“வியாக்கிழம அதுவுமா என்ன எழவு இது” என்று கடுப்படைந்த அண்ணாச்சி, வியாக்கிழமைக்கும் இழவுக்கும் சம்மந்தம் இல்லை என்று உணர்ந்தவராக, இன்னும் கடுப்படைந்தார். காலில் மாட்டியிருந்த பழைய தோல் செருப்பை வீசி எறிந்த வேகத்தில் அது தூரப்போய் விழுந்தது. நேற்று மாலை இன்னுமொரு மேல்தையல் போட வேண்டியிருந்து மறந்தது, இன்னும் காரம் ஏற்றியது. காற்றில் படபடத்துக்கொண்டிருந்த ஆஃபீஸ் வாசல் திரையை விலக்கி உள்ளே போய் கைப்பையை மேஜை மேலே வீசி எறிந்தார். வேலு “என்னங்க அண்ணாச்சி” என்பது போல பார்த்துவிட்டு, மீண்டும் தினகரனில் மூழ்கினான். நாற்காலியில் அமர்ந்து உச்சிமண்டையை ரெண்டு தடவு தடவி, செல்ஃபோனை எடுத்து வேலுவிடம் நீட்டினார். “டேய், காம்ப்ளெக்ஸ் முதலாளிக்கு ஃபோன போடு”. “ஒரு ஃபோனலைன் போடத்தெரில” என்றவாறு நக்கலாக வேலு சிரித்தபடி கை நீட்ட, “சிரிக்காம போடுலே, அடிச்சு மொவத்த திருப்பிருவேன்” என்று அண்ணாச்சி கர்ஜிக்க, வேலு மூஞ்சில் காற்று புஸ்ஸென போனது. அந்தப்பக்கம் காம்ப்ளெக்ஸ் முதலாளி “அல்லோ” என்று இழுத்ததும், அண்ணாச்சி வெடிக்க ஆரம்பித்தார். சுமார் பதினைந்து நிமிடங்கள் பேசியதும் சுருதி இருங்க, “அதில்லங்க” என்று அமைதியாகி, “சரி” என்று லைனை கட் செய்தார். வேலு எதாவது கேட்டால் கத்துவாரோ என்று நோட்டம் விட்டு, மீண்டும் தினகரனில் மூழ்கினான். அண்ணாச்சி பெருமூச்சு சிறுமூச்சு எல்லாம் விட்டுவிட்டு, எழுந்து திரையை விலக்கி, “சுபயோகம் திருமண வைபோகம்” என்ற தன் ஆஃபீஸ் போர்டு பக்கத்தில் புதிதாக மினுமினுத்த “மிஸ்டர் ரகுபதி, லாயர், விவாகரத்து ஸ்பெஷலிஸ்ட்” என்ற போர்டை வெறுப்புடன் பார்த்தார்.”அத்து விடறதுல என்னலே பெரிய ஸ்பெஷலிஸ்ட்டு வேண்டி கிடக்கு. வக்கீலு வறார் வக்கீல் வறார்னு நம்மள ஏமாத்திட்டாய்ங்கவே. அத்து விடறவன்னு சொல்லவே இல்லியே”.
வியாக்கிழமை முழுக்க சிறு அரவம் கேட்டாலும் வேலுவை வெளியே அனுப்பி வெளியே பார்க்கச் சொன்னவர், நாள் முழுக்க தன் புதிய எதிரியின் முகத்தை பார்க்காமல் உச்ச கட்ட வெறுப்பில் வீட்டுக்குப் போக, மனைவி ஏகம்மை அஃது இஃது என்றில்லாமல் எல்லாவற்றையும் பற்றி புலம்பிக்கொண்டிருக்க, அடக்கிக்கொண்டிருந்த அண்ணாச்சி குபீரென வெடித்து விஷயத்தை உடைத்தார். அடுத்த நாள் காலை ஷேர் ஆட்டோவில் கடை இருக்கும் ரோட்டில் இறங்கிய ஏகம்மை, ஆஃபீஸ் போர்டுகளை பதைதைக்க நிமிர்ந்து பார்த்துவிட்டு, வெள்ளிக்கிழமை அதுவுமாக வையக்கூடாதென “கட்டையில போறவன்” என்று பல்லைக்கடித்து விட்டு, ரெட்டை ஜடை போட்ட தன் மகளை இடித்துக்கொண்டு வீடு நோக்கி நடக்கத் தொடங்கினார். மேலிருந்து இக்காட்சியை கண்டு மேலும் வருந்திக்கொண்டிருந்த அண்ணாச்சியின் கண்ணில் வலது தோளில் பையை மாட்டிக்கொண்டு குனிந்து குனிந்து ஒரு கூலிங் க்ளாஸ் ஆசாமி காமிரா வழியாக அண்ணாச்சியின் முதல் மாடி கடையை படம் பிடித்துக்கொண்டிருப்பது பட, கிட்டதட்ட ஓடியே கீழிறங்கினார். கூலிங்கிளாஸை தோளை தட்டி விரட்டியடித்ததில் காம்பளெக்ஸ் முழுக்க விஷயம் அரங்கேற, திருமணத்தின் போது அருந்ததி பார்த்த கதையாக மொத்த காம்ப்ளெக்ஸ் ஆட்களும் மாறி மாறி வந்து போர்டை பார்க்கத்துவங்கினர்.
உம்மென்று மூஞ்சை வைத்துக்கொண்ட அண்ணாச்சி ஊதுவத்தி ஏற்றி சாமி கும்பிட்டு, ஊதுவத்தியோடு நல்லதை வேண்டிக்கொண்டு வெளியே வர, குள்ளமாக குண்டாக அழுமூஞ்சியாக ஒரு பெண் வாசலில் நின்றுக்கொண்டிருந்தது. “என்ன” என்று கேட்காமல் அவளையே அண்ணாச்சி முறைத்துப் பார்க்க, “என் பேரு அலமேலு” என்று சொல்லிவிட்டு சேனல் மாற்றமுடியாத சீரியல் போல குலுங்கி குலுங்கி அழத்தொடங்கியது. ஒரு வழியாக மூக்கை உறிஞ்சி “இங்க வக்கீலு..” என்று கேட்க, அண்ணாச்சி சடக்கென ஆஃபீஸ் உள்ளே வந்து அமர்ந்துகொண்டார். சரியாக பத்தரை மணிக்கு, பின்னே ஒரு சிறிய கூட்டத்தோடு படியேறி வந்து “நான் தான் வக்கீல் ரகுபதி” என்று வில்லன் சிரிப்போடு வெளியே ஸ்டூலில் அமர்ந்திருந்த வேலுவைப் பார்த்து கும்பிடு போட, ஹீரோ இண்ட்ரோ கணக்காக வேலு உணர்ச்சி வசப்பட்டு திரையை விலக்கி அண்ணாச்சியைப் பார்த்து, “வக்கீலு வந்தாச்சு” என்று கூவினான். அண்ணாச்சி வானம் பத்திரமாக இருக்கிறதா என்று பார்ப்பவர் போல அடிக்கடி வெளியே சென்று திரிவதும் உள்ளே வருவதுமாக பொழுதை கழித்தார்.
சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் வக்கீலு லீவு என்று ஒழிந்து போக, அண்ணாச்சி பெருமூச்சு விட்டார். கடையை இன்னும் பிரபலப்படுத்துவது, வேலுவுக்கு புதுசட்டை வாங்கித் தருவது, போர்டை பெயிண்ட் அடித்து மாட்டுவது என்று சம்மந்தம் சம்மந்தமில்லாத முடிவுகளை எடுத்தார். கீழே இருந்து மேலேறி வரும் படிகள் அண்ணாச்சியின் ஆஃபீஸையும் வக்கீலின் ஆஃபீஸையும் ஒரு பாதியிலும் செல்வத்தின் முடிதிருத்தத்தின் கடையை ஒரு பாதியிலும் பிரித்திருந்தது. செல்வத்திடம் கடையை இடம் மாற்றிக் கொள்ள கேட்க முடியாது – ஆறு மாதங்களுக்கு முன்னர் செல்வத்தின் கடைக்கு செல்லும் கேபிள் வயர் அண்ணாச்சியின் கடைக்கு வருபவரை ஒரு நாள் ஹை ஜம்ப் செய்ய வைக்க, அண்ணாச்சி புதுத்துணிக்கடையை திறந்த வைக்கும் அமைச்சர் போல அதை கத்தரித்து விட்டிருந்தார். பேச்சு வழக்கு அன்றோடு அறுந்தது.
அண்ணாச்சி முன்றெப்போதுமில்லாத கதையாக, தன்னைக் காண வரும் மஞ்சப்பை பெரியவர்களையும் பெரிய குங்குமப்பொட்டு அம்மணிகளையும் விழுந்து விழுந்து கவனிக்கத் தொடங்கினார். பக்கத்து ஆஃபீஸிலிருந்து அவ்வப்போது அழுகை சத்தம், ஆவேசமான விவாக ரத்து வசனங்கள், கெஞ்சல்கள், கொஞ்சல்கள்(!) எல்லாம் மெகா சீரியல் பிண்ணனி இசை போல இரைச்சலாக கேட்டது. அண்ணாச்சி இரண்டு ஜாதகங்களை கையில் பிடித்துக்கொண்டு “ஆயிரம் காலத்து பயிரு இந்த சம்மந்தம்” என்று சொல்ல நினைக்கும் போது, பக்கத்தில் “எனக்கு விடுதலை வாங்கித்தாங்கய்யா” என்ற அலறல்கள் கேட்கத்துவங்கின. இரும்புச்சட்டியால் நெற்றில் அடி வாங்கிய கணவன்மார்கள், தாடை சிவந்த மனைவிமார்கள், வெறி வெறி என வெறித்துப் பார்க்கும் இளம்பெண்கள், கண்கள் சிவந்த ஆண்கள் எல்லாம் வரிசை கட்டி வந்தார்கள். வக்கீலை சந்திக்க காத்திருக்கும் க்யூ வளைந்து கலைந்து அண்ணாச்சி கடை வாசலில் செருப்பை விட்டு, சில பல சத்தமான வார்த்தைகளையும் விட, அண்ணாச்சிக்கு அபசகுணம் அன்றாடம் இலவசமாக கிடைத்தது. வக்கீலு எல்லாம் செய்துவிட்டு நடிக்கும் வில்லன் போல, நன்றாகத்தான் பேசினார்.
பின்னொரு நன்னாளில் சிகப்பு சேலையும் நீல ஜாக்கெட்டும் தலையில் கனகாம்பரம் பூவுமாக பெண்ணொன்று வக்கீல் ஆஃபீஸ் வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டும், உலாத்திக்கொண்டும் இருந்தது. “ஏம்மா ராதா” என்று வக்கீலின் கர்ண் கொடூரமான குரல் கூப்பிட இரண்டு முறை உள்ளே ஓடியது. வெளியே அமர்ந்திருந்த வேலுவும் அவ்வப்போது வெளிய வந்த அண்ணாச்சியும் அப்பெண்ணை நோட்டம் விட்டு, தத்தம் மூஞ்சைப் பார்த்துக்கொண்டு குழம்ப, அண்ணாச்சி அறிவாளித்தனமாக “ஜூனியரா இருக்கும்” என்றார். ஒரு நாள் காலை அந்தப் பெண் “பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா, பூங்காத்தே பிடிச்சிருக்கா” என்றெல்லாம் சன்னமாக பாடிக்கொண்டிருக்க, அண்ணாச்சி வேலுவைப் பார்த்து ‘இம்’ என்று தலையசைத்தார். வேலு “ஏய் பொண்ணே” என்றழைக்க அந்தப்பெண் செருப்பு சரக் சரக் என வந்து நின்றது. அண்ணாச்சி காதை வாசல் நோக்கி பாய்ச்சிவிட்டு தலையை குனிந்து ஜாதகத்தை நோண்டிக்கொண்டிருந்தார். “நீயாரு வக்கீலுக்கு ஜூனியரா?” என்று வேலு கேட்க, அந்தப்பெண் வேலுவையும் அண்ணாச்சியையும் ஸ்லோ மோஷனில் பார்த்துவிட்டு “அப்படின்னா?” என்று கேட்டு சிக்ஸர் அடித்தது. “அதாவது..” என்று வேலு நீட்ட, “லேய், இதுக்கு மேல வேற கேக்கணுமா” என்று அண்ணாச்சி அதட்டினார். அந்தப்பெண் மீண்டும் இருவரையும் பார்த்துவிட்டு, “நான் அவருக்கு ஒத்தாசயா அஸிஸ்டெண்ட்டு வேல செய்யறேன்” என்று சொன்னது. வேலு “ஐ ஆம் ஆல்ஸோ அஸிஸ்டெண்ட். க்ளாட் டூ மீட் யு” என்று சொல்ல, அந்தப்பெண் கையின் நடு மூன்று விரல்களை ஒருமாதிரி வளைத்து வாயின் மேல் லேசாக வைத்து “ம்ஹூக்கும்” என்று மிக லேசாக குலுங்கியது. அண்ணாச்சி நிமிர்ந்து பார்த்து “என்னடே” என்று கேட்க, வேலு முகம் பிரகாசமாக “பொண்ணு சிரிச்சுச்சுண்ணே” என்றான்.
ராதாப்பொண்ணு பின்னர் காலையிலும் மாலையிலும் அங்கே சுற்றத்தொடங்கியது. அவ்வப்போது சிரித்தது. பாடியது. ஊதுவத்தி கடன் கேட்டது. ஒரு நாள் அண்ணாச்சி முன்னிலையிலேயே வேலு ஒரு முழுப்பாக்கெட்டை “வச்சுக்கோ” என்று திணிக்க, அண்ணாச்சி அவள் போனதும் “என்னடே வாரி வழங்குறே?” என்றார். வேலு ஒரு நொடி விழித்து விட்டு கண்டபடி நெளிய, அண்ணாச்சி அடிவயிற்றில் புரட்டியது.
“அறுபதே நாள்ல எங்கேனு தேட ஆரம்பிச்சிடுவீங்க” விளம்பரங்கள் போல, (அப்படி எந்த விளம்பரமும் இல்லை, சும்மா சொல்கிறேன்), அண்ணாச்சி ஒரு நாள் காலை ஆஃபீஸ் வந்து, பூட்டிக்கிடக்கும் கதவை இன்னொரு சாவி போட்டுத் திறந்து வைத்து விட்டு வேலுவை தேட ஆரம்பித்தார். மொபைலில் அவன் நம்பரை தேடிப் பிடித்து அழைக்க முயன்று, அது மூஞ்சை சுருக்கி கொண்டு அணைந்து போனது. கொஞ்ச நேரம் ஈ ஓட்டிவிட்டு அண்ணாச்சி வெளியே வர, வக்கீலுடன் வற்றிப்போன ஒரு முதிய தம்பதி நின்றுகொண்டிருந்தார்கள். அண்ணாச்சியைப் பார்த்து வக்கீலு அதிர அதிர சிரித்துவிட்டு, “என்ன அண்ணாச்சி, ராதாவும் வேலுவும் ஓடிப்போய்ட்டாங்களாமே” என்றாரே பார்க்கலாம். அண்ணாச்சிக்கு குப்பென வேர்த்துவிட்டது. வக்கீலு அத்தம்பதியிடம் ஏதோ கிசுகிசுக்க, அந்தம்மா ரொம்பப் பிரயத்தனப்பட்டு அழுகையும் கோவத்தையும் ஒன்றாக கொண்டு வர முற்பட்டு, சரியாக நடிக்கத் தெரியாத சைட் ஆர்டிஸ்ட்டு போல சொதப்பியது. (“இப்படி பண்ணிட்டீங்களே?”). அந்த ஆசாமியோ தூக்கம் இன்னும் சரியாக கலையாதவன் போல விழித்து விட்டு, திடீரென கைப்பிடி சுவர் தாண்டிப் பார்த்து காறு காறு என காறித்துப்பி தொண்டையை சரிசெய்து விட்டுக்கொண்டு, மறுபடி அதே இடத்தில் வந்து நின்றுகொண்டார். வக்கீலு மீண்டும் ஒரு முறை அதிர அதிர சிரித்துவிட்டு நகர்ந்தார்.
ஆஃபீஸை பூட்டிக்கொண்டு கிளம்பிய அண்ணாச்சி, மொபைலை எடுத்து ஏகம்மையின் நம்பரை கீழே கடை வைத்திருந்த சங்கரிடம் அழைக்கச் சொல்லி ஐந்தாயிரம் ரூபாய் எடுத்து வைக்க சொன்னார், காரணம் கேட்டதற்கு, தான் வேலுவுக்கு திருமணம் செய்து வைக்கப்போவதாக அறிவித்தார்.
வீட்டுக்குப் போய் காசை எடுத்துக்கொண்டு மீண்டும் இன்னொருத்தரின் உதவியுடன் வேலுவை அழைத்தார். (ஏகம்மை ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தாள்). நான்கு முறை எடுக்காத வேலு, ஐந்தாம் முறை எடுத்து “அண்ணாச்சி” என்று பதறினான். “எங்கடே இருக்கே?” என்று கேட்டதும் தேம்பி தேம்பி அழத் தொடங்கினான். “என்ன பண்றதுன்னே புரில அண்ணாச்சி, பஸ் பஸ்ஸா ஏறி இறங்கி சுத்திட்டிருக்கம்” என்றழுதான். “அடேய், உனக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன். சொல்ற கோயிலுக்கு சொல்ற நேரத்துக்கு வா” என்று உத்தரவிட்டு, பெருமிதமாக மீண்டும் கடைக்கு சென்றார். ஆள் அனுப்பி வேலுவின் அம்மாவை அழைத்து வரச் சொல்லி, “உங்கப்பையன் ராவுக்கு வீட்டுக்கு வர்லியா” என்று ஆரம்பித்து விஷயம் எல்லாம் சொன்னார். அவனுடைய திருமணத்தை தானே முடித்து வைக்கிறேன் என்று சொல்லி முடித்த வரை அந்தக்கிழவி “அப்படியா?” என்பது போல வாயைப் பிளந்து கொண்டு கேட்டுக்கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்தில் சுபயோகம் திருமணம் மையத்தின் தலைவர் ஜாதகம் பார்க்காமல் கல்யாணம் செய்துவிட்டு, “முருகா” என்று வேண்டிக்கொண்டார்.
வக்கீலு ஒன்றும் அசந்தது போல தெரியவில்லை. விஷயம் கேள்விப்பட்டதும் ஆஃபீஸ் வாசலில் வந்து “ராதாப்பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சிட்டீங்க போல” என்று அதிர அதிர சிரித்தார். ஸ்வீட் வேறு வாங்கித் தந்தார். “இந்தாளு வில்லனா இருக்க லாயக்கே இல்ல” என்று நினைத்துகொண்டார். ராதாப்பொண்ணும் ராதாப்பொண்ணின் அம்மாவும் கட்டிக்கொண்டு ரொம்ப நேரம் அழுதார்கள்.
வேலுவுக்கு மதிய நேரத்தில் நான்கு மணி நேரம் வேறெங்காவது வேலை செய்ய அனுமதி கொடுத்து, சம்பளத்தில் நூறு ரூபாய் கூட்டிக் கொடுத்தார். (ஏகம்மை முணுமுணுத்துக்கொண்டிருந்தார்). கல்யாணம் செஞ்சு வெச்சு, குடும்பம் செழிக்க வழியும் செஞ்சு, அந்த வக்கீலு மூஞ்சில கரியப் பூசி…
இரண்டாவது மாதம் வேலு ஆஃபீஸைத் திறக்காமல் வக்கீலு ஆஃபீஸின் வாசலில் அமர்ந்துகொண்டிருந்தான். அண்ணாச்சி மேலேறி வந்து “என்னடா, நேரமாதுவுல, ஆபீஸ தெறடா” என்று தோளைத் தொட்டதும் “ஸ்ஸ்ஸ்ஸ்” என்று பாம்பாக நெளிந்தான். கழுத்து, பின் முதுகெல்லாம் சிகப்புத் தடயங்கள். “புதுக்குக்கர எடுத்து அடிச்சிருச்சு அண்ணாச்சி” என்று குலுங்கினான். ராதாப்பொண்ணு கொஞ்ச நேரத்தில் வர, வக்கீலு ஆஃபீஸில் ஒரே பஞ்சாயத்து. ராதாப்பொண்ணின் குரல் இவ்வளவு அதிகமா என்று அதிர்ந்த அண்ணாச்சி ஆஃபீஸுக்குள்ளேயே அமர்ந்து சுவற்றை வெறித்துகொண்டிருந்தார்.
மூன்று மணி நேரத்திற்குப் பிறகு எல்லோருமாக வெளியே வந்து அண்ணாச்சிக்கு குரல் கொடுக்க, அவர் தயங்கித் தயங்கி போய் நின்றார். வக்கீலு தன் இரண்டு கைகளால் இரண்டு பேரையும் பக்கவாட்டில் பிடித்துக்கொண்டு நின்று, “எல்லாஞ் சமாதானம் ஆச்சு. இனிமே அடிச்சிக்கிட்டாலும் இங்க வரமாட்டாங்க” என்றவர், “என்ன விரோதியா பாக்காதீங்க. என் ராதாப்பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வெச்சதுக்கு ஒரு பரிசு நாளைக்கு காலைல அனுப்புறேன்” என்று அதிர அதிரச் சிரித்தார். இரவெல்லாம் புரண்டு புரண்டு படுத்த அண்ணாச்சி, காலையில் ஆஃபீஸைத் திறந்து காத்திருந்தார். பொறுத்து பொறுத்து வெறுத்த அண்ணாச்சி, வெளியே எழுந்த வர, அங்கே அதே கறுப்பான குண்டான அழுமூஞ்சிப் பெண் சிரித்துக்கொண்டு நின்றது. “என் பேரு அலமேலு” என்று நாணிக் கோணியப் பின், “எனக்கு ஒரு மாப்பிள பாக்கணும்” என்றது.
ஒரு வாரத்தில் அட்டகாசமான அலங்காரங்களுடன் அண்ணாச்சியின் ஆபீஸ் ஜொலி ஜொலிக்க, ஏகம்மை கடவுளை விழுந்து விழுந்து தொழ, ஆஃபீஸின் போர்டில் இருந்த “கிரக நிலை” என்று துவங்கிய ஒரு வரியின் மேல் அடர்ந்த நீல நிற பெயிண்ட் அடித்து, கொட்டை கொட்டையாக “மறுமணங்கள் செய்து வைக்கப்படும்” என்று எழுதி வைத்திருந்தது. வக்கீலு வந்ததும் அண்ணாச்சியும் ஏகம்மையும் சினேகத்துடன் சிரிக்க, ஏகம்மை வக்கீலுக்கு இன்றொரு நாள் விருந்து சாப்பாடு அனுப்புவதாகச் சொல்ல, வக்கீலு அதிர அதிரச் சிரிக்க, ஒரே குதூகலம் பீறிட்டது! அந்த வார மாம்பலம் டைம்ஸில் அந்த கூலிங் க்ளாஸ் பார்ட்டி இரண்டு போர்ட்டுகளையும் சேர்த்து எடுத்த புகைப்படம் “two sides of a coin” என்ற தலைப்பில் வெளியாகி நூறு ரூபாய் சன்மானமும் பெற்றிருந்தது!
– பெப்ரவரி 2010