கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 20, 2023
பார்வையிட்டோர்: 13,839 
 
 

கள், சாராய வகைகளில் போதை கொள்ள முடியாத அரை மதுவிலக்கு இப்போது அமலில் இருக்கிறது. 

பொன்னிற, கருநிற திரவங்களால் குடிமக்கள் மகிழ்ச்சி அடைந்தால் போதும் என அரசு முடிவு செய்து, போனால் போகட்டுமென ஜின்’னையும் அனுமதித்திருக்கிறது. பழைய மதுவைப் போலவே மதிப்பு மிக்க பழைய கதையைச் சொல்கிறேன்.

முழு மதுவிலக்கு காலத்தில் எங்கள் ஊரில் ‘வேலாந்துறை அய்யன்’ விற்று வந்த கள்ளச் சாராயம் கிடைத்து வந்தது. மற்றபடி பெருக்கெடுத்தெல்லாம் ஓடவில்லை. சாராயம், எப்போதும் தன்னை நாடி ஓடிவரச் செய்வது. அப்போது ஊரில் பிரமாதமான நால்வர் அணி ஒன்றும் உருவாகிவிட்டது. அதாவது வேலாந்துறை அய்யன், சின்ன முத்து, நாட்ராயன். வேலுச்சாமி ஆகியோர். 

மற்ற மூவருக்கு அய்யன் இலவசமாய் சாராயம் தருவார். இரவுகளில் மட்டும் மற்ற மூவரும் பதிலுக்கு மாமிசம் ஏற்பாடு செய்வார்கள். 

இந்த ஏற்பாட்டில் ஊரில் கோழி, சேவல்கள் பலியாகி வந்தன. நிரூபிக்க ஆளில்லாத இரவுகளில் களவு செய்வார்கள். கூடை ஒன்றை எடுத்துப் போய் குச்சி ஒன்றால் அண்டை கொடுத்து நிறுத்தி உள்ளே தானியம் போடுவார்கள். தானியம் பொறுக்க கோழி உள்ளே போகிறபோது குச்சியைத் தட்டிவிட்டால் கோழி கூடைக்குள் அகப்பட்டு க்ளீன் போல்ட், குச்சி விழுந்து விட்டால் க்ளீன் போல்டுதானே. 

வேலாந்துறை அய்யன் ஒரு சேவல் வளர்த்து வந்தார். பூலாம் வலசு, கோவிலூர் சேவற் சண்டைகளில் பல சேவல்களைப் பரகதி அடைய வைத்த சூரச்சேவல் அது. 

இரவில் சேவல் சாப்பிட முடிவெடுத்தால் அந்தச் சேவலைக் கையில் கொணர்ந்து ஏதாவது சேவலுடன் ‘முகைய’ விடுவார்கள். அவ்விதம் முகைந்து பொருத வரும் சேவல்கள் சட்டியில் கிடந்து வறுவலாகும். 

இவர்கள் கைப்பற்றத் தோதாக கோழி, சேவல்கள் வீட்டு வேலியின் தென்னம் படலைகள், மரக்கிளைகள் இவற்றில் அண்டிவந்தன. கோழி, சேவல்கள் குறைந்தாலும், கூவ மறுத்தாலும் விடிந்து கொண்டுதான் இருந்தன நாட்கள். கறிவறுத்த மறுநாள் ‘நால்வர் அணி’யை யாரேனும் குற்றப்படுத்தினால் அவ்வளவுதான் குடிமிகையில் வசவு நாறிவிடும். 

“கை சுண்டினா நாளைக்கு இந்நேரம் கோழிப் பண்ணையே வைப்பம்டா நாங்க. எளிசாப் பேசினா அறுத்து அடுப்புல வச்சிருவோம்’ 

வார்த்தைகளின் நெடி தாளாது

மக்களும் ‘தொலைகிறது கோழி’ என விட்டு விட்டார்கள். முட்டை உள்ளளவும் பறவை அழியாது. 

இதப் போதையில் இத்திருட்டை முடித்துவிட்டு காரமான சமையலுக்குப் பின் மேலும் சில டம்ளர்கள் அருந்திவிட்டு மது மாமிச வயிறு சமேதமாய் உறங்கி விடுவார்கள். 

அன்றைக்கு ஓர் இரவு. 

“டேய் கறி நல்ல இருக்குதுடா” என சப்புக்கொட்டி வேலாந்துறை அய்யன் தின்றபோது மற்ற மூவரும் தங்களுக்குள் பார்த்துக் கொண்டார்கள். 

காலையில் தனது வீட்டை விட்டு வெளியே வந்த அய்யன் ரொம்ப நேரமாய் எதையோ தேடி விட்டு நாட்ராயனிடம் கேட்டார். 

“டேய் நாட்டு!. நம்ம சேவல் எங்கேடா போச்சு?” 

அத்தனை நாள் பாவங்களையும் கழுவுகிற வக்கணையோடு நாட்ராயன் சொன்ன பதில்தான் பிரசித்தமானது. 

“ராத்திரி உணர்ச்சிமயமா தின்னியே! அது என்னன்னு நெனச்சே?”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *