ஜாலியான சோகக் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 9,610 
 
 

உங்ககிட்ட எனக்கு கல்யாணமான விஷயத்தை சொல்லி இருக்கேனா? அதுவே ஒரு பெரிய கதை. ஆனால் இங்கு அது ஒரு கிளைக்கதைதான். எனக்கு பொண்ணு பார்க்கப் போகிற செய்தி கிடைத்தவுடன் வீட்டில் பிரச்சினை செய்ய ஆரம்பித்துவிட்டேன். எனக்கு காதல் திருமணம் செய்து கொள்ளத்தான் ஆசை. என் அப்பா அதற்கெல்லாம் மசிவாரென்ற நம்பிக்கை இல்லை. அப்பாவை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும். அதற்குதான் நான் செய்யும் பிரச்சினைகள் எல்லாம்.

திருமணம்தான் காதல் திருமணம். ஆனால் காதலி எல்லாம் யாரும் இல்லை. இதுவரை தேடியதில்லையா என்று கேட்கிறீர்களா? தேடி இருக்கிறேன். எனக்கு அவ்வளவாக திறமை போதாது. சொல்லாமலே என் காதல் அவிஞ்சு போயிருக்கும். அல்லது சொன்னவுடன் பொசுங்கி போயிருக்கும். அவற்றை எல்லாம் சொல்ல ஆரம்பித்தால் நாவாலகிவிடும். அதனால் பிளீஸ் கேட்காதீர்கள்.

காதல் திருமணம் என்றால் எனக்கு பிடித்த பெண்ணாக, என் அட்டகாசம், அலம்பல்கள் குறித்து ஏற்கனவே தெரிந்தவளாக இருப்பாள் என்ற நப்பாசைதான் காரணம். மற்றபடி படிக்காதவளாக இருந்தாலும் பரவாயில்லை.

பிரச்சினை என்று சொன்னேன் அல்லவா? அதற்கு வருவோம். திருமணமே வேண்டாம். நான் பிரம்மசாரியாகவே இருக்கப் போகிறேன் என்று ரகளை செய்து கொண்டிருந்தேன். வீட்டில் அவ்வாறு சொல்லி இருந்தாலும் உள்ளூர பயம் இருந்தது. சரி பிரம்மசாரியாகவோ இருந்து கொள் என்று சொல்லிவிடுவார்களோ என. அதற்கும் காரணம் இருக்கிறது. எனக்குத் திருமணம் செய்து வைக்க பேரன் பேத்திதானே முக்கியமான காரணமாக இருக்க முடியும்? அதற்கு என் தம்பிக்கு திருமணம் செய்து வைத்தால் போகிறது. அவன் அம்மா அப்பா பேச்சு கேட்கும் நல்ல பையன் என்ற பேர் உண்டு. எனக்குதான் தறுதலை, அடங்காப்பிடாரி என்ற பெயர்கள் எல்லாம்.

நல்லவேளையாக நான் பயந்தது எதுவும் நடக்கவில்லை. அம்மா பக்கத்தில் வந்து பொறுமையாகக் கேட்டார். ஏதாவது நீயே பொண்ணு பார்த்து வெச்சிருக்கியாடா? இருந்தா சொல்லு அதையே பார்த்துப் பேசிடலாம். அப்பாவும் வேற ஜாதின்னா கூட பரவாயில்லைன்னு சொல்றாரு என்றார். முதல் மாங்காய் விழுந்துவிட்டது. நாளையிலிருந்து முழுநேர வேளையாக பெண் தேட வேண்டுமென முடிவு செய்து பஸ் ஸ்டேண்ட், பார்க், சினிமா தியேட்டர் என்று எல்லாம் சுற்றினேன். இந்த நாட்டில் எல்லா பெண்களுக்குமே காதலனோ அல்லது கணவனோ இருக்கிறார்கள். முப்பத்தெட்டு வயதான பின், ஒரு பெண்ணைப் பார்த்து லெட்டர் கொடுத்து, அவள் சரி என்று சொல்லி, சினிமாவுக்கு கூட்டிப் போய்…இது எல்லாம் நடக்கிற காரியமாகவே தெரியவில்லை. விழுதிருந்த சொட்டை கொஞ்சம் அதிகமானதுதான் மிச்சம். இன்னொன்றும் மிச்சம் இருக்கிறது. ஊருக்குள் பேசிக் கொண்டார்களாம் “பையன்- பையன் என்னும் சொல் என் வயதைக் குறைக்க நானே உபயோகப் படுத்திக் கொண்ட சொல். ஊருக்குள் ‘ஆள்’ என்கிறார்கள். இந்த ஆளு ரோடு ரோடா நின்னு போற வர்ற பொண்ணுகளை மொறச்சு மொறச்சு பார்க்குறானாம். பாவம் அதது நடக்க வேண்டிய வயசுல நடக்கலைன்னா இப்படிதான்” பச்சாதாபத்தோடு முடிக்கிறார்களாம். ஏற்கனவே பஞ்சராகி இருக்கும் என்னால் இந்த மாதிரியான பேச்சுக்களை எல்லாம் தாங்கிக் கொள்ள முடியாது.

அம்மாவிடமே பொறுப்பை ஒப்படைத்துவிடுவதுதான் உசிதம். அப்படி வந்தவதான் இந்த சங்கீதா. ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார். “சாகப் போற வயசுல பேரப் பாரு..சங்கீகீகீகீகீதா”. இந்தப் பெயரை அந்த உச்சரிப்பில் படிக்க வேண்டும். சங்கீதா அதிகம் படிக்கவில்லை. இரண்டாவது மட்டும் இரண்டு மூன்று தடவை படித்ததால் சட்டிபானை கழுவப்போட்டதாக பெரிய சொட்டை சொன்னார். சின்ன சொட்டை என்ற பெயர் எனக்கு கொடுக்கப்பட்டதால் சொந்த பந்தத்தில் என் மாமனாருக்கு பெயர் பெரிய சொட்டை. அதுக்கென்ன மாப்பிள்ளைதான் ‘இஏபீஏ’ படிசிருக்காரே என்று சொல்லி என் மேல் அவரின் வாயிலிருந்த வெற்றிலையைத் துப்பி அதை துண்டை வைத்து துடைத்து ஒரு வழி பண்ணினார்.

என் சங்கீதா ரொம்ப நல்லவள். இதைப் படிக்க வேண்டுமானால் வடிவேல் பாணியை உபயோகப் படுதிக்கொள்ளலாம். பளிச்சுன்னு கைகால் கழுவி ரெடியாக இரு சினிமாவுக்கு போகலாம் என்றால் முகத்தில் விளக்கெண்ணெய் பூசி பளிச்சென்று இருப்பாள். அந்த அளவுக்கு சொன்ன சொல் கேட்பவள். திருமணம் முடிந்து கொஞ்ச நாள் ஆகிவிட்டது. ஒரு கதை சொல்லுங்க என்று கேட்டாள். சந்தோஷத்தில் சொல்ல ஆரம்பித்தேன். “மலை உச்சிக்கும் உடல் சிதறுவதற்குமான கணத்தில் ஒரு கவிதை எழுதிய சாத்தியம்”ன்னு ஏதோ ஒரு கவிதையில் வரும் என்று ஆரம்பித்தேன். ஒரு எழவும் புரியவில்லை என்றாள். அட! மலையில இருந்து கீழ விழுறதுக்குள்ள ஒரு கவிதை எழுதி முடிச்சானாம் என்றேன். என்ன கருமாந்திரமோ சாவப் போறவனுக்கு கவிதைதான் முக்கியமா. போங்க நீங்களும் உங்க கதையும் என்று மீண்டும் சட்டிபானை கழுவப் போய்விட்டாள்.

மூன்றாவது மாசம் பெரிய சொட்டையிடம் கம்ப்ளெயிண்ட் செய்திருக்கிறாள். ‘இந்த ஆளு(நான்தான்) எதை எதையோ கிறுக்கி புரியுதா புரியுதான்னு கேட்கிறான்’ என. நேற்று ஒரு கதை எழுதி இருந்தேன். படித்துக் காட்டியதன் விளைவுதான் அது. நான் எழுதுவது எனக்கே புரியாது. அவள் பயந்ததிலும் அர்த்தம் இருக்கிறது. ஆனால் இன்னும் எப்படி காலத்தை ஓட்டப் போகிறேன் என்று தெரியவில்லை. மாமனாரின் மொத்த சொத்தும் இவளுக்குத் தான் வரும். அதற்காக? அவனவன் சாப்ட்வேர் பொண்ணுகளைக் கட்டிக் கொண்டு பீட்ஸாகார்னர், டிஸ்கோத்தேன்னு அலையறாங்க. நான் மட்டும் இளிச்சவாயனா? அதை வேறு சொல்ல மறந்துவிட்டேன். திருமணம் முடிந்த ஒன்றரை மாதத்திலிருந்தே நான் ‘இனாவானா’த்தனமாக நடப்பதாக சுட்டிக் காட்ட ஆரம்பித்துவிட்டாள்.

நான் முடிவு செய்துவிட்டேன். விவாகரத்து கோரப்போவதாக நேற்று வக்கீலிடமும் பேசினேன். எப்படியோ மோப்பம் பிடித்த மாமனார், என் காலை வெட்டி படுக்கையில் போட்டு கடைசி வரைக்கும் கஞ்சித்தண்ணி ஊற்றுவேன் என்று செல்போனில் அழைத்து மிரட்டினார். அந்த மனுஷன் பேசிய தொனியைப் பார்த்தால் செய்தாலும் செய்வான். பெரிய சதிகாரன் போல பேசுகிறான். பிரகாஷ்ராஜ் மாதிரி என்றால் கூட கொஞ்சம் தைரியமாக இருக்கலாம். அசோகன், நம்பியார் மாதிரி பேசுவதுதான் பிரச்சினையே.

தற்கொலையும் ஒத்துவராது. ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன். அவசரத்துக்கு கயிறு கிடைக்காததால் அரைஞாண் கயிறை அறுத்து தூக்கு மாட்ட முயன்றேன். அறுந்து கீழே விழுந்துவிட்டேன். விஷயம் தெரிந்து அக்கம்பக்கத்தில் சிரிக்காத சின்னஞ்சிறுசுகளே இல்லை. தப்பித்துப்போனதால் சாவதை நினைத்தாலே பயமாகவும், வெட்கமாகவும் இருக்கிறது. அதனால்தான் தெரியாத ஊருக்கு ஓடிவிடப் போகிறேன். காசி, இமயமலை என்று எங்கேயாவது. இது பழைய ஸ்டைல்தான். ஆனால் எனக்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை.

கதை படிப்பவர்கள் வேறு எதாவது ஐடியா இருந்தாலும் கூட கொடுக்கலாம். ஆனால் சன்மானம் கொடுக்கும் அளவுக்கு எனக்கு வழியில்லை. இந்தக் கதை பிரசுரமானால் கிடைக்கும் தொகையில் ஐம்பது சதவிகிதம் தருவேன். மற்றபடி ஒரு அப்பிராணிக்கு வழி சொன்ன புண்ணியம் உங்களுக்குக் கிடைக்கும்.

கதை முடியப் போகிறது. கதையில் திருப்பமே இல்லை என்பவர்களுக்காகத் தான் இந்த பத்தி. என் வாழ்க்கையில் விபரீதத் திருப்பங்கள் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்குதான் இந்தக் கதையே. எனக்கு பெண் தேட ஆரம்பித்துவிட்டார்கள். யாராவது என் அம்மாவிடம் இந்தக் கதையை சொல்லுங்கள். நான் பிரம்மச்சாரியாக இருக்கப் போகிறேன் என இப்பொழுதுதான் சொல்ல ஆரம்பித்திருக்கிறேன்.

– நவம்பர் 20, 2006

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *