நீங்க ராமசாமிதானே?

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 1,064 
 
 

பேருந்து போய்க் கொண்டிருந்தது.

அதில் பயணம் செய்யும் ஒருவர், பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரைத் திரும்பிப் பார்த்தார்.

“நீங்க ராமசாமியா..?” என்று கேட்டார்.

“இல்லை!” என்றார் அவர்.

கொஞ்ச நேரம் ஆயிற்று.

இவர் மறுபடியும் கேட்டார்.

“சும்மா சொல்லுங்க… நீங்க ராமசாமி தானே?”

“இல்லீங்க!” என்றார் அவர் அழுத்தமாக.

இவர் விடுவதாக இல்லை.

“என்கிட்டே சொல்றதுலே எந்தத் தப்பும் இல்லே. தைரியமா சொல்லலாம். நீங்க ராமசாமிதான். சரியா?”

“நிச்சயமா சொல்றேன்… நான் ராமசாமி இல்லை. போதுமா?”

கேட்டவர் மௌனமானார்.

கொஞ்ச நேரம் ஆயிற்று.

மறுபடியும் ஆரம்பித்தார்.

“நிச்சயமா சொல்றேன்… நீங்க ராமசாமியேதான்!”

அவர் யோசித்தார்.

இவரிடமிருந்து தப்பிக்க ஒரே வழிதான் உண்டு.

“ஆமாம் சார்! நான் ராமசாமிதான்!” என்றார் சற்று எரிச்சலாக.

இவர் மறுபடி மெள்ள அவர் பக்கம் திரும்பி னார்.

“உங்களைப் பார்த்தா அப்படித் தெரியலையே!” என்று ஆரம்பித்தார்.

அவர் திடீரென்று எழுந்தார். இடத்தை மாற்றிக் கொண்டு போய்விட்டார்.

இந்தக் கதை வேடிக்கையாக இருந்தாலும், இதில் இருக்கிற கருத்து ஆழமானது.

நாம் பல சந்தர்ப்பங்களில், முதலில் முடிவு எடுத்து விடுகிறோம்.

அதன் பிறகு அதை உறுதிப்படுத்த வழி கண்டு பிடிக்கிறோம்.

நாம் முடிவு செய்ததுதான் சரி என்று நிரூபிப்பதில் நமக்கு ஒரு பெருமை!

அந்தப் பெருமைக்காக பெரும் பொழுதுகளை எல்லாம் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.

ஆன்மிக உலகிலும் இந்த மனித சுபாவம் நிறையக் குழப்பங்களை உண்டு பண்ணிக் கொண் டிருக்கிறது.

ஆலய வாசலில் நின்று கொண்டு, உள்ளேயிருந்து வெளியே வருகிறவர்களை விசாரித்துக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.

“என்ன வேண்டிக்கொண்டீர்கள்?”

வந்து கொண்டிருந்தவர்கள் ஆளுக்கொரு பதில் சொன்னார்கள்…

“தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும்!”

“தேர்தலில் வெற்றி பெற வேண்டும்!”

“வேலை கிடைக்க வேண்டும்!”

இவையெல்லாம் ஏற்கெனவே செய்து கொண்ட முடிவுகள். இந்த முடிவுகளுக்கு ஆதரவு தேடி அவர்கள் ஆலயத்துக்கு வந்திருக்கிறார்கள்.

நண்பர்களே!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்:

ஆலயம் என்பது…

உங்கள் முடிவுகளை உறுதிப்படுத்துகிற இடம் அல்ல!

பரம்பொருளின் இருப்பிடம் என்பது வேறு; பத்திரப் பதிவு அலுவலகம் என்பது வேறு!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *