பதினோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் வித்தியா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 2,003 
 
 

பதினோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் வித்தியா சொன்ன ஜதி ஜகதாம்பாள் கதை

“கேளாய், போஜனே! ‘ஜலங்காணாபுரம், ஜலங்காணாபுரம்’ என்று ஓர் ஊர் உண்டு. அந்த ஊரிலே ‘ஜலங்காணா ஈஸ்வரர் கோயில், ஜலங்காணா ஈஸ்வரர் கோயில்’ என்று ஒரு கோயில் உண்டு. அந்தக் கோயிலுக்கு ‘ஜதி ஜகதாம்பாள், ஜதி ஜகதாம்பாள்’ என்று ஒரு தாசி உண்டு. அந்தத் தாசிக்கும் கோயில் தர்மகர்த்தா ஜோதிலிங்கத்துக்கும் காதல், காதல் என்றால் பகிரங்கக் காதல் அல்ல; ரகசியக் காதல்.

இப்படியாகத்தானே அவர்களுடைய காதல் சூடும் சுவையும் குன்றாமல் பரம ரகசியமாக இருந்து வருங்காலையில், ஒரு நாள் தர்மகர்த்தாவாகப்பட்டவர் கோயிலுக்குப் புதிதாக வந்திருந்த அர்ச்சகரை அவசரம் அவசரமாக விளித்து, ‘எனக்கு நீர் ஓர் உதவி செய்ய வேணும்; தவறாக நினைக்கக் கூடாது!’ என்று சற்றே வெட்கத்துடன் விண்ணப்பிக்க, ‘தவறாக நினைக்கக் கூடாது என்று சொல்வதிலிருந்தே இவர் கோரும் உதவி தவறான உதவியாய்த்தான் இருக்கும் போல் இருக்கிறதே!’ என்று நினைத்த அர்ச்சகர், தம்முடைய பிழைப்பு தற்சமயம் அவருடைய கையில் இருப்பதை நினைவுகூர்ந்து, ‘அதற்கென்ன, சொல்லுங்கள்? அவசியம் செய்கிறேன்!’ என்று குழைய, ‘நம் தேவஸ்தானத்துத் தாசி ஜதி ஜகதாம்பாளை உமக்குத் தெரியுமல்லவா?’ என்று அவர் கேட்க, ‘தெரியாதே! இப்போதுதானே நான் வந்திருக்கிறேன். இனிமேல்தான் தெரிந்துகொள்ள வேண்டும்!’ என்று அர்ச்சகர் ஓர் அசட்டுச் சிரிப்பை உதிர்க்க, ‘தெரியாவிட்டால் என்ன? இன்று வெள்ளிக்கிழமை; சாயந்திரம் அவள் அவசியம் கோயிலுக்கு வருவாள். அவள் வரும்போதே அவளைச் சுற்றி ஒரு கூட்டம் சேரும்; அதிலிருந்தே அவள் தான் ஜதி ஜகதாம்பாள் என்பதை நீர் தெரிந்துகொள்ளலாம். அவளிடம் இந்த நவரத்தினமாலையைக் கொடுத்துவிடும். நாலு பேருக்குத் தெரிந்து கொடுக்காதீர்; ரகசியமாகக் கொடும்!’ என்று சொல்லி அவர் தம் கைப் பையிலிருந்த நவரத்தினமாலையை எடுத்து அர்ச்சகரிடம் கொடுக்க, ‘ஐயோ, இவ்வளவு பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைக்கிறீர்களே!’ என்று அர்ச்சகர் அலற, ‘அலறாதீர்! அதற்குத் தகுதியான ஆள் நீர்தான்; வேறு யாரிடமும் எனக்கு நம்பிக்கையில்லை. இதை நானே கொண்டு போய் அவளிடம் கொடுத்திருப்பேன். இதைக் கட்டி முடித்த ஆசாரி நானும் என் மனைவியும் பட்டணத்துக்குப் புறப்படுகிற நேரத்தில் இதைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தான். என் மனைவி வாயெல்லாம் பல்லாக, ‘இது யாருக்கு?’ என்றாள்; ‘சாமிக்கு!’ என்று சொல்லி அவளைச் சமாளித்தேன். அவள் இப்போது வெளியே நிற்கும் காரில் உட்கார்ந்திருக்கிறாள். அவளுக்கு எதிர்த்தாற்போல் இதை நான் உம்மிடம் கொடுப்பதுதான் பொருத்தம்; வேறு யாரிடம் கொடுத்தாலும் அது பொருத்தமாயிருக்காது. பிடியும், பிடியும், எனக்கு நேர மாகிறது!’ என்பதாகத் தானே அவர் அந்த நவரத்தின மாலையை அர்ச்சகரின் கையிலே ‘திணி, திணி’ என்று திணித்துவிட்டு, ஓட்டமும் நடையுமாக வெளியே செல்வாராயினர்.

மாலை வந்தது. கோயிலுக்கு வந்த ஜதி ஜகதாம்பாள் தனியாக வரவில்லை; நாலு தோழிகளுடன் வந்தாள். அந்தத் தோழிகளோ அதிசயத் தோழிகளாயிருந்தார்கள். அவர்களில் ஒருத்தியாவது அந்த ஜதி ஜகதாம்பாளுக்குக் கொஞ்சமாவது மாறுபட்டிருந்தார்களா என்றால், அதுதான் இல்லை; ஒரே அச்சில் வார்த்த மாதிரி அவர்களும் அவளைப் போலவே இருந்தார்கள். தர்மகர்த்தா சொன்னதுபோல் அவர்களைச் சுற்றிக் கூட்டம் என்னவோ சேரத்தான் சேர்ந்தது; அந்த ஐவரில் யார் ஜதி ஜகதாம்பாள் என்பதுதான் அர்ச்சகரால் தெரிந்துகொள்ள முடியாத புதிராயிருந்தது!

தெரிந்தவர்கள் யாரையாவது கேட்டுப் பார்க்கலாமென்றாலோ, அவர்களில் சிலர், ‘ஜதி ஜகதாம்பாளையா உமக்குத் தெரியாது?’ என்று ‘கெக்கெக்கே’ எனச் சிரிக்கக் கூடும்; இன்னும் சிலரோ, ‘ஏன், எதற்கு?’ என்று குடையக் கூடும். அவர்களிடம் தான் என்னத்தைச் சொல்வது? ‘நாலு பேருக்குத் தெரிந்து கொடுக்காதீர்; ரகசியமாகக் கொடும்!’ என்றல்லவா அவர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்?

அர்ச்சகர் விழித்தார்; திகைத்தார்!

பூஜையை முடித்துக்கொண்டு போனபின், அவர்களுடைய வீட்டுக்கே போய் இதைக் கொடுத்துவிட்டு வரலாமென்றால், பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? ‘அர்ச்சகரா தாசி வீட்டுக்குப் போகிறார்? அநியாயம்! அநியாயம்!’ என்று நினைக்கமாட்டார்களா? பனை மரத்தின் அடியிலிருந்து பாலைக் குடித்தாலும் பனங்கள்ளைக் குடிக்கிறான் என்று தானே உலகம் நினைக்கும்?

‘அதெல்லாம் எதற்கு? அர்ச்சனை செய்ய வரும்போது எல்லோரையும் கேட்பதுபோல அவர்களையும் ‘யாருடைய பெயருக்குச் செய்ய வேண்டும்?’ என்று கேட்டால் அவள் தன் பெயரைச் சொல்லாமலா இருக்கப் போகிறாள்? அப்போது தெரிந்துகொண்டால் போகிறது!’ என்று அர்ச்சகர் அதைச் செய்வதற்குத் தயாராக, அதற்குள் அங்கே வந்து சேர்ந்த அந்த நாரீமணிகள் தங்களுடைய பூக்குடலையிலிருந்து நைவேத் தியத்துக்கு வேண்டியவற்றை எடுத்துப் படுபவ்வியமாக அவரிடம் கொடுக்க, அவரும் அவற்றைப் படுபவ்வியமாகப் பெற்றுக்கொண்டு, ‘யாருடைய பெயருக்குச் செய்ய வேண்டும்?’ என்று கடாவ, ‘சுவாமியின் பெயருக்கே செய்து விடுங்கள்!’ என்று அவர்களில் ஒருத்தி சாவதானமாகச் சொல்ல, ‘என் அப்பா ஜலங் காணா ஈஸ்வரா! என்னை ஏண்டா பெயர் காணா அர்ச்சகனாகப் படைத்தாய்?’ என்று சிவ நாமாவளியும், சிந்திய மூக்குமாக அவர் அந்த அர்ச்சனையைச் செய்து முடிப்பாராயினர்.

‘அதற்கு மேல் யோசிப்பதில் பிரயோசனமில்லை’ என்று அர்ச்சகர் துணிந்து, அவர்களையே நேருக்கு நேராக நோக்கி, ‘உங்களில் யார் ஜதி ஜகதாம்பாள் என்று நான் தெரிந்து கொள்ளலாமோ?’ எனப் படுபவ்வியமாகக் கேட்க, ‘அது கூடத் தெரியாமலா இங்கே நீங்கள் அர்ச்சகர் வேலை பார்க்க வந்திருக்கிறீர்கள்?’ என்று அந்த அழகு ராணிகள் குபீரென்று சிரிக்க, ‘ஏண்டா, அதைக் கேட்டுத் தொலைத்தோம்?’ என்று அர்ச்சகர் அவமானத்தால் அப்படியே குன்றிப் போவாராயினர்.

அதுகாலை பக்தகோடிகளோடு பக்தகோடியாக அங்கே வந்திருந்த ஊருக்குப் புதியவர் ஒருவர் அர்ச்சகருக்கு நேர்ந்த அவமானத்தைத் தமக்கே நேர்ந்த அவமானமாகக் கருதி, ‘ஏன் அம்மா, சிரிக்கிறீர்கள்? ஐவரும் ஒரே மாதிரியாக உள்ள உங்களில் யார் ஜதி ஜகதாம்பாள் என்று அவர் கேட்டதில் என்ன தவறு?’ என்று கேட்க, ‘அதைக்கூடத் தெரிந்து கொள்ளாமல் அவர் இங்கே அர்ச்சகராக வந்திருக்கிறாரே, அதுதான் தவறு!’ என்று அவர்களில் ஒருத்தி சொல்ல, ‘நானும்தான் இந்த ஊருக்குப் புதிது; உங்களில் யார் ஜதி ஜகதாம்பாள் என்று எனக்குந்தான் தெரியாது. அதனால் இந்தக் கோயிலுக்கு நான் வந்தது தவறாகிவிடுமா?’ என்று அவர் திருப்பிக் கேட்க, ‘சந்தேகமென்ன, தவறுதான்!’ என்று அதற்கும் சளைக்காமல் அவர்களில் இன்னொருத்தி அடித்துச் சொல்ல, ‘ஏது, பொல்லாத பெண்களாயிருப்பார்கள் போல் இருக்கிறதே, இவர்கள்!’ என்று நினைத்த அவர், ‘அப்படியானால் உங்களில் யார் அந்த ஜதி ஜகதாம்பாள் என்பதை நீங்கள் யாருக்கும் சொல்லவே மாட்டீர்களா?’ என்று கேட்க, ‘சொல்ல மாட்டோம்; அவர்களாகத் தெரிந்துகொள்ளாத வரை நாங்களாகச் சொல்லவே மாட்டோம்!’ என்று அவர்களில் மற்றொருத்தி சொல்ல, ‘ஓய், அர்ச்சகரே! அந்த ஜதி ஜகதாம்பாளை நீர் அவசியம் தெரிந்துகொள்ளத்தான் வேண்டுமா?’ என்று கேட்டுக் கொண்டே ஊருக்குப் புதியவர் அர்ச்சகரின் பக்கம் திரும்ப, ‘ஆம், அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது!’ என்று அவர் தம் மடியிலிருந்த நவரத்தின மாலையை அழ மாட்டாக் குறையாகத் தொட்டுப் பார்த்துக்கொண்டே சொல்ல, ‘அப்படியானால் கொஞ்சம் பொறும்; அதை நான் கண்டுபிடித்துச் சொல்கிறேன்!’ என்று சொல்லிவிட்டு அவர் அந்த ஐந்து ஆரணங்குகளின் பக்கம் திரும்ப, ‘எங்கே கண்டுபிடியுங்கள், பார்க்கலாம்?’ என்று அவர்களில் மற்றும் ஒருத்தி அவரை நோக்கி சவால் விட, ‘அதற்கு நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும். அதோ தொங்குகிறதே, தூங்கா மணி விளக்கு, அதிலுள்ள ஐந்து சுடர்களையும் நீங்கள் தலைக்கு ஒன்றாகத் தூண்டிவிட வேண்டும்!’ என்று அவர் சொல்ல, ‘ஆஹா! அதற்கென்ன, அப்படியே தூண்டிவிடுகிறோம்!’ என்று அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சுடராகத் தூண்டி விட்டுவிட்டு வர, கடைசியாகத் தூண்டி விட்டுவிட்டு வந்தவளைச் சுட்டிக் காட்டி, ‘நீங்கள்தான் அந்த ஜதி ஜகதாம்பாள்!’ என்று ஊருக்குப் புதியவர் சொல்ல, அவள் வியப்புடன் அவர் பக்கம் திரும்பி, ‘அது எப்படித் தெரிந்தது உங்களுக்கு?’ என்று கேட்க, ‘முதல் நால்வரும் சுடரைத் தூண்டிவிடும்போது தங்கள் விரலில் பட்ட எண்ணெயைத் தலையிலே தடவிக் கொண்டார்கள்; அதிலிருந்து அவர்கள் நால்வரும் உங்களுக்குத் தோழிகள் என்பதை நான் தெரிந்துகொண்டேன். ஐந்தாவதாகத் தூண்டிவிட்ட நீங்கள், உங்களுடைய விரலில் பட்ட எண்ணெயை விளக்கிலேயே தடவிவிட்டு வந்தீர்கள்; அதிலிருந்து உங்களை நான் ஜதி ஜகதாம்பாள் என்று தெரிந்து கொண்டேன்!’ என்று அவள் விளக்க, ஜதி ஜகதாம்பாள் ‘தா, தை’ என்று ஜதியோடு ஒரு குதியும் போட்டபடி, ‘அகப்பட்டுக்கொண்டீரா, நீர்தான் மிஸ்டர் விக்கிரமாதித்தர்!’ என்று ‘விலையுயர்ந்த புன்னகை’ ஒன்றைச் சிந்த, ‘ஆம், நானேதான்!’ என்று அவர் சொல்லி விட்டு, ‘அதைத் தெரிந்து கொள்ளவா இதுவரை நீங்கள் உங்களுடைய பெயரைச் சொல்லாமல் அடம் பிடித்தீர்கள்?’ என்று சிரித்துக்கொண்டே கேட்க, ‘ஆம், இங்கே நீங்கள் வந்திருப்பதாக நான் கேள்விப்பட்டேன். உங்களைப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை. ஆனால் என்னை எப்படி உங்களுக்குத் தெரியாதோ, அதே மாதிரி உங்களையும் எனக்குத் தெரியாது. அதைத் தெரிந்து கொள்வதற்கு என்னடா வழி என்று யோசித்தேன். இப்படி ஒரு வழி தோன்றிற்று. அதைக் கையாண்டேன்; எதிர்பார்த்த வெற்றியையும் பெற்றேன்!’ என்று அவள் சொல்ல, அதுதான் சமயமென்று தம் மடியிலிருந்த நவரத்திர மாலையை எடுத்துச் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே அவள் கையில் ‘திணி, திணி’ என்று திணித்து, ‘ரகசியம்; பரம ரகசியம். தர்மகர்த்தா கொடுக்கச் சொன்னார் இதை!’ என்று அர்ச்சகர் அவள் காதோடு காதாகச் சொல்ல, ‘இதற்கா நீங்கள் அத்தனை பாடு பட்டீர்கள்? அவருக்கு இது ரகசியமாயிருந்தாலும் ஊருக்கு இது ஒன்றும் ரகசியமில்லையே!’ என்று சொல்லிக்கொண்டே அவள் அந்த நவரத்தின மாலையை எடுத்து அங்கேயே அணிந்து கொள்வாளாயினள்.”

பதினோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான வித்தியா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; பன்னிரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சாந்தா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு… என்றவாறு… என்றவாறு…..

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *