ஒரு எழுத்தாளன் கல்லூரிக்கு போகிறான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 22, 2021
பார்வையிட்டோர்: 9,309 
 
 

தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க தனது எழுத்துக்களால் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் பல பல தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் சத்தமில்லாமல் அமைதியாய் தங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்க நான் மட்டும் எனது ஊருக்குள் ஒரு எழுத்தாளனாய் பிரபலமாகியிருந்தேன். அதாவது என்னை நானே பிரபலப்படுத்தி கொண்டிருந்தேன்.

இதற்கு பெரிய சித்து வேலைகள் எல்லாம் தேவையில்லை. எங்கள் ஊரில் நடக்கும் திருவிழாக்கள், பண்டிகைகளில் நடக்கும் நாடகங்கள், நிகழ்ச்சிகள் போன்றவைகளுக்கு வசனம் எழுதுவது, ஜால வார்த்தைகளை கோர்த்து எதிரணிகளை கலங்கடிப்பது, கவிதை என்று சொல்லி வார்த்தையை மாற்றி போட்டு ஒப்பேற்றுவது, இப்படியெல்லாம் நான் எழுதி கொடுத்தே அவர்களுக்கு என்னை ஒரு எழுத்தாளனாக அறிமுகமாக்கி இருந்தேன். போதாதற்கு நாளிதழ்களில் எங்கள் ஊரிலும்,, அருகில் இருக்கும் ஊர்களில் நடக்கும் சில நிகழ்ச்சிகளை எழுதி போட்டு பெயர் வரவழைத்து எல்லோரிடமும் காட்டி, அவனுக்கென்னப்பா எழுதற பையன் ! என்ற பெயர் கிட்டியிருந்தது. ஒரு சில கதைகளையும்,கவிதைகளையும் எழுதி ஊருக்கே தெரியும் வண்ணம் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைப்பேன். பிரசுரமானதா ? என்ற கேள்வி மட்டும் மற்றவர்கள் கேட்காத வண்ணம் பதனமாய் பார்த்துக்கொள்வேன்.

இதில் இன்னொரு வசதியும் எனக்கு கிட்டியிருந்தது. பிளஸ் டூவிற்கு மேல் படிப்பு வேண்டாம் என்று சொல்லி விட்டு வீட்டில் உட்கார்ந்து தண்டமாய் சாப்பிட்டு கொண்டிருந்த என்னை ‘எழுத்தாளன்’ என்கிற பெயரினால் கடிந்து பேச முடியாமல் அம்மாவும், அப்பாவும் தங்களுக்குள் மட்டும் புலம்புவதை அவ்வப்போது கேட்பதுண்டு. அப்பனை பெத்த ஆத்தா மட்டும் என்னை உரிமையாய் “தண்டசோறு” என்று வெளிப்படையாய் திட்டுவதால் மருமகளான அம்மா ஆத்தாவை ஸ்பெஷலாக கூட கவனிக்கிறாளோ என்கிற சந்தேகம் எனக்கு உண்டு.

அன்றும் அப்படித்தான் நாலு பேரை உட்கார வைத்து எனக்கு தெரிந்த ஒரு சில கதைகளை சரடாக விட்டுக்கொண்டிருந்தேன். அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் என்னை நெருங்கினர். எனக்கு “துணுக்” என்று மனசு அதிர்ந்தாலும் பயத்தை வெளிக்காட்டாமல் அவர்களை பார்த்தேன். அவர்கள் சிங்காரமும், வடிவேலும், ஆளுங்கட்சியின் பெரிய புள்ளிக்கு அடியாட்களாக இருப்பவர்கள். இவர்கள் ஏன் எங்களை நோக்கி வரணும்?

இந்தாப்பா கார்த்தி அண்ணன் உன்னை கூட்டியார சொன்னாரு, அவர்கள் கூப்பிட்டது என்னைத்தான்.

எதுக்கு அண்ணே? குரல் உள்ளிழுக்க கேட்டேன்.

தெரியலைப்பா, இப்பவே உன்னை கூட்டியார சொன்னாரு.

சரி நீங்க போங்கண்ணே, பின்னாடியே வர்றேன்.

வேணாம்,வேணாம், வண்டி பின்னாடி உட்காரு, அண்ணன் கையோட கூட்டி வர சொன்னாரு.

வேறு வழியில்லாமல் அவர்கள் வண்டியில் பின்னால் தொற்றிக்கொள்ள அந்த மோட்டார் சைக்கிளில் மூவராய் தடுமாறி சென்றோம். மனசுக்குள் பயம் மட்டும் தடக் தடக் என்று அடித்து கொண்டது. இவர்கள் எரிச்சல் படும் அளவுக்கு நாம் எதுவும் செய்யவில்லையே? கூட இருந்த பயல்கள் இந்நேரம் ஊரில் போய் சொல்லியிருப்பான்கள், நம்ம கார்த்திய அந்த பரமேஸ்வரன் கூட்டி போயிருக்காரு இந்த செய்தி பரபரப்பாய் உலவிக்கொண்டிருக்கும்.

பரமேஸ்வரன் அந்த ஊரில் சாதாரண ஆள் இல்லை, அடிமட்டத்தில் அடியாளாய் இருந்து இன்று அரசியலில் அசைக்க முடியாத ஆளாய் இருக்கிறான். அவன் எதற்கு இவனை கூப்பிடுகிறான், இந்த கேள்வி ஊருக்குள் இந்நேரம் கேள்விக்குறியாயிருக்கும்.

சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன், இந்த மாதிரி அழைப்பை எல்லாம், வாடா தம்பி, பரமேஸ்வரன் கை நீட்டி அழைக்க மனசு தடக் தடக் காணாமல் போய் அப்பாடா என்றிருந்தது.

நீ நல்லா எழுதியவியாம்ல?

அதெல்லாம் இல்லியிண்னே, குழைந்தேன்.

டே, சும்மா சொல்றா, நம்ம பயலுவ உன்னைய பெரிய எழுத்தாளன்னு சொல்லிகிட்டு திரியறானுக, நீ என்னடான்னா..

ஆஹா..என்னை பற்றி இந்த ஆள் காது வரைக்கும் வந்திருக்கிறதா !

ஏதோ கொஞ்சம் எழுதுவண்ணே.

நீ நம்ம பையன், எங்க்கொரு உதவி செய்யனுமேடா

சொல்லுங்கண்ணே

அடுத்த முறை எம்.எல்.ஏக்கு நிக்கறதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கறதா பேச்சு இருக்கு, நீ என்ன பண்ண்றியின்னா, அண்ணனை பத்தி கவிதையோ கதை புக்கோ ஒண்ணு போட்டு விடு.

அண்ணனை பத்தி…இழுத்தேன்.

என்னையப்பத்தி தாண்டா,

அதுக்கெண்ணன்னே எழுதிடலாம், குரல் காணாமல் போயிருந்தது.

நாளைக்கே எழுத ஆரம்பிச்சுருலே, எம்.எல்.ஏ ஆயிட்டண்ணா, சினிமாவா எடுக்கற மாதிரி கூட இருக்கணும்.

சினிமாவா..வா..வாயை பிளந்தாலும் அடி மனசில் சின்ன நக்கலும், கூடவே பயம்

நல்லவேளை கண்டு கொள்ளவில்லை, ஆமடா, அப்படியே எங்கப்பனையும் அறிமுகப்படுத்தி அப்படியே எங்க குடும்பத்து செல்வாக்கையும் எடுத்து எழுதுடா.

சரீங்கண்ணே, உங்க குடும்பத்தை பத்தி யார் கிட்ட அண்ணே கேட்டு எழுதணும்/

கடைசி சித்தப்பன் மட்டும்தான் இப்ப உயிரோட இருக்கான், அவன் கிட்டே போய் கேட்டு எழுது, சரியா ?

சரிங்கண்னே, இயந்திரமாய் தலையாட்டி வெளியே வர எதிரில் நல்ல திடகாத்திரமாய் ஒரு பெண்.

ஏய் தம்பி உன்னைத்தான் எழுதறதுக்கு கூட்டியாந்திருக்கானுங்களா?

ஆமாங்க அக்கா தயங்கினேன், அக்கா என்று சொல்வதா, அண்ணி என்று சொல்வதா?

ஐவங்க குடும்பத்தை பத்தி மட்டும் எழுத சொல்லியிருப்பானுங்களே,

நான் விழித்தேன். அது வந்து..

இங்க பாரு அவனுங்க அப்பன் காலத்துல இருந்துதான் இந்த அடிதடி, போலீஸ் அப்படீன்னு போனானுங்க, எங்க தாத்தன் காலத்துல இருந்து வெள்ளைக்காரனுக்கே டிமிக்கி கொடுத்தவங்க நாங்க. அதனால முதல்ல எங்க குடும்பத்தை பத்தி எழுதி, அதுல வந்து ஒட்டிகிட்டவனுங்க இவங்க குடும்பம் இப்படீன்னு எழுதனும் புரியுதா?..குரலில் மிரட்டலா, அன்பா

சரீங்க தலையாட்டினேன். போ முதல்ல எங்க தாத்தனோட தம்பி வூட்டு பின்னாடி இருக்குது அதுக்கிட்ட போய் அவங்க அப்பன் எப்படி வெள்ளைக்காரனுக்கு டிமிக்கி கொடுத்து ஆளானானுன்னு கேட்டுக்கோ,

சரி..சரி..தலையாட்டியவன் எப்படி வீடு வந்தேன் என்று தெரியவில்லை.

இரண்டு நாட்களில் வீட்டில் ரகளை செய்து நான் வெளியூரிலிருக்கும் காலேஜூக்கு போய் படிக்கிறேன், சொல்லிவிட்டு பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பியவன் தான்.

விடுமுறைக்கு கூட ஊருக்கு செல்லாமல் ஹாஸ்டலிலே இருந்து படிக்கிறான், இப்படித்தான் ஊரில் எல்லோரும் சொல்லி திரிகிறார்கள். எப்படியோ உண்மை தெரியாமல் இருந்தால் போதும்.

பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *