சாமல்ஷாவின் திருமணம்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 5, 2023
பார்வையிட்டோர்: 7,794 
 

(1957 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்பார்ந்த நேயர்களே! சிறிது தாழ்ந்த குரலில் இந்தத் தலைப்பைப் படித்துவிட்டு, நீங்கள் புலமை என்னும் படி ஏறிப் பெருங்காப்பியம் படிக்கப் போவதாகக் கனவு காண்பீர்களானால், கவிரத்னம் என்று மூவுலகத்தோராலும் பாராட்டப்படும் நரசிம்மரின் புதல்வரது வரலாற்றை அறிய ஆசை கொண்டீர்களானால், பக்திச் சுவையைப் பருக ஆண்டவனின் திருநாமத்தைச் செவிமடுக்கும் பேறைப் பெற விரும்புவீர்களானால், தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள், எனது இந்தப் படைப்பைத் தாங்கள் மூட்டை கட்டி ஒரு ஒதுப்புறத்தில் வைத்துவிட வேண்டியதுதான்.

நான் புலவர் பெருமக்களின் வரிசையிலே என் பெயரைப் பிராபல்யப்படுத்த விரும்பவில்லை; அப்பாவிச் சொற்களை அக்கு அக்காகப் பிரித்துச் சித்திர வதை செய்யும் பணியை ஏற்கவும் விரும்பவில்லை. கதிரவனின் ஒளி புகாத காரிருளிலே கவியாகிப் புகுந்து களி நடம்புரிய விரும்பவில்லை. பக்தனாகிச் சொர்க்கம் சென்று, அங்கே நித்திய வாசம் புரியும் முப்பத்து முக் கோடி தேவர்களையும் கண்டு தலைவணங்கித் துலை வணங்கிக் கருத்துக்குக் கஷ்டம் கொடுக்கவும் விரும்பவில்லை.

நான் சொல்லப் போவது ஒரு சாதாரண சிறிய விஷயம். சுற்றி வளைத்துச் சொல்ல வேண்டிய தேவையே இல்லாத விஷயம். விஷயம் சாதாரணமாக இருந்தாலும். அதன் பெருமைக்கு ஒரு குறைவும் இல்லை. நரசிம்ம மேத்தா என்ன பெரிய புண்ணியம் செய்து விட்டார்? நமது சியாமல்ஷா என்ன குற்றஞ் செய்து விட்டார்? அப்படியிருக்கும் பொழுது ஒரு விஷயத்தின் அருமை பெருமைகளை நாமாகக் குறைப்பானேன்?

இதுவோ மக்கள் ஆட்சி மாண்புற நடைபெறும் காலம். ஏழைப் பிச்சைக்காரன் பெரும் பெரும் பண மூட்டைகளுக்கு நிகராக வநழக் கூடிய காலம். சாராயம் அருந்தி அதன் போதையிலே தடுமாறித் தள்ளாடி விழும் கூலிக்காரர்களின் சிந்தனைப் போக்கைக் கொண்டு, கிளாட்ஸ்டனைப் போன்றவர்களின் தகுதியும் புலமையும் எடைபோடப்படுகிறது என்றால், நமது சியாமல்ஷாவுக்கு என்ன குறைவு? நரசிம்ம மேத்தா வின் பிள்ளையான சியாமல்ஷா அவர்களுக்கு இணை யாக மாட்டாரா, என்ன?

சென்ற மாசி மாதம் நான் பம்பாயிலிருந்து அஹமதாபாத்துக்குப் போய்க் கொண்டிருந்தேன். என்ன வேலையாகவா? இதற்குப் பதில் சொல்ல வேண்டியது அநாவசியம். வண்டியில் என்னோடு எனது பழைய நண்பர் ஒருவரும் உட்கார்ந்திருந்தார். வெகு நேரம் வரை நாங்கள் வம்பு அடித்தோம். வெற்றிலை போட்டுக் கொண்டோம். பழைய புதிய விஷயங்களைக் கிளறி மூடிக் கிண்டிக் கொட்டிக கேலி செய்து கொண்டிருந்தோம். என் நண்பர் பஞ்சு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அதனால் அவர்களணிந்திருந்த உடைகளுக்கு ஓர் குறைவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக வண்டியின் வேகம் மெதுவாகி, ஒரு ஸ்டேஷனில் நிற்க முஸ்தீப்பு செய்து கொண்டிருந்தது. எனவே, என் நண்பரிடையேயும் விசித்திரமானதொரு மாறுதல் உண்டாயிற்று. கொக்கின் சிறகுபோன்ற நேர்த்தியான வேட்டி, கஞ்சி அதிகம் போடப்பட்டு மொறமொற வென்று இஸ்திரி செய்திருந்த முழங்கால்வரை நீண்ட சட்டை, சரிகையில் உருத்திராக்ஷக் கரை போட்ட அங்க வஸ்திரம், சிவந்த குஸும்பா நிறத் தலைப்பாகை ஆகியவை ஒவ்வொன்றாகப் பெட்டிக்குள்ளிருந்து வெளிவந்தன. சிறிது நேரத்துக்கெல்லாம் அவை காண்டாபாயி என்னும் பெயர் கொண்ட எனது அந்த நண்பரின் தேகத்தையும் அலங்கரித்தன.

“ஏன், காண்டா பாயி! பாம்பு சட்டை உரிப்பது போல், தாங்களும் சட்டை உரிக்கீறீர்களே; என்ன விஷயம்?” என்று கேட்டு வைத்தேன்.

“அதுவா? இந்தக் கிராமத்திலே ஸேட் சாமல்ஷா என்று ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்குக் கல்யாணம். எங்கள் இருவருக்கும் வியாபார விஷயமாகத் தொடர்பு ஏற்பட்டு இருவரும் நெருங்கிய நண்பர்களானோம். இன்றைக்கு நான் வேறு, அவர் வேறு இல்லையென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அது போகட்டும், நீங்களும்தான் கல்யாணத் தக்கு வாருங்களேன்!” என்றார் காண்டாபாயி.

“யார்? நானா?” ஆச்சரியத்துடன் கேட்டேன்: “எனக்கு உங்கள் ஸேட்டைத் தெரியக்கூடத் தெரியாதே! இன்றுதானே அவருடைய பெயரையே கேள்விப்பட்டிருக்கிறேன்!” என்றேன்.

“அதனால் என்ன? இஷ்டமித்திர பந்துக்களுடன் வந்திருந்து விவாகத்தை நடத்தி வைக்குமாறு தான் ஸேட்ஜி அழைப்பிதழ் அனுப்பியிருக்கிறாரே! வாருங்கள், போய் வருவோம். ஆனந்தமாகப் பொழுதைப் போக்கிவிட்டு வரலாம். ஆமாம், அஹமதாபாத்திலே அப்படி என்ன முக்கியக் காரியம் இருக்கிறது?”

“முக்கியமான காரியம் ஒன்றும் இல்லை. இருந்தாலும் அநாவசியமாகப் பிறர் வீட்டுக்கு…”

“பிறர் வீடாவது, மண்ணாங்கட்டியாவது? அவர் நம் ஆசாமி, சார்! நமக்கு ரொம்ப ரொம்ப வேண்டியவர். நான் நண்பர் ஒருவரோடு வந்திருக்கிறேன் என்றால் சந்தோஷப்படுவார். அதோடு தாங்களும்தான் என்ன தொலையாத நேரம் தங்கப் போகிறீர்கள்? இன்று சாயந்திரம் திருமணம். நாளைக் காலையில் திரும்பிவிடப் போகிறீர்கள். வாருங்கள், கிடக்கிறது!” என்று பிடிவாதம் பிடித்தார் நண்பர்.

‘உம்’ என்று ‘உம்’ கொட்டிய நான் என்ன செய்யலாம் என்று யோசனையில் ஆழ்ந்தேன். அதற்குள் வண்டி ஸ்டேஷனில் வந்து நின்று விட்டது. காண்டாபாயியை அழைத்துப் போவதற்காக ஆட்களும் வந்துவிட்டார்கள்.

“ரண் சோட் பாயி தாங்களும் என்னோடு வாருங்கள். என் நண்பருக்குத் தவறாகவே படாது என்று பிடிவாதமாகக் கூறிக் காண்டா பாயி என்னை வண்டியிலிருந்து இறக்கிவிட்டார். நானும் வேறு வழியின்றி அழையாத வீட்டு விருந்தாளியாகச் சாமல் ஷாவின் கல்யாணத்தில் கலந்துகொள்ளச் சென்றேன்.

மூட்டை முடிச்சுகளை இறக்கிக் கொண்டு நாங்கள் ஸ்டேஷனைவிட்டு வெளியே வந்தோம். “இந்த வண்டி தங்களுக்குச் சௌகரியமாக இருக்கும்!” காண்டா பாயியை அழைப்பதற்காக வந்திருந்தவர்களில் ஒருவன், மாட்டு வண்டி ஒன்றைச் சுட்டிக் காட்டிக் கூறினான். அதில் எங்களுக்கு முன்பே நான்குபேர் உட்கார்ந்திருந்தார்கள். நாங்கள் எங்கே உட்காருவது? வண்டிக்காரனுக்குப் பக்கத்தில் உட்காரலாமா என்று யோசித்தேன். கடைசியில் எப்படியோ புளி அடைவதுபோல் நாங்கள் ஏழுபேர் அந்த வண்டிக் கள் உட்கார்ந்து விட்டோம். வண்டிக்காரன் கையில் சாட்டையை எடுத்துக்கொண்டு, மாட்டின் வாலை முறுக்கி அதட்டி ஓட்டினான். அப்பொழுதும் மாடுகள் அசையாமற்போகவே, அவன் அவற்றுக்குக் கொடுத்த வாழ்த்துரைகளைக் காது கொண்டு கேட்க முடியாது. அடியும் உதையும் வசவும் திட்டும் வாங்கிக்கொண்டு மாடுகள் ஒருவிதமாக ஊர்ந்தன.

நாங்கள் எப்படியோ வண்டிக்குள் அடைந்து உட்கார்ந்திருந்தோம். பிடித்துக்கொள்ளவோ வசதி கிடையாது. பாதையின் பெருமையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஆச்சல் குழிகள் அனந்தம். அந்தக் கட்டை வண்டி அவற்றில் விழுந்து எழுந்தபொழுது நாங்களும் விழுந்து எழுந்தோம். கடவுள் புண்ணியத்திலே மூக்கு உடைபடுவதிலிருந்து தப்பியது என்றால், ஆண்டவன் அருளிலே மண்டை சிதர்த் தேங்காயாவதிலிருந்து பிழைத்தது. ஆண்டவன் அருள் என்று சொல்வது கூடத் தவறு. குஜராத்திகளாகப் பிறந்து தலைக்குத் தலைப்பாகை கட்டிக்கொள்ளுவது என்று வைத்துக் கொண்டதன் பலன் என்றுதான் கூற வேண்டும். வண்டிக்குள் ஏற்பட்ட அத்தனை இடிகளையும் மோதல்களையும் எங்கள் தலைப்பாகைகள் தாங்கிக்கொண்டன. யார் செய்த தவத்தாலோ பிரயாணம் எவ்வித ரத்தக்களறியும் இன்றி நிறைவேறியது.

கடைசியில் வண்டி ஊரை அடைந்து வீட்டு வாசலை நெருங்கியதும் விருந்தாளிகளாகிய நாங்கள் இறங்க வேண்டிய முறை வந்தது. வண்டி நின்றதும், எங்களை இறக்கிவிட்டு வண்டிக்காரன் போய்விட்டான். எங்களை வரவேற்பதற்காக ஸ்டேஷனுக்கு வந்திருந்தவர்கள் யாரையும் காணோம். அவர்கள் எங்கே மாயமாய் மறைந்து விட்டார்களோ, தெரியாது.

நாங்கள் எங்களது மூட்டை முடிச்சுகளைக் கையில் எடுத்துக்கொண்டு, எங்களை வரவேற்பவர்கள் வருவதற்காகக் காத்திருந்தோம், காத்திருந்தோம்; அப்படிக் காத்திருந்தோம். யாராவது எங்களை நெருங்கி வந்தால்தானே? எங்களுக்கோ எங்கே போவது எந்தப் பக்கம் போவது, என்று ஒன்றும் விளங்க வில்லை. கண்களைக் கட்டிக் காட்டில் விட்டவர்களைப் போல் நின்று கொண்டிருந்தோம்.

எதிர்வீட்டிலிருந்து பலர் தலைப்பாகை அணிந்து. கொண்டு, நன்றாக உடை உடுத்திக்கொண்டு வெளியே வந்தார்கள். அவர்களில் ஒருவராவது எங்களுக்குக் கொஞ்சமாவது முன்பின் அறிமுகமானவர்களாக இருக்க வேண்டுமே? அதுதான் இல்லை.

“ஏன் காண்டா பாயி! எத்தனை நேரம் இது போல் தவம் கிடக்க வேண்டும்? இந்த மூட்டைகளின் சுமையினால் கை இற்றுப்போய்க் கொண்டிருக்கிறதே! வீட்டுக்குள் நாமாகவே ஏன் போகக் கூடாது?” என்று கேட்டேன்.

அத்தனை நேரமும் செய்வதறியாது திரு திரு வென்று விழித்துக் கொண்டு நின்ற காண்டா பாயி, “ஆமாம், ஆமாம்! ஏன் போகக் கூடாது? வாருங் ள். வாருங்கள்!” என்றார். யாருமே வரவேற்காதது எங்கள் இருவருக்குமே அவமானமாகத்தான் இருந்தது. “ஏண்டா வந்தோம்?” என்ற எண்ணம் எங்கள் இருவரையும் வாட்டாமல் இல்லை. இருந்தாலும் உரலில் தலையைக் கொடுத்துவிட்ட பின் உலக்கைக்குப் பயந்தால் கட்டி வருமா? கனைத்துக்கொண்டு இருவருமே வீட்டுக்குள் நுழைந்தோம்.

வீட்டுக்கூடத்தில் ஆறு ஏழுபேர் ஒரு ஊஞ்லில் உட்கார்ந்து கொண்டு, ஹஹ்ஹா, ஹிஹ்ஹீ, ஹுஹ் ஹூ என்று சிரித்துக்கொண்டு ஏதோ பாட்டும் பாடிக் கொண்டிருந்தார்கள். நான்கைந்துபேர் கூடத்லேயே ஒரு பெருஞ் சமுக்காளத்தை விரித்துக்கொண்டு பகல் தூக்கம் போடப் பிரயத்தனம் செய்துகொண்டிருந்தார்கள். நாங்கள் எங்கள் மூட்டை முடிச்சுகளைக் கூடத்தின் ஒரு மூலையில் வைத்துவிட்டுத் தங்குவதற்கு வசதியான இடம் தேடுவதில் இறங்கினோம்.

பக்கத்தில் இருந்த சிறிய அறையில் ஐந்தாறுபேருடைய சாமான்கள் கிடந்தன. மேல் மாடியிலே இருபது முப்பது பேர் தங்கியிருந்தார்கள். அவர்களில் சிலர் வம்பு அடித்துக் கொண்டிருந்தார்கள். சிலா சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். சிலர் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். வீடு முழுவதும் சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்துவிட்டோம். ஒருவர் படுக்கக் கூட எங்கும் இடத்தைக் காணவில்லை.

கடைசியில் நாங்கள் மீண்டும் கீழே இறங்கி வந்தோம். முன்னால் பார்த்த அந்தச் சிறிய அறைக்குள்ளேயே நுழைந்தோம். அங்கிருந்தவர்களில் யாரும் எங்களுடன் வார்த்தை ஆடவில்லை.

“காண்டா பாயீ! இங்கு எல்லோரும் நம்மைப் போலவே வாடகைக் குதிரைகளாக, திண்ணைச் சோற்றுத் தடிராமன்களாகத்தான் எனக்குத் தோன்றுறார்கள்!” என்றேன்.

“ஆமாம், ஆமாம்!” என்று ஏதோ கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமே என்று கடனுக்குப் பதில் சொல்லிவிட்டுக் காண்டா பாயி மௌனம் சாதித்தார். பாவம், அவர்தான் என்ன செய்வார்? எனக்கு அவரிடம் அனுதாபமே தான் உண்டாயிற்று.

“அப்படியானால் ஒரு காரியம் செய்வோம். நமது சாமான்களையெல்லாம் இந்த அறையிலேயே வைத்துக்கொண்டு நாமும் இங்கேயே தங்கிவிடுவோம். எல்லோரும் நம்மைப்போன்ற வாடகைக் குதிரைகள் தானே? யாரும் எதுவும் கேட்கமாட்டார கள், சொல்லமாட்டார்கள்!” என்று சொல்லிவிட்டு, ஒருவர் படுக்கை, இன்னொருவர் பெட்டி, மற்றொருவர் பை எல்லாவற்றையும் எடுத்து ஒரு மூலையில் போட்டேன். எங்கள் இருவருக்கும் வேண்டிய இடத்தை ஒழித்துக் கொண்டேன். வெளியே உட்கார்ந்திருந்தவர்கள் அதைக் கண்டு ஓடோடி வந்தார்கள். ஏதாவது ரகளை நடக்க ஹேதுவாகி விடுமோ என்று கூட நான் பயந்தேன். ஆனால் அப்படியொன்றும் நடக்கவில்லை. எங்கள் துணிச்சலைக்கண்ட அவர்கள், நாங்கள் அதிக உரிமை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து எங்களுக்கு இடம் அளித்து விட்டார்கள்.

அப்புறம் காண்டா பாயியைக் கலந்து ஆலோ சித்துக் கொண்டு, வயிற்று வழிபாட்டுக்கும் நான் இந்த முறையையே கையாள முற்பட்டேன். அதற்கு முதலில் ஒரு ஆசாமியைத் தேடிப் பிடித்தேன். அருகில் உள்ள கட்டிலேயே சமையலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எதிரே இருந்த கிணற்றங் கரைக்குச் சென்று நாங்கள் ஸ்நானத்தை முடித்துக் கொண்டோம். பிறகு யாருடைய அழைப்பையும் எதிர்பாராமல் சமையற்கட்டுக்குச் சென்று சாப்பிட உட்கார்ந்து விட்டோம்.

அந்த இடத்தில் எங்களுக்கு முன்னாலேயே இருபது இருபத்தைந்து பேர் சாப்பிட்டு எழுந்திருந்தார்கள். வட்டிலில் இருந்த சாதத்தைப் பார்த்தாலே குலை நடுக்கம் எடுத்தது. பதமே ஆகாமல் அரிசி அரிசியாக இருந்தது. பருப்பு: பருப்பா அது! ஓட ஓடத் தண்ணீராக இருந்தது. கறியைப்பற்றியோ கேட்கவே வேண்டாம். கறி கரியாகக் காந்திப்போயிருந்தது. வாயில் வைக்க வகையில்லை. நெய்யின் நாற்றமோ எட்டு ஊரைக் கூட்டியது. அந்த நெய்தான் லட்டு பக்ஷணம் செய்ய உபயோகிக்கப் பட்டிருந்தது. இத்தகைய பஞ்ச பக்ஷ பரமான்ன உணவை எப்படியோ வயிற்றுக்குள்ளே தள்ளினோம். அப்பொழுது கைக்கும் வாய்க்கும் நிகழ்ந்த போரைக் காணக் கண் கோடிதான் வேண்டும். ஒருவிதமாக ஆகாரத்தை முடித்துக் கொண்டு நாங்கள் தங்கியிருந்த இடத்துக்குத் திரும்பி வந்தோம்.

அப்புறம் காண்டாபாயி என்னைத் தமது நண்பரான ஸேட் சாமல் ஷாவிடம் அழைத்துச் சென்றார்.

சாமல் ஷா நல்ல பருமனான தேகம் படைத்தவர். முதிர்ந்த பிராயத்தினர். கருநிறமேனி படைத்தவர். தொந்தியும் தொப்பையும் நிறைந்த பெரிய மனிதர். அவருடைய கருநிறத்தின் பளபளப்பைப் பார்த்தால், ஒருமுறை வார்னிஷ் அடிக்கப்பட்டிருக்குமோ என்று எண்ணும்படியாக இருந்தது. அழகு சாதனங்கள் அனைத்தும் அவரது திவ்ய சரீரத்தை அலங்கரித்தன். அவரது வதனத்திலே இன்பத்தின் ரேகை இழையோடிக் கொண்டிருந்தது. கையில் கண்ணாடி யை வைத்துக்கொண்டு அவர் தமது மீசை மயிரைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஏனென்றால் அப்பொழுது தான் நாவிதன் அவரது மீசைக்குக் கறுப்புச் சாயம் பூசிச் சென்றிருந்தான்.

“அடேடே! யார்? காண்டாவா? வா, அப்பா, வா! நீ வராததுதான் ஒரு பெருங்குறையாக இருந்தது!” என்று வரவேற்றார் ஸேட் சாமல் ஷா.

“அட்டா! என்ன அப்படிச் சொல்லிவிட்டீர்கள்? நான் என்ன பெரிய மனுஷ்யனா? – இவர் என் நண்பர். ரண் சோட் பாயி என்று பெயர்!” என்று என்னை அறிமுகம் செய்து வைத்தார் காண்டாபாயி.

“வரணும், வரணும்! உலகத்திலே இப்பொழுது நல்ல மனிதர்கள் யார் இருக்கிறார்கள்? ஏதோ ஆண்டவனுடைய அருள், ஒருவிதமாக உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்னால் எனக்குக் கல்யாணம் நடந்தபொழுது, எண்ணிப் பன்னிரண்டு பேர்கூட இந்த வீட்டுக்கு வரவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! அந்த மனைவி உயிர் வாழ்வதைக் காட்டிலும் இறந்துபோனதே எத்தனையோ மேலாகிவிட்டது!” என்று ஸேட் தமது முதல் மனைவியை ஞாபகப்படுத்திக் கொண்டார். டாக்டர் தம்மிடம் வைத்தியம் பார்த்துக் கொண்டு செத்துப்போன் நோயாளியை எப்படி ஒரு பற்றும் இல்லாமல் நினைப்பாரோ, அப்படித்தான் இருந்தது ஸேட் சாமல் ஷாவின் பேச்சு.

“உண்மையான வார்த்தை! ஏன் ஸேட்ஜி, கல்யாணம் இந்தத் தடவையும் சாயந்திரம் தானே?” என்று கேட்டார் காண்டாபாயி.

“இந்த சமர்த்த ஜோஷிக்குப் படித்துப் படித்து எத்தனையோ தடவை சொல்லிவிட்டேன். கேட்டால் தானே? ஒவ்வொரு தடவையும் இப்படித்தான் ஏதாவது சாக்குச் சொல்லித் தாமதமாக்கி விடுகிறார்!” என்றார் ஸேட் சாமல்ஷா.

சமர்த்த ஜோஷி சற்றுத் தொலைவில் உட்கார்ந்து தமது தக்ஷிணையை எண்ணிக் கொண்டிருந்தார். அவர் தலைதூக்கி ஒருமுறை பார்த்துவிட்டு, “ஸேட்ஜி! இதெல்லாம் என் கைக்குள் அடங்கிய விஷயமா? வேளை வரவேண்டாம்? இருந்தாலும் பார்க்கிறேன் சோதித்து. ஒருதடவை தவறு நேர்ந்துவிட்டால் நேர்ந்ததுதானே? அப்புறம் திருத்த முடியுமா?” என்றார்.

“ஏன், சமர்த்த ஜோஷி! இப்பொழுது எனக்கு நடக்கப்போவது ஐந்தாவது கல்யாணம். இன்னும் எனக்கு எத்தனை கல்யாணங்கள் பாக்கியிருக்கின்றன? ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லுமேன்!” என்று கேட்டார் ஸேட்சாமல் ஷா.

“ஸேட்ஜி! இப்படியெல்லாம் அபஸவ்யமாய்ப் பேசக்கூடாது. தலையில் எழுதிய எழுத்து எப்பொழுதாவது பொய்க்குமா?”

லேசாகப் புன்முறுவல் பூத்தவண்ணம் சமர்த்த ஜோஷி கேட்டார்.

இதற்குள் வெளியே சூரத்திலிருந்து தருவிக்கப் பட்டிருந்த பாண்டுக்காரர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் அடித்த டமாரம் காதுகளின் டமாரத்தைப் பிய்த்தது. நாங்கள் ஸேட்டிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு எழுந்து வெளியே வந்து விட்டோம்.

“ஏன் காண்டாபாயி! ஸேட்ஜிக்கு என்ன வயதிருக்கும்?” என்று கேட்டேன்.

“ஐம்பதுக்குக் குறைவில்லை. ஒன்று இரண்டு மேலேயே இருக்கலாம். இது ஒன்றும் அதிக வயதில்லையே! இவருடைய அப்பா தமது அறுபதாவது வயதிலே குதிரை ஏறினார்!” என்றார் காண்டாபாய்.

“குதிரை ஏறினாரா? அப்படி என்றால் என்ன அர்த்தம்? சற்று விளங்கத்தான் சொல்லுங்களேன்!”

“குதிரை ஏறுவது என்றால் குஜராத்திலே கல்யாணம் செய்து கொள்வது என்று அர்த்தம்!”

“அப்படியா சமாசாரம்! ஸேட் சாமல் ஷா அப்பனுக்குப் பிள்ளை சளையில்லை என்ற நிலைமை யையே இன்னும் அடையவில்லையே! அப்பனுக்கு மிஞ்சிய பிள்ளை என்ற பெயரை அதற்குள் எங்கே வாங்கப்போகிறார்? ஆண்டவன் சோதனை செய்யக் கூடாது. இந்த மனைவிக்கு ஏதாவது நேர்ந்து விட்டால், தமது முன்னோர்களின் மரியாதையைக் காப்பாற்று வதற்காகவாவது ஸேட்ஜி இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளாமல் விடமாட்டார். அப்படித் தானே?” என்று கேட்டேன்.

“இப்பொழுதே என்னால் சோதிடம் கூறமுடியுமா? அந்நிலை ஏற்பட்டால் அல்லவா தெரியும்!”

“அதுபோகட்டும். மணப்பெண்ணுக்கு என்ன வயதிருக்கலாம்?” என்று கேட்டேன் நான்.

“இருக்கும் ஐந்தாறு. இந்த ஊர் தேசாய் ஒருவருடைய பெண்தான். குடும்பம் எத்தனையோ உயர்ந்த. குடும்பம்தான். ஆனால் தேசாய் பெரிய சம்சாரி!”

“அப்படியா?” என்றவன் மேலே பேசத் தோன்றாமல் மெளனம் சாதித்தேன்.

நாங்கள் இருவரும் தங்கியிருந்த விடுதிக்கு வந்து உடைமாற்றிக் கொண்டோம். நானும் ஜரிகைத் தலைப்பாகை முதலியவை அணிந்துகொண்டு, ஸேட்ஜியின் மதிப்பை உயர்த்தும் பணியில் இறங்கினேன். ஜம் மென்று உடை அணிந்துகொண்டு நாங்கள் இருவரும் ஸேட்ஜியின் வீட்டை அடைந்தோம்.

மாப்பிள்ளை அழைப்புக்காகக் குதிரை நின்று கொண்டிருந்தது. இடத்துக்கு இடம் சம்பிரதாயம் வேறுபடுகிறது. சில இடங்களில் மைனப் பல்லக்கு, சில இடங்களில் குறவன் பல்லக்கு உபயோகிக்கிறார்கள். அதேபோல் குஜராத்திலும் ராஜஸ்தானத்திலும் மாப்பிள்ளை குதிரை ஏறிச் செல்வது வழக்கம். அந்தச் சம்பிரதாயத்தை ஒட்டித்தான் வாசலில் குதிரை கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்தது.

ஹைதர் அலி காலத்து நாடகக் கம்பெனியினர் கட்டிக் கிழித்த உடையினால் தங்களை அலங்கரித்துக் கொண்டு பாண்டுக்காரர்கள் காது செவிடுபடத் தங்கள் வாத்தியங்களை முழக்கிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு புறத்தில் நாட்டுக் கோஷ்டியும் தன் கைவரி சையைக் காட்டிக் கொண்டிருந்தது. இன்னும் பற்பல விதமான வாத்தியக்காரர்கள், அவர் அவர் இச்சைப்படி சங்கீதத்தைக் கொலை செய்து கொண்டிருந்தார்கள். இரண்டு கோமாளிகள் நாதஸ்வர இசைக்கேற்பக் குதித்துக் கூத்தாடிக் கொம்மாளம் அடித்துக்கொண்டிருந்தார்கள். மக்களின் கூட்டத்தைக் கவனித்த எனக்கு, நம் மக்களிடையே இன்னும் நாட்டுப்பற்று நீங்காமல் இருக்கிறதே என்ற எண்ணம் தோன்றியது. நமது நாட்டு இசையே நம் செவிக்கு உணவாக இருப்பதையும் உணர்ந்தேன். ஆகா! அந்தக் கூத்தாடிகள் குதித்துக் கொண்டிருந்த இடத்தில்தான் என்ன கூட்டம், என்ன கூட்டம்!

இப்படி நான் சிந்தனையில் ஈடுபட்டிருக்கும் பொழுதே, அருகில் இருந்த ஒருவர், “சபாஷ், சேட்! சபாஷ்! நல்ல காரியம் செய்தீர்கள்! நாற்பதாங் கட்டளையிலிருந்து கூத்தாடிகளைத் தருவித்தீர்களே! உங்களது அறிவுத்திறனை எத்தனை புகழ்ந்தாலும் தகும்! அடிக்கடி இப்படிக் கல்யாணம் செய்துகொண்டு ஆனந்தமாக வாழுங்கள்!” என்று வாழ்த்தினார்.

ஸேட்ஜியின் வீட்டுக்கு எதிர்த்தாற்போலிருந்தது ஒரு திறந்த வெளி கங்கை யமுனைக் கலப்பெனத் தோற்றம் அளிக்கும் சாக்கடை அங்குதான் பாய்ந்து கொண்டிருந்தது! சுத்தமான காற்றையும் அசுத்தமான தாக்கித் துர்நாற்றத்தை அள்ளி வீசிக்கொண்டிருந்தது. அதன் அருகிலே அந்தக் கர்ணாமிர்தமான சங்கீதத்தைக் கேட்டவாறு நாங்கள் அமர்ந்தோம்.

ஸேட்ஜி ஏதோ திருமணச் சடங்குக்காக வைதிக காரியங்களிலே ஈடுபட்டிருந்தார் என்று தோன்றியது. ஏனென்றால் அடிக்கொருதரம் அந்தணர்கள் ‘ஹா, ஹா,ஹா,ஹா’ என்று ஏதோ மந்திரத்தை முழக்கிக் கொண்டிருந்தார்கள். தர்ம சாஸ்திரப்படி ஸேட்ஜி. விவாகம் செய்துகொள்வதற்கு அருகதை உள்ளவராகிக் கொண்டிருந்தார். அவருக்கு அந்த அருகதை ஏற ஏற, அந்தணர்களின் இடுப்பிலேயும் தக்ஷிணைத் தொகை ஏறிக்கொண்டிருந்தது. அருகில் இருந்த மற்றவர்கள் எழுந்து வெளியே வந்தார்கள். மாப்பிள்ளை அழைப்புக்கான குதிரையை அருகில் கொண்டு வந்து நிறுத்திக் கொண்டார்கள்.

அந்தக் குதிரையைப் பார்த்த பின், வெகு பிரயா சைப்பட்டு, சல்லடை போட்டுச் சலித்து அந்தக் குதிரையைத் தேடிக்கொண்டு வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அலெக்சாந்தரின் திறம் மிக்க குதிரை பியூஸே பேல்ஸ், நெப்போலியனின் உலகப் புகழ் வாய்ந்த குதிரை ஆகியவற்றையெல்லாம், இந்தக் குதிரையின் கால்களில் கட்டித்தான் அடிக்க வேண்டும். இதைப் பார்த்தபின் அவையெல்லாம் வெட்கிச் சாக வேண்டியதுதான். டான் க்விக்ஸோட்டின் ராணுவக் குதிரையைக் காட்டிலும், உயர் சாதிக் குதிரையாக இருந்தது அது. இந்தக் குதிரையினிடம் இன்னொரு முக்கியமான விசேஷம் என்னவென்றால், ‘கண்ணே கண், ஒன்றே ஒன்று’ என்று அதற்கு ஒரே ஒரு கண்தான் இருந்தது. வயது அதிகமாகி விட்டதால், சவாரி போகாமலேயே அதன் வாயிலிருந்து நுரை கக்கியது. அதற்குச் சலங்கைக் சேணம் கட்டிப் பிரமாதமாக அலங்கரித்திருந்தார்கள். என்ன அலங்காரம் செய்து என்ன? பார்ப்பதற்கு இப்பொழுதோ, இன்னும் சற்று நேரத்திலோ என்று சொல்லும்படியான நிலையில்தான் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நின்றது. அது நின்ற முறையிலிருந்து, ஈக்கள் மொய்த்து அதைத் தொந்தரவு செய்து கொண்டிருக்கின்றன என்பதும் தெரிந்தது. இருந்தாலும், அது சாமல்ஷாவின் சுமையைச் சுமப்பதற்காக அமைதி, உறுதி, தைரியம் புடைசூழ நின்றது; ஒளியிழந்த கண்ணோடு ஒளியிழக்காத கண்ணையும் மூடித் தன் உள்ளத்துக்கு ஒரு உறுதியை வருவித்துக்கொள்ள முயன்று கொண்டு நின்றது.

ஸேட்ஜி வந்தார். வாயிலே வெற்றிலை பீடா; கண்களிலே மையின் கரிய பெரிய கோடு; தலையிலே ஜரிகைத் தலைப்பாகை! மாணவர்களுக்குப் பூகோள பாடத்துக்குத் திருஷ்டாந்தமாக காட்டக்கூடிய வடிவத்தில் கருநிறத்திருமேனி. கையிலே தேங்காய். ஆகா! ஆகா! என்ன அழகு! என்ன அழகு! மேல் நாட்டவர்களை அழைத்து வந்து ‘பாருங்கள்! உங்கள் நாட்டி லே இத்தகைய கலைச்சிறப்பை, காலம் எல்லாம் காத்துக் கிடந்தாலும் காணமுடியுமா? என்னதான் சொல்லுங்கள், நாங்கள் மேலோர் மேலோர்தான்!’ என்று கூறவேண்டும் என்று என் உள்ளம் துடியாகத் துடித்துக் கொண்டிருந்தது.

ஸேட்ஜி வாசல் திண்ணைக்கு வந்து அதன் ஓரத்தில் நின்று கொண்டார். குதிரை அவர் அருகில் கொண்டு வரப்பட்டது. குதிரைக்கு என்ன தோன்றிற்றோ, தெரியாது. ஸேட்ஜியைப் பார்த்ததும் காளி தேவியின் நினைவு வந்ததா? அல்லது ஸேட்ஜியின் திருமணம், விவாகம் என்னும் சீரிய நோக்கத்துக்கு எதிரான செயல் என்ற ற எண்ணம் ஏற்பட்டதா? அதனால் அதன் மனத்திலும், அவருக்கெதிராகச் சதி செய்யும் சீர்திருத்த மனப்பான்மைதான் குடிபுகுந்ததா? அல்லது அது துறவறத்தை மேற்கொண்டு அநுபவப்பட்டதனால், அந்த நினைவு வந்து ஸேட்ஜிக்கும் துறவறம் தான் உகந்தது என்ற எண்ணம் ஏற்பட்டதா ?

குதிரையின் மனத்தில் உள்ளதை நாம் என்ன கண்டோம் ? ஸேட்ஜி உயரமான திண்ணையின் முகப்பில் நின்றுகொண்டு காலைத்தூக்கிக் குதிரையின் முதுகில் வைக்கப் போனதுதான் தாமதம், குதிரை ஹுங்காரம் செய்து கனைத்துக் கழுத்தை அசைக்கவும், கண்களைக் கொட்டவும் தொடங்கியது.

ஸேட்ஜி கல்யாண காலங்களில் மட்டுமே சிறிது நேரத்துக்குக் குதிரையின்மேல் ஏறி உட்காரும் பழக்கத்தைப் பெற்றிருந்தார். அதனால் குதிரையின் இந்த அபிநயத்தைக் கண்டதும், பயந்து நடுநடுங்கிப் போய்ப் பரபரவென்று தமது தூக்கிய திருவடிகளைப் பின்னுக்கு வாங்கிக் கொண்டு விட்டார்.

குதிரையைத் தட்டிக்கொட்டிச் சமாதானப்படுத்தி அவர் அநேகமுறை அதன்மேல் ஏற முயன்றார். ஆனால் அது தன் பிடிவாதத்தை விடவில்லை. கடைசியில் குதி ரையைச் சமாளிப்பதற்காக இரண்டு பேர் முன்னால் வந்து நின்றார்கள், இரண்டு பேர் பின்னால் நின்று கொண்டார்கள். பிறகு ஸேட்ஜியைப் பார்த்து, “வாருங்கள், ஸேட்ஜி! இனி கவலையில்லை. ஏறிஉட்காருங்கள்!” என்று தைரியமும் ஊட்டினர்.

வந்திருந்தவர்கள் எல்லோரும் இமைகொட்டா மல் வைத்த கண் வாங்காமல் ஸேட்ஜியையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். துருபதராஜனின்யிலே அர்ஜுனன் மீனைக் குறிவைத்து வீழ்த்தினானே, அப்பொழுது அங்கே விஜயம் செய்திருந்தவர்கள் கூட, இப்படி ஒருமைப்பட்ட பார்வையைச் செலுத்தியிருக்க மாட்டார்கள். உண்மையைக் கேட்கப் போனால் ஸேட்ஜி குதிரை ஏறும் காட்சியைக் காணக் கூடியிருந்தோருக்கு அத்தனை ஆவல்.

“கவலைப்படாதீர்கள், உட்காருங்கள்!” என்று பலர் ஆறுதல் மொழி கூறவே, ஸேட்ஜி மறுபடியும் ஓடிப்போயிருந்த துணிச்சலை எல்லாம் ஒருங்கே திரட்டிக்கொண்டார். அவர் கையில் தேங்காய் இருந்தது. அதுவும் என்ன தேங்காய்? அவருக்குக் கல்யாணத்தைச் செய்துவைக்கப் போகும் தேங்காய்! ஒருமுறை அதன்மீது பார்வை விழுந்ததோ இல்லையோ, அவரது உற்சாகம் இன்னும் பன்மடங்கு பெருகியது. முன்னைக் காட்டிலும் உயரமாகக் கால்களைத் தூக்கிக் கிழட்டுக் குதிரையின் முதுகிலே காலை வைத்தார். எத்தனை தான் கட்டுக்காவலும், ஆறுதல் மொழியும் ஒத்தாசைக்கு இருந்து என்ன? குதிரை குதிரைதானே? அதன் சுபாவம் போகுமா? அதோடு எத்தனை நாள் உலக அநுபவப்பட்ட குதிரை அத ! அதற்கு ஆகி யிருந்த வயது கொஞ்சமா, நஞ்சமா? அது திடீரென்று முகத்தைத் திருப்பி ஸேட்ஜியைப் பார்த்துக் காதுகளை நிமிர்த்தி ஒரு கனைப்புக் கனைத்தது. அவ்வளவுதான். ஸேட்ஜி நடுநடுங்கிப் போய்விட்டார். அவரது உயிர் அண்ட சராசரங்களையெல்லாம் தாண்டி எங்கேயோ போய்விட்டாற்போலத் தோன்றியது. அந்தப் பரபரப்பில் ஸேட்ஜி தூக்கிய திருவடியை மீண்டும் பின்னால் இழுத்துக் கொண்டார். திடீரென்று அப்படிச் செய்ய நேர்ந்ததனால் அவர் கையிலிருந்த தேங்காய் நழுவிக் கீழே விழுந்துவிட்டது. தலைப்பாகையும் திண்ணைத் தூணில் இடிபட்டதனால் ஒருபுறம் போய் விழுந்தது.

மணமகன் அணிந்துகொண்டிருந்த மணிமகுடம் இப்படி அபசகுனம் போல் கீழே விழுந்துவிடவே மக்களிடையே ஒரு குழப்பம் பரவியது. அதன் நடுவிலே சிலர் ‘கடகட’ வென்று சிரிக்க வேறு செய்தனர். ஸேட்ஜி முதலில் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தார் . பிறகு பரிதாபமாக மக்களின் முகத்தைப் பார்த்தார். அடுத்தபடியாகச் சுட்டு எரித்து விடுபவர் போலக் குதிரையைப் பார்த்தார். எல்லாவற்றுக்கும் கடைசியாக உருண்டோடிச் சகதியிலே விழுந்து கிடந்த தம் தலைப்பாகையைப் பார்த்தார். இதையெல்லாம் பார்த்த அவருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வானவெளியை நோக்கி ஆண்டவனை நிந்தனை செய்வது போல் ஏதோ முணுமுணுத்தார். அவருக்கு அங்கே என்ன தென்பட்டதோ, ஒரேயடியாக உதட்டைக் கடித்துக் கொண்டு கூட்டத்தை ஒரு கண்ணோட்டம் விட்டார். “ஆங், ஆங், ஆங்” என்று எல்லோருடைய காதிலும் படும்படியாக உரக்கக் கூவினார்.

எல்லோரும் ஒருமுறை வாய் அடைத்துப்போய் வியப்பே உருவாகி விட்டனர். எத்தனையோ பேர் வாயைக் கைக்குட்டையால் அடைத்துக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டனர். ஸேட்ஜி வெட்கப்படுவதுபோல் எனக்குப் பட்டது. ஸேட்ஜியின் வாயிலிருந்து வெளிவந்த அந்த ஒலிக்கு மக்களால் சரியான பொருள் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஸேட்ஜி அழுவதுபோன்ற குரலில், தம் குலதெயவத்தை வேண்டிக் கொண்டார். பிறகு தட்டித் துடைத்துத் தலைப்பாகையை அவர் தலையில் எடுத்து வைத்தார்கள். ஆறுதல் மொழி கூறி அவரைத் தேற்றினார்கள். வலிமை மிகுந்த நான்கு ஆசாமிகள் அவரை அலக்காகத் தூக்கிக் குதிரையின் முதுகில் உட்கார வைத்தார்கள். அப்பொழுது குதிரைக்குத் துவேஷ உணர்ச்சி ஏற்பட்டு விட்டதுபோலத் தோன்றியது எனக்கு. இல்லாவிட்டால் அதன் கண்கள் அப்படிப் பளிச்சிடுவானேன்? ஆனால் அதை அந்த வேளையில் யாரிடமாவது சொன்னால் என்னைப் பைத்தியக்காரன் என்றே எண்ணுவார்கள்; பரிகாசம் பண்ணுவார்கள்.

ஸேட்ஜி குதிரை மேல் சவாரி செய்தவாறே கையில் ஒரு வாளை ஏந்திக் கொண்டார். தேங்காய் தவறி விழுந்து விடக் கூடாதே என்ற கவலை ஒரு புறம். வாள் நழுவி உறைக்கு வெளியே வந்து விடக்கூடாதே என்ற பயம் இன்னொரு புறம். இப்படியாகத் தானே ஸேட்ஜியின் கல்யாண ஊர்வலம் தொடங்கியது. பாண்டு முழக்கமும், கூத்தாடிகளின் கோமாளிக் கூத்துமாக ஜே ஜே என்று இருந்தது ஊர்வலத்தில்.

கடைசியில் ஊர்வலம் பெண் வீட்டை நெருங்கியது. பெண்ணின் வீடு கொஞ்சம் தாழ்வான பிரதேசத்தில் இருந்தது. எனவே, கொஞ்சம் சரிவாக இறங்கிப் போகவேண்டி யிருந்தது. வாத்தியக்காரர்கள் வாத்தியம் வாசிப்பதிலும் கூத்தாடிகள் ஆடிக் களிப்பதிலும் ஈடுபட்டிருந்தனர். சரிவான பாதையைக் கண்டதும் ஸேட்ஜி அமர்ந்திருந்த குதிரை மலைப் பிரதேசத்தில் அப்ஸர மாது நிற்பது போன்ற பாணியில் ஸ்தம்பித்து நின்று விட்டது. முன்னே அடி எடுத்து வைக்க அது மறுத்தது. அதற்காக அது கிளர்ச்சியே செய்யக் கூடத் தயாராகிவிட்டது. இந்தச் சீர்திருத்தக் காலத்தின் பிரபாவம் அந்தக் குதிரையையும் ஆட்கொண்டிருப்பதாகவே தோன்றியது.

இரண்டு மூன்றுபேர் ஓடோடி முன்னால் வந்தார கள். அதன் கடிவாளத்தைப் பிடித்து முன்னால் இழுக்கலானார்கள். ஆனால் குதிரையோ தீர்மானமாக நகருவதில்லை என்ற முடிவுக்கு ஏற்கெனவே வந்துவிட்டது. அதிலிருந்து இம்மியளவும் அது பிறழ விரும்பவில்லை. ஸேட்ஜி தாம் இறங்கி விடுவதாகக் கூறினார். ஆனால் ஜனங்கள் அதற்கு இடங்கொடுக்கவில்லை. “கல்யாண மாப்பிள்ளை இப்படிப் பாதிவழியில் இறங்குவதாவது? கூடாது, கூடாது! கூடவே கூடாது” என்று தடுத்து விட்டார்கள். இரண்டு மூன்றுபேர் குதிரையின் முன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டனர். பின்னாலிருந்து ஒருவன் ‘சுரீர் சுரீர்’ என்று அதன் பின்னங்கால்களைப் பார்த்துச் சவுக்கினால் நான்கைந்து அடி கொடுத்தான்.

குதிரை தன் துணிச்சலை விட்டது; தனது புரட்சி மனப்பான்மையையும் மூட்டைகட்டி வைத்தது. அடி மேல் அடிவிழவே, அதன் வலி பொறுக்கமாட்டாமல் நடக்கச் சம்மதித்தது. அது இரண்டு மூன்று அடி எடுத்து வைப்பதற்குள்ளாகவே ஸேட்ஜி பதற்றமுற்றார். சரிவின் காரணமாகக் குதிரையின் சேணம் முன்பக்கம் சாய்ந்தது. அதோடு அவரும் முன்னுக்குச் சாய்ந்தார். குதிரையின் முன்னங்கால்கள் நடுங்கின. ஸேட்ஜியும் தம் பிடிப்பைவிட்டு மேலும் முன்னுக்குச் சாய்ந்துவிட்டார். அப்புறம் என்ன? சுமை தாங்கமாட்டாமல் குதிரையின் கால்கள் வழுக்கிவிட்டன. அடுத்தகணம் ஸேட்ஜியின் கனத்த சரீரமும் திடுதிப்பென்று ‘பொதகடீர்’ என்ற சப்தத்துடன் பூமியில் விழுந்தது.

கூடியிருந்த ரசிகப் பெருமக்கள் அத்தனைபேரும் அந்தக் காட்சியைக் கண்டு ரசித்தனர். ஆனால் யாரும் ஒத்தாசைக்காக ஓடவில்லை. காரணம், இத்தகைய காட்சி மீண்டும் மீண்டும் காணக் கிடைக்காது என்பதுதான். அந்தக் காட்சியைக் கண்ணாரக் கண்டபின் அவர்கள் ஸேட்ஜியைத் தூக்கிக் கைப்பிடியாக அழைத்து வந்தார்கள். கல்யாண வீடு அதிகத் தொலை வில் இல்லாததால் அதிகச் சிரமமின்றியே அவர்கள் அந்த வீட்டு வாசலை அடைந்தார்கள்.

மணமகன் பெண்வீட்டு வாசலை அடைந்ததும், வாசலில் செய்யும் சம்பிரதாயச் சடங்குகள் பூர்த்தியாயின. அப்புறம் பக்கத்தில் போட்டிருந்த ஊஞ்சலில் ஸேட்ஜீ மாப்பிள்ளைபோல் ஜம்மென்று உட்கார்ந்தார். சிறு பொம்மை போன்ற ஒரு சிறுமியை அவரது மாமா ஊஞ்சலுக்குக் கொண்டுவந்து உட்காரவைத்தார். ஊஞ்சல் பாட்டுகள் ஒருபுறம். மந்திரோச்சாடனம் ஒருபுறம். அமோகமாக நடைபெற்றன. சற்றுத் தூரத்தில், அதாவது நான் நின்றுகொண்டிருந்த இடத்தில் சமர்த்த ஜோஷி ஒரு உழக்கில் தண்ணீரை வைத்துக்கொண்டு என்னவோ செய்து கொண்டிருந்தார். விசாரித்ததில் அவர் முகூர்த்த நேரத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருப்பதாகக் சொன்னார்கள். அவரது வாய் என்ன என்னவெல்லாமோ சுலோகங்களை உச்சரித்துக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் அவர் ஸேட்ஜிக்கு விடுத்துக் கொண்டிருந்த எச்சரிக்கைகளுக்கும் ஒரு கணக்கு வழக்கு இல்லை.

அப்பொழுது நான் ஜோஸியரின் நிலையிலே ஒரு விசேஷத்தைக் கண்டேன். அவருடைய கண்களிலே ஒரு கிறக்கம்; நாவிலே ஒரு தடுமாற்றம்; பேச்சிலே ஒரு படபடப்பு ஆகியவை காட்சி அளித்தன. எனக்கு என்னமோ ஜோஸியர் ‘விஜயா’ என்று புகழ் பெற்ற லாகிரிதேவியைப் பரிபூரணமாக உபாசித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஐயாவைச் சந்தோஷப் படுத்த வேண்டும் என்றால் அம்மாவைக் கையில் போட்டுக்கொண்டு சந்தோஷப்படுத்துவது தானே மரபு? அந்த மரபை அநுசரித்துச் சிவனைச் சந்தோஷப் படுத்துவதற்காக, மங்களமயமான அந்த நேரத்திலே அவர் “பங்க பவானி ”யைச் சேவித்திருந்தார். அந்த மயக்கத்தில்தான் அப்படித் தடுமாறித் தடுமாறிச் சுலோகத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். அந்த மயக்க நிலையிலே அவர் முகூர்த்தத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தது அவ்வளவும் கற்பனை; தவறு. திரும்பத் திரும்ப ஒரே எண்ணை எத்தனை தடவை சொல்லியிருப்பார், தெரியுமா? அதோடு அவர் எங்கும் சரியான முகூர்த்தத்தைக் குறித்தும் வைத்துக்கொள்ளவில்லை. கடைசியில் ஜோஸியர் தட்டை எடுத்துத் தட்டினார். எல்லா வாத்தியங்களும் ஏககாலத்தில் ஊளையிட்டன. கல்யாணம் முடிந்தது; சாமல் ஷா மனையாளைப் பெற்றார். அவர் ஆசையும் நிறைவேறியது.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கூட்டம் சிறிது கலகலத்தது. முன்னேற எனக்கு இடம் கிடைத்தது. நான் திருமண மண்டபத்தை நெருங்கினேன். கல்ய ணப்பெண் தூங்கிப்போயிருந்தாள். அவள் தாயார் அவளை மடியில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அதற்குப் பிறகுதான் ஸப்தபதி, அம்மி மிதித்தல் முதலிய சடங்குகள் நிகழவிருந்தன. அதன் பெருமையில்தானே நமது நாட்டு விவாக மண்டபத்துத் தூண்கள் உறுதியாக நிறுத்தப்பட்டிருக்கின்றன ?

இந்தத் தார்மிக ஆசை என் மனத்தை நிறைத்து என்னையும் புனிதமாக்கியது. எனக்கு எட்டாவது வயதிலே கல்யாணமாகிவிட்டது. எனது மனைவி இன்றும் அப்படியே கல்மாதிரி உயிரோடு இருக்கிறாள். கல்யாண காலத்தில் என் ஆசை என்னவாக இருந்தது என்பது எனக்கு இப்பொழுது நினைவில்லை. இன்று தான் அதன் பெருமையை உணருகிறேன். அடாடா! அப்படி ஒரு ஆசையை உண்டுபண்ணிக் கொண்டு பேணி வளர்க்காமல் நல்ல தருணத்தை நழுவவிட்டு விட்டோமே என்றும் வருந்துகிறேன்.

பலகையிலே ஒரு கையை ஊன்றி ஸேட்ஜி அந்தக் குழந்தையின் கரத்தைப் பற்றியவாறே எழுந்தார். எத்தனையோ முயன்றும் பெண் கண் விழிக்கவில்லை. கடைசியில் சிறுமியின் தாயாரே எழுந்து குழந்தையைத் தோளில் சாத்திக்கொண்டு, ஸேட்ஜியுடன் விவாக வேதியைப் பிரதக்ஷிணம் வந்தாள். இப்படியாகக் கடைசியில் புனிதத்துவம் வாய்ந்த சப்தபதிச் சடங்கும் முடிந்தது.

எழுதுவதற்கு இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் இடம்தான் இல்லை. நான் வெளியே வந்தேன். வேடுவப் பெண்டிர்கள் குடிமயக்கத்தில் ஒருவரை யொருவர் திட்டிக் கொள்வார்களே, அதுபோல் பெண்டிர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள். நடை, உடை, பாவனையிலே நாகரிகம் இல்லை; பேச்சிலே ஒரு பவ்யம் இல்லை. சொல்லுக்கு ஒரு சிறப்பு இல்லை. சம்பந்தி ஏசல் என்று ஆரம்பித்த அவர்களது சொற்களிலே என்ன என்னவெல்லாமோ அசிங்கமான ஆபாசச் சொற்கள் புகுந்து புறப்பட்டன.

இதையெல்லாம் காண வேண்டும் என்ற ஆசை எனக்கு அறவே அடங்கி ஒடுங்கிவிட்டது. எனவே, நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்தேன்.

இரவு வண்டி புறப்படும் நேரமாகிவிடவே, நான் காண்டா பாயியைப் பார்த்து, ‘இனி நான் வரு கிறேன்!” என்று விடைபெற்றேன்.

“அது சரி, ரண் சோட்! ஸேட்ஜியிடம் சொல்லிக் கொண்டு போங்கள். அவரைப் பார்க்காமல் போனால் நன்றாயிராது. அப்புறம் அவர் என்னைக் கோபித்து கொள்வார்!” என்றார் காண்டா பாயி.

“சரி!” என்று சொல்லிவிட்டுப் பெண் வீட்டை அடைந்தேன். ஸேட்டைப்பற்றி விசாரித்ததில், அவர் அன்னையின் அறையில் ‘மணமகன்-மணமகள்’ பூஜையில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினார்கள். ஜனங்கள் சாப்பாட்டு விஷயத்தில் மும்முரமாக இருந்ததால், வீடே வெறிச்சோடிக்கிடந்தது. நான் எனக்கு அடையாளம் காட்டப்பட்ட அறைப்பக்கம் ஸேட்ஜியைப் பார்ப்பதற்காகச் சென்றேன்.

சுவரிலே வர்ணம் தீட்டி அன்னையின் உருவம் வரையப்பட்டிருந்தது. பூஜை என்ன? உபாத்தியாயரின் பையை நிரப்புவதுதானே? அரிசியும் கோதுமையும் குவித்துவைக்கப்பட்டிருந்தன.

எதிரே ஸேட்ஜியும் புதுப்பெண்ணும் உட்கார்நதிருந்தார்கள். புதுமணப்பெண் இப்பொழுது தூங்கி விழித்துக் கொண்டிருந்தாள். தன் கணவரின் அருகில் அமர்ந்திருந்தாள். குருக்கள் ஏதோ எடுத்து வருவதற்காக வெளியே சென்றிருந்தார். நான் அறைக்குள் நுழைந்தவன் ‘திடீர் பிரேக் ‘ போட்டாற்போல் சட்டென்று நின்றேன். ஸேட்ஜி காதல் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். ஆறு வயது கூட நிரம்பாத அறியாப் பெண்ணுடைய புர்க்காத் தலைப்பைப் பற்றி இழுத்துக் கொண்டிருந்தார். பெண் அந்த வேடிக்கையைக் கண்டு ‘கலகல’ வென்று சிரித்துக்கொண்டிருந்தாள். நான் பார்த்துக்கொண்டு நின்றேன். நம் நாட்டிலே காதல் கனிமொழிகளுக்கு இடமே இல்லை என்று யார் சொல்கிறது! இந்தக் காட்சியை-காதல் காட்சியைப் பார்த்த பின்னரும் ஒருவனுக்கு அப்படிச் சொல்ல மனம் எப்படித்தான் துணியும்?

நான் சித்திரப் பதுமையாக நின்று அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஸேட்ஜி திரையிட்டு முகமலர் மறைத்து வைத்திருந்த அந்தச் சிறுமியின் புர்க்காத் தலைப்பை அகற்றித் தமது காதல் கடைக் கண் வீச்சினாலே சொடுக்கிக் கவர முயன்றார். அவர் அந்தப் பெண்ணுடன் மேலும் கொஞ்சி விளையாடத் தொடங்கினார். ‘மாட்டேன்’ என்று கூறிப் பெண் நகர்ந்து உட்கார்ந்து கொண்டாள். ஸேட்ஜி மறுபடியும் அவள் அருகில் சென்றார். சிறுமி அதட்டும் குரலில், ‘அப்புறம் அம்மாவைக் கூப்பிடுவேன்!’ என்று பயமுறுத்தினாள். அதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், தம் முயற்சியிலும் தோல்வி காண விரும்பாமல், ‘உட்காரேன்!’ என்று கூறி ஸேட் அவள் கன்னத்தைத் தடவினார். ஸேட்டின் கரம் பற்றிய சுகுமாரி – அறியாச் சிறுமி உரத்த குரலில் கூச்சலிட்டாள்:

‘ஓ அம்மா! பாரேன், இந்தக் கிழம் என்னை அடிக்க வருகிறது!”

என்ன சொல்வேன், போங்கள்! நான்-ரண் சோட் என்ற பெயருள்ள நான், உண்மையாகவே அந்த யுத்தகளத்தைவிட்டு ஓடினேன். ஓடும்பொழுது பெண்கள் பாடிக்கொண்டிருக்கும் குரல் அந்தக் கல்யாணச் சந்தடியிலும் என் காதுகளில் விழுந்தது:

மாப்பிள்ளையாம், மாப்பிள்ளை!
மண்ணாங்கட்டி மாப்பிள்ளை!
கண்ணாலமாவது கண்ணாலம்!
கண்ணராவிக் கண்ணாலம்!
ஏமாந்தியா, நல்லா ஏமாந்தியா!
எங்க பொண்ணுக்கிட்ட ஏமாந்தியா!

– குலப்பெருமை, கே.எம்.முன்ஷி, தமிழாக்கம்: ரா.வீழிநாதன், முதற் பதிப்பு: நவம்பர் 1957, பாரதி பதிப்பகம்,

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *