல் பாடை ஒன்றைத் தயார் செய்து, அதில் இவரை அப்படியே எடுத்து வைத்துத் தூக்கிக் கொண்டு போய், ஜனநடமாட்டம் அதிகமில்லாத ரோடில் விட்டுவிட்டு வந்துவிடு!’ என்று சொல்லி விட்டுச் செல்ல, அவருடைய தலை மறைந்ததும் அவன் அவர் கொடுத்த ரூபாயைத் தன் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு என்னிடம் வந்து, ‘இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே தம் பிடி, தம்பி! கிடைக்கிற காசிலே உனக்குப் பாதி, எனக்குப் பாதி!’ என்று தன்னுடன் இன்னும் மூவரைச் சேர்த்துக் கொண்டு, ‘ஐயா! அனாதைப் பிணம், ஐயா! ஆளுக்குக் கால் ரூபா, அரை ரூபா தருமம் செய்யுங்கள், ஐயா!’ என்று என்னைக் காட்டிப் பிச்சை எடுத்து, அதைக் கொண்டு அவர் சொன்னபடியே பாடை கட்டி, அதில் என்னை எடுத்து வைத்துத் தூக்கிக் கொண்டு போய் மூலைக்கொத்தளம் ரோடில் விட்டு, ‘தம்பி, இது பொல்லாத பட்டணம், தம்பி! இங்கே உள்ள அரசியல் கட்சிக்காரர்கள் உங்கள் சேவை எங்களுக்கு வேண்டாம், எங்களுக்கு வேண்டாம் என்று சொன்னால்கூட நம்மை விட மாட்டார்கள்; இழுத்து வைத்துச் செய்வார்கள். ஏனெனில், அதுதான் இப்போது அவர்களுடைய பிழைப்பு! இல்லையென்றால், சுதந்திரம் வந்ததும் நம்மையெல்லாம் மன்னர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த அவர்கள், இப்போது வோட்டுப் போடா விட்டால், அந்த மன்னர்களை உள்ளே தள்ளலாமா, அல்லது அவர்களுக்கு அபராதம் போடலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பார்களா? எல்லாம் பதவி ருசி, பண ருசியாலே வந்த வினை! நாங்கள்கூட முன்னெல்லாம் நேர்மையாகத் தான் பிழைத்துக் கொண்டிருந்தோம். இப்போது அவர்களைப் பார்த்துத்தான் கெட்டுவிட்டோம். பாவம், நீ யார் பெற்ற பிள்ளையோ, என்னவோ? அந்த எத்தர்களிடம் வகையாக அகப்பட்டுக் கொண்டுவிட்டாய், அதனால் என்ன? இதோ, உன் பங்குக்கு நானும் ஒரு ஐந்து ரூபாய் தருகிறேன். ஓடி விடு! ஓடி விடு! வேறு எந்தக் கட்சிக் காரனாவது வந்து உன்மேல் தன் கட்சிக் கொடியைப் போர்த்திப் பட்டினிச் சாவு பிரசங்கம் செய்வதற்குள்ளே நீ இந்த இடத்தை விட்டு எங்கேயாவது ஓடி விடு, ஒடி விடு!’ என்று என்னை விரட்ட, நானும் அப்படியே ஓடி, முதல் காரியமாக ஓர் ஒட்டலில் நுழைந்து மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டுவிட்டு, வழக்கம்போல் படுப்பதற்கு எழும்பூர் ஸ்டேஷனைத் தஞ்சமடைந்தேன்.

பொழுது விடிந்தது; அன்றையக் காலைப் பத்திரிகையில் வந்திருந்த ஒரு செய்தி என்னை ஆனந்தக் கடலில் ஆழ்த்தியது. ஆளுங் கட்சியைச் சேர்ந்த யாரோ ஒரு நடிகர், ‘எங்கள் ஆட்சியிலா பட்டினிச் சாவு? இருக்காது; இருக்கவே இருக்காது. அப்படியே இருந்தாலும் அதற்குக் காரணம் டில்லியாய்த்தான் இருக்க வேண்டும். அதனால் என்ன, எதிர்க்கட்சிக்காரர்களைப் போல அதை நாங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். அடிப்படைப் பிரச்னை தீரும்போது தீரட்டும்; அதற்காகக் கிடைத்த சந்தர்ப்பத்தை நான் நழுவ விட மாட்டேன். இதோ, பட்டினியால் செத்துப் போன அந்தப் பரிதாபத்துக்குரியவனின் குடும்பத்துக்கு நான் ரூபாய் இரண்டாயிரம் தருகிறேன்!’ என்று அதில் அறிவித்திருந்தார். மகிழ்ச்சிக்குரிய அந்தச் செய்தியை அப்பாவிடம் சொல்லி, அதைக் கொண்டு அவர் தங்கைக்கு மணம் முடிக்கும் வரை தலைமறைவாக இருக்கலாம் என்று எண்ணி நான் இங்கே ஓடோடி வந்தேன். இவர்கள் என்னடா என்றால், ‘பேய், பிசாசு!’ என்று என்னை அடித்து விரட்டுகிறார்கள்!’ என்பதாகத்தானே அவன் தன் கதையைச் சொல்லி முடிக்க, விக்கிரமாதித்தர் சிரித்து, ‘ஓ, புத்திசாலிகளே! பேய், பிசாசுகளில் கால்கள் கீழே பதியாமல் கொஞ்சம் உயர்ந்து நிற்கும் என்று உங்கள் பெரியோர் சொல்லக் கேட்ட தில்லையா நீங்கள்? அதை இப்போது மறந்து விட்டீர்களா? இவன் காலைப் பாருங்கள்; நன்றாகப் பாருங்கள்!’ என்று சப்பாணியின் காலைக் காட்ட, அவர்கள் குனிந்து அவன் காலைப் பார்த்துவிட்டு, ‘இவன் பிசாசு இல்லைடோய், நம்ம சப்பாணி!’ என்று தங்கள் கைகளிலிருந்த கோல்களைக் கீழே போட, ‘இந்தக் காலத்தில் யாரும் ஏமாந்துதான் ஏதாவது கொடுப்பார்களே தவிர, ஏமாறாமல் ஒன்றும் கொடுக்க மாட்டார்கள். யாரோ ஒரு நடிகர் ஏமாந்தோ ஏமாறாமலோ ரூபாய் இரண்டாயிரம் தருவதாகச் சொல்கிறார். அதைக் கொண்டு வெள்ளரியின் கலியாணத்தை நடத்தி வையுங்கள். அதுவரை சப்பாணியைத் தலை மறைவாக இருக்கவிடுங்கள்!’ என்று சொல்ல, ‘அப்படியே செய்கிறோம், அப்படியே செய்கிறோம்’ என்று அவர்கள் அவனை அழைத்துக் கொண்டு போய் ராஜோபசாரம் செய்து, அவன் விருப்பப்படியே அவனை ‘அண்டர் கிரவுண்டு’க்கு அனுப்பி வைப்பாராயினர்.

பதின்மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான சூரியா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; பதினான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பூரணி சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கி வருவது காண்க… காண்க…காண்க……

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *