நாலு சுவத்துக்குள்ளே நடக்குதய்யா நாடகம்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 31, 2021
பார்வையிட்டோர்: 10,446 
 
 

“சவிதா..மேல என்ன சத்தம்..உலக்கையால் யாரோ இடிக்கிற மாதிரி..!

இந்த காலத்தில யாராவது உலக்கையில அரிசி குத்துவாங்களா…?

தலவலி மண்டைய பொளக்குது…”

“அய்யோ..அப்பா..அப்பா..! மேல என்னோடே ஃப்ரண்ட் நிமிஷா வீடுன்னு தெரியாதா..?

அவ ஆன்லைன்ல டான்ஸ் கத்துக்கறாப்பா.!”

“ஒரு நாள் பூராவுமா…? காலைல ஆரம்பிச்சது….!”

“அதுக்கப்புறம் அவ சொல்லித்தராளே..இப்ப அவளுக்கு ஏக டிமாண்ட்..தெரியுமா..?

இருபது ஸ்டூடண்டஸ்… பணம் கூரையைப் பிச்சிட்டு கொட்டுது….”

இங்க நம்ப கூர பிஞ்சிடும் போலயே…நல்லா வந்துது லாக்டவுன்….”

ஒரு வழியாய் ஒரு மணிக்கு சத்தம் நின்றது…

“அம்மாடி..இனிமே கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கலாம்….!”

பத்து நிமிஷம் கூட போயிருக்காது…

‘ டொய்ங்..டொய்ங்..என்று சுருதிப்பெட்டி…

“இது என்ன சத்தம் சவி..?”

“என்னப்பா…நிமிஷாவோட அம்மா மதுரம் மாமிதான்…நல்லா பாடுவாங்களேப்பா…. கிளாஸ் எடுப்பாங்களே !.

மறந்துட்டீங்களா?.அவுங்களும் ஆன்லைன்ல பாட்டு சொல்லித்தராங்க…இரண்டு மணியில இருந்து அஞ்சு மணி வரைக்கும்…!”

“சரியாகப் போச்சு..இனிமே என் தூக்கம் அம்பேல்…!”

ஆனால் உண்மையாகவே மதுரம் மாமிக்கு குரலும் மதுரம்தான்…

ரேவதி ராகத்தில் சம்போ..சிவசம்போ..’ என்று குயில் குரலில் பாட்டு சத்தம்..

கேட்டுக் கொண்டே கொஞ்சம் கண்ணசந்து விட்டேன் போலிருக்கு…!

திடீரென்று காக்கா கத்துவது போல் சத்தம்..

“சவி..சவி..வீட்டுக்குள்ள காக்கா வந்திடிச்சு போல இருக்கும்மா..பாரு..!”

“அப்பா.. ஆனாலும் உனக்கு கொழுப்பு அதிகம்தான்.. அம்மாதான் பாடறாங்க..

மாமி கிட்ட ஆன்லைன்ல கத்துக்க ஆரம்பிச்சிருக்காங்க…!”

“நல்ல கூத்து தான்..மாமி அஞ்சு கட்டையில பாடுவாங்க… அம்மாவுக்கு நாலு ஏணி வச்சாலும் இரண்டு கட்டைக்கு மேல ஏற முடியாதே…

ஒய் திஸ் கொலவெறி கொலவெறிடி….?”

“பாவம்ப்பா….விட்டிடுங்க…
அவுங்களுக்கும் உள்ளயே இருந்து போரடிக்குதுப்பா….!

“ஏங்க..இப்போ எம்பாட்ட கேட்டீங்களா…?”

“எம்பாட்டே பெரிய பாட்டா இருக்கு..இதில உம்பாட்டு வேறயா…?”

“என்ன முணுமுணுக்கிறீங்க…?”

“நீதான் தினமும் பாடறியே… கேட்டுகிட்டே தான் இருக்கேன்…

ஆமா..உன்ன ஒண்ணு கேக்கணும்னு இருந்தேன்..மாமி அஞ்சு கட்டையில பாடறவுங்க..நீ எம்பி எம்பி குதிச்சாலும் இரண்டு கட்டைக்கு மேல போகாது…

ஒண்ணு மாமி இறங்கி வரணும்.. இல்லைனா நீ மேல ஏறணும்… எப்படி பேலன்ஸ் பண்றீங்க…?”

“உங்களுக்கெல்லாம் தான் என் அருமை தெரியல..மாமி என்ன சொல்றாங்க தெரியுமா…?

பட்டம்மா மாதிரியே பாடறேனாம்..இந்த குரல் ரொம்ப ஆபூர்வமாம்…!”

“எந்த பட்டம்மா..? நம்ம வீட்டுக்கு பூ கொண்டு வருவாளே….அவளா…? பாவம்..

‘ பூ..பூ..ன்னு கத்தியே அவ குரல் கட்டையா போயிருக்கும்…!”

“இந்த கிண்டல் தானே வேண்டாங்கிறது…எதுக்கோ தெரியுமா கற்பூர வாசனைன்னு சொல்லுவாங்களே.

D.K.பட்டம்மாங்க…!”

“ஏன் கழுதைன்னே சொல்லேன்… நான் ஒண்ணும் கோவிக்க மாட்டேன்….!”

“அப்பா.. நீங்க அம்மாவ காக்கான்னீங்க… அம்மா பதிலுக்கு உங்கள கழுதன்னு சொல்றாங்க போல…”

“இருக்கட்டுமே.. இரண்டுக்கும் பாட்டு சுத்தமா வராது… நான் ஒத்துக்க தயார்…”

ஆமா கமல் என்ன பண்ணிட்டிருக்கான்…?

கமல்…என்னடா..மேல ஏறி நோண்டிட்டிருக்க….?”

“அப்பா..அம்மா.. என்னோடே கிட்டார யாராவது பாத்தீங்களா…?”

“ஏண்டா.. கிடார்..கிடார்னு.. பிடுங்கி எடுத்து வாங்கினது தான் மிச்சம்..

நாலு கிளாஸ் போயிருப்பியா…

அப்படியே மூலைல எத்தன வருஷமா தூங்கிட்டிருந்துது…

அம்மா பழைய பேப்பர்காரன் கிட்ட தூக்கி போட்ட மாதிரி நியாபகம்….!”

“ஓ…நோ.. “அம்மா…..!”

பெரிதாகக் கத்தினான்…

“என்ன நடக்குது இந்த வீட்ல..யாரு என்ன கேக்காமா என் கிட்டார தொட்டது…?”

கல்யாணி பிரத்யஷமானாள்…

“அடேய்… கமல்..அப்பா பேச்சப் போய் ஸீரியஸா எடுத்துகிட்டு…மேலதான் எங்கியோ எடுத்து வச்சேன்..நல்லா தேடிப்பாரு….!”

“ஆஹா… தேடினேன்..வந்தது…!”

ஒரு வழியாக கிட்டாரைக் கண்டுபிடித்து தூசி தட்ட ஆரம்பித்தான்..

“நல்ல வேளை.. ஒரு ஸ்டிரிங்தான் போயிருக்கு..எக்ஸ்ட்ரா ஸ்டிரிங்கும் இருக்கு..”

கிட்டார் தந்தியை மாற்ற ஆரம்பித்தான்…!

“ஆமா..இப்போ எதுக்கு கிட்டார்..? நீயும் ஆன்லைன்ல கத்துக்க போறியா…?”

கிட்டாரை அப்படியே வைத்துவிட்டு ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டான்..

“டாடின்னா டாடி தான்…யூ ஆர் ரைட் ! எப்படி கண்டுபிடிச்சீங்க டாடி…?”

“பெரிய கம்ப சூத்திரம்…? ஒண்ணு கத்துக்குடுக்கணும்….

இல்லைனா கத்துக்கணும்…

உனக்கு இருக்கிற ஞானத்துக்கு கத்துக்குடுக்கவா முடியும்..?”

“அப்பா..ப்ளீஸ் ஸ்டாப்…என்னோட அரும இன்னும் இரண்டு வருஷத்தில தான் உங்க எல்லோருக்கும் தெரியும்..

என்னோடே ஃப்ரண்ட்ஸ் லாரென்ஸும்..அஸீஸூம் எனக்காகக் தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க..

இது மாதிரி ஒரு ‘ பாண்ட் ‘ இந்தியாவிலேயே இருந்ததில்லைன்னு சொல்லும்போது தெரியும்…!”

“அது என்னவோ ரொம்ப கரெக்ட்..!”

இப்போது எங்கள் வீட்டிலிருந்து காக்கா..கழுதையுடன் பூனையின் குரலும் உங்களுக்கு கேட்டிருக்குமே…..!!

என்னுடைய பெரிய பையன் ஈஸ்வர்.. மருமகள் சுனிதா கதையே வேற..

இரண்டு பேருக்கும் MNC யில் பெரிய வேலை….

ஈஸ்வரன் முகத்தை எப்போதாவதுதான் தரிசிக்க முடியும் …..!

ஏதோ ஒரு விமானத்தில் பறந்தபடி இருப்பான்.இப்போ வேற வழியில்லையே…!

அவனும் சுனிதாவும் காலை எட்டு மணிக்கு அறைக்கதவை சாத்தினால் ஒரு மணிக்குத்தான் கதவு திறக்கும்..! காட்சி கிடைக்கும்…!

ஈஸ்வருக்கு இப்பவும் விமானத்தில் பறப்பது போல நினைப்பு..!..அதனால் ரூமில் ஒரு பெல் .. கிச்சனுக்கு கனெக்க்ஷன்..

சத்தம் கேட்டதும்தான் தாமதம்..
ஏர்ஹோஸ்டஸ் தோத்தாள்..!

கையில் ஜூஸோ..காப்பியோ..
பழங்களோ.. எடுத்துக்கொண்டு ஓடி ஓடி சேவை செய்வாள் அம்மாக்காரி…

சுனிதா பாவம்..கருமமே கண்ணாய் தானுண்டு.. தன் வேலையுண்டு டைப்..பேத்தி பூஜாவை சுத்தமாய் எங்கள் பொறுப்பில் விட்டு விட்டாள்..

சரியாக எட்டு மணிக்கு பூஜா என் மடியில் வந்து உட்காருவாள்..ஐந்து வயது தங்கக் கட்டி.!!

“தாத்தா.. இன்னும் ‘ five minutes ‘ தான் இருக்கு.. எங்க டீச்சர் நிறைய வொர்க் குடுத்திருக்காங்க தாத்தா..இப்போ கிளாஸ் ஆரம்பிச்சிடும்..!

இன்னைக்கு ‘ syllables..’”

பூஜாக்குட்டிக்கு தனியா ஒரு ‘ IPAD’..அவளுக்கும் ஆன்லைன் கிளாஸ்…!

“தாத்தா..’ Butterfly…’ எத்தனை ‘ syllable..?

“சிலபஸ்ஸா…?”

“அய்யோ தாத்தா … ‘சிலபல்..’ தாத்தா…”

“நாங்க படிக்கும்போது இதெல்லாம் இல்லியேடா தங்கம்….!”

“தாத்தா.. நீங்க ‘மான்டிஸோரி’ படிக்கவேயில்லையா..?”

“இல்லியேடா கண்ணு..அப்பொல்லாம் நேரா ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் தான்…!”

“பாவம் தாத்தா நீங்க.. நான் உங்களுக்கு சொல்லித்தரேன்.. ரொம்ப ஈஸி தான்…!”

“தாத்தா..இப்ப உங்க தாடையில கை வச்சுக்கோங்க… இப்பிடி.. கரெக்ட்…!

இப்போ ‘cow‘ சொல்லுங்க….!

“Jaw அசையுதா…?”

“ஆமாண்டா செல்லம்…!”

“எத்தன வாட்டி அசையுது….?”

“ஒரு தடவை….!”

“Very good…அப்படின்னா ‘ Cow’க்கு ஒரு சிலபல் ..ok…?”

“இப்போ ‘ adorable’ சொல்லுங்க….எவ்வளவு சிலபல்…?”

எனக்கு சும்மாவே தாடை ஆடும்..தப்பாகச் சொன்னால் பேத்தி சிரிப்பாளே……!

நன்றாகத் தாடையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு “நாலு “என்றேன்..!

“தாத்தா..you are a genius…!”

அப்படியே அழுத்தி கன்னத்தில் முத்தமிட்டாள்..

இதற்கு இணையான சொர்க்கம் உண்டா…?

சும்மாவா சொன்னான் பாரதி….
“கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான் கள்வெறி கொள்ளுதடி…!”

லாக்டவுனில் என்னைத் தேடி வந்த சுவர்க்கம் இது…..!

“எங்க மிஸ் எவ்வளவு அழகா சொல்லித்தருவாங்க தெரியுமா….?”

அதற்குள் ‘ டிரிங்ங்..’ என்று மணி அடித்தது.

பூஜா ..’ ஷ்ஷ்ஷ்’ என்று வாயில் விரலை வைத்து சைகை காண்பித்தாள்..

“என்னோடே மிஸ் வந்திட்டாங்க…’

எனக்கு ஒரு பக்கம் அவளைப் பார்த்து பெருமையாய் இருந்தாலும் இன்னொரு பக்கம் வருத்தமாய் இருந்தது..!!

இந்த சின்ன வயதில், பட்டாம்பூச்சி போல பறக்க வேண்டியவள்..நாலூ சுவத்துக்குள் அடைபட வேண்டியிருக்கிறதே….!

இப்பவெல்லாம் எல்லோரும் ஒண்ணா சேர்ந்து சாப்பிடுவதே ஒரு சுகம்..

லாக்டவுனால் நடக்கும் ஒன்றிரண்டு நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று..

“சவிதா.. உனக்கு ஆன்லைன்ல ஒண்ணும் கிடையாதா…?”

சும்மா இருந்த சங்கை..ஊதிக்கெடுப்பது என்பது இதுதான் போலிருக்கு…!

“ஆக்சுவலி எனக்கு நிறைய ஆப்ஷன்ஸ் இருக்குப்பா…எதை சூஸ் பணறதுன்னு ஒரே குழப்பமா இருக்கு…

ஒரு குக்கரி க்ளாஸ் எடுக்க சொல்லி என்னோடே ஃப்ரண்ட்ஸ் எல்லாம் நச்சறாங்க..!”

ஏண்டா கேட்டோமென்று ஆகிவிட்டது…

“ஏன் சவி.. உனக்கு புடலங்காய்க்கும் பீர்க்கங்காய்க்குமே வித்தியாசம் தெரியாதே..!

நீ சொல்லிக் குடுத்து யார் சாப்பிடறது…?”

“அப்பா .. ஆன்லைன் க்ளாஸ்ல அதுதான் அட்வான்டேஜ்…! அவங்களே சமச்சுட்டு “ஆஹா..பேஷ்.. பேஷ்… ரொம்ப நன்னாருக்கே…”ன்னு சொல்லிட்டா தீந்துது… யார் டெஸ்ட் பண்ணி பார்க்கப் போறாங்க…?”

பஞ்ச் டயலாக் சொல்லுவதில் ரஜினியை மிஞ்சிவிடுவான் கமல்…!

சிரிப்பும்..கூத்துமாய்…இப்படியே இருக்கக் கூடாதா..? இதுக்கு லாக்டவுன்தான் வரணுமா…?

லைட்டை அணைத்து விட்டு அவரவர் படுக்கக் கிளம்பினார்கள்..

சுனிதாவும்……ஈஸ்வரும் படுக்க குறைந்தது இன்னும் இரண்டு மணி நேரமாவது ஆகும்….

நானும் படுக்கக் கிளம்பினேன்..

என்னுடைய அம்மாவின் அறையிலிருந்து ஒரே சிரிப்பு சத்தம்..இன்னுமா தூங்கல….?

“அம்மா..என்ன ? தூங்காம என்ன பண்ற..?”

“டேய்..நீலு..வாடா..பக்கத்தில வந்து உக்காரு..இங்க பாரு கூத்த…!”

அம்மாவுக்கு தனியாக ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்தது இப்படி பிரயோஜனப்படும் என்று யார் கண்டார்கள்..

ஸ்கைப்பில் விதவிதமான பொக்கை வாய்ப் பாட்டிகள்….

“பாரு..நீலு.. ராத்திரி தூக்கம் வரலன்னு சொல்லிட்டிருப்பேனே ..இப்போ அந்த கவல விட்டுது…!

“ஹாய்..ஜானு.. என்ன உம்பிள்ளையா..?”

“நீலு..இவுங்க தான் எங்க “Midnight Masala..”க்ரூப் மெம்பர்ஸ்..!

இது சீதா..பார்வதி…கனகா… மீனாட்சி..”

‘Zoom’ ல் இருந்து ஒரு குரல்…..!

“என்ன. ? என்ன சொன்ன..? காதில் விழலயே… சிக்னல் கட்டா…? இன்னும் சத்தமா பேசேன்…!”

“அம்மா..உன் ‘ hearing aid ‘ அ முதல்ல எடுத்து மாட்டு….!”

“ஆமாண்டா மறந்துட்டேன்…”

“ஆங்..இப்போ சொல்லு…!”

“ஜானு..நல்லா வேணும்.. நான் பல்லக்கழட்டிட்டேன்னு கேலி பண்ணினியே..!”

ஒரே சிரிப்பு…மனசு நிறைந்திருந்தது…

படுக்கையில் என்னுடைய மனசாட்சி என்னைக் கூப்பிட்டது..

“டேய்..நீலு..நீ என்ன பெரிய பிஸ்த்தான்னு நெனப்பா… எல்லாரையும் கலாய்கிறயே…

உன்னால் ஒரு ஆன்லைன் க்ளாஸும் பண்ண முடியலயே.. அட்லீஸ்ட் ஏதாவது கத்துகலாமில்ல ?

அவுங்களாவது உருப்படியா ஏதோ பண்றாங்க…!”

கரெக்ட் தான்.. நான் மட்டும்தான் வேல வெட்டியில்லாம எல்லோரையும் கிண்டல் பண்ணிகிட்டு..!!

ஏதாவது செய்யணுமே…

மகாலிங்கம் தான் இதிலெல்லாம் கெட்டிக்காரன்.அவனக் கூப்பிட்டு ஐடியா கேட்டால் என்ன..?

பாவம்..இப்போ ரொம்ப லேட்.. தூங்கி இருப்பான்..காலைல எழுந்ததும் முதல் வேலையாக அவனைக் கூப்பிட்டே ஆகணும்..

அதுக்குள்ள உங்களுக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க..ப்ளீஸ்..!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *