கிளிக் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 2,206 
 
 

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன கிளிக் கதை

விக்கிரமாதித்தன் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக் கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன ஆறாவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! ‘மாணிக்கம், மாணிக்கம்’ என்று ஒரு கிளி ஜோசியன் இருந்தான். அவனுக்கு இந்த ஊர், அந்த ஊர் என்று இல்லை; எல்லா ஊரும் அவன் ஊர்தான். கையில் கிளிக்கூண்டைத் தூக்கிக் கொண்டு, ‘பட்சி ஜோசியம் பார்க்கலையா, பட்சி ஜோசியம்!’ என்று அவன் ஊர் ஊராகத் தெருத் தெருவாகக் கால் வலிக்கும் வரை சுற்றி வருவான். காலை வலித்தால் ஏதாவது ஒரு மரத்தடியைப் பார்த்து உட்கார்ந்து, கடையை விரித்துவிடுவான்.

அப்படி ஒரு நாள் அவன் ஒரு மரத்தடியில் கடை விரித்து உட்கார்ந்து கொண்டிருக்குங் காலையில், அவனிடம் ஜோசியம் பார்க்க வந்த ஒருவன், ‘இன்றைய தினசரியைப் பார்த்தீரா?’ என்று கேட்க, ‘இல்லையே, என்ன விசேஷம்?’ என்று ஜோசியம் வினாவ, வந்தவன் சொன்னான்.

‘வடநாட்டில் யாரோ ஒரு சிறுமி இருக்கிறாளாம்; அவள் தன்னுடைய முற் பிறவியைப் பற்றிச் சொல்கிறாளாம். அது உண்மைதானா என்று அவளைப் பெற்றவர்கள் போய்ப் பார்க்க, உண்மையாகவே இருந்ததாம்!’

இதைக் கேட்டதும், ‘பார்த்தீரா, பார்த்தீரா? முன் பிறவி பொய், பின் பிறவி பொய், அது பொய், இது பொய் என்றெல்லாம் சிலர் சொல்லிக்கொண்டு திரிகிறார்களே, அவர்கள் இப்போது என்ன சொல்கிறார்களாம்?’ என்று கிளி ஜோசியன் உற்சாகத்துடன் கேட்க, ‘அவர்கள் என்ன சொன்னால் என்ன, உம்முடைய கிளி ஜோசியம் பொய் என்று சொல்லவில்லையே?’ என்று வந்தவன் கேட்க, ‘அதையும் பொய் என்று சொல்லித்தான் ஐயா, அவர்கள் என் பிழைப்பைக் கெடுக்கிறார்கள்!’ என்று அவன் வயிறெரிந்து சொல்ல, ‘கவலைப்படாதீர்! என்னைப் போல் இன்னும் பலர் நீர் சொல்வதை நம்பக் காத்திருக்கும்போது, உமக்கும் உம்முடைய கிளிக்கும் ஒரு குறைவும் வராது. இந்தாரும், காசு! திறந்து விடும், கிளியை; அளந்து விடும் கதையை!’ என்று வந்தவன் மூன்று காசை எடுத்து அவனிடம் கொடுக்க, அதை வாங்கி மடியில் வைத்துக்கொண்டு, அவன் கூண்டைத் திறந்து கிளியை வெளியே விடுவானாயினன்.

கிளி எடுத்துக்கொடுத்த ஏட்டை மாணிக்கம் ஒசை நயத்தோடு ராகம் போட்டுப் படித்துக் காட்ட, அதிலிருந்து தன்னுடைய இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆக மூன்று காலங்களையும் மூன்றே காசு செலவில் முற்றிலும் தெரிந்துகொண்ட திருப்தியோடு வந்தவன் நடையைக் கட்டுவானாயினன்.

அவன் கொடுத்து விட்டுப் போன மூன்று காசுகளில் முதல் வேளையாக ஒரு காசை எடுத்துப் பீடி வாங்கி, அதை ஒசி நெருப்பில் பற்ற வைத்துக் கொண்டு மாணிக்கம் மீண்டும் வந்து மரத்தடியில் உட்கார, அப்போது, ‘எனக்கும் முக்காலமும் தெரியும்!’ என்ற யாரோ சொல்ல, ‘யார் அது?” என்று மாணிக்கம் சுற்றுமுற்றும் பார்க்கலாயினன்.

‘நான்தான்!’ என்றது அவனுடைய கிளி.

‘நீயா! முன் பிறவியில் நீ என்னவா யிருந்தாய்?’

‘பூனையாயிருந்தேன்!’

‘பூனையாகவா?’

‘ஆமாம்; பூனையாயிருந்து கிடைக்கிற கிளிகளையெல்லாம் பிடித்துத் தின்றுகொண்டே இருந்ததால், இந்தப் பிறவியில் என்னைக் கிளியாய்ப் படைத்து விட்டார், கடவுள்!’

‘நான் என்னவா யிருந்தேன்?’

‘அந்தப் பூனையை வளர்த்த எஜமானாயிருந்தீர்; அதனால் தான் இந்தப் பிறவியில் என்னை வளர்க்கும் எஜமானா யிருக்கிறீர்!’

‘அதிசயமா யிருக்கிறதே, நீ சொல்வது? அப்படியானால் உன்னுடைய எஜமானி இப்போது எங்கே இருக்கிறாள்?’ என்று மாணிக்கம் கேட்க, ‘இங்கிருந்து ஏழு கிலோ மீட்டர் துரத்தில் இருக்கிறாள்!’ என்றது கிளி.

‘அவள் பெயர் என்ன? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாள்?’

‘மரகதம்; உம்மைப்போலவே அவளும் கிளி ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கிறாள்!’

‘இந்தப் பிறவியிலும் அவளை நான் அடைய முடியுமா? அது சாத்தியமா?’ என்று அவன் கேட்க, ‘முடியும்; இங்கிருந்து கிழக்கே ஏழு கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றால்!’ என்றது கிளி.

அவ்வளவுதான்! அதற்குமேல் மாணிக்கம் தயங்கவில்லை; தாமதிக்கவில்லை. கிளிக் கூண்டைத் தூக்கிக் கொண்டு கிழக்குத் திசையை நோக்கி விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்துவிட்டான்.

மாணிக்கம் சரியாக மூன்றரை கிலோ மீட்டர் தூரம் சென்றதுதான் தாமதம், ‘கிளி ஜோசியம் பார்க்கலையா, கிளி ஜோசியம்!’ என்ற ‘கிளிக் குரல்’ அவன் காதில் விழுந்தது. ‘ஒருவேளை அவளும் என்னைத் தேடி மேற்கே வருகிறாளோ, என்னவோ?’ என்ற வியப்புடன் அவன் சுற்று முற்றும் பார்க்க, அவனைப் போலவே கையில் கிளிக் கூண்டுடன் ஒரு ‘கிளிமொழியாள்’ அவனுக்கு எதிரே வந்து கொண்டிருந்தாள்!

‘என்ன ஆச்சச்சரியம்!’ என்றான் அவன், அவளைப் பார்த்து.

‘என்ன ஆச்சச்சரியம்!’ என்றாள் அவளும் அவனைப் பார்த்து.

‘உன் பெயர் மரகதம்தானே?’ என்று அவன் அடக்க முடியாத ஆவலுடன் கேட்க, ‘ஆமாம்; உங்கள் பெயர் மாணிக்கம்தானே?’ என்றாள் அவளும் அடக்க முடியாத ஆவலுடன்.

‘ஆமாம், என் பெயரை உனக்கு யார் சொன்னது?’ என்று அவன் அவளைக் கேட்டான்.

‘என்னுடைய கிளி!’ என்று சொல்லிவிட்டு, ‘என் பெயரை உங்களுக்கு யார் சொன்னது?’ என்று அவள் அவனைக் கேட்டாள்.

‘என்னுடைய கிளி!’ என்றான் அவன்.

‘உங்கள் கிளியின் பேச்சைக் கேட்டுத்தான் நீங்கள் என்னைத் தேடிக்கொண்டு கிழக்கே வந்தீர்களா?’ என்றாள் அவள்.

‘ஆமாம்; நீ?’ என்றான் அவன்.

‘நானும் என்னுடைய கிளியின் பேச்சைக் கேட்டுத்தான் உங்களைத் தேடிக்கொண்டு மேற்கே வந்தேன்!’ என்றாள் அவள்.

அவன் சிரித்தான்; அவளும் சிரித்தாள்.

‘இனிமேல் நமக்கு ஒரு குழந்தை பிறக்கவேண்டியது தான் பாக்கி!’ என்றான் அவன்.

‘எதற்கு?’ என்றாள் அவள்.

‘அழ!’ என்றான் அவன்.

இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்!

இவர்கள் இப்படிச் சிரித்தார்களோ இல்லையோ, ‘டும் டும், டுடும்!’ என்றது அவன் கையில் இருந்த கிளி சிறகடித்து; ‘பீ, பீ, பிப்பீ!’ என்றது அவள் கையில் இருந்த கிளியும் சிறகடித்து.

‘என்ன, அதற்குள் நீங்கள் இருவரும் மேளம், நாதஸ் வரம் எல்லாம் வாசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா?’ என்றனர் இருவரும் ஏககாலத்தில்.

ஆமாம்; கோயிலுக்குப் போங்கள், சீக்கிரம் ஏதாவது ஒரு கோயிலுக்குப் போங்கள்!’ என்று இரண்டு கிளிகளும் ஏககாலத்தில் கூவின.

அப்படியே இருவரும் அருகிலிருந்த ஒரு கோயிலுக்குச் சென்று தங்கள் கலியாணத்தை முடித்துக்கொண்டு வர, ‘நாம் மட்டும் கலியாணம் செய்துகொண்டால் போதுமா? நமக்குக் கலியாணம் செய்து வைத்த நம்முடைய கிளிகளுக்கும் கலியாணம் செய்து வைக்க வேண்டாமா?’ என்றாள் மரகதம்.

‘அவசியம் செய்து வைக்கவேண்டியதுதான்’ என்றான் மாணிக்கம்.

உடனே தன் கூண்டிலிருந்த கிளியை எடுத்து அவன் கூண்டிலிருந்த கிளியோடு அவள் விட, இரண்டும் ஒன்றோடு ஒன்று கூடி மகிழ்வதற்குப் பதிலாகக் ‘கீ, கீ’ என்று கத்திக் கொண்டே கொத்திக்கொண்டு சண்டையிட, ‘ஏன் சண்டையிடுகிறீர்கள்?’ என்று கேட்கலாயினள்.

‘எனக்கு இந்த ஆண் வர்க்கத்தைக் கண்டாலே பிடிக்காது!’ என்றது பெண் கிளி.

‘எனக்கு இந்த பெண் வர்க்கத்தைக் கண்டாலே பிடிக்காது!’ என்றது ஆண் கிளி.

‘ஏன்?’ என்று கேட்டான் மாணிக்கம்.

‘சொல்கிறேன், கேளுங்கள்!’ என்று ஆண் கிளி சொன்ன கதையாவது:

பீதாம்பரம், பீதாம்பரம் என்று ஒரு விற்பனையாளன் உண்டு. பிரபல மருந்து கம்பெனி யொன்றில் வேலை பார்த்து வந்த அவன், அடிக்கடி வெளியூருக்குப் போவ துண்டு. தன் மனைவி பிரேமாவிடம் அவன் உயிரையே வைத்திருந்தான். அவள் கண்ணில் நீர் வடிந்தால் அவன் கண்ணில் ரத்தம் வடியும். வெளியூரில் இருக்கும்போதுகூட அவன் அவளை மறக்கமாட்டான். உள்ளுரில் கிடைக்காத ஏதாவது ஒன்று வெளியூரில் கிடைத்தால் போதும்; உடனே அதை வாங்கி அவளுக்கு அனுப்பி வைத்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பான். கடிதம் அநேகமாக ஒரு நாள்கூடத் தவறாமல் வரும். அந்தக் கடிதங்களில் வெறும் காதல் மொழிகள் மட்டும் இருக்காது; அன்பு முத்தங்களும் ஆசை முத்தங்களுமாக ஆயிரமாயிரம் முத்தங்கள் அடுக்கடுக்காக இருக்கும். அவன் அப்படியெல்லாம் இருந்தும் அவனுடைய மனைவி பிரேமாவுக்கு ஏனோ ஏகாம்பரம் என்பவனின் மேல் கொள்ளை ஆசை இருந்தது. பீதாம்பரம் ஊரில் இல்லாத சமயங்களில் அவள் ஏகாம்பரத்துடன் ஊர் சுற்றுவாள்; கடற்கரைக்குப் போவாள்; நடனம், நாடகம், சினிமா எல்லாவற்றிற்கும் போவாள். கடைசியாக, அவனைத் தன் வீட்டுக்கே தைரியமாக அழைத்துக் கொண்டு வந்து அவனுடன் கொஞ்சுவாள்; குலாவுவாள்; எல்லாம் செய்வாள்.

இவள் இப்படி இருக்குங் காலையில், ஒரு நாள் இரவு எதிர்பாராத விதமாகப் பீதாம்பரம் வந்து சேர்ந்தான். ‘என்ன, இப்படித் திடீரென்று வந்து நிற்கிறீர்கள்?’ என்றாள் அவள், திடுக்கிட்டு.

‘உன்னைப் பார்க்கவேண்டும், பார்த்துப் பேசவேண்டும், பேசிச் சிரிக்கவேண்டும்’ என்று அவன் அவளை அணைத்துக் கொண்டு, ‘ரெயிலில் வந்திருந்தால் நாளைக் காலையில்தான் வந்திருக்க முடியும். அதுவரை உன்னைப் பார்க்காமலிருந்தால் எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும்போல் இருந்தது; நான் வருவதற்கு முன்னால் ஸ்டாண்டை விட்டுப் புறப்பட்டுவிட்ட பஸ்ஸை விரட்டிப் பிடித்து ஏறி வந்தேன். இதோ பார்த்தாயா, கால் முட்டியில் அடிகூடப் பட்டு விட்டது’ என்று அவன் தன் ‘வீரசாகச’த்தால் தனக்கு ஏற்பட்ட ‘விழுப்புண்’ணை அவளுக்குத் தொட்டுத் தொட்டுக் காட்டினான் .

அவளோ, ‘இது என்ன தொல்லை, இன்றிரவு நான் அவரை வரச்சொல்லி இருக்கிறேனே!’ என்று ஏகாம்பரத்தை நினைத்தவளாய், ‘அப்படி என்ன அவசரம், ராஜா! கிணற்றுத் தண்ணீரை வெள்ளமா கொண்டு போய்விடும்?’ என்று அவன் தலையை ஒர் ‘அட்வான்ஸ் தடவு’ தடவி, மேலே என்ன செய்வதென்று யோசிப்பாளாயினள்.

‘என்ன யோசிக்கிறாய், பிரேமா?’ என்றான் பீதாம்பரம்.

‘ஒன்றுமில்லை; இத்தனை நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்களே, என்ன சமைத்துப் போடலாம் என்று யோசிக்கிறேன்!’ என்றாள் அவள்.

‘இந்த நேரத்திலாவது, உன்னைச் சமைக்க வைத்து நான் சாப்பிடுவதாவது? வா, ஜாலியாக வெளியே போய்ச் சாப்பிட்டுவிட்டு வரலாம்’ என்று அவன் அவளை ஓர் உயர்தர ஒட்டலுக்கு அழைத்துச் சென்று, மாடிப் பூங்காவில் அமர்ந்து மனம் மகிழச் சாப்பிட்டு, இனிய பீடாவை எடுத்து வாயில் போட்டு அதன் இன் சுவையை அனுபவித்துக் கொண்டே, ‘ஏழு வருஷத்து அரிப்பு என்று ஒர் ஏ கிளாஸ் படம் வந்திருக்கிறது; பார்த்துவிட்டுப் போவோமா?’ என்று கண் சிமிட்டிக்கொண்டே கேட்க, ‘ஏன், இப்போதிருக்கும் அரிப்பு போதாதாக்கும்?’ என்று அவள் அந்த ஏகாம்பரத்துக்காக அதைத் தட்டிக் கழித்துவிட்டு, அவனை மெல்ல வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வருவாளாயினள்.

வீட்டை அடைந்ததும் படுக்கையைத் தட்டிப் போட்டு விட்டு, ‘கொஞ்சம் இருங்கள்; பாலையாவது காய்ச்சி எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறேன்!’ என்று அவள் அங்கிருந்த பாலை எடுத்துக்கொண்டு அடுக்களைக்குத் தாவ, அவன் அதைத் தடுத்து, ‘வேண்டாம், பிரேமா! அதையும் இன்று நான் பச்சையாகவே குடித்துவிடுகிறேன்!’ என்று அவள் கையிலிருந்த பாலை வாங்கி ‘மடக், மடக்’கென்று குடித்துவிட்டு, ‘அப்பப்பா! அமுதம் போன்ற உன் கையால் இந்த அமுதமான பாலை வாங்கிக் குடித்து எத்தனை நாட்களாகி விட்டன!’ என்று சொல்லிக்கொண்டே சென்று கதவைப் ‘படா’ரென்று சாத்தித் தாளிடுவானாயினன்.

அவளோ, ‘பாவி! பாலில் இரண்டு தூக்க மாத்திரைகளையாவது கலந்து கொடுக்கலாம் என்று பார்த்தால், அதற்கும் வழி இல்லாமல் செய்துவிட்டானே!’ என்று பொருமிக் கொண்டே அவனிடமிருந்து இன்னும் கொஞ்ச நேரம் தப்புவதற்காக ரேடியோவைத் திருப்பி வைப்பாளாயினள்.

‘நிறுத்து பிரேமா, நிறுத்து! இப்போது எனக்கும் உனக்கும் இடையே யார் இருந்தாலும், எது இருந்தாலும் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது!’ என்று அவன் வெறி பிடித்தவன் போல் கத்துவானாயினன்.

‘ரேடியோ கூடவா?’

‘ஆமாம். இப்போது நான் பாட வேண்டும். நீ ஆட வேண்டும்; நீ கடிக்க வேண்டும், நான் துடிக்க வேண்டும்; நான் கிள்ள வேண்டும், நீ துள்ள வேண்டும்…’

இவன் இப்படி அடுக்கிக்கொண்டே போக, இடையில் யாரோ வந்து கதவைத் தட்ட, ‘இது எந்தக் கரடி, பூஜை வேளையில்?’ என்று அவன் கொதித்து எழ, ‘ஆத்திரப்படாதீர்கள்; யாராயிருந்தாலும் இதோ நான் போய் அவர்களை உடனே அனுப்பி வைத்துவிட்டு வந்து விடுகிறேன்!’ என்று அவள் அவனை ஓர் அமுக்கு அமுக்கி உட்கார வைத்துவிட்டுப் பாய்ந்து சென்று கதவைத் திறந்து, அங்கே நின்ற ஏகாம்பரத்துக்கு ‘ஸ், பேசாதே!’ என்று ஜாடை காட்டி, அவனை அடுக்களைப் பக்கமாக ஒரு தள்ளுத் தள்ளி விட்டுவிட்டு, ‘ஐயோ, திருடன்! ஐயோ, திருடன்!’ என்று கத்தோ கத்து என்று கத்த, ‘எங்கே பிரேமா, எங்கே?’ என்று பதறிக் கொண்டே அவன் வெளியே ஓடி வர, ‘அதோ, என் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு அவன் ஓடுகிறான்!’ என்று அவள் தெருவைக் காட்ட, ‘ஆமாம், திருடன் கதவைத் தட்டிவிட்டா வருவான்?’ என்று அவன் அப்போதும் ஒரு சந்தேகத்தைக் கிளப்ப, ‘நாம் தூங்குகிறோமா, இல்லையா என்று தெரிந்துகொள்வதற்காக அவன் கதவைத் தட்டியிருப்பான்; அதுகூடவா தெரியவில்லை உங்களுக்கு?’ என்று அவள் அவனை ஓர் இடி இடித்து, ‘ஓடுங்கள்; பிடியுங்கள்!’ என்ற அவனை விரட்ட, ‘இப்போது தான் அது எனக்குத் தெரிந்தது, கண்ணே!’ என்று அசடு வழியச் சொல்லிக்கொண்டே அவன் தெருவில் இறங்கி ஓடுவானாயினன்.

அவன் தலை மறைந்ததும் அடுக்களையில் ஒளித்து வைத்திருந்த ஏகாம்பரத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்து, ‘இப்போதும் நீங்களும் ‘திருடன், திருடன்’ என்று கத்திக்கொண்டே அவரைத் தொடர்ந்து ஒடுங்கள்!’ என்று பிரேமா சொல்ல, ‘ஏன்?’ என்று அவன் ஒன்றும் புரியாமல் கேட்க, ‘அதை அப்புறம் சொல்கிறேன்; இப்போது ஓடுங்கள், சீக்கிரம்!’ என்று அவள் அவனை விரட்ட, அவனும் ‘திருடன், திருடன்!’ என்று கத்திக்கொண்டே அவனைத் தொடர்ந்து தெருவில் இறங்கி ஓடுவானாயினன்.

அப்போது ரோந்து வந்து கொண்டிருந்த போலீசாரில் ஒருவன், ‘திருடன், திருடன் என்று கத்தி யாரை ஏமாற்றப் பார்க்கிறாய், திருடா!’ என்று பீதாம்பரத்தை மடக்கிப் பிடிக்க, ‘ஐயையோ! நான் திருடன் இல்லை, ஐயா! வீட்டுக்காரன், சங்கிலியைப் பறி கொடுத்த வீட்டுக்காரன்! என்று அவன் பரிதாபமாக அலற, ‘எந்தத் திருடன்தான் இப்போது தன்னைத் ‘திருடன்’ என்று ஒப்புக்கொள்கிறான்? எல்லோரும் தங்களை வீட்டுக்காரர்கள் என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள். நட, ஸ்டேஷனுக்கு!’ என்று அவர்களில் இன்னொருவன் அவன் கழுத்தில் கை வைத்துத் தள்ள, எங்கே சங்கிலி?’ என்று மற்றொருவன் அவனைச் சோதித்துப் பார்த்து விட்டு, ‘அதற்குள் டபாய்த்து விட்டாயா?’ என்று அவன் கன்னத்தில் அறைய, அப்போது அந்தப் பக்கமாக வந்த ஒரு போலீஸ் லாரி பீதாம்பரத்தை ஏற்றிக்கொண்டு ஸ்டேஷனை நோக்கிப் பறக்கலாயிற்று.

அதைக் கண்டு அதிர்ந்துபோன ஏகாம்பரம், ‘அதற்கு மேல் என்ன செய்வது?’ என்று தெரியாமல் அப்படியே அயர்ந்து போய் நிற்க, அவனைத் தொடர்ந்து வந்த பிரேமா, ‘சனியன் விட்டது; வாருங்கள், போவோம்!’ என்று அவனை அழைத்துக்கொண்டு போய், அவனுடன் அன்றிரவை உல்லாசமாகவும் சல்லாபமாகவும் கழிப்பாளாயினள்!’

இப்படியாகத்தானே ஆண் கிளி தன் கதையைச் சொல்லி முடித்து விட்டு, ‘இப்போது சொல்லுங்கள், பெண்களை நம்பலாமோ?’ என்று கேட்டு, ‘உனக்குத்தான் இந்த மாதிரி கதை சொல்லத் தெரியுமா? எனக்கும் தெரியும்!’ என்று பெண் கிளி சொல்ல, ‘எங்கே சொல்லு, பார்ப்போம்?’ என்று மரகதம் கேட்க, அது சொன்ன கதையாவது:

‘காந்தி மகானையே ‘கண் கண்ட தெய்வம்’ என்று போற்றி வந்த கன்னி ஒருத்தி காவேரிப்பாக்கத்தில் இருந்தாள். அவள் பெயர் கஸ்தூரி. ஒரு தாய்க்கு ஒரு மகளாகப் பிறந்திருந்த அவளுக்கு நிறையச் சொத்து, சுகம் எல்லாம் இருந்தது. அவள் தந்தை பர்மா மாப்பிள்ளை ஒருவனுக்குச் சீரும் சிறப்புமாக அவளைக் கலியாணம் செய்து வைத்து விட்டுக் கண்ணை மூடிவிட்டார். கொஞ்ச நாட்கள் அவன் மாமனார் வீட்டில் இருந்த பின், மனைவியை அழைத்துக் கொண்டு பர்மாவுக்குப் புறப்பட்டான். கப்பல் ஏறுவதற்காகச் சென்னைக்கு வந்த அவர்கள், ஓர் ஓட்டலில் அறை எடுத்துக் கொண்டு தங்கினார்கள். நகை நட்டுகள் கப்பலில் செல்வது அவ்வளவு நல்லதல்லவென்றும், அவற்றை முதலில் ‘இன்ஷ்யூர்’ செய்து பர்மாவுக்கு அனுப்பிவிட்டால், அங்கே போய் நாம் வாங்கிக் கொள்ளலாமென்றும் அவன் சொல்ல, அதை நம்பி அவள் தான் அணிந்திருந்த நகை நட்டுக்களையெல்லாம் கழற்றி அவனிடம் கொடுக்க, அவற்றை வாங்கிக் கொண்டு வெளியே போன அந்தப் புண்ணியவான் திரும்பவே யில்லை. அவள் அவனுக்காக ஒரு நாள் காத்திருந்தாள்; இரண்டு நாள் காத்திருந்தாள்; மூன்று நாட்களும் காத்திருந்தாள். அவன் வரவில்லை; வரவே இல்லை. அக்கம் பக்கம் விசாரித்துப் பார்த்தபோது, ‘பர்மா கப்பல் போய் இரண்டு நாட்களாகிவிட்டதே?’ என்று சொல்ல, அதற்கு மேல் சென்னையில் இருப்பதில் பிரயோசனமில்லை என்று அவள் காவேரிப்பாக்கத்துக்கு வருவாளாயினள்.

அவளுடைய தாயார் ஒன்றும் புரியாமல், ‘அவர் எங்கே கஸ்தூரி? நீ ஏன் தனியாக வந்தாய்?’ என்று அவளைக் கேட்க, ‘அந்த அக்கிரமத்தை உன்னிடம் எப்படியம்மா, சொல்வேன்? அவரும் நானும் பட்டணத்தில் உள்ள ஓர் ஓட்டலில் தங்கியிருந்தோம். நள்ளிரவில் யாரோ இருவர் வந்து கத்தியைக் காட்டி மிரட்டி, எங்களிடமிருந்த நகை நட்டுக்களையும் பணத்தையும் பறித்துக்கொண்டு ஓடிவிட்டார்கள். ‘அவர்களைப் பற்றிப் போலீசில் புகார் செய்துவிட்டு வாருங்கள்; ஊருக்குப் போவோம்’ என்றேன் நான். ‘எந்த முகத்தோடு என்னை நீ அங்கே வரச்சொல்கிறாய்? நீ வேண்டுமானால் முதலில் போ; நான் பின்னால் வருகிறேன்’ என்று சொல்லி அவர் என்னை மட்டும் ரயிலேற்றி அனுப்பி விட்டார்!’ என்றும் ‘அது தான் காந்தி வழி’ என்று நினைத்து, அளந்து வைப்பாளாயினள்.

அதை நம்பி அவள் தாய் அவனுக்காக ஒரு மாதம் காத்திருந்தாள்; இரண்டு மாதங்கள் காத்திருந்தாள்; மூன்று மாதங்களும் காத்திருந்தாள். அவன் வரவில்லை; வரவே இல்லை.

எப்படி வருவான். பர்மாக்காரி ஒருத்தி அவனுக்கு அங்கே ஆசைநாயகியாக இருந்தாள். அவளுக்காகவே அவன் அடிக்கடி இந்தியாவுக்கு வந்து, பெண்ணைப் பெற்றவர்கள் யாராவது ஏமாந்தால் அவர்களுடைய பெண்ணைக் கலியாணம் செய்துகொண்டு, ‘பர்மாவுக்கு அழைத்துக் கொண்டு போகிறேன்’ என்று பட்டணத்துக்கு வந்து, ஏதாவது பொய் சொல்லி அவள்மேல் இருக்கும் நகை நட்டுக்களை யெல்லாம் கழற்றிக் கொண்ட பின், அவளை நடுத் தெருவில் விட்டுவிட்டுப் பர்மாவுக்கு ஓடிவிடுவது வழக்கம். இது தெரியாத கஸ்தூரி, தன் அம்மாவுக்குத் தெரியாமல் அவனுக்கு எத்தனையோ கடிதங்கள் எழுதினாள். அவற்றில் ஒரு கடிதம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதாவது, அவன் செய்து விட்டுப் போன அயோக்கியத்தனத்தை அவள் தன் வீட்டில் சொல்லவில்லை என்று எழுதியிருந்த கடிதந்தான் அது. அதை வைத்துக் கொண்டு இன்னொரு முறை அவளை ஏமாற்றலாம் என்ற நோக்கத்துடன் அவன் மீண்டும் காவேரிப்பாக்கத்துக்கு வந்தான். போலீசாரையும், போலீஸ் ஸ்டேஷனையும் அதுவரை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததாக அவள் தாயிடம் அவன் கதை கதையாக அளந்தான். ‘அது கிடைக்கும்போது கிடைக்கிறது; அதற்காக நீங்கள் ஏன் அப்படி அலைந்தீர்கள்?’ என்று அவள் மறுபடியும் தன் பெண்ணுக்குப் போட வேண்டிய நகை நட்டுக்களையெல்லாம் போட்டு, அவனுடன் அவளைக் கூட்டி அனுப்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்வாளாயினள்.

எல்லா ஏற்பாடுகளும் முடிந்து, மறுநாள் காலை இருவரும் சென்னைக்குப் புறப்படுவதாக இருந்தது. அதற்கு முதல் நாள் இரவு அவளுடன் கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்த அவன், ‘இம்முறை இவளைச் சென்னைக்கு அழைத்துக் கொண்டு போய் ஏமாற்றுவதென்பது அவ்வளவு எளிதல்ல; இங்கேயே ஏமாற்றிவிட்டுச் செல்வதுதான் நல்லது!’ என்று துணிந்து, கொஞ்சம் பாக்குத் தூளை எடுத்து அவள் வாயில் போட்டுவிட்டுச் சிரித்தான்; பதிலுக்கு அவளும் கொஞ்சம் பாக்குத் துளை எடுத்து அவன் வாயில் போட்டுவிட்டுச் சிரித்தாள். இவன் இரண்டு வெற்றிலைகளை எடுத்து, அவற்றில் சுண்ணாம்போடு கொஞ்சம் அபினையும் கலந்து மடித்து அவள் வாயில் திணித்தான்; பதிலுக்கு அவளும் இரண்டு வெற்றிலைகளை எடுத்துச் சுண்ணாம்பு தடவி மடித்து அவன் வாயில் திணித்தாள்.

இப்படியாகத்தானே இவர்கள் இன்பலாகிரியில் மிதந்தவாறு தாம்பூலம் தரித்து முடிக்க, அபினின் லாகிரியில் மயங்கி அவள் அப்படியே அவன்மேல் சாய, அதுதான் சமயமென்று அவள்மேல் இருந்த நகை நட்டுக்களை யெல்லாம் கழற்றிக் கொண்டு அவன் மெதுவாக அங்கிருந்து நழுவி, அன்றிரவே சென்னைக்கு விட்டான் சவாரி!

இதை அறியாத கஸ்தூரி ஒரு கனவு கண்டாள். அந்தக் கனவில் காந்தி மகான் தோன்றி, ‘அப்பாவி பெண்ணே! இம்முறையும் நீ ஏமாந்தாயா?’ என்றார் தம் புகழ் பெற்ற பொக்கை வாய்ச் சிரிப்புடன்.

‘உங்கள் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு ஏமாற்றம் ஏது, தாத்தா? ‘தீமை செய்பவனையும் நேசி!’ என்று நீங்கள் உங்களுடைய வாழ்நாளெல்லாம் சொல்லவில்லையா? அந்த வழியைப் பின்பற்றி எனக்குத் தீமை செய்த என் கணவரை நான் மன்னித்து நேசித்தேன். அதற்காக என் அம்மாவிடம் ஒரு பொய்யையும் சொன்னேன். அதனால் அவர் திருந்தி, மறுபடியும் என்னைத் தேடி வந்தார். இதோ, நாளைக்கு அவர் என்னை அழைத்துக்கொண்டு பர்மாவுக்குப் போகப் போகிறார்!’ என்றாள் அவள், குதூகலத்துடன்.

காந்தி மகான் சிரித்தார்; ‘ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டாள் கஸ்தூரி.

‘அசட்டுப் பெண்ணே! நான் ‘உண்மை வெல்லும்’ என்றுதானே சொன்னேன்? ‘பொய் வெல்லும்’ என்று சொல்லவில்லையே!’ என்றார் காந்திஜி.

தான் செய்த தவறு அப்போதுதான் தெரிந்தது அவளுக்கு. கண் விழித்துப் பார்த்தாள்; கணவனைக் காணோம்.

அடுத்தாற்போல் தான் அணிந்திருந்த நகை நட்டுக்களைப் பார்த்தாள்; அவனுடன் அவற்றையும் காணோம்!

“ஐயோ, மோசம் போனேனே!’ என்று அவள் அலற, ‘என்னம்மா, என்ன நடந்தது!’ என்று கேட்டுக்கொண்டே அடுத்த அறையிலிருந்த அவள் தாய் விழுந்தடித்துக் கொண்டு அங்கே ஒடி வந்து கேட்க, அவளிடம் இம்முறை உண்மையைச் சொன்னாள் கஸ்தூரி. ‘அதை இப்போது சொல்லி என்னடி, பிரயோசனம்? அப்போதே அல்லவா சொல்லியிருக்க வேண்டும்!’ என்றாள் அவள்.

இப்படியாகத்தானே பெண் கிளி தன் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘இப்போது சொல்லுங்கள். ஆண்களை நம்பலாமோ?’ என்று கேட்க, ‘ஒர் உண்மையை நீங்கள் இருவருமே மறந்துவிட்டீர்கள்!’ என்றான் மாணிக்கம், சிரித்துக்கொண்டே.

‘அது’ என்ன உண்மை?’ என்று ஆண் கிளி கேட்டது.

‘மனிதப் பிராணிகள்தான் அப்படியெல்லாம் செய்யுமே தவிர, மற்ற பிராணிகள் அப்படியெல்லாம் செய்வதில்லை என்னும் உண்மைதான் அது’ என்று மாணிக்கம் சொல்ல, அதனால் உச்சி குளிர்ந்த ஆண் கிளியும் பெண் கிளியும் ஒன்றோடு ஒன்று குவாவி மகிழ, ‘ஆமாம், உங்களால் எப்படி முக்காலத்தையும் சொல்ல முடிந்தது?’ என்று கேட்டாள் மரகதம்.

‘சொல்வதை நம்ப ஆளிருந்தால் எதைத்தான் சொல்ல முடியாது? எல்லாவற்றையும் சொல்லலாம். ‘முன் பிறவியில் பூனையாக இருந்தேன்’ என்றேன் நான்; ‘இல்லை’ என்று உன் கணவரால் சொல்ல முடிந்ததா? முடியும்? ஏனெனில், நான் பூனையாக இருந்தது எனக்கும் தெரியாது; இவருக்கும் தெரியாது அல்லவா?’ என்று கண் சிமிட்ட, ‘அப்படியென்றால் எங்கள் பெயரை எனக்குத் தெரியாமல் அவளுக்கும், அவளுக்குத் தெரியாமல் எனக்கும் நீங்கள் சொன்னது எப்படி?’ என்று மாணிக்கம் கேட்க, ‘அதுவா? ஒரு சமயம் நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் சேர்ந்தாற்போல் வெளியூர் பஸ் ஒன்றில் பிராயணம் செய்து கொண்டிருந்தீர்கள். அப்போது உங்கள் காலடிகளுக்குக் கீழே இருந்த நாங்கள் அதைத் தெரிந்து கொண்டோம். தெரிந்து கொண்டதோடு மட்டுமல்ல; அங்கேயே ஒருவரை ஒருவர் காதலிக்கவும் செய்தோம். அந்தக் காதல் நிறைவேற நாங்கள் அப்படி ஒரு கதை கட்டி விட, அது ‘காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்ததுபோல் பலித்துவிட்டது!’ என்றது ஆண் கிளி.

‘இதற்கு முன் காதலித்த நீங்களா இப்போது இப்படிச் சண்டையிட்டுக் கொண்டீர்கள்?’ என்றாள் மரகதம்.

‘ஊடல் இல்லாத காதலும் ஒரு காதலா? சர்க்கரை இல்லாத காபி போலல்லவா இருக்கும் அது!’ என்றது பெண் கிளி.

இதைக் கேட்டதும் மரகதம், ‘கேட்டீரா கதையை?’ என்று மாணிக்கத்தின் பக்கம் திரும்ப, ‘கேட்டேன், கேட்டேன்!’ என்று அவன் சிரித்துக் கொண்டே அவள்மேல் சாய, ‘ஆரம்பித்து விட்டீர்களா, அதற்குள்?’ என்று அவள் அவனைப் பிடித்து அப்பால் தள்ள, ‘காதல் போய் இங்கேயும் ஊடல் வந்துவிட்டதுடோய்!’ என்று கூவிக்கொண்டே கிளிகள் இரண்டும் சிரித்து மகிழ்வதற்குப் பதிலாகச் சிறகடித்து மகிழலாயின.’

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘ஆண்கள் நல்லவர்களா, பெண்கள் நல்லவர்களா?’ என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, ‘இரு திறத்தாரிலும் நல்லவர்களும் உண்டு. கெட்டவர்களும் உண்டு’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் மீண்டும் அவரிடமிருந்து தப்பி, முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு விட்டது காண்க…. காண்க…. காண்க……

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை.

விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *