இதோ ஒரு நாடகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 2, 2022
பார்வையிட்டோர்: 10,251 
 
 

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி: 1

(ஓர் அறை. பின் சுவரில் அப்பலோ’ நாடக மன்றம்’ என எழுதப் பெற்றிருக்கிறது. அதன் கீழ் 1-ம் திகதியைக் காட்டும் நாட் காட்டி ஒன்று தொங்குகிறது. திரை விலகும்போது சண்முகம் மேசை முன் நிற்கிறார். செல்வம், குமார், வேலுப்பிள்ளை ஆகியோர் சூழ நிற்கிறார்கள்.)

சண்: நண்பர்களே! நாடகக் கலையானது அரிய பெரிய கலை! அத்தகைய கலையானது இன்று தம் நாட்டிலே மிக மிக நலிந்து போய்க் கிடக்கிறது.

செல்: அதாவது நம்மை விட்டால் வேறு கதியில்லை என்ற நிலையை

சண்: அதனால் அக்கலையைக் காக்கவும் வளர்க்கவும் எனத் தோன்றியதே இந்த எமது அப்பலோ நாடக மன்றமாகும்!

செல்: நாடகக் கலை இனி நன்றாக வளரும்.

சண்: எமது மன்றம் தனது முதல் நாடகத்தை அடுத்த மாதமே அரங்கேற்ற எண்ணியுள்ளது. அதனைத் தொடர்ந்து ‘அப்பலோ’ வேகத்தில் மேலும் பல நாடகங்களை மேடை யேற்றுவோம். இப்பொழுது, என்ன நாடகம் போடுவது? அதன் கதை வசனத்தை யார் எழுதுவது? அதில் யார் யார் என்னென்ன பாத்திரங்களில் நடிப்பது? என்பதை எல்லாம் தீர்மானிக்க வேண்டும்…..

செல்: மன்றத் தலைவரான தாங்களே கதாநாயகனாக நடிக்க வேண்டும். அதனால் மன்றத்துக்கும் புகழ் குவிய வாய்ப்புண்டு.

சண்: (பயந்து) அய்யய்யோ …? நடிப்பதா…? நானா….? வேண்டாம், அது எனக்கு வராது.

செல்: அப்படியானால் கதை வசனம் பொறுப்பையாவது

சண்: ஆங்.. எனக்குத் திருடுவது என்றால் பொல்லாத பயம், சின்ன வயதில் இப்படித்தான் ஒரு நாள்- அப்பொழுது எனக்கு வயது பத்து இருக்கலாம்…..

செல் : சொந்தக் கதையா? வேண்டாம், நாடகக் கதைபற்றியே பேசுவோம். நமது தலைவருக்கு – அதாவது அப்பலோ நாடக மன்றத் தலைவருக்கு என்ன சொன்னீர்கள் அப்போது… (யோசனை செய்து)..ஆம், நலிந்து கிடக்கிற நாடகக் கலையை காக்கவும் வளர்க்கவும் எனத்தோன்றிய எமது மன்றத்தின் தலைவருக்கு நடிக்க வராது….. கதை வசனம் எழுதத் தெரியாது…

குமார்: எஞ்சியிருப்பது ‘டைரக்சன்’ பொறுப்பு ஒன்றுதான்

செல்: அதையாவது அவர் ஏற்றுக்கொள்வார் என எண்ணுகிறேன்

சண்: (மகிழ்ச்சியுடன்) சரி! உங்கள் சித்தம் என் பாக்கியம். முதலில் நாடகத்தின் கதை வசனம்…இதை யார் ஏற்றுக்கொள்ளப் போகிறீர்கள்?

செல்:தமது கமலநாதனுக்கே அதைக் கொடுக்கவாம். ஆளும் சரியான ஒல்லி. நாசனலும் போட்டு ஒரு பைலும் கொடுத்து வெற்றிலையும் போடச் சொன்னால் அசல் எழுத்தாளன் தான்!

குமார்: கதை வசனம் கமலநாதன்! அங்கை ஒரு கானா! இங்கை ஒரு கானா! ஆகா.. என்ன பொருத்தம் இந்தப் பொருத்தம்!

சண்: எங்கே, அவனை இன்று காணோமே!

செல்: அதற்கு நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. நான் சொன்னால் அதை அவன் ஏற்றுக் கொள்வான்.

சண்: எதற்கு? வெற்றிலை போடவா?

செல்: கதை வசனம் எழுதவும் தான். அதோ அவனே வருகிறான் (கமலநாதன் வருதல் – வந்ததும்) கதை வசனம் கமலநாதன் அவர்களேப்

எல்லாரும்: வருக! வருக!

சண்: (சுமலநாதனைப் பார்த்து) நாங்கள் போடவிருக்கும் நாடகத்துக்கு நீர் சுதை வசனம் எழுதவேண்டும், சம்மதமா?

கமல: அதற்கு இத்தனை வரவேற்பு இருக்கும் போது மறுப்பேனா?

சண்: அடுத்தது நடிகர்கள். கதாநாயகனுக்கு யாரைப் போடலாம். ஓகோ.. நான் தானே டைரக்டர். பரீட்சை வைத்துப் பார்க்கிறேன். எல்லாரும் இதைக் கவனியுங்கள். உயிருக்குயிராக நேசித்த காதலியை வில்வன் கடத்திச் சென்று விடுகிறான். இதைக் சுதாநாயகன் அறிகிறான். அவன் எப்படி இருப்பான் என்ன செய்வான்? இதை நடித்துக் காட்ட வேண்டும். கமான், முதலில் வேலுப்பிள்ளை செய்து காட்டுபார்க்கலாம்…

வேலு: (முன்னுக்கு வந்து) என் பிராண நாயகியைத் தேடி கானகத்துக்கு மத்தியிலேயுள்ள வில் லனுடைய இல்லத்துக்குச் சென்றுவிடுகிறேன். வீட்டு வாயிலில் நின்றிருந்த சேடிகளில் ஒருத்தி என்னை நோக்கி பிரபு!’எதற்கு வந்திருக்கிறீர்கள்? யாரைத் தேடி வந்திருக்கிறீர்கள்?’ என்கிறாள். அதற்கு நான் ‘பெண் பாவாய்! நான் வந்தது ஒரு மானைத் தேடி…எப்படிப்பட்ட மான் தெரியுமா…’

(பாடுதல்)

இராகம்: பைரவி

காயாத கானகத்தே நின்றுலாவுநற் காரிகையே
மேயாத மான் புள்ளி மேவாத மான் (மேயா)

சந்தம்
மேவும் கானடைந்து நறுசந்தணமும்
புனுகும் குமமும் களபங்களணிந்த
சுணங்கு படர்ந்து புல் (மேயாத)
கானக்குறவர் கண்மணி எனவளர்
கானக்குயிலை நிகர் குரலுடையது (மேயாத)
தேனும் பாகும் தினைமாவும்
தின்பதலாது மென் புல்லொருபோதும் (மே)

இராகம்: காபி
விருத்தம்
சாயாத சொம்பு ரெண்டிருந்தாலும் அது
தலை நிமிர்ந்து பாயாதமான்
மான் வரக் கண்ட துண்டோ.

குமார்: பாட்டுப் பிரமாதம்! பாகவதர் கிராப்பும் சிலுக்குச் சட்டையும் தான் இல்லாத குறை

சண்: என்ன பிரமாதம்? உதுக்கெல்லாம் ஆர்மோனியம் பிற்பாட்டுக்காரர்களுக்கு எங்கே போவது? சேடிகள் வேறாம்!

(வேலுப்பிள்ளை கோபத்துடன் போய் நாற்காலி ஒன்றில் அமர்கிறான்.)

சண்: அவன் இருக்கட்டும். குமார்! நீ நடித்துக் காட்டு பார்ப்போம்.

குமார்: (முன்னுக்கு வந்து) ஆ (ஏக்கத்துடன் தலையில் கையை வைத்துக் கொள்கிறான்) உம்… (ஏதோ எண்ணியவாறு வெளியே சென்று சிறிது நேரத்தில் திரும்பி வருகிறான்.)

சண்: (உதட்டைப் பிதுக்கிவிட்டு) அவ்வளவு தானா? உனக்கு என்ன தான் நடந்து விட்டது? பேச்சையே காணோம்! ஏதோ சித்தப்பிரமை பிடித்தவன் மாதிரி

குமார்: அப்படியான சமயத்தில் நான் இப்படித் தான் நடந்து கொள்வேன்.

சண்: நல்ல ஆளய்யா நீர்! போயும் போயும் உம்மைப் போய் ஒருத்தி உயிருக்குயிராக நேசித்தாளே. அவளைச் சொல்லும். சரி செல்வம்! நீ வா பார்ப்போம்

செல்: (முன்னுக்கு வந்து கைகள் இரண்டையும் மேலே தூக்கி) ஐயோ என் கண்மணியே! நீ எங்கே போய்விட்டாய்? றோஜா இதழ் போன்ற உன் மேனியை அந்தக் கொடியவன் தொடுவதா? அதை நான் பார்த்துக் கொண்டு வாளாவிருப்பதா? இதோ புறப்படுகிறேன். நீ எங்கிருந்தாலும் அழைத்து வருவேன். அந்தப் புல்லர் கூட்டத்தைப் பூண்டோடு அழிப்பேன். இது சத்தியம் டொக்டொக்….. டொக் டொக்….. டொக் டொக்… இது குதிரையின் குழம்பொலி. ‘என்னை விட்டு ஓடிப்போக முடியுமா?’- இது பின்னணிப் பாடல்…

சண்: சபாஸ் மிகவும் பிரமாதம்! செல்வம் தான் நமது நாடகத்தின் கதாநாயகன். இனி அவனுக்கொரு கதாநாயகி தேவை…

குமார்: அவனுக்கு யார் சேர் பெண் கொடுப்பார்கள்? யாராவது ஒரு பெடியனுக்குத்தான் அந்த வேடம் போடவேண்டும்!

செல்: (ஆத்திரத்துடன்) என்ன சொன்னாய்? பெண் வேடம் போட்ட ஆணுடன் நடிப்பதா? அது என்னால் முடியாது. அதற்கு வேறு யாரையாவது பாருங்கள்.

குமார்: ம்… அவருக்கும் எண்ணம்தான் எங்கள் மன்றத்திலோ ஒரு சிறு பெண்மணிகூடக் கிடையாது. தவிர எந்தவொரு தன் மானமுள்ள பெண்ணும் எங்களோடு நடிக்க வரமாட்டாளே!

சண்: அப்படியானால் தன்மானமில்லாத ஒரு பெண்ணாகப் பார்த்து

குமார்: அதைத்தான் (செல்வத்தைப் பார்த்து) அவனின் தகப்பனார் பார்த்துத் திரிகிறார்.

சண்: கதாநாயகி பற்றி கதாநாயகி கிடைத்ததும் பேசிக் கொள்வோம் நகைச்சுவை நடிகனாக குமாரையே எடுத்துக் கொள்ளலாம் ஏனென்றால் அவனது பேச்சுகளைக் கேட்டு இங்கு சிலர் சிரித்ததாகத் தெரிகிறது

குமார்: (தயங்கியவாறு) எனக்கும் ஜோடி உண்டா

சண்: எங்களிடம் இல்லை. எங்காவது கிடைத்தால் கூட்டிக்கொண்டு வா! அதற்கு நாங்கள் மறுப்பில்லை.

(வேலுப்பிள்ளை ஆத்திரத்துடன் மீசையை முறுக்கியவாறு எழுதல்)

வேலு: என்ன, எல்லாமே உங்கள் பாட்டுக்கு நடக்கிறது? இங்கே நான் ஒருவன் இருப்பதை மறந்துவிட்டீர்களா? (கைகளை மூன்று முறை தட்டி) டேய்! யார் அங்கே…?

குமார்: (வெளியே எட்டிப் பார்த்து) அங்கே யாரும் இல்லையே!

வேலு: என்ன சொன்னாய்? (உரத்துச் சிரித்தல்)

சண்: நீதான் வில்லன்! அதற்கு உன்னை விடப் பொருத்தமானவன் வேறு யார் இருக்க முடியும்?

கமல: கதை வசனகர்த்தா நான் இங்கே இருக்கிறேன். கதை எழுத முன்னர் – கதையை தெரிந்து கொள்வதற்கு முன்னர் நடிகர்களைத் தெரிந்து கொண்டிருக்கிறீர்களே…

சண்: ஓ. மன்னிக்க வேண்டும், ஆனால் கதை எழுதுவதற்கு முன் எங்களுடைய வசதி வாய்ப்புகளையும் கொஞ்சம் மனதில் வைத்துக் கொள்ளும். எங்களுடைய போதாத காலம்… (நண்பர்களை ஒரு முறை பார்த்து விட்டு) இவர்களை வைத்துத்தான் நாடகம் போட வேண்டியிருக்கிறது: இது தலை விதி! அடுத்தது பெண் நடிகைகள் இல்லாத குறை இது தலை வலி! ஒன்று செய்யுங்களேன், பெண் பாத்திரம் எதுவும் இல்லாமலே நாடகத்தை எழுதுங்களேன்…

செல்: (ஆத்திரத்துடன் சண்முகத்தைப் பார்த்தல்)

சண்: இல்லை… இல்லை …. ஒரு பெண் வரலாம்!

-திரை-

காட்சி: 2

(அதே இடம். நாட்காட்டி 8-ம் திகதியைக் காட்டுகிறது. சண்முகம் மேசை முன் நிற்கிறான். அவனருகே செல்வமும் கமலநாதனும் நிற்கிறார்கள்.)

சண்: (கமலநாதனை நோக்கி) நாடகம் ரெடியா? கொண்டு வந்திருக்கிறீர்களா?

கமல: (நாடகப் பிரதியைக் காட்டி) இதோ தயாராக இருக்கிறது. “காதலா கத்தரிக்காயா?” என்பது நாடகத்தின் பெயர், நாடகம் இருக்கட்டும், கதாநாயகி ரெடியா?

சண்: யாரோ ஒருத்தியைக் குமார் அழைத்து வருவதாகச் சொன்னான். எனக்கு என்னவோ அதில் நம்பிக்கை இல்லை. எங்களை நம்பி ஒரு பெண் வருவதாவது?

செல்: இந்த நாடு மிக மிக மோசம் – நாடகக் கலை வளர வேண்டும் – பெண்களும் நடிப்பதற்கு முன்வரவேண்டும் என்று கரடியாகக் கத்தினாலும் அதை யாரும் பொருட் படுத்துவதாகக் காணோம்.

கமல: ஒருவேளை கரடியாகக் கத்துவதால்தான் அவர்கள் வருகிறார்களில்லையோ என்னவோ

சண்: அப்படியானால் குயில் போலக் கத்திப் பார்ப்போமா

(குமார், ஓர் இளம் பெண், ஒரு மீசைக்காரன் ஆகியோர் வருகிறார்கள்.)

சண்: (மகிழ்ச்சியுடன்) கதாநாயகி கிடைத்து விட்டாள். குமாருக்கு எமது நன்றி! குமார்.. யார் இந்தத் தன்மானமில்… இல்லை இல்லை…. வந்து… வந்து.. அதுதான் யார் இவ? எங்கே கண்டு பிடித்தாய்?

குமார் : இவதான் மிஸ் மாலினி, அடுத்த ஊர் தான். நாடகம் சினிமா என்றால் ஒரே பைத்தியம். அவவின் இலட்சியமே எதிர்காலத்தில் தான் ஒரு சினிமா நடிகையாக வரவேண்டும் என்பதுதான்.

சண்: நல்லதம்மா உனக்கு எங்கள் ஆழ்ந்த அனு…இல்லை… நல்லாசிகள். (மெதுவாக) அடிக்கடி செத்த வீடுகளுக்கு தந்திகள் அடிக்கிறது…அந்தப் பழக்கம்

மாலி: (கோபத்துடன்) யாரைப் பார்த்து அம்மா என்றார்கள்? தான் பதினாறு வயதுப் பருவப் பெண், ஞாபகமிருக்கட்டும்!

சண்: மன்னிக்க வேண்டும் குமாரி மாலினி அவர்களே! போன வருடத்துக்கு முந்திய வருடம் நீங்கள் உங்கள் பதினாறாவது பிறந்த தினத்தை எங்கே கொண்டாடினீர்கள்?

மாலி: இதற்கெல்லாம் போய் ஏன் பொய் சொல்ல வேண்டும்? கொழும்பிலே தான்!

சண் : அப்படியா? சபாஸ்! நீங்கள் சினிமா நடிகை யாவதற்கு மிகமிகப் பொருத்தமானவர்தான். குமார்… யார் அந்தப் புதிய ஆள்?

குமார்: அவன் தான் மாலினியின் அண்ணன் மாணிக்கம். தங்கையின் பாதுகாப்புக்காக வந்திருப்பவன். மாலினி மீது இங்கு யாராவது வரம்பு மீறிப் பழக முயன்றால் … அவர்களை அவன் கவனித்துக் கொள்வான்.

செல்: (பயந்து) அப்படியானால் அவனே வில்லனாக நடிக்கலாமே!

மாணி: போங்காணும். எனக்கு உந்த நடிப்பு காட்போட் கத்திச் சண்டை – உதெல்லாம் பிடிக்காது. நான் உண்மையாகவே உம்மைப் போன்ற நாலு பேருக்குத் தனிய நின்று பதில் சொல்லக் கூடியவன்.

செல்: (மேலும் பாயந்து) அப்படியானால் இரண்டு வில்லன்களுக்கு மத்தியிலே நான் நடிக்க வேண்டும் போலிருக்கிறது. சரி! சரி! நேரமாகிறது. மாலினிக்கு நடிப்பு ரெஸ்ட் வைக்கவேண்டும்…….

குமார்: பிளீஸ்…. கெடுத்துப் போடாதையும், வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைத்த கதையாகி விடக்கூடாது. அப்படியா? அப்படியானால் கமலநாதன்! நீர் நாடகக் கதையைச் சொல்லும் பார்க்கலாம். நாடகத்தில் பெண் பாத்திரம் ஒன்றுதானே வருகிறது?

கமல: இல்லை. எவ்வளவு முயன்றும் இரண்டு பாத்திரங்களுக்குக் குறைவாக அமைக்க முடியாமல் போய்விட்டது.

சண்: இதென்ன பேரிடி!

கமல்: ஆனாலும் ஒரு பெண்ணைக் கொண்டே அதைச் சமாளிக்கலாம். கதாநாயகியும் வில்லனுடைய மனைவியும் ஒரே சமயத்தில் மேடையில் தோன்றும் சந்தர்ப்பங்கள் கிடையாத படியால், அந்த இரண்டு வேடங்களையும் நமது மாலினியே ஏற்று நடிக்கலாம்.

செல்: (ஆத்திரத்துடன் கமலதாதனை நெருங்கி) என்ன வார்த்தை சொன்னீர்? மாலினி என்னைத் தவிர வேறு யாருடனும் நடிக்கக் கூடாது. இதை எக்காரணம் கொண்டும் நான் அனுமதிக்க முடியாது. ஆமாம்!

சண்: இதென்னடா பெரிய தொல்லையாப் போச்சு. (கமலநாதனை நோக்கி) இதற்கு வேறொரு யோசனை சொல்லும். நமக்கு செல்வமும் வேண்டும். அவனைப் பகைத்து ஒன்றும் செய்ய முடியாது.

கமல்: நான் மட்டும் என்ன குறைந்தவனா? மூலக்கதையில் எந்த மாற்றமும் செய்வதற்கு நான் ஒருப்படேன். போனால் போகிறது வில்லனுடைய மனைவிதானே! ஒரு பெடியனுக்கே அந்த வேடத்தை கொடுக்கலாம்.

சண்: அப்பாடா! இனி நாடகத்தின் முதலாவது காட்சியை விளக்கும். தயவு செய்து மற்றவர்கள் எல்லாரும் அதைக் கவனியுங்கள்.

கமல் : (செருமிவிட்டு) சுதாநாயகன் பணக்காரப் பையன். கதாநாயகி கல்வாரி மாணவி; ஏழைப் பெண்

மாலி: (செல்லக் கோபத்துடன்) ம்… நான் ஏழையாக என்றால் நடிக்கமாட்டேன்.

கமல: அவள் ஏழையென்றாலும் காட்சிக்குக் காட்சி புதுப்புது உடைகளுடனும் அலங்காரங்களுடனும் வருவாள். ஒரு நாள், அவள் கல்லூரி விட்டு புத்தகங்களும் கையுமாக இல்லை மணியனின் நாவல்களும் கையுமாக தெருவில் தனியாக வந்து கொண்டிருக்கிறாள் அப்பொழுது விளக்குக் கம்பம் ஒன்றின் மறைவிலிருந்து அவளை எதிர்பார்த்திருந்த வில்லன் தனது முரட்டுக் கரத்தால் அவள் கையைப் பிடித்துத் ‘தர தர’ வென்று தெரு வோரத்துக்கு இழுத்துச் செல்கிறான்……

மாணி: ஓய்… நிறுத்தும்! எந்தத் தடியனது கையும் அவள் மீது படக்கூடாது, தெரிகிறதா? ஜாக்கிரதை!

கமல்: ஆம், அப்படியே ஆகட்டும். அந்த வில்லன் முதலில் தனது கைக்குட்டையை அவள் கைமீது போடுகிறான். அதன் பின்னர்தான் அவளைப் பிடித்து இழுக்கிறான். கதாநாயகி அழுகிறாள்……திமிறுகிருள்….. விழுந்து புரளுகிறாள்…….

குமார்: ஒரு சந்தேகம் மிஸ்டர் கமலநாதன்! வில்லனுக்குத்தான் மனைவி ஒருத்தி இருப்பதாக ஏற்கனவேயே சொன்னீர்கள். அப்படியிருக்கும் போது அவன் எதற்காக அநாவசியமாக கதாநாயகியோடு சேட்டைக்குப் போக வேண்டும்?

கமல்: அப்படிப் போனால் தான் கதாநாயகனும் இதில் தலையிடுவான். இருவரும் மோதிக் கொள்ள முடியும். கதையைத் தொடர்ந்து கேளும். எங்கே விட்டனான். ஆம் விழுந்து புரளுகிறாள். அப்பொழுது திடீரென்று அங்கு ஒரு கார் வருகிறது……

சண்: ஸ்ரொப், காரை நிறுத்தும் ஐயா! மேடையில் அதை எப்படிக் கொண்டு வருவதாம்? நான் முன்பே சொன்னேன் அல்லவா? கதை அமைக்கும் போது எங்களுடைய வசதி வாய்ப்புகளையும் மனதில் வைக்கும்படி!

கமல்: எதற்குச் சொன்னேன் என்றால், கதாநாயகன் பணக்காரன் ஆயிற்றே! அதற்காகத் தான்! வேண்டுமானால் சயிக்கிளே வரட்டும்.

சண்:அதுதான் நல்லது. பணக்காரன் என்பதைக் காட்டத்தான் வேண்டும் என்றால் டெரிலின் சேட், சீக்கோ கைக்கடிகாரம், ட்ரான்சிஸ்டர் ரேடியோ….

கமல்: சயிக்கிளில் இருந்து நமது கதாநாயகன் பாய்ந்து இறங்குகிறான். கதாநாயகியை வில் லனிடமிருந்து விடுவிக்கிறான். இரண்டு பேர்களுக்கு இடையேயும் பலத்த சண்டை நடைபெறுகிறது. ‘கும் கும்’ என்ற சத்தத்துடன் மோதிக் கொள்கிறார்கள். கட்டிப் புரளுகிறார்கள் ஆனால் பாவம், கடுமையான அடிகளும் இரத்தக் காயங்களும் வில்லனுக்குத் தான். கடைசியாக அவன் தப்பினால் போதும் என்று பார்த்துப் பார்த்து ஓடுகிறான். கதாநாயகி கதாநாயகனை வியப்போடும் நன்றியுடனும் பார்க்கிறாள். அவனும் அவளைக் கனிவோடும் அர்த்தத்தோடும் நோக்குகிறான், பின்னர் இருவரும் ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். முடிவில் கதாநாயகன் தனது சயிக்கிளிலேயே அவளை அவளது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான், திரை.

-திரை-

காட்சி: 3

(அதே இடம். நாட்காட்டி 15-ம் திகதியை காட்டுகிறது. சண்முகம், கமலநாதன், மாணிக்கம், செல்வம், குமார், மாலினி ஆகியோர் நிற்கிறார்கள். திரை விலகும் போது, நாடக ஒத்திகை அதற்கு முன்னரும் நடந்திருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் தோன்ற வேண்டும்.)

சண்: பரவாயில்லை, இது முதலாவது ஒத்திகை தானே? அது அப்படித்தான் இருக்கும். இனி இரண்டாவது காட்சியை ஒத்திகை பார்ப்போம். அது ஒரு நந்தவனக் காட்சி…

கமல: கதாநாயகி காதலனை எதிர்பார்த்துக் காத்திருத்தல். வெகு நேரத்தின் பின் கதாநாயகன் அவளுக்குப் பின்னால் பதுங்கிப் பதுங்கி வந்து அவளது கண்களைக் பொத்துகிறான்…..

மாணி: வாயைப் பொத்தும்! அது தான் முடியாது. அவளை யாரும் தொட்டு நடிக்கக் கூடாது. மறத்து விட்டீரா?

கமல: உத்தரவு. அதை விட்டு விட்டு செல்வமும் மாலினியும் நந்தவனக் காட்சியில் மேற் கொண்டு நடிக்க வேண்டியதை நடித்துக் காட்டுங்கள் பார்க்கலாம்.

சண்: இரண்டு பேரும் முன்னுக்கு வாருங்கள்.ஊம்……..

(செல்வம் ‘அன்பே’ என அழைத்தவாறு மாலினியை நெருகிப் போதல்.)

மாணி: போதும்! அதற்குமேல் ஓர் அடிகூட முன்னுக்கு எடுத்து வைக்கக்கூடாது.

செல்: (மெதுவாக) இதென்னடா பெரிய தொல்லை. இவன் ஒரு பக்கம்! (மாணிக்கத்தை நோக்கி)அன்பே …….

குமார்: உனது அன்புக்குரியவள் இங்கே நிற்கிறா.(மாலினியைக் காட்டுதல்)

செல்: (மாலினியை நோக்கி) அன்பே…

மாலி : (எங்கோ பார்த்தவாறு) ம்…….

செல்: என் முகத்தைத்தான் பாரேன்.

மாலி: (எரிச்சலுடன்) உங்கள் முகத்தையா? அதை எவ்வளவு நேரம்தான் பார்த்துக் கொண்டிருக்க முடியும்?

சண்: ஸ்ரொப்… ஸ்ரொப்… நாடகப் பிரதியில் அப்படியில்லையே!

கமல: அதுதானே! நான் அப்படி எழுதவில்லையே! வசனங்களை நீங்கள் நினைத்தபடி மாற்றுவதற்கு நான் அனுமதிக்க முடியாது.

மாலி: அது ஆத்திர மிகுதியினால் நானாகப் பேசிக்கொண்டது.

சண்: அப்படியெல்லாம் பேசக்கூடாது மாலினி! நீங்கள் காதலர்கள் என்பது நினைவிருக்கட்டும்.

மாணி: (கோபத்துடன் துள்ளி) என்ன சொன்னீர்? யாரைப் பார்த்து அந்த வார்த்தை சொன்னீர்?

சண்:மன்னிக்க வேண்டும் மாணிக்கம்! நான் அந்த வார்த்தையை இதோ திரும்பப் பெறுகிறேன். (மாலினியை நோக்கி) நீங்கள் காதலர்கள் அல்ல என்பது நினைவிருக்கட்டும், மாணிக்கம்! இப்ப சரிதானே?

மாலி: டைரக்டர் சேர்! அப்படியானால் நான் நானாகச் சொன்ன அந்த வசனமும் பொருத்தம்தானே?

சண்: குமாரி மாவினி! பிளீஸ் … தயவு செய்து பிடிவாதத்தை விட்டு விட்டு எங்களோடு ஒத்துழைக்குமாறு மிக்க பணிவன்புடன் வேண்டுகிறோம்.

மாலி (செல்வத்தைப் பார்த்து) உங்களுக்குத் தான் எவ்வளவு தைரியம்! நேற்று என்ன மாதிரி அந்த முரடனை அடித்து விரட்டினீர்கள். நீங்கள் மட்டும் தக்க சமயத்தில் வந்திராவிட்டால் என் கதி என்னவாகி இருக் கும்? இதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

செல்: ஓ… அதுவா? அது பெரிய கதை…

சண்: ஏன் நிறுத்திவிட்டாய் செல்வம்?

செல்: ‘அவளின் கூந்தலைக் கோதியவாறு அவளை அன்புகனிய நோக்கி’- என்று பிரதியில் இருக்கிறது ஆனால் (மாணிக்கத்தைப் பார்த்து) இவரை நினைத்தால் எனக்கு ‘அக்சிடன் வோட்’ ஞாபகம் வருகிறது. மாணிக்கம் சேர்! மாலினியைத் தொட்டு நடிக்கக்கூடாது, அப்படித்தானே?

மாணி: அதை எத்தனை தடவைகள் உனக்குச் சொல்வது?

செல்: அவளின் பின்னலைக்கூட….

மாணி: அது அவளுடையதல்ல! வேண்டுமானால் அதை நீ தொடலாம். ஆனால் பின்னலைக் கோதுவதாகச் சொல்லிக்கொண்டு… பிறகு என்ன நடக்குமென்று தெரியும் தானே?

மாலி: அண்ணா! அப்படி அவர் ஏதாவது வாலாட்டினால், அவரை நானே ஒரு கை பார்த்து விடமாட்டேனா?

செல்: (மாலினியின் கூந்தலைப் பற்றியவாறு) உமக்குக் கதை என்றால் மிகவும் பிடிக்குமாமே!

மாலி: மெதுவாக…

செல்: இது அப்படி ஒன்றும் ‘நியூவேவ்’ கதையல்ல, மெதுவாக – இரகசியமாகச் சொல்லுவதற்கு! வீரக்கதை, உரத்தே சொல்லுகிறேன்.

மாலி: மெதுவாக….

செல் : என்ன …?

மாலி: பின்னலை மெதுவாகப் பிடியுங்கள் என்று சொல்லுகிறேன.

செல்: ஓ ஐயரம் சொறி, மறந்துவிட்டேன். (பின்னலையே பார்த்தவாறு) இது… மேட் இன்..

மாலி: (எரிச்சலுடன்) சலான்!

சண், கமல : (ஒரே குரலில்) நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்! நீங்கள் இருவருமே நாடக எழுத்துப் பிரதியை மீறிச் செல்கிறீர்கள்!

குமார்: ஆனாலும் சுவையாக இருக்கிறது.

சண்: நகைச்சுவைக்குத்தான் நீ இருக்கிறாயே! உனக்குப் போட்டியாக இவர்கள் வேறு “கொமெடி” விடவேண்டுமா?

குமார்: (கமலநாதனைப் பார்த்து) ஒன்று செய்யுங்களேன். அந்த உரையாடலை அப்படியே எடுத்து, எனக்குச் சேர்த்து விடுங்களேன்: நன்றாக இருக்கும்.

கமல்: (மிகவும் உரத்து) நாடகப் பிரதியில் இனி யாரும் எந்தவித திருத்தமோ மாற்றமோ செய்வதற்கு நான் ஒருப்படேன். அப்படிச் செய்வதாக இருத்தால் அதை எனது பிணத்தின்மேல் நின்று செய்யுங்கள்.

காட்சி: 4

(அதே இடம். நாட்காட்டி 29-ம் திகதியைக் காட்டுகிறது. சண்முகம், வேலுப்பிள்ளை கமல நாதன், மாவினி, மாணிக்கம், குமார், செல்வம் ஆகியோர் நிற்கிறார்கள். திரை விலகும் போது நாடக ஒத்திகை அதற்கு முன்னரும் நடந்திருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் தோன்ற வேண்டும்.)

சண்: சீச்சீ… – கொஞ்சம்கூட முன்னேற்றமில்லை. அடுத்த வாரத்தில் நாடகத்தை மேடை யேற்றப் போகிறோம். இதை மனதில் வைத் துக்கொன்டு நீங்கள் எல்லாரும் இனியாவது கடுமையாக உழைக்க வேண்டாமா?

வேலு: ஆமாம், சீக்கிரமாகப் பழகி சீக்கிரமாக நாடகத்தை மேடையேற்றும் வழியைப் பாருங்கள். என்னால் இனியும் உங்களோடு மினைக்கெட நேரமில்லை. நான் பரீட்சைக்குப் படிக்கவேண்டும். பெற்றோர் என்னை டொக்டருக்குப் படிக்கவைக்கப் போகிறார்கள்

குமார்: நீயும் உன் படிப்பும் தான்! கவலையை விடு வேலுப்பிள்ளை, உன்னை விரைவிலேயே டொக்டராக்கி வைக்கிறேம்….எங்கள் அடுத்த நாடகத்தில் உனக்கு அந்த வேடம் தான்

வேலு: குமார்! கேலியா செய்கிறாய்? உங்களுக்குத் தான் வேறு வேலை வெட்டி இல்லாமல் கூத்தும் கும்மாளமுமாகத் திரிகிறீர்கள் என்றால், என்னையும் அப்படியா நினைத்தீர்கள்?

சண்: வேலுப்பிள்ளை… பேசுவதைக் கொஞ்சம் அளந்து பேசு, எங்களை எதுவும் சொல், பொறுத்துக் கொள்கிறோம் ஆனால் நாடகக் கலையை இழித்தோ பழித்தோ பேசினாயோ எனக்குக் கெட்ட கோபம் வந்து விடும். பிறகு என்ன செய்துவிடுவேன் என்பது எனக்கே தெரியாது. நாடகக்கலை தெய்வீசுக் கலை வேலுப்பிள்ளை …… தெய்விகக் கலை.

கமல: (எல்லாரையும் ஒருமுறை பார்த்துவிட்டு) சண்முகம் சொன்னதைக் கேட்டீர்களா? என்னுடைய கருத்தும் அதுதான். எமது நாடகம் மேடையேறியதும் உங்கள் ஒவ்வொருவரது புகழும் கொடிகட்டிப் பறக்கப் போகிறது.

மாலி: அதனால் எங்களில் சிலருக்கு சினிமாவில் நடிக்கின்ற ‘சான்ஸ்’கூடக் கிடைக்கலாம் அல்லவா?

சண்: அந்த வாய்ப்பு வேறு யாருக்குக் கிடைக்கா விட்டாலும் உனக்கு நிச்சயம் கிடைக்கத் தான் போகிறது மாலினி! நீ ஒரு பிறவி நடிகை. ஆனானப்பட்ட அங்கமுத்து கூட நடிப்பில் உன்னிடம் பிச்சை வாங்கவேண்டும்.

மாலி: நன்றி! நீங்கள் என்னை மிகவும் உயர்த்திப் பேசுகிறீர்கள்.(நாணத்துடன்) எனக்கு வெட்கமாய் இருக்கிறது சேர்…….

சண்: ஆபத்து….. ஆபத்து……. அது நடிகைகளுக்கு இருக்கக் கூடாது மாலினி!

கமல: (பொறுமையிழந்து) மேற்கொண்டு ஒத்திகையை நடந்துவதா அல்லது இன்னொரு நாளுக்கு ஒத்தி வைப்பதா?

சண்: நல்ல சமயத்தில் நினைவு படுத்தினீர். மாலினியின் ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றி எண்ணினால் எமக்கு இந்த உலகமே மறந்துவிடுகிறது. சரி, கமலநாதன்! அடுத்தது என்ன?

கமல : மாலினியைக் கடத்துவது…

மாணி: (துள்ளி எழுந்து) என்னது?

கமல: கதாநாயகி தனியாக வீட்டிலே இருக்கிறாள். அப்போது வில்லன் அவள் வீட்டை நோக்கி வருகிறான், கதாநாயகன் தனது காதலியோடு உல்லாசமாகப் பொழுது போக்கும்போது அடிக்கடி பாடும் ஒரு பாடலை அதே குரலில் பாடுகிறான்…..

குமார்: ஒரு சந்தேகம் மிஸ்டர் கமலநாதன்! அதெப்படி கதாதாயகன் பாடுகின்ற பாடல் வில்வனுக்குத் தெரியவந்தது?

கமல: அதுவா? வந்து வந்து – வில்லனாக நடிப்பவருக்கும் நாடகத்தின் கதை வசனம் பாடல்கள் யாவும் தெரியும் தானே!

குமார்: சரி, அதுதான் போகட்டும். உலகத்திலேயே ஒருவரைப்போல் இன்னொருவரைக் காண்பது அரிது. ஒருவர் குரலைப்போல் இன்னொருவருக்கு அமைவது என்பதும் அப்படித்தான். இப்படி இருக்கும் போது எங்கள் நாடகக் குழுவிலேயே கதாதாயகனுக்கும் வில்லனுக்கும் குரல் ஒன்றுமை என்றால் அது எப்படி?

கமல: என்ன? இது கூடவா தெரியாது? அந்த இருவருக்காகவும் ஒருவரே பின்னணியில் பாடப் போகிறார். இன்னும் சொல்லப் போனால் ஒரே ஒலிப்பதிவைத்தான் திரும்பத் திரும்பப் போடப் போகிறோம்…..இந்தக் கேள்வியை பெரும் பெரும் படத்தயாரிப்பாளர்களிடம் கேட்க உனக்குத் துணிவு வரவில்லை! என்னைக் கேட்கிறாயா? இரு..இரு…உன்னை ஒரு நாளைக்கு கவனித்துக் கொள்கிறேன்.

சண்: (கோபத்துடன்) குமார்! கூத்துக்கை கோமாளி விடாதை -(கமலநாதனைப் பார்த்து) நீங்கள் மேற்கொண்டு சொல்லுங்கள்

கமல: பாட்டைக் கேட்டதும் கதாநாயகிக்குக் காதலனின் நினைவு வருகிறது. இன்ப நினைவில் மிதக்கிறான். பாடல் நின்றதும் கதவு தட்டப்படுகிறது. காதலன் என நினைத்துக் கொண்டு ஓடிச் சென்று கதவைத் திறந்தவளை வில்லன் கடத்திச் செல்கிறான்.

சண்: கமான் மாலினி! எங்கே அதை நடி பார்க்கலாம்.

(மாலினி முன்னே வந்து நாற்காலியில் அமர்ந்து ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கிறாள். சண்முகம் ஒலிப்பதிவுக் கருவியை இயக்கிவிடுதல் அல்லது இயக்குவது போல் பாவனை செய்தல். ஆண் குரலில் தாரு சினிமாப் பாடல் முழுவதுமாகவோ பகுதியாகவோ ஒலிபரப்பாக வேண்டும், பாடல் நின்றதும் கதவு தட்டப்படுவது போன்ற ஓசையை ஒருவர் எழுப்பவேண்டும் இத்தனைக்கும் மாலினி எந்தவித சலனமும் இன்றி புத்தகத்திலேயே மூழ்கி இருக்கிறாள்.)

சண்: (உரத்து) மாலினி! உனக்கு என்ன நடந்தது? ஏன் அசையாது ‘பிடித்து வைத்த பிள்ளையா’ர் போல் அப்படியே அமர்ந்திருக்கிறாய்?

கமல: அ….. அது தானே …..?

மாலி: அதுவா? பாடியதும் கதவைத் தட்டியதும் வில்லன் தான் என்பது எனக்குத்தான் நன்றாகத் தெரியுமே! அதனால்தான் எதற்கு வீணாகக் கதவைத் திறந்து ஆபத்தை விலைக்கு வாங்கவேண்டும் என்றுதான்…

குமார்: அதாவது ‘இடைவேளை’ வரமுன்னரே அவ நாடகத்தை முடிக்கப் பார்க்கிறா..

கமல: (தலையில் கைவைத்து) நான் என்னடா வென்றால் நாடகத்தை இரப்பர் மாதிரி இழுத்து இழுத்து நீட்டி வளர்த்திருக்கிறேன் (மாலினியைப் பார்த்து ) நீ என்னடாவென் நால் அதைப் பாதியாகக் குறைக்கப் பார்க்கிறாய்…

சண்: மாலினி! தயவு செய்து பிடிவாதத்தை விட்டு விடு நீதான் எதிர்காலத்தில் பெரிய நடிகையாக வரப்போகிறவளாச்சே!

குமார்: (மெதுவாக) பார்க்கப் போனால் அவ அதற்குத்தான் இப்பொழுது ஒத்திகை பார்க்கிறா போலருக்கிறது…

சண்: ம். புறசீட் மாலினி….

மாலி; (நெளிந்து) எனக்குப் பயம்மா இருக்கிறது:

செல்: உம்மை ஆபத்திலிருந்து காப்பாற்றத்தான் நான் இருக்கிறேனே…என்ன பயம்?

மாலி : (கேலியாக) ஐயே… காப்பாற்றுகிற ஆளைப் பாருங்கள் ஆளை.

வேலு: மாலினி! என்னால் உங்களுக்கு எந்தவித ஆபத்தும் வராது. (செல்வத்திடம்) அவளைக் காப்பாற்றுகிற பொறுப்பு உமக்கும் வராது!

குமார்: அதுதானே! (செல்வத்திடம்) ஆபத்திலிருந்து காப்பாற்ற நீ என்ன டொக்டரா? (வேலுப்பிள்ளையிடம்) டொக்டராக வரப்போவது நீங்கள் தான்!

வேலு: எனக்கு இனி ஒத்திகை இல்லைதானே? நான் வருகிறேன்

மாலி: வண் மினிற் மிஸ்டர் வேலுப்பிள்ளை (கடிதம் ஒன்றைக் கொடுத்து) தயவு செய்து இதைப் போஸ்ட் பண்ணிவிடும்.

(வேலுப்பிள்ளை வெளியேறுகிறான்)

மாணி: ஏன் மாலினி – கடிதத்தை நாங்கள் போகும் போது போடலாம் தானே?

குமார்: கடிதத்தின் வலது பக்க மேல் முனையில் முத்திரை ஓட்டப்பட்டிருக்கிறதா? விலாசம் சரியாகவும் தெளிவாகவும் எழுதப்பட்டிருக்கிறதா?

மாலி: (கோபத்துடன்) ஐசேசட் அப்… எனது கடமை எனக்குத் தெரியாதா? உமது உதவியின்றி என்னால் எதுவும் செய்ய முடியாது என்ற நினைப்பா?

சண்: மாலினி! இன்றைக்கு உனக்கு ‘மூட்’ சரியில்லைப் போலிருக்கிறது. போய் அடுத்த ஒத்திகையின் போது வா….

கமல: அப்படியல்ல, உனக்கு எப்பொழுது நல்ல ‘மூட்’ வருகிறதோ, அப்பொழுதே அடுத்த ஒத்திகையை வைத்துக் கொள்வோம்.

சண்: ஓம்…அதுதான் சரியான ஐடியா. மாலினி! நீ மிகவும் களைத்து விட்டாய். நெல்லிக் கிறஸ் கலந்து தரலாம். குடித்து விட்டுப் போகிறயா?

மாணி: நெல்லி இரசம் என்றால் அவளுக்குக் கொள்ளை ஆசை…

குமார்: யாருக்குத்தான் அதில் ஆசையில்லை…

– திரை –

காட்சி: 5

(தெரு – சண்முகமும் செல்வமும் சந்திக்கிறார்கள்.)

சண்: என்ன மச்சான் வாட்டமாக இருக்கிறாய்? நாளை நமது நாடகம் மேடையேறப் போகிறது என்ற மகிழ்ச்சியையே உன் முகத்தில் காணவில்வையே! ஓகோ… இவ்வளவு பெருந் தொகைப் பணத்தைக் கொண்டுபோய் இதில் முடக்கியிருக்கிறோமே! அதையெல்லாம் திருப்பி எடுக்கலாமா என்று யோசிக் கிறாயா? சொல்லப்போனால் நாடகத்தில் சம்பந்தப்பட்ட எல்லாரும் எவ்வளவோ சிரமப்பட்டுத் தங்களால் முடியக்கூடிய பணத்தைப் புரட்டித் தந்திருக்கிறார்கள்… கவலைப்படாதே செல்வம், எல்லாவற்றையும் நாளைக்குத் திருப்பி எடுத்து விடலாம்….

செல்: என்னுடைய கவலையெல்லாம் மாலினியைப் பற்றித்தான் ஓகோ…

சண்: எல்லாரும் நாடகத்துக்காகப் பணம் போட்டிருக்கும் போது அவள் மட்டும் ஒரு சதமும் தராததைச் சொல்கிறாயா? அதுவுமல்லாமல் பிடிவாதம் வேறு செய்கிறாள் என்கிறாயா? என்ன செய்வது, பெண் நடிகையாச்சே! அப்படித்தான் விட்டுப் பிடிக்க வேண்டியிருக்கிறது.

செல் : நான் சொல்ல வந்தது என்னவென்றால்…

சண்: அப்படிப்பட்ட மாலினிக்கு இலாபத்தில் பங்கு கொடுக்கக்கூடாது என்பதுதானே? நிச்சயமாக நாளைக்கு நாடகத்தின் மூலமாக எமக்குக் கிடைக்கப் போகும் இவாபத்தில் பங்கு கேட்கும் உரிமை, பணம் போட்டவர்களுக்கு மட்டுமே உண்டு

செல்: என்னைப் பேசவே விடமாட்டீர்கள் போலிருக்கிறது! நான் சொல்ல வந்தது இது தான் – நான் மாலினியோடு எவ்வளவு தான் அன்பாகப் பழகினாலும் அவள் என்னைக் கொஞ்சங்கூடப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. அவளுக்கு என்னைக் கண்டாலே வெறுப்புத்தான். எவ்வளவு தூரம் அவள் என்னைத் தூக்கி எறிந்து பார்க்கிறாள் – பேசுகிறாள் பார்த்தீர்களா?

சண்: அப்படியானால் உனக்கு உண்மையாகவும் அவள் மீது அது அதுதான் அதுவா?

செல்: (நாணத்துடன்) ஆமாம்!

சண்: செல்வம் காதலுக்குக் கண்ணில்லை என்பதெல்லாம் அந்தக் காலம். இந்தக் காலத்துப் பெட்டையள் அப்படியல்ல: மிகவும் புத்திசாலிகள். ஒருவனைக் காதலிக்குமுன் அவன் பசை உள்ளவனா? தன்னைக் கடைசி வரை காப்பாற்றக் கூடிய வருவாய் உள்ளவனா? என்பதை எல்லாம் அறிந்து கொள்வாள் இதற்குப் பின்னர் தான் காதல் கத்தரிக்காய் எல்லாம்!

செல்: அதாவது வேலை வெட்டி இல்லாத என்னைப் போய் ஒருத்தி காதலிக்க மாட்டாள் என்கிறிரா?

சண்: அப்படி யார் சொன்னது? உனக்கு அடுத்த மாதமே வேலை கிடைத்து விடப் போகிறது. நாளைக்கு எமது நாடகத்துக்குத் தலைமை தாங்கப்போகும் பெரியார் பெரியசாமி இருக்கிறாரே. அவர் ஒரு பெரிய புள்ள! மந்திரிமார்களைப் பின் கதவால் சென்று காரியம் சாதிப்பதில் ஆள் ஒரு விண்ணன். நாடகம் முடிந்ததும் உன்னை அவருக்கு அறி முகம் செய்து வைக்கிறேன். வேலை கிடைத்ததும்.. மாலினி உன் காலுக்குள்ளேயே நிற்கப் போகிறாள், இருந்து தான் பாரேன்!

செல்: கடல் வற்றிக் கருவாடு சாப்பிடலாம் என்று குடல் வற்றிச் செத்ததாம் கொக்கு!

சண்: அதுபோக, நாளைக் காலை கடைசியாகவும் முடிவாகவும் நாடக ஒத்திகை செய்து பார்க்க வேணும் மறந்துவிடாமல் மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு மன்றத்துக்கு வந்துவிடு

(மேடையில் சில வினாடிகள் இருள் சூழுவது. ஒளி வந்ததும் அங்கு சண்முகமும் கமலநாதனும் சந்திக்கிறார்கள்.)

சண்: ஓய்… எங்கிருந்து வாறீர்?

கமல்: எல்லாம் எங்கடை அலுவலாகத்தான். நாடகத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் தயார். புகைப்படக்காரர் பத்திரிகைக்காரர்கள் எல்லாரும் வருவார்கள்.

சண்: பத்திரிகைகளில் நாடகத்தைப் பற்றி விமர்சனங்களும் வருமாக்கம். சில வேளை நாடகத்தில் ஏதாவது பிழை கண்டுபிடித்து அவர்கள் எழுதிவிட்டால், அதனால் எங்களுக்குப் பெரிய அவமானமாகப் போய் விடுமே..

கமல்: அப்படியெல்லாம் எழுதி நமது வில்லன் வேலுப்பிள்ளையிடமும், மாலினியின் அண்ணன் மாணிக்கத்திடமும் வேண்டிக் கட்ட எந்தப் பத்திரிகைக்காரன் ஐயா விரும்புவான்?

சண்: அப்படியானால் நாடகம் முழு வெற்றிதான் என்கிறீர்! நாளைக்குக் கடைசி ரியேர்சல், நீரும் வந்திடவேணும்….

(மேடையில் சில வினாடிகள் இருள் சூழுவது. ஒளி வந்ததும் அங்கு வேலுப்பிள்ளையும் மாலினியும் நிற்கிறார்கள்.)

வேலு: நீங்கள் என்னைத் தனியாகச் சந்திக்க விரும்புவதாக அறிவித்தீர்களே. எதற்காக என்று அறியலாமா..?

மாலி: நம்மைப் பற்றிச் சிந்திக்க…….

வேலு: என்ன சொல்லுகிறீர்கள்… எனக்கு ஒன்றும் புரியவில்லையே!

மாலி: என்னைப் போன்ற ஒரு பெண் உங்கனைப் போன்ற ஒரு வாலிபனைச் சந்திக்க விரும்புகிறாள் – அதுவும் தனியாக என்றால் — இது தெரியாதா? என்ன நீங்கள் இன்னும் குழந்தையா?

வேலு: இது எந்த நாடக டயலாக்? நீங்கள் வேறு நாடகமும் பழகி வருகிறீர்களா?

மாலி: இது நம் வாழ்க்கை என்ற நாடகத்தின் முதல் காட்சி நான் உங்களை மனப்பூர்வமாக விரும்புகிறேன். அடைந்தால் உங்களையே அடைவேன். இல்லா விட்டால் மூன்று முழக் கயிறு அல்லது பொலிடோல்… அல்லது என்ரெக்ஸ்… அல்லது இவை மூன்றும்…

வேலு: என்னைத் திருமணம் செய்வதைப் பார்க்கிலும் நீங்கள் அந்த மூன்றையும் செய்வது தான் மாலினி நல்லது…நீங்களோ கதாநாயகி, நானோ வில்லன்! வில்லனைப்போய் ஒரு கதாநாயகி…வேண்டாம் மாலினி…

மாலி: அது நாடகத்தில்! நாடகத்தில் நல்லவனாக நடிப்பவன் வாழ்க்கையில் கெட்டவனாக இருப்பதும், நாடகத்தில் வில்லனாக நடிப்பவன் வாழ்கையில் நல்லவனாக இருப்பதும் புதுமையல்ல வேலு…

வேலு: அப்படியானால் உங்கள் முடிவுதான் என்ன?

மாலி: அதுதான் சொல்லி விட்டேனே… நீங்கள்என் இதய ராஜா…(நாணத்தால் தலைகுனிதல்.)

வேலு: நீ என் இதய ரோஜா…எட்டாக் கனியாக இருக்குமோ என்று தான் முதலில் தயங்கினேன்….

மாலி: இனியென்ன? நாம் ஜோடியாக ஆடிப்பாடி மகிழ வேண்டியது தானே!

வேலு: அதற்கு அடுத்த தெரு தான் பொருத்தமான இடம். அங்கு நல்ல மழை வேறு பெய்கிறதாம். போவோமா?

மாலி: அதுதான் சரியான ஐடியா. (மேடை யைக் காட்டி) இந்த இடமும் அதற்கப் போதாது…..

(இருவரும் மகிழ்ச்சியோடு ஓடுகிறார்கள்.)

– திரை –

(திரைக்குப் பின்னால்: திரை விழுந்ததும் காதலர்கள் பாடுவது போன்ற ஒரு சினிமாப் பாடலை ஒலிபரப்பலாம். இதற்கு, மழையில் நனைந்தவாறே பாடியது போன்ற திரைப் படப் பாடல் மிகவும் பொருத்தமாக இருக்கும்.)

காட்சி:6

(மீண்டும் ‘அப்பலோ நாடக மன்றம்’ என எழுதப்பெற்ற அறை. நாட்காட்டி 6ம் திகதியைக் காட்டுகிறது. சண்முகம், கமல நாதன், குமார், மாலினி, செல்வம் ஆகியோர் நிற்கிறார்கள்.)

சண்: சரி, நாடகத்தை முதலில் இருந்து ஆரம்பியுங்கள் பார்க்கலாம்! இதுதான் கடைசி ஒத்திகை…கவனமிருக்கட்டும்!

கமல: அதுபோக, வில்லன் வேலுப்பிள்ளையை இன்னும் காணோமே….

குமார்: அவருக்கு நேற்று மழையில் நனைந்து இலேசான காய்ச்சலாம். எப்படியாவது சமாளித்துக்கொண்டு இரவு கட்டாயம் வருவதாகச் சொன்னார்.

சண்:அந்தாளில் எனக்கு நல்ல நம்பிக்கையுண்டு. அவன் பாத்திரத்தை உணர்ந்து நடிக்கக் கூடியவன். மற்றவர்களையிட்டுத்தான் எனக்குப் பயம். இதோ மாலினி பாடசாலையில் இருந்து வருகிறாள்…

(மாலினி புத்தகங்களும் கையுமாக முன்னுக்கு வருகிறாள்.)

சண்: ம்… வில்லன் அவள் கையைப் பிடித்து இழுக்கிறான்….வில்லன் இல்லாவிட்டாலும் அவன் இருந்து இழுப்பதாகப் பாவனை செய்து நடி மாலினி….

(மாலினியின் கையிலுள்ள புத்தகங்கள் சிதறி விழுதல்.)

சண்: ம்… அவள் கண்ணீர் விட்டுக் கதறுதல்…மாலினி அழுது தான் காட்டேன்… ஏன் பேசாமல் நிற்கிறாய்?

மாலி: அதெல்லாம் இப்பொழுதேன் சேர்? இரவு அதை எவ்வளவு தத்துரூபமாகச் செய்து காட்டுகிறேன்என்பதை இருந்து தான் பாருங்களேன்

சண்:என்ன மாலினி! ஒவ்வொரு ஒத்திகையின் போதும் இப்படியே ஏதாவதொரு சாட்டுச் சொல்லி வருகிறாய்? இப்பொழுதாவது செய்து காட்டினால் தானே எங்களுக்கு நம்பிக்கையாக இருக்கும்

மாலி: (சுற்றிலும் பார்த்துவிட்டு) எனக்கு வெட்கமாக இருக்கிறது சேர்!

சண்: (அழாக் குறையாக) இப்பொழுது நாலு பேர்களுக்கு மத்தியில் அழுது காட்ட வெட்கப்படும் நீ, இரவு நாலாயிரம் மக்களுக்கு மத்தியில் எப்படித்தான் அழப்போகிராயோ

மாலி: சரி, அழுது காட்டலாம், கிளிசரினைக் கொண்டு வாருங்கள்..

சண்: கிளிசரினா? அதென்ன சாமான்? ‘டிஸ் பிரின்’ மாதிரி அதுவும் ஒரு தலைவலி மருந்தா?

மாலி:என்ன, உங்களுக்கு இது கூடவா தெரியாது? கண்ணீர் விடுவதற்காகப் பயன்படுத்தும் ஒருவித மருந்துதான் கிளிசரின்!

சண்: அதில்லாமலே எங்களை நீ அழவைக்கிறாயே! இப்பொழுது அதற்கெங்கே போவது? வேண்டுமானால் வெண்காயம் பிஞ்சு மிளகாய் தரலாம்…

செல்: இன்றிரவுக்குள் எப்படியாவது கிளிசரின் தேடிக்கொண்டு வருகிறேன். இப்பொழுது அடுத்த காட்சியிலிருந்து ஒத்திகையைப் பார்ப்போமே!

சண்: அடுத்தது நந்தவனக் காட்சி… அதுபோக எங்கே இன்றைக்கு மாணிக்கத்தைக் காணோமே!

குமார்: அவனுக்கு இப்போது எங்களில் நம்பிக்கை வந்திட்டுது… மாலினி இன்று தனியாகவே வந்திருக்கிறா…

செல் : போகும்போது சொல்லும், நான் கூட்டிக் கொண்டு வந்து விடுகிறேன்

மாலி: அதுக்கு வேறு யாரையாவது பாரும், என்னிடம் வாலாட்டினால்.. கவனமாய் இரும். இல்லையோ வேலுப்பிள்ளையிடம் சொல்லி விடுவேன்…

செல்: இன்றைக்கு மாணிக்கம் வராதபடியால் நமது நாடக ஆசிரியர் முன்னா ஒறிஜீனலில் எழுதியவாறு அப்படியே நந்தவனக் காட்சியை நடிப்போமா? மாலினி என்னை எதிர் பார்த்துக் காத்திருக்கிறாள்…. நான் அவளுக்குப் பின்னால் வந்து, அவள் கண்களைப் பொத்துகிறேன்…

மாலி: ஓய்… என்னை யார் என்று நினைத்தீர்? நான் நெருப்பு. நெருங்கினால் என்ன நடக்கும் தெரியுமா?

செல்: நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள்….

சண்: வேண்டாம் செல்வம், ஒறிஜினலை விடு…..

செல்: அப்படியே ஆகட்டும். (மாலினியை நெருங்கி) அன்பே ……

(மார்க்கண்டு வருதல்)

மார்: (கோபத்துடன்) யாரையடா அன்பே என்கிறாய்? உங்களுக்கு என்ன துணிச்சல் வந்து அவளைக் கூத்தாடக் கூப்பிட்டீர்கள்?

சண்: ஐயா..வந்து …வந்து…..நீங்கள்…….

மார்: வந்தாவது போயாவது….நான் தான்டா இந்த ஆட்டக்காரத் தேவடியாளின் தகப்பன்…மார்க்கண்டு!

செல்: மார்க்கண்டு ஐயா…உங்களைக் கெஞ்சுகிறேன்…இன்றைக்கு ஒருநாள் – ஒரே ஒரு நாள் மட்டும்…

மார்: (பக்கத்திலுள்ள சுதிரையைத் தூக்கி) எனக்கு வர்ற ஆத்திரத்திற்கு (சுதரையை மீண்டும் வைத்து விட்டு) உங்களைச் சொல்லி என்ன பிரயோசனம். எங்கடை கண்ணினை மண்ணைத் தூவிவிட்டு, இந்த கழிசடை நாயளிட்டை வந்த என்ரை நாயைச் சொல்ல வேண்டும். (மாலினியைப் பார்த்து) இன்னும் ஏன்ரி அங்கை நிக்கிறாய்? வீட்டை வாடி வெக்கம் கெட்ட கழுதை…..

(மார்க்கண்டு மாலினியின் காதைப் பிடித்து இழுத்துச் செல்கிறார்.)

செல் : (துயரத்துடன் பாடுகிறான்) அவள் பறந்து போனாளே! என்னை மறந்து போனாளே!

சண்: (கவலையுடன்) இனி என்ன செய்வது? என் மானமே கப்பலேறுகிறதே

குமார்: அதுவும் ஆகாயக் கப்பலில்…

சண்: டேய்… நீ வேறு என் ஆத்திரத்தைக் கிளராதையடா… (கமலநாதனைப் பார்த்து எப்படியாவது நாடகம் போட்டேயாகணும் எதையில் ஏதாவது திருத்தமோ மாற்றமோர் செய்யலாமா என்று பாரும்….

கமல: எனது நாடகத்தில் எந்தவித திருத்தமோ மாற்றமோ செய்வதற்கும் நான் ஒருப்படேன், அப்படிச் செய்வதாக இருந்தால் அதை என் பிணத்தின்மேல் நின்று செய்யுங்கள்(ஏகாம்பரம் வருதல்)

ஏகா: (கமலநாதனைப் பார்த்து) என்னடா பெரிசாய் கதைக்கிறாய்? (சண்முகத்தைப் பார்த்து) அவனை என்ன கேட்கிறது? கையாலாகாத திருட்டுப் பயல்.

சண்: நீங்கள் யார் ஜாா? எம்மோடு நடிக்க வந்தீர்களா?

எகா: இல்லை… உங்களை அடிக்க வந்தேன்!

சண்:ஆங்..

ஏகா: என்ன விழிக்கிறீர்கள்? நீங்கள் இன்று மேடையேற்றப் போவதாக அறிவித்துள்ள நாடகம் இருக்கிறதே, அது என்னுடையது! என்னுடைய அனுமதியின்றி உங்களை யார் அதைப் பயன்படுத்தச் சொன்னது? கதை வசனம் சுமலநாதனாம்! கண்டறியாத கமலநாதன் (புத்தகம் ஒன்றைச் சண்முகத்திடம் கொடுக்கிறார்)

சண்: (புத்தகத்தின் முதல் பக்கத்தை விரித்து) ‘காதலா கடமையா?’ சமூசு சீர்திருத்த நாடகம் – எழுதியவர் : ஏகாம்பரம் – விலை ரூபா: இரண்டு. (நிமிர்ந்து) உங்களுடையது காதலா சுடமையா? எங்களுடையதோ காதலா கத்தரிக்காயா?

ஏகா: (சிரித்து) கத்தரிக்காய் ஒன்றுதான் உங்கள் கமலநாதனின் கற்பனை. தொடர்ந்து மற்றவைகளையும் படித்துப் பாரும். அதற்கு முன் இரண்டாம் பக்கத்தை முதலில் படியும்…

சண்: (படித்தல்) முதலாம் பதிப்பு: 1960 — உரிமை: ஆசிரியருக்கு – இந்த நாடகத்தை போடையேற்ற விரும்புவோர் ஆசிரியரின் எழுத்து மூலமான அனுமதியைப் பெறவேண்டும். ஓகோ – தமிழ் தெரியாதவர்களும் அறிந்து கொள்வதற்காக இங்கிலிசிலும் எழுதியிருக்கிறீர்கள் போலிருக்கிறது… தோஸ் கூ விஸ்ரு ஸ்ரெச் திஸ் பிளே மஸ்ட் செற் றிற்ரின் பெர்மிசன் ப்றம் த ஓதர்…

கமல: (உதறலுடன்) ஐ சீ… நீங்கள் தான் அந்த ஏகாம்பரமா? இப்பவும் புத்தகத்திலுள்ள பழைய விலாசத்தில் தான் இருக்கிறீர்களா? உங்கள் நாடகத்தைப் பயன்படுத்துவதற்காக அனுமதி கேட்டுக் கடிதம் எழுதினேன். நீங்கள் தான் பதில் எழுதவில்லை….அதனால் ‘மௌனம் சம்மதம்’ என்று நினைத்து விட்டேன்.

சண்: என்ன காணும் தடம் புரண்டு பேசுகிறீர்? உமக்குக் கதை வசனம் எழுதத் தெரியா விட்டால், தெரியாது என்று சொல்லலாமே! அதில் என்ன வெட்கம்? எல்லாருக்கும் கதை வசனம் எழுதத் தெரியவேண்டும் என்று எதோ கட்டாயமா? அது போகட்டும், அவருடைய நாடகத்தை நடிப்பதற்கு இடையிலே நீர் என்ன தரகரா? அதற்காக உமக்கு ‘கதை வசனம் கமலநாதன்’ என்று பெயர் வேறா. தபால் எழுதினாராம் தபால்..

ஏகா: அவர் எங்கே எழுதினார்? அவர் திருட்டு முழி முழிக்கிறதிலிருந்தே பேசுவதெல்லாம் பொய் என்பது தெரியவில்லையா?

கமல: தபால் எழுதியது உண்மைதான்… இப்ப தந்திகளே தபாலில் போகிறதாம். அப்படி இருக்கும் போது கேவலம் தபால் போகாமலும் விடலாம் இல்லையா?

ஏகா: (பல்லைக் கடித்து)ம் – என் ஆத்திரத்தைக் கிளராதையும்…

சண்: என்னுடையதையும்தான். (ஏகாம்பரத்தைப் பார்த்துப் பணிவுடன்) ஏதோ நடந்தது நடந்துவிட்டது. அதற்காக நாங்கள் எல்லாருமே உங்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறோம். இப்பொழுதாவது நாடகம் நடத்துவதற்கான அந்த அனுமதியைக் கோருகிறோம். தயவு செய்து தந்துதவுவீர்களா?

(எல்லாரும் ஏகாம்பரத்தின் காலடியில் விழுந்து வணங்கி எழுகிறார்கள்)

ஏகா: முடியாது…முடியவே முடியாது! அப்படி மீறி நடத்தினீர்களோ, உங்களைக் கோட்டிலேதான் சந்திப்பேன், ஆமாம்!

(ஏகாம்பரம் வெளியேறுதல், மேடையிலுள்ளோர் ஒருவர் பின் ஒருவராகவும், ஒருவருக்குமேல் ஒருவராகவும் மயக்கம்போட்டு விழுகிறார்கள்.)

– இதோ ஒரு நாடகம் (நகைச்சுவை நாடகம்), முதற் பதிப்பு: நவம்பர் 1973, தமயந்தி பதிப்பகம், அச்சுவேலி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *