கிச்சாவின் ஆபரேஷன் காத்தாடி ஸ்டார்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 11, 2023
பார்வையிட்டோர்: 3,388 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சென்ற மாதம் கிச்சா பீச்சில் விட்ட பாணாக் காத்தாடி பெரிய தெரு பாலுவால் டீல் செய்யப்பட்டு அறுந்து திருவல்லிக்கேணியிலிருந்து சேப்பாக்கம் வழியாக சென்ட்ரலுக்குப் போய், பிறகு எதிர்காற்றில் திரும்பி மவுண்ட் ரோடு வழியாக சென்னையை வலம் வந்து, துரத்தி வந்த கிச்சாவுக்குத் தண்ணி காட்டி விட்டு இறுதியில் ‘யமஹா’ என்ற அந்த ஓங்கி உலகளந்த உத்தமர் தம் (போகும்!) ஒன்பது மாடி தனியார் ஆஸ்பத்திரியின் மொட்டை மாடி உச்சியில் ஒய்யாரமாக வந்து விழுந்தது.

செலவையும் சிகிச்சையையும் வைத்துப் பார்த்தால், ‘யமஹா’வுக்குள் நுழைவதற்கு முன்பு உயில் எழுதி வைத்துவிட்டு நுழைவதுதான் உத்தமம். பெரும்பாலும் பிரைவஸிக்காகத் தவிக்கும் பணக்காரர்களின் சரணாலயமாகத் திகழும் அந்த ‘ரிச் பீபிள் ரிலாக்சேஷன் சென்ட’ ருக்குள் காத்தாடி மீட்புப் பணிக்காக கிச்சா தயங்கித் தயங்கி ஆர்த்தரைடீஸ் வந்தவன் போல நடந்து நிதானமாக உள்ளே நுழைந்தான். அங்கு ஆண்களும் பெண்களும் என்னமோ டிஸ்கோ ஆடப் போவது போல சிரித்துப் பேசி மகிழ்ந்து போய் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து ‘இது போர்டிங் இல்லாத ஃபைவ் ஸ்டார் லாட்ஜிங் ஓட்டல்’ என்ற திடமான முடிவுக்கு வந்தான்.

‘வியாதியஸ்தர்கள் உள்ளே வரக்கூடாது’ என்று வாசலில் பலகையில் எழுதிப் போடும் அளவுக்குப் படுசுத்தமாக இருந்த அந்த ஆஸ்பிட்ட ட்டலை, தப்பாக பெரிய சைஸ் ஆர்யபவன் என்ற பாவனையோடு, காத்தாடி எடுக்க மொட்டை மாடிக்கு வழி கேட்பதற்காக ரிசப்ஷனை நெருங்கினான் கிச்சா. அங்கே டெலிபோனில் மறுமுனை ஆசாமியை மயக்கிக் கொண்டிருந்த வரவேற்பு மாதுவிடம் வாய்தவறி ‘சூடா என்ன இருக்கு?’ என்று கேட்டுவிட்டு, பிறகு சுதாரித்துக் கொண்டு மொட்டைமாடி, காத்தாடி, மாஞ்சா நூல் போன்றவைகளுக்கு ‘டாப் ஃப்ளோர்… ஃப்ளையிங் கைட்… ஃபெல் டௌன்’ என்று அபிநயம் பிடித்து கேட்க, அவள் ‘யார் இந்த ஐந்து?’ என்கிற ஸ்டைலில் பார்த்துவிட்டு கிச்சாவுக்கு லிஃப்டைக் காட்டினாள்.

லிஃப்டுக்காக காத்திருந்து கால் கடுத்த கிச்சா, அங்கிருந்த நோயாளிகளுக்கான வீல்சேரில் அமர்ந்தான். அப்போது நர்ஸுகள் புடைசூழ அல்லிராணி கணக்கில் வந்த சீனியர் லேடி டாக்டர், வெயிட்டிங் ஹால் வீல்சேரில் வியாதியஸ்தனைவிட மோசமாக ‘இன்றோ நாளையோ’ லெவலில் துவண்டு கிடக்கும் கிச்சாவின் முகவாயை ஆதரவாகப் பிடித்துத் தூக்கி ‘என்ன ப்ராப்ளம்?’ என்று கரிசனமாகக் கேட்டாள்.

திக்குமுக்காடிப் போன கிச்சா நடந்து போகிறவர்கள் வழுக்கி விழும் அளவுக்கு ஜொள்ளு கொட்டினான். அந்த நர்ஸகுமாரியின் தொடலால் நெகிழ்ந்துபோன கிச்சா ‘கைட்… கைட்’ என்று கூறி மொட்டை மாடியை ஆக்ஷனில் காட்டித் தனது காத்தாடி மாட்டிக்கொண்ட கஷ்டத்தை அர்த்த புஷ்டியோடு அபிநயித்துக் காட்டினான். ‘எங்கே சொல்லுங்கள் பார்ப்போம், இது என்ன வியாதி? பாவனையில் அந்த சீனியர் குஷ்பு தனது ஜூனியர்களைப் பார்க்க, அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த தடிமனான மருத்துவப் புத்தகங்களில் ‘கே ஃபார் கைட்’ என்று கூறி புரட்டியபடி, கிச்சா கூறிய ‘கைட்’ என்ற வியாதியையும் அதற்கான சிகிச்சையையும் தேடி அலுத்துக் காணாமல் திருதிருவென்று முழித்தனர்.

‘படித்தால் மட்டும் போதுமா? ப்ராக்டீஸ் வேணாமா?’ என்ற கண்டிப்பை கண் உருட்டலில் காட்டி மிரட்டிய அந்த சீனியர் லேடி டாக்டர், தான் சொல்வதை அவர்கள் உன்னிப்பாகக் கேட்கும்படிப் பணித்தாள். பிறகு பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருந்த கிச்சாவின் விழி இரப்பைகளைத் தன் விரல்களால் நீவி பெரிதாகப் பிரித்து தன் முகத்தை அருகில் கொண்டு போய் வைத்துக் கொண்டாள். ‘டயக்னைஸ் செய்கிறேன் பேர்வழி என்று கிச்சாவை ‘கண்ணோடு கண் நோக்கி’ காட்டமாக சைட் அடித்தாள். அவள் செய்தது டயக்னாஸிஸ் பரிசோதனை என்று புரியாத கிச்சா பயந்துபோய் “மாமி! அப்படிப் பார்க்காதீங்கோ. சத்தியமா காத்தாடி என்னோடதுதான். பாலு டீல் போட்டுட்டான்’ என்று பேத்த ஆரம்பித்தான்.

“இந்த நாற்பது வயதிலும் கிச்சா பட்டம் விடுவான்’ என்பதை அவள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாததால், கிச்சாவின் ‘காத்தாடி, டீல்’ வார்த்தைகளை வியாதியின் சிம்ப்டமாடிக் வெளிப்பாடுகளாக எடுத்துக்கொண்டு, அமெரிக்கா கண்டுபிடித்த கொலம்பஸ் பந்தாவோடு தனது சோதனையில் சொக்கிக்போயிருந்த சீனியர், தன் சக ஜூனியர் டாக்டர்களைப் பரவலாகப் பார்த்துவிட்டு, சோதனை எலியான கிச்சாவைச் சுட்டிக்காட்டி ‘பிள்ளைகளா, இவருக்கு வந்திருக்கிறது ஒரு புது மாதிரியான டைப் நியூரோ ப்ராப்ளம். அதான் காத்தாடி, டீல், மாஞ்சா கயிறுன்னு சின்ன வயசு ஞாபகமெல்லாம் வருது. இந்த வியாதிக்கு பேர் ‘சிசு காம்ப்ளெக்ஸ் சில்ட்ரனோம்பாலிஸ சிண்ட்ரோம்’ என்று (இட்டுக்கட்டிதான்!) ஒரு பெயரைக் கூறிவிட்டு, அதை கர்மசிரத்தையாக ஒரு அட்டவணை கார்டில் எழுதி கிச்சா அமர்ந்திருந்த வீல்சேரில் சொருகினாள்.

எப்படியாவது பட்டத்தைப் பெற்றுவிட வேண்டும் என்று பொறுத்துக் கொண்டிருந்த கிச்சாவுக்கு பிளட் பிரஷர் பார்த்தாள் அந்தப் பெண் டாக்டர். எச்சுமிப் பாட்டி போட்ட சத்துணவால் சாதாரணமாகவே ரத்த ஓட்டம் ஜாஸ்தியாகக் கொண்ட கிச்சாவுக்கு, அன்று பட்டத்தை துரத்திய ஓட்டத்தால் பிரஷர் அதிகமாகி ‘சளுக்புளுக்’ என்று வெளியில் இருப்பவர்களுக்கு சத்தம் கேட்கும் அளவுக்கு பம்புசெட் வாய்க்கால் வேகத்தில் ரத்தம் ஓட, , பிளட் பிரஷர் செக் செய்த அந்த டாக்டரிணி ‘கிச்சாவின் நியூரோ ப்ராப்ளத்துக்கு அடிப்படைக் காரணம் ஹை பி.பி.’ என்று அந்த அட்டவணையில் எழுதினாள். பிறகு, லிஃப்டில் கிச்சாவை வீல் சேரோடு தள்ளிவிட்டு, அவன் தலையை அன்புடன் கோதிக் கலைத்து ‘டோண்ட் ஒர்ரி. சரியா போயிடும். அஞ்சே நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணிடுவோம்…’ என்று கிச்சாவைப் பேச விடாமல் கூறிவிட்டு, வார்டுபாயிடம் கண்ணடித்து ‘மெண்ட்டல் கேஸ். முன்ன பின்ன இருக்கும். பாத்து அழைச்சுண்டு போ. ரூம் நம்பர் ஸெவன் நாட் டூல அட்மிட் பண்ணிடு!’ என்று ரகசியமாக, கிச்சா காதுபடக் கூறினாள். பார்ப்பதற்கு, ஜாடையில் இந்தி வில்லன் அம்ரீஷ் புரியின் கூடப் பிறந்த தமையன் ஆகிருதியில் இருந்த அந்த வார்டு பாயை விரோதித்துக் கொள்ள விரும்பாத கிச்சா, ரூம் நம்பர் ஸெவன் நாட் டூவுக்குள் வீல்சேரின் வலது (சக்கர!) காலை எ( எடுத்து வைத்து நுழைந்தான்.

அந்த டபுள் பெட்ரூமில் கடந்த பத்து நாள்களாகத் தனக்கு வந்த வியாதிகளின் பெயர்களைத் தெரிந்து கொள்ளும் நப்பாசையில் குடித்தனம் செய்து கொண்டிருக்கும் வாதிராஜராவ், கிச்சாவைப் பார்த்ததும் தனக்கு கம்பெனி கிடைத்த சந்தோஷத்தில் ‘வாய்யா ஜேம்ஸு…’ என்று அவனைச் செல்லமாக வரவேற்றார்.

டிரிப் குழாய், ஆக்ஸிஜன் ட்யூப், ஆர்டிஃபிஷியல் ரெஸ்பிரேட்டர், இ.ஸி.ஜி. மானிட்டர் என்று பல கனெக்ஷன்கள் புடைசூழ சர்வாலங்கார பூஷணாக(!) படுத்திருந்த வாதிராஜராவ், கான்ஸ்டிபேஷனில் ஆரம்பித்து கபாலத்து ட்யூமர் வரை தனக்குள்ள சர்வரோகங்களையும் என்னமோ தனது சொத்து விவரம் கூறுவது போல கிச்சாவிடம் பெருமையாகக் கூறினார். தன் தலைமாட்டில் இருந்த அட்டவணையை எடுத்துக் காட்டி, அதில் பெரிய டாக்டர் ‘வாதிராஜராவ்’ என்ற தன் பெயரை ‘வியாதிராஜராவ்’ என்று செல்லமாக மாற்றியிருப்பதைக் காட்டி சிறிது நேரம் சிரித்தார். கூடவே திடீரென்று சாந்தமாகி தனக்கு வரும் தாற்காலிக கோமாவுக்குள் நுழைந்தார். துவாரபாலகன் போல ரூம் வாசலில் நின்ற அந்த வில்லன் வார்டுபாய்க்குப் பயந்து தனது கட்டிலில் ஏறிப் படுத்த கிச்சா, படுப்பவர்கள் வசதிக்காக எந்த வகையிலும் மடங்கக்கூடிய, பாட்டரியால் இயங்கும் அந்த கட்டிலின் மெயின் சுவிட்சை தெரியாத்தனமாக அமுக்கிவிட, எலி பிடிக்கும் வேகத்தில் மூடிக் கொள்ளும் பொறிபோல கட்டில் சரிபாதியாக மடிந்து மூடிக்கொள்ள, மூக்கு முழங்காலைத் தொடும் நிலையில் கிச்சா சுருண்டு சிக்கிக் கொண்டான்.

இந்தச் சத்தத்தால் கோமாவிலிருந்து திடுக்கென்று கண்விழித்த வாதிராஜராவ், அகலவாட்டில் போடப்பட்ட கிச்சாவின் கட்டில் உயரவாட்டில் மடிந்து பீரோ போல நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, சிறிது நேரம் தன்னுடைய சீரியஸான அந்த வியாதியிலும் சிரமப்பட்டு யோசித்து, நிலைமையை உணர்ந்து ‘டேஞ்சர்’ பெல்லை அடிக்க, ஒரு டாக்டர் பட்டாளமே அறைக்குள் நுழைந்தது. வந்த டாக்டர்கள் கிடுகிடுவென்று ஊசி போடுவது, மாத்திரை திணிப்பது, ஆக்ஸிஜன் லெவலை அதிகரிப்பது என்று டேஞ்சர் பெல் அடித்த வாதிராஜராவுக்கு விதவிதமாக வைத்தியம் பார்த்து அவரை பழையபடி கோமாவில் ஆழ்த்தினார்கள்.

‘பேஷண்டுக்கு இடைஞ்சலா எதுக்கு ரூம்ல கட்டிலை மடிச்சுப் போட்டு வெச்சிருக்கீங்க?’ என்று பெரிய டாக்டர் காச்மூச்சென்று கத்த, கிச்சா மாட்டிக் கொண்ட கட்டிலைத் தூக்கிக் கொண்டு போக வந்த சின்ன டாக்டர்கள், வெளியே துருத்திக் கொண்டு ‘ஹெல்ப்… ஹெல்ப்…’ பாணியில் ஆடிக் கொண்டிருந்த கிச்சாவின் வலது கையைப் பார்த்துவிட்டு, ‘இங்கிருந்து போன வாரம் டிஸ்சார்ஜ் ஆகிப்போன வக்கீல் வரதராஜன் தனது வலது கையை மறந்து விட்டுவிட்டு போய் விட்டாரோ’ என்ற ரீதியில் கிசுகிசுவென்று பேசிக் கொள்ள, பொறுமையிழந்த பெரிய டாக்டர், அங்கே மாட்டப்பட்டிருந்த ‘சைலென்ஸ் ப்ளீஸ்’ போர்டு அதிர்ந்து கீழே விழும் அளவுக்கு கர்ஜிக்க, அந்த அதிர்ச்சியில் சின்ன டாக்டர்கள் தாங்கள் தூக்கிய கட்டிலைக் கீழே போட, விழுந்த வேகத்தில் கட்டில் பழையபடி விரிய, தூண் பிளந்து வந்த நரசிம்மாவதாரம் போல கட்டில் விரிந்து கிச்சா வெளியே வந்து குப்பையாக விழுந்தான்.

சுருண்டு கிடந்த கிச்சாவை, ‘இது என்ன பார்சல்?’ என்று ஆவேசத்தோடு பற்களைக் கடித்தபடி நெருங்கினார் பெரிய டாக்டர். அப்போது ‘சார், இவர் என்னோட பேஷண்ட்’ என்று கூறிக் கொண்டு அம்சமாக நுழைந்த லேடி டாக்டரின் சொரூபத்தில் மயங்கி உடனே சாந்தமானார்.

இந்த இடைவேளையில் முழித்துக் கொண்ட கிச்சா, ‘எச்சுமிப்பாட்டி… காத்தாடி டீல்…’ என்ற தன் பழைய புலம்பலை ஆரம்பிக்க, ‘என்ன வியாதி?’ என்று சீரியஸான பார்வையோடு பெரிய டாக்டர் கேட்க, ‘சிசு காம்ப்ளெக்ஸ் சில்ட்ரனோம்பாலிஸ சிண்ட்ரோம்’ என்று அவள் கொஞ்சலாகச் சொல்ல, ‘நீ சொன்னா கரெக்டாதானிருக்கும் என்று பதிலுக்கு வழிந்த பெரிய டாக்டர் இந்தச் சந்தர்ப்பத்தை சாக்காக வைத்து, ‘சமத்து நீ…’ என்று சொல்லிவிட்டு புஷ்டியான அந்த டாக்டரின் கன்னத்தைக் கிள்ளி நிமிண்டிவிட்டு ‘நான் வரட்டுமா?’ எனக் கூறி பிரியாவிடை பெற்றார்.

அதன்பிறகு, புது ராகம் கண்டுபிடித்த வித்வான் போல, நான்கு நாள்கள், தான் கண்டுபிடித்த புது வியாதியின் ஓனராகிய கிச்சாவைப் பேசக்கூட விடாமல், அந்த லேடி ராட்சஸி ப்ளட் டெஸ்ட் என்று அரை மணிக்கு ஒரு தபா அட்டை போல ரத்தத்தை உறிஞ்சி கிச்சாவை ‘அனிமிக் பேஷண்ட் ஆக்கினாள். ‘லம்பார்-பஞ்சர்’ எடுக்கப் போவதாகச் சொன்னது கிச்சா காதில் ‘பிளம்பர் பஞ்சர்’ என்று விழ, குழாய் ரிப்பேர்காரன் தனக்கு சைக்கிள் பஞ்சர் போடுவது போல டாக்டர் கொடுத்த ‘காம்போஸ்’ கனவில் கண்டு வெலவெலத்தான். ட்ரிப் குத்துகிறேன் பேர்வழி என்று ஒரு சோடா பாட்டில் நோஞ்சான் வந்து, கையால் தடவித் தடவி ஊசியால் குத்திக் கிளறி நரம்பைத் தேடியதில், கிச்சாவின் முழங்கைகள் தண்ணீர் விட்டால் ஒழுகும் அளவுக்கு சல்லடையாக மாறின. கிச்சாவின் வயிற்றை சோதனை செய்வதற்காக, ‘பேரியம் மீல்ஸ்’ டெஸ்ட் எடுக்கப் போவதாகச் சொன்னபோது, ‘பேரியம் மீல்ஸ் இல்லாட்டிக்கூட பரவால்லே… அட்லீஸ்ட் லிமிடெட் மீல்ஸாவது போடுங்க தாயே!’ என்று பிச்சை என்று கேட்கும் அளவுக்கு வெறும் மருந்து மாத்திரை மட்டுமே கொடுத்து கிச்சாவைக் கொலைப் பட்டினி போட்டாள் அந்த லேடி டாக்டர்.

இதற்கிடையே, அழித்தால் பத்து டாக்டர், அஞ்சு நர்ஸ் பண்ணக்கூடிய அளவுக்குப் பிரமாண்டமாக இருந்த ஒரு டயடீஷியன் வந்து எச்சுமிப் பாட்டியின் வத்தக்குழம்பு, சுட்ட அப்பளத்துக்காக ஏங்கிக் கிடக்கும் கிச்சாவின் கொலஸ்ட்ரால், ஷுகர் போன்றவற்றை சோதித்துவிட்டு, ஸ்டாம்ப் சைஸில், நாலு ரொட்டி, நாய் பிஸ்கெட் நாலு, வெந்நீர் ஒரு டம்ளர் என்று கிச்சாவின் நித்ய போஜனத்தை நிர்ணயித்தாள்.

பார்த்தசாரதி பெருமாள் உற்சவரை, மாடவீதிகளில் ஊர்வலம் தூக்கிப் போவதுபோல, ஆ, ஊ என்றால் கிச்சாவை ஸ்ட்ரெச்சரில் கிடத்தி ஆஸ்பத்திரியின் ஒரு பரிசோதனை இடம் விடாமல் அழைத்துச் சென்று, அந்த லேடி டாக்டர் அவனது அனாடமியை அக்குவேறு ஆணிவேறாக அலசினாள்.

எல்லா சோதனைகளிலும் கிச்சா நார்மலாக இருப்பது கண்ட அந்த லேடி டாக்டர் ஒரு கட்டத்தில் மிகவும் குழம்பிப் போய், கிச்சாவின் உறவுக்காரர்களிடம் விசாரிப்பதே உத்தமம் என்ற முடிவுக்கு வந்தாள். கிச்சாவை அட்மிட் செய்தவர்களைப் பற்றி ரிசப்ஷனில் விசாரித்தாள். ‘அதுமாதிரி ஒரு ஆள் அட்மிட் ஆனதாக எண்ட்ரியே இல்லை’ என்று அவர்கள் கைவிரிக்க, அதிர்ந்து போனாள். இதுபற்றி அவள் பெரிய டாக்டரிடம் கூற, ‘கொள்ளவும் முடியாமல், உரியவர்களிடம் தள்ளவும் முடியாமல்’ தங்கிவிட்ட கிச்சாவை என்ன செய்வது என்பது பற்றி அவர் தலைமையில் அத்தனை டாக்டர்களும் அர்ஜெண்டாக ‘மெடிக்கல் கான்ஃபரன்ஸ் போட்டு விவாதிக்கும் அளவுக்கு கிச்சா விவகாரம் சூடு பிடித்தது.

இது போதாதென்று, கிச்சா தலைமாட்டிலும், வாதிராஜராவ் தலைமாட்டிலும் வைக்கப்பட்டிருந்த அட்டவணைகள் ஒரு சிப்பந்தியின் சொதப்பலால் மாறிவிட, வாதிராஜராவின் வைத்தியர் அவரை, ‘ஓகே… நார்மல்’ என்று பிரகடனப்படுத்தி டிஸ்சார்ஜ் செய்துவிட்டார். காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக கிச்சா வந்த வேளையால், நிஜமாகவே தானே நம்ப முடியாத அளவுக்கு நார்மல் ஆன வாதிராஜராவ், கிச்சாவுக்கு டாட்டா சொல்லிவிட்டு டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வந்தார்.

அப்போது, நான்கு நாள்களாக கிச்சாவைக் காணாத கவலையில் ஊரெல்லாம் தேடிய எச்சுமிப் பாட்டி, பெரிய தெரு பாலுவோடு சேர்ந்து கிச்சாவின் காத்தாடி டீல் ஆன இடத்துக்குப் போய் | ஏதாவது க்ளூ கிடைக்கிறதா என்று பார்க்க, அங்கு கிச்சாவின் மாஞ்சா நூல் கண்டைப் பார்த்தாள். கிச்சாவின் கிழிசல் பாண்ட் பாக்கெட்டிலிருந்து விழுந்த அந்த நூல்கண்டிலிருந்து பிரிந்து போகும் நூலை ஃபாலோ செய்தபடி வந்தாள். கிச்சா இருக்கும் ‘யமஹா’ ஆஸ்பிட்டலை அடைந்து மேலே தொடர முடியாமல் முழித்தபோது, பழைய திருவல்லிக்கேணிவாசியான வாதிராஜராவைச் சந்தித்தாள்.

பாட்டி கூறிய சாமுத்திரிகா லட்சணங்கள், தான் பார்த்த பக்கத்து படுக்கை ஆசாமியோடு பொருந்துவதைப் புரிந்துகொண்ட வாதிராஜராவ், பாட்டியை ரூம் நம்பர் ஸெவன் நாட் டூவுக்கு அழைத்துப் போனார். அங்கே தூக்க மாத்திரையால் துவண்டு கிடக்கும் கிச்சாவை எழுப்பி தோளில் தாங்கியபடி நடத்தி அழைத்துக் கொண்டு வீதிக்கு வந்தார்.

அந்தச் சாயங்கால வேளையில் திடீரென்று காற்று வீச, அது நாள் வரையில் ஆஸ்பிட்டல் மொட்டைமாடியில் மாட்டிக் கொண்டிருந்த கிச்சாவின் காத்தாடி அந்தக் காற்றில் டிஸ்சார்ஜ் ஆகி பறந்து கீழே இருக்கும் கிச்சாவின் முன்பு விழ, அப்போது பார்த்து எச்சுமிப்பாட்டி, ‘எதுக்குடா ஆஸ்பத்திரிக்கு வந்தே…?’ என்று கரெக்டாக கேட்க, கிச்சா, ‘இதுக்குத்தான்’ என்று சொல்லி காத்தாடியை எடுத்துக் கொண்டு திருவல்லிக்கேணி நோக்கி ஓட, எச்சுமிப்பாட்டியும் வாதிராஜராவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு புரியாமல் முழித்தார்கள்.

‘யமஹா’ ஆஸ்பத்திரியின் உள்ளே கான்ஃபரன்ஸ் முடிந்து ‘கிச்சாவை போலீஸிடம் ஒப்படைத்துவிடுவது’ என்ற முடிவோடு பெரிய டாக்டர் புடைசூழ ரூம் நம்பர் ஸெவன் நாட் டூவுக்கு வந்த டாக்டர்கள் கட்டிலில் கிச்சா இல்லாதது கண்டு அதிர்ச்சியடைய, அவர்கள் அதிர்ச்சிக்கு ‘பேக்ரவுண்ட் மியூஸிக்’ கொடுப்பது போல, கிச்சா இருந்த கட்டில் தானாக ஆபரேட் ஆகி தடாலென்ற சத்தத்துடன் மூடிக் கொண்டது!

– மிஸ்டர் கிச்சா, முதற் பாதிப்பு: 2004, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *