நில் கவனி-கிழவி

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 9, 2021
பார்வையிட்டோர்: 14,822 
 
 

இந்த சென்னை மாநகரத்தின் சாலைகளில் கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களின் மீது ஏறி விரைந்து செல்லும் கனவான்களே! பாதசாரிகளைப் பழுதாக்காமல், கோழி, வாத்து, நாய் போன்ற வாயில்லா ஜீவன்களின் இறைச்சியை சாலை நடுவே பரிமாறாமல், பயபக்தியோடு சர்வ ஜாக்கிரதையாக வாகனங்களைச் செலுத்தும் மனோபாவத்தை எப்படியாவது வளர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் நினைப்பது போல விபத்து நாயகி’ சுலபமாக முடிந்துவிடக்கூடிய சிறுகதை அல்ல…ஒரு தொடர் கதை.

நான் சொல்வதை ‘ஸாரி, கொஞ்சம் ஓவர்’ என்று அலட்சியப்படுத்தாதீர்கள். ஒரு விபத்தில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கிய அனுபவம் எனக்கு உண்டு. போன வருடம் பிப்ரவரி மாதம் பத்தாம் நாள் இரவு பத்து இருக்கும். மாலையில் வாங்கிய மிக்ஸி வேலை செய்கிறதா என்று சரிபார்க்க தக்காளி ஜூஸ்’ தயாரிப்போம் என்று நானும் என் மனையாளும் ஏகமனதாகத் தீர்மானம் செய்தோம். இரவு பத்து மணிக்குத் தக்காளி வாங்கிவரச் சொல்லி எனக்கு வீரத் திலகமிட்டு வழியனுப்பினாள் என் சகதர்மிணி. நானும் வெற்றி நமதே என்று முழக்கமிட்டு எனது ஸ்கூட்டரில்’ ஆரோகணித்துக் காய்கறிக்கடைக்கு விரைந்தேன். பூட்டிய கடையைத் திறக்கச் சொல்லி, தக்காளி வாங்கிக் கொண்டு ராஜா அண்ணாமலைபுரம் பிரதான வீதியில் திரும்பிக் கொண்டிருந்தேன் அமாவாசைக்கு முந்திய தினம் போலும். பி.டி.சாமியின் கதையில் வரும் கும்மிருட்டு! அப்போது இந்தியர்களைத் திணற அடித்த இம்ரான்கானின் வேகப் பந்து வீச்சுக்குச் சமமான துரிதகதியில் எதிர்ச் சாரி குப்பத்திலிருந்து ஒரு ‘கிழவி’ புறப்பட்டு எனது ஸ்கூட்டரின் குறுக்கே பாய்ந்தாள்.

விநாடி நேரத்தில் எனது மூளையின் செல்கள் விரைவாக வேலை செய்து குறைந்தபட்ச சேதத்தோடு கிழவியைக் காப்பாற்றத் திட்டம் தயாரித்து அதை உடனே அமலுக்குக் கொண்டுவந்தன. எனது பாதங்கள் பிரேக்கைப் பற்றியது. கைகள் ஸ்கூட்டரை ஒடித்து இடது பக்கம் திருப்பியது.

நான், கிழவி, ஸ்கூட்டர் ‘கூறு எட்டணாவாக’ வீதியில் குவிந்தோம்.

‘கொடி அசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடி அசைந்ததா’ என்பது போல, என் மீது கிழவி விழுந்தாளா, இல்லை கிழவி மீது நான் விழுந்துவிட்டேனா, அல்லது எங்கள் இருவர் மீதும் ஸ்கூட்டர் விழுந்துள்ளதா’ என்ற குழப்பமான வானிலை நடுரோட்டில் நிலவியது. சுதாரித்து எழுந்து கொண்டேன். கூடவே ‘ஸ்கூட்டரும்’ எழுந்து கொண்டது. தெய்வமே! கிழவி ஏன் எழவில்லை? கஷ்ட காலம். சாதாரணமாக விட்டிருந்தால் மூப்பு காரணமாக ஒருவித உபாதையுமின்றி உல்லாசமாகக் காலனோடு கைகோத்துக்கொண்டு செல்லவேண்டியவளை அநியாயமாகக் கொன்றுவிட்டோமோ என்ற பயம் என்னுள் எழுந்தது. கிழவியின் நாசியில் சுவாசம் பார்த்தேன். நல்லவேளை, சுவாசம் சீராக வந்துகொண்டிருந்தது.

கிழவி சிறு வயதில் நிறைய உடற்பயிற்சிகள் செய்தவள் போலும். கிழவியின் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளி ‘அடி கள்ளி! உறங்குவது போல் பாசாங்கா செய்கிறாய்..?’ என்று சந்தோஷத்தில் உரத்துக் கூவிவிட்டேன்.

எனது சத்தம் கிழவியின் தற்காலிக ‘கோமா’வைக் கலைத்தது. கிழவி எழுந்தாள். சம்மணமிட்டு அமர்ந்தாள். தன்னை விபத்துக்கு உள்ளாக்கிய என்னை ‘ஏ, நபும்சகனே!’ என்பது போலப் பார்த்தாள். என்னை, எனது பெற்றோரை மற்றும் எனது பித்ருக்களை, கோத்திர தயாதிகளை மொத்தத்தில் எனது பரம்பரையைப் பற்றிக் கெட்ட வார்த்தையில் ஒரு ‘கலிங்கத்துப் பரணி’ பாடிவிட்டு, பழையபடி கீழே படுத்து ‘கோமா’விடம் தஞ்சம் புகுந்தாள். இடைப்பட்ட நேரத்தில் என்னைச் சுற்றிக் குப்பத்துக் கும்பல் கூடிவிட்டது.

சரிந்து கிடந்த எனது ஸ்கூட்டரின் ‘நிரோலாக்’ மேனியில் இரண்டு மலைகளுக்கு நடுவே உதிக்கும் சூரியனை வரைந்து ‘துலுக்காணம்’ என்ற தனது பெயரையும் ‘கரிக்கட்டியால்’ கீச்சுக் கீச்சென்று உடம்பு கூச எழுதினான் ஒரு சிறுவன்.

குப்பத்து ரவிவர்மாவின் செய்கையால் கோபித்து அவனை விரட்டுவதற்காக எழ நினைத்த என்னை, என் சொக்காயோடு இரண்டு கைகள் பிடித்துத் தூக்கியது. என் எதிரே ஒஸிபிஸா’ குழுவினரை ஞாபகப்படுத்தும் நான்கு முரடர்கள் குரோதமாக என்னைப் பார்த்தார்கள். என்னைப் பொறுத்தவரை இனிமேல் தான் விபத்து என்று உள்மனம் எச்சரித்தது. ஒரு ஒஸிபிஸா’ எனது சொக்காயைப் பிடித்துத் தனது நெற்றியால் எனது நெற்றியில் ‘சிக்கிமுக்கி’ உராசல் செய்தான். புத்திர் பலம் யசோதைர்யம் மாருதிம்’ அச்சத்தில் அனுமானைத் துதித்தேன். யார் செய்த புண்ணியமோ தக்க சமயத்தில் அந்தக் குப்பத்தைச் சேர்ந்த பெரியவர் அம்மாவாசை’ என்னை அந்த நால்வரிடமிருந்து பிரித்து நடந்ததை விசாரித்தார். வேகமாக ஸ்கூட்டர்’ ஓட்டிய என் மீது பாதி குற்றத்தையும், தாறுமாறாக இரவு வேளையில் வீதியைக் கடந்த கிழவியின் பேரில் மீதி குற்றத்தையும் சுமத்தி, குப்பத்து ‘யூதாண்ட்’ அம்மாவாசை சமாதானமாகத் தீர்ப்பு வழங்கினார். அம்மாவாசை’ கிழவியின் முகத்தில் பன்னீர் சோடாவைத் தெளிக்க, மயங்கிக் கிடந்தவள் எழுந்து அமர்ந்து கேனத்தனமாக அம்மாவாசையைப் பார்த்துக் கும்பிடு போட்டாள். சாபம் நீங்கிய கல்லிலிருந்து வெளியான ‘அகல்யை’ ராமனை நமஸ்கரித்த காட்சி என் கண்ணில் தோன்றி மறைந்தது. பெரியவர் அம்மாவாசை தீர்ப்பை எல்லோரும் ஆமோதிக்க, நான் கிழவிக்கு ஐம்பது ரூபாய் ‘காம்ப்ரமைஸாக’ வழங்குவது என தீர்மானம் செய்யப்பட்டது.

அம்மாவாசை என்னை விடுதலை செய்தார். ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று ஸ்கூட்டரை வீட்டுக்குத் தள்ளிக்கொண்டு சென்றேன். மிக்ஸியின் உதவி இல்லாமலேயே, நிகழ்ந்த விபத்தில் வாங்கிய தக்காளிகள் ‘ஜூஸாகி’ ராஜா அண்ணாமலைபுரம் வீதியில் ஓடிக் கொண்டிருந்தது.

வீட்டில் ‘இந்த சனியன் வந்தவேளை சரியில்லை’ என்று குறை கூறியவாறு, மாமியார் மாட்டுப்பொண்ணைப் பார்ப்பது போல ‘மிக்ஸி’யை எனது மனைவி ஆங்காரமாகப் பார்த்தாள்.

சோர்வில் நான் கண்ணயர்ந்தேன். எனது உடம்பு தூங்கியதே தவிர, உள்மனம் இரவு முழுவதும் விழித்துக்கொண்டு விதவிதமாக வந்தவண்ணம் இருந்த கனவுகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. ‘சாம்பிளுக்கு’ அதிகாலையில் வந்த ‘கடைசி கனவுக் காட்சி’….அண்ணாமலைபுரம் பிரதான வீதியின் நடுவே கட்டப்பட்ட அசோகர் ஸ்தூபியில் என்னைக் கயிற்றால் பிணைத்திருந்தார்கள்.

பெரியவர் அம்மாவாசை ‘இனிமேல் ஸ்கூட்டர் ஓட்டுவாயா கிராதகா?’ என்று மாறிமாறிக் கூறிக்கொண்டே என்னைச் சாட்டையால் விளாசுகிறார்.

அப்போது என்னை நோக்கிப் படுவேகமாக ஒரு ஸ்கூட்டர் வருகிறது. என்ன எழவுடா இது! ஸ்கூட்டரை ஓட்டி வருவது அந்தக் ‘கிழவி’ – நல்ல வேளை, ஸ்கூட்டர் என் மீது மோதுவதற்குள் நான் விழித்துக்கொண்டு விட்டேன். காலிங் பெல் சத்தம் காதைப் பிளந்தது. தூக்கக் கலக்கத்தில் சென்று கதவைத் திறந்து வந்தவரைப் பார்த்தேன். (இவ்விடம் இளையராஜாவிடம் உள்ள அத்தனை இசைக்கருவிகளையும் ஒரே சமயத்தில் ஓங்கி வாசித்தால் உண்டாகும் பின்னணி ஒலியைக் கற்பனை செய்து கொள்ளவும்!)

வாசலில் கான்ஸ்டேபிள் கந்தசாமி கையில் வாரண்டோடு நின்று கொண்டிருந்தார். கடலில் நதி கலப்பது போல அவரது பயங்கரமான மீசை, கிருதாவோடு கலந்து இருந்தது.

அதிகப்படியான கஞ்சி போட்டுச் சலவை செய்த அவரது காக்கி அரை டிராயரின் கூரான இஸ்திரி மடிப்பில் பென்சில் சீவலாம்; பழம் நறுக்கலாம். கான்ஸ்டேபிள் கொடுத்த வாரண்டின்படி என் மீது பல குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தது.

கிழவியைத் தாக்கியது – ‘ராங்சைடில்’ ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றது – நிகழ்ந்த விபத்தைப் போலீசுக்குத் தெரிவிக்காமல் மறைத்தது – (ஏதோ ஒரு செக்ஷன்படி இது ஹிட் அண்ட் ரன் குற்றப் பிரிவைச் சேர்ந்ததாம்) ஸ்தலத்திலிருந்து ஸ்கூட்டரை அப்புறப்படுத்தியது – (ஆமாம், பெரிய ஸ்தலம்… காசி – ராமேஸ்வரம்) குற்றப் பட்டியல் நீண்டு சென்றது. பலாத்காரம், கற்பழிப்பு, இவை இரண்டு தவிர மற்ற அனைத்துக் குற்றங்களையும் கான்ஸ்டேபிள் கந்தசாமி என் மீது சுமத்தினார். அம்மாவாசை கூறியபடி கிழவியிடம் செய்து கொண்ட காம்ப்ரமைஸை நான் கூறி முடிக்கவில்லை. அதற்குள் கான்ஸ்டேபிள் கந்தசாமி வீரபாண்டிய கட்டபொம்மன் ஸ்டைலில் பொங்கி எழுந்தார்: ‘யாரைக் கேட்டு செய்தாய் காம்ப்ரமைஸ்? எவனைக் கேட்டு செய்தாய் காம்ப்ரமைஸ்? என்னோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாயா…? அங்கு உள்ள சர்கிள் இன்ஸ்பெக்டரிடம் லைசென்சைக் காட்டினாயா, அல்லது டிராஃபிக் போலீஸ் அலுவலகத்தில் பிரேக் டெஸ்டிங் செய்தாயா….? பின்பு சைதாப்பேட்டை சப்-மாஜிஸ்ட்ரேட்டின் முன்பு மன்னிப்பு கேட்டாயா? நீ என்ன மாமனா, மச்சானா..?’ – வலது கையில் உள்ள பிரம்பினால் தனது இடது கைக்குச் செல்லமாகத் தண்டனை கொடுத்துக்கொண்டே கான்ஸ்டேபிள் கந்தசாமி என்னை ஒரு பில்லா – ரங்காவைப் பார்ப்பது போல பார்த்தார். வருகிற வெள்ளிக்கிழமை சைதாப்பேட்டை சப் – மாஜிஸ்ட்ரேட் முன்பு என்னை ஆஜராகும்படி பணித்துவிட்டு சைக்கிளில் ஏறி மறைந்தார்.

நள்ளிரவில் நான் வீடு திரும்பியவுடன் குப்பத்தில் ஏதோ சூழ்ச்சி நடந்திருக்கிறது. படுபாவி அம்மாவாசை நல்லவன் போல் நடித்து ஐம்பது ரூபாய் கறந்துவிட்டு போலீசுக்கும் தெரிவித்துவிட்டான். வருகிற வெள்ளிக்கிழமை சைதாப்பேட்டை சப்-மாஜிஸ்ட்ரேட் கோர்ட். நான் தொலைந்தேன். கான்ஸ்டேபிள் கந்தசாமிக்குத் தற்சமயம் தெரியாத பின்வரும் குற்றங்கள் கோர்ட்டில் வெட்ட வெளிச்சமாகிவிடும். புதுப்பிக்கப்படாத காலாவதியான டிரைவிங் லைசென்ஸ், கட்டத் தவறிய சாலை வரி, வாயால் ஊதினால் அணைந்துவிடக்கூடிய எனது ஸ்கூட்டரின் ‘ஹெட்-லைட்’, மெக்கானிக் முருகேசன் கொடுத்த தவறான இணைப்பினால் ‘பிரேக் கைப் பிடித்தால் இன்னும் சற்று வேகமாக ஓடக்கூடிய ‘ஸ்கூட்டர்’… மொத்தத்தில் பல்கிவாலா நினைத்தால்கூட என்னை சைதாப்பேட்டை கோர்ட்டின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியாது. அதிகாலையில் வழக்கமாக எனது வீட்டுத் தோட்டத்திலிருந்து பூக்கள் திருடும் பக்கத்து தெரு மாதவாச்சாரி, கான்ஸ்டேபிள் வந்து போனதைக் காலனி முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கூறிவிட்டு வந்தார். எல்லோரும் என்னை சிறைக்குச் சென்று செக்கிழுக்கப் போகும் செம்மலாக பாவித்துப் பரிதாபமாகப் பார்த்தார்கள்.

வெள்ளிக்கிழமைக்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தன. நான்கு நாட்களும் எனக்கு நரக வேதனை. ஆபீஸ் நண்பர்கள், உற்றார் உறவினர் துக்கம் விசாரிக்க வந்தவண்ணம் இருந்தனர். ஜன்னல் கம்பிகள், என்னிடம் உள்ள கட்டம் போட்ட சொக்காய்கள், ‘வடாம் வத்தல்’ செய்வதற்காக எனது மனைவி தயாரித்து வைத்திருந்த ‘கூழ்’ – வரப்போகும் சிறைவாசத்தை எனக்கு சிம்பாலிக்காகச் சுட்டிக்காட்டின.

வெள்ளிக்கிழமை சைதாப்பேட்டை கோர்ட் வராந்தாவில் நான், எனது மனைவி, உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் பெஞ்சில் சோகமாக அமர்ந்திருந்தோம்.

எங்களுக்கு எதிர்ச் சாரியில் போடப்பட்டிருந்த பெஞ்சில் கிழவி, நயவஞ்சகன் அம்மாவாசை மற்றும் குப்பத்தைச் சேர்ந்த கௌரவர்கள். மாஜிஸ்ட்ரேட்டின் அனுதாபத்தைப் பெறுவதற்காகக் கிழவியை பாண்டேஜால் சுற்றிப் பல இடங்களில் பொய்யாக ப்ளாஸ்திரி இட்டு பார்சல் போல செட் அப் செய்திருந்தார்கள்.

கோர்ட் டாவாலி முன்று முறை என்னைக் கூவி அழைத்தான். கூண்டில் போய் நின்று கொண்டேன்.

பெஞ்ச் கிளார்க் என் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை வாசித்துவிட்டு, ‘நீ ஏதேனும் மறுப்புக்கூற விரும்புகிறாயா?’ என்பது போல என்னைப் பார்த்தார்.

நண்பர்கள் கூறியது நினைவுக்கு வந்தது. செய்த தவறை ஒப்புக் கொண்டால் அபராதத் தொகையோடு தப்பலாம். மாஜிஸ்ட்ரேட்டிடம் மறுத்துப் பேசினால் உங்களை அவர் நாடு கடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

குற்றத்தை ஒப்புக்கொண்டு தலை குனிந்தேன். கிழவியின் வைத்தியச் செலவுக்காக இருநூறு ரூபாய்களும், செய்த குற்றத்துக்கு தண்டனையாக நூறு ரூபாய் அபராதமும் எனக்கு தீர்ப்பாக வழங்கப்பட்டது

அம்மாவாசை வெற்றிக் களிப்பில் லேசாகச் சிரித்தான். நான் கொடுக்கப் போகும் இருநூறு ரூபாய் கிழவிக்கா போகப் போகிறது? அம்மாவாசை அந்த வாரம் சாராயத்தில் குளிக்கப் போகிறான். இப்பொழுதெல்லாம் நான் ஸ்கூட்டரில் செல்லும் போது சைக்கிள்கள் என்னை ஓவர் – டேக் செய்தால் பொறாமைப் படுவதில்லை. நான் ஸ்கூட்டர் ஓட்டுவதைப் பார்த்தால் ‘பெடல்’ செய்து கொண்டு போவது போல் இருக்கும்.

ஒன்-வே டிராஃபிக்கில் உள்ள வீதிகளில் எனது மாமனாரே குடியிருந்தாலும் அந்த வீதிகளில் நுழையமாட்டேன். ஸ்கூட்டரில் நான் செல்லும் போது வயதான கிழவிகள் எதிரே வந்தால் எனக்கு இப்பொழுதெல்லாம் கவலையேயில்லை. எனது ஸ்கூட்டர் தானாகவே நின்றுவிடும்.

– ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை!, விகடன் பிரசுரம்

கிரேசி மோகன் (16 அக்டோபர் 1952 - 10 சூன் 2019)[3] தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றியவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்தார்.[4] அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு…மேலும் படிக்க...

1 thought on “நில் கவனி-கிழவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *