எமலோகத்தில் கலாட்டா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 15,232 
 
 

காட்சி-1

இடம்: எமனின் தர்பார் மண்டபம்
சூழ்நிலை:( எமதர்மன், சித்திரகுப்தன் மற்றும் எமகிங்கிரர்கள். எமன் இறந்தவர்களின் பாவ புண்ணிய ரிஜிஸ்டரை பார்த்து ‘செக்’ செய்கிறான். பக்கம் சித்திரகுப்தன் பணிவுடன் நின்றுகொண்டிருக்கிறான்)

எமகிங்கிரன்; (மூச்சிரைக்க ஓடிவருகிறான்) பிரபு…பிரபு…
எமதர்மன்; என்ன..என்ன விஷயம்? ஏன் என்ன நடந்தது?
எமகிங்கிரன் ; பிரபு.. பூலோகத்திருந்து வந்த பாவிகளால் நம் எமலோகம் தாங்காது போலிருக்குது பிரபு.. கூட்டம் அதிகமானதால் இடப் பிரச்சனை..
எமதர்மன்.. (திடுக்கிட்டு) என்ன? எமலோகத்திலும் இடப்பிரச்சனையா?
(சித்ரகுப்தனை பார்க்கிறான்)
சித்ரகுப்தா..நீ போய் என்னவென்று பார்த்து உடனே எனக்கு தகவல் தெரியப்படுத்து..
சித்ரகுப்தன்; (பணிவுடன்) ஆகட்டும் பிரபு..(வணங்கியபடியே செல்கிறான்)
(சில நிமிடங்களில் திரும்பி வருகிறான்)
சித்ரகுப்தன்; பிரபு; நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான் பிரபு..கூட்டம் அதிகமாகத்தான் உள்ளது. ஒரே நாளில் அத்தனை பேரையும் விசாரித்து என்ன தண்டனை தருவது என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை பிரபு..
எமதர்மன்; என்ன காரணம் என்று உனக்கு ஏதாவது தெரியுமா
சித்ரகுப்தா?
சித்ரகுப்தன்; பிரபு..இதில் ஆச்சர்யமே இல்லை., பூலோகத்தில் அநியாயம் தலை விரித்து ஆடுகிறது.. நியாயவாதிகள், புண்ணியவான்கள் என்று இலட்சத்தில் ஒருவர்கூட இல்லை.அப்படி இருக்க இங்கே கூட்டம் இல்லாமலா இருக்கும்?
எமதர்மன்; (குழப்பத்துடன்) என்ன பூலோகம் அப்படியா கெட்டு விட்டது?
சித்ரகுப்தன்; ஆமாம் பிரபு. பூலோகத்தில் நடக்காத கொலை, கொள்ளை இல்லை. எல்லா மனிதர்களும் சுயநலவாதிகளாகிவிட்டார்கள் பிரபு. முந்தைய காலம் போல் இல்லை பிரபு.
எமதர்மன்; இதற்கு காரணம்?
சித்ரகுப்தன்: எல்லாம் சுயநலம்தான் பிரபு. மனிதன் முன்பு போல் இல்லை. இப்போது டி.வி. வீடியோ. பிரிட்ஜ், வாஷிங்மெஷின். கம்ப்யூட்டர் என்று அறிவியலில் மிக வேகமாக முன்னேறி வருகிறான். மேலும் அந்த வசதிகள் அடைவதற்காக எந்த தவறையும் செய்ய தயாராக இருக்கிறான். நாளைய வாழ்வைப் பற்றி அவன் கவலைப் படுவதில்லை..இன்று நாம் எப்படி நன்றாக இருக்கிறோமா என்று மட்டும் பார்க்கிறான் சுயநலத்தையே வாழ்க்கையாகக் கொண்டு வாழ்கிறான் பிரபு..
எமதர்மன்; போதும்.. போதும்.. எல்லாம் விளங்கிவி¢ட்டது..சரி..இப்போது என்ன செய்வது?எத்தனை பேர் தண்டனைக்கு காத்துக் கொண்டு இருக்கிறார்கள்?
சித்ரகுப்தன்; சரியாக சொல்ல முடியாதுபிரபு..பாவிகள் வந்து கொண்டே
இருக்கிறார்கள். பெரிய பிரச்சனை ஆகிவிடும் போல்
இருக்கிறதே? பிரபு..
எமதர்மன்; (குழப்பத்துடன்) ம்ம்ம்..என்ன செய்யலாம்? உனக்கு ஏதாவது யோசனை தோன்றுகிறதா?
சித்ரகுப்தன்; எனக்கும் குழப்பமாகத்தான்இருக்கிறது…பிரம்மதேவன் தன் பணியை வேகமாக செய்வதால் ஜனத்தொகை பெருகிவிட்டது மக்களும் அதிக பாவம் செய்து சீக்கிரம் செத்து இங்கே வந்து கழுத்தை அறுக்கிறார்கள். பிரபு.. நீங்க தப்பா நினைக்கலேன்னா நான் ஒரு யோசனை சொல்லட்டுமா?
எமதர்மன்; இது போல் ஒரு சிக்கல் இதற்கு முன் ஏற்பட்டதே இல்லை. . சரி, நல்ல யோசனை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்வான் இந்த எமதர்மன்.
சித்ரகுப்தன் ;(வணங்கியபடி) நல்லது பிரபு.. நமக்கு ஒரு நாள் என்பது பூலோகத்தில் ஒரு வருடம் ஆகும். ஒரு நாளைக்கு சராசரி ஒரு லட்சம் பேர் நம்மிடம் தண்டனைக்கு காத்துக் கொண்டிருப்பார்கள். பிரபு.. அனைவர்க்கும் சரியாக தண்டனை உங்களால் தராமல் போய் விட்டால் நீதி தவறியவர் என்ற பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். மேலும் உங்கள் பதவிக்கே ஆபத்து வந்தாலும் வரும். அதனால்…(நிறுத்துகிறான்).
எமதர்மன் (கோபமாக) ஐயோ! மறுபடியும் குழப்பாதேய்யா..விஷயத்தை சுருக்கமாகச் சொல்.
சித்ரகுப்தன்; பிரபு..ஒரே நாளில் அத்தனை பேருக்கும் தண்டனை கொடுக்க முடியாவிட்டால் அவர்களை இங்கேயே தங்க வைப்போம். பின்பு நம் பிரம்மதேவரைப் பார்த்து பிறப்பு விகிதத்தை குறைக்கச் சொல்வோம். இப்போது இதைத் தவிர வேறு வழி எனக்கு தெரியலை பிரபு..
எமதர்மன்; அவர்களை தங்க வைத்தால் பின்னால் ஏதாவது பிரச்னை ஆகிவிட்டால்?
சித்ரகுப்தன்: அதற்கெல்லாம் நான் திட்டம் வைத்திருக்கிறேன் பிரபு..நீங்கள் கவலைப் படாதீர்கள் . தாங்கள் அனுமதி அளித்தால் அந்த திட்டத்தை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்.
எமதர்மன்: (யோசித்துவிட்டு) சரி, உன் விருப்பபடியே செய். பின்னால் ஏதாவது சிக்கல் வராமல் இருந்தால் சரி.
சித்ரகுப்தன்; நல்லது பிரபு..
(வணங்கியபடியே சித்ரகுப்தன் எமகிங்கிரர்களுடன் வெளியேறுகிறான்)

காட்சி – 2

இடம்- எமலோகம்

உறுப்பினர்கள்; பலராமன், சிவராமன், சித்ரகுப்தன் மற்றும் மக்கள்

கூட்டத்தினர்.,

சூழ்நிலை; (எமலோகத்தில் மக்கள் கூச்சல் போட்டும் எமதர்மனை

திட்டியபடியும் கோஷம் போட்டுக் கொண்டுஇருக்கிறார்கள்.
கரடுமுரடான அந்த இடத்தில் கூட்டம் அதிகமாகவே
குழப்பம் அதிகமாகிறது. எங்கு பார்த்தாலும் வேண்டும்!
வேண்டும்! நியாயம் வேண்டும்!, “எமதர்மன் ஒழிக” என்ற கோஷம்
வானைப் பிளக்கிறது)
சித்ரகுப்தன்; (சத்தம் போட்டபடியே)இது என்ன பார்லிமெண்டா? இல்லே
சட்டசபையா? உங்கள் குறைதான் என்ன?
(முன்னாள் அரசியல்வாதியான பலராமனும்
சிவராமனும் முன்னே வருகிறார்கள்)
பலராமன்; எங்களுக்கு இங்கே அடிப்படை வசதி சரியாயில்லை.
பொழுது போக்குக்கு ஒரு டி.வி இருக்கா?வீடியோ இருக்கா? நாங்க
செத்து இங்கே வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆகுது. எங்களுக்கு என்ன
தண்டனைன்னு தெரியாம பைத்தியம் பிடிச்ச மாதிரி
இருக்கிறோம். தினமும் ஆயிரக்கணக்குல வந்துக்கிட்டிருக்குற
எங்களுக்கு என்ன வசதி செய்து இருக்கீங்க?
சித்ரகுப்தன்: அவசரப்படாதீங்க. உங்களுக்காக ஒரு நல்ல
திட்டத்தோடு நான் வந்து இருக்கேன். எல்லோர்க்கும் டோக்கன்
தரப்போறேன் . முன்னே வந்தவர்களுக்கு முதல்லே தண்டனை..பின்னே
வந்தவர்களுக்கு பின்னாடி தண்டனை. எப்படி என் ஐடியா?
பலராமன்; சூப்பர்..ப்ளான்.. பூலோகத்தில்தான் சினிமா தியேட்டரில்
டோக்கன், ரேஷன் கடையிலே டோக்கன்..இங்கேயுமா..நாங்க தங்க
எங்கே ஏற்பாடு செய்திருக்கீங்க? நாங்க தங்க நல்ல இடமா வேணும்.
நான் பூலோகத்திலே முதல்வரா இருந்தவனாக்கும்..எல்லாவித
வசதிகளும் இருக்கவேண்டும். இல்லாவிட்டால்
போராட்டம்தான்..என்ன சொல்றீங்க?
சித்ரகுப்தன்; கோபமாக)இதோபாருங்க..இதுசொர்க்கம் இல்லே
. .நரகம் .நீங்க செய்த பாவத்துக்கு ‘தண்டனை’அனுபவிக்கத்தான்
இங்கே வந்து இருக்கீங்க. பேசாமல் நான் சொல்றதை கேட்டு நடங்க
. இல்லே, மறுபடியும் பூலோகத்துக்கே அனுப்பிடுவேன்.
பலராமன்; (ஆத்திரத்துடன்) இந்த பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம்
எங்ககிட்டே காட்டாதீங்க. செத்தவனை மறுபடி பிழைக்க வைச்சு
பூலோகத்துக்கு அனுப்பற ‘பவர்’ உனக்கு கிடையாது. இது தெரியுமா
சித்ரகுப்தா.?.
சித்ரகுப்தன்: (சலிப்புடன்) இப்ப என்னதான் செய்ய சொல்றீங்க?
பலராமன்: அவரவர்கள் தகுதிக்கேற்ப வசதிகள் செய்து தர வேணும்.
இல்லையென்றால் போராட்டம்தான்.
சித்ரகுப்தன்; (சற்றே யோசித்துவிட்டு) சரி..உங்கள் தகுதிக்கேற்றபடி
செய்து விடுகிறேன். முதலில் டோக்கன் வாங்கிக்கொள்ளூங்கள்
(மனதினுள்) எல்லாம் என் தலையெழுத்து. எமலோகத்தில் இது நாள்
வரை இப்படியொரு பிரச்னை வந்ததே இல்லை. .இனி எப்படி
சமாளிக்கபோறேனோ?
(இரண்டு எம கிங்கிரர்கள் முன்னால் வந்து வணங்கியபடி
நிற்கிறார்கள்)

சித்ரகுப்தன்; என்ன விஷயம்?
எமகிங்கிரன்; எமதர்மராஜா தங்களை அவசரமாக அழைத்து வரச்
சொன்னார்கள்.
சித்ரகுப்தன்: இதோ வருகிறேன்.
(மக்களைப் பார்த்தபடியே) இங்கே உங்களுக்கு
எல்லா வசதியும் செய்து கொடுத்தது விடுகிறேன். அமைதியாக
இவர்களிடம் டோக்கன் வாந்கிக்கொள்ளுங்கள்.தயவு செய்து
நரகத்தை பூலோகமா மாத்திடாதீங்க..உங்களை கையெடுத்து
கும்புடறேன்..
(கூட்டம் காதை பிளக்கிறது)
எப்படித்தான் சமாளிக்க போறேனோ… தெரியலையே.!
. .(முணுமுணுத்தபடியே போகிறான்)

காட்சி-3

இடம்;பிரம்மலோகம்.
சூழ்நிலை: (பிரம்மா, எமதர்மன், சித்ரகுப்தன் மற்றும் பல தேவர்கள் தங்கள் ஆசனங்களில் அமர்ந்து யோசித்தபடி இருக்கிறார்கள். அவரவர்கள் கன்னத்தில் கை வைத்து பல விதமான யோசனை செய்து கொண்டிருக்கிறார்கள்)
பிரம்மா: இந்த மாதிரி ஒரு சிக்கல் இதுவரையில் என்னிடம் வந்ததில்லை. மிகவும் சிக்கலான பிரச்சனைதான். யோசிக்க வேண்டிய விஷயம்.. எமதர்மா.. உங்களுக்கு ஏதாவது ஐடியா ‘ஒர்க் அவுட்’ ஆகிறதா?
எமதர்மன்: (பணிவுடன்) பிரபு..மூவுலகையும் படைத்தவர் தாங்கள். தங்களுக்கு தெரியாத ஐடியா எனக்கு எங்கே தெரியப்போகிறது? தாங்கள் என்ன உத்தரவிடுகிறீர்களோ அதன்படி நடப்பது என் கடமை.
பிரம்மா: இப்படி எல்லா விஷயத்தையும் என்னிடமே விட்டுவிட்டால் எப்படி? எனக்கு படைக்கவே நேரம் போதவில்லை. என்ன செய்வது? சித்ரகுப்தா.. (சித்ரகுப்தனைப் பார்த்தபடி) சித்ரகுப்தா..உனக்கு ஏதாவது யோசனை தோன்றுகிறதா?
சித்ரகுப்தன்; (தயங்கியபடி) அது வந்து பிரபு..நீங்க தப்பா நினைக்கலேன்னா ..
பிரம்மா; பரவாயில்லை.. இந்த இக்கட்டான சூழ்நிலையில் யார் நல்ல யோசனை சொன்னாலும் இந்த பிரம்மதேவன் ஏற்றுக் கொள்வான். ஏன் இந்த சிக்கல் ஏற்பட்டது? அதைப் ப்ற்றி உனக்கு ஏதாவது சித்ரகுப்தா?..
சித்ரகுப்தன்; பிரபு..நாட்டில் நல்லவர்கள் குறைந்து கெட்டவர்கள் அதிகமாகிவிட்டார்கள். எங்கு பார்த்தாலும் காலை..கொள்ளை..அதனால், இந்த எமலோகத்தில் கூட்டம் அதிகமாகிவிட்டது.உத்தமர்கள் ஒருசிலரைத் தவிர மற்ற எல்லோரும் நரகத்துக்கு வந்து விட்டார்கள். அவ்வளவு ஏன், பூலோகத்தில் இருந்த காந்தி கூட சின்ன வயதில் செய்த குற்றத்துக்காக ஆறு மாதம் தண்டனை அனுபவித்தாரே அது தங்களுக்கு தெரியாதா?
பிரம்மா;அது பழைய கதை..இப்போ இந்த பிரச்சனைக்கு என்ன வழி? அதை யோசிங்க முதல்லே..
சித்ரகுப்தன்; என் மனதில் பட்டதை சொல்லிடறேன் பிரபு..மக்கள் தான் செய்த அதிக பாவங்களால் சீக்கிரம் இறந்து விடுகிறார்கள். மக்களின் ஆயுளை அதிகப்படுத்தினால் மரணம் குறையும். மரணம் குறைந்தால் நரகத்தில் நெரிசல் குறையும். பின் நானும் எமதர்மனும் சீக்கிரம் தண்டனை வழங்கி பிரச்னையை முடித்து விடுவோம் பிரபு..
பிரம்மா: (யோசித்தபடியே) ..ம்..இதுவும் நல்ல யோசனையாகத்தான் தோன்றுகிறது. இதில் உன் கருத்து என்ன எமதர்மா..
எமதர்மன்: பிரபு..சித்ரகுப்தன் சொல்வது ஒரு கோணத்தில் பார்த்தால் அது ஒரு நல்ல யோசனையாகத்தான் தோன்றுகிறது. ஆனால் இன்னொரு கோணத்தில் பார்த்தால் அது சரியான தீர்வாக தெரியவில்லை. காரணம், மனித ஆயுளை அதிகரித்தால் பூலோகத்தில் கொலை, கொள்ளை அதிகமாகும். அப்பாவி மக்கள் பாதிப்படைவார்கள். நாட்டில் அராஜகம் தலைவிரித்து ஆடும்.எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளைன்னு பூலோகமே இரண்டு பட்டுவிடும் என்பது என்னுடைய தாழ்வான அபிப்பிராயம்.
பிரம்மா (குழப்பத்துடன்) எமதர்மன் சொல்வதும் சரிதான். இதற்கு என்னதான் வழி?
சித்ரகுப்தன்: (குறுக்கிட்டு) பிரபு..தாங்கள் அனுமதித்தால் நான் ஒரு யோசனை சொல்லட்டுமா?
பிரம்மா; சொல் பார்க்கலாம்.
சித்ரகுப்தன்: பிரபு..யார் கொலை, கொள்ளை அதிகம் செய்கிறார்களோ அவர்களின் ஆயுளை பாதியாக குறைத்து விடவேண்டும். பிறகு கெட்டவர்கள் சீக்கிரம் அழிந்து விடுவார்கள்.நல்லவர்கள் பலகாலம் வாழ வழி கிடைக்கும்.. மக்களும் திருந்த வாய்ப்பு கிடைக்கும்.
எமதர்மன்: இது நல்ல யோசனையாகத்தான் எனக்கு படுகிறது. ஏனென்றால் மக்கள் தவறு செய்தால் சீக்கிரம் செத்து போய்விடுவோம்னு
பயந்து சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள்.எனக்கும் வேலை குறையும்.
பிரம்மா: என்ன சொல்றீங்க இரண்டு பேரும்? எனக்கு ஒன்றுமே புரியலையே..
எமதர்மன்..பிரபு..நீங்கள் நல்ல குணமுள்ளவர்களின் ஆயுளை நீடித்துவிட்டு பாவம் செய்தவர்களின் ஆயுளை குறைக்க வேண்டும் அவ்வளவுதான்..
பிரம்மா: அது எப்படி என்னால் முடியும்? படைத்தல் என் தொழில். பிறக்கும்போதே அவன் நல்லவன், கெட்டவன் என்று எப்படி முடிவு செய்ய முடியும்? சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கெட்டு போகிறவர்கள்தானே இந்த பூலோகத்தில் அதிகம்?
சித்ரகுப்தன்: பிரபு. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. பிறக்கும் போதே ஒருவன் நல்லவன், கெட்டவன் என்று கண்டு பிடிக்க முடியாது. நீங்கள் எப்போதும் போல் உங்கள் படைப்புத் தொழிலை செய்து கொண்டிருங்கள். ஆனால் தீய செயல்கள் அதிகம் செய்பவனின் ஆயுளை பாதியாக குறைக்கும் அதிகாரத்தை எங்களுக்கு தரவேண்டும் பிரபு..
பிரம்மா; (நீண்ட யோசனைக்கு பிறகு) நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நமக்கு மேல் ஆக்கவும் அழிக்கவும் அதிகாரமுள்ள சிவன், விஷ்ணு மற்றும் தேவர்களிடமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் பிரச்சனையை முடிக்கணும். . .கவலைப்படாதீர்கள். வெகு சீக்கிரத்தில் உங்களிடம் ஒரு நல்ல சேதி வந்து சேரும்
எமதர்மன்; மிக்க மகிழ்ச்சி பிரபு..குழப்பத்திலிருந்த எங்களை காப்பாற்றிய தங்களுக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம் பிரபு..
பிரம்மா: எல்லாம் நம்முடைய சித்ரகுப்தனின் புத்தி கூர்மையான ஆலோசனைகள்தான். முதலில் அவருக்கு நன்றி சொல்லுங்கள்.
சித்ரகுப்தன்; (வணங்கியபடி) பிரபு..இதில் என் பங்கு என்ன இருக்கிறது? என்னை ஆட்டுவிக்கிறவர் தாங்கள். நான் ஆடுகிறேன், அவ்வளவுதான்.
எமதர்மன் (வணங்கியபடி) நல்லது பிரபு.. நாங்கள் விடைபெறுகிறோம்
பிரம்மா: உங்களை முக்கியமான விஷயம் பேசத்தான் அழைத்தேன்.. அதற்குள் ஏதேதோ பேசி மறந்து விட்டேன். இப்போது பிரச்சனையை எப்படி சமாளிக்கிறீர்கள்?
எமதர்மன்: அதுவும் நம்ம சித்ரகுப்தன் திட்டம் தான் பிரபு..
பிரம்மா(ஆச்சர்யத்துடன்) என்ன இதிலும் சித்ரகுப்தனா.?.என்ன சித்ரகுப்தா..போற போக்கைப் பார்த்தால் நீரே இவ் உலகைஆளும் தகுதி பெற்று விடுவீர் போலிருக்குதே.!..
சித்ரகுப்தன்(பணிவுடன்) அப்படியில்லை பிரபு.. சிக்கலான சமயத்தில் ஏதொ எனக்கு தெரிந்த யோசனைகள் மூலம் தீர்வு காண வேண்டியது என் கடமையல்லவா?
பிரம்மா; உண்மை..உண்மை..நானும் கேள்விப்பட்டேன் அது என்ன “டோக்கன் சிஸ்டம்..?”இந்த ஐடியா உனக்கு எப்படி வந்தது?
சித்ரகுப்தன்: அடிக்கடி பூலோகத்தில் நடப்பதுதான் பிரபு..அங்கே எதற்கெடுத்தாலும் டோக்கன் தான்..ரேஷன் கடையிலே டோக்கன், சினிமா தியேட்டரிலே டோக்கன், கோயில்லே, ஆஸ்பத்திரியிலே, எங்கேயும் டோக்கன் சிஸ்டம்தானாம். நமது எம கிங்கிரர்கள் மூலம் கேள்விப்பட்டேன்.அதாவது முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை..பின்னால் வந்தவர்களுக்கு பின்னுரிமை..
பிரம்மா: (சற்றே குழப்பத்துடன்) எமதர்மா..சித்ரகுப்தன்.. என்ன சொல்கிறார்? முன்னுரிமை, பின்னுரிமை..எனக்கு ஒன்றுமே புரியவில்லையே..
எமதர்மன்: பிரபு..சித்ரகுப்தனின் யோசனைப்படி பூலோகத்தில் மரணமடைபவர்கள் அதிகமாகிவிட்டபடியால் அனைவர்க்கும் ‘டோக்கன்’ தந்துள்ளார்.அதாவது டோக்கன் எண் வரிசைப்படி தண்டனை அளிக்க முடிகிறது. கூட்டம் அதிகமானதால் தான் சித்ரகுப்தன் இப்படி ஒரு திட்டத்தை செயல் படுத்தி உள்ளார். இதில் தங்களுக்கு எந்த தடையும் இல்லையே?
பிரம்மா; எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. எதற்கும் இந்த மூவுலகையும் கட்டிக் காக்கும் பரம்பொருளான சிவபெருமானிடம் விஷயத்தைக்கூறி அவரிடம் முறைப் படி அனுமதி பெற்று செய்வது முறையானதாகும். இதை நான் அவரிடம் நேரிம் பார்த்து சொல்லிக்கொள்கிறேன். எந்த சிக்கலும் இல்லாமல் எமலோகத்தை கவனித்துக்கொள்வது உங்கள் கடமையாகும்.நீங்கள் இருவரும் மிகவும் சாதுர்யமாக செயல்படக்கூடியவர்கள் என்று நம்பித்தான் உங்களூக்கு இந்த மிகவும் பொறுப்பான பதவிகளைஉங்களுக்கு சிவபெருமானிடம் பேசி உங்களுக்கு பெற்று தந்திருக்கிறேன் என்பதை மறந்து விடாமல் மிகவும் ஜாக்கிரதையாக செயல்படுங்கள்.
எமதர்மன்:(மிக்க பணிவுடன்) தாங்கள் எங்களிடம் ஒரு சிறு தவறுகூட கண்டுபிடிக்கமுடியாதபடி எங்கள் பணிகள் தொடரும். சித்ரகுப்தன் என்னிடம் இருக்கும் வரையில் எனக்கு கவலை இல்லை. உங்கள் ஆசியும் அன்பும் எங்களூக்கு இருந்தால் எங்கள் வேலையை திறம்பட செய்து முடிக்க முடியும் பிரபு…
பிரம்மா: என் ஆசி உங்களுக்கு எப்போதும் உங்களுக்கு உண்டு. சென்று வாருங்கள். வெற்றி உண்டாகட்டும்.
எமதர்மன்;&
சித்ரகுப்தன்;நல்லது..பிரபு..நாங்கள் விடைபெறுகிறோம்.
பிரம்மா:நல்லது..
(வணங்கிவிட்டு இருவரும் போகிறார்கள்)
காட்சி-4
இடம்: எமலோகம்.
உறுப்பினர்கள்: பலராமன், சிவராமன், வீராசாமி மற்றும் கூட்டத்தினர்.
சூழ்நிலை; (பூலோகத்தில் பாவம் செய்தவர்கள் கூட்டம் அதிகமாக
இருந்தது. கும்பல் கும்பலாக கூடி நின்று ஏதோ காரசாரமாக
பேசிக் கொண்டிருக்கிறார்கள். சிறிய மேடை ஒன்று போடப்
பட்டு அதன் மேல் இரண்டு பேர் நின்று பூலோக சகோதர
அரசியல்வாதிகளான பலராமனும், சிவராமனும், மக்களைப்
பார்த்து அமைதிப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்)
பலராமன்:சகோதர, சகோதரிகளே… .அமைதி..அமைதி… சத்தம்
போடாதீர்கள்.
(கூச்சல் தொடர்கிறது)
பலராமன்: சகோதர சகோதரிகளே அமைதி! அமைதி ! நம் தலைவர்
நமக்காக , நமது நன்மைக்காக ஒரு முக்கியமான விஷயம்
பற்றி பேச இங்கே கூடியிருக்கிறோம்.பூலோகத்தில்
முதல்வராக இருந்த காரணத்தால் இங்கேயும் என்னை
உங்கள் தலைவனாக ஆக்கியதில் நான் உங்களுக்கு
என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். எனது சகோதரன்
கொடுத்த தகவல்படி எமதர்மன் பாவிகளான நம்மை சரிவர
விசாரிக்காமல் அவசர கோலத்தில் தண்டனை அளிப்பதாக
தகவல் வந்துள்ளது.
(அநியாயம், அக்கிரமம்,..நீதி வேண்டும், நீதி வேண்டும்..
என்ற கூக்குரல் காதைப் பிளக்கிறது)
சிவராமன்; அமைதி.. சகோதர, சகோதரிகளே..தலைவர்
சொல்லப்போவதை
முழுவதும் கேட்டுவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள்.
பலராமன்; (தொடர்ந்து) அதனால் நம்முடைய நன்மைக்காக ஒரு சங்கம்
அமைக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். அதற்கு
“பாவிகள் நலச் சங்கம்” என்ற் பெயரில் சங்கம் அமைக்க
நீங்கள் அனைவரும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்.
அதற்கு தலைவராக.. ..
(“நீங்கள் தான் தலைவர்”..”நீங்கள் தான் தலைவர்” என்ற
குரல் எழுகிறது)
பலராமன்: (தொடர்ந்து) இல்லை. .நிச்சயமாக இல்லை. நமது
உறுப்பினர்களில் யார் டோக்கன் எண் அதிக
எண்ணிக்கை பெற்றிருக்கிறாரோ அவரே நம் சங்கத்துக்கு தலைவராக
முடியும். அப்போதுதான் நம் சங்கத்துக்கு அவரால்அதிகம் பாடுபட
முடியும்.அதனால் நம் உறுப்பினர்களில் மிக சமீபத்தில் மரணமடைந்து
இலட்சமாவது டோக்கன் பெற்று இங்கே வந்துள்ள திருவாளர் வீராசாமி
அவர்களை சங்கத்தின் தலைவராக்க விரும்புகிறேன். உங்கள்
கருத்தையும் கேட்க விரும்புகிறேன்.
கூட்டத்தினர்; (நீங்கள் சொல்றபடியே ஆகட்டும்..”தலைவர் வீராசாமி
வாழ்க!”தலைவர் வாழ்க!” என்ற கோஷம் விண்ணை எட்டுகிறது
. (சிவராமன் வீராசாமியை அழைத்து வருகிறார்)
பலராமன்: (எழுந்து) இப்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட
வீராசாமி அவர்களை பேச அழைக்கிறேன்
வீராசாமி: பாவிகளான சகோதர, சகோதரிகளே! (பலத்த கைத்தட்டல்)
(தொடர்ந்து) என்னை இச் சங்கத்திற்கு தலைவராக்கிய மாண்புமிகு
முன்னாள் முதல்வர் மரியாதைக்குரிய பலராமன் அவர்களுக்கு முதலில்
என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். முதலில் என்னுடைய
கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். நமது பலராமன் அய்யா
சொன்னபடியே நம் சகோதரர்களான பாவிகளை சரிவர கவனிக்காமல்
அவசரமாக தனக்கு தோன்றிய விதத்தில், தன்னிச்சையாக முடிவெடுத்து
தண்டனை வழங்குவதாக நமது அன்புச் சகோதர்களான எமகிங்கிரர்கள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆகவே இந்த அநியாயத்தை எதிர்த்து
போரிடபுதிய எமதர்மனாக நமது முன்னாள் தலைவர் மாண்புமிகு
பலராமனையே நியமிக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து இதில் உங்களுக்கும் உடன்பாடு இருக்கும் என நம்புகிறேன்.
இனி புதிய எமதர்மனாக நம் தலைவர் காட்சியளிப்பார். மேலும் நமது
உறுப்பினர்களுக்கு மிக எளிய தண்டனை வழங்கி சொர்க்கத்துக்கு
விரைவில் அனுப்பி வைப்பார்கள் என்ற நமது நம்பிக்கையுடன் அவரை
பதவியேற்க்கும் படியும் மிகவும் தாழ்மையுடனும் பணிவுடனும்
கேட்டுக் கொள்கிறேன்.
(தலைவர் வாழ்க! நமது எமராஜன் வாழ்க! என்ற கோஷம்
எமலோகம் முழுவதும் எதிரொலிக்கிறது. மக்கள் புதிய தலைவரையும்,
போட்டி எமதர்மனையும் தூக்கி வைத்துக்கொண்டு ஆனந்தமாக
கொண்டாடுகிறார்கள்)

காட்சி-5
இடம்:சிவலோகம்.
உறுப்பினர்கள் :சிவபெருமான், சக்தி, பிரம்மா, விஷ்ணு, எமதர்மன்,
சித்ரகுப்தன் மற்றும் தேவர்கள்
சூழ்நிலை: சிவபெருமான் ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார்.பிரம்மாவும்
மற்றவர்களும் கூட தீவிர யோசனையில் இருக்கிறார்கள். சபையில்
அமைதி நிலவுகிறது.
சிவபெருமான்: (கோபமாக) எந்த யுகத்திலும் நடக்காத விசித்திரம்
இப்பொழுது எமலோகத்தில் நடந்துள்ளது. எமலோகத்தில் போட்டி
எமதர்மனா?இதை ஏன் ஆரம்பத்திலேயே என்னிடம் சொல்லவில்லை?
பிரச்னை சீரியஸ் ஆன பின்புதான் இந்த சிவனைப் பற்றி ஞாபகம்
வந்ததா?
பிரம்மா; எங்களை மன்னியுங்கள் பிரபு..பிரச்சனை இவ்வளவு தூரம்
சிக்கலாகும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் நமக்குள்ளே கூட
இருந்து குழி பறிக்கும் எட்டப்பன்கள் நிறையபேர் எமலோகத்திலும்
இருக்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக புரிகிறது.
சிவபெருமான்:(திடுக்கிட்டு) என்னது? எமலோகத்திலும் எட்டப்பன்களா?
எமதர்மன் :(பரிதாபமாக) ஆமாம் பிரபு..என்னை பிடிக்காதவர்கள் என்
முதுகில் குத்தி விட்டார்கள். இப்போதெல்லாம் நல்லவர்கள் யார்
கெட்டவர்கள் யார் என்று கண்டுபிடிக்கவே முடிவதில்லை.எல்லோரும்
என்னிடம் விசுவாசமாக இருப்பது போல் நடித்து என்னை
ஏமாற்றிவிட்டார்கள் பிரபு.
சிவபெருமான்: வெட்கம்..வெட்கம். .இதைச் சொல்ல உனக்கு வெட்கமாக
இல்லை?
சக்தி : (குறுக்கிட்டு) இது திட்டம் போட்டு செய்த வேலை என்றே நான்
நினைக்கிறேன். இல்லாவிட்டால் எமதர்மனையே மாற்றும் அளவுக்கு
அவர்களூக்கு அதிகாரம் கொடுத்தது யார்? முதலில் அதை
கண்டுபிடிக்கவேண்டும். பிரச்சனை பெரியதாக விடக்கூடாது.
இல்லையென்றால் இந்த தேவலோகத்தில் நம்மைப் போன்ற
கடவுளுக்குக் கூட மரியாதை இருக்காது.
சிவபெருமான்: உண்மை. சக்தி சொல்வது முற்றிலும் உண்மை. இந்த
பிரச்சனை ஏற்பட யார் காரணம்?
(அனைவரும் மௌனமாக இருக்கிறார்கள். ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்தபடி குழப்பத்துடன் இருக்கிறார்கள்)
விஷ்ணு: பிரபு..உண்மை என்னவென்றால் பிரம்மா, எமதர்மன்,
சித்ரகுப்தன், ஆகிய மூவரும் தான் காரணம்.
சிவபெருமான்: என்ன, மூவரும்தான் காரணமா?
விஷ்ணு:ஆமாம் பிரபு.. முதலில் பிரம்மா பூலோகத்தில் ஜனத்தொகையை
அதிகரித்தார். இரண்டாவதாக எமதர்மனும், சித்ரகுப்தனும் சேர்ந்து
போட்ட திட்டம் , அதுதான் டோக்கன் சிஸ்டம்தான், இந்த
குழப்பத்துக்கெல்லாம் காரணம்.
(பிரம்மா, எமதர்மன், சித்ரகுப்தன் மூவரும்
திருதிருவென்று முழிக்கிறார்கள்)
சக்தி: ( வியப்புடன்) அதென்ன டோக்கன் சிஸ்டம்? என்ன இது புதுமையாக இருக்கிறதே?
விஷ்ணு: (சிரித்தபடியே) தேவி, நம் சித்ரகுப்தனின் யோசனைப்படிதான்
எல்லாம் நடந்திருக்கிறது.தண்டனை தருவதற்கு வசதியாக
இறந்தவர்களை வரிசைப்படுத்தி டோக்கன் கொடுத்திருக்கிறார்.
சிவபெருமான்: இது நல்ல திட்டம்தானே?
விஷ்ணு: அதுதான் பிரச்னையே பிரபு. மானிடர்கள் இயல்பிலேயே புத்திசாலிகள். பூலோகத்தில் காட்டிய திறமையை சற்று அதிகமாக காட்டிவிட்டார்கள். அதாவது, டோக்கன் எண் அதிகத்தில் உள்ளவரை தலைவராகவும், பூலோகத்தில் முதல்வராக இருந்தவரை இங்கே புதிய போட்டி எமதர்மனாகவும் நியமித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சக்தி: (வியப்புடன்) இதென்ன? எமலோகத்தில் இவ்வளவு விஷயம் நடந்திருக்கிறதா என்ன?
விஷ்ணு: ஆமாம் தேவி, தாங்கள் என்னிடம் தெரிந்தும் தெரியாதது போல் கேட்கிறீர்கள். உங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும். என் மூலம் நீங்கள் விளக்கம் பெற்றிருக்கிறீர்கள்.அவ்வளவுதான்,,
சிவபெருமான்: ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. (எமதர்மனிடம்) முதலில் அந்த ‘டோக்கன்’ சிஸ்டத்தை முதலில் நிறுத்துங்கள்.
எமதர்மன்: (பரிதாபமாக) பிரபு.. இப்போதெல்லாம் என்னிடம் தண்டனை பெற யாரும் வருவதில்லை. அந்த புதிய எமதர்மனிடம் தான் கூட்டம் அதிகமாக போகிறார்கள். அவன் பாவிகளுக்கு தகுந்த தண்டனை தராமல் மிக சாதாரண தண்டனை கொடுத்து சீக்கிரம் சொர்க்கத்துக்கு அனுப்பி விடுகிறான் பிரபு.. சொர்க்கத்திலும் அவர்களை அனுமதித்து விடுகிறார்கள் பிரபு..அதுதான் கொடுமையிலும் கொடுமை..
சித்ரகுப்தன்: (சோகத்துடன்) ஆமாம் பிரபு.. என்னிடம் இருந்த பாவிகள் ரிஜிஸ்டர்களையும் நம்முடைய ஆட்கள் மூலமாகவே கடத்திக்கொண்டு போயிருக்கிறார்கள்.பிரபு..
சிவபெருமான்: (கடும் கோபத்துடன்) வெட்கம்!..வெட்கம்!..இதைச் சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நரகத்துக்கு தண்டனை பெற வந்த பாவிகள் எமதர்மனாக மாறுவதா? அதை ஒருக்காலும் அனுமதிக்கமாட்டேன்.
பிரம்மா.. பிரபு.. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. சற்று சிந்தித்துதான் முடிவெடுக்க வேண்டும்.
விஷ்ணு: பிரம்மதேவா.. இனி உன் படைப்பு தொழிலை சற்று நிதானமாக நடத்து..எமதர்மன் பக்கமும் நியாயம் இருக்கிறது. அதிக மக்கள் வெகு விரைவில் இறப்பதால் என்ன செய்வது என்று எமனுக்கும் புரியவில்லை. பாவம் அவர் மட்டும் என்ன செய்வார்?என்ன, எமதர்மா, நான் சொல்வது சரிதானே?
எமதர்மன்: ஆமாம் பிரபு. நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரிதான். முன்பெல்லாம் நான் பூலோகம் சென்று ஆயுள் முடித்து அவர்களை கொண்டு வருவேன்.ஆனால் இப்போதெல்லாம் அந்த வேலையை மிக வேகமாக செல்லும் ஆகாய விமானங்கள், பஸ் டிரைவர்கள். லாரி டிரைவர்கள், டெம்போ, ஆட்டோக்கள் மூலமாக மிக அதிக மரணம் ஏற்பட்டு சமாளிக்க முடியாத அளவுக்கு மக்கள் எமலோகத்துக்கு வந்துவிட்டபடியால் அந்த சூழ்நிலையில் இந்த மாதிரி ஒரு முடிவு எடுக்க வேண்டியதாகிவிட்டது பிரபு..
சிவபெருமான்: (யோசித்தபடியே) ம்.ம்.ம்..எம்தர்மன் சொல்வதிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதிகமான பாவங்கள் செய்தவர்கள், குறைவான தண்டனை பெற நாம் அனுமதிக்க கூடாது. மஹாவிஷ்ணு சொல்வதுபோல் பிரம்ம தேவன் தன் படைப்புத்தொழிலை குறைக்கட்டும். டோக்கன் சிஸ்டம் தேவையில்லை. அதற்க்கு பதில் பூலோகதத்திலிருந்து சூப்பர் கம்ப்யூட்டர்களை வரவழைத்துவிடுங்கள். அதில் அனைத்து விபரங்களையும் பதிவு செய்து விடுங்கள்.நமது சித்ரகுப்தன் வேலைப்பளுவும் குறையும். வெகு சீக்கிரத்தில் விசாரித்து உரிய தண்டனை வழங்கிவிட முடியும். ஆரோக்கியமாக உள்ளவர்கள் ஆயுளை அதிகரித்து, அதிக பாவங்கள் செய்பவர்கள் ஆயுளை குறைக்க அனுமதியளிக்கிறேன். அதனால் பாவிகள் குறைந்து உத்தமர்கள் அதிகமாகி மரண விகிதம் குறைய வாய்ப்புண்டு. அதற்குள் எமதர்மனும், தண்டனைகளை சீக்கிரம் வழங்கி தன்னை ‘ஸ்டெடி’ செய்து
கொள்ளட்டும் என்ன நான் சொல்வது சரிதானே?
(அனைவரும் .) தாங்கள் சொல்வது மிகவும் சரியே…அப்படியே ஆகட்டும். பிரபு..
(வணங்கியபடியே அனைவரும் கலைகின்றனர்)

காட்சி -6

இடம்: போட்டி எமதர்மனின் தர்பார்
உறுப்பினர்கள்; (சிவராமன், பார்வதி, பிரம்மா, எமதர்மன், சித்ரகுப்தன், பாவிகள் மற்றும் எமகிங்கிரர்கள்)
சூழ்நிலை (எமகிங்கிரர்கள் மற்றும் அவனை ஆதரிக்கும் கூட்டம் அவனை சுற்றியிருக்கிறார்கள். எமதர்மன் மிகவும் எளிய தண்டனைகள் வழங்கிக் கொண்டிருக்கிறான். போலி சித்ரகுப்தன் பாவிகளின் பாவப்பட்டியலை பேருக்கு சரி பார்த்து அவர்கள் செய்த பாவங்களைப் பற்றி விவரித்துக்கொண்டிருக்கிறான். ஒரு பாவியின் குற்றப் பட்டியலை படித்துக்கொண்டிருக்கிறான்)
சித்ரகுப்தன்: பிரபு. இவன் பெயர் சொக்கன். பல நூறு குடும்பங்களை நாசமாக்கியவன். பால் பௌடரில் கலப்படம் செய்து கோடிக்கணக்கான ரூபாய்கள் கொள்ளையடித்துள்ளான். மேலும் வருமான வரி கட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்றி வாழ்நாள் முழுவதும் ஏமாற்றி வாழ்ந்து வந்துள்ளான்.. மேலும்..
போட்டி எமதர்மன்: (பெருமையுடன்,பாவியைப் பார்த்தபடியே)
ஆஹா..ஆஹா..சிறந்த அறிவாளியே வருக! உன்னால் பூலோகத்தில் மக்கள் குறைந்து பூமி பாரம் குறைய உதவிய உனக்கு எனது எமலோகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நீ பூலோகத்தில் இன்-கம்-டேக்ஸ் காரர்களையே ஏமாற்றிய காரணத்தினால் உன்னை என் கஜானாவுக்கு அதிகாரியாக நியமிக்கிறேன். உன்னை நம்பி லட்சக்கண பொன்களை கொடுக்கலாம். இன்று முதல் நீ சித்ரகுப்தனுக்கு அசிஸ்டெண்டாக நியமிக்கிறேன். அதற்கு முன் நீ செய்த ஒரு சில தவறுகளுக்காக எமதர்மன் என்ற முறையில் சிறு தண்டனை நான் கொடுத்தாக வேண்டும். அதனால் நீ செய்த பாவத்துக்காக ஒரு அரை மணி நேரம் இந்த குற்றவாளி கூண்டிலே நின்றுவிட்டு என் அலுவலகத்தில் சித்ரகுப்தனிடம் அஸிஸ்டெண்டாக போய் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்..
பாவி: ஐயா..எமதர்மரே..உங்களுக்கு சேவகம் செய்வதில் நான் பாக்கியவான் ஆனேன். நான் எனக்கு தெரிந்த ‘கோல்மால்களை’ செய்து என்னால் முடிந்த உதவிகள் செய்து என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டவனாகயிருப்பேன் ஐயா..
போட்டி எமதர்மன்: நன்றி. .யாரங்கே? உடனே இவரை அரை மணி நேரம் குற்றவாளி கூண்டில் அரை மணி நேரம் நிறுத்தி வைத்துவிட்டு அழைத்து வாருங்கள்.
எமகிங்கிரர்கள் (வணங்கியபடி) உத்திரவு பிரபு..(கூட்டிக்கொண்டு செல்கிறார்கள்)
(இரண்டு எமகிங்கிரர்கள் வெகு வேகமாக மூச்சிரைக்க ஓடி வருகிறார்கள்)
போட்டி எமதர்மன்: என்ன சேதி? ஏன் இவ்வளவு வேகமாக வருகிறீர்கள்?
எமகிங்கிரர்கள்; மன்னா.. தங்களைக்காண பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி என்று தேவலோகமே திரண்டு வந்திருக்கிறது..பிரபு..
போட்டி எமதர்மன்: (யோசித்தபடியே) அப்படியா .சரி..வரச்சொல்..
(அனைவரும்உள்ளே நுழைகிறார்கள்)
போட்டி எமதர்மன்: (எழுந்து நின்று) வரவேண்டும்!..வரவேண்டும்!..இந்த எமதர்மனைப் பார்க்க இந்த தேவலோகமே திரண்டு வந்திருப்பதைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவரும் அமருங்கள் (இருக்கைகளை காட்டுகிறான்)
சிவபெருமான்: (கோபத்துடன்) நாங்கள் உன்னிடம் பேசிக்கொண்டு இருக்க வரவில்லை. எச்சரிக்கை செய்து விட்டு போகத்தான் வந்துள்ளோம்.
போட்டி எமதர்மன்: எச்சரிக்கையா.?.எனக்கா?..ஹா..ஹா..ஹா..இந்த புது எமதர்மனைப் பற்றி தெரிந்துதான் வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். தெரிந்துமா என்னிடம் விளையாடுகிறீர்கள்?
பிரம்மா;( கோபத்துடன்) எமதர்மா.. உன்னுடைய நாசகாலம் நெருங்கி விட்டது. யாரிடம் என்ன பேசுகிறோம் என்று தெரிந்து பேசுவது நல்லது. இல்லையேல் அழிந்து போவாய்..
போட்டி எமதர்மன்: (சிரித்தபடியே) அழிந்துதானே இங்கு வந்திருக்கிறேன்!.
பார்வதி..உன் முடிவு நெருங்கி விட்டது. பாவம் சிரிக்கிறாய். சிரித்துவிட்டு போ..இனி எப்போது சிரிக்கப் போகிறாய்?
விஷ்ணு; எமதர்மா.. விதிகளை மீறி குறுக்கு வழியில் எம தர்மனாகியிருக்கிறாய். இதன் பின் விளைவுகளைப் பற்றி நீ யோசித்தாயா?
போட்டி எமதர்மன்: (கோபமாக) கண்ணா.. உன் தந்திர பேச்சைக் கேட்க நான் தயாராக இல்லை. உன் சூதுள்ள பேச்சு என்னிடம் செல்லாது..என்னை யாரும் அசைக்க முடியாது. இன்னும் பல யுகங்களுக்கு நான் தான் எமதர்மன்..ஹா..ஹா..(பலமான சிரிப்பு) மரியாதையாக வந்த வழியைப் பார்த்து போங்கள்.
விஷ்ணு..(சிரித்தபடி) போகத்தான் போகிறோம். போவதற்குமுன்…
(சிவனைப் பார்க்கிறார்)
சிவபெருமான்:(ஆக்ரோஷத்துடன்) போட்டி எமதர்மா. மூவுலகையும் ஆளும் எங்களிடமே சவாலா.? .நன்றாகக் கேட்டுக் கொள்.. நீ நம்பிக்கொண்டிருக்கும் டோக்கன் சிஸ்டம் நாளை முதல் கிடையாது. சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் மிகத் துல்லியமாக பதிவு செய்ய ஏற்பாடு ஆகியுள்ளது. நாளை காலை உனக்கு தண்டனை வழங்கப்படும் என்பதை சொல்லிவிட்டு செல்லத்தான் நாங்கள் வந்தோம். உன் இஷ்ட தேவதையை வணங்கிக்கொள்..நாங்கள் வருகிறோம்..
(ஹா..ஹா..என்ற சிவபெருமானின் அதிரடி சிரிப்பு எமலோகத்தையே எதிரொலிக்க மற்றவர்களுடன் வெளியேறுகிறார்)
போட்டி எமதர்மன்: (அதிர்ச்சியுடன்) என்னது?..நாளையா?..என் முடிவு நாள்.! .
(மயங்கி சாய்கிறான்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *