நாய்க்கு மணி கட்டனும்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 21, 2021
பார்வையிட்டோர்: 9,324 
 
 

ஊருக்கு ஒதுக்குப் புறமாய் உள்ள ஆலமரத்திடலுக்கு தன் நண்பர்கள் பட்டாளத்தை அழைத்துச் சென்றான் நட்டு என்கிற நட்ராஜ் !

அந்த ஆலமரத்தடியில் அமர்ந்தான்.

எதிரில் நண்பர்கள்… சேகர், சிவா, கணேஷ், வெங்கு என்கிற வெங்கடேஷ் அமர்ந்தார்கள்.

அழைத்து வந்தவன் முகத்தை ஆவலாய்ப் பார்த்தார்கள்.

“இப்போ நம்ம ஊர்ல ஒரு முக்கியமான பிரச்சனை ஒன்னு இருக்கு…”சொல்லி நிறுத்தினான்.

‘ நாம கூட்டம் போட்டு பேசும் அளவுக்கு அப்படி என்ன பிரச்சனை..? ‘ நண்பர்கள் மனங்களில் முகங்களில் கேள்வி குறிகள்.

“என்ன…?” – சேகர் வாயைத் திறந்தான்.

“நாய்க்கு மணி கட்டனும். !” நட்டு அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.

அத்தனைப் பேர்களும் துணுக்குற்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்.

”என்ன பார்க்குறீங்க…? நான் சொல்றது உண்மை. நாய்க்கு மணி கட்டனும்…”நட்டு மீண்டும் கறாராய்ச் சொன்னான்.

“உன் வீட்டு நாய்க்கா…?” – கேட்டான் சிவா.

“இல்லே !”

“யார் வீட்டு நாய்க்கு…?”

“பக்கத்து வீட்டு நாய்க்கு…?”

“ஓ…. அந்த நாயைச் சொல்றீயா…?” வெங்கடேஷ் கேட்டு அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

“எந்த நாய்டா…?” நட்டுவிற்கு சட்டென்று முகம் சிவந்தது.

“சிகப்பா, உயரமா, ரெட்டை சடைபோட்டு உன்னை என்னை எல்லாம் பார்த்தா முறைக்குமே…அதைச் சொல்றீயா…?” என்றான்.

“அது நாயில்லே. பொண்ணு. ! பத்மா” நட்டு முகம் சிவந்து சூடாக சொன்னான்.

“அப்படின்னா… அவளுக்கு அடுத்த அகிலாவா..?! ….”

பொறுக்க முடியவில்லை நட்டுவிற்கு.

“சேகர்ர்ர்ர்ர்..!” பல்லைக்கடித்தான்.

“அவளுமில்லென்னா அவளுங்க அம்மாவா. நம்மைக் கண்டாலே கொலை பார்வை பார்ப்பாள் !” என்றான் கணேஷ்.

“படவா….!” அவனை உக்கிரப்பார்வைப் பார்த்தான் இவன்.

“அப்போ… கடைக்குட்டியா…?…”

“ஏய் ! இனி ஒரு வார்த்தை பேசினீங்கன்னா வாய் வெத்தலைப் போட்டுக்கும். ஜாக்கிரதை !” எச்சரித்தான்.

“பின்னே..! சொல்றதை ஒழுங்கா சொல்லு…?” என்றான் சேகர்.

“எங்கேடா சொல்லவிடுறீங்க…?

“சரி. சொல்லு…?”

“என் வீட்டுக்குப் பக்கத்துல பத்மா குட்டி வீடில்லே..?” என்று நட்டு தொடங்க…

“அதைத்தாண்டா இவனும் சொன்னான் .” சிவா சேகரைக் காட்டினான்.

“அறைஞ்சேன்னா…! அந்த நாய் சொல்ல வந்தது வேற. அந்த பத்மா வீட்டு வாசல்ல எந்நேரமும் ஒரு நாய் படுத்துக் கிடக்கு. தப்பித்த தவறி அந்த வழியா யார் போனாலும் சத்தம் போடாம பின்னால வந்து காலைக் கவ்வுது, கடிக்குது. இப்படி பத்துப் பதினைஞ்சு பேரைக் கடுச்சிருக்கு. இப்போ எல்லோரும் அரசாங்க மருத்துவனமைக்குப் போய் அதுக்குப் போய் ஊசி போட்டு வர்றானுங்க. இதனால நம்ம வீட்டுப் பக்கம் ஒரு பயல் வரமாட்டேன்கிறான்.நடமாட்டம் கம்மியா இருக்கு.” சேதியை சொல்லி முடித்தான்.

கேட்ட எல்லோரும் கம்மென்றிருந்தார்கள்.

சிறிது நேரத்தில்…

“அதனால பத்மா சைட்டடிக்க ஆளில்லாமல் துவண்டு போயிருக்காளாக்கும் !” என்றான் சிவா.

“ச்ச்சூ” என்று அவனை அதட்டி அடக்கிய நட்டு தொடர்ந்தான்.

“அதனால… வேலை வெட்டி இல்லாம சுத்துற நாம அந்த நாய்க்கு ஒரு வழி பண்ணனும்”

“அதுக்கு என்ன வழி பண்ணனும்..?” வெங்கு என்கிற வெங்கடேஷ்.

“அது கழுத்துல மணி கட்டனும். அப்படி கட்டிவிட்டால் பின்னால நாய் வர்றது தெரியும். உஷாராகிடலாம். இல்லாட்டி நாமும் அந்த பத்மா வீட்டுப் பக்கம் போகமுடியாது !” முடித்தான்.

“நல்ல யோசனை. என்ன மணி கட்டுறது..? காண்டாமணியா..?” கணேஷ் நக்கலாகக் கேட்டான்.

“அம்பது கிலோ வெயிட்டுல கோயில் மணி !” என்று அவன் மேல் பாய்ந்த நட்டு…

“விளையாடுறீங்களா…?” சீறினான்.

“சரி. சின்னமணி !” வெங்கடேஷ் சாந்தமாக சொன்னான்.

”இல்லே பொன்னுமணி !” என்றான் சிவா.

“விளையாடாதீங்கடா..”என்று அவர்களை அடக்கிய வெங்கடேஷ்…

“நாம ஏன் அதுக்கு மணி கட்டனும்..? நாயை வளர்க்கிற வீட்டுக்காரங்ககிட்ட சொன்னால் கட்டிட்டுப் போறாங்க…”என்றான்.

“அதையும் நான் செய்து பார்த்தாச்சு !”

“அப்படியா…? ??…”

“அந்த வீட்டுப் படியேறி…உங்க வீட்டு நாய் இப்படி கடிச்சி தொலைக்குது அடிச்சிக் கொல்லப்போறோம்ன்னு சொன்னேன்.”

“யார்கிட்ட…?”

“பத்மாகிட்ட…”

“ஓ.. ! ரூட்டை அவள்கிட்ட நேரடியாவே போட்டுட்டியா..? அவளோட பேச இதை ஒரு சாக்காய் பயன்படுத்திக்கிட்டியாக்கும்…!”

“ஆமாம்.! அப்படித்தான் வைச்சுக்கோடா பரதேசி !” கணேஷ் மீது பாய்ந்த நட்டு…

“அதுக்கு அவள் என்ன சொன்னாள் தெரியுமா…?” கேட்டு நண்பர்களை பார்த்தான்.

“என்ன சொன்னாள்..?” நாக்கைத் தொங்க விட்டுக்கொண் டு ஆவலாய்க் கேட்டான் கணேஷ்.

“”மொகரை.. !” சீறினான்.

“உன்னைத் சொன்னாளா..?”

“உன்னைத் சொன்னேன். !”

“சண்டை போடாமல் மேலே சொல்லுடா..”

சிவா ஆகாயத்தைப் பார்த்தான்.

“குசும்பு பண்ணாம கேளுங்கடா. அது அப்படி கடிக்கிறதுனால தெருவுல பொறுக்கி நாய்ங்க நடமாட்டம் குறைஞ்சிருக்கு. வயசுக்கு வந்த அஞ்சு பெண்களும் வீட்டுல நிம்மதியா இருக்கோம்ன்னு சொல்றா மச்சி !”

“அப்படியா சொன்னாள்…?!” வெங்கு ஆச்சரியப்பட்டான்.

“ஆமாடா…!”

“உன்னையும் சேர்த்தா சொன்னாள்..?”

“ஆமாடா !”

“திமிர்பிடிச்ச குட்டியா இருப்பாள் போலிருக்கே…?” சேகர் ஆச்சரியப்பட்டவன் போல் பாவலாய்ப் பண்ணினான்.

“ம்ம்… நெஞ்சு நிறைய இருக்கு !”

“ஆமா… பார்த்தாலே தெரியுது…!”ரொம்ப நல்ல பிள்ளை போல் சொன்னான் வெங்கடேஷ்.

நட்டு அவனை கோபமாக முறைத்தான்.

“விடுடா. பத்மாவைப் பத்தி நமக்கென்ன பேச்சு. நாம அவள் வீட்டு நாய்க்கு மணி கட்டனும் ..?” – சிவா.

“அதுக்கு மணி கட்டத் தேவை இல்லே. !” சேகர்.

“பின்னே…?” – சிவா.

“கடிக்கிற நாய்ன்னு முனிசிபாலிட்டிக்காரன்கிட்ட புகார் கொடுத்தால் அடிச்சி சாவடிச்சுடுவான். !”

“வேணாம். பெண் பாவம் பொல்லாதது !”

“பத்மாவைக் சொல்றீயா…?”

“அவளைச் சொல்லல. கடிக்கிரத்தைச் சொன்னேன். அது பொட்டை !”

“கண்ணு தெரியாதா..??!”

“எருமை ! பெண் நாய் !” உறுமினான் நட்டு.

“அப்போ தாலி கட்டிட வேண்டியதுதான் !” தீர்மானமாகத் தலையாட்டினான் சிவா.

“இதைத்தாண்டா…அவள் தங்கச்சி அகிலாகிட்டேயும் சொன்னேன்.”

“அவ சம்மதம் சொன்னாளா..?”

“எங்க வீட்டு கடிக்கிற நாய் மேல் கையை வைச்சா. எங்க அப்பாவை உங்களைக் கடிச்சி குதறிடுவாருன்னு சொல்லி பயம் காட்டறாள்.!” என்றான் நட்டு.

”அப்படியா…???….” எல்லாரும் ஒருசேர கேட்டு வாயைப் பிளந்தார்கள்.

“உங்கப்பா நாயான்னு..? நான் விளையாட்டுக்குக் கேட்டு சிரிச்சேன் . அதுக்கு அவள்…’அதைவி ட மோசம். வேணும்ன்னா சொல்லிப் பார்க்கவா..? பரிசோதிக்கலாமா…? கேட்டாள். எனக்குக் குலை நடுங்கிப் போச்சு. ‘அம்மா ! தாயேன்னு கையெடுத்துக் கும்பிட்டேன். !” என்றான். முகத்தில் கிலி.

நட்டு தொடர்ந்தான்.

“அவள் அதோடு விடல. என் அப்பா முன்னாள் ராணுவ வீரர். கையெல்லாம் காய்ச்சி முறம் மாதிரி இருக்கும். ஒவ்வொரு அடியும் இடிமாதிரி இறங்கும் ! சொன்னாள். நான் ‘ ஐயையோ !” அலறினேன். அதோடும் அவள் விடல. நாய் ஒரு கல்லு பட்டாலும் சரி. ப்ளூ கிராஸ்ல சொல்லி உங்கள மிருகவதை சட்டத்தில் சிறையில போட்டு கம்பி எண்ண வைச்சுடுவோம் ! சொல்றா…”

“பயங்கர குட்டியாய் இருப்பாள் போலிருக்கே…??!” சேகர் பயந்து சொன்னான்.

“ஆமா…!”

“அப்போ கொல்ற திட்டமே வேணாம் !” கணேஷ் நடுங்கியபடி சொன்னான்.

“ஆமாம் !” எல்லோரும் அதை ஆமோதித்தார்கள் .

“அதனாலதான் நான் அதுக்கு மணி கட்டலாம் என்கிற முடிவுக்கு வந்தேன் !”

“நல்ல யோசனை. வரவேற்புக்குரியது!” என்றான் சேகர்.

“சரி. கடிக்கிற நாய்க்கு எப்படி மணி கட்டுறது..?” அடுத்தக் கட்டத்திற்குத் தாவினான் கணேஷ்.

“அதுக்கு யோசனை இருக்கு..!” என்றான் நட்டு.

“என்ன..?” அனைவரும் அவன் முகத்தைப் பார்த்தார்கள்.

“அதுக்கு முன்னாடி நான் ஒரு யோசனை சொல்றேன்.”என்று முந்தினான் சிவா.

“என்ன…?”

“பத்மா நட்டுவைக் காதலிக்கிறாப்போல செய்து விட்டால் பத்மாவே நாய் கழுத்துல சுலபமா மணி கட்டிடுவாள் !” என்றான்.

“மூஞ்சி ! அவள் நெருப்பு !” காய்ந்தான் நட்டு.

“தொட்டுப் பார்த்தியா…?”

“அறைவாள்..!”

“வாங்கி இருக்கியா…?”

“இன்னும் இல்லே..!”

”ஏன்டா நட்டு.! பத்மாவை காதலிக்கத்தானே இந்த ஏற்பாடு…?” என்றான் வெங்கடேஷ்.

“ஆமா. இவன் அவளை நெருங்கும்போது கடிக்காம இருக்கத்தான் இந்த ஏற்பாடு. முன்னெச்சரிக்கை நடவடிக்கை !”

“நக்கல் வேணாம். யோசனையைக் கேளுங்க. அந்த நாய் ஜோடி தேடி சில சமயம் நம்ம வீட்டு தென்னந்தோப்புப் பக்கம் வரும். நாம முன்னேற்பாடாய் நாலு பக்கமும் மீன் பிடி வலையை வச்சிக்கிட்டுத் தயாராய் இருந்தோம்ன்னா…அது வரும்போது பக்குன்னு வீசி அமுக்கிடலாம். அப்புறம் கம்பு, கழியால அமுக்கிப் பிடிச்சி மணி கட்டிடலாம்.”தன் யோசனையைச் சொன்னான்.

“முரட்டு நாய். வலையைக் கிழிச்சு நம்மைக் கடிக்காதா..?” என்றான் கணேஷ்.

“கடிச்சாப் பார்த்துக்கலாம். தொப்புளைச் சுத்தி நாலு ஊசி போட்டுக்கலாம். !”

“டேய்..!!” அலறினான் சிவா.

“பின்னே என்ன. நாம ஜாக்கிரதையாய் இருந்துதான் மணியைக் கட்டனும்…”

“டேய் ! நீ பத்மாவைக் கடலைப் போடுறதுக்கு நாங்க நாயெல்லாம் பிடிச்சி கடிவாங்கி கஷ்டப்படனுமா..?”

“எல்லாம் நண்பனுக்கு உதவிதானே நண்பா..!”

“சரி உதவிதான். பத்மாவை நீ பிடிச்சிக்கிட்டா… மத்த பொண்ணுங்களை நாங்க புடிச்சிக்கலாமா…?”

“அ… அது….”நட்ராஜ் இழுத்தான்.

“நாம எல்லோரும் சகலையாகிடலாம் மச்சி. ஆளுக்கொன்னு சரியா இருக்கு. அவ அப்பன் நம்ம அஞ்சு பேருக்கும் கணக்குப் பண்ணி பெத்திருக்கான்…!”

“அது உங்க சாமார்த்தியம் !” நட்டு இறங்கி வந்தான்.

“சரி. மீன் பிடி வலை..?”

“என் மீனவ நண்பன் ஒருத்தன்கிட்ட நாலு வீசு வலை சொல்லி வைச்சிருக்கேன்.”

“சரி. மணி…?” – சேகர்.

“எங்க வீட்டு பரண் மேல காளை மாட்டுக்குக் கட்டிய மணி இருக்கு.”

“கயிறு..?” – சிவா.

“வெங்கிட்டு நல்ல மொத்தமா இடுப்புல கட்டி இருக்கான்..!” கணேஷ் சொல்ல..

“ஐயோ ! நான் மாட்டேன். !” அவன் இடுப்பைப் பிடித்துக் கொண்டு அலறினான்.

“என் தம்பி பம்பரம் விடும் கயிற்றைக் கொண்டு வர்றேன்.”

“ஐயோ ! அவனுக்குப் பொண்ணு இல்லையே…”சிவா திகிடித்தான்.

“அவன் சின்னப்புள்ளைடா…!!…”என்றான் சேகர்.

“சரி. வலை கிழிஞ்சா சேதாரம்…?”

“சகலை நாம எல்லோரும் பணம் போட்டு நஷ்ட ஈடு கொடுத்துடலாம்.”

“பணம்…?” வெங்கடேஷ்.

“அப்பா அம்மாகிட்ட ஆட்டையப் போட்டுக்கலாம்.!”

“கண்டுபிடிச்சிட்டா… செருப்படி விழும்..!”

“நாம பொண்டாட்டி கட்டிப் போய் திருப்பிக்கலாம். ! அவளுங்க கொடுத்துடுவாளுங்க.”

“அடேய்..!” கணேஷ் அலறினான்.

“வாழ்க்கையில இந்த கொடுக்கல் வாங்கல் எல்லாம் சகஜம் மச்சான். ஆம்பளைப் புள்ளைகளைப் பெத்தால் அப்பன் ஆத்தாள் இதெல்லாம் அனுபவிச்சித்தான் ஆகனும்…”

“சரி நாய்க்கு யாரு மணி கட்டுறது…?”
“வலையில நாட்டினதும் கழி கம்பெல்லாம் போட்டு அழுத்தி நாயை நீங்க அழுத்திப் பிடிச்சுக்கோங்க. நான் காட்டறேன் !” சொன்னான் நட்டு.

“வேணாம் சகலை. நான் காட்டுறேன். !” வலிய வந்தான் சேகர்.

“நீங்க ரெண்டு பேரும் சரியா கட்ட மாட்டீங்க. நான் காட்டுறேன் !” முந்தினான் கணேஷ்.

“யாருக்கும் எந்த சிரமமும் வேணாம். நான் காட்டுறேன்!” குரல் கேட்டது.

எல்லோரும் திடுக்கிட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். அப்புறம் குரல் வந்த திசையைப் பார்த்தார்கள்.

அந்த பிரமாண்ட ஆலமரத்தின் பின்னால் இருந்து பத்மா வந்தாள்.

பார்த்த முகங்களில் பீதி.

“நானும் கட்டறேன் !” அடுத்து குரல் கொடுத்துக்கொண்டே வாட்டசாட்டமாக பத்மா அப்பா வீராசாமி அங்கிருந்து வெளியே வந்தார்.

அவ்வளவுதான் ! அனைவரின் வயிற்றுகளிலும் அமிலம். கலவரம்.

“படவாக்களா ! என் நாய்க்கு மணியைக் கட்டி என் பொண்ணுங்களை டாவடிக்கவா பாடுக்குறீங்க …” பாய்ந்தார்.

நண்பர்கள் அனைவரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடினார்கள். சிட்டாகப் பறந்தார்கள்.

மாட்டினான் நட்டுஎன்கிற நடராஜ் ! !

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *