சில விளையாட்டுக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 15, 2014
பார்வையிட்டோர்: 16,283 
 
 

(சின்ன ராஜாமணி சொன்னபடி)

லீவ் நாள் வரப்போறதுன்னு நினைச்சுண்டாலே எனக்குச் சந்தோஷம் தாங்கல்லே. நடுக் கிளாஸ்லே ‘டட்டட் டோய்!’ன்னு கத்துவோமான்னு தோண்றது. ஆனால், நான் அப்படிக் கத்தல்லை. ஏன்னா, வாத்தியார் ஏதாவது நினைத்துக்கொள்வார். அவர், ”என்னடாலே! என்ன ஆனந்தம் தாங்கல்லே! வீட்டுக் கணக்கைப் பார்த்தவுடனே அப்படியிருக்கோ?” இன்னுட்டு இரண்டு தீட்டுத் தீட்டிடுவார்.

அப்பா ஒரு நாளைக்கு என்னை ‘டென்னிஸ் கோர்ட்’டுக்கு அழைத்துக்கொண்டு போயிருந்தார். அதுமுதற் கொண்டு எனக்கும் டென்னிஸ் ஆட வேண்டுமென்ற ஆசை வந்துடுத்து. ஆனால் கோபாலக் கொத்தன் சந்திலே டென்னிஸ் ஆடறது ரொம்ப சங்கடமாயிருக்கு. ஏன்னா குறுக்கே ஒரு வலையைக் கட்டிவிட்டுச் சின்ன ஜயராமனோடே விளையாட ஆரம்பிச்ச உடனே, அப்பத்தான் கன வேகமாக ஒரு ஜட்கா வண்டிக்காரன் வண்டியைக் குறுக்கே விட்டடிப்பான்.

நானும் ஜயராமனுமாகக் கொல்லையிலே போய்க் கொல்லைச் சுவரை வலையாக உபயோகப்படுத்திக் கொண்டு ஆடிப் பார்த்தோம். அதுவும் சுகப்படல்லை. ஏன்னா, ஜயராமன் பந்து முதலில் போடுவதற்கு ஒரு பீப்பாய் மேலே ஏறி நிற்க வேண்டியிருக்கு. அவன் அதை விட்டுக் கீழே இறங்கிவிட்டால் அப்புறம் அவனை நான் பார்க்க முடியாது. ஒரு நாளைக்கு அரை மணி விடாமே அவனோடே கொல்லையில் டென்னிஸ் ஆடினேன். அப்புறம் பார்த்தால் அவன் உள்ளே ரொம்ப நாழி முந்தியே காபி குடிக்கப் போயிட்டான்னு தெரிஞ்சுது.

பட்டணத்துலே ஒரு பொண் டென்னிஸ்லே ஒரு பந்தைப் போட்டு வெளுத்து வாங்கிவிட்டாளாம். அப்பா அந்தப் பந்தைப் பார்த்து ரொம்பப் பரிதாபப்படுகிறர். ஏன்னா, அம்மாவுக்கும் பாட்டிக்கும் நடுவிலே அந்தப் பந்து மாதிரி அப்பா குறுக்கேயும் நெடுக்கேயும் கஷ்டப்படறார்.

நானும் ஜயராமனுமாக வீட்டுக்குள்ளேயே விளையாடுவோம். ஒரு நாளைக்குக் கூடத்திலேயே ஒரு கூடாரம் போட்டு விளையாடினோம். தாத்தா படுத்துக்கிற பாயைத் தான் கூடாரமாக அடித்தோம்.

அப்புறம் வேஷம் போட்டுக்கொண்டோம். நான் கலர் கலராய் டிராமாக்காரன் மாதிரி சொக்காய் போட்டுக் கொண்டேன். அப்பா சொல்றார்.“டிராமாக்காரன் எல்லாம் காசு சேர்க்கிறதுக்காகப் பட்டுக் கட்டிண்டு வேஷம் போடறான். நம் ஆத்துப் பெண்டுகளெல்லாம் ஆம்படையான் காசைத் தொலைக்கிறத்துக்காகக் கராச்சிப் புடைவை கட்டிக்கிறதுகள்“ அப்படீன்னு.

அது கிடக்கட்டும். இப்போ கூடாரத்தைப்பற்றிச் சொல்றேன். எங்கள் ஊரிலே ஒரு ஸர்க்கஸ்காரன் கூடாரம் போட்டான். கூடாரம்னா நிறைய ஒட்டைகளையெல்லாம் துண்டுக் கித்தான்களாலே சேர்த்துப் போட்டுக் கட்டி வைக்கிறது. அதுக்கு நடுவிலே அதை நேரே நிறுத்தறத்துக்கு ஒரு கழி நிற்கும். ஆனா அது கூடாரத்தை நேரே நிறுத்தறதில்லை. ராத்திரிப் பாதி ஸர்க்கஸ் ஆகிறபோது மழை வந்துடும். ஸர்க்கஸ்காரன் சிங்கக்தோட கூண்டிலே போய்ப்படுத்துக் கொண்டு தூங்கிப் போயிடுவான். நாமெல்லாரும் கச்சத்தைக் கட்டிண்டு யாராத்துத் திண்ணை கிட்டக்க இருக்குன்னுட்டுத் தேடிண்டு ஒடணும்.

ஒரு நாளைக்கு அப்பா ஆபீஸ் போயிட்டார். பாட்டி அடுத்தாத்திலே சுகுந்தி அம்மாமிக்கு, ‘லலிதாம்பா சோபனம்’ வாசித்துக் காட்டிக்கொண்டிருந்தாள். அம்மாமி குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தாள். மாமா ஆபீஸ¤க்குப் போறச்சே என் கிட்டே ஓரணாக் கொடுத்துட்டுப் போயிட்டா. கூடாரம் கட்றதிலே சேர்த்துக்க மாட்டேன்னுட்டா. “போனாப் போகட்டும்; ஒரணாத் தான் கிடைத்துவிட்டதே” இன்னு விட்டுட்டேன்.

கூடாரம் கட்டி முடிய ரொம்ப நாழியாச்சு. ஏன்னா நான் சுவரிலே ஆணியை அடித்தேன். ஜயராமன் ஆணியைப் பிடித்துக்கொண்டிருந்தான். அவன் முட்டாள்தனமா வெறுமனே கையைக் கையைச் சுத்திக்கு அடியிலே கொண்டு வந்துகொண்டிருந்தான். ஆணிமேலே விழவேண்டிய அடியெல்லாம் வீணா அவன் கைமேலே விழுந்தது.

உடனே கூடாரத்துக்குள்ளே போய்ப் படுத்துக்கொண்டு விட்டோம். நான் பெரிய பெரிய சொப்பனமெல்லாம் கண்டேன். மெராஸ் ஹைகோர்ட்டு டிராம் வண்டி மேலே விழுந்து, டிராம் வண்டி மாமா பைஸிகிள் மேலே விழுந்து எல்லாமாச் சேர்ந்து என் கூடாரத்து மேலே விழுந்தாப் போலேயிருந்தது. உடனே முழுச்சுண்டுட்டேன். சொப்பனமாக்கும்னு நினைத்தேன். ஆனால், அது அப்படியில்லை. கூடாரம் என் மேலே விழுந்து கிடந்தது.

வெளியிலே மெதுவாய் வந்து பார்த்தால் அம்மாமி முழிச்சுண்டு, ”விஷமம் பண்றயளா?” இன்னு சொல்லிக் கொண்டு எல்லாத்தையும் கலைத்துக் கொண்டிருந்தாள்.

ஐப்பசி மாசத்திலே ஒரு ராத்திரியிலே தீபாவளி வரும். அதுவும் ஒரு பெரிய விளையாட்டிலே சேர்ந்ததுதான். மூன்றாம் வருஷம் தீபாவளியிலே நான் ஒரு மாதிரியாயிருந்தேன். படுக்கையிலே படுத்துக்கொண்டு காலு, கை, முகம் எல்லாம் நெருப்புச் சுட்ட காயமாய்க் கிடந்தேன். கட்டுகளுக்கெல்லாம் நடுவிலே காபி குடிப்பதற்கு மாத்திரம் கொஞ்சம் இடம் இருந்தது.

ஏன் அப்படி ஆச்சுன்னா, நான் பை நிறையப் புஸ் வாணத்தைப் போட்டுக்கொண்டு நெருப்புப் பெட்டியைக் கையிலே வைத்துக் கொண்டே யிருந்தேன். திடீர்னு ‘புஸ்ஸ்…..’ அப்படீனுது பாரேன்! எல்லாம் சேர்ந்தாற்போலே எரிந்துபோயிடுத்து. எல்லாரும் என்னைப் பார்த்து அழுதா. ஆனால் எதிர் வீட்டு ஜயராமன் மட்டும். “என்னடாது! எனக்குக் கொடுக்காமே எல்லாத்தையும் ஒரே தரமா சுட்டுட்டையே!” அப்படீன்னான்.

தீபாவளி அன்னிக்கு என்ன பண்ணினாலும் பிசகு இல்லை; எல்லாம் வெறும் விஷமம் தான். விஷமத்துக்காக வருஷத்திலே ஒரு ராத்திரிதான் வைத்திருக்கிறார்கள். ஆனால் நானும் ஜயராமனும் ஒரு வாரம் விஷமம் செய்வோம். எப்போ பார்த்தாலும் புஸ்வாணம் கொளுத்திக் கொண்டேயிருப்போம்.

எங்கப்பா ரொம்ப வேடிக்கைக்காரர். நான் பாட்டி புடவையிலே மெதுவா ஒரு ஊசி ஸரத்தைக் கட்டிவிட்டேன். அது படார் படார்னு வெடிச்சுடுத்து. பாட்டி பயந்தே போயிட்டாள். அப்புறம் கோவிச்சுண்டு ஊருக்கு போயிட்டாள். அப்பா வந்து, “ராஸ்கல்! என்னடா பண்ணினே பாட்டியை! உன்னை உரிச்சுடறேன், பார்” அப்படீன்னு கத்திக்கொண்டு என்னை மாடிமேலே துரத்த்¢னார். உயர வந்து உடனே ஒரு கழியை எடுத்து மெத்தையை ‘லொட் லொட்’ டுனு அம்மா காது கேக்கறாப்லே அடித்தார். நானும் அடி விழுந்துட்டாப்லே அழுதேன். அப்புறம் அப்பா எனக்குக் காலணாக் கொடுத்து இன்னொரு ஊசிஸரம் வாங்கிக்கச் சொன்னார்.

எங்கப்பா ரொம்ப வேடிக்கைகாரரர்னு நான் அப்பவே சொல்லலையா?

நானும் ஜயராமனுமாக ஒரு பெரிய விளையாட்டு விளையாடினோம். வீட்டிலே மூன்றாவது மாடி மேல்படியிலே கிளம்பினோம். நான் கையிலே ஒரு கிளாஸ் டம்ளரோடே ஒடி வந்தேன். ஜயராமன் துரத்தித்கொண்டே வந்தான். ஒரு மாடி சரியா ஒடி வந்துவிட்டோம். இரண்டாம் மாடி இறங்கச்சே ஜயராமனுக்குச் சறுக்கி விட்டுடுத்து.

அவன் கைக்கிட்ட என் சிண்டுதான் இருந்தது; பிடிச்சுண்டான். இரண்டு பேருமாக மணிக்கு அறுபது மைல் வேகத்திலே விழுந்தோம். அப்போதான் தாத்தா பூஜைக்கு அக்ஷதை பொறுக்கிக்கொண்டு மேலே வந்து கொண்டிருந்தார். அப்புறம் தாத்தா வேறே அக்ஷதை வேறே கிளாஸ் டம்ளர் வேறேன்னு பிரிச்செடுக்கறதுக்கு அரை மணி ஆச்சு. “களவாணிப் பயலே! பகல்லே மாடு குடிக்கிப் பயலே!” அப்படீன்னு எல்லாம் தாத்தா
சொன்னார். “போனாப் பேறார். நம்ம தாத்தாதானே?” இன்னு விட்டுட்டேன். அம்மா என்னை, “நமக்குப் பெரிய கழுதையா வந்திருக்கே” அப்படீன்னா. அப்பா, “இந்தப் பயலை நன்னா உதைச்சு எடுக்கணும். நாளாச்சு, முதுகு ஊறுகிறதாக்கும்” இன்னு சொன்னா. ஆனால் எல்லாரும் போன அப்புறம் காலணாக் கொடுத்து பெப்பரமுட்டு வாங்கிக்கச் சொன்னா.

எல்லாவற்றையும் விட நல்ல விளையாட்டு காவேரிக்கரையிலே போய்ச் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது. அப்பா சொல்றா; “பதினெட்டாம் பேர் ஏதுக்காகன்னா, இருக்கப் பட்ட ஈ, கொசு எல்லாத்தையும் வரவழைக்கிறதற்குத்தான். அதெல்லாம் உன் மேலேயாவது உன் சாதத்து மேலேயாவது உட்காரும்” அப்படீன்னா. என்னைக் கேட்டால் எப்படியிருந்தாலும் பாதகமில்லை. ஏன்னா, அன்னிக்குக் குழம்பும் சாதமும், மோரும் சாதமுமா சாப்பிடப் போகிறாம்? சர்க்கரைப் பொங்கல், தயிர் வடை இப்படி ஷோக் ஷோக்காய்ப் பக்ஷணம் எல்லாம் திங்கப் போறோமே!

காவேரிக்குப் போகிறபோது அம்மா கையிலே மூட்டையைக் கட்டிக் கொடுத்து அழைத்துக்கொண்டு போகணும், ஜாக்கிரதையாக ஒண்ணும் கீழே விழாமல் பார்த்துக் கொண்டு போகணும், ஒரு நாளைக்கு நானும் ஜயராமனும் ஒரு அம்மாமி வைத்துக்கொண்டிருந்த பக்ஷண மூட்டையை மெதுவாய்க் கிளப்பிக்கொண்டு போய்விட்டோம். அந்தக் கூடை நிறையச் செங்கல்லைப் போட்டு ஜயராமன் ஒசைப் படாமல் கொண்டுபோய் வைத்துவிட்டான். அவளுக்குப் போரும் போரும்னு அன்னிக்கு ஆயிருக்கும்.

ஒரு தரம் அடுத்தாத்திலே ஆற்றங்கரைக்கு நிலாச் சாப்பாடு சாப்பிடப் போனா. தேங்காய்ச் சாதத்திலே உப்பே இல்லை; கொண்டு போக மறந்து போய்ட்டா. அடுத்த தடவை போகிறபோது எல்லாரும் தலைக்குக் கொஞ்சம் உப்பு, புளி, மிளகாய்ப் பொடி எல்லாரும் எடுத்துக் கொண்டு போனா. ஆனாக்கே இந்தத் தடவை சாதம் கொண்டு வர மறந்து போய் விட்டா. ஆகையால் ஒண்ணும் சாப்பிடாமே திரும்பிவந்துட்டா.

அம்மா சர்க்கரைப் பொங்கல் மேலே தோசை மிளகாய்ப் பொடி பொட்டலம் வைத்துக்கொண்டு வந்தாள். திறந்து பார்த்தால் ரெண்டும் கலந்து போயிருந்தது. “வயத்துக் குள்ளே போய்மட்டும் கலந்தால் பாதகமில்லையோ?” அப்படின்னு அப்பா சொல்லிவிட்டார்.

இப்போ பள்ளிக்கூடத்திலே ஒரு பெரிய காரியம் நடந்திருக்கு. நான் மட்டும் நாவல் எழுதுகிறவனாயிருந்தால் “பள்ளிக்கூட மர்மம் அல்லது கிளிமூக்கின் மசிக்கூட்டில் சுண்ணாம்பைப் போட்டவன் யார்?” அப்படீன்னு ஒரு நாவல் எழுதிவிடுவேன். இதனுடைய ரகஸ்யம் மட்டும் வெளியிலே வராதுபோல் இருக்கிறது.

கிளிமூக்கு எல்லார் பேரிலேயும், ஒன்றும் செய்யாமலிருக்கும்போதே சந்தேகப்படுவார். அது அவருடைய குணம், நல்லவன் போல் மூஞ்சியை வைத்துக்கொண்டிருந்தாலும் உபயோகமில்லை. அப்படியிருந்தால் இன்னும் ஆபத்து. “அடே ஆசாமணி!” அப்படீன்னு எகத்தாளமாய்க் கூப்பிட்டு, “என்னடா, காலம்பர முதற்கொண்டு ரொம்ப சாதுமாதிரியிருக்கிறாய்? இது என்ன பெரிய விஷமத்துக்கு அடிப்பாரம்?” என்பார்.

நானும் ஜயராமனுமாகச் சேர்ந்து ஒரு பொம்மை பண்ணியிருக்கிறோம். அதிலே முக்கியமாய் மண்ணும் வைக்கோலுந்தான் இருக்கிறது. அதற்கு மூக்குக் கண்ணாடி, சட்டை எல்லாம் போட்டு அதன் கழுத்திலே ‘கிளிமூக்கு’ இன்னு ஒரு பேப்பரிலே எழுதித் தொங்கவிட்டிருக்கிறேன்.

ஆனாக்கே கிளிமூக்குக்கு நல்ல பொம்மைகளைக் கண்டால் பிடிக்குமோ என்னமோ, எனக்குச் சந்தேகமாய்த்தான் இருக்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *