ஊட்டி வரை உளவு!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 3, 2022
பார்வையிட்டோர்: 15,927 
 
 

‘காயமே இது பொய்யடா’ என்ற சித்தர் வாக்குக்கு ஒரு சிறு மாற்றம் தேவை. ‘காயமே இது பச்சோந்தியடா!’

நீங்க பாட்டுக்கு, காயம் என்றவுடன் படை, சொறி, சிரங்கு , பர்னால், ஜெர்மெக்ஸ் என்று போய்விடாதீர்கள். நான் கூறுவது செந்தமிழ் காயம். அதாவது, உடம்பு! விஷயத்துக்கு வருவோம்…

ஏதோ போனால் போகிறது. எங்கு போனாலும் நன்றி விசுவாசத்தோடு நம் கூடவே வருகிறதே என்று பச்சாத்தாபப்பட்டு…. பாவம்! மதறாஸ் வெப்பத்துக்குப் பயந்து சதா வியர்வைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்தக் காயத்தைச் சற்றுக் குஷிப்படுத்தலாம் என்று ஊட்டிக்குக் கூட்டிச் சென்றால், பச்சோந்தி தன் புத்தியைக் காட்டிவிட்டது.

ஊட்டியில் கால் வைத்த மறுகணமே இந்த அயோக்கிய உடம்பு, தான் வியர்த்து வாடிய நாட்களை மறந்து அங்கு நிரந்தரமாகத் தங்கிக் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துக் காப்பியடிக்க ஆரம்பித்துவிட்டது…. அவர்கள் போட்டுக்கொண்டிருப்பது போல எனக்கும் ஸ்வெட்டர் போட்டுவிடு….. மஃப்ளர் டர்பன் கட்டிவிடு’ என்று!

அல்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பது போல, என் கூடவே பிறந்து குழிப்பறிக்கும் இந்தக் கசுமால் உடம்பு , நான் ஊட்டியில் தங்கிய நான்கு நாட்களும் தும்மல், இருமல், தொண்டைக் கட்டு, திருகுவலி என்று ஒப்பாரி வைத்து, போன இடத்தில் என் பிராணனை வாங்கிவிட்டது. மறுபடியும் மேட்டுப்பாளையம் வந்தவுடன் இந்த உடம்பு வியர்வையோடு “ஐஸ் போட்டுப் பன்னீர் சோடா வாங்கித் தாயேன்” என்று தனது பழைய கர்நாடக சங்கீதத்தைப் பாட ஆரம்பிக்கிறது…

ஒன்று நிச்சயம் சாமி…. இனி எங்கு போனாலும் – அது சிம்லாவோ, சகாராவோ – இந்த உதவாக்கரை உடம்பை அழைத்துச் செல்லாமல் மானசீகமாகவே போய்வரத் தீர்மானித்துள்ளேன். எப்படி ஐடியா…?

சரி! உங்களுக்காக ஊட்டி வரை சென்று உளவறிந்து துலக்கிய உல்லாசத் துப்புகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்…

நான், என்னுடைய வீணை, எனது நண்பன் கோபி, அவனுடைய வீணை (மலைக்காதீர்கள்… சம்சாரம் என்பது வீணை’ பாட்டு கேட்டதில்லையா!) நால்வரும் கோயம்புத்தூரில் இறங்கி ஓட்டல் அன்னபூர்ணாவில் கபளீகரம் செய்துவிட்டு உதகமண்டலம் காண சேரனில் ஏறினோம். கவனிக்கவேண்டிய ஒரு விஷயம்: அன்னபூர்ணாவுக்கு வருபவர்களைச் சாப்பிட வருபவர்கள் என்று கூறுவதைவிட அங்கு தயாராகும் இட்லி வடை சாம்பாரைத் தரிசிக்க வரும் பக்தகோடிகள் என்று அழைப்பதே சாலச் சிறந்தது!

மெய்யாலும்மே மல்லிகைப்பூ மாதிரி இட்லிகள்… என் மனைவி, இரண்டு இட்லிகளைக் கூந்தலில் சூடிக்கொண்டுவிட்டாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

மேட்டுப்பாளையத்தை உதறிவிட்டு, சேரன் போக்குவரத்து தனது டென்சிங் பணியைத் துவங்க ஆரம்பித்தது. தாயைப் போல பிள்ளை’ என்பது போல, தான் வாழும் மலையைப் போல மரங்களும் இரண்டு பக்கமும் நீண்டு உயர்ந்து வான் நோக்கி வளர்ந்திருந்தன. பாதி மரங்களின் நாமாவளிகள் Botany படித்தவர்களுக்கே பரிச்சயம். பார்த்தவுடன் என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. நெட்டையான பாக்கு மரங்கள் தான். அதில் ஏறிப் பாக்கைப் பறித்து வருவதற்குள் வாயில் போட்ட வெற்றிலை கரைந்துவிடும்.

திடீரென்று நாசியைத் தாக்கிய யூகலிப்ட்ஸ்’ தைல மரங்களின் வாசனை, எனக்கு இறந்துபோன ஓர் உறவினரின் ஞாபகத்தை உண்டாக்கியது. உறவினர் உயிரோடு இருந்தபோது அவருக்கு ஒரு மேனியா.’ சதா சர்வகாலம் ஒரு பஞ்சை யூகலிப்ட்ஸில் தோய்த்துத் தென்னங்குச்சியில் பொருத்திக் கையில் வைத்த வண்ணம் முகர்ந்து கொண்டிருப்பார். முகரும்போது உறவினரின் கண்கள் சொருகி, நாசி மலர கடுமையான போதையில் இருப்பவனைப் போல பாவம் காட்டுவார். ஆவிகள் நிச்சயம் உண்டு என்கிற பட்சத்தில் இறந்து போன எனது உறவினர் சத்தியமாக இங்கு எங்கோதான் அலைந்து கொண்டிருக்கிறார்.

மூன்றாம் பிறை’ ஜனித்த புண்ணிய ஸ்தலமான கேத்தியில் நுழைந்தது சேரன்.

சும்மா சொல்லக்கூடாது. கேத்தியில் பார்த்த இடத்திலெல்லாம் பாலு மகேந்திரா தெரிந்தார்! கேத்தி ரயில்வே ஸ்டேஷனைக் காட்டி, “இங்கதான் சார்… கமல் ஸ்ரீதேவியைப் பிரியறாரு…” என்று சேரன் நடத்துநர் ஸ்தல புராணம் பாடியதும் நண்பன் கோபி (கமல் பக்தன்) படபடவென்று கன்னத்தில் போட்டுக்கொண்டு பக்திப் பரவசமெய்தினான்.

ஊட்டியில் பொருளாதாரம் – வாழும் விலை, (Cost of living) விலைவாசி போன்றவற்றின் குடுமி திருவாளர் சீதோஷ்ணத்தின் கையில் உள்ளது.

சீசனில் பொட்டானிகல் கார்டன் போவதற்குக்கூட வழியைப் பணம் செலவழித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதே சீசன் இல்லாத டிசம்பர், ஜனவரி மாதங்களில் சாமர்த்தியம் உள்ளவர்களாக இருந்தால் அதே பொட்டானிகல் கார்டனைக் குறைந்த விலைக்குப் பேரம் பேசி வாங்கிவிடலாம்.

டாக்ஸியில் ஏறித் தொட்டபெட்டா மலைச் சிகரம் செல்ல ஆசைப்படுபவர்கள் பையிலுள்ள அத்தனை பணத்தையும் டாக்ஸி சார்பாகக் கொடுக்கவேண்டிவரும். கையில் பணமின்றி ஊர் திரும்ப விரும்புபவர்களுக்குச் சுலபமான ஒரே வழி அதே தொட்டபெட்டா சிகரத்திலிருந்து மேட்டுப்பாளையத்தைக் குறி வைத்துக் குதித்துவிட வேண்டியதுதான்.

சராசரி இந்தியர்கள் சுற்றிப் பார்க்க சேரன் பெரிதும் உதவுகிறான். முப்பத்தைந்து ரூபாய் கொடுத்தால் மலை ராணியின் அனாடமியை சேரன், நமக்கு ஒரே நாளில் அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்துப் போட்டுக் காட்டுகிறான்.

காலை எட்டு மணிக்கு இருபது பேரை மடியில் கட்டிக்கொண்டு புறப்பட்ட சேரன் யுவராஜா (மினி பஸ்) முதலில் சென்றது தொட்டபெட்டா! தொட்ட பெட்டா மலையுச்சி, அடிவாரத்திலிருந்து எட்டாயிரத்து அறுநூற்றுச் சொச்சம் அடி உயரத்தில் இருக்கிறது என்று கல்வெட்டு கூறியது. அங்கிருந்து குதித்தால் சொச்சம் தாண்டுவதற்குள் சிவலோகம் போய்விடுவோம். எனது மனைவி தொட்டபெட்டாவை சிறு குழந்தையைப் பார்ப்பது போல் அலட்சியமாகப் பார்த்துவிட்டு, தான் தனது தந்தையுடன் திருமணத்துக்கு முன்பு பார்த்த சிம்லா மலையுச்சியைச் சிலாகித்து என்னுள் பொறாமையைத் தூண்டினாள். அடுத்த விடுமுறையில் விருத்தாசலம், வீரமன்னார்கோயில் என்று அழைத்துச்சென்று மனைவியைப் பழிவாங்கத் திட்டமிட்டேன். யாரும் பார்க்காத சமயத்தில் வாயில் போட்டுக் குதப்பிய வெற்றிலை சீவலை, தொட்டபெட்டா உச்சியிலிருந்து ஆயிரக்கணக்கான அடிகளுக்குக் கீழே துப்பி அல்ப சந்தோஷம் அடைந்தேன்.

தொட்டபெட்டாவை அடுத்து நாங்கள் தொட்டது பாண்டியராஜ் மெமோரியல் பார்க். அப்பு, குப்பு, சுப்பு தவிர மற்ற உலகிலுள்ள அத்தனை பூக்களையும் அந்தப் பூங்காவில் பாண்டியராஜ் சேர்த்து வைத்திருக்கிறார். சில பூக்களின் பிரமாண்டம் அவை பூக்களா, அல்லது காய்களா என்று சந்தேகிக்க வைத்தன! இம்மாதிரி பெரிய சைஸ் பூக்களை எடுத்து வழக்கம் போல தமிழ் சினிமா கதாநாயகர்கள், செல்லமாகக் கதாநாயகிகள் மீது எறிந்தால் முக்கால்வாசி கதாநாயகிகள் பூவின் சுமை தாங்காமல் மூர்ச்சையாகி விடுவார்கள். பஸ்ஸில் வந்த இருபது பேரில் பாதிக்கு மேல் பெண்கள். அனாவசியமாக பூங்காவின் வாயிலில் பூக்களைப் பறிக்காதீர்கள்’ என்ற பலகையைப் போட்டு, மறந்திருந்த பெண்களுக்குக்கூட பறித்துத்தான் ஆகவேண்டும் என்ற வெறியை உண்டாக்கிவிட்டார்கள். பூங்காவின் காவலாளி, போன குளிருக்குப் போட்ட போதையே தெளியாமல் மயங்கிக் கிடந்தான். அரை மணி நேரத்தில் பாண்டியராஜ் நினைவுப் பூங்கா, தாய்மார்களால் சூறையாடப்பட்டது.

மதிய உணவுக்குப் பிறகு சென்றது கொடநாடு வ்யூ பாயின்ட், டால்பின்ஸ் நோஸ் மலையுச்சிகள். தொட்டபெட்டாவைப் போல இரண்டுமே தற்கொலை ஸ்தலங்கள்தாம்.

இந்த இடங்களுக்கெல்லாம் பஸ் கரடு முரடான மலைப் பாதையில் செல்லும் போது ஆண்களே பிரசவித்துவிடும் அளவுக்கு எகிறி எகிறிக் குதித்துச் செல்கிறது. கொடநாடுவை’ என்னுடன் பயணம் செய்த சிந்திக்காரர் ஸ்பஷ்டமாக, குடை நாயுடு என்று உச்சரித்தார்.

டால்பின்ஸ் நோஸ், சிம்ஸ் பார்க் என்று பல இடங்களை, ஏன் இன்னமும் வெள்ளைக்காரன் கொடுத்த பெயரிலேயே அழைக்கிறார்கள்? இதோ, தமிழாக்கம்: ராஜாஜி ஞாபகார்த்தமாக டால்பின்ஸ் நோஸைத் தேசப் பற்றோடு மூதறிஞர் மூக்கு’ என்றும், ‘சிம்ஸ்’ பார்க்கை சின்மயானந்தா பூங்கா’ என்றும் தாராளமாக மாற்றலாம்.

போட் கிளப் ஏரியில் படகை நாமாகவும் ஓட்டலாம்; அல்லது படகைச் செலுத்தப் படகோட்டியும் வைத்துக் கொள்ளலாம். நானும் என் மனைவியும் படகோட்டியின் துணையோடு ஏரியில் பாதுகாப்பாக மிதந்தோம். படகோட்டியின் காதில் விழாமல் ‘முல்லை மலர் மேலே’ பாடலை மனைவியைப் பார்த்து ரொமான்டிக்காகப் பாடினேன்.

மனைவியோ, பாடலை மதிக்காமல் இந்த ஏரியைவிட சிம்லா ஏரி இன்னமும் ஆழம் என்று சீரியஸாகக் கூறினாள்.

ஒரு காலனி நண்பர் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய இரண்டு பாட்டில் பெரிய சைஸ் யூகலிப்டஸ் (நண்பரின் மூன்று சந்ததியினருக்குப் போதுமான அளவு) தைலம் வாங்கிக் கொண்டேன். காலனி நண்பருக்கு இது ஒரு கெட்ட பழக்கம்…. யாராவது பத்தமடை சென்றால், பாய் வாங்கி வரும்படி வற்புறுத்துவார். டெல்லி சென்றால் மோடா; திண்டுக்கல் போனால் பூட்டு – இப்படி அந்த ஊர் பிரசித்தத்தை’ அவசியம் வாங்கி வரும்படி உயிரை வாங்குவார். வெறுப்புதீர ஒரு முறை தீபாவளி பண்டிகை இல்லாத நாளாகப் பார்த்து சிவகாசி சென்று கட்டுக்கட்டாக பட்டாசு வாங்கிவந்து இவர் வீட்டு ரேழியில் நிரப்பிக் கொளுத்திவிட வேண்டும்.

சேரனில் மலையேறிய நாங்கள் புகை வண்டியில் அமர்ந்து பூமியை நோக்கி ஊர்ந்தோம்.

சென்னை வந்ததும் செய்தித்தாளில் படித்தது : நேற்று சென்னையில் அதிகபட்ச வெப்பம்…. மீனம்பாக்கம் உஷ்ணமானியில் பாதரசம் நூற்றி ஒன்பது புள்ளி நான்கு டிகிரியைத் தொட்டதாம்.

ஆண்டவா! ஒரு சிறு வேண்டுகோள்: ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வைத்து ஆட்சி மாற்றம் செய்வது போல, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சீதோஷ்ண மாற்றம் செய்து ஐரோப்பாவை வெப்பமாக்கி ஆசியாவைக் குளிர் பிரதேசமாகச் செய்துவிடு…. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவன் என்று எண்ணி இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்.

– ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை!, விகடன் பிரசுரம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *