பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன தருமராசன் கதை
“மறுபடியும் விக்கிரமாதித்தர் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன பதின்மூன்றாவது கதையாவது:
‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! ‘தருமபுரி, தருமபுரி, தருமபுரி என்று சொல்லா நின்ற ஊரிலே, ‘தருமராசன், தருமராசன்’ என்று ஒரு தருமராசன் உண்டு. அந்த தருமராசனாகப்பட்டவர், தருமபுரீஸ்வரர் கோயிலுக்கு நாள் தவறாமல் போய் வருவதுண்டு. அப்படிப் போய் வரும்போதெல்லாம் அங்குள்ள பிச்சைக்காரர்களுக்கு அவர் தலைக்கு ஒரு பைசா வீதம் தருமம் செய்துவிட்டு வருவதும், அதற்காக அவர்கள் அவரைக் கண்டதும் தேனில் ஈ மொய்ப்பதுபோல் வந்து மொய்த்துக் கொள்வதும் வழக்கமாயிருந்து வந்தது. இந்த வழக்கத்துக்கு விரோதமாய் அவர் ஒரு நாள் தலைக்கு ஒரு பைசா தருமம் செய்வதற்குப் பதிலாகப் பத்துப் பைசா தருமம் செய்ய, ‘இது என்ன ஆச்சச்சரியம்!’ என்று அவரைச் சூழ்ந்து நின்ற பிச்சைக்காரர்களில் ஒருவன் சுற்றுமுற்றும் பார்க்க, அந்த வழியே புன்னகை சிந்தியவண்ணம் ‘தவனம், தவனம்’ என்னும் பேர் கொண்ட பேரழகி ஒருத்தி வந்து கொண்டிருப்பதைக் கண்டு, அவன் அப்படியே அயர்ந்து போய் நிற்பானாயினன்.
இவன் இங்ஙனம் நிற்க, ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ என்பதற்காகத்தானே தருமராசன் அவளை நோக்க, அவளும் தருமராசனை நோக்க, ‘புனிதமான கோயிலில், புனிதமான காதல் அரும்பிவிட்டது’ என எண்ணிப் பூரித்துப் போனவராய், அவர் அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்று, அங்கிருந்த ஒரு தூணில் மோதிக்கொண்ட பின் தன் நினைவுக்கு வந்து, தன் வழியே செல்வாராயினர்.
இவர் இங்ஙனம் செல்ல, அந்தப் பிச்சைக்காரனோ மெல்ல தவனத்தை நெருங்கி, ‘அம்மா, ஒரு விண்ணப்பம்!’ என்று கூனிக் குறுகி நின்றானாயினன்.
‘என்ன விண்ணப்பம்?’
‘தினம் தினம் நீங்கள் இந்தக் கோயிலுக்கு வந்து கொண்டிருக்க வேண்டும். தாயே!’
‘ஏன்?’
‘உங்களைப் பார்த்தால் ஒரு பைசா போடும் மவராசர்கள் கூடப் பத்துப் பைசா போடுகிறார்கள்!’ என அவன் தலையைச் சொறிந்து கொண்டே சொல்ல, ‘அதற்கென்ன, வருகிறேன்; எனக்கும் எண்ணி நாற்பது நாட்கள் இந்தக் கோயிலைச் சுற்றி வரவேண்டியிருக்கிறது!’ என்பதாகத்தானே அவளும் சிரித்துக்கொண்டே சொல்லி விட்டுச் செல்வாளாயினள்.
இப்படியாகத்தானே தவனமும் தருமராசனும் தினம் தினம் கோயிலில் சந்திக்க, ஒரு நாள் தருமராசனாகப் பட்டவர் ஆசையை அடக்க முடியாமல் அவளை அணுகி, ‘கண்ணோடு கண் பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா? வாயும் பேச வேண்டாமா?’ எனக் கேட்டு ‘இளி, இளி’ என இளிக்க, அவள் திடுக்கிட்டு, ‘என்னத்தைப் பேசச் சொல்கிறீர்கள்?’ என எரிந்து விழுவாளாயினள்.
தருமராசன் ஒன்றும் புரியாமல், ‘எனக்காகத்தானே நீ தினம் தினம் இங்கே வருகிறாய்?’ எனப் பின்னும் கேட்க, ‘முகரையைப் பார் முகரையை! உமக்காக நான் ஏன் வருகிறேன்? போம் ஐயா, போம்!’ என அவள் பின்னும் அலட்சியமாகச் சொல்லிவிட்டு நடக்க, ‘அடக் கடவுளே! ‘காதல் ஒரு கனவு’ என்கிறார்களே, அது இதுதானா? என அவர் பத்துப் பைசாவுக்குப் பதிலாக ஒரு பைசா தருமம் செய்யக்கூட மறந்து வெளியே செல்ல, ‘சாமி, சாமி!’ என அவரைத் தொடர்ந்து சென்ற பிச்சைக்காரர்கள் ஒன்றும் கிடைக்காமல் திரும்பி, ‘நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!’ எனத் தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்வாராயினர்.’
பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘தருமம் எதற்காகச் செய்ய வேண்டும்?’ என விக்கிரமாதித் தரைக் கேட்க, ‘புண்ணியத்துக்காகச் செய்ய வேண்டும்; பெருமைக்காகச் செய்யக் கூடாது!’ என விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு விட்டது என்றவாறு…… என்றவாறு…… என்றவாறு…..
– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை.