ஹலோ மனோ, என்ன போன மாசம் ரிட்டையர் ஆயிட்ட. பொழுது போறது கஷ்டமா இருக்குமே? பொழுது எப்படிப் போவுது?
பொழுது நம்மளை விரட்டிடும் போலிருக்கு. வேலைக்குப் போறப்ப கொஞ்சம் சலுகை இருந்தது. ஏழரை, எட்டுக்கு எழுந்தா போதும். இப்போ என்னடாவென்றால், ஆறு மணிக்கே எழுந்து பால் வாங்கவும், கூட சமையலுக்கு வேண்டியது வாங்கவும் கிளம்பியாவனும்.
அப்புறம் என்ன பண்றே, சும்மா தான் இருக்கியா?
சும்மாவா? அதெல்லாம் இல்ல. ஏதாவது கதை-கிதை , நாவல்-கீவல்னு எதாவது எழுத ட்ரை பண்றேன்..
சும்மா என்கிட்ட கதை விடாதேப்பா ! அந்த காலத்திலிருந்தே உனக்கு பொய் சொல்ல வராது. இப்போ எப்படி கதை எழுத முடியும்.
கதையென்னா வெறும் கதை கிடையாது. நிஜமான கதை.
அப்போ வரலாற்று கதைன்னு சொல்லு!
வரலாற்று கதைன்னு சொல்ல முடியாது. ஆனா, ஒரு விதத்தில் அப்படியும் சொல்லலாம். சரியாய் சொல்லணும்னா அது சமூகத்தில் நடந்த இல்ல நடக்கிற மாதிரியான கதைன்னு சொல்ல முடியும்.
அதாவது நடந்த சம்பவம்னு சொல்லலாமா? இல்ல கட்டுரைன்னு சொல்லலாமா?
கட்டுரைன்னு சொல்ல மாட்டேன். ஏன்னா, கதை என்பது கற்பனை கலந்த கட்டுரைன்னு கூட சொல்லலாம். ஆனா, என்னை நீ ரொம்ப குழப்பரப்பா ? என்னை கொஞ்சம் யோசிக்க வுடு.
கதைன்னா என்னன்னு கரெக்ட்டா சொல்லிடு. நா பாட்டுக்குப் போயிகிட்டே இருக்கேன்.
அட, இது என்ன வம்பாப் போச்சு. நான் இன்னு ஒரு கதை கூட எழுதி முடியல. சரிப்பா , நான் ஒரு வேலை பண்றேன். நாம பேசினத எல்லாம் அப்படியே எழுதி ஒனக்கு வாட்ஸாப்ல இல்ல கிட்ஸாப்ல அனுப்பறேன். நீ பார்த்துட்டு, அது , கதையா கட்டுரையா , வரலாறா பூகோளமா , பொய்யா நிஜமான்னு முடிவு செஞ்சுக்கோ. ஓகே வா?
மறுமுனையில் போன் அமைதியானது.