‘செல்’லாதவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 11,100 
 
 

நடிகர் மாதவனை எனக்குப் பிடிக்காது. அந்த அலட்சிய வார்த்தைகளும் முகபாவமும்! இத்தனைக்கும் என் தோழிகளை ‘அலைபாயுதே’ மாதவன் மடக்கிவிட்டதைப் புரிந்துகொண்டு ‘நானும் மேடி மாதிரி இருக்கேனா?” என்று மீசையை எடுத்திருக்கிறேன். ‘அன்பே சிவம்’ கமலின் கன்னத்தில் அறைந்த மாதவனைக் கோபித்துக்கொண்ட என் நண்பன் தாஸிடம் ”மாதவன் என்னப்பா செய்வாரு, அவர் கேரக்டர் அப்படி…” என்று மாதவனுக்காகப் பரிந்து பேசியிருக்கிறேன். இப்போதுதான் நிலைமை மாறிவிட்டது. மாதவன் மட்டும் என்றாவது ஜெராக்ஸ் எடுக்கவோ, ஸ்பைரல் பைண்டிங் செய்யவோ, லேமினேஷன் பண்ணவோ சென்னையின் சுமார் ரக காம்ப்ளெக்ஸ் ஒன்றின் ஒரு மூலையில் இருக்கும் – பக்கம் ஒன்றுக்கு 50 பைசா; பேக் டு பேக் 40 பைசா – ‘ஜாய் நகலகம்’ வந்தால் நான் கண்டபடி திட்டப்போவது உறுதி!

விஷயம் என்னவோ சிறியதுதான். நாவினால் சுட்ட வடுவுக்கு ஆயின்மென்ட் கிடையாது என்பது மாதவனுக்குத் தெரிந்திருந்தால், அந்த விளம்பரத்தில் நடித்திருப்பாரா? ”என்ன, உங்க பழைய செல்போனை இன்னும் நீங்க மாத்தலியா? என்னங்க, நீங்க… முதல்ல போய் உங்க போனை மாத்துங்க… இன்னுமா மாத்தாம வெச்சிருக்கீங்க?” என்ற ரீதியில் வெளிப்பட்ட மாதவனின் வார்த்தைகளை ஆராய்ந்ததில், நான் பின்வரும் முடிவுகளுக்கு வந்தேன்.

1. பழைய செல் வைத்திருப்பது பெருங்குற்றம். 2. அது அவமானத்துக்குரியது 3. இயலா மையைக் குத்திக்காட்டுகிறது. இத்தகைய மன உளைச்சல்களை ஏற்படுத்தியதை மாதவன் தனது நடிப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதலாம். ஆனால், நான் என்னுடன் வேலை பார்க்கும் கார்த்திகா, கலா, வெங்கி, அட்சராவிடம் சொல்லிவைத்திருக்கிறேன்… ”நான் டீ குடிக்கப் போறப்ப மாதவன் ஜெராக்ஸ் எடுக்க வந்தா, விட்டுடாதீங்க. தந்திரமாப் பேசி உட்கார வைங்க. மத்ததை நான் பாத்துக்கறேன். இதுக்குப் பேர் ‘ஆபரேஷன் மேடி.”’

”ஆமாமா. உங்கிட்ட வந்து ஜெராக்ஸ் எடுத்துட்டுதான் அவரு மறுவேலை பாப்பாரு… கண்டிப்பா தகவல் குடுக்குறோம்.”

இப்போது ஏன் மாதவனின் நினைவு வர வேண்டும்? கோபத்தின் பாதிப்புடன் ஏன் இன்றைய பொழுதைத் துவக்க வேண்டும்? யோசித்தேன். எழும்பூரில் ரயில் ஏறும்போது ஒருவர் கையில் இருந்த புத்தகத்தில் மாதவனின் படம் இருந்ததை நான் பார்த்ததுதான் காரணம். தொடர்ந்து அனிச்சையாக எனது பாக்கெட்டைத் தடவினேன். அதிர்ச்சியடைந்-தேன். அவசரமாக பேன்ட் பாக்கெட்டுகளையும் துழாவியதில் மேலும் அதிர்ச்சி. எனது செல்போன் எங்கே?

டிபன் சாப்பிட்ட பிறகு, மேன்ஷன் அறைக்குச் சென்று பர்ஸை மட்டும் எடுத்துக்கொண்டு அவசரமாக இறங்கியிருக்கிறேன்!

ஏதோ தவறு நேர்ந்துவிட்டது; அல்லது, நேரப் போகிறது. ஒபாமாவிலிருந்து உள்ளூர் கவுன்சிலர் வரை என்னை அழைத்து ஏமாறப் போகிறார்கள்; இதுவரை வராத முன்னேற்ற வாய்ப்புகள் இன்று பார்த்து என்னை அழைக்கவிருக்கின்றன; நிச்சயமாக இது அபசகுனத்-தின் அறிகுறி. எனக்கான சொற்களும் தகவல்களும் செல்லுக்குள்ளேயே மடியப்போகிற பதற்றமும், உடல் உறுப்புகளில் ஒன்றை இழந்த தவிப்பும் என்னை அணுக, இன்னொரு புறமிருந்து பரவசமும் என்னை நெருங்குவதை உணர்ந்தேன். நான் நிகழ்காலத்திலிருந்து அழிக்கப்பட்டுக் கடந்த காலத்துக்குச் சென்றுவிட்டேன்!

ரயிலின் வாசலருகே கூந்தல் பறக்கக் கம்பியைப் பிடித்திருந்த இளம்பெண்ணின் கையில் இருந்தது லேட்டஸ்ட் செல்போன். அவளது கையையும் அந்த அழகிய போனையும் பிரித்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருந்தன. நேற்று போன் செய்த சுப்பிரமணியன் 3ஜி போனை வியந்திருந்தான். ஒருவேளை, இது அந்த ரகமோ?

இந்த இடத்தில் எனது செல்லை நினைக்காமல் இருக்க முடியவில்லை. எனது வயோதிக செல் குறித்து நான் அடிக்கடி, ”சென்னையிலுள்ள எல்லா செல்போன்களும் திருட்டுப் போய்விட்டாலும், ஒரே ஒரு செல் மட்டும் சீந்துவாரற்று அதே இடத்தில் கிடக்கும்….” என்று கைவிடப்பட்ட அந்த வஸ்துவின் பரிதாப நிலையைக் குறிப்பிடுவதுண்டு. உடன் வேலை பார்த்து, வேறு கடைக்குச் சென்றுவிட்ட கலையரசிகூட முந்தின நாள் போனில், ”அந்த செங்கல்ல மாத்திட்டீங்களா அண்ணா?” என்றாள்.”அல்டி மேட் எய்ம் ஆஃப் த போன் இஸ் ஸ்பீக்கிங்தானே கலை?” என்ற சமாளிப்பு பெருமூச்சில் முடிந்தது.

போன வாரம் மயிலாப்பூரில் அலறிய எனது செல்-லுக்கு செவி சாய்த்தபோது, எதிரிலிருந்த அழகி சிரிப்பை அடக்கியவாறு வேறு திசை பார்த்தாள். உடனே, ஒரு பாவமும் அறியாத அவளது அம்மா திட்டுக்களைப்பெற்றுக் கொண்டாள். இன்றைய தினம் இது போன்ற அவமானங் களுக்கு ஆளாகப் போவதில்லை என்பது கைபேசியைக் கைவிட்டதால் நிகழ்ந்த உடனடி நன்மை. நிம்மதியுடன் நான் எனது சுற்றுப்புறத்தைக் கவனித்-தேன்.

ரயில், செல்களின் சிணுங்கல்களால் நிறைந்திருந்தது. காற்றில் மிதக்கும் வார்த்தைகள் மீது மனிதர்கள் மோதிக்-கொண்டு இருந்தார்கள். கையில், கழுத்துப் பட்டையில், இடுப்பு பெல்ட்டில், ஹேண்ட் பேக்கில், பாக்கெட்டில், பழம் விற்கும் பெண்ணின் பழக்கூடையில்… எங்கெங்கும் செல்கள். இப்போது சுதந்திரமாகத் திரியும் குழந்தைகளின் அப்பா, அம்மாக்களை மாதவன் எதிர்காலத்தில் ”என்னங்க நீங்க, பொறுப்பில்லாம இருக்கீங்க..? இன்னும் உங்க சிசுக் களுக்கு ஜூனியர் செல் வாங்கிக் குடுக்கலியா? எந்தக் காலத்துல இருக்கீங்க நீங்க? செல் உபயோகிக்கிற குழந்தை களோட அறிவு வளர்ச்சி 0.10% அதிகமாகுது. அது குறைய நீங்க காரணமாகாதீங்க…” என்று திட்டலாம்.இந்தப்பிச்சைக் காரரைக்கூட அவரது உடை மற்றும் தொழில் காரணமாக நான் புறக்கணிக்கப்போவதில்லை. ஏனென்றால், இவரிடம் எல்லாம் எங்கே செல் இருக்கப்-போகிறது என்று நினைத்த மறுகணம் அவரிடம் இருந்து புத்தம் புதிய செல் பாக்கெட் டிலிருந்தோ, ஜாக்கெட்டில் இருந்தோ வெளிப்பட்டு இந்தியப் பொருளா-தாரத்தை எனக்கு விளக்கியிருக் கிறது.

சற்றுத் தள்ளி இருந்த பெண்ணை அவளது செல் கடுமையாக வேலை வாங்கிக்கொண்டு இருந்தது. பாடல் கேள் என்றது; சும்மா நோண்டு என்றது. பின் இரண்டு நிமிடங்கள் ஓய்வளித்தது. மீண்டும்..! செல்லின் அனைத்து வசதிகளையும்பயன் படுத்திவிட்டுத்தான் ஓய்வாள் போலி-ருந்தது.

எதிரில் அமர்ந்திருந்த ஜீன்ஸ் – டி-ஷர்ட் பெண் தன் சிநேகிதனுடன் சிரித்துப் பேச, அவன் தனது போனில் இருந்து எதையோ காட்டிக்கொண்டு இருந்தான். பின், அவளை செல் கேமராவால்சிறைப்- படுத்தினான். இதற்கு அவள் தன்னால் முடிந்த அளவு ஒத்துழைப்பு கொடுத்தாள். அப்புறம், அவற்றை ஆர்வமுடன் ரசித்துப் பார்க்கவும். மாம்பலம் ஸ்டேஷன் வந்துவிட்டது. போன வாரம் நான் இதே ஸ்டேஷனில் நின்றிருந்தபோதுதான் கடைக்கு பேப்பர் சப்ளை செய்யும் தாஸிடம் இருந்து போன் வந்தது. அவனது போனில் சில நடிகைகள் குளிக்கிறார்கள்; ஆடை மாற்றுகிறார்கள்; சல்லாபிக்கிறார்கள்; உடனே வந்தால் தரிசிக்கலாம். நான் ப்ளூடூத், கேமரா, வீடியோ ரெக்கார்டிங் வசதி-யுடன் ஒரு போனை இரண்டே மாதங்களில் வாங்கிவிட இயலும் என்று நம்புவதாகவும், அதுவரை மேற்படி காட்சிகளைப் பாதுகாக்கும்-படியும் இதுவரை மூன்று முறை நேரிலும், ஐந்து முறை போனிலும் விண்ணப்பித்திருக்கிறேன்.

இன்னொருத்தியின் நீள விரல்கள் அவளது போனில் நடனமாடிக்கொண்டு இருந்தன. அவளது குறுந்தகவல் பரிமாற்ற வேகம் என்னை பிரமிக்க-வைத்தது. அவள் அனுப்ப, அனுப்ப மறுமுனையும் பதில் அளிப்பதை செல்லின் ஒலியில் இருந்து புரிந்துகொள்ள முடிந்தது. இவளை கலாவுக்கு ஒப்பிடலாம் போல. அவளது விரல்களும் மொழி பேசுபவை. சிறந்த எஸ்.எம்.எஸ் தத்துவ ஞானி. அப்துல் கலாம் சொன்னது, அம்பானி சொன்னது, அரிஸ்டாட்டில் சொன்னது, அறுவை மற்றும் கடி ஜோக்குகள், காலை – மாலை – இரவு – வணக்கங்கள், தேச பக்தி, நண்பர் தினம், காதலர் தினம், தன்னம்-பிக்கை என விநியோகித்துக்கொண்டே இருப்பாள். அவளுக்கு எங்கிருந்துதான் வருமோ? அத்தனையை-யும் அவள் தனக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்பி-விட்டுத்தான் ஓய்வாள். ‘குறுந்தகவல் போதையா? கவலை வேண்டாம்; குணப்படுத்தி-விடலாம்!’ என்கிற சுவரொட்டிகள் என்றாவது கண்ணில் படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஆங்கிலப் பத்திரிகையில் மூழ்கியிருந்த நடுத்தர வயதுக்காரரை அவரது செல் அழைத்தது. போனை அருகில் கொண்டு சென்றதும், அவரது முகபாவம் மாறியது. யோசித்தார்; குழம்பினார். அழைப்பை ஏற்றுக்கொள்ள ஓரிரு முறை அவரது விரல்கள் முன்னேறின. ஓய்ந்த அழைப்பொலி மறு சுழற்சி-யைத் துவங்கியது. இப்போது தெளிவுபெற்ற அவர் தனது காதுகளுக்கு தற்காலிக செவிட்டுத்தன்மையை அளிப்பதில் முழு ஈடுபாட்டைக் காட்டினார். அவர் தன்னை அழைத்தவரை நேரில் சந்திக்கிற போது, ”போனை சைலன்ட் மோட்ல வெச்சிருந் தேன்” என்று சொல்லக்கூடும். நெருங்கிய நண்ப னாக இருந்து, தற்போது வெறும் செல் உறவினனாய் சுருங்கிவிட்ட ஆறுமுகத்தின் அழைப்புகளுக்கு நான் இதுபோன்ற வரவேற்பை அளித்திருக் கிறேன்.

ஸீட் காலியானதும் என் பக்கத்தில் அமர்ந்துகொண்ட இளைஞனை செல் சிறந்த விளையாட்டு வீரனாக மாற்றத் துவங்கியது. அப்புறம், அவள்!

அவள் – எழும்பூரில் இருந்தே கனவுலகில் மிதக்கும் கண்களோடு பேசிக்கொண்டு இருந்தவள் – இன்னமும் பேச்சை நிறுத்தவில்லை. உதடுகள் மட்டும் அசைந்து-கொண்டே இருக்க, வார்த்தைகள் காதில் விழவில்லை. இந்த இடத்தில் அட்சராவை என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. கல்யாணத்துக்கு முன்புகூட அவள் இவ்வளவு பேசியதில்லை. கணவன் வேலைக்குப் போன பிறகு பேசத் துவங்கிய அவள் தொடர்ந்து 1 மணி 20 நிமிடங்கள் செல்லுரை ஆற்றி-னாள். ”அப்-புறம்?”; ”வேற?”; ”பெறகு?”; ”நீங்கதான் சொல்-லணும்; ”வேற விசேஷம் ஒண்ணுமில்ல…” இப்படிப் பேசியே தான் ஒரு சிறந்த செல் பேச்சாளி என்பதை நிரூபித்-தாள். எந்த அரசியல்வாதியாவது தேர்தல் வாக்குறுதி-யாக இத்தனை மணி நேரம் டாக்டைம் தருவோம் என்று கூற இந்தக் கும்பல் காரணமாக அமையும்.

தூங்கிக்கொண்டு இருந்த ஒருவர் செல்லால் விழித்து ‘நான் இப்போ முக்கியமான மீட்டிங்ல இருக்கேன்…” என்று அழைப்பைத் துண்டித்தார். நான் மீட்டிங்கில் இருந்தது கிடையாது. ஆனால் ‘கொஞ்சம் பிஸி’யாக இருந்திருக்கிறேன்.

செல்களின் புழக்கத்துக்குப் பிறகு, தேசத்-தில் நிச்சயம் பொய்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.

திடீரென எல்லோரும் என்னையே பார்ப்பது போல உணர்வு ஏற்பட்டதால், தப்பித்தல் பொருட்டு கண்களை மூடிக்கொண்டேன். காதுகள் அவ்வசதியைப் பெறாததால், ”கடவுளே, எப்போ? எப்படி? ஸ்பாட்-லேயா? எந்த ஆஸ்பத்திரி?”; ”ஃப்ரிட்ஜ்ல தோசை மாவு இருக்கு..”; ”ரொம்ப சந்தோஷம். எப்ப ட்ரீட்..?” என் றெல்லாம் கலவையான தகவல்கள் கிடைத்தன. இது போன்ற அவசியங்களுக்காக ஆயிரக்-கணக் கில் அபத்தங்களை சாட்டிலைட்கள் சகிக்கின் றன.

ஊர்தி பல்லாவரத்தை நெருங்கியபோது ஒரு செல் கைதி, ”இல்லீங்க சார், நான் இப்போ கன்னியாகுமரில நின்னுட்டிருக்கேன்…” என்று பரிதா பமாகச் சொன்-னான். பாவம், என்ன நிர்பந்தமோ… நான் அதிகபட்சம் தாம்பரத்தைத்தாண்டியது இல்லை.

பல்லாவரத்தில் இறங்கி, பிரதான சாலையில் கடை வைத்திருக்கும் நண்பனிடம் புதிய வேலைவாய்ப்பு ஏதேனும் வந்தால் தகவல் தரும்படி சொல்லிவைத்தேன். பிறகு, குரோம்பேட்டை. தூரத்துச் சொந்தமான ஒரு அக்காவின் குழந்தைக்குப் பிறந்த நாள் பரிசளித்தேன். அந்தக் குடும்பத்துடன் மாலை குமரன் குன்றம் கோயி-லுக்குச் செல்லும்போது அத்தானின் நண்பர் எனது செல்லற்ற நிலையைக் கண்டு, ”என்னால எல்லாம் ஒரு நிமிஷம்கூட போன் இல்லாம இருக்க முடியாது. இருக்க விடமாட்டாங்க. போன் மேல போன் வந்துக் கிட்டே இருக்கும்” என்றார். அதில் ”நீ பிஸியானவன் இல்லை…” என்கிற செய்தி ஒளிந்திருந்தபோதிலும் எனக்குக் கோபம் வரவில்லை.

பரிதாபத்திற்குரியவர்; மின்காந்தக் கதிர்களால் ஆளுமை செலுத்தப்படுபவர்; பின் தொடரப்படுபவர்; கண்காணிக்கப்படுபவர்; இரண்டாம் பெயராய் இலக் கங்களைக் கொண்டவர். ஆனால், நானோ இந்த நொடியில் விலங்குகள் அற்றவன். எனது பயணத்தில் நான் மட்டுமே என்னுடன் வருகிறேன். என்னுடன் நான் மட்டுமே இருக்கிறேன். எனது மறதி என்னை சுதந்திரமானவனாக ஆக்கியிருக்கிறது.

என்னால் உயிருள்ள புன்னகையை உலகுக்கு அளிக்க முடிந்தது. தூது செல்லும் நவீனப் புறாக்களிடம் இருந்து தப்பித்ததால், என்னில் ஏற்பட்ட பரவசத்தை என்னைக் கடந்து செல்லும் அனைவரும் கவனத்தில்-கொள்வதாக நம்பினேன். காலமற்றுப் போய், பெய-ரற்ற நகரத்தில் திசைகளற்றுத் திரியும் எனது அடை-யாளமற்ற நிலையை ரசித்தேன். வாரம் ஒரு முறை ‘செல் தீண்டா விரதம்’ இருப்பது நல்லது. இந்தக் கணத்-தின் பேரின்பத்தில், நடிகர் மாதவன் என் கடைக்கு வந்து மகிழ்ச்சியுடன் ஒளிநகல் பிரதிகள் எடுத்துச் சென்றார்.

மேன்ஷனுக்கு வரும்போது இரவு பத்தாகிவிட்டது. ஆர்வமுடன் கட்டிலின் மீது இருந்த போனைப் பார்த்-தேன். முன் எப்போதையும்விட அழகாக இருந்தது அது. எடுத்தேன். ஐந்தாறு மிஸ்டு கால்கள், பத்து குறுஞ்செய்திகள்… இப்படி எதுவும் இல்லை!

நம்ப முடியாமல் மீண்டும் பார்த்தேன். செல் என்னை கேலி செய்யத் துவங்கியது. எங்கே கலா, அட்சரா, முதலாளி, வெங்கி… குறைந்தபட்சம் ஒரு ராங் கால் கூட இல்லை!

ஒருவேளை, ரிப்பேரோ?

இல்லை. கலவரம்-கொண்-டேன். ஏறக்குறைய 12 மணி நேரத்துக்கும் மேலாக நான் யாருக்குமே தேவைப் படவில்லை. இந்தப் பெரு-நகரத்தில் எனது எண்கள் கவனிப்பாரற்று இருந்-திருக்-கின்றன. எப்படி இங்கே காலம் தள்ளப்போகிறேன்? தனிமை-யின் கைகுலுக்கலை என்னால் உதற முடிய-வில்லை. நான் ஒரு செல் அநாதை!

– ஜூன், 2009

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *