கிச்சாவின் விழுப்புண்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 12, 2023
பார்வையிட்டோர்: 13,134 
 
 

கிச்சா எங்கள் கூட்டத்தில் கொஞ்சம் பசை உள்ளவன். இந்த பசை காரணமாக எங்கள் கூட்டத்தில் யார் அவனுடன் ஒட்டிக் கொள்வது என்ற போட்டி இருக்கும். அவனுடன் ஒட்டிக் கொள்வது என்றால் அவன் செய்யும் எல்லா காரியங்களுக்கும் ஆமாம் என்ற ஒற்றை வார்த்தை போட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஒரு சில நேரங்களில் சில வீர விளையாட்டும் விளையாட வேண்டியிருக்கும். வீர விளையாட்டு என்றவுடன் பயந்து விடாதீர்கள். அவனது காதல் முயற்சிகளுக்கு நீங்கள் துணை போக வேண்டும்.

ஏதாவது வீட்டு முன்னால் நின்று வழிவது, அவர்கள் வீட்டு நாய் அவனையும் உங்களையும் விரட்டும்போது குறிப்பாக அவனை காப்பாற்றுவதாக நடிப்பது, அதாவது நீங்கள் அவனை முன்னால் விட்டு பின்னால் ஓடினால் போதும், உனக்காக எது வேணா செய்வேன் என்று அடிக்கடி உசுப்பேற்றுவது. இவைகள்தான். இதனால் கிடைக்கும் பலன் என்ன என்று கேட்கிறீர்களா? அன்று மாலை ஒரு ‘கட்டன் சாயா அரை ரொட்டி’ அவன் செலவில் ‘பரத் பேக்கரியில்’ வாங்கி கொடுப்பான். அவ்வளவுதானா என்று கேட்காதீர்கள் அதுவே அந்த காலத்தில் எங்களுக்கு மிகப்பெரிய விருந்து. இதற்குத்தான் எங்களுக்குள் அவனுடன் சேர போட்டி இருக்கும். இதில் எனக்கு அடிக்கடி இந்த வாய்ப்பு கிடைக்கும், காரணம் நான் எழுதி தரும் தப்பும் தவறுமான தமிழில் எழுதிய கவிதைகள்.

இப்படி எல்லாம் செயலபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு என்னதான் வேலை என்று நீங்கள் சந்தேகப்படுவது தெரிகிறது. நாங்கள் பத்தாவது முடித்து பதினொன்றில் அடி எடுத்து வைத்திருந்தோம். அதாவது பூனை மீசை புலி மீசையாக மாறத்தொடங்கிய பருவம். வயது பதினேழில் இருந்தோம்.

நம் நாட்டில் எத்தனையோ காதலர்களை பற்றி காவியங்கள் இயற்றப்பட்டிருக் கின்றன. ஆனால் ஏன் இன்னும் கிச்சாவை பற்றி காவியம் வரவில்லை என்று எனக்கு சந்தேகம் வருவதுண்டு. பிறகுதான் புரிந்தது அவர்கள் ஒருத்தரை ஒருத்தர் மட்டுமே காதலித்திருக்கிறார்கள். நம் கிச்சா அப்படி இல்லை, மாதத்திற்கு ஒருத்தரை காதலிப்பதாக சொல்லுவான். அவனை பொருத்தவரை காதலிப்பது என்றால் பெரிய விஷயம் எல்லாம் இல்லை. அவனை பார்த்து சிரித்து விட்டால் போதும், ஜென்ம சாபல்யம் அடைந்து விடுவான். அதற்காக பழியாய் அவர்கள் பள்ளிக்கூட வாசல் முன்னால் தவம் கிடப்பான். அவனுடன் நிற்பவர்களுக்குத்தான் மிகுந்த சங்கடம், உங்களுக்கு இங்கு என்ன வேலை ? என்று யாராவது கேட்டு விடுவார்களோ என்று, அதையும் தாங்கி நிற்பவனுக்குத்தான் ‘பரத் பேக்கரியில் கட்டன் சாயாவும் அரை ரொட்டியும்’ கிடைக்கும்

இப்படி கிச்சா அலைந்து கொண்டிருக்கும்போது ‘தென்னா’ என்னும் நண்பன் இவனை மாட்ட வைக்க ஒரு சில சித்து வேலைகளை செய்து விட்டு ஒன்றுமே தெரியாதவனை போல இருந்து விடுவான். அவனிடம் சண்டையிட யாருக்கும் கொஞ்சம் அச்சம். காரணம் அவன் அப்பா ஒரு அரசியல்வாதி, அது மட்டுமல்ல, ஆளும் பெரிய மீசை வைத்து ஆறடி பக்கம் இருப்பார். அவருடைய வீரம் சாதாரணமானதல்ல, நடு ரோட்டில் கம்பீரமாய், வீரமாய் நடந்து வாயால் சவடால் விடுவார் “யாருக்காவது தைரியம் இருந்தா என்னை தொட்டு பாருங்க” கவனிக்க அவர் கூச்சல் போடும் இடம் எங்கள் காலனிக்குள் இருக்கும் ரோட்டில் மட்டும்தான். அதற்கே அவர் மனைவி அந்த தெருவில் நின்று கொண்டு “என்னய்யா இங்க சத்தம்” பெரும் குரலில் ஒரு கேள்வி கேட்டால் போதும் அப்படியே பொட்டி பாம்பாய் ஒண்ணுமில்லை, ஒண்ணுமில்லை. பம்மியவரை தண்ணி போட்டியின்னா மருவாதையா வீட்டுக்குள்ள போய் அடங்கணும்” அவ்வளவுதான் வீட்டை நோக்கி தன் வீர நடையை வேகப்படுத்துவார். அப்படிப்பட்டவரின் மகனிடம் நாங்கள் முறைத்து கொள்ள விரும்ப மாட்டோம்.

கிச்சா அன்று அவசரமாய் என்னை கூப்பிட்டான் ஒரு கவிதை ஒண்ணு எழுதி கொடு அவனின் அவசரம் எனக்கு புரியவில்லை, ஏனப்பா அவ்வளவு அவசரம் (உங்களுக்கு இன்னும் ஒரு இரகசியம் சொல்லி விடுகிறேன்) கிச்சான் தமிழ் பையனாய் இருந்தாலும் நீண்ட காலம் அவனின் பெற்றோர் மைசூரில் விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள். உறவுகள் வீட்டில் தங்கி இருந்து படிக்க வந்திருந்தான். இதனால் தமிழ் படிப்பதற்கு மிகுந்த சிரமப்படுவான். நாங்கள்

இங்கேயே இருந்து தமிழ் படித்தும் தப்பும் தவறுமாய் எழுதும் கவிதைகள் அவனுக்கு பெரிய இலக்கியமாக தெரியும்.

“சூரியன் உதைப்பதற்கு மறந்தாலும் நிலவு வாருவதற்கு மறந்தாலும்” இப்படியாக என் கவிதை உருவாகி அவனுக்கு ஒரு பேப்பர் முழுக்க நிரப்பி தர அதை வாங்கிக் கொண்டு அவசரமாய் எங்கோ சென்றான்.

அதற்கு பின் அவனை பார்க்கவே முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு வாரமாகி விட்டது,

அன்று ஞாயிறு விடுமுறையாக இருந்ததால் அவனை பார்த்து விட்டாவது வருவோம் என்று நானும், இரண்டு நண்பர்களும் அவன் வீட்டுப்பக்கம் போனோம். வீட்டில் எங்களை கண்டவுடன் முறைத்த அந்த பெரியவர்கள், அவன் ‘டுயூசன்’ போயிருக்கான், அவனை தொந்தரவு பண்ணாதீங்க, முகத்தில் அடித்தது போல் சொல்லி விட்டார்கள். எங்களுக்கு ஆச்சர்யம் “டியூசன்” எல்லாம் போற அளவுக்கு அவனுக்கு திடீருன்னு படிப்பு மேல ஆர்வம் எப்படி வந்திருக்கும்

அடுத்த வாரத்தில் ஒரு நாள் நான் அவனை அகஸ்மாத்தமாக சந்தித்தேன். என்னடா “டியூசன் எல்லாம் போறியாமா? இந்த கேள்வியை கேட்டவுடன் பாய்ந்து விட்டான். உன்னைய நம்பி ஒரு கவிதை எழுதி கொடுடான்னு சொன்னா, இப்படியாடா தப்பு தப்பா எழுதி கொடுப்பே. அந்த கவிதை நம்ம தமிழாசிரியர் கையில கிடைச்சு இப்ப எப்பப்பவெல்லாம் “ப்ரீயா” இருக்கறியோ அப்பவெல்லாம் எங்கிட்ட தமிழ் கத்துக்கணும்னு எங்க வீட்டுல சொல்லி இப்ப நான் டியூசன் போயிட்டு இருக்கேன். எல்லாம் உன்னாலதான் அவன் முறைத்த முறைப்பில் இடத்தை காலி செய்தேன்.

அடுத்து அவனை பார்த்த பொழுது ‘சயின்ஸ்’ மாஸ்டரிடம் “டியூசன்” போய்க் கொண்டிருந்தான். யாரிடம் சயின்ஸ் உதவி கேட்டானோ தெரியவில்லை. அதற்கு பின்னால் அவனை பத்து வருடங்கள் கழித்துத்தான் சந்திக்க முடிந்தது.

அதுவும் படித்து முடித்து கிருஷ்ணகிரி பக்கம் ஒரு பள்ளிக்கூடத்திற்கு ஆசிரியர் தேவை என்று கேள்விப்பட்டு அந்த வேலைக்கு முயற்சி செய்த பொழுது எங்களை நேர்முக தேர்வு செய்து முடித்த பின் பள்ளியின் தாளாளரை சந்திக்க சொன்னார்கள். சந்தித்தவன் அதிர்ச்சியுடன் ஆச்சர்யமாகி விட்டேன். நம்ம கிச்சாதான் உட்கார்ந்திருந்தான். நீதான் தமிழாசிரியர் வேலைக்கு வந்திருக்கிறாயா? அவன் குரலில் கேலியா? கிண்டலா? தெரியவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *