காணாமற்போன கறவைப் பசு

0
கதையாசிரியர்: ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 19, 2023
பார்வையிட்டோர்: 4,638 
 
 

(1990 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்).

காணாமற்போன கறவைப் பசு

அவர்கள் குதிரை வாங்கும் சிந்தனையில் பொழுதுபோனதே தெரியவில்லை. அத்துடன் அந்த வேளைக்கு மேய்ச்சலிலிருந்து திரும்ப வேண்டிய அவர்களது ஒரே கறவைப் பசு திரும்பாதது கண்டு அவர்களுக்குக் கவலையாகிவிட்டது. ஒருநாளும் அது நேரம் கழித்து வந்ததே இல்லை. பால் கறக்க மறந்தாலும் அந்தப் பசு, நேரத்துக்கு வெளியே போய் மேய்ந்துவிட்டுத் திரும்புவதில் தவறியதே இல்லை.

நேரம் கடந்து கொண்டேயிருந்தது. பசு கொட்டி லுக்குத் திரும்பியபாடில்லை. சிஷ்யர்கள் திசைக்கு ஒருவராகத் தேடிக்கொண்டு புறப்பட்டார்கள். எங்கு தேடியும் அது தென்படவில்லை. அன்று இரவெல்லாம் தேடியும் கறவைப் பசு கிடைக்கவில்லை.

மறுநாள்! பொழுது விடிவதற்குள் சிஷ்யர்கள் புறப்பட்டுப் போனார்கள். சுற்று வட்டாரங்களில் உள்ள சிற்றூர்களுக்கெல்லாம் சென்று மூலை முடுக் கெல்லாம் தேடினார்கள். ஓர் இண்டு இடுக்கையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் கவலை பெரிதாக வளர்ந்தது. மாட்டோடுதான் திரும்புவேன் என்று புறப் பட்ட மட்டி, மூன்று தினங்கள் கழித்துத் தனியாகவே திரும்பினான் கவலையோடு.

வேதனையோடு வெறும் ஆளாக வந்த மட்டி, குருநாதர் திருவடிகளிலே சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்தான். “குருதேவா! நமது கறவைப் பசு கிடைக்கவே இல்லை.” அந்த வேதனையிலும் ஒரு நன்மை எனக்குக் கிடைத்தது” என்றான் மட்டி.

“என்ன என்ன?” ஆர்வத்துடன் குருவை மிஞ்சினார்கள் மற்ற சிஷ்யர்கள்.

“பசு காணாமல் போய்விட்டது. குதிரை கிடைத்து விட்டது!”

“குதிரையா எங்கே?”

“குறைந்த விலைக்கு ஒரு குதிரையை வாங்கி விடலாம் என்று வழி தெரிந்துகொண்டு வந்திருக்கிறேன்” என்று மகிழ்ச்சியோடு கூறினான் மட்டி.

“சற்று விளக்கமாகத்தான் சொல்லேண்டா மட்டி!” என்றார் குரு பொய்க் கோபத்துடன்.

“ஐயா! ஊர் ஊராகத் தேடிக்கொண்டு போனதில் நமது பசு கிடைக்கவில்லை, ஆனால் ஓர் ஊரிலே ஓர் ஏரிக்கரையின் கீழே நன்றாகச் செழித்து வளர்ந்திருந்த புல் புதரிலே நான்கு ஐந்து பெட்டைக் குதிரைகள் அழகாக மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றைப் பார்த்ததும் எனக்கு உடனே நம் குருநாதர் நினைவு வந்துவிட்டது. ஆசையோடு அந்தக் குதிரைகளை நெருங்கிச் சென்றேன். அருகே போனதும் தான் பார்த்தேன்… தரையிலே பெரிய பெரிய முட்டைகள்! என் இரு கைகளாலும் கட்டித் தழுவ முடியாத பெரிய பெரிய முட்டைகள். இதுவரை நான் அவ்வளவு பெரிய முட்டைகளைப் பார்த்ததே இல்லை. அந்த முட்டைகள் நன்றாக மேய்ந்து கொழுத்திருந்த அந்தக் குதிரைகள் இட்ட முட்டைகளாகத் தானே இருக்க வேண்டும்! எனக்குச் சந்தேகம் வந்தது! அதைத் தீர்த்துக் கொள்ள அக்கம் பக்கத்தில் யாராவது இருந்தால், கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே என்று நினைத்தேன். கடவுள் கிருபையாலும் நம் குருநாதர் கடாட்சத்தாலும், அப்போதுதான் அந்த வழியாக வந்த ஓர் ஆளை நிறுத்திக் கேட்டேன், “இதெல்லாம் குதிரை முட்டைகள் அல்லவா?” என்றேன்.

என் சந்தேகம் தீர்ந்துவிட்டது. அவை குதிரை முட்டைகளே. அவன் அடித்துச் சொல்லிவிட்டான். நான் நினைத்தது நூற்றுக்கு நூறு சரி. அவை குதிரை முட்டைகளே!

அந்த முட்டை என்ன விலையாகும் என்று கேட்டேன். அவன் “அதிகமில்லை. ஆறு பொன்” என்றான். எனக்காக வேண்டுமானால் ஐந்து பொன்னுக்குத் தருவதாகச் சம்மதித்தான். இது சந்தோஷமான சமாசாரம் இல்லையா! விலை சகாயமாக வருகிற போது, குதிரை முட்டையை வாங்கிவிடுவது புத்திசாலித்தனம் இல்லையா? குதிரையை முட்டையாகவே வாங்கி அதிலிருந்து குதிரைக்குட்டி வந்தால் அதை இளமையிலேயிருந்து நம் இஷ்டப்படி நல்ல குதிரையாக வளர்க்கலாமே! வளர்ந்த குதிரையை வாங்கப் போனால் விலையும் அதிகமாக இருக்கும். அது முரட்டுக் குதிரையாகவும் இருந்து தொலைக்கும்.

அதனால் குருநாதருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிட்டால்? சின்ன வயதிலிருந்தே நாமே வளர்த்து குருநாதரோடும் பழக்கி வருவது எவ்வளவு நல்லது?

மட்டி தன் புத்திசாலித்தனத்தைத் தானே மெச்சிக் கொண்ட போது, மற்றவர்களும் அவனோடு ஆமோதித்துப் பேசினார்கள். முடிவாக, மட்டியிடம் ஐந்து பொன்னைக் கொடுத்து அவனுக்குத் துணையாக மடையனையும் குதிரை முட்டை வாங்குவதற்கு வழியனுப்பி வைத்தார்கள்.

அடை காப்பது யார்?

மட்டியும், மடையனும் மடத்திலிருந்து போன பிறகு வரப் போகிற குதிரை முட்டையைப் பற்றியும் அதிலிருந்து பெறப்போகும் குதிரையைப் பற்றியும், கற்பனையாக ஏதேதோ எண்ணிக் கொண்டு மகிழ்ச்சி யில் மிதந்தார்கள். மற்ற நால்வரும்.

“நல்ல முட்டையாகப் பார்த்து வாங்கி வருவார்கள். அதனால்தான் மட்டியோடு மடையனையும் அனுப்பி யிருக்கிறோம்’” என்று தம் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினார் பரமார்த்த குரு.

“நல்ல முட்டையிலிருந்து நல்ல ஜாதிக் குதிரை பிறக்கும்” என்று சந்தோஷமாகச் சொன்னான் மிலேச்சன்.

“எல்லாம் சரி. அந்த முட்டையை அடைகாத்துத் தானே பக்குவமடையச் செய்யவேண்டும்? அப்புறம் தானே அதிலிருந்து அதிலிருந்து குட்டியை வெளிக்கொணர முடியும்? ஆமாம்… அதை யார் அடைகாப்பது?’ என்று தன் ஐயத்தைக் கிளப்பினான் மூடன்.

“அவர்கள் பெரிய முட்டையாய்ப் பார்த்து வாங்கி வரப் போகிறார்கள். அதை ஒருவர் மாத்திரம் இரு கைகளாலும் கட்டி அணைக்கவே முடியப் போவ தில்லை. கோழிகளை விட்டு அடைகாக்க வைக்கலாம் என்றால் அடேயப்பா… எத்தனை கோழிகள் தேவைப் படும்? பத்துப் பதினைந்து கோழிகளாவது வேண்டி யிருக்குமே! அவ்வளவும் என்ன விலையாகும்?” என்று கவலையில் ஆழ்ந்தான் பேதை.

“அது சரி. அவ்வளவு பெரிய முட்டையைப் பத்துப் பதினைந்து கோழிகள் ஒற்றுமையாக அடை காக்குமா? ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டு பறந்து போய்விடாதா? இதையெல்லாம் யார் பாதுகாப்பது?” என்று தன் ஐயத்தை வெளியிட்டான் மிலேச்சன்.

இவ்வாறு மூன்று சிஷ்யர்களும் பரமார்த்த குருவும் சிறிது நேரம் பலமாக யோசித்துக்கொண்டிருந்தார்கள். கடைசியாக, குருநாதருக்கு ஒரு முடிவு தோன்றி விட்டது.

“நம்மில் யாராவது ஒருவன்தான் குதிரை முட்டையை அடை காத்து ஆகவேண்டும். வேறு வழியேயில்லை!” என்று பொதுவாகக் கூறிவிட்டுப் பின் ஒவ்வொருவராக உங்களில் யார் அடைகாப்பது என்று தனித்தனியே விசாரித்தார்.

மூடனைக் கேட்டபோது அவன் சொன்னான், “சுவாமி, நான் தான் தினந்தோறும் நதிக்குச் சென்று, நமக்கு வேண்டிய தீர்த்தமெல்லாம் கொண்டு வருவது வழக்கம். காட்டுக்குப் போய் எரிபொருளைக் கொண்டு வந்து சேர்ப்பதும் என் பணிதானே! இப்படியிருக்க, எனக்கு அடைகாக்க நேரம் ஏது?”

பேதையைக் கேட்ட போது அவன் சொன்னான், “குருவே! நம் எல்லாருக்கும் உணவு தயாரிக்கும் சமையல் காரியங்களை நான்தானே செய்தாக வேண்டும்? வாய்க்கு ருசியாக, வகை வகையாகக் காய்கறிகளைப் பக்குவமாகச் சமைத்து உணவு, வகைகளைத் தயார் செய்யும் பணி மட்டுமா? எல்லாருக்கும் குளிக்கவும், குடிக்கவும் வெந்நீர் வைத்துத் தரும் வேலையும் எனக்கு இருக்கிறதே, அடை காக்க எனக்கு நேரம் இல்லையே!”

மிலேச்சனைக் கேட்டபோது அவன் சொன்னான், ”குரு சுவாமி! அதிகாலையிலே எழுந்து ஆற்றுக்கு ஓடி பல் துலக்கி, கை, கால், முகம் கழுவி, பக்தி சிரத்தை யோடு சந்தியானுஷ்டானம் செய்கிறேன். அதற்கு பிறகு நந்தவனங்களிலே நுழைந்து அன்றைக்குப் பூத்த அழகழ கான வாசமலர்களை வகை வகையாகக் கொய்து கொண்டு வந்த பூஜைக்கு நேர்த்தியாகச் சமர்ப்பிக் கிறேன். தெய்வச் சிலைகளுக்குப் பக்தியோடு மலர் சாற்றி தூப தீபங்காட்டி ஆராதனை புரிவது அடியேன் பணியில்லையா? ஆகவே அடைகாக்க எனக்கு நேரம் ஏது?”

“நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். அவரவர்களுக்கும் அன்றாடக் கடமைகள் தலைக்கு மேல் இருக்கத்தான் செய்கின்றன. முட்டை வாங்கி வரப் போயிருக்கும் மட்டிக்கும் மடையனுக்கூட நித்தம் நித்தம் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. வெளி வேலைகளை எல்லாம் அக்கறை யோடு கவனிக்கவே மட்டிக்கு நேரம் போதவில்லை. ஏதாவது அவசியமான பொருள்கள் வேண்டுமானால், கடைக்கோ சந்தைக்கோ மட்டிதானே போக வேண்டும்? அவனுக்கும் நேரம் இல்லை.

மடையன்…! ஆங்… அவனுக்கும் மிக முக்கியமான கடமைகள் நிறையவே உ ள்ளன. மடத்துக்கு வருகிறவர்கள் போகிறவர்களை என்ன ஏது என்று விசாரிப்பது, அவர்கள் கேட்பதற்கெல்லாம் பதில் சொல்வது… அதைவிட முக்கியமாக, வெளியிலிருந்து வருகிறவர்கள் கொண்டுவரும் வழக்குகளைக் கேட்டுத் தீர்ப்பது எல்லாம் மடையனுடைய பணியாக உள்ளதே! என்ன செய்வது? சிஷ்யர்கள் யாவரும் உங்கள் கடமைகளைச் சிரத்தையோடு, தவறாமல் செய்து வருகிறீர்கள். வேறு வேலைக்கு உங்களுக்கு நேரம் இல்லை. ஆனால் நான்… நான் சும்மாதானே இருக்கிறேன்! ஆகவே நான் அடை காக்கிறேன். குதிரை முட்டையை என் மடிமேல் வைத்துக் கொண்டு என் இரு கரங்களாலும் தழுவிப் பிடித்துக் கொண்டு, மார்போடு அணைத்துக் கொண்டு ஒரு பெரிய போர்வையைப் போட்டு மூடிக்கொண்டால் பத்திர மாய், பாதுகாப்பாய், குதிரை முட்டை பக்குவம் அடைந்து விடாதா? பார்ப்பதற்கு அழகான ஒரு குட்டி பிறந்து விடாதா? அதை அருமையாக, நம் இஷ்டம் போல் வளர்த்து நம் பேச்சைக் கேட்கிற நல்ல குதிரையாக உருவாக்கி, அதன் மேல் ஏறிக்கொண்டு வெளியே கிளம்பினால் பரமானந்தமாக இருக்காதா? அப்போது நாம் பட்ட கஷ்டமெல்லாம் பறந்து போய்விடாதா?”

குரு தாமே அடைகாப்பதாக முடிவு செய்து கற்பனைக் குதிரையின் மீது சந்தோஷச் சவாரி செய்து கொண்டிருந்தார்.

மட்டி வாங்கி முட்டை

மட்டியும் மடையனும் குதிரை முட்டை வாங்க மடத்திலிருந்து புறப்பட அந்த மூன்றாஞ்சாம வேளை யிலே வானத்துச் சந்திரனும் அவர்களுக்கு வழித் துணையாகப் புறப்பட்டான். இரண்டரை காத தூரம் நடந்து, மட்டி, மடையனுடன் அந்த முட்டைகளைக் கண்ட அந்த ஏரிக் கரையின் கீழ்ப்பகுதியை அடைந்தான். அப்போது நன்றாக விடிந்துவிட்டது.

அங்கே ஏராளமான முட்டைகளைக் கண்டதும் மடையனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி ஏற்பட்டு விட்டது. நிறைய சாம்பல் பூசணிக்காய்கள் காய்த்துக் கிடந்தன. அவற்றைக் குதிரை முட்டைகள் என்று நினைத்துக் கொண்டு, அங்கிருந்த குடியானவனிடம் சென்றார்கள்.

“ஐயா! இங்கிருக்கும் குதிரை முட்டைகளிலேயே மிகவும் நல்ல ஒரு முட்டையாகத் தேர்ந்தெடுத்து, எங்களுக்கு விலைக்குத் தரவேண்டும்” என்று பணிவோடு கேட்டுக் கொண்டான் மட்டி.”

“அடடா! முட்டைகளை நான் யாருக்கும் விற்பது இல்லையே!” என்று ஒரேயடியாய் மறுக்கப் பார்த்தான் அந்த குடியானவன். ஆனால் மட்டியும் மடையனும் அவனை விடுவதாகவே இல்லை! குடியானவனும் அவர்கள் மூடத்தனத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு பூசணிக்காயை நல்ல விலைக்கு விற்காமல் விடுவதாக இல்லை.

“நீங்கள் கெஞ்சிக் கூத்தாடிக் கேட்டுக் கொள்வதால் ஒரு குதிரை முட்டையை உங்களுக்கு விற்கச் சம்மதிக்கிறேன். ஆனால் உங்களால் வாங்க முடியுமா? நிறைய விலையாகுமே! என்றான் குடியானவன்.

“தெரியும் எனக்கு. நல்ல ஜாதிக் குதிரை முட்டை ஐந்து பொன் விலை சொல்லப் போகிறாய். எனக்குத் தெரியாதா? நான் சரியாகவே கொண்டு வந்திருக் கிறேன்,” என்று புத்திசாலித்தனமாகக் கேட்பதாக எண்ணி ஐந்து எடுத்து எண்ணிக் காட்டினான் மட்டி.

“சரி சரி… பணத்தை வாங்கிக் கொண்டு நல்ல முட்டையாகப் பார்த்துக் கொடு. நாங்கள் தூக்கிக் கொண்டு உடனே போயாக வேண்டும். ஜாக்கிரதை! நல்ல ஜாதிக் குதிரை வேண்டும் எங்களுக்கு. அதற்கு நல்ல ஜாதி முட்டையாகப் பார்த்துப் பொறுக்கி எடுத்துக் கொடு” கொடு” என்று அவசரப்படுத்தினான் மடையன்.

குடியானவன் அவர்களுடைய அதிமேதாவித் தனத்தைத் தனக்குள் எண்ணி வியந்து கொண்டான். அவர்களுக்குப் பரிவு காட்டுபவன் போல் பக்குவமாகப் பேசினான்.

“உங்களைப் பார்த்தால் மிகவும் நல்லவர்களாகத் தெரிகிறது. ஆதலால் நீங்கள் கேட்கும் ஐந்து பொன் னுக்கே ஓர் அழகான ஜாதி முட்டையைக் கொடுத்து விடுகிறேன் பணமா முக்கியம். நல்ல மனிதர்களல் லவா முக்கியம்” என்று நாகரிகம் உணர்ந்தவன் போல் பேசினான் குடியானவன்.

“சரி சரி சீக்கிரம் கொடு” என்று கூறி ஐந்து பொன்னைக் கொடுத்தான் மட்டி.

“ஐயா! உங்களுக்கு எல்லாம் தெரிகிறது. நீங்களே உங்கள் இஷ்டத்துக்கு நல்ல ஜாதி முட்டையாகப் பொறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் இவ்வளவு குறைந்த விலைக்கு வாங்கியதாக வெளியிலே யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டான் குடியானவன்.

“எங்களுக்கு அதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது? எங்கள் அவசரம் உனக்குத் தெரியாது. நீ சொன்னபடியே நாங்களே முட்டையைத் தேர்ந் தெடுத்துக் கொள்கிறோம்” என்றான் மட்டி.

அதற்குப் பிறகு இருவரும் தேடித் தேடி ஒரு பூசணிக்காயைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அங்கிருந்து அவ்விருவரும் வேகமாகப் புறப்பட்டு விட்டார்கள்.

மட்டி தன் தலையின் மேல் அந்த முட்டையை ஜாக்கிரதையாக சுமந்து நடந்தான். மடையன் அவன் முன்னே நடந்தான். சீக்கிரத்தில் தங்கள் காரியத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டதாக இருவரும் ஏகமாக சந்தோஷப்பட்டுக் கொண்டே நடந்தார்கள்.

“தெய்வம் நம் பக்கம் இருக்கிறது. குருநாதர் ஆசி நமக்கு ஏராளமாக இருக்கிறது. ஆகவேதான் குறைந்த விலைக்கு குடியானவனிடம் பக்குவமாகப் பேசி, ஒரு பெரிய முட்டையை வாங்க முடிந்தது” என்றான் மடையன்.

‘ஆமாம்! நூறு பொன் நூற்றைம்பது பொன் மதிக்கத்தக்க இந்த முட்டையை ஐந்தே பொன்னுக்கு வாங்கி விட்டோம் என்றால், அவ்வளவுக்கும் குரு நாதரின் தவவலிமைதான் காரணம். ஆஹா! இவ்வளவு மேன்மை பொருந்திய பரமார்த்த குருவுக்கு நாம் பரம சிஷ்யர்களாக இருப்பது நம் பாக்கியம்” என்று மகிழ்ந்து போனான் மட்டி.

“இதில் எள்ளளவும் எனக்குச் சந்தேகமில்லை. நம் குரு எப்படிப்பட்டவர்…? நாம் எப்படிப்பட்ட வர்கள்…? அறிவின் அவதாரம் அவர். அவரை அணுவளவும் பிசகாமல் அடியொற்றிச் செல்பவர்கள் நாம். நாம் புண்ணியம் செய்தவர்கள். அதனால் தான் எல்லாமே நன்மையாக முடிகிறது. என் தந்தை நான் பிறந்த போதே சொன்னாராம், அந்த ஆயர்குல மாயவன் கண்ணனைப் போல நான் அவருக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறேன் என்று. என் தந்தை மகா யோக்கியர். யோகமுடையவர். அவருக்குப் பிள்ளையான நானும் அப்படித்தானே இருப்பேன்? எள்ளை விதைத்தால் கொள்ளா முளைக்கும்?” என்று பெருமையோடு கூறினான் மடையன்.

“உண்மைதானே! நன்மையை விதைத்தால் நன்மை விளையும். தீமையை விதைத்தால் தீமை விளையும். யோக்கியன் பிள்ளை யோக்கியன்; அயோக்கியன் பிள்ளை அயோக்கியன்” என்று தன் பரந்த அறிவைக் காட்டிக் கொண்டான் மட்டி.

இவ்வாறு அவர்கள் மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டு நடந்து சென்றார்கள். ஒற்றையடிப் பாதை வழியாகவும், மேடும் பள்ளமும் நிறைந்த கரடு முரடான சாலை வழியாகவும் கல்லும் முள்ளும் கலந்த கழனி வழியாகவும், முடிந்த மட்டில் வேகமாக நடந்து சென்றார்கள். குருநாதருக்குச் சீக்கிரம் குதிரை வேண்டுமே என்ற எண்ணம் அவர்கள் உள்ளத்திலே குதித்துக் கொண்டிருந்தது.

அப்போது அவர்கள் ஓர் இடுக்கு வழியிலே சென்று கொண்டிருந்தார்கள். குறுகலான வழியிலே இரண்டு பக்கங்களிலும் சிறிய பெரிய மரங்கள் வளைவாகவும்

தாழ்வாகவும் வளர்ந்திருந்தன. சாய்வாக வளர்ந்திருந்த ஒரு மரத்தின் கிளை குறுக்கே தடுத்து மட்டியின் தலையிலிருந்த பூசணியைத் தள்ளிவிட்டது. அது கீழே அடர்த்தியாக இருந்த ஒரு புதரின் நடுவே விழுந்து விட்டது. அந்தப் புதரின் நடுவே ஒரு பாறைக் கல் இருந்தது. பூசணி அதன் மேல் வேகமாய் விழவே, அது உடைந்து சிதறிவிட்டது. அப்போது அந்தப் புதரிலே பதுங்கிக் கொண்டிருந்த ஒரு முயல் பூசணி விழுந்து உடைந்த சத்தத்தில் பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.

அதைப் பார்த்து மட்டியும் மடையனும், முட்டையி லிருந்து பிறந்த குட்டிக் குதிரைதான் ஓடுகிறது என்று அதன் பின்னே ஓடினார்கள் அதைப் பிடிக்க. அதுவா அவர்கள் கையில் சிக்கும்? அது பள்ளமும் மேடும் தாண்டி, செடியும் புதரும் தாண்டி, வழியும் வாய்க் காலும் தாண்டி, ஓட்டமாக ஓடி மாயமாக மறைந்து விட்டது.

பாவம்… மட்டி, மடையன்! இருவருக்கும் முட்டி பாதம் எல்லாம் முள்ளும் கல்லும் குத்தி, இரத்தம் கசிந்தது. ஆடைகள் கோணல் மாணலாக, கொம்பும் முள்ளும் பட்டதால் கிழிந்து போயின. வியர்வை கொட்டியது. சோர்வு பெருகியது; தாகம் எடுத்தது; பெருமூச்சு வாங்கியது… நெஞ்சு துடித்தது. வேதனை மிகுந்தது. விழுந்து எழுந்து ஓடியும் இதைப் பிடிக்கவே முடியவில்லையே! குதிரைக் குட்டி பிறந்த உடனேயே எவ்வளவு வேகமாக ஓடிப்போய் விட்டது!

இருவரும் உடல் வலியையும் பொறுத்துக் கொண்டு, வேதனையோடு மேலும் பல இடங்களில் தேடிப் பார்த்து மிகவும் களைப்புற்றுப் போனார்கள். கடைசிவரை குதிரைக் குட்டி கிடைக்கவே இல்லை. பசி வேறு காதையடைத்தது. தண்ணீர்க் கூடக் கிடைக்க வில்லை.

தவியாய்த் தவித்துக் கொண்டு, வெறுப்பும் சலிப்பு மாக நடந்து நடந்து அவர்கள் மடத்தை அடைவதற்குள் பொழுது சாய்ந்து போனது.

பொல்லாக் குதிரை போனதே நல்லது

களைப்போடும் நெஞ்சில் கவலையோடும் இருவரும் தங்கள் மடத்து வாயிலை அடைந்தபோது, அவர்களுக்கு அழுகை பீரிட்டு வந்துவிட்டது.

“வாங்கப்பா, என் அருமை நண்பர்களே! எந்த நேரத்தில் நாங்கள் குதிரை வாங்கப் போனோமோ தெரியவில்லை. நாங்கள் பட்டபாடு கொஞ்சமா, நஞ்சமா…? சொல்லி மாளாது” என்று கூவிக் கொண்டே தங்கள் முட்டியைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து அழுதார்கள்.

உள்ளேயிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தார்கள். அவர்களைக் கண்டதும் மேலும் அழுகை அதிகமா கியது. அவர்கள் மிகவும் சோர்ந்து போய், சோக

மயமாய் இருந்ததைக் கண்டு, தண்ணீர் கொடுத்து உபசரித்தார்கள். அன்போடு என்ன நடந்தது என்று கேட்டார்கள்.

அவர்கள் இருவரும் நடந்தவற்றையெல்லாம் மாறி மாறிக் கூறினார்கள். மற்றவர்கள் வாயைத் திறந்து கொண்டு கேட்டார்கள்.

“என்னவென்று சொல்வேன்? நாங்கள் முட்டையை வாங்கியபோதே, அதனுள் குட்டி நன்றாக வளர்ந்து இருந்தது போலும்! மரத்தின் கொம்பு தடுக்கி, முட்டை கீழே விழுந்து உடைந்ததுதான் தாமதம், அந்தக் குட்டி, பிடித்தது பார் ஓட்டம்.. அடேயப்பா… என்ன வேகம்… என்ன வேகம்! ஆனால் குட்டி எவ்வளவு அழகாயிருந்தது தெரியுமா? கறுப்புக் கலந்த சாம்பல் நிறத்தில். ஒரு முழ நீளம்தான் இருக்கும்… பார்ப்பதற்கு உயரமும் பருமனும் ஒரு முயலைப் போல… இருந்தாலும் ஆஹா… அந்தக் குதிரைக் குட்டி… இரண்டு காதுகளையும் விரித்துக் கொண்டு, வாலைத் தூக்கிக் கொண்டு, நான்கு கால்களையும் விரித்து, மார்பே தரையில் பட்டுத் தேய்வது போல்!… ஓடின வேகம் இருக்கிறதே… அப்படி ஒரு வேகத்தை யாருமே பார்த்திருக்க முடியாது. நாங்கள் இருவரும் பார்த்தோம்” என்று மட்டி ஆச்சரியம் தாளாமல் விவரித்தான்.

மடையனும் அவனோடு கலந்து கொண்டு வியந்தவனாக ‘ஐயோ… அதை எப்படி எங்கள் வாயால் சொல்ல முடியும்? அதை நினைத்தால் இப்போதுகூட கைகால்கள் உதறுகின்றன. வாய் வார்த்தை தடுமாறுகிறதே” என்றான்.

மற்ற சிஷ்யர்கள் எல்லாரும் மட்டியும் மடையனும் அடைந்த பெருந்துன்பத்துக்காக வருந்தினார்கள். தங்கள் குருதேவருக்குக் குதிரை கிடைக்காமல் போய்விட்டதே என்று ஐவருமாகச் சேர்ந்து அதிகமாக வருந்தி, அழுது அரற்றினார்கள். அப்போது பரமார்த்த குரு, அவர்களின் குருபக்தியைப் பாராட்டி, அவர்கள் அழுகையை நிறுத்துமாறு வேண்டினார்.

“கூண்டோடு போனது குளிரும் காய்ச்சலும் என்பதுபோல, ஐந்து பொன்னும் போச்சு, அதனுடன் குதிரைக் குட்டியும் போச்சுதே! போனால் போகட்டும். ஒரு வகையிலே அது நமக்குத் தேவையில்லை போலத்தான் தோன்றுகிறது. போய்த் தொலைந்ததே. மேல், சிறு குட்டியாக இருக்கிற போதே, அதற்கு அவ்வளவு வேகம்… இரண்டு பேராலும் ஓடிப் பிடிக்க முடியாத அவ்வளவு கடும் வேகம்… அப்படியானால் அது வளர்ந்து பெரியதானால் இன்னும் எவ்வளவு வேகம் ஓடும்! ஓ! நினைக்கவே பயமாக இருக்கிறது! அந்தளவு முரட்டுக் குதிரையின் மீது இந்தக் கிழவன் ஏறிச் சவாரி செய்யத்தான் முடியுமா? அவ்வளவு பலமும் என் உடம்பில் கிடையாதே! நினைக்கிற போதே பயமாயிருக்கிறதே! எல்லாம் நன்மைக்கே! சும்மாவே கிடைத்திருந்தாலும் அந்த வம்பு நமக்கு வேண்டவே வேண்டாம். கவலைப்படாதீர்கள்” என்று பரமார்த்த குரு தம் சிஷ்யர்களைத் தேற்றினார்.

வாடகை மாடு

ஒரு சமயம் பரமாரத்த குரு வெகு தொலைவி லிருந்த ஓர் ஊருக்குந் போக வேண்டியிருந்தது. குரு நாதரை நீண்ட தூரம் நடக்க வைக்க சிஷ்யர்களுக்குக் கஷ்டமாக இருந்தது. தள்ளாத வயதில் அவருக்கு அதிக தூரம் நடந்து செல்ல முடியுமா? அன்பான சிஷ்யர்கள் ஐந்து பேர் இருந்தாலும் அவர் அப்படியெல்லாம் சிரமப்படலாமா? ஆகவே,அவர்கள் கலந்து பேசி ஒரு மாட்டை வாடகைக்குப் பேசி ஓட்டிக் கொண்டு வந்தார்கள். குருநாதர் அந்த மாட்டின் மேல் ஏறிக் கொள்ளலாம். சிஷ்யர்கள் அவரைப் பின் தொடர்ந்து செல்லலாம் என்பது அவர்கள் திட்டம்.

அந்த மாட்டின் சொந்தக்காரனுக்கு தான் ஒன்றுக்கு மூன்று பணம் வீதம் வாடகை கொடுப்பதாக ஏற்பாடு. அன்று பொழுது விடிந்து, ஒரு ஜாமம் கடந்து அவர்கள் மடத்தை விட்டுப் பயணமானார்கள்.

அது கோடைக்காலம். கொளுத்தும் வெயிலில் குருவும் சிஷ்யர்களும் சீக்கிரமே களைப்படைந்து போனார்கள். அதிலும் அவர்கள் போய்க் கொண்டிருந்த வழியோ வெட்டவெளியான பாலை நிலம். அங்கே மரமோ செடி கொடியோ இல்லை. ஆகவே ஊசி முனையளவு கூட நிழல் எங்குமே இலலை. எல்லாரும் வெயிலில் பிடுங்கிப் போட்ட கொடியைப் போல, இளங் கீரைத் தண்டைப் போல, வாடி வதங்கி,

சோர்ந்து சுருண்டு போனார்கள். எல்லாரையும் விட குருவே, சீக்கிரமாகவும், அகோரமாகவும் வெயிலில் பாதிக்கப்பட்டார். அவர் பட்ட துயரைக் கண்டு சிஷ்யர்கள் ஐவரும் மிகவும் வேதனைப் பட்டார்கள்.

அவரை மாட்டின் மீதிருந்து கீழே இறக்கிக் களைப் பாறச் செய்ய, வழி ஏதும் புரியாமல் வருந்தினார்கள். எங்கேயும் நிழலே இல்லையே! ஒரு சீடன் மாட்டின் பக்கம், மாட்டின் நிழல் விழுவதைக் கவனித்து விட்டான். உடனே அவன் மற்றவர்களுக்கு அந்த நிழலைக் காட்டி மகிழ்ந்தான். அவர்களுக்கும் ஒரே மகிழ்ச்சி! அந்த நிழலில் குருநாதரை இளைப்பாற வைக்கலாமே!

மாட்டின் நிழல் விழுந்த பக்கமாக பக்குவமாக தரையிலே ஒரு துண்டை விரித்துப் போட்டார்கள். குரு நாதரை இறக்கி அந்தத் துண்டின் மீது அமர்த்தினார்கள். சுற்றிலுமிருந்த அவர்கள் தங்கள் மேல் துண்டுகளினால், அவருக்குக் காற்றை வீசினார்கள்.

குருநாதருக்குச் சற்று ஆறுதலாக இருந்ததே தவிர, களைப்பு முற்றும் குறைந்ததாக இல்லை. என்ன செய்வது…? இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறதே! மெதுவாகப் புறப்பட்டார்கள்.

பரமார்த்த குருவை மாட்டின் மீது ஏற்றினார்கள். அந்த மாடும் மோசமாகக் களைப்படைந்திருந்தது. அது நத்தை போல் மெதுமெதுவாக ஊர்ந்து சென்றது. எப்படியோ எல்லாரும் இருட்டுவதற்குள் ஒரு சிற்றுரை அடைந்து விட்டார்கள்.

அந்த மாட்டை ஓட்டிச் செல்வதற்கு மாட்டுக் காரனும் அவர்களுடனேயே சென்றிருந்தான். அவனு க் கும் அதிகச் சிரமமாயிருந்தது. எல்லாருமாக அந்தச் சின்ன ஊரிலே ஒரு வீட்டுக்குச் சென்றார்கள். அந் நடை யிலே, அந்த மாட்டுக்காரனைத் தங்க வைத்தார்கள். அன்றைய வாடகையாக மூன்று பணத்தை மறவாமல் கொடுத்தார்கள்.

அந்தப் பணம் தனக்குப் போதாது என்று முரண்டு பிடித்தான் மாட்டுக்காரன்.

“என்னய்யா, உன்னிடம் பேசிய தொகையைத் தானே கொடுக்கிறோம்? இப்போது மேலும் கேட் கிறாயே. இது நியாயம் இல்லை” என்றார்கள் சிஷ்யர்கள்.

“என்ன பேசினோம்? யோசித்துப் பாருங்கள்!’ என்றான் மாட்டுக்காரன்.

“நீ தான் சரியாக நினைத்துப் பார்க்க வேண்டும். மாட்டுக்கு ஒருநாள் வாடகை மூன்று பணம் தானே பேசினோம்.’

“அதை நான் மறுக்கவில்லையே!”

“பிறகு ஏன்… அதிகமாகக் கேட்கிறாய்…?”

“மாட்டின் மேல் குருசுவாமி ஏறி வர மூன்று பணம்தான். ஆனால் வரும் வழியில் வெயிலுக்கு நிழல் தந்து குடைபோல் உதவியதே என் மாடு… அதற்குக் கூலி கொடுக்க வேண்டாமா?” என்று கூவினான் மாட்டுக்காரன்.

“இது மிகமிக அநியாயம்! அக்கிரமம்!” என்று அவனை விடவும் அதிகமாகக் கூவினார்கள் சீடர்கள்.

நேரம் ஆக ஆக, இருதரப்பாருக்கும் சண்டை அதிக மாக, கத்தல் அதிகமாகி விட்டது. அவர்கள் போட்ட கூச்சல் சுற்றியிருந்தவர்கள் காதுகளைச் செவிடாக்கியது. ஆண்களும், பெண்களுமாக, சிறியவர்களும், பெரியவர்களும் அங்கே கூட்டமாகக் கூடிவிட்டார்கள்.

அந்த ஊர்க்காரர்களில் ஒருவன் அவர்களை அடக்கிச் சமாதானப்படுத்தி, நியாயம் சொல்ல முன் வந்தான். முதலில் அவன் இரு தரப்பாரையும் நோக்கி, “சண்டையை நிறுத்துங்கள். உங்கள் சங்கதிகளை என்னிடம் சொல்லுங்கள். நான் பொதுவாக இருந்து நியாயம் சொல்கிறேன். நான் சொல்கிற தீர்ப்புக்கு நீங்கள் கட்டுப்படவேண்டும். இதற்கு நீங்கள் உடன் படுகிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்!” என்றான் நியாயம் கூற வந்தவன்.

“ஒரு பட்சமாக இல்லாமல் பச்சாதாபம் பார்க்காமல், நியாயம் சொல்லுங்கள். நிச்சயம் நாங்கள் சம்மதிக்கிறோம்” என்று அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.

– தொடரும்…

– பரமார்த்த குரு கதைகள், முதற் பதிப்பு: செப்டம்பர் 1990, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *