“ராஜன்ஜி….?”
வேகமாகப் போய்க் கொண்டிருந்தவரை யாரோ பின்னாலிருந்து உரத்த குரலில் அழைக்க தன் கழுத்தைத் திருப்பிப் பார்த்தார். யார் என்பதற்குள் நாம் ராஜன் ஜி அவர்களை முழுவதுமாகப் பார்த்துவிடுவோம்….
என்ன வயது என்று தீர்மானிக்க முடியாத தோற்றம்…. முகம் முழுதும் கரு கரு தாடியில் சில வெள்ளிக் கீற்றுக்கள் மின்னின.. தடித்த ஃப்ரேம் கண்ணாடிக்குள், நாவல் பழ நிற கருவிழிகள் பட படத்தன… அடர்த்தியான புருவங்கள்… மேலுக்கு ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தார்.. அந்த ஒத்தை அடிப் பாதையில் வேக வேகமாக நடந்துகொண்டிருந்தார் வலதுபக்கம் ஒரு பரந்த புல் வெளி… அதன் முடிவில் ஒரு பூந்தோட்டம்.. அதைத் தாண்டி அடர்ந்த மரங்கள்.. தூரத்தில் மலைச் சிகரங்கள்… உச்சியில் பனி மலை என்று இயற்கையின் எல்லா வனப்பையும் எழுதிக் கொண்டே போகலாம்… அதற்கு இந்தச் சிறுகதையில் நேரம் இல்லை….
இடது பக்கம் பார்த்தவர் திடுக்கிட்டார்… ஒன்றுமில்லை… ஒன்றுமில்லை என்றால்…? எதாவது இருக்க வேண்டுமே… இருந்ததா… ? ஒரு வெறுமையின் நிறம் இருந்தது… தொட்டுப் பார்த்தார்.. தொட்டதும் கலைந்தது… காலை ஒட்டி அதள பாதாளம் இடது புறம் பிளந்து கொண்டது… எங்கே விழுந்துவிடுவோமோ என்று வலதுபக்கம் புல் தரையில் குதிக்க, குத்தித்த இடத்தில் ஒற்றையடிப் பாதை தோன்ற, இடது பக்கம் அந்தப் பெரும் பள்ளம் அப்படியே இருந்தது… அவருக்கு கொஞ்சம் பயத்தில் மனசு பட படத்தது.. கால்கள் வெட வெடத்தது… மனதைத் திருப்ப, தன்னை அழைத்தவரை பார்க்க திரும்பினார்….
வெகு அருகில் குரல் கேட்டதுபோல் இருந்தாலும், அழைத்த சுரேஷ்குமார் வெகு தொலைவில் இருந்ததுபோல் இருந்தது… சுரேஷ்குமாரையும் சற்று விவரித்து விடுகிறேன்.. தற்கால இளைஞர்.. ஜீன்ஸ், வெள்ளை அரைக் கைச் சட்டை, மெல்லிய தங்கச் சங்கிலி, கைக் கடிகாரம், உதட்டில் ஒரு அரைப் புன்னகை… ஸ்னேகமாக இருக்க பாதி முயற்சி முகத்தில் தெரிந்தது… மறந்துவிட்டேன்.. சுருள் முடி… முழுக்க மழித்த முகம், மீசையை சமீபத்தில் எடுத்திருந்தார்… அவ்வளவுதான் இனிமேல் யாரையும் இந்தக் கதையில் வர்ணிக்கப் போவதில்லை… (எதுவும் நிச்சயமில்லை… பிறகு கோபிக்க வேண்டாம்)
அவ்வளவு தூரத்தில் இருக்கும் சுரேஷ்குமாரை ‘வா..’ என மனதுள் நினைத்தவுடன் ராஜன்ஜி அருகில் இருந்தார் சுரேஷ்குமார்… திடுக்கிட்ட ராஜன்ஜி மெல்ல புன்னகைக்க,
“என்ன சார்..? அவ்வளவு வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறீர்கள்…?”
“குருஜி அழைத்தார்… எதோ பேச வேண்டுமாம்….”
“நானும் வரலாம் அல்லவா… எனக்கும் குருஜியிடம் பேச வேண்டும்…”
“ம்ம்ம்ம… ” என்றார் மையமாக..
இவர்கள் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை இப்போதே விளக்க வேண்டுமா, அல்லது போகப் போக நீங்களே புரிந்து கொள்வீர்களா என்று சற்று குழப்பமாக இருக்கு. கொஞ்சம் போகட்டும் பார்க்கலாம்…
“நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்குகிறோம்… ஆனால்…” என்று இழுத்தார் சுரேஷ்குமார்… “இன்று நிச்சையம் குருஜியிடம் விளக்கம் கேட்க வேண்டும்…”
“இருக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம்…சுரேஷ்குமார்ஜி” என்றார் ராஜன்ஜி.
அவர்கள் இருவரும் அருகருகே நடக்க அவர்கள் நடந்த பாதை அவர்களுக்கு ஏற்றார்போல் அகண்டது… ராஜன் தனது இடதுபக்கத்தில் இருந்த பள்ளத்தைப் பற்றி சுரேஷ்குமாரிடம் எதுவும் சொல்லவில்லை… ஆனால் பயத்தில் சுரேஷ்குமாரின் கையைப் பற்றி நடந்தார்.. சுரேஷ்குமார் பரந்த புல் வெளியையும், தூரத்தில் தெரிந்த பூந்தோட்டத்தையும், பல வண்ண மலர்களையும், அதைச் சுற்றிவரும் வண்டுகளையும், வண்ணத்துப் பூச்சிகளையும், அதையும் தாண்டி நின்ற மரங்களையும், அதில் உள்ள பழங்களையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்… அவர் மனதில் மெல்லிய இசை தோன்றியது… தன் இனிய காதலையும், காதலியையும் நினைத்து நெகிழ்ந்தார்… ஓடிச் சென்று ஒரு பூ பறிக்கத் தோன்றியது.. புல் தரையின்மேல் கால் வைக்க, புல்தரை விலகி நடைபாதை தோன்றியது… திடுக்கிட்டு காலைப் பின் வாங்கிக் கொண்டார்…
ராஜன்ஜி அவர் கவனத்தைக் கலைக்க ‘குருஜி மாளிகை வந்துவிட்டது..’ என, அந்த நடைபாதை முடிவில் ஒரு பிரம்மாண்ட மாளிகை… ஜக ஜக என ஜொலித்துக்கொண்டிருந்தது… (எற்கனவே சொன்னதுபோல்.. No more description.. இதெல்லாம் சும்மா நம்பாதீங்க… அப்படிச் சொல்வார், திரும்பவும் ஆரம்பிப்பார் பாருங்கள்) அவர்கள் நினைப்பதற்குள் முதல் தளத்தில் இருந்தனர்.. வெளியே அவ்வளவு வெளிச்சமாக இருக்க உள்ளே மங்கலாக இருந்தது.. (குருஜி மாளிகைகள் அப்படித்தானோ) அந்த வராண்டா போன்ற வட்ட வடிவ அமைப்பிலிருந்து பார்க்க கீழே குருஜியுடன் மூவர் நிற்பது தெரிந்தது.. நடுவில் பதினெட்டு வயது இளைஞன் காவி உடையில் நிற்க குருஜி அவனைப் பார்த்து
“நீ விவேகானந்தர் போல் இருக்கிறாய்..”
இளைஞன் மயங்கி பின்னாலிருந்தவர் மேல் சாய்ந்து விட்டான்.. பின்னாலிருந்து தாங்கிப் பிடித்தவர்,
“குருஜி நீங்கள் விவேகானந்தர் என்று சொன்னவுடன் இன்ப அதிர்ச்சியில் மயங்கிவிட்டான்..” குருஜி புன்னகைத்து
“அவன் பசி மயக்கத்தில் விழுந்துவிட்டான், அழைத்து சென்று உணவு அளித்து, சற்று இளைப்பாறச் செய்…” என்று கூறித் திரும்ப அருகில், ராஜன்ஜியும், சுரேஷ்குமாரும் வணக்கத்துடன் நின்று கொண்டிருந்தனர்…
“குருஜி அழைத்தீர்கள் பேச..” இழுத்தார் ராஜன்ஜி
“ஒன்றுமில்லை ….”
“ஒன்றுமில்லையா….?” இதற்காகவா அந்த பள்ளத்திற்கு பயந்து வந்தோம் என்று மனதுக்குள் ராஜன்ஜி முனக,
“ஒன்றுமில்லை என்றால் ஒன்றுமில்லை அல்ல, ஏதாவது உண்டு என்றும் அல்ல…”
குருஜிக்களுக்கு இதுபோல் பேச உரிமை உண்டு. சுற்றி இருப்பவர்கள் அதில் எதாவது தத்துவம் தேடிக்கொள்ள வேண்டும்… சற்று குழம்பிய சுரேஷ்குமார் தான் கேட்க வந்ததை கேட்பதா வேண்டாமா என்று தயங்க, முற்றும் அறிந்த குருஜி, தனது வலது கையை லேசாக காற்றில் அசைத்தார்… நட்ட நடு மாளிகையில் ஒரு கனி மரம் தோன்றியது… சுரேஷ்குமாரைப் பார்த்து கைகாட்டிப் ‘பறித்துக்கொள்’ என்றார்…
சுரேஷ்குமார் ஒன்றைப் பறித்து சுவைக்க குருஜி ‘எப்படி பழம் உன் கையில் வந்தது..? என, சுவையில் மகிழ்ந்தவன் இன்னொரு பழத்தைப் பறித்து ‘இப்படி..’ என்றான்…
“நான் கேட்டது அந்த ‘அப்படி’ அல்ல .. அது அங்கே இருந்ததால்தானே அதை உன்னால் பறிக்க முடிந்தது.. ” குருஜி கையை அசைக்க மரம் மறைந்தது… குருஜி தொடர்ந்தார்..
“எது உனதோ அது ஏற்கனவே இருந்தது, இருந்ததைதான் உனதாக்கிக் கொண்டாய்… எது உனதோ அதை வேறொருவர் தனதாக்கலாம்”
“குருஜி… அதுக்குப் பேரு திருட்டு இல்லையா…?” (எற்கனவே தன் பதிவுகளை அனுமதியில்லாமல் கனடாவில் ஒரு வலைதளத்தில் பதிவிட்டதில் கோபமாக இருந்த சுரேஷ்குமார்)
குருஜி மெல்லப் புன்னகைத்து “இது ஒரு மாய வலை.. இதை நீ உருவாக்க வில்லை.. நானும் உருவாக்கவில்லை… யார் உருவாக்கினார்கள் என்று நினைக்கிறோமோ அவரும் உருவாக்கவில்ல.. இங்கே எல்லாம் எற்கனவே இருந்தது.. இதில் போடுவது அனைத்தும் போடும்பொழுதே பிறர் சொந்தம் கொண்டாடுவர்… இந்தப் பிரபஞ்சத்தில் (குருஜி கொஞ்சம் அவர் ஸ்லாங்கில் தொழிற் நுட்பரீதியாகப் போவதுபோல் இருந்தது, இனிமே கொஞ்சம் புரிவது கடினம்) நீ, நான், நாம் காண்பதெல்லாம் பலமுறை தோன்றி மறைந்து எங்கும் இரண்டறக் கலந்து வியாபித்துக் கிடக்கிறது… சில இடங்களில் துகளாய், சூட்சமமாய், கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் நீ பறித்துக் கொள்ள ஏதுவாய்…” (குருஜி ஃபுல் ஃபாம்).
“அது எப்படி குருஜி, நான் கஷ்டப்பட்டு உருவாக்கினது…”
“எது உனது..? முத்துக்கள் கோர்த்ததால் மாலை உனது என்றால்… அப்போழுது முத்துக்கள் யாருடையது… மேலே பார், சிறுகதை என்ற பெயரில் பிதற்றிக் கொண்டிருக்கிறானே அது அவனுடையதா…? அந்த எழுத்துக்கள் அவனுடையதா, வார்த்தைகள் அவனுக்குச் சொந்தமா… இல்லை வாக்கியங்கள் அவனுடையதா… எல்லாம் கலைத்தால் எதுவும் யாருடையதுமல்ல… எழுத்துக்களைப் பிரித்தால் கோடுகளும், வளைவுகளும், புள்ளிகளும் தான்… எது உனது… எது எனது… எது நமது….?” (சும்மா ‘எது நமது’ என்றே சொல்லியிருக்கலாம்.. நீ, நான்னு, எதுக்கு இப்ப லாங்கு டையலாக்.. ) சுரேஷ்குமார் முணுமுணுக்க குருஜியின் முகம் லேசாக சிவக்கத் துவங்கியது… சுரேஷ்குமாரைப் பார்த்து
“உனக்கு இன்னும் சந்தேகம் இருந்தால் என்னுடைய குருஜி கனடாவில் இருக்கிறார், தமிழுக்கே வழிகாட்டி அவரைப் போய்க் கேள்…” குருஜி கை அசைக்க மாளிகை மறைந்தது….
“அடப் பாவி நீ அவன் ஏஜென்டா…? இது தெரியாம இவ்வளவு நேரம் உன்னிடம் நேரத்தை வீணடித்தேனே… !” திரும்பிப் பார்க்க அங்கே பலர் குருஜியிடம் மண்டியிட்டு ஞானம் பெற்றது தெரிந்தது… அனைவரையும் அறிந்ததுபோல் இருந்தாலும், அருகிலேயே தூரத்தில் இருந்தார்கள்…
ராஜன் ஜி, சுரேஷ்குமார் கையைப் பிடித்து இழுத்து ‘வா போகலாம்’…
அவருக்கு திரும்பிப் போகும்போது பாதாளம் அவன் பக்கம் வரும் என்று நினைக்க, பாதளமோ இம்முறையும் அவர் பக்கமே…
கதை விடுவது என்பது இது தானோ?
Humorous & arm twisting ..
இந்த சிறுகதையை
தனியாக இருக்கும் போது படிக்க கூடாது ..அப்போது சிரித்துக் கொண்டிருப்பது நன்றாக இருக்காது ..